Thursday, July 14, 2005

சில கேள்விகளும் சில பதில்களும்

நான் இந்தப் பிரச்சினையை தலைமுழுக நினைத்தாலும், நண்பர் அனுராக் அவர் பதிவில் என்னைக் குறித்து கேட்டிருக்கிற சில கேள்விகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.


அதற்கு முன்னர் ஒரு விஷயம். இந்த பதிவு முழுக்க நான் ஒருவிதமான சங்கேத மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது. இதில் குறிப்பிட்டிருக்கிறவர் யார் என்பதை உங்களால் எளிதில் யூகிக்க முடிந்தாலும் அவர் பெயரை எழுத என் மனம் ஒப்பவில்லை. எனவே சம்பந்தப்பட்டவரை 'நபர்' என்கிற அடைமொழியிலேயே நான் அழைக்க விரும்புகிறேன். 'நேர்மையற்றவர்' என்று என்னை எந்தவித முகாந்திரமுமில்லாமல் அந்த நபர் விமர்சித்த பின்னால் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்வதுதானே நல்லது. சம்பந்தமில்லாத செய்திகள் போல் தெரிகிற இரண்டை போட்டு ஒருவரை மறைமுகமாக விமர்சிப்பதுதான் சாமர்த்தியம், இலக்கியத்தரம் என்றால் நானும் அந்த தரத்துடனே எழுத விரும்புகிறேன். இதற்கு வருத்தப்படுகிற, சங்கடபடப் போகிற நண்பர்கள் முன்கூட்டியே என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

()

நண்பர் அனுராக் என்னை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார். "சமீபத்தில் சென்னையில் காசியுடன் நிகழ்ந்த சந்திப்பை நான் பதிவாக்கிய போது கலந்து கொண்டவர்களின் பட்டியலில் ஏன் 'சம்பந்தப்பட்ட நபரின்' பெயர் விடுபட்டிருக்கிறது? இது தானாக நிகழ்ந்த தவறாக இருக்க முடியாது."
நண்பரே, காசியுடன் ஏற்பட்ட சந்திப்பை பற்றி முதலில் பதிந்தது அந்த நபர்தான். அதில் என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை? இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா? என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி?

அவர் என் பெயரை குறிப்பிடாதது குறித்து எனக்கு வருத்தமேதும் கிடையாது. என்றாலும் என் பெயர் திட்டமிட்டே குறிப்பிடாமல் விடுபட்டிருந்தது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நான் உருப்படியான யோசனை ஏதும் தெரிவித்திருக்காமல் இருந்திருக்கலாம்.. அட! சாம்பார் வடை சாப்பிடத்தான் அந்தக்கூட்டத்திற்கு போனதாக வைத்துக் கொள்ளுங்களேன். அடிப்படையான நாகரிகம் உள்ள நபர் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தைப் பற்றின செய்தியை பதியும் போது - அந்த நபர் தமக்கு பிடிக்காதவராக இருக்கலாம் - கலந்தவர்கள் எல்லோரையுடைய பெயரை குறிப்பிடுவதுதான் முறை. ஆனால் என் பெயரைத்தவிர மற்ற அனைவரின் பெயரும் அந்த நபர் எழுதிய பதிவில் ஞாபகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை நான் ஏதோ தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. இது ஒன்றும் புதிதல்ல. அந்த நபர் பணிபுரிந்த ஊடக நிறுவனத்தில் வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். தமக்கு போட்டியாக அவர்கள் நினைக்கிறவர்களை, அவர்களுக்கு தப்பித்தவறியும் விளம்பரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக - அவர்கள் தங்கள் கூட்டணி கட்சித்தலைவர் என்றாலும் - அவர்களைப் பற்றிய செய்திகள் வராதவாறு திட்டமிட்டு சாமர்த்தியமாக மறைப்பதுதான் அந்த நிறுவனத்தின் கீழ்த்தரமான போக்காகும். எனவே அங்கு முக்கிய பொறுப்பில் பணிபுரிந்த இந்த நபரும் அதே பாணியை பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

இது சொல்லும் செய்தி என்ன? 'நீ பொருட்படுத்த தேவையில்லாதவன்'

'பெரியோர் எனில் வியத்தலும் இலமே, அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே' என்று தன் பதிவில் அந்த 'நபர்' கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை தன் சுய வாழ்க்கையில் சிறிதளவேனும் கடைப்பிடிக்க முயலவேண்டும்.

ஆக.. இந்த நபர்தான் என்னை 'நேர்மையில்லாதவர்' என்று விமர்சிக்கிறார்.

