Monday, December 19, 2005

சேரனும் விருதுக்கான தவமும்

வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு பிரதிபலிப்பதுதான் ஒரு நல்ல சினிமாவின் அடிப்படையாக இருக்க வேண்டும்; மறுக்கவில்லை. ஆனால் சேரன் இதை வேறு விதமாய் புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. கலைப்படங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் திரைப்படங்கள் பற்றி சினிமாவின் தீவிர ரசிகர்கள் அல்லாதவர்களிடம் ஒரு பிம்பம் உள்ளது. "ஒருத்தன் பல்லு வெளக்கறான்னா... அதை அரைமணி நேரம் காட்டுவானுங்கடா". சேரன் அந்த அளவிற்கு போகவில்லையென்றாலும் கூட கதையை ஒவ்வொரு கட்டத்திலும் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே போவது திரைக்கதையின் அடிப்படை என்பதை மறந்து போய் உணர்ச்சிகரமான சம்பவங்களினாலேயே நிதானமாக இந்தப் படத்தை நகர்த்திச் செல்ல முடிவு செய்து விட்டார்.

மென்மையான படங்களுக்கு நிதானமான காட்சியமைப்புகள் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை மிகவும் அவசியமான இடத்தில் மட்டும் பயன்படுத்தி மற்ற காட்சிகளை ஒரு தவளைப் பாய்ச்சலில் சொல்ல வேண்டும். தனது மூத்த மகனிடம் ஏற்கெனவே ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால் இளைய மகனிடம் 'நீ தனிக்குடித்தனம் போயிடுப்பா' என்று சொல்லும் போது "அவ்வாறில்லை. உங்களுக்கு ஏற்கெனவே தந்த துன்பத்திற்கு ஆறுதலாக உங்களிடமேதான் இருக்கப் போகிறேன்' என்று சேரன் மென்மையாகவும் அழுத்தமாகவும் அதை மறுக்கும் இடத்திற்கு நிச்சயம் அந்த நிதானம் தேவைதான்.

சேரன் தன்னுடைய 'ஆட்டோகிராப்' பட வெற்றியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதையே 'தவமாய் தவமிருந்து' உணர்த்துகிறது. ஒரு மனிதன் தான் கடந்து வந்த பாதையின் நினைவுகளை, வலி, வேதனைகளை, சந்தோஷங்களை அசை போட்டுப் பார்ப்பது சுகமான அனுபவம்தான். ஆனால் முந்தைய வெற்றி தந்த அனுபவத்தைக் கொண்டு மீண்டும் அதே பாணியை பயன்படுத்துவது சரியானது அல்ல. (இந்த இடத்தில் மற்றொரு இயக்குநர் லிங்குசாமியின் நினைவு வருகிறது. 'ஆனந்தம்' என்கிற குடும்பப் பாங்கான வெற்றிப் படத்தை கொடுத்து விட்டு அடுத்ததாக அதிலிருந்து விலகி 'ரன்' என்கிற ஆக்ஷன் படத்தை தந்த தைரியத்தை வியந்தேன்)

()

இந்தப் படக்கதையின் அவுட்லைன் என்னவென்று உங்களில் பலருக்கு அநேகமாய்த் தெரிந்திருக்கும். ஒரு பாசமுள்ள தகப்பனின் 35 ஆண்டுகால வரலாற்றை அவனுடனே பயணம் செய்து நமக்கு காட்சிகளாய் விரித்திருக்கும் படம். பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு. தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாக பேசப்படுவதில்லை. அந்தக்குறையை இந்தப் படம் நீக்கியிருக்கிறது.
என்றாலும் இந்தப்படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை. மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித்தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும், உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்தாய் நான் நினைக்கிறேன்.

()

ஒரு சராசரி கிராமத்து தகப்பனை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ராஜ்கிரண். இம்மாதிரியான நடிகர்கள் சரியாக உபயோகப்படுத்தப் படாமலிருப்பது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. வயதாவதற்கேற்ப அவருடைய ஒப்பனையும், body language-ம் மாறிக் கொண்டே வருவது சிறப்பு. தீபாவளிக்கு மகன்களுக்கு சட்டை துணி வாங்கிக் கொடுக்க பணமில்லாமல் தவிக்கும் போதும், மகனை இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க வட்டிக் கடைக்காரரிடம் கெஞ்சி பணம் வாங்கிக் கொண்டு கண்ணீரும், தன்னை அழுத்திக் கொண்டிருந்து துயரத்திலிருந்து விடுபட்ட உணர்வுப் புன்னகையுடனும் வெளியே வரும் போதும், எந்தப் பெண்ணுடனோ ஓடிப்போன இளையமகன் பட்டணத்தில் சிரமப்படுகிறான் என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு வந்து மெளனமாய் வெறித்த பார்வையுடன் காத்திருக்கும் போதும்... என்று சில பல காட்சிகளில் ராஜ்கிரண் தன் பாத்திரத்தை சரியாக உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார். ஆனால் இவர் கதாபாத்திரத்தை ஏதோ வரலாற்று நாயகர்கள் போல் அல்லாமல் அவருக்கு இருந்திருக்கக்கூடிய இயல்பான குறைகளுடனேயே சித்திரித்திருந்திருக்கலாம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பாத்திரமாக சரண்யா. அறிமுகப்படமான 'நாயகனுக்குப்' பிறகு யாரும் சரியான பாத்திரம் தராத வேளையில் இந்தப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அவரும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகன்கள் கேட்கும் பட்டாசுப்பட்டியலை கணவனிடம் கூறிவிட்டு வாங்கிக் கட்டிக் கொள்வதாகட்டும், 'சினிமாத் தாயாக' இல்லாமல் மருமகளை எரிச்சலும் கோபமுமாய் கடிந்து கொள்வதாகட்டும், கணவனை எதிர்த்துப் பேசும் மூத்த மகனை பாய்ந்து அடிப்பதாகட்டும், சொல்லாமல் ஓடிப் போய் காதல் திருமணம் செய்து குழந்தையுடன் வந்திருக்கும் இளையமகனைப் பார்த்து 'படாரென்று' கதவை அறைந்து மூடுவதகாட்டும்.... ஒரு சராசரித்தாயை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

சேரனின் மூத்த சகோதரனாய் வரும் நபர் இயல்பாய் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரின் மனைவியாக வரும் மீனாள், புது மனைவியாக கணவனிடம் கொஞ்சுவதும், மாமியார் கூப்பிடும் போது எரிச்சலடைவதும், பிற்பாடு வசதியாக வாழும் கொழுந்தனின் வீட்டை பொறாமையும் இயலாமையுமாக நோட்டமிடுவதும்.. என ஒரு சராசரி தமிழ்நாட்டு மருமகளை அப்படியே எதிரொலித்திருக்கிறார்.

சேரன் அதிக காட்சிகளில் அழுகிறார் என்ற மாதிரி விமர்சனம் இருந்தது. எனக்கு அப்படித் தோன்றவில்லை. தேவையான காட்சிகளில் மட்டுமே அவர் அழுதாலும், அவர் முகம் அதற்கு ஒத்துழைக்காமல் கோணலும் மாணலுமாய் போவதால் நமக்கு அனுதாபத்திற்கு பதில் சிலசமயம் எரிச்சலே வருகிறது.

ராஜ்கிரணனின் அச்சகத்திற்கு உதவியாளராக வரும் இளவரசு, வட்டிக்கு பணம் தருபவர், சேரன் வேலை செய்யும் அச்சக உரிமையாளர் (வி.கே.டி.பாலன்) என்று சிறுசிறு பாத்திரங்கள் கூட இயல்பாய் வலம் வந்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் மிக முக்கியமான பங்கு கலை இயக்குநர் ஜே.கேவுடையது. 1970-ல் இருந்து சமகாலம் வரும் நடைபெறும் இந்தப் படத்தின் காலச்சூழலுக்கேற்ப ஒவ்வொரு களத்தையும் அமைத்திருப்பது சிறப்பு. ( அந்தந்த கால சினிமா போஸ்டர்கள், பட்டாசு, மார்க்கெட், என்று பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார்). சேரனின் கல்லூரி நண்பர்கள் group study செய்யும் அந்த பிரம்மாண்டமான 'நகரத்தார் டைப்' வீட்டின் பிரம்மாண்டமும் கலைநயமும் அந்தக்காலத்தில்தான் மனிதர்கள் 'வாழ்ந்திருக்கிறார்கள்' என்று உணர்த்துகிறது.

இசை ஸ்ரீகாந்த் தேவா. 'உன்னைச் சரணைந்தேன்' என்கிற பாடலும் சேரன் தன் பெற்றோர்களை மகிழ்வாக வாழவைக்கும் காட்சிகளின் 5 நிமிட க்ளாசிகல் பின்னணி இசையும் என மெருகூட்டியிருந்தாலும் இளையராஜா போன்றவர்களின் கூட்டணி இருந்திருந்தால் இந்தப் படம் இன்னும் உயரத்திற்கு சென்றிருக்குமே என்று தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை.

()

சேரன் இந்த படத்திற்காக மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அந்தந்த கால கட்டத்தை வானொலி சினிமாப்பாடல்கள், மற்றும் சம்பவங்கள் மூலம் உணர்த்துவது, தன் காதல் மனைவியுடன் குடிபோகும் அந்த அடித்தட்டு மக்களின் குடியிருப்பின் யதார்த்தமான இயல்பு, என்று பல காட்சிகளில் சிறப்பாக அமைத்திருந்தாலும் வேலை கிடைக்காமல் கைவண்டி இழுப்பது போன்ற நாடகத்தன்மையை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் இவ்வளவு மெனக்கெட்டிருக்கிற சேரன் அந்தக்காலத்து 'பீம்சிங்' மற்றும் 'கே.எஸ் கோபாலகிருஷ்ணன்' காலத்து பாணி குடும்பப் பாங்கான படங்களையே மறுபடி தூசிதட்டி கொடுத்திருக்கிறார் எனும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. கதாநாயக ஆதிக்க ஆக்ஷன் படங்களையே அதிகம் பார்த்துக் கொண்டிருக்கிற சமகால சூழ்நிலைக்கு இந்த படம் வித்தியாசமாய் காட்சியளித்தாலும் உள்ளடக்கத்தில் எந்தவித வித்தியாசமுமில்லை. அடுத்த படத்தை 'அண்ணன் தங்கை' பாசமலராக சேரன் எடுக்காமல் இதிலிருந்து இன்னொரு கோணத்தில் சிறப்பான படத்தை தருவரார் என்று நம்புவோம். அவரால் அது நிச்சயம் இயலும்.

'ஆட்டோகிராப்' தந்த விருதுகளின் வெற்றி மயக்கத்தில் அதே மாதிரியானதொரு படத்தை தந்து இன்னும் அதிக விருதுகளுக்காக 'தவமாய் தவமிருக்கும்' சேரன் விழித்தெழுந்து தன்னுடைய இயல்பு பாணிக்கு மாற எல்லாம் வல்ல இயற்கையை பிராத்திக்கிறேன்.

Saturday, December 17, 2005

கால்கள் இல்லாத கஸ்தூரி மான்

எப்பவோ பார்த்த படத்திற்கு மிக தாமதமாய் விமர்சனம். பரவாயில்லை, இந்தப் படத்தை நீங்கள் பார்க்காமலிருப்பதனால் ஒன்றையும் இழந்து விடவில்லை. வித்தியாசமான கதை மற்றும் களம் என்று எந்த எழவுமில்லை. நாயகனுக்காக தன்னையே மெழுகுவர்த்தி போல் (மன்னிக்கவும், நவீன உவமை எதுவும் கிடைக்கவில்லை) தியாகம் செய்யும் நாயகியின் கதை.

இந்தப் படத்தின் இயக்குநர் லோகிதாஸ் மலையாளத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்தாலும், நான் இதுவரை பார்த்திருக்கிற பெரும்பாலான மலையாளப் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில "ஐந்து நிமிட" காட்சிகளுக்காக மட்டும் என்பதால் இவரைப் பற்றி அறிந்திருக்கவிலலை. என்றாலும் இவரைப் பற்றி நான் சமீபத்தில் பத்திரிகைகள் மூலம் அறிய நேர்ந்தது "மீரா ஜாஸ்மீனுடன் கசமுசா" என்பது போன்ற மலிவான செய்தியின் மூலமாக என்பதால் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'நம்மூர் பாலச்சந்தர் போல்' என்று ஒரு பேட்டியில் இந்தப்படத்தின் நாயகன் பிரசன்னா சொன்னார். இந்தப்படத்தை பார்க்க என்னை தூண்டியது, இவர் தமிழ்த்திரைக்கு முதன்முதலாக வந்தது என்கிற செய்தி என்றாலும், உபரி காரணங்கள், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்பதும், 'செம டாப்பா இருக்கு' என்கிற பத்திரிகைகளின் அதிசயமான அதீதமான விமர்சனங்களும்தான்.

()

ஒரு காலத்தில் வெற்றி பெற்ற சினிமாப்பட தயாரிப்பாளராக இருந்து இப்போது நொடித்துப் போய் தன்னுடைய செல்வ வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் இருக்கும் சரத்பாபுவின் மகன் பிரசன்னா பொறுப்பான நல்ல பிள்ளை; படிப்பில் தீவிர கவனம் செலுத்துபவன்; தன் சம்பாத்தியத்தின் மூலம் குடும்பத்தின் இழந்து போன பெருமையை மீட்க நினைப்பவன். இவன் படிக்கும் கல்லூரியிலேயே படிக்கும் மீராஜாஸ்மின் ஒரு பயங்கர கலாட்டா பேர்வழி. இருவருக்கும் அடிக்கடி மோதல். கதையின் சிறு திருப்பமாக, பின்னர்தான் பிரசன்னாவிற்கு தெரியவருகிறது, மீரா ஜாஸ்மினுக்கு பின்னால் உள்ள சோகம். அவர் ஓர் ஏழை என்பதும், குடும்பச் செலவுகளை சமாளிக்க நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பகுதி நேர நர்சாக வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படிக்கிறார் என்பது. மேலும் அவருடைய அக்கா கணவரின் பாலியல் நோக்கத்துடனான அத்துமீறல்கள் வேறு.

வறுமை காரணமாக படிப்பைத் தொடர சிரமப்படும் பிரசன்னாவிற்கு, மீரா ஜாஸ்மின் தன்னுடைய சிரமங்கங்களுக்கிடையில் உதவி படிப்பை தொடர உதவுகிறார். இதன் காரணமாக இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. தன் படிப்பு முடிந்ததும் மீராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுகிறான் பிரசன்னா. அதன் படியே இருவரும் இணைந்தார்களா என்பதை கொஞ்சம் ரத்தம் சிந்தும் கிளைமாக்சுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

()

மோகன், முரளி போன்ற மென்மையான நாயகர்களின் காலியிடத்தை கச்சிதமாக இட்டு நிரப்புதற்கேற்றவாறு இருக்கிறார் பிரசன்னா. திறமையான இயக்குநர்களிடம் மாட்டினால் சிறப்பாக தன் பணியை வெளிப்படுத்துவது போல் எந்த வித இமேஜீம் இல்லாமல் புத்தம்புது களிமண்ணாக, Blank-ஆக இருக்கிறார். (இயக்குநர் சுசி கணேசன் தனது 'பைவ் ஸ்டார்' படத்திற்காக புதுமுகங்களை தேடி விஜய் டி.வி யில் நேர்முகத் தேர்வு நடத்திய போது அதில் கலந்து கொண்ட பிரசன்னாவை பார்த்த போதே "இந்தப் பையன் நிச்சயம் தேர்வு செய்யப்படுவான்" என்று எனக்கு தோன்றியது).

பொதுவான கதாநாயகிகளின் வாட்டசாட்ட தோற்றத்திலிருந்து விலகி, சோளக்கொல்லை பொம்மை போலிருக்கும் மீரா ஜாஸ்மின் தனது நடிப்புத் திறமையால் பல இடங்களில் நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறார், குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சியில். நூல்நிலையத்தில் பிரசன்னாவை கலாட்டா செய்யும் போதும், "நம் பண்பாட்டிற்கேற்றவாறு உடையணிந்து வாயேன்" என்று கண்டிக்கும் கல்லூரி முதல்வரின் உத்தரவையேற்று, கொசுவம் வைத்து கட்டிய கண்டாங்கி சேலையும், தலை நிறைய பூவும், வாய் நிறைய வெற்றிலையுமாய் வந்து நக்கல் செய்யும் போதும் நம்மை குதூகலிக்க வைக்கிறார்.

என்றாலும் இதில் சிறப்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களாக இருவரை மட்டுமே சொல்வேன். ஒருவர், மீரா ஜாஸ்மினின் சகோதரியின் கணவரின் தாயாராக வரும் ஒரு கிழவி. சற்றே அருவருப்பான தோற்றத்துடன் அதை விட அருவருப்பான பாஷையும் பாவனையுமென ஏதாவது ஒரு சேரியில் நாம் நிச்சயம் சந்திக்க சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கிற ஒரு கிழவியை பிரதிபலித்திருக்கிறார். (ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் ஆரம்பக்கட்டத்தில் அறிமுகமாகும் ஒரு கதாபாத்திரத்தையே இந்தக் கிழவி பாத்திரம் நினைவுபடுத்தியது). இன்னொன்று கிரைம் பிராஞ்ச் கான்ஸ்டபிளாக 'நடையடி நாகராஜன்' என்கிற பட்டப் பெயருடன் வரும், மேற்சொன்ன கிழவியின் மகன். (இவர் மலையாள நடிகர் திலகனின் மகனாமே!) மலையாள நடிகர் என்றாலும் அதற்குரிய உடலசைவுகளோ, பாஷை உச்சரிப்போ இல்லாமல், வழக்கமாக மலையாள நடிகர்கள் தமிழிற்கு வரும் போது வெளிப்படும் அசெளகரியங்களை இவரிடம் பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.

()

இளையராஜா இந்தப் படத்திற்கு தன்னுடைய இடது கையினால் இசையமைத்திருப்பார் போலிருக்கிறது அல்லது இந்தப் படத்திற்கு இவ்வளவு போதும் என்று கூட நினைத்திருக்கலாம். பாடல்களும் பின்னணி இசையையும் எங்கோ கேட்ட மாதிரியே இருந்தது. ஒரு படத்தின் வசனகர்த்தா எந்த இடத்திலும் தன் தலையை தூக்கி எட்டிப்பார்க்காமல் கதாபாத்திரங்களை இயல்பாக பேசவிடுவது நல்லது. ஜெயமோகன் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டிருந்தாலும் "ஐஸ்கட்டி மேல சாயம் பூச டிரை பண்ணாத தம்பி" "வாழைத்தண்டும் யானைத்தந்தமும் பாக்க ஒரேமாதிரிதான் இருக்கும்" போன்ற இடங்களில் சற்று சறுக்கியிருக்கிறார்.