என்னைப் பற்றின அறிமுகம் இல்லாதிருந்திருக்கலாம் அல்லது என் பெயரை மறந்திருக்கலாம் என்று அந்த நபர் சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் காசியுடனான சந்திப்பின் முன்பே எங்களுக்குள் அருண் வைத்தியநாதன் நடத்திய குறும்படக்காட்சியிலும், பிரகாஷ் நடத்திய வலைப்பதிவர் சந்திப்பிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனக்கு பின்னால் வந்தவர்களின் பெயரைக் கூட ஞாபகமாக குறிப்பிட்டிருக்கிறவரால் என் பெயரை குறிப்பிடாததின் உள்நோக்கம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது.

()

அந்த நபர் என் பெயரை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அந்த நபரின் பெயரை ஏன் நீங்கள் எழுதவில்லை என்ற கேள்வி எழுந்ததாலேயே இதையெல்லாம் நான் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.

()

அடுத்ததாக நண்பர் அனுராக் குறிப்பிடுவது 'அந்த நபர் என்பவரால்.....' என்று ஏன் எழுத வேண்டும். அவர் படைப்புகளின் மீது மரியாதை உள்ளவர் ஏன் இவ்வாறு எழுத வேண்டும்?...

அந்த நபருக்காக இவ்வளவு பரிந்து பேசும் நண்பர் அனுராக், அந்த நபரின் பதிவுகளை படிப்பதில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.

அந்த நபரின் அடுத்தபதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'சுரேஷ் கண்ணன் என்பவர் .... என்றுதான் ஆரம்பிக்கிறார். அடிப்படை நாகரிகம் கருதி ஒரு பேச்சுக்காக என்னை நண்பர் என்றோ சக வலைப்பதிவாளர் என்றோ விளித்திருக்கலாம். எனவேதான் 'நேர்மையில்லாதவனாகிய' நானும் அதே வழியை பின்பற்ற வேண்டியிருந்தது. அவர் செய்ததையெல்லாம் நீங்களும் செய்திருக்க வேண்டுமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

என்ன செய்வது? 'எங்கள் ஆயுதங்களை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்' என்கிற மாவோவின் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த அற்ப பிரச்சினைக்காக அந்த உன்னதமான மேற்கோளை பயன்படுத்தியதற்கு புரட்சியாளர்கள் என்னை மன்னிக்கட்டும். ஒருவர் திட்டமிட்டே உங்களை அவமானப்படுத்தும் போது பதிலுக்கு சாந்தமாக போக நான் மகான் இல்லை. 'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.

'ஏம்ப்பா உன் பேர எழுதாததுக்கா இவ்வளவு கோபம்' என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். நிச்சயமாக அல்ல. அனுராக் எழுப்பிய கேள்விக்கு என் பக்கத்து நியாயத்தை விளக்கவே இந்தப்பதிவு. இதன் மூலம் உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் அதற்காக என் முன்கூட்டிய மன்னிப்பு.

()

நான் ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போய் (மனித நேயத்தை மாய்ந்து மாய்ந்து எழுதும் சில எழுத்தாளர்களை நெருங்கிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களின் தோல்கள் உரிந்து துர்நாற்றமுடன் கூடிய அழுகிய நெடி வீசுவதை) ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை மடற்குழு ஒன்றில் பதிந்ததையும், அதை சம்பந்தப்பட்ட நபர் என் அனுமதியில்லாமல் தன் இணையத்தளத்தில் எடுத்து போட்டுக் கொண்டதையும், விளக்கம் கேட்டு எழுதின கடிதத்தை சட்டை செய்யாமல் இருந்தததையும் பற்றி.... சமயம் வரும் போது எழுதுகிறேன்.

தன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள், மற்றவர்களை 'நேர்மையற்றவர்' என்று விமர்சிக்கும் நேர்மையின்மையை விவரிப்பதே இந்தப்பதிவின் நோக்கமே ஒழிய பொத்தாம் பொதுவாக எழுத்தாளர்களை திட்டுவது அல்ல. நான் சந்தித்த உன்னதமான எழுத்தாளர்களைப் பற்றியும் அவ்வப்போது பதிந்து கொண்டுதானிருக்கிறேன்.

()

இன்னும் சில விளக்கங்கள்...

சிலர் என் பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் 'பி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக செயலாற்றப் போய்... என்பதாக இந்த சர்ச்சையை வகைப்படுத்த முயன்றிருந்தார்கள். அவ்வாறெல்லாம் யாருக்கும் ஆதரவாக செயலாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரும் அப்படி என் ஆதரவைப் பெற வேண்டிய நிலையிலும் இல்லை.அப்படியென்றால் சம்பந்தப்பட்ட நபருக்கே ஆதரவாக 'அந்தாதி' பாடியிருப்பேனே.

()

உங்கள் சமீபத்திய பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினையை திசை திருப்புகிறது என்று சிலர் என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இது ஒரளவு உண்மைதான் என்றாலும் என் பக்க விளக்கத்தையும் நான் சொல்லியாக வேண்டும் இல்லையா? பொதுவாக ஆபாச பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத என் வலைப்பதிவு, சமீபத்திய இரண்டு பதிவுகளில் மனித கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளின் பெயர்களோடு களை கட்டியிருந்தது. (சமீபத்தில் படித்த எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்' நாவல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாவலில் வருகிற முக்கிய பாத்திரத்தின் காதுகளில் எப்போதும் ஆபாசக்கூச்சல்கள் கேட்டுக் கொண்டிருக்கும்)

()

இன்னுமொரு வேதனையான விஷயம் தமிழ் வலைப்பதிவுகளின் வாசகர்கள் குறித்தானது. எத்தனையோ நல்ல விஷயங்களை என் பதிவில் எழுதியதில் முக்கி முக்கி என்னுடைய webcount 10000-த்தை நெருங்க முயன்று கொண்டிருக்க, சமீபத்திய இரண்டு பதிவுகளின் மூலம் இது 'சர்'ரென்று ஏறத்தாழ 2000 கவுண்ட்டுகளை அதிகமாக பெற்றிருக்கிறது. இது நிச்சயமாக எனக்கு சந்தோஷமான விஷயமாக இல்லை. மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.

நண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. அவற்றை தவறவிடாது படித்து சம்பந்தப்பட்ட பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

22 comments:

வானம்பாடி said...

//வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது//

சுரேஷ்,
இதற்கு நீங்கள் இப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியாது அல்லது நான் அவ்வாறு அர்த்தம் செய்து கொள்ளவில்லை. உங்கள் கடந்த சில பதிவுகள் அதிகமான பின்னூட்ட நடவடிக்கைகளினால், தமிழ்மணம் வாசகர் பக்கத்தின் முகப்பில் நீண்ட காலம் குடியிருந்தது, அதனாலேயே பலராலும் மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்கக் கூடும்.

Anonymous said...

Suresh,
People without any hidden agenda will know who is right and who is not. Now that you have stated the facts, I think you should continue writing your usual creative, productive posts. I think your time and efforts are more precious than these issues.

Anonymous said...

///தன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள்,///

criticising in high-tech way? :-)))

- Balaji

Anonymous said...

>>>>'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்'

சுரேஷ்

உங்கள் கருத்துகள் பலவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொறுத்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது. நீங்கள் மேலே கூறியுள்ளது 100/100 உண்மை!.

.:டைனோ:.

Arun Vaidyanathan said...

Dear Suresh,
Iam following all your posts regularly. Regarding the counter increase, its because whenever people see a new comment indicator in Thamizmanam, people tend to click it and read the same.

Regards,Arun Vaidyanathan

P.S:- Write about Kurasowa and Jaya TV shorts kindaa stuff. Here, we don't get to watch Jaya TV.

enRenRum-anbudan.BALA said...

//
சுரேஷ்

உங்கள் கருத்துகள் பலவும் ஒத்துக்கொள்ளக்கூடியதாகவேபடுகிறது. எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொறுத்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது. நீங்கள் மேலே கூறியுள்ளது 100/100 உண்மை!.

.:டைனோ:.
//

உண்மை, உண்மை, உண்மை !!!!!!!!!!!!!!
"எரிச்சல் மேலிடுகிறது" மட்டுமல்ல, சில சமயங்களில் எரிச்சல் உச்சத்துக்கு போய் விடுகிறது ;-)

மாயவரத்தான் said...

//எழுதப்படும் விஷயத்தைக்காட்டிலும் எழுதும் நபரைப்பொறுத்தே மறுமொழிக்கப்படுகிறது, அலசப்படுகிறது. இதில் சுதந்திரம், விடுதலை மற்றும் -இஸங்களை பேசித்திரிபவர்களும் அடக்கம் என்னும்போதுதான் எரிச்சல் மேலிடுகிறது//

டைனோ சார்... இந்த ஒரு வாசகத்துக்காகவே தமிழ்மணத்திலே (சொல்லலாமில்ல?!) எதுவும் தேர்தல் வந்து நீங்க நின்னீங்கன்னா ஒரு 100 கள்ள வோட்டு போட டிரை பண்ணுறேன்.. ஓகேவா?!

பி.கு. : எனது இந்த கமெண்ட்டுக்கும், மேற்படி பதிவுக்கும் எந்த சம்பதமும் இல்லை.

இந்தப்பதிவு குறித்து நோ கமெண்ட்ஸ்..!

வலைஞன் said...

அன்புக்குரிய சுரேஷ்

பதில்களுக்கு நன்றி. அதே சமயம் அதில் நீங்கள் சுட்டியிருக்கும் சில கருத்துகள் குறித்து பேச வேண்டியுள்ளது.