படங்களின் முக்கியமான குறை காட்சிகளின் மற்றும் குணாசியங்களின் நம்பகத்தன்மையின்மை. ஒரு முட்டை வாங்கக் கூட வசதியில்லாமற் காட்டப்படும் பிரசன்னாவின் குடும்பத்தின் வீட்டின் உள்அமைப்பு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சற்றும் குறைவில்லாமல் காட்டப்படுகிறது. புதிது, புதிதான சட்டை அணிந்து வரும் பிரசன்னா ஊசிப்போன சாப்பாட்டை மதியத்திற்கு எடுத்துவருவதாக சொல்லப்படும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்படியானப்பட்ட இவர்கள் ஏதோ ஒரு கிராமத்து ஓட்டு வீட்டில் தங்கியிருக்கும் மீரா ஜாஸ்மின் நர்சாக வேலை செய்து தரும் பணத்தை படிப்பு செலவிற்கு வாங்கிக் கொள்வார்களாம். இந்த மாதிரியான யதார்த்தமின்மையாக சித்தரிக்கப்படும் காட்சிகளால் நம்மால் படத்துடன் ஒன்றிப் பார்க்க இயலவில்லை.

()

மலையாள இயக்குநர்கள் தமிழில் படம் செய்யும் போது அவர்களையும் அறியாமல் மலையாள நேட்டிவிட்டி, காட்சிகளிலும் மொழி உச்சரிப்புகளிலும் காட்சி நடைபெறும் களங்களிலும் வந்துவிடும். பாசில், பிரியதர்ஷன், சித்திக், வினயன் என்று ஒரு பட்டியலே உண்டு. லோகிதாஸீம் இதற்கு விதிவிலக்கில்லாமல் இது தமிழ்ப்படமா அல்லது மலையாள படமா என்கிற குழப்பத்தை ஏற்படுகிறார். நவநாகரிமாக காட்டப்படும் கல்லூரி இருக்கும் இடமும் கிராமத்தை நினைவுபடுத்தும் மீராவின் வீடும் முரணாக இருக்கிறது. ஆனால் ஒன்று... நம் தமிழ்ப்பட இயக்குநர்க¨ளைப் போலவே கல்லூரி காட்சிகளை வகுப்பறையில் காண்பிக்காமலிருந்து அவர்களுடன் ஒத்துப் போகிறார்.

சிறப்பாக துள்ளியிருக்க வேண்டிய இந்த கஸ்தூரி மான் இவ்வாறான குறைகளினால் சுகந்தமே இல்லாமல் ஓட முடியாமல் முலையில் அமர்ந்து பரிதாபமாய் விழிக்கிறது.

Wednesday, November 30, 2005

'உயிர்மை'யின் சு.ரா. நினைவு அஞ்சலி கூட்டம்

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அண்ணாசாலை, தேவநேயப் பாவாணர் நூல்நிலைய கட்டிடடத்திற்குள் நுழையும் போது வியப்பும் அச்சமும் ஏற்பட்டது. நான் வழக்கமாகச் செல்லும் நூல்நிலைய கட்டிடம் என்றாலும் ஜெயலலிதாவின் பிரம்மாண்ட புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனரை பார்த்தவுடனே 'எது செய்தாலும் கருணாநிதிக்கு போட்டியாக செயல்படுகிற ஜெயலலிதா, ஒருவேளை தமிழிலக்கியத்திற்குள்ளும் குதித்து சு.ரா. கூட்டத்திற்கு தலைமை தாங்கப் புறப்பட்டு விட்டாரோ, என்னடா இது இலக்கியத்திற்கு வந்த சோதனை. இப்படியே கிளம்பி விடலாமா' என்றெல்லாம் தோன்றியது. நல்ல வேளையாக அப்படியெல்லாம் இல்லை. வேறு ஏதோ கூட்டத்திற்குண்டான பேனர்களை இங்கே வைத்திருந்தனர்.

நான் படியில் ஏறிக் கொண்டிருக்கும் போது சாருநிவேதிதா இறங்கி வந்துக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாமா என்றெழுந்த எண்ணத்தை ஏனோ மாற்றிக் கொண்டு மேலே சென்றேன். ஏற்கெனவே கணிசமான அளவில் பார்வையாளர் வந்திருந்தார்கள். நான் அமரும் போது மனுஷ்யபுத்திரன் தன் வழக்கப்படி, எழுதி எடுத்து வந்திருந்த உரையை வாசித்து முடித்திருந்தார். சில பேச்சாளர்கள் பேசும் போது செய்யும் கோணங்கித்தனங்களும் நாடக காட்சிகளும் இதனால் தவிர்க்கப்படும் என்பதால் அவர்களுக்கு இந்த முறையை கட்டாயப்படுத்தலாம் என்று தோன்றியது. (இந்த இடத்தில் மனுஷ்யபுத்திரனின் எழுத்து நடையை குறிப்பிட வேண்டும். அவரின் கவிதைகளை விட உரைநடையையே நான் பெரிதும் விரும்புவேன். சொற்களின் லாகவமான கவித்துவமான கட்டமைப்பும் உள்ளடக்கத்தை சிதறாமல் கோர்வையாக தெரிவிக்கும் பாணியும் எப்போதும் என்னை பொறாமை கொள்ள வைக்கும்.)

பின்னர் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற சுராவைப் பற்றின நூலை ஜெயகாந்தன் வெளியிட பாலுமகேந்திரா பெற்றுக் கொண்டார். (பேச்சாளர்கள் பேசியவற்றில் என் நினைவில் தங்கிய பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ நேருமாயின் அது என் குற்றமாகும். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்க்கும் நான், மிகவும் விரும்பி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்றாலும் அப்போது நான் ஏனோ உற்சாகமான மனநிலையில் இல்லை. சுரமும், ஜலதோஷமும் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தனாலும் இது ஏற்பட்டிருக்கலாம்.)

முதலில் பேசிய பாலுமகேந்திரா, தாம் சு.ராவின் தீவிர ரசிகன் என்றும், ஒரு தொலைக்காட்சிக்காக பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளை படமாக்கின போது அந்த சிறுகதை எழுதப்பட்ட முறையை விட தாம் சிறந்த முறையில் அதை படமாக்கினது குறித்து உள்ளூர கர்வப்பட்டதாகவும், ஆனால் சு.ராவின் சிறுகதையை படமாக்கின போது அவ்வாறு திருப்தியடைய முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டார்.

பின்பு மலையாளத்தில் பேசிய 'கல்பற்றா நாராயணனின்' உரையை ஜெயமோகன் மொழிபெயர்த்து வாசித்தார். (இந்த நேரத்தில் நான் வெளியே அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடைகளில் சிற்றிதழ்களை வாங்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்). அதன் பிறகு 'கூத்துப் பட்டறை' ந.முத்துசாமி சுராவுடனான அவருடைய அனுபவங்களை பார்வையாளர்களை சோர்வடைய வைக்கும் வகையில் சுவாரசியமின்றி பேசிக் கொண்டே போனார்.

கவிஞரும் சிறுகதை மற்றும் நாவலாசிரியருமான யுவன் சந்திரசேகர், தாம் முன்பு அவ்வப்போது கவிதைளை எழுதி நண்பர்களிடம் படிக்கத் தருவதாகவும், ஆனால் சு.ராவை சந்திக்கச் செல்லும் போது தன் கவிதையை அவரிடம் காட்ட தைரியமில்லாமல் செல்வதாகவும் கூறினார். ஒரு கவிதையின் முடிவில் தபால் விலாசம் வருமாறு எழுதினதை சுராவிடம் தயக்கத்தோடு 'இது சரியா' என அபிப்ராயம் கேட்க 'ஓ பேஷா செய்யலாமே. இதுவரைக்கும் தபால் விலாசத்தோடு கவிதை எழுதலாம்-னு எனக்குத் தோணலை. இனிமே இந்த மாதிரி இதுவரைக்கும் வராத விஷயங்களோடு எழுதலாம்னு தோணியிருக்கே' என்று பதில் வந்ததாம்.

நாஞ்சில் நாடனின் பேச்சு இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. 'எவனொருவரிடம் நீ செல்வதற்கு மரியாதையுடன் கூடிய அச்சமும் தயக்கமும் கொள்கிறாயோ அவரே உனக்கு குருவாக இருக்க லாயக்கானவர்' என்கிற ஜக்கி வாசுதேவின் கூற்றுப்படி தாம் அவ்வாறு உணர்கிற இரண்டு எழுத்தாளர்களாக சு.ரா.வையும் ஜெயகாந்தனையும் குறிப்பிட்டார்.

பிரபஞ்சன் பேச ஆரம்பித்ததும் கூட்டம் இறுக்கம் தளர்ந்து கலகலப்பானது. அவருடைய தோழமையான பேச்சை எப்போதுமே நான் ரசிப்பேன். மெலிதான குரலில் 'நண்பர்களே' என்று ஆரம்பித்து கூட்டத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கச் செய்வதில் வல்லவர். எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் சிறந்த கதை சொல்லி. சு.ராவின் 'பிரசாதம்' என்கிற கதையை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார். ஆனால் எப்போதோ படிக்கும் போது பிடித்த கதை, இப்போதைய வாசிப்பில் தன்னை கவரவில்லை என்றார். 'சு.ரா இறந்து போனாலும் அவரின் எழுத்துக்கள் நம்மோடு இருக்கும்' என்றும் 'கூர்மையான எழுத்தின் மூலம் அவரை கடந்து செல்வதே நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்' என்றார்.

"சு.ரா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனேயே ஜெயமோகன் பேனாவை எடுத்து விட்டார் போலிருக்கிறது" என்று அதிரடியான நகைச்சுவையுடன் ஆரம்பித்த ஜெயகாந்தன், அவர் சு.ராவைப் பற்றி இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்றும் சு.ராவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றும் கூறினார். பின்பு இளமைக்காலங்களில் சு.ராவோடு அளவளாவின சுவாரசியமான சம்பவங்களையும் இருவரும் எழுத்தாளர் மாநாட்டுக்கு நண்பர்களோடு சென்றதையும், நாகர்கோவிலில் சு.ராவின் இல்லத்திற்கு சென்ற போது அவரின் வசதியான வாழ்க்கையை பார்த்ததும் ஜெயகாந்தனுக்கு தோன்றியது இதுதான். 'இவர் ஏன் எழுதறார்?'

அவர் மேலும் பேசும் போது "சு.ரா காலமாகி விட்டதாக சொல்கிறார்கள். காலம் என்றால் என்ன? எப்போதும் இருப்பது. சு.ரா எப்போதும் இருப்பார் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

ஜெயமோகன், தாம் எழுதின நூலைப் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு கூட்டம் நிறைவு பெற்றது.

()

துக்கம் ஊதுவத்திப் புகையை போல சுழன்று கொண்டிருக்குமோ அல்லது யாராவது கைக்குட்டையால் கண்களை துடைத்துக் கொள்வார்களோ அல்லது ஏதாவதொரு பாசாங்கான நாடகத்தை சகித்துக் கொள்ள வேண்டியிருக்குமோ என்றெல்லாம் பயந்து கொண்டிருந்த எனக்கு அவ்வாறெல்லாம் இல்லாமல் கூட்டம் இயல்பாக முடிந்ததில் திருப்தியே. எந்தவொரு நூல் வெளியீட்டிலும் சம்பந்தப்பட்ட நூலை வாங்கிப் பழக்கப்பட்டிராத நான் ஜெயமோகன் எழுதிய 'நினைவின் நதியில்' என்கிற நூலை வாங்கி இரண்டே அமர்வில் படித்து முடித்தேன். (இந்த நூலைப் பற்றி பின்வரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)

Thursday, November 17, 2005

அது ஒரு கனாக்காலமும் தமிழ்ச் சினிமாவின் எதிர்காலமும்

தீபாவளி போன்ற பண்டிகையை, கட்டாயமாக புதுத் துணி எடுத்தோ, பட்டாசு வெடித்தோ, ஏதாவது ஒரு சினிமாவை பார்த்தோதான் கொண்டாட வேண்டும் என்கிற தமிழர்களின் சிந்தனை ஆழமாக வேறூன்றிவிட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அதிர்ஷ்டவசமாக விடுமுறையாக அமைந்துவிட்டபடியால் ஏதாவதொரு சினிமாவிற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் (அதாவது கட்டளை) என் குடும்பத்தினரால் என் முன்வைக்கப்பட்டது. சிவகாசி, மஜா போன்ற வெளிப்படையான வணிகப்படங்களை பார்ப்பதை விட கால் சராய்க்கு பட்டன் தைப்பதையே உன்னதமான காரியமாக நான் கருதியதால் இதற்கு மாற்றாக பாலுமகேந்திராவை நம்பி 'அது ஒரு கனாக்காலம்' என்கிற திரைக்காவியத்தை பார்க்க தீர்மானித்தேன்.

()

அப்பன் சொல் கேளாமை, பேருந்தில் பெண்களை கிண்டல் செய்து நடத்துனருடன் தகராறு, கவர்ச்சி நடிகையுடன் இரவு கனவுப்பாட்டு, கண்டவுடன் காதல் என்று இன்றைய இளைஞனின் எல்லாவித குணாதிசயங்களோடு இருக்கிற தனுஷ் சூழ்நிலை காரணமாக சிறைக்கு செல்ல நேருவதும் அதன் பின்நிகழ்வுகளும் கதை.

எந்தவித வணிக சமரசங்களுக்கும் இடம் தராமல் மிகச்சுவாரசியமாக சொல்லியிருக்க வேண்டிய இதை பாலுமகேந்திரா சொல்லியிருக்கிற விதம் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தது. இந்த மாதிரியான சொதப்பலான, ஊர்கின்ற திரைக்கதையை தொகுக்க AVID எடிட்டிங் எழவு முறை எல்லாம் எதற்கு என்றே புரியவில்லை. (மிகுந்த அவசியமேற்படுகிற சமயங்களில் காட்சிகளின் நிகழ்வுகள் மற்றும் உணர்வுகளை நிதானமாக காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிற படங்களை இதனுடன் ஒப்பிடவில்லை). சன் டி.விக்கு டெலிபிலிமாக எடுக்க வேண்டியதை மனசு மாறி திரைப்படமாக எடுத்து விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு தூர்தர்ஷனின் 'செவ்வாய்க்கிழமை நாடக' வாடை படம் பூராவும் அடிக்கிறது. ·பிளாட் கதவை திறப்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை காண்பிப்பதை வேறு வேறு மாதிரிகளில் சொல்ல முடியும் என்பதை புனே திரைப்படக் கல்லூரியில் படிக்கும் போது தங்கப்பதக்கம் வாங்கின பாலுமகேந்திராவிற்கு தெரியாமலா போயிருக்கும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சரி போகட்டும்! வயசாகி விட்டது போலிருக்கிறது. தனுஷ் சிறைப் பகுதியிலிருந்து தப்பிக்கும் அந்த ஆரம்பக் காட்சியை இதை விட சிறப்பாக 'நாய்புகழ்' இராமநாராயணணே எடுத்திருப்பார் போலிருக்கிறது.

என்றாலும் இதில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிற நடிகர்கள் தங்கள் பங்கை திறம்பட செய்திருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதல். 'காதல் கொண்டேனுக்கு' பிறகு தனுஷை யாரும் சரியாக உபயோகப்படுத்தின மாதிரி தெரியவில்லை. இந்தப் படத்தில் ஒரு விட்டேற்றியான இளைஞனை, காதல் என்றவுடன் மிகவும் சின்சியராகிவிடுகிற இளைஞனை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். பல இடங்களில் அவருடைய முகபாவங்கள் எந்தவொரு சிறந்த நடிகருக்கும் சவால் விடுகிற படியிருக்கிறது. என்றாலும் அந்த பல்லி மாதிரியான உடம்பை வைத்துக் கொண்டு சிறைச்சாலை இன்ஸ்பெக்டரிடம் வலியப் போய் மறுபடியும் மறுபடியும் உதை வாங்கும் போது அனுதாபத்திற்கு பதில் எரிச்சலே வருகிறது. (இந்த மாதிரியான அபத்தமான காட்சியை சித்தரித்தற்கு இயக்குநர்தான் காரணம் என்றாலும் .... சரி சரி விடுங்க..)

ப்ரியா மணி மேக்கப் இல்லாமல் வந்து சற்றே பயமுறுத்தினாலும் எல்லா பாவங்களையும் எளிதாக சொல்லிவிடும் தன் கண்களை வைத்து சமாளித்திருக்கிறார். டெல்லி கணேஷீம் உஷாவும் ஒரு கண்டிப்பான அப்பாவையும் பாசமான அம்மாவையும் முறையே கண்முன் கொண்டு நிறுத்தியிருக்கிறார். மற்ற படங்களில் ஒரு மூலையில் வந்து விட்டு போகும் இவர்கள் பிரதான பாத்திரங்கள் தரப்படும் போது பின்னியெடுப்பதைப் பார்க்கும் போது நம் வணிக இயக்குநர்களை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. கலைராணி ... பாவம்... மனோரமாவின் இடத்தைப் பிடிக்க நாடக உலகிலிருந்து வந்திருக்க வேண்டியதில்லை.

இந்தப் படத்தின் ஒரே ஆறுதலான சிறப்பம்சமாக இளையராஜாவைச் சொல்வேன். சில குறிப்பிட்ட இயக்குநர்கள் படங்களுக்கு மட்டும் தன் ராஜதூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இசைக்கின்ற ராஜா இதில் நிறையவே ஓவர் டைம் பார்த்திருக்கிறார். 'அந்த நாள் ஞாபகம்' என்கிற (பாலுமகேந்திரா படங்களில் தவறாமல் இடம் பெறுகிற) Montage பாட்டும் 'காட்டு வழி போற தம்பி' என்கிற டைட்டில் பாட்டும், தனுஷின் அம்மா இறந்த பின் ஒலிக்கின்ற ராஜாவின் பேவரைட் அம்மா பாட்டும் சிறப்பாக வந்திருக்கிறது. பின்னணி இசையில், குறிப்பாக காவல் துறை சம்பந்தப்பட்ட காட்சிகளில் கலக்கியிருக்கின்ற ராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பரிதாபமான காட்சியமைப்புகள் ஜீவனற்று தோன்றுகின்றன.

இயக்குநர் பாலுமகேந்திரா தோற்றுப் போயிருந்தாலும் நல்ல வேளையாக ஒளிப்பதிவாளர் பாலு இன்னும் உயிர்ப்போடிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பெரும்பாலான காட்சிகள் நிகழும் நாயகனின் வீட்டின் ஒளியமைப்பு மிக சிறப்பாக இருக்கிறது.