//என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை? இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா? என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி?//
உங்கள் பதிவைத்தான் நான் முதலில் வாசித்தேன். அதில் மாலன் கலந்துகொண்ட விபரமே அதன் பின்னூட்டத்தில் ஒருவர் எழுதிய பிறகுதான் நான் அறிந்தேன். எப்படியோ விடுபட்டதாகத்தான் எண்ணினேன். ஆனால் அதில் தொடர்பே இல்லாமல் மாலனின் கருத்துக்களை கிண்டலடித்திருந்தீர்கள். பதிலுக்கு அவரும் உங்கள் கருத்துக்களை மறுத்துப்பேச மறுபதிவில் நீங்கள் அவரை விமர்சித்து தனிப்பதிவே இட்டீர்கள்.

இதற்குப்பிறகே இது வெறும் கருத்து மோதல் அல்ல, இதற்குப்பின்னால் ஏதோ இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அதே சமயம் இது உண்மையான பிரச்சினையை திசை திருப்புவதாகவும் இருந்ததால் அது குறித்த என் கருத்துக்களோடு உங்கள் கருத்துகள் மீதான விமர்சனத்தையும் முன்வைத்தேன்.

இப்போது நீங்கள் உண்மையாகவே பதிலுக்கு பதில் செயல்பட்டு வருவதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

இந்த மோதலின் பின்னணியில் ஜெயகாந்தன் விவகாரமும் கலந்திருப்பதை உங்கள் 'ஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்' என்ற பதிவு உணர்த்தியது.

நர்சரி பிள்ளைகளின் அவன் கிள்ளியதால் நானும் கிள்ளினேன் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் தேவைதானா நண்பரே.

அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம். மாறாக பகிரங்கமான முறையில் எல்லாவிதத்திலும் ஒருவரைக் கேவலப்படுத்தி விட்டு. இதற்காகத்தான் இப்படிச் செய்தேன் என்று சொல்கிறீர்கள்.

//'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.//

இது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு எனப்புரிகிறது. எனக்கு அவரால் ஆகவேண்டியது எதுவும் இல்லை. சக எழுத்தாளர் ஒருவர் கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியவில்லை. அவ்வளவுதான்.

விமர்சனங்களைப் பொறுத்தவரை நான் வலைப்பதிய ஆரம்பித்த ஆரம்ப பதிவுகள் முதலே மாலனை பல இடங்களில் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். மாலனின் பதிவுகளின் பின்னூட்டத்திலும் அப்படியே. ஆனால் அவை அவரது பொதுச் செயல்பாடுகள் அல்லது கருத்துகள் குறித்த விமர்சனங்கள் மட்டுமே. அதனாலேயே தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் குறித்து மௌனமாயிருக்க இயலவில்லை.

Anonymous said...

//அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம்.//

What thaguthi does Maalan have that people have to bow down to him??????????????

Expecting your answer Anurag.

Personally, I've seen Maalan's true face and his level in this matter.

Onething that's in the back of my mind: Why is Maalan targetting thamizmanam? Would he do it, if he is part of Thamizmanam? Remember he 'oh so generously' offered money to thamizmanam. Thankgod, kasi refused it. Imagine how things would have been if kasi accepted the money????????

வலைஞன் said...

மாலனின் தகுதியை அறிந்து கொள்ள விரும்பும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?

Boston Bala said...

முதலில் என்னுடைய இண்டஸ்டிரி ஸ்டாண்டர்ட் இரண்டணாக்கள்: தரம் தாழ்ந்த பதிவுகளுக்கு/பின்னூட்டங்களுக்கு தமிழ்மணமோ, கிஞ்சா-வோ, ரோஜோ-வோ, ப்ளாக்லைன்ஸோ, மையாஹுவோ, இன்ன பிற செய்தியோடை வசதிகளோ பொறுப்பாகாது.

தரம் காட்டும் வாக்களிப்புகளை -- விரும்புபவர்கள் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு (அல்லது எதிர்மறையாகவே வாக்குகளை அள்ளுபவர்கள்) நட்சத்திரத் தொடுப்பை தவிர்த்து விடலாம்.

தமிழ்மணத்தின் மூலம் பின்னூட்டங்களை சுட்டுவதும், இந்த மாதிரி பெயரற்ற தடாலடிக் கருத்துக்களை அறிந்துகொள்ள உதவுகிறது.

-----------
>>Personally, I've seen Maalan's true face

மாலனின் உண்மையான முகம் என்ன? உங்களுக்கு எப்படி அது தெரியும்?(What is Maalan's true face?)

>>Why is Maalan targetting thamizmanam?

What makes you think that Maalan is targetting thamizhmanam?

>>Would he do it, if he is part of Thamizmanam?

Is Thamizhmanam a coterie? I felt I was part and parcel of thamizh manam by actively posting in blogs, feeding back, starry eyeing the quality posts. The 'anonymous' might also deliver the impression that folks who are already part of thamizhmanam cannot change its practices. Even worse will be generating the perception that insiders will not healthily challenge the existing modalities.

Anonymous said...