()

இத்துணை திறமையான கலைஞர்களின் துணையோடு மிகச் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படத்தை இத்தனை சொதப்பலாக்கினதற்கு முழுக்க காரணமாக பாலுமகேந்திராவைச் சொல்வேன். வணிக அம்சத்திற்காக செருகப்பட்ட தேஜாஸ்ரீயின் கனவு கவர்ச்சிப் பாட்டும் யதார்த்தமேயில்லாத சிறைக்கூடக் காட்சிகளும் (இத்தனை வசதியான சிறையை இதுவரை நான் பார்த்ததேயில்லை. தமிழ்ப்படங்களிலேயே சிறை சம்பந்தப்பட்ட காட்சிகளை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றது 'மகாநதி' மட்டுமே) அபத்தமான கிளைமாக்சும் இதை இயக்கியது பாலுமகேந்திராதானா என்று சந்தேகப்படும் நிலைக்கு நம்மை தள்ளுகிறது.

பாலுமகேந்திரா, பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற சிறந்த திரைப்பட இயக்குநர்களுக்கு ஒரு நிலைக்கு பிறகு ஏன் சிறப்பாக இயங்க முடிவதில்லை? (இந்தக் கேள்வியை பொதுவாகவே அனைத்துத் துறையிலும் பெரும்பாலான கலைஞர்களின் மீது பொருத்திப் பார்க்கலாம்) சமீபத்திய அமுதசுரபியில் ஓவியர் தேனுகா பயன்படுத்தியிருக்கிற 'Intellectual Menopause' என்கிற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. தமிழ்ச்சினிமாவின் யதார்த்தப் படங்களின் பொற்காலமாக விளங்கிய 1980-க்களை கலைத்துக் கொண்டு வந்த 'சகலகலா வல்லவன்' போன்ற வணிக வெடிகுண்டுப் படங்களின் புகையிலிருந்து வெளிவர இயலாமல் இன்னமும் தமிழ்ச் சினிமா மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாலுவைப் போன்ற இயக்குநர்களும் ஏமாற்றமளிப்பதைப் பார்க்கும் போது இந்த சக்தி மிகுந்த ஊடகத்தின் எதிர்காலத்தை நினைத்து எனக்கு கவலையாக இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்கு இப்போது ஓடிக் கொண்டிருக்கும் வணிகப்படங்கள்தான் சினிமா என்று அழுத்தமாக நம்பும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்றும் தோன்றுகிறது.

அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியாராகம், சதிலீலாவதி என்று எத்தனை சிறப்பான படங்கள்.

ஹீம்........... அது ஒரு கனாக்காலம்.

Saturday, October 15, 2005

சுந்தரராமசாமி மறைவு

Image hosted by Photobucket.com

புகழ்பெற்ற எழுத்தாளரான சுந்தரராமசாமியின் மறைவு குறித்து திண்ணையின் அறிவிப்பை இன்று காலையில் பார்த்த போது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது, மரணம் என்பது தவிர்க்க முடியாதது என்பது புத்தியில் உறைத்தால் கூட. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி. தமிழிலக்கிய உலகிற்கு இது பெரும் இழப்புதான் என்று வழக்கமான பாசாங்கான வார்த்தைகளோடு அல்லாமல் நிஜமாகவே உணர்ந்து இந்த வார்த்தையை பயன்படுத்துகிறேன்.

Saturday, October 01, 2005

மேல்தட்டு மக்களின் கீழ்த்தர உலகம்

PAGE 3 படத்தைப் பற்றி உருப்படாதது நாராயணன் பதிவில் பார்த்ததிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. தியேட்டரில் பார்க்கும் முன்னரே படம் வெளியேறி விட்டது. விசிடிக்கள் சல்லிசாக கிடைக்கும் பர்மா பஜாரில் விசாரித்த போது டிவிடிதான் கிடைக்கும் என்று விட்டார்கள். நான் இன்னும் கற்கால மனிதன் போல் விசிடி பிளேயர் மாத்திரமே வைத்திருப்பதால் இதைப் பற்றி மறந்தே போனேன். இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது.

நேற்று காலை டெக்கான் கிரானிக்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது சஹாரா தொலைக்காட்சியில் இந்தப் படம் திரையிடப்படுவதைப் பற்றிய அறிவிப்பினை பார்த்தவுடனே எப்படியும் பா¡க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மாலை ஆறு மணி ஆனவுடனே இருக்கிற வேலைகளை கணினி திரையின் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

()

Image hosted by Photobucket.com

'சாந்தினிபார்' இயக்கிய மதுர் பண்டார்க்கரின் படமிது. மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பரங்களையும், அலட்டல்களையும், பொய்ப்புன்னகைகளையும், துரோகங்களையும், வக்கிரங்களையும் இந்தப்படம் எந்தவித ஆரவாரமுமின்றி இயல்பாக சொல்கிறது. வழக்கமான தமிழ்ப்படங்களில் பணக்காரர்களை செயற்கையான முறையில் வில்லனாக முன்னிறுத்தி அதன் மூலம் நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் பொறாமைகளுக்கு வடிகால் ஏற்படுத்தித்தரும் அபத்தம் இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
படம் பத்திரிகையாளர் மாதுரியின் (கொன்கனா சென் சர்மா - Mrs &Mr. Iyer ஞாபகமிருக்கிறதா?) பார்வையில் சொல்லப்படுகிறது. மாதுரி ஒரு வணிகப் பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தை நிரப்பும் நிருபர். பார்ட்டிக்களுக்கு சென்று நிகழ்வுகளையும், கிசுகிசுக்களையும், பெரியமனிதர்களின் சாகசங்களையும் எழுதும் வேலை. இவரின் அறைத் தோழிகளில் பியர்ல் (சந்தியா மிர்துல்) பணமே குறிக்கோளாக வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இன்னொரு தோழி காயத்ரி (டாரா சர்மா) திரைப்பட நடிகையாகும் ஆசையில் நடிகரிடம் பழகி கர்ப்பமாகி தற்கொலைக்கு முயல்கிறாள். இந்த நிகழ்வுகளும் மேல்தட்டு வர்க்கத்தினரின் செயற்கையான புன்னகைகளும் அவர்களின் அடிமனது ரகசியங்களும் மாதுரியை மிகவும் பாதிக்க கிசுகிசு பக்கத்திலிருந்து தப்பி குற்றச் செய்திகளை எழுதும் வினாயக் மானேவுடன் (அடுல் குல்கர்னி) இணைகிறாள்.

பெரிய பிசினஸ் மாக்னெட் ஒருவன் அனாதைச் சிறுவர்களை கடத்தி அவர்களுடன் வக்கிர உறவு கொள்வதை கண்டுபிடித்து காவல் துறையின் உதவியுடன் அவர்களை காப்பாற்றி இந்தச் செய்தியை பத்திரிகை ஆசிரியரிடம் (பொமன் இரானி) ஒப்படைக்கிறாள். பத்திரிகை முதலாளியோ இதை பிரசுரிக்க மறுத்து மாதுரியை வேலையை விட்டு துரத்துகிறார். மாதுரியின் காதலன் ஒரிணப் புணர்ச்சியில் ஈடுபடுவதை தற்செயலாக பார்த்துவிட்டு மிகவும் அதிர்ந்து போகிறாள். பின்பு வேறுவழியின்றி வேறொரு பத்திரிகையில் பழைய வேலையான மூன்றாம் பக்கத்தை நிரப்பும் பணியில் ஈடுபடுகிறாள். அந்தப் பார்ட்டியில், முன்பு ஒருவரையருவர் வெறுத்தவர்கள் எல்லோரும் நாடகத்தன்மையோடு அளவாளவிக் கொண்டிருக்கும் அந்த செயற்கை உலகத்தை அவள் வியப்பதோடு படம் நிறைவடைகிறது.

()

நான் சமீபத்தில் பார்த்த சிறந்த படமாக இதைச் சொல்வேன். இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாக மதிக்கப்படும் பத்திரிகை உலகம் எப்படி பணமுதலைகளால் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தப்படம் சுட்டிக் காட்டுகிறது. சமூகத்தின் எந்த ஒரு அநீதியான நிகழ்வும் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் வணிக ஈட்டல்களுக்கு எந்தவித இடர்ப்பாடும் ஏற்படுத்தாது என்று நிச்சயமாக தெரிந்த பிறகே வெளியாகிறது. ஆக.. அப்பாவிகளும், பிக்பாக்கெட் கேஸ்களும், கூலிப்படையினரும் மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்தப்பட அவர்களின் பின்நின்று இயக்கும் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் சட்டத்தின் செளகரியமாக நிழலில் ஒளிந்து கொள்கிறார்கள்.
மாதுரி கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் காணப்படும் மனிதர்களை நாம் எல்லா நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளிலும் பார்க்கலாம். எல்லோரிடமும் வலிந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர், பத்திரிகையில் தன்னைப் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் வேண்டும் என எதிர்பார்க்கும் தொழிலதிபர், பேரருக்கு லஞ்சம் கொடுக்கும் எம்.பி., இந்தப் பா¡ட்டியை விட என்னுடைய பார்ட்டி ஆடம்பரமாக இருந்தது என்று சுயதம்பட்டமடித்துக் கொள்ளும் பணக்காரர், பார்ட்டிக்கு பெருமை சேர்க்க வரவழைக்கப்படும் நடிக நடிகையர், அவர்களைச் சுற்றி மின்னலடிக்கும் பிளாஷ் லைட்டுகள், சிகரெட் பிடிக்கும் ஆடம்பர பெண்களின் வம்புகள், அங்கலாய்ப்புகள், இவர்களின் கார் டிரைவர்களின் கிண்டலான கலந்துரையாடல்கள் என்று கலந்துகட்டி எல்லாப் பாத்திரங்களினாலும் இந்தப்படம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையிலிருந்து சற்று மாறுதலாக தன் வயது வந்த மகளைப் பற்றி கவலைப்படுகிறார் தொழிலதிபரின் மனைவி (சோனி ரஸ்டான்). இவர் அனாதை சிறுவர்களை வைத்து ஆசிரமம் ஒன்றை நடத்தி அதில் மனநிறைவு காண்கிறார். இந்தச் சிறுவர்களை கடத்தி தன் கணவர் பாலுறவுக்காக உபயோகப்படுத்துவதை அறிய வந்ததும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். (இவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாவு வீட்டில் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் நடத்தும் செயற்கை சோக நாடக காட்சிகள் மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது)

கொன்கனா சென் சர்மாவின் அந்த மிகப் பெரிய கண்களே சிறப்பாக நடித்து அவரின் வேலையை சுலபமாக்கி விடுகிறது. சக பத்திரிகையாளரான அடுல் குல்கர்னிக்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லையெனினும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராக வரும் பொமன் இரானி, மாதுரி சிரமப்பட்டு எடுத்துவந்திருந்து சிறுவர் பாலுறவு அநியாயத்தை பிரசுரிக்க முடியாத கையாலாகததனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல் துறை இன்ஸ்பெக்டராக வரும் உபேந்திரா லிமாயின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. (அதிலும் அந்த என்கவுன்டர் காட்சி.....)

இயக்குநர் எழுதியிருக்கும் வசனங்கள் கூர்மையான அங்கதத்துடன் இருக்கிறது. எனக்குத் தெரிந்த அறைகுறை இந்தியை வைத்தே இந்தப்படத்தை ரசிக்க முடிந்தது.

(உதா: போதை உபயோகிப்பாளர்களில் கைது செய்யப்படும் பணக்கார இளைஞன் இன்ஸ்பெக்டரை நோக்கி கேட்கிறான்: "ஏய்.... எங்கப்பா யாருன்னு தெரியுமா?"

இன்ஸ்பெக்டரின் பதில்: "உங்கப்பன் யாருன்னு உனக்கே தெரியாதா?"

()

இலை மறை காய் மறையான ஓரிணப்புணர்ச்சி காட்சிகள், முத்தக்காட்சிகள், சிறுவர்களுடனான பாலுறவுக் காட்சிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஆபாசம் எந்தவிதத்திலும் தலைதூக்காமல் காட்சிகளை அமைத்திருப்பது (அந்த பா¡ட்டியின் நடனக்காட்சி தவிர) இயக்குநரின் கலை நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால் இம்மாதிரியான ஆச்சாரத்திற்கு விரோதமான காட்சிகள் அடங்கிய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் கலாச்சார பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

இருவேளை ரொட்டிக்காக நாள் முழுவதும் உழைப்பவனின் உலகத்திற்கு அருகே விலைமாதுக்காக ஒருநாளைக்கு ஒரு லட்சம் கூட செலவழிக்கும் செல்வந்தர்களின் கொழுப்பெடுத்த உலகமும் இயங்குகிறது. இந்த பொருளாதார, சமூக முரண்பாடு உலகத்திற்கே பொதுதான் போலும்.

Thursday, September 22, 2005

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

புதிய பார்வை (செப் 15-30) இதழில் வெளியான கட்டுரையை, (மகாகவி பாரதியார் சர்வதேச கருத்தரங்கை முன்னிட்டு அவரின் வாரிசுகள் தொகுத்து வெளியிடப் போகும் கட்டுரைகள் தொடர்பானது) பாரதி அன்பர்களுக்கு உபயோகப்படக்கூடும் என்கிற நோக்கில் இங்கு வெளியிடுகிறேன். (நன்றி: புதிய பார்வை)

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

மகாகவி பாரதியாருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் தமிழ்ச் சூழலில் பாரதியைப் பற்றியும் சற்றே வெடிப்புறப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. புழுதியில் எறியப்பட்ட தெய்வ வீணையாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் பாரதி. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னும் அவரது தகுதிக்குரிய உன்னதத்துடனும், கண்ணியத்துடனும் பாரதி வாசிக்கப்பட்டதுமில்லை, விமர்சிக்கப்பட்டதுமில்லை.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகமில்லாத வாழ்க்கையும், எதைப் பற்றியும் எல்லையற்ற பணிவுடனும் திறந்த மனத்துடனும், பொறுப்புணர்வுடனும் கூடிய சுதந்திரத்துடனும் விவாதிக்கும் நேர்மையும், உள்ளத்துப் பொறியைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டேயிருக்கும் உன்மத்தமும், தன்னைப் பலி கொடுத்தும் தன் மதிப்பீடுகளைப் பேணும் நெஞ்சுரமும், பாரதியின் இயல்புகளாகும்.

தமிழ் இலக்கிய உலகில் நிலவும் எல்லா வகைக் குழுச் சண்டைகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும், தார்மீகத் தாக்குதல்களுக்குப் பின்னாலும், தமிழில் இருபதாம் நூற்றாண்டின் ஆகப்பெரும் கலைஞன் பாரதி என்பதில் இனி கேள்வியில்லை. மரபான கவிதையில் மட்டுமின்றிப் புதுக்கவிதை, சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம், கட்டுரை, கருத்துப்படம் மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முன்னோடி முயற்சிகளாகத் தன் சுவடுகளை அழுத்தமாகப் பதித்துச் சென்ற முழுமையான படைப்பாளி நம் மகாகவி. தொட்ட துறைகளிலெல்லாம் தன் தனி முத்திரையைப் பதித்த இந்த மகத்தான கலைஞனைப் பற்றிய ஆழமான பதிவுகள், நம் ஆய்வுலகில் உண்டா? பாரதியின் வாழ்வையும் எழுத்தையும் உள்ளபடியே புரிந்துகொள்ள முனையும் குறைந்த பட்ச முயற்சிகளேனும் இங்குச் சாத்தியமாகியுள்ளனவா எனில், 'இல்லை' என்றே தலைகுனிய வேணடிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒருபுறத்தில் பார்ப்பன வெறியனாகப் பாரதியைக் கட்டமைக்க சிலர் துணிந்திருக்கிறார்கள் என்றால், மறுபுறத்தில் அதைக் கண்டும் காணாத தந்திரசாலிகளாய்ப் 'பாரதியாருக்குச் சேவை' என்ற பெயரில் பாரதியைப் பலர் விற்பனைப் பொருளாக்கி வருகின்றனர். இத்தகையோர் நிறைவே இங்குண்டு. பாரதியைச் சாமியாக்கி பூசாரிகளாகத் தம்மைத் தாமே நியமித்துக் கொண்ட இப்பாமரர்களின் பாத பூசைகளில், கற்பூர ஆரத்திகளில், பாலாபிஷேகங்களில் பாரதி தரிசனம் பாதை மாறிக் கொண்டிருக்கிறது.

தேசியம், தமிழியம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற அரசியல் தளங்களிலும், புனைவியல், யதார்த்தவியல், மீ-மெய்யியல், இருத்தலியம், பின்-நவீனத்துவம் போன்ற இலக்கியத் தளங்களிலும் பாரதியைத் தவிர்ததுவிட்டு விவாதித்தல் என்பது இன்று இயலாது. இவை எல்லாவற்றின் தொடக்கப் புள்ளியாகவும், அதே நேரத்தில் மரபின் செழுமையான சாரமாகவும் பாரதி நின்று கொண்டிருக்கிறார்.

சாதி, மதம், இனம், பால், மொழி என்று எல்லாவற்றிற்குள்ளும் ஊடாடியும் கடந்தும் பெருவெளி அனுபவமாக நிலைத்திருக்கும் பாரதியின் பன்முக ஆளுமையைப் பதிவு செய்தல் என்பது, நம் காலத்தின் உடனடித் தேவையாகும். சென்ற நூற்றாண்டிலேயே நாம் செய்திருக்க வேண்டிய காரியம் இது. எனினும், காலம் கடந்தேனும் செயல் புரியும் எண்ணம் இப்போதுதான் தோன்றியிருக்கிறது என்பது காலத்தின் விந்தைகளிலொன்று. இதற்குப் பாரதியின் ரத்தம் எம்முள் ஓடுவதும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமன்று. ஆயிரம் மைல் பயணத்துக்கான முதல் அடியையும் யாராவது ஒருவர் தொடங்கி வைக்கத்தானே வேண்டியிருக்கிறது?

தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் பரிபூர்ணமாய் நம்பியவர் எம் பாட்டனார் பாரதி. வால்மீகியோடும் கம்பரோடும் ஷேக்ஸ்பியரோடும் டால்ஸ்டாயோடும் விட்மனோடும் தாகூரோடும் ஒப்பிடத்தகுந்த அந்த மேதைக்கு இன்று நாம் செய்ய வேண்டியது என்ன? உலக இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான பாரதியின் பங்களிப்பைத் திட்டவட்டமாக மதிப்பிட்டுரைப்பதுதான். இந்தத் திருப்பணியில் தமிழ் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

எதிர்வரும் பாரதியின் 123-ஆம் பிறந்த நாளில் (டிசம்பர் 11, 2005) சர்வ தேசியக் கருத்தரங்கு ஒன்று நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காகப் பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தரமான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளோம். கட்டுரைகள், ஆறு முதல் பத்துப் பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படாத கட்டுரைகளைத் திருப்பியனுப்ப இயலாது. கடடுரைகளின் தேர்வைப் பொறுத்த வரையில், தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ள இயலாது. கட்டுரைகளை மட்டும் அனுப்புங்கள். காசோலைகள் ஏதும் வேண்டாம்.