முதலில் ஜெயகாந்தன் எனும் ஞானபீட எழுத்தாளரை மாலன் அவர்கள் குறை சொன்னதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அடுத்து இன்னும் கொஞ்சம் ஓவராகப் போய் என்னவெல்லாமோ எழுதினார் அவரைப் பற்றி. பிகேஎஸ் அதற்குத் தகுந்த பதிலடியாக பதிவு ஒன்றைப் போட்டார். அதற்கு மாலனின் பதில் மழுப்பலாகத்தான் வந்தது. மறுமுறையும் பிகேஎஸ் கேள்விகள் கேட்க 'விலகுகிறேன் கண்ணீரோடு' என நீலிக்கண்ணீர் வடித்தார் தம் பதிவில். அங்கேகூட நான் பல கேள்விகளை அனானிமஸாக இருந்து கேட்டேன். பல கேள்விகள். ஒன்றுக்குக் கூட பதில் இல்லை. அத்தோடு ஓடிவிட்டார்.

இப்போது தேவையில்லாமல் அவர் உளறவே மேலே வந்து கேள்விகள் கேட்டேன். கேட்டது யார் என்று பார்க்காமல் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் பார்க்கவும். கேள்விகளில் தவறென்றால் சுட்டிக் காட்டவும்.

முதலில் என் நண்பர் பிகேஎஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் வேண்டும். அடுத்ததூ எனது கேள்விகளுக்கு. அதன்பின் வருகிறேன். அனுராக் ஏன் அவருக்குத் துணை போகிறார் என்று எனக்கு விளங்கவில்லை. சுரேஷுக்கு எனது சிறப்பு நன்றி.

அன்புடன்,
Sa.Thirumalai.

PKS said...

அன்புள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு,

சுரேஷ் கண்ணன் மற்றும் மாலன் இருவருக்கிடையே ஒரு விவாதம் ஓடி வருகிறது. அப்படியே மாலன் வலைப்பதிவுகள் குறித்து முன்வைத்திருக்கிற யோசனைகளை ஆதரித்துக் கருத்துச் சொல்லியும் மாற்றுக் கருத்துச் சொல்லியும் பல விவாதங்கள் தமிழ்மணம் மன்றம், அவரவர் வலைப்பதிவுகள் என்று பல இடங்களில் ஓடி வருகின்றன. இவை குறித்து நான் எங்கும் பொதுவில் கருத்துகள் எழுதியதில்லை. எழுதப் போகிற திட்டமும் இல்லை.

இவை குறித்து எனக்குக் கருத்துகள் இருந்தாலும், அவற்றை என் மனசாட்சிக்கு நேர்மையாகவும், கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே என்றும் பகிர்ந்து கொண்டாலும், அவை திரிக்கப்படும் என்கிற அபாயத்தை நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் - என்னை ஏற்கனவே எவரும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர் இன்னொரு விவாதத்திலோ சர்ச்சையிலோ சிக்கிக் கொண்டிருந்தால் - அப்போது என்னதான் கருத்தின் அடிப்படையிலும் தர்க்கத்தின் அடிப்படையிலும் நான் கருத்துச் சொன்னாலும் - அவற்றை வாய்ப்பு கிடைத்தவுடன் தாக்குதல் என்று தவறாகப் புரிந்து கொள்ள பலர் இருக்கிறார்கள் என்ற பாடத்தை நான் இணையத்தில் பிறர் அனுபவங்கள் மூலமும், என் அனுபவம் மூலமும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன். அப்படிப்பட்ட கும்பலில் ஒருவனாக நான் ஆகிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வும் எனக்கு உண்டு.

அதனாலேயே - மேற்கண்ட இரண்டு விவாதங்களிலும் நான் வாய்மூடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஏதேனும் கருத்துகள் இருக்கும் என்றால் - அந்தக் கருத்துகளில் பிரயோசனம் இருக்கும் என்று நான் நம்புவேனானால், அவற்றை நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வேன்.

ஆனால் ஏதோ ஒரு விஷமி இங்கே என் பெயரை இழுத்துவிட்டு விளையாடப் பார்க்கிறார். அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அடுத்தவர் பெயரில் எழுதுவது தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போடுவதற்கு ஒப்பது என்று அறியாத பேதையாக அவர் இருக்கிறார். அவருக்குக் கடவுள் தெளிந்த நல்லறிவைத் தரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

எனவே, இந்த விவாதங்களில் என் பெயரிலும், என் பெயரை இழுத்தும், ஏதேனும் தன் பிள்ளைக்கு அடுத்தவர் இனிஷியலைப் போட்டுப் பார்க்க ஆசைப்படுகிற விஷமிகள் எழுதினால், அவற்றைப் புறக்கணிக்குமாறு சுரேஷ் கண்ணன், மாலன், தமிழ்மண நிர்வாகிகள் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

வலைஞன் said...

மிக்க நன்றி சிவகுமார். உங்களின் இந்த நிலைப்பாடுக்கும் புரிதலுக்கும் நன்றி

ROSAVASANTH said...