என் பாட்டியார் மகாகவியின் மனைவி செல்லம்மா பாரதி, தான் எழுதிய பாரதியார் சரித்திரத்தின் முன்னுரையில், நான் (என் கணவருடைய) கதையை எழுதப் போகிறேன் என்று கூறிவிட்டு, தமிழ் மக்களைப் பார்த்து "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்கிறார். பாரதிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

- முனைவர் எஸ்.விஜயசாரதி
(மகாகவி பாரதியாரின் பேத்தி)

டாக்டர் மீரா சுந்தரராஜன் டி·பில்
(மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி)
பேராசிரியை, சட்டத்துறை
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
வான்கூவா, கனடா.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் எஸ்.விஜயசாரதி
35/2, பழைய எண்.15, மூன்றாவது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு, சென்னை-600 020.
மின் அஞ்சல்: v_bharati@hotmail.com

கட்டுரைகள் கிடைக்க வேண்டிய இறுதிநாள்:

நவம்பர் 11, 2005

Saturday, September 17, 2005

கணக்குப் பாடமும் கணையாழிக் கவிதையும்

செப்.2005 கணையாழி இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கவிதை என் பழைய நினைவலைகளை உசுப்பி விட்டது. (நினைவலைகள் அடங்கிய பதிவுகளை வெறுப்பவர்கள் - அதாவது வீட்டில் கொசுவர்த்தி சுருள் கூட பயன்படுத்தாமல் பதிலாக மேட் பயன்படுத்துபவர்கள் - உடனடியாக இதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

'கணக்கு என்றால் ஆமணக்கு' என்கிறார் பாரதி. இந்த விஷயத்தாலேயே பாரதியை மிக நெருக்கமாக என்னால் உணர முடிந்தது. தமிழே எனக்கு எப்போதும் விருப்ப பாடம். தங்கள் மகன்களை குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்தும் அந்தக் கால பெற்றோர்கள் உருவேற்றியதாலும் ஸ்டைலாக பேசுவதால் ஏற்படும் மதிப்பாலும ஆங்கிலத்தில் ஒரளவு விருப்பம் ஏற்பட்டு படிக்க முடிந்தது. வரலாறு மற்றும் புவியியலை எல்லாம் நான் அப்போது ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதோ, இப்போது இணையத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே, அதை மாதிரியே எதை எழுதி வைத்தாலும் மதிப்பெண்கள் வந்துவிடும். (எங்கள் சரித்திர ஆசிரியர் மார்க் போடுவதில் தரித்திரமாக இல்லாமல், என்ன எழுதியிருக்கின்றது என்பதை பார்க்காமலேயே, கோலி விளையாடும் சிறுவர்கள் மாதிரி விடை எத்தனை ஜாண் நீளத்திற்கு நீண்டிருக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் வழங்கி 'சரித்திர' சாதனை புரிவார்.)

ஆனால்.... இந்த கணக்குப் பாடம்தான் என்னை ஜென்மப் பகைவன் மாதிரி எல்லா வகுப்பிலும் துரத்திக் கொண்டே வந்தது. கணக்கு வகுப்பு என்றால் நிஜமாகவே எனக்கு ஜீரம் வந்துவிடும். அதுவும் இந்த 'அல்ஜீப்ராவை' கண்டுபிடித்தவனை எங்கு கண்டாலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக அப்போது தயாராயிருந்தேன். பெண் பிள்ளைகளை துரத்திக் கொண்டும் போகும் செயல் கூட 'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.

()

இப்பவும் இருக்கிற பிராட்வே தியேட்டரின் (இங்குதான் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் என்கிற திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது) எதிரேயுள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய வெள்ளைப் பாவாடையை போட்டுக் கொண்டு எப்படி கால் தடுக்காமல் நடக்கிறார்கள் என்று நான் வியக்கிற பாதர்மார்களும், காலை வெயிலில் பிரேயருக்கு நிற்கிற போது எங்கள் மேல் வெயில் படாமல் தடுத்தருள் புரிந்த பரந்து விரிந்த பாதாம் மரமும் (இந்த மரத்திலிருந்து விழும் பாதாம்காய்களை கல்லால் உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிடுவோம். சமீபத்தில் அந்தவழி போனபோது இந்த மரம் வெட்டப்பட்டு பிரேயர் ஹால் வெளிச்சமாய் இருந்ததை பார்த்த போது என்னுள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விளக்க தெரியவில்லை) தாமதமாக வந்தால் பி.டி வாத்தியார் மூன்று ரவுண்டு மூச்சிரைக்க ஓட வைக்கிற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும் இடைவேளைகளில் வெளியே போகமுடியாதபடி வாட்ச்மேன் லாசர் பூட்டிவைத்துவிட கதவு கம்பி இடைவெளியில் வாங்கின உப்பு தூவின மாங்காய் துண்டுகளும், எலந்தம் பழங்களும் அங்கேதான் அறிமுகமானது.

நான் பொதுவாக எப்போதுமே பார்டரில் பாஸ் பண்ணுகிற ஆள். பின்பெஞ்சில் மேளம் தட்டிக் கொண்டு ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்குமே, அதைச் சார்ந்தவன். 'நன்றாக படிக்கிற பசங்களை' எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிண்டல் செய்து மட்டம் தட்டுவோம். அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருப்பார்கள். நான் அந்த வயதில் மிகவும் பூஞ்சையாக இருப்பேன். இந்த காரணத்திற்காகவே சக மாணவர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கேன். "பின்னால கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா சர்ட்டை இன் பண்றே". இந்தக் குறையை மறைத்துக் கொள்வதற்காகவே வேண்டுமென்றே படிக்காத மாணவர்களிடம் சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 70 அல்லது 80 எடுத்துவிடுவேன். இதனாலேயே படிக்கிற மாணவர்கள் என்னை 'இவன் பழுதா பாம்பா' என்று தீர்மானிக்க முடியாமலிருந்தார்கள். ஒரு முறை தமிழில் உயர்ந்த பட்சமாக 93 எடுத்துவிட என்னை ஆப்ரிக்க தேசத்திலிருந்து வந்தவன் போல் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இந்த கணக்குப்பாடம்தான்... அது என்னை விரோதியாக பார்த்ததோ அல்லது நான் அதை விரோதியாக பார்த்தேனோ தெரியவில்லை. எப்போதும் வாய்க்கா, வரப்பு தகராறுதான். நிற்க.

()

இந்த இடத்தில் நிறுத்தி எங்கள் கணக்கு வாத்தியார் அமல்தாஸைப் பற்றி கூற வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். இவர் வாய்விட்டு சிரித்த கணங்கள் அபூர்வமானவை. மதப்போதகர் தினகரனின் குரலை குளோனிங் செய்தது போல் அதே குரலில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார். நானும் அதே மாதிரியே நண்பர்களிடையே ஒரு முறை வயிற்றை முக்கி பேச முயன்றதில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தததால் அதை தொடரவில்லை. மிக மெல்லிதான ஒரு பிரம்பு வைத்திருப்பார். பிரம்பு மெலிதாக இருந்தாலும் வயாகரா சாப்பிட்ட மாதிரி அதன் வீர்யம் பெரிது. கையில் அடி வாங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு வலி கியாரண்டி.

கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நிறுத்தி சரியாக என்னைக் குறிவைத்து எழுப்பி "இதோட பார்முலா சொல்லு" என்பார் நம்பியார் குரலில். அந்த பார்முலாவோ உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் தேடிய பார்முலாவை விட கடினமானதாக இருக்கும். நான் "ஏ ஸ்கொயர் ப்ளஸ்.... " என்று ஏதோ மழுப்ப முயல கையை விறைப்பாக நீட்டச் சொல்லி சுளீரென்று பிரம்படி விழும். இதனாலேயே கணக்கையும் அந்த வாத்திராரையும் மிகவும் பிடிக்காமல் போய்விட்டது. 'கணக்கில் மட்டும்தான் பூஜ்ஜியம் வாங்க முடியாது. அவ்வளவு எளிதானது' இது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். ஆனால் இந்த விஷயத்தை அவ்வப்போது சாதித்து அவரை மிகவும் எரிச்சலூட்டுவேன். படிக்கிற மாணவர்கள் அல்ஜீப்ராவை ஏதோ மாற்றான் மனைவியுடன் சல்லாபிப்பது போல் சுவாரஸ்யமாக போட்டுக் கொண்டிருக்க, நான் அவர்களை எரிச்சலோடும் லேசான பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.

()

இப்போது கூட யாராவது பேச்சு வாக்கில் "போடுங்களேன். 1 ஸ்கொயர் ·பீட் ஆயிரத்து ஐநூறுன்னா.... 435 ஸ்கொயர் ·பீட் எவ்வளவு ஆகுது? என்னும் போது என் கைகள் தன்னிச்சையாக கால்குலேட்டரை தேடும். அவரோ "இதுக்கு எதுக்குங்க கால்குலேட்டர். நானூறு இன்டு ஆயிரத்து ஐநூறு.. ஆறு லட்சம் ரூபா.. இல்லியா. அப்புறம் 35 இன்டு .. என்னா கரெக்டுதானே... என்று நானும் ஏதோ அந்த கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது என்னை சரிபார்த்துக் கொண்டிருக்க, நான் மையமாக சிரித்துக் கொண்டே "ஆமா ஆமா" என்று அவர் சொல்லும் விடையை எந்தவித நிபந்தனையுமின்றி அப்படியே ஒப்புக் கொள்வேன். இப்போது ஆறாங்கிளாஸ் படிக்கும் பக்கத்து வீட்டு பையனின் கணக்குப் புத்தகத்தை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலை லேசாக 'கிர்..ரென்றது. அப்போதைய கணக்குகளே பரவாயில்லை போல. எண்களும் நானும் ஆடிக் கொண்டிருக்கும் இந்த மல்யுத்தம் எப்போது சமாதானத்திற்கு வருமென்று தெரியவில்லை.

()

என்னுள் இவ்வளவு நினைவலைகளை எழுப்பிய அந்த கவிதையை இப்போது பார்ப்போம்.

என் கணக்குப் புத்தகம்
======================

- சிறீ.நான்.மணிகண்டன்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.

(நன்றி : கணையாழி - செப் 2005)

Thursday, September 08, 2005

பிரியசகி

கடந்த வாரத்தில் ஒரு நாள் ஒரு இணைய நண்பர் என் வீட்டிற்கு தொலைபேசினார். "சுரேஷ் கண்ணன் இருக்காரா?" அந்த 'இருக்காரா' என்பதில் ஏதோ ஒரு வித்தியாசமும் அழுத்தமும் தெரிந்தது. ''நான் தான் பேசறேன்" என்றேன். "இல்லைங்க. ரொம்ப நாளா உங்களை பிளாக் பக்கம் காணோம். அதுவுமில்லாம காலை பேப்பர்ல உங்க பேர் போட்டு ஒரு ஆபிச்சுவரி விளம்பரம் வேற பாத்தேன். அதான் எதுக்கும் விசாரிச்சுருவோமேன்னு..... என்று இழுத்தார்.

அடப்பாவிகளா! சினிமா உலகில் ஒரு விஷயம் சொல்வார்கள். தூங்கும் போது கூட காலை ஆட்டிக் கொண்டே தூங்கச் சொல்லி. இல்லையென்றால் இறந்துவிட்டதாக சொல்லி புதைத்துவிடுவார்களாம். இணையத்திலும் அதே கதையாக இருக்கவே, அடித்து பிடித்து ஏதோ ஒன்றை எழுதி என் 'இருப்பை' தெரிவிப்பதற்காக இந்த அவசர 'சினிமாப் பார்வை' பதிவு.

பிரியசகி

Image hosted by Photobucket.com


இந்த மாதிரி கதையமைப்பை கொண்ட படங்களை நாம் பழைய படங்களில் நிறைய பார்த்திருக்கிறோம். ஏழை கதாநாயகனுக்கும் பணக்கார கதாநாயகிக்கும் எப்படியோ காதல் ஏற்பட்டு (சினிமாவைப் பொறுத்தவரை காதல் ஏற்படுவதற்கு எந்த எழவு காரணமும் தேவையில்லை. தடுக்கி விழப்போன நாயகியை வேலை வெட்டி இல்லாமல் அவள் பின்னாலேயே மூத்திரம் குடித்த மாடு சுற்றிக் கொண்டிருக்கும் காதலன் தாங்கிப்பிடிக்க பின்னணியில் 'நம்தன நம்தன' என்று பின்னணியில் இசை ஒலிக்க அடுத்த விநாடியே பட பட்ஜெட்டைப் பொறுத்து பிலிப்பைன்ஸிலோ அல்லது பிலிம்சிட்டியிலோ டூயட் பாட .......... காதல் உதயமாகிவிடும்.) கல்யாணமாகி எல்லாவித பாலியல் தேவைகளையும் பரஸ்பரம் தீர்த்துக் கொண்ட பிறகு அவர்களின் நாசூக்குகள் கழன்று போய் அசிங்கமான சுயரூபங்கள் வெளியாகி சண்டை ஏற்பட்டு பிரிந்து போய் அவர்களின் குழந்தைக்கு வில்லனின் மூலம் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும்....... நிறைய படங்களை இதுமாதிரி பார்த்திருக்கிறோம்தானே?

கதாநாயகன் என்றால் முத்துராமனோ, சிவகுமாரோ. திமிர்பிடித்த கதாநாயகிக்கு ஜெயசித்ராவோ அல்லது வாணிஸ்ரீயோ. வில்லி மாமியாருக்கு சி. சரஸ்வதி. அவருக்கொரு அப்பாவி புருஷன். (சகஸ்ரநாமம் அல்லது எஸ்.ராகவன்) இப்படியாக casting இருக்கும்.

இதே மாதிரி கதையமைப்பை பிட்சா மாதிரி அலங்காரம் செய்து நவீனப்படுத்தி கொடுத்திருக்கிறார் இயக்குநர் அதியமான்.

()

மாடலிங் விஷயமாக சென்னையிலிருந்து துபாய் வந்திருக்கும் சதாவை பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொண்டு விடுகிறார் மாதவன். தன்னைச் சுற்றுகிறவனை விட அலட்சியப்படுத்துபவனையே பிரதானப்படுத்தி நோக்குகின்ற பெண்களின் அடிப்படை குணத்தை நன்கறிந்த மாதவன் சதாவின் தோழியிடம் மட்டுமே பேசி சதாவை வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறார். ரொம்பவும் விளக்குவானேன்.... அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு அதோடு நின்றுபோகாமல் இக்கால வழக்கத்திற்கு மாறாக திருமணத்தில் முடிகிறது. இருவரும் அவரவர் பெற்றோர்களை எப்படியோ சம்மதிக்க வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவனுக்கும் ஹைகிளாஸ் சதாவுக்கும் பொருளாதார மற்றும் கலாசார வேறுபாடுகளினால் மோதல் ஏற்படுகிறது. கர்ச்சீப் உடையில் நைட்டி போட்டுக் கொண்டு வரவேற்பறையில் உலாவரும் மருமகளை அந்த ஆர்தடாக்ஸ் குடும்பம் விநோதமாக உணர்கிறது.

இந்த நிலையில் சதா கர்ப்பமாக, இதற்குள் தாயானால் அழகு போய்விடும் என்று அவரின் அலட்டல் தாயார் (ஐஸ்வர்யா) அபார்ஷனுக்கு யோசனை சொல்கிறார். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தையை இழக்க விரும்பாத மாதவன் விவாகரத்திற்கும் ஒத்துக் கொண்டு குழந்தையை அடைய விரும்புகிறார். குழந்தை பிறந்ததும் கணவனை பிரியும் ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கும் சதா, குழந்தை பிறந்த பிறகு அதை பிரிய மனமில்லாமல் தனிமையாக உயர, சில பல சம்பவங்களுக்குப் பிறகு தம்பதிகள் இணைகிறார்கள். சுபம். (அப்பாடா!)

()

தொட்டாற்சிணுங்கி, சொர்ணமுகி, தலைமுறை போன்ற படங்களை இயக்கிய அதியமான் இந்தப் படத்தை எழுதி (?) இயக்கியிருக்கிறார். விநியோகஸ்தர்கள் சில பழைய படங்களை மறுவெளியீடு செய்யும் போது 'புத்தம் புது காப்பி' என்று போஸ்டரில் போடுவார்கள். மனிதர் இதே பார்முலாவை பயன்படுத்தி பழைய படங்களின் அரதப்பழசான கதையை தன் திறமையை பயன்படுத்தி சற்று சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்.

மாதவன் சதாவை வெறுப்பேற்றும் சம்பவங்கள் ஆரம்பத்தில் சுவாரசியமாக இருந்தாலும் அதையே ஏறக்குறைய இண்டர்வெல் வரைக்கும் ஜவ்வு மாதிரி இழுத்திருப்பதில் சற்று அலுப்புத் தட்டுகிறது. எப்படா இவர்களுக்கு கல்யாணம் நடந்து தொலைக்கும் என்று நமக்கே எரிச்சலாக இருக்கிறது. என்றாலும் மாதவனும், சதாவும் நிஜமான காதலர்களே வெட்கப்படுமளவிற்கு மிக அன்னியோன்யமாக இருக்கின்றார்கள். காதலன் கையைத் தொட்டவுடனேயே, புணர்ச்சியின் உச்சக்கட்ட முகபாவனையை அபிநயப்பிப்பது கதாநாயகிக்கு எப்படி சாத்தியமாகிறது என்று புரியவில்லை. தயாரிப்பாளர் சதாவை ஒப்பந்தம் செய்யும் போது சதாவின் தொப்புளுக்கும் தனியாக கால்ஷீட் வாங்கியிருப்பார் போலிருக்கிறது. பல காட்சிகளில் சதாவின் தொப்புள் சிறப்பாக நடித்து தம் பங்கை திறமையாக ஆற்றியிருக்கிறது.

'சாக்லேட் பாய்' என்றழைக்கப்பட்ட மாதவன் நிச்சயம் மாறியிருக்கிறார். ஆய்த எழுத்திலேயே அவரது வித்தியாசமான நடிப்பை பார்க்க முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் தன் பாத்திரத்தை உணர்ந்து மிக பொறுப்பாக நடித்திருக்கிறார். பெரும்பாலான உணர்வுபூர்வமான காட்சிகளை அவரே முழுவதும் சுமந்திருக்கிறார்.

()

அதியமான் மென்மையான சில காதல் காட்சிகளை ஹாலிவுட்டை நினைவுப்படுத்தும் அளவிற்கு நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார். திருமணம் வரை ஒழுங்காக செல்லும் கதை விவாகரத்து பிரச்சினைக்குப்பிறகு பயங்கர காமெடி படமாகி விடுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு விவாகரத்து வழங்குவதாக சொல்லும் நீதிமன்றம், மாதவனின் வேண்டுகோளின்படி குழந்தையைப் பெற்று தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவு போடுகிறது. (மேலும் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம் என்றொரு வசனத்தை வேறு நீதிபதி சொல்கிறார்). இப்படியெல்லாம் விவாகரத்து சட்டம் மூலம் ஒருவரை கட்டாயப்படுத்த முடியமா என்று தெரியவில்லை. ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயலாக இது தெரிகிறது. (இது மாதிரி சட்ட விதிகளை இஷ்டத்திற்கு வளைக்க்கூடிய காமெடிகளெல்லாம் தமிழ்ச்சினிமாவில் மட்டுமே சாத்தியம்).

குழந்தைக்கு அவளுடைய தாய் எந்தவித பாதிப்பையையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக சட்டத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையின் பிரதிநிதியாக கோவை சரளா வருகிறார். காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் அபத்தங்கள் எரிச்சலையே ஏற்படுத்துகிறது. (வில்லத்தனம் நிறைந்த மாமியாரின் கொடுமைகளால் கொடுமைப் படுத்தப்படுகிற பாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு நிறைய அனுதாபம் ஏற்படும். கொடுமைப் படுத்துகிறவரின் மீது எரிச்சலும் கோபமும் அதிகமாகி உஷ்ணமாகி உட்கார்ந்திருப்பார்கள். இந்த உணர்வுக்கு வடிகாலாக ஏதாவது ஒரு அடாவடி பாத்திரம் வில்லியை போட்டு புரட்டி எடுக்கும். பார்வையாளர்களும் தங்கள் எரிச்சல் தணிகிற உணர்வில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அந்த மாதிரி ஒரு பாத்திரத்திற்கே கோவை சரளா பயன்பட்டிருக்கிறார். அதே போல் கூஜா தூக்கி கணவராக வரும் அநியாயத்திற்கு மனைவிக்கு அடிபணிந்து போய் கிளைமாக்ஸ் காட்சியில் பொங்கியெழுந்து மனைவியை ஒர் அறை அறையும். அந்த அறையை பிரதாப் போத்தன் அறைந்திருக்கிறார். இதுவும் பார்வையாளர்களுக்கான வடிகால் காட்சியே)

நடுத்தர வர்க்கத்தினராக சொல்லப்படும் மாதவனுடைய வீடு பைவ் ஸ்டார் ஓட்டல் மாதிரி இருக்கிறது. அவர்களுடைய படுக்கையறையில் கலை இயக்குநரின் கை வண்ணம் தெரிந்தாலும் இதுவா நடுத்தர வர்க்கத்தினருடைய அடையாளம்? என்கிற கேள்வி நம்முள் நெருடுகிறது. (நான் சமீபத்தில் பார்த்த நடுத்தர வர்க்கத்தினருடைய வீட்டுக்கு உதாரணமாய் 'அலைபாயுதே' படத்தில் வரும் ஷாலினியின் வீட்டை சொல்வேன்).

()

என்றாலும் பல்லி ஹீரோ நூறுபேரை தூக்கிப்போட்டு பந்தாடும் அசட்டு சண்டைக் காட்சிகளோ, ஒருத்தரை ஒருத்தர் உதைப்பதே காமெடி என்றாகிவிட்ட தமிழ்ச்சினிமாவின் சம்பிராதயமான நகைச்சுவைக் காட்சிகளோ இல்லாமல் நூல் பிடித்தாற் போன்று தெளிவான திரைக்கதை மூலம் படத்தை சொல்லியிருப்பதற்காக அதியமானை பாராட்டலாம்.

Wednesday, August 03, 2005

சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்....

தலைப்பை படித்தவுடன் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருத்தர் தோள் மேல் ஒருத்தர் கை போட்டுக் கொண்டு காலை 11.30 மணி காட்சிக்கு 'கிச்சா வயது 16' என்கிற படத்திற்கு செல்வதாக கற்பனை செய்து பார்க்க வேண்டாம். பல பத்து வருடங்களை கடந்து வந்திருக்கிற தமிழ் சினிமா, நம் தமிழ் எழுத்தாளர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று வெட்டியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, மேற்குறிப்பிட்ட இரண்டு எழுத்தாளர்களும் தற்போது தமிழ் சினிமாப் படங்களில் கதை-வசனகர்த்தாக்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் செய்தியை படித்த நினைவு வந்தது. இதில் எஸ்.ராமகிருஷ்ணனை தொடர்ந்து படித்திருப்பவர்களுக்கு, அவர் ஏற்கெனவே பணியாற்றின படமான 'பாபா'வில் எந்த இடத்தில் வசனம் எழுதியிருக்கிறார் என்று குழப்பமாக இருக்கும். 'பாபா கவுண்ட்டிங் ஸ்டார்ட் ....' என்றெல்லாம் எஸ்.ரா வசனம் எழுதியிருப்பார் என்று நான் நம்பத்தயாராக இல்லை, அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் வார்த்தைக்கு வார்த்தை 'ரஜினி சார்' என்று குறிப்பிட்டிருந்திருந்தாலும் கூட.

இன்னும் வேறெந்த எழுத்தாளர்களெல்லாம் தமிழ்ச் சினிமாவில் குப்பை கொட்டியிருக்கிறார்கள்.... மன்னிக்கவும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று (ஏற்கெனவே அது குப்பையாய்த்தான் இருக்கிறது) யோசித்திருக்கும் வேளையில் 'அம்பலம்' இணைய ஆண்டு மலரில் இரா.முருகன் எழுதியிருந்த, அபூர்வமான விவரங்களடங்கிய ஹாஸ்யம் பொங்கும் கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது. சுவாரசியம் கருதி அந்தக் கட்டுரையை இங்கே தட்டச்சி போட்டிருக்கிறேன். (நன்றி: அம்பலம் மற்றும் இரா.முருகன்). இந்தக் கட்டுரைக்கு பின்னால் என்னளவில் நினைவுக்கு வருகிற சினிமாவில் தொடர்பு கொண்ட எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறேன்.

***************
சினிமாவுக்குப் போன எழுத்தாளர்கள்.... - இரா.முருகன்

ஒரு சினிமாப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்த போது டைரக்டர் கோல்டி ஆனந்தின் பேட்டி கண்ணில் பட்டது. இந்தோ ஆங்கில எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் 'தி கைடு' நாவலைப் படமாக டைரக்ட் செய்த அனுபவத்தைச் சொல்லும் போது மனுஷர் படு காஷீவலாகக் குறிப்பிடுகிறார்.... "நாவல்ல கதையம்சம் குறைவு. நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படத்தில் ஈடுகட்டினேன்.."

சிறந்த கதாசிரியரான ஆர்.கே.நாராயணனுக்கே கதை சொல்லத் தெரியவில்லை என்கிற பாலிவுட்டில் குப்பை கொட்ட கே.ஏ.அப்பாஸ் போன்ற முற்போக்கு எழுத்தாளர்களும் 'பாபி' திரைக்கதை எழுதிப் பாபத்திலும் பணத்திலும் பங்குபெற்றது உலகம் அறிந்த சங்கதி.

எழுத்தாளர்களுக்கும் சினிமாவுக்கும் பெரும்பாலும் ஏழாம் பொருத்தம்தான். அதுவும் தமிழில் எழுத்தும் திரையும் ஒரே நேர்கோட்டில் வருவது அபூர்வம்.
தி.ஜானகிராமன் எழுதிய 'கரும்பு' திரைக்கதை நிலையிலேயே நின்று போனதாகத் தெரிகிறது. இந்தப் படத்துக்காக சலீல் சவுத்ரி இசையில் ஜேசுதாஸ் பாடிய 'திங்கள் மாலை வெண்குடையான்' என்ற சிலப்பதிகாரக் கானல்வரியை முன்பெல்லாம் சிலோன் ரேடியோவில் நாள்தவறாமல் ஒலிபரப்புவார்கள். ஜானகிராமனின் 'மோகமுள்' ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் மனதில் தைக்காமல் போனாலும் நேர்மையான முயற்சிதான்.

'செம்மீன்' நாவலை தகழியின் எழுத்தில் விரிந்தது போலவே திரைக்குக் கொண்டுவர ஒரு ராமு காரியத் கிடைத்தது போல, யூ.ஆர். அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'வின் தட்சிண கன்னட கிராமப் பிராமணர்கள் வெள்ளித் திரையில் உயிர் பெற ஒரு கிரீஷ் கர்னாட் வந்தது போல, வைக்கம் முகம்மது பஷீரின் 'மதிளுகள்' மலையாளத் திரையில் உயர அடூர் கோபால கிருஷ்ணன் முயற்சி எடுத்தது போல, தமிழில் என்ன நடந்திருக்கிறது?

யோசித்ததில், கல்கியின் 'தியாக பூமியை' அந்தக் காலத்திலேயே ஒளியில் வடித்த கே.எஸ்.சுப்ரமண்யமும், பொன்னீலனின் 'உறவுகள்' குறுநாவலை, 'பூட்டாத பூட்டுக்களாக' நிலைக்க வைத்த மகேந்திரனும், து.ராமமூர்த்தியின் 'குடிசை'யைத் திரையில் வேய்ந்த ஜெயபாரதியும் நினைவுக்கு வருகிறார்கள். (இந்தப் படம் எல்லாம் வியாபார ரீதியாக வெற்றி பெற்றனவா என்பது வேறு ஒரு விஷயம்!) அப்புறம் ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவனை' எழுதியதைப் போல் படமாக்கிய ஜெயகாந்தன்.

நாலு சிறுகதைகளை உள்ளடக்கிய கறுப்பு வெள்ளைப் படமான ஜெயகாந்தனின் 'புதுச் செருப்பு' யாராலோ ரொம்ப நாளாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. பேன் வாரத்திலிருந்து பெருமாள் வாரம் வரை தேர்ந்தெடுத்து சினிமாப்படம் போடும் கேபிள் டிவிக்காரர்கள் இலக்கிய வாரம் வைத்து இது போன்ற படங்களையும் காட்டலாமே! கதை திரைப்படமாகிறதோ இல்லையோ, எழுத்தாளர்கள் திரைக்குப் போனது அசை போட, சுவாரஸ்யமான விஷயம்தான்.

நாற்பதுகளில் புதுக்கவி¨தியின் பிதாமகர் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராவும் 'ராமானுஜர்' படத்தில் நடித்ததாகத் தெரிகிறது. அறுபதுகளில் எடுத்த படத்தில் தேவிகாவின் கனவுக்காட்சியில் மன்மதனாக வந்தவர் 'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிட'ச் சொல்லிக் கவிதை எழுதிய சோ.வைத்தீஸ்வரன். எண்பதுகளில் அமுதவன் கதை எழுதிய படத்தில் ஒரே ஒரு காட்சியில் சுஜாதா சங்கோஜத்தோடு தலைகாட்டி விட்டு ஆளை விட்டால் போதும் என்று திரைக்குப் பின்னால் ஓடிவிட்டார். பாளை சண்முகத்தின் 'காணி நிலம்' படத்தில் சட்டசபைக் காட்சியில் சபாநாயகராக சா.கந்தசாமி நடித்திருக்கிறார்.

மேடையில் 'நாற்காலிக்காரராக'வும் சின்னத்திரையில் பனியனைத் திருப்பிப் போட்டுக் கொண்டு டென்ஷனுடன் வலம்வரும் கீழ் மத்தியதரக் குடும்பத்தலைவராகவும் வந்த அசோகமித்திரன் ஜெமினி சினிமாப் படக்கம்பெனியில் வேலை பார்த்த போதோ அப்புறமோ சினிமாவில் முகம் காட்டவில்லை.

அரவிந்தனின் 'போக்குவெயில்' படத்தில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போல, சையத் மிர்ஸாவின் 'மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ' படத்தில் இந்தி எழுத்தாளர் பீஷ்ம் சிஹானி போல (மறைந்த குணச்சித்திர நடிகர் பால்ராஜ் சஹானியின் சகோதரர் இவர்) படம் முழுக்க்க கதாநாயகனாக, தமிழ் எழுத்தாளர் யாராவது வரும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

***************

இதனைத் தொடர்ச்சியாக யோசிக்கும் போது புதுமைப்பித்தனும் விந்தனும் தமிழ்ச் சினிமாவில் போராடி துரதிர்ஷ்டவசமாக வெற்றி பெற முடியவில்லை என்று பழைய கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.

ஜெயகாந்தன் 'பாதை தெரியுது பார்' என்கிற படத்தில் கலெக்டராக வருகிற சிறுவேஷத்தில் நடித்திருக்கிறார். (பின்பு இந்தக் காட்சியை அவரே நீக்கிவிட்டார்)

எம்.ஜி.ஆர் எத்தனை முறை கையை உயர்த்துகிறார் என்று சிறுவயதில் நாங்கள் வேடிக்கையாக எண்ணிக் கொண்டிருந்த பாடலான 'புதிய வானம், புதிய பூமி' பாடலில் எழுத்தாளர் சாவி ஒரு காட்சியில் பரிதாபமாக முழித்துக் கொண்டு எம்.ஜி.ஆரை பயபக்தியுடன் பார்த்துக் கொண்டு போவார். ('நான் நடித்ததினால்தான் இந்தப் படம் வெள்ளிவிழா கண்டது' என்று நகைச்சுவையாக குறிப்பிடுவார் சாவி.)

'கேளடி கண்மணி' படத்தில் பாலகுமாரன் ஆசிரம நிர்வாகியாக ஒரு காட்சியில் வந்து போவார்.

'விருமாண்டி' படத்தின் இறுதிக் காட்சியில் மாலன் செய்தியாளராக வருவார்.

'சொல்ல மறந்த கதை' படத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு திருமணத்தை தலைமை தாங்கி மணமக்களை வாழ்த்தி பேசுபவராக சில காட்சிகளில் வருவார்.

எழுத்தாளர் பூமணி அவருடைய 'கருவேலம் பூக்களை' என்.எப்.டி.சி. உதவியுடன் திரைப்படமாக்கினார்.

தங்கர் பச்சானை எழுத்தாளர் என்று அங்கீகரிக்க தயாராயிருந்தால், அவரது கல்வெட்டு என்கிற அபத்தமாக எழுதப்பட்ட கதையை அழகாக 'அழகி'யாக உருமாற்றம் செய்தார். நாஞ்சில் நாடனின் 'தலைகீழ் விகிதங்கள்' 'சொல்ல மறந்த கதையாக' வெளிவந்தது. தங்கர்பச்சானே ஒரு படத்தில் கதாநாயகனாக (சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி) நடித்துக் கொண்டிருக்கிறார்.

(நண்பர்கள் தாங்கள் அறிந்த விவரங்களைக் கொண்டு இந்த பதிவை முழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டுகிறேன்)

()
அப்புறம்..... இது முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே. யாரையும் புண்படுத்த அல்ல.

பிரதம மந்திரியையே கா¡ட்டூன் போட்டு கேலி செய்யும் இந்த தேசத்தில் எழுத்தாளர்களையும் சற்று நகைச்சுவைப்படுத்திப் பார்ப்பது ஒன்றும் உலகமகா குற்றமில்லை என்றும் தமிழர்களின் நகைச்சுவை உணர்ச்சி இன்னும் இற்றுப் போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நம் எழுத்தாளர்கள் வருங்காலத்தில் சினிமாவில் நடிப்பார்களாயின் அவர்களுக்கு இந்த பாத்திரங்கள் பொருத்தமாயிருக்கும் என்று சிபாரிசு செய்கிறேன்.

ஜெயமோகன் - கோயில் பூசாரி
எஸ்.ராமகிருஷ்ணன் - போலீஸ் கான்ஸ்டபிள்
சுஜாதா - தலைப்பாகை அணிந்த தமிழ் வாத்தியார்
சல்மா - மகப்பேறு மருத்துவர்
அ.முத்துலிங்கம் - பேங்க் மானேஜர்
சாருநிவேதிதா - காமெடி ரவுடி
அசோகமித்திரன் - கிரிக்கெட் அம்பயர்
பிரபஞ்சன் - மேஜிக் நிபுணர்
பெருமாள் முருகன் - நூலகப் பணியாளர்
வண்ணதாசன் - விளம்பர பட அப்பா
கி.ராஜநாராயணன் - கிராமத்து கதாநாயகியின் அப்பா
சிவசங்கரி - சமூக சேவகி
ஞாநி - பிரதான வில்லனுக்கு பின்னால் நிற்பவர்
..................

Monday, August 01, 2005

காலச்சுவடு, ஆகஸ்டு 2005 - ஓர் அவசரப் பார்வை

இந்த மாத காலச்சுவடை ஒரு பருந்துப் பார்¨வியில் வாசித்த போது என்னைக் கவர்ந்த சில பகுதிகளை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆகஸ்டு மாத காலச்சுவடில் இரண்டு தலையங்கள்: குடும்பம் என்கிற அமைப்பின் பெயரால் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும், அவற்றிலிருந்து மீள்வதற்கான சட்ட வழிவகைகளைப் பற்றியும் முதல் தலையங்கம் அலசுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நிறுவனம் பல்வேறு ஊடக அமைப்புகளை தன்வசமாக்கிக் கொள்வதனால் ஏற்படும் சமூக அபாயத்தை குறித்து இரண்டாவது தலையங்கம் அலசுகிறது.

()

ராஜேஷ் என்கிற புதிய கவிஞரின் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. இவை காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய போட்டியில் முதற்பரிசு பெற்றவையாம். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று:

நாள்காட்டி முருகன்
===============

முருகன் படம் அச்சிட்ட நாள்காட்டி
இனாமாய் தெரிந்தவர் கொடுத்தார்

இடக்கையில் வேலும் வலக்கையில் ஆசியுமாக
கம்பீரமாகப் புன்னகைத்து நின்றார்

செவ்வாய் வெள்ளிகளில் சாம்பிராணித் தூபம்
சிரித்துக் கொண்டே அவரும் பிடிப்பார்

தேதிகள் கழிய தாள்கள் கிழிய
முருகன் மேனி மெருகு குறைந்தார்

வருடம் முடிந்தும் மச்சு வீட்டில்
இன்னும் அருள்பாலிக்கிறார் நாள்காட்டி
முருகன்.

()

தமிழின் சிறந்த நாவல்கள் என்று என்னளவில் நான் பட்டியிலிடும் போது அதில் தவறாமல் இடம்பெறக்கூடிய நாவலான 'புலிநகக்கொன்றை' நாவலை எழுதின பி.ஏ.கிருஷ்ணனுக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்ச்சி உள்ளது என்பது இத்தனை நாள் தெரியாமல் போனது. தொலைக்காட்சி தொடர்கள் சமூகத்தில் ஏற்படும் சீரழிவுகளை பற்றின அவரின் கட்டுரையை ஒரு வையாவது வாய்விட்டு சிரிக்காமல் உங்களால் படித்து முடிக்க முடியாது. சிரிக்க வைப்பது மட்டுமல்ல, கட்டுரையை படித்து முடித்ததும் சற்று நேரம் தனிமையில் சிந்திக்க வைப்பதுமாயும் இருக்கிறது, அந்தக்கட்டுரை. தொலைக்காட்சி தொடர்களை உருவாக்குபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது.