நான் இந்த 'விவாத'த்தில் எதையும் சொல்ல விரும்பவில்லை எனினும், பாரதியின் வரிகளை மாலன் திரித்ததாக சுரேஷ் சொன்னது மிக அபாண்டமானது என்று தோன்றியதால் அது குறித்து மட்டுமே எழுதினேன். அதற்கு இன்னும் கூட(வேறு யாரும் கூட) சரியான எதிர்விளக்கம் கொடுத்ததாக தெரியவில்லை. இந்த பதிவிலும் மொட்டையாகவே சுரேஷ் சொல்லி செல்கிறார்.


மற்றபடி சிவக்குமாரின் பின்னூட்டம் வழக்கம் போல ரசிக்கும்படியாக இருந்தது.

//கூடவே - தமிழ் வலைப்பதிவுகளில் சமீபகாலத்தில் ஒரு கும்பல் பிடிக்காதவரை ஏசவும் தாக்கவும் கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் - கொள்கைகளை எல்லாம் உதறிவிட்டுப் - பிடிக்காதவரைத் தாக்குவது மட்டுமே கொள்கை என்ற அளவில் பயன்படுத்தி வருவதையும் நான் அறிவேன்.//

வழக்கம் போல யாரை குறிப்பிடுகிறோம் என்று சொல்லாமல் அவர் எல்லோரையும் குறிக்கும் வேலையை செய்யும் போது, அவரை தெளிவாகவே (மிகுந்த வெளிப்படையான நேர்மையுடன்) திட்டியுள்ள நானும் அடங்குவதால், ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

மாலனின் அபத்த நாடகத்தின் முடிவில் 'விடைபெறுகிறேன்' என்று போட்ட பதிவில் சிவக்குமாருக்கு வரிசையாக எல்லோரிடமும் தர்ம அடி மட்டும் விழுந்துகொண்டிருந்த போது அவருக்கு ஆதரவாக அங்கே எழுதிய முதல் ஆள் நான். என்னை வழி மொழிந்து பெயரிலி எழுதினார். வேறு யாரும் எழுதியதாக தெரியவில்லை. (சீமாச்சு என்பவர் சிவக்குமாருக்கு ஆதரவாய் எழுதியதை சீரியஸாய் என்னால் எடுக்க முடியவில்லை.) இப்போதும் அந்த ஆதரவில் மாற்றமில்லை - இந்த நேர்மையை சிவக்குமார் எனக்கு எந்த கட்டத்த்திலும் காட்டமாட்டார் என்று அப்போது சொன்னது, இப்போதும் இனியும் பொருந்தும் எனினும்.

Anonymous said...

Suresh,

For God's sake, please stop this non-sense. Don't enter into this underground politics. It will spoil your writing skills.

Continue your regular style of posts.

- Your Wellwisher

Anonymous said...

அன்பு அனுராக்,

////தொடர்பே இல்லாமல் மாலனின் கருத்துக்களை கிண்டலடித்திருந்தீர்கள். பதிலுக்கு அவரும் உங்கள் கருத்துக்களை மறுத்துப்பேச மறுபதிவில் நீங்கள் அவரை விமர்சித்து தனிப்பதிவே இட்டீர்கள்./////

என் முதல் பதிவில் சம்பந்தப்பட்ட நபரை நான் கிண்லடிக்கவே இல்லை. மாற்றுக்கருத்துக்களை மட்டுமே எழுதியிருந்தேன். நான் எழுதியிருந்த விதமும், அவர் பெயரை குறிப்பிடாமல் போனதும் அவரை கோபப்படுத்தியிருக்கலாம். எனவேதான் அவரின் பதிவில் அநாவசியத்திற்கு பாரதியின் வரிகளையெல்லாம் உபயோகப்படுத்தி என்னை விமர்சித்திருந்தார்.


/////நர்சரி பிள்ளைகளின் அவன் கிள்ளியதால் நானும் கிள்ளினேன் என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகள் தேவைதானா நண்பரே./////

சிறுபிள்ளைத்தனமான விமர்சனத்திற்கு அவ்வாறுதான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது. நேர்மையின்மையான செயல்களையெல்லாம் அந்த நபர் செய்துவிட்டு என்னை 'நேர்மையற்றவர்' என்று விமர்சித்திருந்ததால் வந்த கோபமிது.

/////அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம். மாறாக பகிரங்கமான முறையில் எல்லாவிதத்திலும் ஒருவரைக் கேவலப்படுத்தி விட்டு. இதற்காகத்தான் இப்படிச் செய்தேன் என்று சொல்கிறீர்கள்.///////

நான் மடற்குழுவில் எழுதிய கடிதத்தை என் அனுமதியில்லாமல் அவரின் இணையத்தளத்தில் போட்டுக் கொண்டு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை கூட அலட்சியப்படுத்திய ஒரு நபருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள்? ஒரு மனிதன் சிறந்த படைப்பாளியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு படைப்பாளி சிறந்த மனிதனாக இருந்தால்தான் செழுமையான இலக்கியம் வெளிவரும். இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ஒரு படைப்பாளியை இந்த அற்ப காரணத்திற்காக குற்றஞ்சாட்டக்கூடாதே என்று அமைதியாய் இருந்தேன். அதுதான் தவறாகப் போய் அவர் என்னை விமர்சிக்கும் அளவிற்கு போய்விட்டது.