()

நான் ஏற்கெனவே வாங்கி வைத்து படிக்காமலிருக்கும், பெருமாள் முருகனின் "பீக்கதைகள்" என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கு மதிப்புரை எழுதியிருக்கிறார் பாவண்ணன். பாவண்ணனின் அற்புதமான எளிமையான மொழியில் அமைந்திருக்கும் இந்த விமர்சனம் நூலை வாங்கிப்படிக்கத் தூண்டுகிறது.

()

சுஜாதா மறுபடியும் ஒரு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். அவர் ஆனந்தவிகடனில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் 'கோயில் ஓழுகு' என்கிற நூலைப்பற்றி குறிப்பிடும் போது கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின் போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி..... என்று எழுதியிருப்பதை இரண்டு இசுலாமிய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக மறுப்பு தெரிவித்து ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கின்றனர். பிற்பாடு இதையும் தனது கட்டுரைத் தொகுதியில் இதைக்குறிப்பிட்ட சுஜாதா இதனாலேயே இசுலாமியத்தை பற்றி எழுத தயக்கமாக இருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.

அந்த இரண்டு கடிதத்தின் முழுப்பகுதியையும் காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் உண்மையான வரலாற்று விவரங்கள் நமக்கு தெரிய வந்தால் மகிழ்ச்சியே. ஆனால் செய்தித்தாளில் வெளியாகும் ஒரு சம்பவத்தை புலனாய்வுப் பத்திரிகைகள் இன்னும் கொஞ்சம் விஸ்தாரமாக ஆராய்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் அதே பாணியைத்தான் காலச்சுவடும் பின்பற்ற முயல்கிறது என்று தெரியவந்தால் சிற்றிதழ்களின் மீதான நம்பிக்கை இன்னும் இறங்கிவிடும்.

()

'பிள்ளை கெடுத்தாள் விளை' என்கிற சிறுகதையை ஜாதி என்னும் கண்ணாடியை மாட்டிக் கொண்டு படித்து அதனை தனக்கு சாதகமாக திரித்து, இந்தக்கதை ஜாதி வெறியின் வெளிப்பாடு என்று அபத்தமாக நிறுவ முயல்பவர்கள், அம்பை எழுதியிருக்கும் 'பெண்ணின் தலை மேல் தொங்கும் கத்தி' என்கிற கட்டுரையை அவசியம் படித்தாக வேண்டும். கல்வி என்கிற விஷயம் சில குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த பெண்களுக்கு ஆயுதமாக விளங்காமல், அவர்களையே திருப்பித்தாக்குகிற ஒரு எதிர் ஆயுதமாக மாறிவிடும் அபாயத்தையும் அதற்கு காரணமாக இருக்கும் அதே இனத்தவர்களையும் யதார்தத உதாரணங்களைக் கொண்டு ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

()

சிற்றிதழ்களிலும் அபூர்வமாக சிரிக்கக்கூடிய வகையில் சில வரிகள் இடம் பெறுகின்றன. நீரோட்டம் என்கிற தலைப்பில் கடைசிப்பகுதியை இந்த மாதம் பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார். அதில் சில வரிகள்.

..... காலச்சுவடு, கடவு ஆகியவை இணைந்து மதுரையில் நடத்திய நாவல் கருத்தரங்கில் எழுத்தாளர் 'கறிச்சோறு' சி.எம்.முத்துவும் கலந்து கொண்டார். அவரோடு பேச்சுக் கொடுத்த போது என் ஊரைக் கேட்டார். 'திருச்செங்கோடு' என்றேன். அவர் முகத்தில் அடியார்க்குரிய பரவசம் பெருகியது. "நான் கம்யூனிட்ஸ்டுதான். ஆனாலும் கடவுள் நம்பிக்கை எல்லாம் எனக்குண்டு" என்றார். ரொம்பவும் எதார்த்தமான மனிதர் முத்து. திருச்செங்கோட்டில் அவருடைய மைத்துனர் ஒருவர் வேலை பார்த்ததாகவும் அவரைப் பார்க்க அங்கே வந்தபோது மலையேறிக் கோவிலுக்குப் போனதாகவும் சொன்னார். "முதன் முறை கோவிலுக்குப் போய் வேண்டிக் கொண்ட வந்த ஒரு வருசத்திற்குள் ஆம்பளப் பிள்ளை பிறந்தான்" என்றார். அதன் பிறகு இரண்டாம் முறை வணங்கிச் சென்றார். இரண்டாவது 'ஆம்பளப் பிள்ளை". மூன்றாம் முறை வந்து போனார். மூன்றாவது ஆம்பிளைப் பிள்ளை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த நண்பர் ஒருவர், "இடையில் நீங்க ஏதாவது முயற்சி பண்ணினீங்களா" என்று கேட்டார். முத்து உட்பட எல்லோரும் ரசித்துச் சிரித்தோம்.

()

நன்றி: காலச்சுவடு

காக்டெயிலும் சிங்கிள் டீயும்

நேற்று மாலை நடிகை நமீதாவை சந்தித்து சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தேன் என்று 'சுஜாதா' பாணியில் நான் எழுத வேண்டுமெனில் ஒன்று, சத்யராஜ், சரத்குமார் போன்ற வயதான கதாநாயகர்களாக இருக்க வேண்டும் அல்லது எதிரில் அமர்ந்திருக்கிற நண்பரை விளையாட்டாக துப்பாக்கியால் சுட்டுப்பார்க்கிற நிறைய 'டப்பு' வைத்திருக்கிற தயாரிப்பாளராக இருக்க வேண்டும். இரண்டுமே இல்லை என்பதால், நேற்று தாஜ் கோரமண்டல் ஓட்டலின் போர்ட்டிகோவில் எனது சகாவோடு அவரது காருக்காக காத்திருக்க நேரிடுகையில், என் ஜென்மத்தை சாபல்மடைய வைக்கும் நிகழ்வான நமீதா தனது காரில் இருந்து இறங்கி உள்ளே போனதை பார்த்தேன். (ஆரம்ப வரிகளை சுவாரசியமாக எழுதி உங்களை படிக்க வைக்க ஒரு முயற்சி) :-)

மலையாள நாளிதழான 'மாத்ருபூமி' தனது போட்டியாளரான 'மலையாள மனோரமா'வை விட எவ்வாறு சர்க்குலேஷனிலும், ரீடர்ஷிப்பிலும் உயர்ந்திருக்கிறோம் என்பதை 'பிலிம் காட்ட' (Audio Visual) எங்களை தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கு அழைத்திருந்தனர். இதன் மூலம் வருகிற மலையாள பண்டிகையான ஓணத்திற்கு பிராண்ட்களின் விளம்பரங்களை கவர்வதும் அவர்களது நோக்கம். நான் அதைப் பற்றியெல்லாம் எழுதி உங்களை சோதிக்க விரும்பவில்லை.

நான் இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணமே, அவர்கள் அந்த மூன்று மணிநேர நிகழ்ச்சிக்கு மிகவும் சிரத்தையுடன் அந்த இடத்தை அலங்கரித்திருந்தது என்னை பிரமிக்க வைத்திருந்ததால். Ball Room எனப்படும் அந்தப் பகுதியில் நுழைந்தவுடனே ஏதேர ஐயப்பன் கோவில் நுழைந்தாற் போல் பூக்கோலம் போட்டு, ஒரு சிறுவன் ஓதுவார்கள் பாடுகிறாற் போல் ஏதோ ஒன்றை மலையாளத்தில் தண்டையை அடித்துக் கொண்டு பாடி வரவேற்றான். வரவேற்பு பெண் எங்கள் நெற்றியில் சந்தனத்தை தடவி விட, சந்தனத்திற்கு இவ்வளவு குளிர்ச்சி இருக்கிறது என்பது நேற்றுதான் தெரிந்தது.

நிகழ்ச்சி நடக்கப் போகிற இடத்தை ஒரு டிப்பிகல் கேரள வீடு போல் ஓடுகளை அமைத்து, முற்றம் அமைத்து, நாற்புறத்தையும் சுவர் போல் ஏற்படுத்தி ஜன்ன¦ல்லாம் வைத்து அசத்தியிருந்தனர். நுழைவாயிலும் ஒரு வீட்டிற்குள் நுழைவது போல் சின்னதாக தலையை குனிந்து கொண்டு போக வேண்டியிருந்தது. கீழே வாசப்படியில் தடுக்கி விழப் போகிறீர்கள் என்று புன்னகையுடன் எச்சரிக்க ஒரு பெண்ணை வேறு நிறுத்தியிருந்தனர். உத்தரத்திற்கு அடிக்கும் பெயிண்ட் சகாய விலைக்கு கிடைக்கிறாற் போல் ஒரு ஆள் மூஞ்சியில் காரேபூரே பூசிக் கொண்டு பயமுறுத்திக் கொண்டு நிற்க, அவர் தலையில் கீரீடத்தை மாட்டிய பின்புதான் தெரிந்தது அவர் ஒரு கதகளி கலைஞர் என்பது. பக்கத்து வீட்டில் ஆணி அடிக்கிறாற் போல் ஆரம்பித்த சங்கீதத்தை போகப் போக தாளகதியுடன் ரசிக்க முடிந்தது.

பின்பு மாத்ருபூமிக்காரர்கள் அவர்களுடைய பிரதாபங்களையெல்லாம் ஆங்கிலத்தில் அளந்துவிட்டு, நாங்கள் எல்லோருமே முக்கிய வேலையாக வந்திருந்த cocktail & dinner-ருக்கு கலந்து கொள்ள அழைத்தனர். என்னைப் பொறுத்த வரை ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் சொந்த காசை செலவு செய்து சாப்பிடுவதற்கு வீட்டுப் பத்திரத்தையெல்லாம் எடுத்துப் போக வேண்டும் என்பதால் இந்த மாதிரி ஓசியில் வரும் வாய்ப்புகளை தவறவிடுவதே கிடையாது. சிலர் அவர்கள் வீட்டு குஞ்சு குளுவான்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்திருந்தனர்.

()

Cocktail & dinner-ல் கலந்து கொள்ளுங்கள் என்ற அறிவிப்பு வந்ததுதான் தாமதம், நம்மாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டு ஏதோ அணுகுண்டுக்கு தப்பி ஓடுபவர்கள் போல் பதறியடித்துக் கொண்டு பாட்டில்களின் பக்கம் பாயவாரம்பித்துவிட்டனர். பார்ட்டிக்கு உள்ளே வரும் போது ஆங்கிலேயர்களுக்கே நாகரிகத்தை கற்றுக் கொடுப்பவர்கள் போல் வழியில் நிற்போரை மென்மையாக Excuse me-க்களோடு வழி கேட்பவர்கள், இப்போது அவர்களா இவர்கள் என்னுமளவிற்கு ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து கொண்டு, அம்மன் கோயிலில் கூழுக்கு நிற்பவர்கள் கூட தோற்குமளவிற்கு இடித்து தள்ளிக் கொண்டு சென்றனர். என்னதான் நாம் நாகரிகத்தின் உச்சியில் நிற்பவர்களாக சொல்லிக் கொண்டாலும் நம்முள் கற்கால மனித குணாசியங்களின் எச்சங்கள் இன்னும் ஆழ்மனதில் எந்த பாதிப்புக்குள்ளாகாமல் இருப்பதை இந்த மாதிரி நிகழ்வுகளின் மூலம் உணர முடியும்.

என்னைப் பொறுத்தவரை பியர்தான் அருந்துவேன் என்பதால் (பியர் என்பது பெண்களும் சிறுவர்களும் அருந்துவது என்று என் நண்பர்கள் கிண்டல் செய்தாலும் ஏனோ என்னால் மற்ற குடிவகைகளின் மீது நாட்டம் கொள்ள இயலவில்லை. பியர் குடிக்க ஆரம்பித்ததற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த சுவாரசியமான கதையை பின்னொரு சமயத்தில் சொல்கிறேன்) கூட்டத்தில் 2 கிளாஸ் பியர் வாங்கி சாப்பிடுவதற்குள் எரிச்சல் உச்ச அளவிற்கு சென்று விட்டது.

இதே நிலைதான் சாப்பிடும் இடத்திலும். ஏதோ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு பொட்டலங்களுக்கு பாய்கிறாற் போல்தான் பெரும்பாலோனோர் நடந்து கொண்டனர். மலையாள பத்திரிகை கொடுக்கிற விருந்து என்பதால் நிறைய கேரள உணவு வகைகள் இருந்தன. சக்கா அல்வா, பழப் பிரதாமன் (பிதாமகன் அல்ல) தேங்காய் ஐஸ்கீரீம், புட்டு, இடியாப்பம் என்று எல்லாவற்றிலும் கேரள வாடை. நான், நான்-வெஜ் பக்கம் போய் ஒரு பிடிபிடித்தேன். கிளம்பும் போது ஏலக்காய், லவங்கம், பட்டை போன்ற மசாலா வகைகள் அடங்கிய பரிசுப் பொதியை கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பாஸ்கர் என்கிற பழைய நண்பர் ஒருவரை சந்திக்க முடிந்தது. நானும் அவரும் பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு நிறுவனத்தில் கிராபிக் ஆர்டிஸ்டுகளாக பணிபுரிந்து கொண்டிருந்தோம். பார்ப்பதற்கு பஞ்சத்தில் அடிபட்டவர் போல் மிக ஒல்லியாக இருப்பார் அவர். எப்போதும் தனது துரதிர்ஷ்டத்தை நொந்து கொண்டு புலம்பிக் கொண்டேயிருப்பார். நான் அவ்வப்போது அவருக்கு திரைப்படப் பாடல்களையெல்லாம் சொல்லி ஆறுதல் சொல்லுவேன். இப்போது அவர் பெரிய விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்று அறிந்து கொண்டேன். ஆள் நல்ல குண்டாகி தெளிவாகவும் மலர்ச்சியாகவும் இருந்தார். பார்க்க சந்தோஷமாக இருந்தது. சற்று நேரம் பேசலாம் என்று பார்த்தால் விஸ்கி போதையில் என்னிடம் சரியாக ஒன்றரை நிமிடமே பேசிவிட்டு "அப்புறம் பாக்கலாண்டா மச்சான்" என்று அவருடைய விசிட்டிங் கார்டை என்னுடைய பாக்கெட்டில் சொருகிவிட்டு கூட்டத்தில் கரைந்து போனார்.

()

வீட்டுக்குத் திரும்பும் போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையில் ஷேர் ஆட்டோவில் வந்து விட்டு அதற்குப் பின்னால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நின்ற போது சில நாட்களாக சந்திக்காதிருந்த என் சமீப கால நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் பெயர் முனுசாமி. புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக இருக்கிறார். சிற்றிதழ்களில் அவ்வப் போது புத்தக விமர்சனங்கள் எழுதுவாராம். ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் புத்தக விமர்சனக்கூட்டத்தில் கலந்து கொள்வாராம். நான் வேண்டாமென்று மறுத்தும் ரோட்டோர கடையில் டீ ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார். ஏற்கெனவே புல்கட்டில் இருந்த நான், அவர் அன்பை மறுக்கவியலாமல் சாப்பிட்டு, பிறகு மூடப்பட்டிருந்த கம்பெனி படிக்கட்டுகளில் அமர்ந்து வெட்டி இலக்கியம் பேசிவிட்டு போரடித்ததும் கிளம்பினோம். போலி நாகரிக மனிதர்கள் மத்தியில் சாப்பிட்ட அந்த அறுசுவை விருந்தை விட எளிமையான இந்த சிங்கிள் டீ சுவையாக இருந்தது என்பதை சொல்லியேயாக வேண்டும்.

Monday, July 25, 2005

கிழித்துப் போடப்பட்ட கட்டுரைகள்

பக்கத்திற்கு பக்கம் ரத்தம் சொட்டும் பொழுதுபோக்கு படைப்புகளிலிருந்து என் வாசிப்பனுபவம் இயல்பாக இலக்கியங்களின் பால் திரும்புகையில் என்னை அதிகம் கவர்ந்தது புனைவு இலக்கியங்கள்தான். அதிலும் வரலாற்றையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து படைக்கப்படும் புதினங்களை நான் அதிகம் விரும்புவேன். சிறந்த உதாரணம்: காந்தியின் கொலை சம்பவத்தை வைத்து எழுதப்பட்ட 'ஜனகனமண', 'கல்லுக்குள் ஈரம்' போன்ற நாவல்கள். (பல பேரால் அதிகம் சிலாகிக்கப்படும் 'பொன்னியின் செல்வனை' ஏனோ என்னால் ரசிக்க முடியவில்லை)

இந்த சுவாரசியத்தில், கட்டுரைகளை படிக்காமலிருந்து விட்டேன். நூலைப் பற்றின விமர்சனங்களையோ ஆக்கப்பூர்வமாக நிகழ்த்தப்படும் விவாதங்கள், சர்ச்சைகள் போன்றவைகளையோ கவனமாக தாண்டிவிடுவதில் எனக்கு அதிக அனுபவமுண்டு. ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்த்தது போல் சிலர் எழுதிய கடினமான நடையைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் என்னை மிரளச் செய்துவிட்டன. மிகவும் தீவிரமாக அலைந்து திரிந்து தேடிப்பொறுக்கிய சிற்றிதழ்களில் கூட என்னைக் கவர்ந்த சிறுகதை, குறுநாவல்களை மட்டும் கிழித்தெடுத்து மற்றவற்றை தூக்கிப்போட்டு விடுவேன். ஒரு காலகட்டத்தில் மெல்ல மெல்ல என் கவனம் non-fiction பக்கம் திரும்பலாயிற்று. அப்போதுதான் நிறைய விஷயங்களை தவறவிட்டுவிட்டதன் அபாயத்தை உணர்ந்தேன். சமீப காலங்களில் ஐந்தாண்டுகளாக கட்டுரைத் தொகுப்புகளை பெருமளவில் தேடிப்பிடித்து படித்துவருகிறேன். தம்முடைய கருத்துக்களை ஒரு புனைவுக் கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வாசகனை மயங்க வைக்காமல், அவனிடம் நேரடியாக பேச கட்டுரைகளையே சிறந்த வடிவமாக நினைக்கிறேன். பாரதியார் முதல் சுகுமாரன் வரை பல பேர் எழுதும் கட்டுரைகளையும், அவை தரும் அபூர்வமான விவரங்களையும், நுண்மையான நோக்கையும், அவற்றின் நேரடி, மறைமுக அர்த்தங்களையும் படிக்கப்படிக்க பிரமிப்பாக இருக்கிறது.

சமீபத்தில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான 'உடைபடும் மெளனங்கள்' என்கிற கட்டுரைத் தொகுப்பை படித்து முடித்தேன். இதில் மெளினியின் சிறுகதைளைப் பற்றின அவர் பார்வையை உள்ளடக்கிய கட்டுரை மிக முக்கியமானது. (அ.மார்க்ஸின் உரைநடை சில இடங்களில் தலையை 80 டிகிரிக்கு சுற்ற வைத்தாலும் சற்று சிரமப்பட்டு உள்ளே புகுந்து விட்டோமானால், பிரமிப்பான, விவரணையான ஓர் உலகிற்குள் நம்மால் பயணிக்க முடியும்)

சமீபத்தில் நண்பர் பத்ரி அவரது வலைப்பதிவில் சில கட்டுரைத் தொகுதிகளை சிபாரிசு செய்திருந்தார். அது போல் வேறு பல நல்ல கட்டுரையாளர்களையும் கட்டுரைத் தொகுதிகளையும் பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.

()

இந்தியா டுடே, ஜீலை 27 2005 இதழில் விமர்சனப் பக்கத்தில் எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸின் கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின மதிப்புரையை எழுதியிருக்கிறார். 'அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்', 'கடமை அறியோம் தொழில் அறியோம்', 'சொல்வதால் வாழ்கிறேன்', 'இந்துத்துவத்தின் இருள்வெளிகள்' என்கிற நான்கு கட்டுரைத் தொகுப்புகளைப் பற்றின பார்வை அது. அதிலிருந்து 'கடமை அறியோம் தொழில் அறியோம்' என்கிற கட்டுரைத் தொகுப்பின் விமர்சனத்தை மாத்திரம் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (நன்றி: இந்தியா டுடே)

()

கடமை அறியோம், தொழில் அறியோம் என்ற தலைப்பே வாசகனை திடுக்கிட வைப்பது. 'கடமை கண் போன்றது', 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' 'கடமை, அது கடமை' என்பது போன்ற கருத்தாக்கங்களினால் கெட்டித்தட்டிப் போன சராசரி வாசகனின் பொதுப்புத்தியை இந்தத் தலைப்பு கொட்டிக் கவிழ்க்கவே செய்யும். இந்தத் தலைப்பு ஒருவித அதிர்ச்சி மதிப்பீட்டை (shock value) கோரி நிற்பது. எண்பதுகளில் நாகார்ஜீனனின் அதிரடி நடவடிக்கைகளும் மார்க்ஸ் போன்றவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுச் செயல்பாடுகளும்தான் தமிழ்ச்சூழலில் பின்-நவீனத்துவத்தை பின்னுக்குத் தள்ளப்பட்ட நவீனத்துவமாக ஆக்கின, கட்டவிழ்ப்பு என்ற பெயரில்.

'பாண்ட் சட்டை அணிபவரா நீங்கள்?' நாங்கள் லுங்கிதான் அணிவோம்'
'கண்ணகியைக் கொண்டாடியது போதும்'; நாங்கள் வேசியைக் கொண்டாடுவோம்' - என்ற ரீதியில் இவர்கள் வைத்த பிரகடனங்கள் பின்-நவீனத்துவம் என்பது 'கெட்ட வார்த்தை'; பின்-நவீனத்துவாதிகள் 'கெட்ட ஆசாமிகள்' என்பது போன்ற எதிர்மறையான படிமத்தை வாசகர்களின் மனதில் உருவாக்கின. இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் அணுகுமுறைகளைத் தவிர அ.மார்க்ஸின் பிற அணுகுமுறைகள் நன்றாகவே வந்துள்ளன.

சமூகத்தின் படிநிலைப்பிரிவுகள் உருவாகும் போது உழைப்பு, கடமை, ஒழுங்கு, இச்சை, மறுப்பு, திருப்தி, பொறுமை, சிக்கனம், அடக்கம் போன்றவை அறங்களாகக் (Ethics) கட்டமைக்கப்பட்டு அடிமைகளின் மேல் சுமத்தப்படுகின்றன. கேளிக்கை, ஓய்வு, சோம்பேறித்தனம் போன்றவை ஆண்டைகளின் அறங்களாக கைக்கொள்ளப்படுகின்றன. நீட்ஷே 'அடிமைகளே, உங்கள் அறங்களைத் தூக்கி எறிந்துவிட்டு ஆண்டைகளின் அறங்களைக் கைப்பற்றுங்கள்' என்றார். இதுபோன்ற விவாதங்களை மார்க்ஸ் தனது கட்டுரைகளில் தொடர்ந்து எழுதிச் செல்கிறார்.

மொபைல் போன்கள், தோற்ற நிலை மெய்மை, தகவல் தொழில் நுட்பம் போன்றவற்றின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறார். ஜீன் பொத்ரியார், பியரி பூர்தா போன்றவர்களை அடியற்றி, இவர் முன்வைக்கும் கருத்துக்கள் இன்றைய தமிழ்ச் சூழலில் கவனம் பெற வேண்டியவை.

குடிப்பழக்கம் தொடர்பாக தமிழ்ச்சூழலில் நடந்த விவாதம் பற்றி 'குடியும் குடித்தனமும்' என்ற தலைப்பில் விவரிக்கும் மார்க்ஸ், குடி தொடர்பான சனாதனக் கருத்துக்களை பகடி செய்கிறார். இது பத்தி, கட்டுரை போன்ற எல்லைகளைத் தாண்டி ஒரு ஆய்வுக் கட்டுரையாக விரிந்து, விகசிக்கிறது.

இயல்பாக பகடித் தன்மையுடன் எழுதும் மார்க்ஸ் 'குடியும் குடித்தனமும்' கட்டுரையில் சுந்தரராமசாமியைக் கோபமாகச் சாடுவது சற்று இயல்பற்று இருப்பதாகப்படுகிறது. பகடி செய்வது பின்-நவீனத்துவக்கூறு. கோபப்படுவது பாசிசத்தின் நுண் அலகு. புத்தர் தர்க்கம் புரியும் போது எதிராளியின் போற்றுதலுக்குரிய நம்பிக்கைகள் எதையும் தாங்குவதில்லை. எதிராளியின் நம்பிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு அவரது சொற்களைக் கொண்டே தனது தர்க்கத்தை கட்டமைப்பவர் புத்தர். எனவே அ.மார்க்ஸ் போன்ற ஒரு தேர்ந்த பின்-நவீனத்துவவாதி, புத்தரின் பற்றாளர் எவரையும் கோபத்துடன் சாடுவது சரியானதாகப் படவில்லை.

()

நூலைப் பற்றின விவரங்கள்:

வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை-5. விலை முறையே ரூ.60, ரூ.45, ரூ.50, ரூ.55.

Monday, July 18, 2005

'அன்னியன்' சொல்லும் ஆதாரச் செய்தி

இதுவரை '·பேண்டஸி' படங்களாக எடுத்து வந்துக் கொண்டிருந்த சங்கர்.. மன்னிக்கவும், ஷங்கர், கொஞ்சம் கீழே இறங்கி கொஞ்சம் மிகையதார்த்தமாக தற்கால இளைஞர்களைப்பற்றி 'பாய்ஸ்' எடுத்ததில் பத்திரிகைகள் ஒரே வார்த்தையில் 'ச்சீ' என்றும், மக்கள் தங்களைத் தாங்களே நிர்வாணமாக பார்க்க நேர்ந்த குற்ற உணர்வில் தமக்கேயுரிய பிரத்யேக பாசாங்குகளோடு 'தூ" என்றும் காறித்துப்பியதில் மிரண்டு போன ஷங்கர், தம்மிடமுள்ள ஒரே பாதுகாப்பான பார்முலாவான 'ராபின்ஹீட்' டைப் கதையை முந்திரி, ஏலக்காய், பட்டை, லவங்கம், மசாலா எல்லாம் போட்டு உப்பும் உறைப்புமாய் சொல்லியிருக்கும் படம்தான் 'அன்னியன்'.

Image hosted by Photobucket.com

'அன்னியன்' என்கிற பாத்திரத்தின் வடிவம் ஏறக்குறைய நம் எல்லோர் மனதிலும் உள்ள ஆனால் சமூக கட்டுப்பாடுகளினாலும் தண்டனைகளினாலும் பயந்து கொண்டு வெளிவரத் தயங்குகிற, பயப்படுகிற ஒரு வடிவம்தான்.

()

ராமசாமி பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பயணிச்சீட்டை வாங்கிவிட்டு மிச்சம் ஐம்பது காசை ஞாபகமாக கேட்கிறான். நடத்துனரோ அவனை நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரி பார்த்துவிட்டு "அப்ப கரெக்டா சில்லறை கொடு" என்று சொல்லி விட்டு இவன் பதிலுக்காக எதிர்பாராமல் கூட்டத்தில் கரைந்து போகிறார். அவர் பையில் உத்தரவாதமாக சில்லறை இருப்பதை இவனால் யூகிக்க முடிகிறது. இவன் அவரையே தொடர்ந்து பார்க்க, அவர் பக்கத்திலிருந்த யாரிடமோ சிரித்து இவனை நோக்கி அசிங்கமாக கையில் சைகை காட்டுகிறார்.
உடனே ராமசாமி என்ன செய்கிறான்?

கூட்டத்தை பிளந்து கொண்டு, நடத்துனரின் சட்டையைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் அறைந்து "ஏண்டா, பரதேசி நாயே, இப்படி ஒத்தொருத்தர் மிச்ச காசையும் கொடுக்காம ஏமாத்துற. இதுக்கு ரோட்ல உக்காந்து பிச்ச எடுக்கலாமேடா. நான் கஷ்டப்பட்டு சேத்த காச கொடுக்காம ஏண்டா ஏமாத்துற' என்று மற்றவர்கள் தடுக்க, தடுக்க அவனை பந்தாடி, .....

இப்படியெல்லாமா நடக்கிறது. இல்லை.

இவற்றையெல்லாம் ராமசாமி தம் மனத்தில் ஒரு முறை நிகழ்த்திப்பார்க்கிறான். இப்படியெல்லாம் செய்ய அவனுக்கு தைரியம் போதாது. அப்படியே அவன் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் செய்துவிட்டாலும் அதன் பின்விளைவுகளைப் பற்றி அவனுக்கு தெரியும். காவல் நிலையத்தில் அன்றைய இரவை கழிக்க அவன் விரும்பவில்லை. சாயந்தரம் ரேஷன் க்யூவில் நின்று கெரோஸின் வேறு வாங்க வேண்டும். இப்போதே மணியாகிக் கொண்டிருக்கிறது.
எனவே "பாருங்க சார். நம்ம காசா கேட்டா முறைக்கிறான்." என்றே அவனுக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு, கேட்க யாரும் தயாராக இல்லாத சூழ்நிலையில் ஜன்னல் சீட்டை தேடி பரிதாபமாக அமர்ந்து கொள்கிறான்.

()

ஆக.. தினப்படி நாம் நம்மேல் பாயும் பலவித சமூக வன்முறைகளை எந்தவித கேள்வியும் ஏற்றுக் கொள்ள பழகியிருக்கிறோம். நம்மை விட ஒல்லியாக ஒருவன் கிடைத்தால் தலையில் தட்டி "கால் வெச்சுருக்கிறது தெரியல. மிதிக்கறயே" என்று இன்னொருவனிடம் அதே வன்முறையை உபயோகிக்க நாம் தயங்குவதில்லை.

துரதிர்ஷ்டவசமாக அம்பி என்கிற ரூல்ஸ் ராமானுஜம் இவ்வாறெல்லாம் பழகாமல், சமூக ஒழுக்கத்தை தாம் ஒழுங்காக பின்பற்றுவது போதாதென்று மற்றவர்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென்று அநியாயத்திற்கு எதிர்பார்க்கிறான். இவன் எதிர்பார்ப்பதை உலகம் பரிகசிக்க, மனஅழுத்தம் தாங்காது இவனுடைய இன்னொரு ஆளுமை உயிர்பெறுவதும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தாமே தண்டனை வழங்குவதும், இந்த நீதியை புரிந்து கொள்ளாமல் சட்டம் இதில் குறுக்கிட, சாமர்த்தியமாக சட்டத்தை ஏமாற்ற தெரிந்து கொண்டு தன் பணியை தொடர்வதும்தான் இதன் முக்கிய பாத்திரமான ......அன்னியன்.

அம்பி என்கிற கதாபாத்திரம் மிகத்திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல் கடிதத்ததை கூட பெண்ணின் பெற்றோர்களிடம் முறைப்படி கொடுப்பதில் இருந்து, அவளிடம் பேச பெற்றோர்களிடம் அனுமதி கேட்பது, தன் காதல் ஏற்கப்படாததைக் கண்டு தற்கொலைக்கு முயற்சிப்பது, பிறகு தற்கொலை சட்டப்படி தப்பு என்பதால் அதை நிறைவேற்றாமல் திரும்புவது என்று இந்தப்பாத்திரம் அக்மார்க் நேர்மையால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தமான இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு இந்த பாத்திரம் முற்றிலும் அன்னியமாகயிருப்பதால் திரையரங்கில் பார்வையாளர்கள் கூட சிரிக்கிறார்கள்.

()

பொதுவாக ஷங்கரின் படங்கள் அநாவசியத்திற்கு பிரம்மாண்டனவை என்று சொல்லப்படுவதில் சில சதவீத உண்மையிருந்தாலும், அவருக்கு அந்த பிரம்மாண்டத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. திருவல்லிக்கேணி அக்ரஹாரத்து இளைஞனையும் Multiple Personality disorder என்கிற உளகுறைபாடையும், International School of Marshal Arts School-ஐயும் எந்தப்புள்ளியில் இணைக்க வேண்டும் என்கிற திரைக்கதை வித்தை தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தப்புள்ளிகள் சரியாக சங்கமிக்காத இடங்களில் படம் திருவிழாவில் காணமாற் போன குழந்தை மாதிரி அம்போவென்று விழிக்கிறது. (சில விநாடி இடைவெளிக்குள் மாறுபட்ட ஆளுமைகள் சட்சட்டென்று தோன்றி மறைவதாக கிளைமாக்சில் காட்டப்படும் அந்தக்காட்சி, சினிமாவில் மட்டுமே சாத்தியமுள்ள ஒரு gimmics.)

எந்தவித அறிவிப்புமில்லாமல் வருகிற பாடல்கள் ஒருபுறம் எரிச்சலூட்டுகின்றன என்றால், ஆளுமை மாற்றத்தில் அம்பி என்கிற கதாபாத்திரத்தின் உடை மற்றும் தலைமுடியுமா மாறும் என்கிற கேள்வியை எழுப்புகிற அபத்தமான லாஜிக் அத்துமீறல்கள் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. என்றாலும் 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' என்கிற நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்ட பாடலும், அந்த பாடலின் பின்னணியில் தார்ரோடு, பாலச்சுவர், வீட்டுச் சுவர் என்று எல்லாமும் வண்ணமயமாக காட்சியளிப்பது நல்ல முயற்சி. (ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு தம்மால் இயன்ற maximum output-ஐ அளித்திருந்தாலும் ரஹ்மான் இல்லாத குறை நன்றாகவே தெரிகிறது). சுஜாதா வழக்கம் போல் ஜொலித்திருக்கிறார். அயன்புரம் சத்தியநாராயணணை ஒரு வரியில் இணைத்தது ரசிக்கும்படி இருக்கிறது என்றால் ஆசிய நாடுகள் சிலவற்றோடு இந்தியாவை ஒப்பிட்டு அவர் எழுதியிருக்கும் வசனங்களில் இடியும், மின்னலும் வெடிக்கிறது.

()

இந்தப்படத்திற்கு வரும் விமர்சனங்களைப் பற்றியே ஒரு கட்டுரை எழுதலாம். ஆஹா ஓஹோ என்றோ அல்லது அடச்சீ என்றோ ரெடிமேட் விமர்சனம் எழுதும் வெகுஜனப்பத்திரிகைகளின் விமர்சனங்களை ஒதுக்கிவிடுவோம். படத்தின் காட்சிகளின் அமைப்பை அந்த இயக்குநரே எதிர்பார்த்திருக்காத ஒரு கோணத்தில் கட்டுடைக்கும் சிற்றிதழ்களில் எழுதப்படும் விமர்சனங்கள் எனக்கு பெருத்த நகைப்பை உண்டாக்குகிறது. 'காதல்' என்கிற படத்தில் வரும் பெரியார் சிலை காட்டப்படும் காட்சியை அ.ராமசாமி 'தனக்கேயுரித்தான பார்வையில்' விமர்சிக்கும் போது இவர்களது மனநிலையின் ஆரோக்கியத்தை கண்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது. (அ.ராமசாமி, ஷகீலா படம் ஒன்றிற்கு விமர்சனம் எழுதினால் எவ்வாறிருக்கும் என்று கற்பனை செய்ய மிக சுவாரசியமானதாக இருக்கிறது). சமீபத்தில் பழைய காலச்சுவடு இதழ்களை புரட்டிக் கொண்டிருக்கும் போது 'இருவர்' திரைப்படத்திற்கு ஒரு பேராசிரியர் எழுதியிருக்கும் விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. ஒரு கேமரா கோணத்திற்கு அவர் கொடுத்திருக்கும் 2 பக்க விளக்கத்தை மணிரத்னம் படிக்க நேர்ந்தால் எவ்வாறு திகைத்துப் போவாரோ என்று யூகிக்க முடியவில்லை. "ஏம்ப்பா அந்தப் பக்கம் clouds pass ஆவுது. கேமராவை இந்தப்பக்கம் வையி" என்று சாதாரணமாக சொன்னதற்கு பின்னால் எடுக்கப்பட்ட காட்சியை இவ்வாறு கூட வகைப்படுத்த முடியுமா என்பதுதான் அவரின் திகைப்பிற்கு காரணமாயிருந்திருக்கும்.

()

இந்தப்படம் சொல்லும் ஆதாரக்கருத்து நம் மனச்சாட்சியை தூண்டி சற்றே குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எந்தவித இயற்கை வளங்களுமில்லாமல் உள்ள பக்கத்து குட்டிகுட்டி நாடுகள் எல்லாம் தம் கடும் உழைப்பில் குறுகிய காலத்தில் முன்னேறியிருக்கும் போது, 110 கோடி மனிதவளத்தையும், எல்லா இயற்கை வளங்களையும் வைத்துக் கொண்டு இன்னும் அடுத்த வேளை உணவிற்கு உத்திரவாதமில்லாதவர்கள் சில கோடிப் பேர் இருக்கிறாற் போல் இருக்கிற நம் பொறுப்பில்லாத்தன்மையை இந்த படம் கடுமையாக சுட்டிக் காட்டுகிறது. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் சுட்டிக் காட்டுக் கொண்டிருக்காமல் ஒவ்வொரு தனிமனிதனும் அதிகபட்ச பொறுப்புடனும் சமூக கடமையுடனும் நடந்து கொண்டால் இந்தியா தானாகவே முன்னேறும் என்பதும் அவ்வாறு நடக்கும் வரை சட்டங்கள் இன்னும் கடுமைப்படுத்த வேண்டும் என்பதும் அன்னியன் சொல்லும் ஆதார கருத்து. ஏறக்குறைய பரணில் தூக்கிப் போட்டுவிட்ட, மீயூசியத்தில் மட்டுமே பார்க்கிற, நாம் பரிகசிக்கிற அந்த குணங்களை நாட்டின் நலம் கருதி நாம் ஏற்க வேண்டும் என்பதுதான் இந்தப்படத்தின் நீதி.