//'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.//

//////இது என்னை நோக்கி வீசப்பட்ட அம்பு எனப்புரிகிறது. எனக்கு அவரால் ஆகவேண்டியது எதுவும் இல்லை. சக எழுத்தாளர் ஒருவர் கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியவில்லை. அவ்வளவுதான். //////

இது நிச்சயம் உங்களை குறித்து எழுதப்பட்டது அல்ல. பொதுவான நோக்கில்தான் எழுதப்பட்டது. பெரிய எழுத்தாளராய் இருந்தாலும் அவருக்கு எதிராக மாற்றுக்கருத்துக்களை வெளியிட பலர் தைரியமல்லாமல் தயங்குகிறார்கள். உங்கள் பதிவிலேயே சம்பந்தப்பட்ட நபருக்கு மாற்றான கருத்துக்களை தைரியத்துடன் எழுதியிருக்கீறீர்களே.

///////விமர்சனங்களைப் பொறுத்தவரை நான் வலைப்பதிய ஆரம்பித்த ஆரம்ப பதிவுகள் முதலே மாலனை பல இடங்களில் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். மாலனின் பதிவுகளின் பின்னூட்டத்திலும் அப்படியே. ஆனால் அவை அவரது பொதுச் செயல்பாடுகள் அல்லது கருத்துகள் குறித்த விமர்சனங்கள் மட்டுமே. அதனாலேயே தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் குறித்து மௌனமாயிருக்க இயலவில்லை. /////

நிச்சயம் தவறான முறையில் உள்நோக்கத்துடன் செய்யப்படும் தாக்குதல்களுக்கு கண்டனக்குரல் எழுப்புங்கள். அதற்கு முன் இருபுறமும் வெளிவரும் விளக்கங்களைப் படித்துப் பார்த்துவிட்டு எழுதுங்கள்.

உங்கள் மறுமொழிக்கு நன்றி.

- சுரேஷ் கண்ணன்

Anonymous said...

Dear Suresh

Although I need not have to say whatever that appeared here on my name in this feedback box are all fake, it is crossing all limits of decency. Disgusting. Please close your feedback box or remove the replies that came on my name. For readers who would not have read my explanations in RKK and Marathadi, this messages could be totally misleading. Since you left those perverted feedbacks on my name, I request you to issue a disclaimer.

ALL MESSAGES THAT APPEARED ON MY NAME IN THIS BLOG WERE NOT POSTED BY ME. PERIOD.


If needed I'll send this same disclaimer in a personal mail to you and you may post it in your blog.

Thanks
S.Thirumalairajan

Anonymous said...

//மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.//

//நண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. //

அன்பரே இது என்ன விமர்சனம், தெருவில் வந்து சண்டை போட்டால் நாலு பேர் வேடிக்கை பார்க்கத்தான் செய்வார்கள், வேண்டுமானால் உங்கள் சண்டையை தனிமடலில் வைத்துக்கொள்ளவேண்டியது தானே, தெருவில் வைத்துக்கொண்டால் எல்லோரும் வேடிக்கை பார்க்கத்தான் செய்வர்.

மேலும் தமிழ்மணம் வாசகர்கள் மற்றும் பதிவர்களின் ரசனையை நீங்கள் பெரிய அறிவு ஜீவிபோலவும், மற்றவர்களெல்லாம் என்னமோ கேவலமான ரசனை கொண்டவர்கள் போலவும் கூறியிருப்பது உங்களுடைய எலீட் ப்ரைட், நீங்கள் தான் நினைத்துக்கொள்ள வேண்டும் பெரிய அறிவு ஜீவி என்று.

நீங்கள் இதற்கு முன் என்ன பெரிய கணமான விஷயங்களை எழுதியுள்ளீர்,

உங்களின் சில பதிவுகள் கீழே
சிறந்த படமோ என்று (கனா கண்டேன்)

சந்திரமுகியும் சாகடிக்கப்பட்ட யதார்த்தங்களும்

பா.ராகவன் நடிகனாகி விட்டார்........

கணமான விஷயங்களாக சினிமா பற்றி எழுதியுள்ளீர், ஒரே வரியில் சொல்வதென்றால் குப்பை இதுவரை கூடையிலிருந்தது, யாரும் பார்க்கவில்லை, தற்போது தெருவில் கொட்டியுள்ளீர் அதை பலர் பார்க்கின்றனர்.

உங்களை எல்லோரும் கவனிக்க வேண்டும் அதற்காக பிரபலமானவரிடம் மோதினால் தான் எல்லோரும் கவனிக்கப்படுவீர் மற்றும் அறிவு ஜீவி என்கிற பெயர் கிடைக்கும் இத்தனையும் மனதிற்குள் இருந்தாலும் இதெதுவுமே பிடிக்காத மாதிரி மேலே ரசனையைப்பற்றி வேதனைப்பட்டுள்ளீர், பதவி அரசியலே தோற்றுவிடும் போல இந்த இலக்கிய அரசியலுக்கு முன் கொடுமைடா சாமி

மாலனுக்கு ஒரு வேண்டுகோள், சண்டை போடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும், தாம் சண்டை போடும் அளவிற்கு தன் எதிரிக்கு தகுதியிருந்தால் மட்டுமே இறங்கவேண்டும் இல்லையென்றால் சூரியனைப்பார்த்து எதுவோ குலைத்தது போல கண்டுகொள்ளாமல் போய்விட வேண்டும், அதைவிடுத்து இங்கெல்லாம் பேசுவது உங்கள் தகுதிக்கு பொருத்தமில்லாத செயல், உங்கள் ஒளிவட்டத்தை விட்டு இறங்காதீர்கள், இடைவெளி வைத்துக்கொள்ளுங்கள்


அன்புடன்
ராஜ்குமார்
mailme2rajkumar@yahoo.co.uk

ஜோ/Joe said...

ராஜ்குமார்,
நீங்கள் கூறியதில் பலவும் அப்பட்டமான உண்மைகள்..

பல பேருடைய பதிவுகளை விட இலக்கியவாதிகள் என்ற பெயரில் போடும் சண்டைகள் விறுவிறுபாக இருக்கிறது .கவனத்தை கவருவதற்காகவே இப்படி எழுதுகிறார்கள் போல.

புதிதாக எழுதுபவர்களை ஊக்குவித்து பின்னூட்டம் இடுபவர்களை விட பிரபலமானவர்கள் இடும் ஒற்றை வரி (அதுவும் காப்பி) பதிவுகளில் மாய்ந்து மாய்ந்து பின்னூட்டம் இடுபவர்கள் தான் அதிகம்..

இது வெட்டி சச்சரவுகளை தவிர்த்து கஷ்டப்பட்டு பதிவுகளை இட்டும் அங்கிகாரம் கிடைகாமல் ,பின்னர் கவனத்தை பெறுவதற்க்காக அடாவடி பின்னூட்டங்களும் , ஒற்றை வரி நக்கல்களும் இட்டு பிரபலமாக பலரை தூண்டுகிறது.

இன்னொரு கூட்டம் தங்களை ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட இலக்கிய மேதைகளாக நினைத்துக் கொண்டு சண்டை போடுவதில் இலக்கியம் படைக்கிறது..

Anonymous said...

நண்பர் ராஜ்குமார் மற்றும் ஜோ ஆகியோரின் கருத்துகளில் எனக்கு ஒப்புமை உண்டு.

முன்பு சுரேஷ்கண்ணன் நன்றாகத்தான் இருந்தார். இந்த வெட்டிக்கூட்டத்தில் சேர்ந்தபின் மட்டுமே கெட்டுப் போய்விட்டார். பாரா, பத்ரி, பிரகாஷ், திருமலை, கிச்சு, பிகேஎஸ், பிரசன்னா, டோண்டு போன்றவர்களிடம் பழகியதால் மட்டுமே கெட்டார். மற்றபடி ரஜினிராம்கி, சுவடு சங்கர், சங்கர்கிருபா, சுதர்சன் நாராயண், ஹரிகிருஷ்ணன் ஆகியோரிடம் பழகி நல்ல கருத்துகளை உள்வாங்கிக் கொண்டார். இதுபோல் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் ஒரு நாயும் சீந்தாது! புரிந்துகொள்வார் என நினைக்கிறேன்.

அவர் முதலில் வெட்டிக் கூட்டம் விட்டு வெளிவர வேண்டும்!

Anonymous said...

Dear Suresh,

//அவரது தகுதிகளை மனதில் கொண்டாவது சிறிதளவு மரியாதை அளிக்கலாம் நீங்கள். அவர் செய்ததில் ஏதாவது உங்களுக்கு மாறுபாடு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே அதை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம்.//

What thaguthi does Maalan have that people have to bow down to him??????????????

Expecting your answer Anurag.

Personally, I've seen Maalan's true face and his level in this matter.

Onething that's in the back of my mind: Why is Maalan targetting thamizmanam? Would he do it, if he is part of Thamizmanam? Remember he 'oh so generously' offered money to thamizmanam. Thankgod, kasi refused it. Imagine how things would have been if kasi accepted the money????????

மேலே உள்ள இந்த கமெண்ட் மட்டும் நான் எழுதியது. மற்ற எதுவும் நான் எழுதியது இல்லை.

Thanks
S.Thirumalairajan