ஆனால் மிட்டாயைச் சப்பி விட்டு மருந்தை ஞாபகமாக தூக்கிப் போட்டுவிடுவதில் சமர்த்தர்களான நாம், சதாவின் தொப்புளையும், விக்ரம் பறந்து பறந்து போடுகிற சண்டைகளையும் 'ஆ'வென்று பார்த்துவிட்டு, வழக்கம் போல் தம் இயந்திர வாழ்க்கைக்கு திரும்பி எப்பவும் போல்தான் இருக்க்ப் போகிறோம் என்பதுதான் யதார்த்தமான சோகம்.

Friday, July 15, 2005

சுருதி பேதம்

நண்பர் ஆனந்த் ராகவ் எழுதிய 'சுருதி பேதம்' என்கிற நாடகத்தை 'நாரத கான சபாவில்' பாரா அழைப்பின் பேரில் காண முடிந்தது. ஆனந்த ராகவின் வெகுஜன இதழ்களில் வெளிவந்திருக்கிற சிறுகதைகளை மட்டுமே படித்து (நீச்சல் குளம் என்கிற நகைச்சுவைப் படைப்பை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்) அவர் படைப்புகளைப் பற்றின ஒரு பிம்பத்துடன் ஒரு நகைச்சுவை நாடகத்தை எதிர்பார்த்து போயிருந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. விருதுக்குரிய குறும்படத்துடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு கனமான விஷயத்தை நாடகத்தின் களமாக எடுத்துக் கொண்டிருந்தார் ஆனந்த்.

ஆனால் இந்த நாடகத்தை பார்த்து முடித்தவுடன், இது அமெரிக்காவில் மேடையேறின போது அங்கிருக்கிற பெண்ணுரிமை இயக்கங்கள் யாரும் இந்த நாடகத்தின் உட்கருத்தை ஆட்சேபிக்கவில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது.

ஏன்? சொல்கிறேன்....

அதற்கு முன் கதாசிரியர் ஆனந்த ராகவைப் பற்றி.

ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அவர் எழுதின கதை ஒன்றை நான் சற்று லேசாக விமர்சிக்கப் போக, என்னை தனிமடலில் தொடர்பு கொண்டு நான் குறிப்பிட்ட குறையைத் தெளிவுபடுத்தினார். பிறகு எடிட் செய்யப்படாத முழுக்கதையையும் எனக்கு அனுப்பி வைத்தார். 'யாரோ தன் கதையை விமர்சித்து விட்டுப் போகிறார்' என்றெல்லாம் அலட்சியப்படுத்தாமல் அதற்கான விளக்கத்தை சொல்லி தன் படைப்பின் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளும் அவரின் உன்னதமான போக்கு எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

()

சுருதி பேதம் நாடகத்தைப் பற்றி:

ஆனந்த் ராகவ் எழுதி தீபா ராமானுஜம் இயக்கியிருக்கும் இந்த நாடகம், சங்கீத வித்வான் ஒருவருடைய திரைமறைவு வாழ்க்கையைப் பற்றியது. இளையாங்குடி பஞ்சாபகேசன் என்கிற புகழ்பெற்ற, திறமையான கர்நாடக சங்கீத வித்வானின் இரண்டாவது மனைவி (கொச்சையாக சொன்னால் வைப்பாட்டி) கல்யாணி. அவர்களின் ஒரே பெண்ணான நித்யா எப்போதாவது ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்லும் அந்த நபரை தன் அப்பா என்று ஏற்க மறுக்கிறார். தன் அம்மாவும் அவர் மீது மரியாதையுடன் இருப்பதை கண்டு எரிச்சலடைகிறார். வித்வான் அந்த பெண்ணின் மீது பாசமாக இருந்தாலும், அவரை ஏற்க மறுத்து அப்பா என்கிற அங்கீகாரத்தை தர மறுக்கிறாள்.

நாளடைவில் அவள் வெளியுலகத்தில் புழங்கும் போது கூட சுயமாக வெளிப்பட இயலாமல் அவள் அப்பாவின் அறிமுகத்துடனே சமூகத்தால் அறியப்படுகிறாள். இந்த நிலை அவளை எரிச்சலூட்டுகிறது. எந்தவித பின்னணி அடையாளமுமில்லாமல் சுயமாக ஏதாவது சாதனை புரிந்து வித்வானை விட அதிக புகழுடன் விளங்கி இந்த சமுகத்திற்கு தன்னை நிரூபிக்க சபதமேற்கிறாள். இயல்பான தனக்கு உள்ள பாட்டுத்திறமையை உபயோகித்து புகழ்பெற்ற பாடகியாகி சினிமாக்களிலும் பாடுகிறாள். என்றாலும் இந்த சமூகம் இது அவளது அப்பாவிடமிருந்து வந்த திறமை என்றே சொல்கிறது. நாளாக நாளாக இவளும் அதை நம்பி மனமார ஏற்று, அப்பாவுக்கான அங்கீகாரத்தை தந்து அவருடன் ஒரே மேடையில் பாட விரும்பும் போது, திருப்பமாக வித்வான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு விடுகிறார். எல்லோரும் பாச மழையில் நனைந்து கொண்டே அழ, திரை விழுகிறது.

()

ஆனந்த ராகவ், இந்த நாடகத்தை 'சிந்து பைரவி' திரைப்படத்தின் நீட்சியாக யூகித்து எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. இதில் என்னால் ஏற்க முடியாத கருத்து, ஒரு பெண் சுயத்துடன் வெளிப்பட விரும்பி அதை சாதிக்க, அந்த சமூகம் அதை அங்கீகாரம் தராமல் போவதும், அவளும் அதை ஏற்றுக் கொண்டு தன் அப்பாவுடைய திறமைதான் என்று நம்பத் தொடங்குவதும், பெண் என்பவள் சுயமாக எதையும் செய்யத் தெரியாமல் எதற்கும் ஒரு ஆணை சார்ந்து இருப்பதே உலக நியதி என்கிற பிற்போக்குத்தனமான கருத்தை இந்த நாடகம் அடிநாதமாக வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. இந்த ஒரு கருத்தை மாற்றி அமைத்தால் இந்த நாடகம் இன்னும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்.

()

இந்த நாடகத்தில் என்னை உடனே உடனே கவர்ந்த அம்சம், அரங்கத்தின் ஒளியமைப்பும், அரங்க அமைப்பும். ஒரு நாடகத்திற்கு இலக்கணமாக இருக்க வேண்டிய அளவிற்கு இந்நாடகத்தில் ஒளி மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (ஒளியமைப்பு 'கலை' ரவி) இரண்டு, மூன்று சுவாமி படங்களையும், கருப்பு, வெள்ளை புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஒரு பிராமண வீட்டின் வரவேற்பறையாகவும், அந்தக் காலக்கட்டம் வெளிப்படும்படியாகவும் அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது (அரங்க அமைப்பு - 'உஷா ஸ்டேஜ்' விஜயகுமார்) நிறைவாக இருக்கிறது. காலம் மாறியிருப்பதை தொலைக்காட்சி பெட்டி மற்றும் கலர் புகைப்படம் கொண்டு தெரிவித்திருப்பது நன்றாக இருக்கிறது.

சங்கீத வித்வானாக நடித்த ராஜீவ் ஜெயராமன், பின்னணியில் ஒலிக்கும் ஆலாபனைகளுக்கு (பரமேஷ் கோபி) ஏற்ப மிகத்திறமையாக வாயசைத்திருப்பதோடு, தன் மகளின் அன்பிற்காக ஏங்கி கலங்கும் காட்சியிலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். (தற்கால சூழ்நிலையிலும், சங்கீத வித்வான் என்றால் அவர் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று கதாசிரியர்கள் யோசிப்பது விநோதமாக இருக்கிறது. ஆனால் இந்த நாடகம் 50 வருடத்திற்கு முன்பு இருக்கிற கால கட்டமாக இருப்பதினால் மன்னித்துவிடலாம்) நித்யாவாக நடித்திருக்கும் தீபா ராமானுஜம் அந்த பாத்திரத்திற்கு சற்று முதிர்ந்த தோற்றத்தில் தோன்றினாலும் (பெண்ணை விட அம்மா இளமையாக இருக்கிறார்) தனது உன்னதமான நடிப்பால் அதை ஈடுகட்டியிருக்கிறார். அவர் பாடுவதற்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிற ஆஷா ரமேஷின் குரல் மிக இனிமையாக இருக்கிறது.

வித்வானுக்கு உதவியாளரான அம்பியாக வரும் நவீன்குமார் நாதன் இயல்பான நகைச்சுவையின் மூலம் சற்று தொய்வாக செல்லும் நாடகத்தின் போக்கை சமாளித்திருக்கிறார். (நாடகம் முடிந்து கலைஞர்கள் மேடையேறின போது இவருக்குத்தான் பலத்த கைத்தட்டு கிடைத்தது). சிறுசிறு பாத்திரங்களில் வருகின்றவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருந்தனர்.

()

ஆனந்த ராகவ்வின் வசனங்கள் பல இடங்களில் மின்னலடிக்கிறது. சில உதா:

வீட்டிற்கு வந்திருக்கும் அப்பாவை மகள் நிற்க வைத்தே எரிச்சலுடன் பேசிக் கொண்டிருக்க, உள்ளேயிருந்து வரும் அம்மா கேட்கிறார். "ஏண்டி அவரை உட்காரச் சொல்லாம நிக்க வெச்சா பேசிண்டு இருக்கறது"
மகள் சட்டென்று தன் பேச்சின் இடையே இயல்பாக ஆனால் கோபத்துடன் சொல்கிறாள்.

"அவர் இங்க உக்கார்றதுக்கா வர்றார்"

*******

வித்வானின் உதவியாளர் அம்பி நித்யாவை கரிசனமாக விசாரிக்கிறார்
"இவ்வளவு புத்திசாலித்தனமான பொண்ணா இருக்கறயே. ஒரு கல்யாணத்தை பண்ணிக்கப்படாதா?"

"புத்திசாலியா இருக்கறதனாலதான் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறேன்."

********

என்றாலும் சில இடங்களில் வசனம் சொதப்புகிறது. இரண்டாவது மனைவியாக இருந்தாலும் தன் கணவனின் மீது அதீத மரியாதை வைத்திருக்கும் கல்யாணி அம்மாள் ஒரு இடத்தில் தன் கணவன் பெயரை 'இளையாங்குடி பஞ்சாபகேசன்' என்று கணவர் பெயரை ஸ்பஷ்டமாக சொல்வது அந்த பாத்திரத்தின் இயல்புத் தன்மையை சற்று பாதிக்கிறது.

இந்தக் காலத்துல சொல்வா.. அந்தக் காலத்துல சொல்வாளோ....

()

நித்யா சிறு பெண்ணாக இருக்கும் போது இருக்கிற அதே கெட்டப்போடு வருகிற வித்வான், அவர் வளர்ந்து பெரியவளாகிவிட்டபிறகும் அதே தோற்றத்தில் வருவது சற்று சங்கடமாக இருக்கிறது. சட்டென்று பார்க்கும் போது நகைச்சுவை நடிகர் விவேக் மாதிரி இருக்கும் அவரின் இளமையை ஒப்பனையால் (கலைமாமணி சுந்தரமூர்த்தி) மறைக்க முடியவில்லை. ஏறக்குறைய எல்லா காட்சிகளிலும் பாத்திரங்கள், புத்தம் புது ஆடைகளுடனும் அதீத ஒப்பனையுடனும் தோன்றும் போது, இவர்கள் கழிவறைக்கு செல்லும் போது கூட இப்படித்தான் இருப்பார்களா என்று எரிச்சலடைய வைக்கிறது.

காட்சிகள் மாறும் இடைவெளியை திரையை மூடாமல் பாடகர் பாடுவதை காட்டுவது புதுமையாக இருந்தாலும், பாகவதர் படம் மாதிரி அடிக்கடி ஆலாபனை ஆரம்பித்துவிடுவதால், கர்நாடக சங்கீதத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாத என்னைப் போன்றோர்கள் இருக்கையில் நெளிய வேண்டியதாயிருந்தது.

()

நாடகம் முடிந்த பின் 'நாரத கான சபாவின்' செகரட்டரி (கிருஷ்ணசாமி (?) ) சில உபயோகமான தகவல்களைச் சொன்னார். இவர்கள் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாலும் தமிழை கொலை செய்யாமல் சிறப்பாக உச்சரித்ததை பாராட்டினார். (அமெரிக்காவில இருக்கறவங்கள விடுங்க! இங்க சென்னையில மட்டும் என்ன வாழுது என்று பிறகு பேசிய பாம்பே ஞானம் சென்னைக்காரர்களை வாரினார். அதற்கும் பெருந்தன்மையாக கைத்தட்டினார்கள் நம் மக்கள். தீபா ராமானுஜம் இவருடைய சிஷ்யையாம்).

செகரட்டரி சில பழைய தகவல்களை சொன்னார். நாரத கான சபா ஏற்படுத்தப்பட்ட போது இங்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாம். அவர்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.மனோகர் என்று சில குறிப்பிட்ட பேரே அரங்கத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்களாம். அந்த வரிசையில் 'கிரியா கிரியேஷன்ஸ்' இருப்பதாக பாராட்டினார். சில தொழில்நுட்ப குறைகளை சுட்டிக் காட்டிய இவர், காலர் மைக்கை விட அரங்கத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிற மைக்கின் முன் பேசினால் எல்லோருக்கும் கேட்கும்படியாக இருக்கும் என்றார். (இந்தக் கருத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வளர்ந்திருக்கும் தொழில்நுடபத்தை பயன்படுத்தி காலர் மைக்கை பயன்படுத்தி பேசுவதால் பாத்திரங்கள் நிற்க வைக்கப்பட்டிருக்கும் மைக்கின் முன் செயற்கையாக வந்து பேசுவதை தவிர்த்து இயல்பாக பேசலாம்.)

என்றாலும் ஆரம்ப கட்டங்களில் உரையாடல் சரியாக கேட்காததால் 'வால்யூம் இல்ல' என்று பார்வையாளர்களிடமிருந்து பலத்த குரல்கள் எழுந்தன. நாடகத்தின் மூலம் பார்வையாளாகளின் ரியாக்ஷன் உடனே கிடைக்கும் என்பதற்கு இதுதான் உதாரணம் போலிருக்கிறது.

()

நாடகத்தின் இடைவேளையில் பாரா அறிமுகப்படுத்தி வைக்க எழுத்தாளர் பாஸ்கர் சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பழைய ஆனந்த விகடனில் அவர் எழுதிய 'ரூட் பஸ்' என்னும் இயல்பான தொடரை நினைவுப்படுத்தி உரையாட மனிதர் உற்சாகமாகிப் போனார். அவரின் சிறுகதைத் தொகுதியான 'பழுப்பு நிற புகைப்படம்' பற்றியும், தமிழ்நாட்டையே ஒன்பது மணிக்கு கட்டிப் போட்ட 'மெட்டி ஒலியின்' வசனங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தது நிறைவான அனுபவமாக இருந்தது.

Thursday, July 14, 2005

சில கேள்விகளும் சில பதில்களும்

நான் இந்தப் பிரச்சினையை தலைமுழுக நினைத்தாலும், நண்பர் அனுராக் அவர் பதிவில் என்னைக் குறித்து கேட்டிருக்கிற சில கேள்விகளுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.


அதற்கு முன்னர் ஒரு விஷயம். இந்த பதிவு முழுக்க நான் ஒருவிதமான சங்கேத மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது. இதில் குறிப்பிட்டிருக்கிறவர் யார் என்பதை உங்களால் எளிதில் யூகிக்க முடிந்தாலும் அவர் பெயரை எழுத என் மனம் ஒப்பவில்லை. எனவே சம்பந்தப்பட்டவரை 'நபர்' என்கிற அடைமொழியிலேயே நான் அழைக்க விரும்புகிறேன். 'நேர்மையற்றவர்' என்று என்னை எந்தவித முகாந்திரமுமில்லாமல் அந்த நபர் விமர்சித்த பின்னால் அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொள்வதுதானே நல்லது. சம்பந்தமில்லாத செய்திகள் போல் தெரிகிற இரண்டை போட்டு ஒருவரை மறைமுகமாக விமர்சிப்பதுதான் சாமர்த்தியம், இலக்கியத்தரம் என்றால் நானும் அந்த தரத்துடனே எழுத விரும்புகிறேன். இதற்கு வருத்தப்படுகிற, சங்கடபடப் போகிற நண்பர்கள் முன்கூட்டியே என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

()

நண்பர் அனுராக் என்னை நோக்கி ஒரு கேள்வியை முன் வைத்திருக்கிறார். "சமீபத்தில் சென்னையில் காசியுடன் நிகழ்ந்த சந்திப்பை நான் பதிவாக்கிய போது கலந்து கொண்டவர்களின் பட்டியலில் ஏன் 'சம்பந்தப்பட்ட நபரின்' பெயர் விடுபட்டிருக்கிறது? இது தானாக நிகழ்ந்த தவறாக இருக்க முடியாது."
நண்பரே, காசியுடன் ஏற்பட்ட சந்திப்பை பற்றி முதலில் பதிந்தது அந்த நபர்தான். அதில் என் பெயர் விடுபட்டிருப்பதை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை? இதைப் பற்றி அவர் பதிவில் நீங்கள் கேட்டதுண்டா? என்னிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வி?

அவர் என் பெயரை குறிப்பிடாதது குறித்து எனக்கு வருத்தமேதும் கிடையாது. என்றாலும் என் பெயர் திட்டமிட்டே குறிப்பிடாமல் விடுபட்டிருந்தது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நான் உருப்படியான யோசனை ஏதும் தெரிவித்திருக்காமல் இருந்திருக்கலாம்.. அட! சாம்பார் வடை சாப்பிடத்தான் அந்தக்கூட்டத்திற்கு போனதாக வைத்துக் கொள்ளுங்களேன். அடிப்படையான நாகரிகம் உள்ள நபர் என்ன செய்திருக்க வேண்டும். ஒரு கூட்டத்தைப் பற்றின செய்தியை பதியும் போது - அந்த நபர் தமக்கு பிடிக்காதவராக இருக்கலாம் - கலந்தவர்கள் எல்லோரையுடைய பெயரை குறிப்பிடுவதுதான் முறை. ஆனால் என் பெயரைத்தவிர மற்ற அனைவரின் பெயரும் அந்த நபர் எழுதிய பதிவில் ஞாபகமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை நான் ஏதோ தாழ்வு மனப்பான்மையால் சொல்லவில்லை. இது ஒன்றும் புதிதல்ல. அந்த நபர் பணிபுரிந்த ஊடக நிறுவனத்தில் வாடிக்கையாக நடக்கும் விஷயம்தான். தமக்கு போட்டியாக அவர்கள் நினைக்கிறவர்களை, அவர்களுக்கு தப்பித்தவறியும் விளம்பரம் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக - அவர்கள் தங்கள் கூட்டணி கட்சித்தலைவர் என்றாலும் - அவர்களைப் பற்றிய செய்திகள் வராதவாறு திட்டமிட்டு சாமர்த்தியமாக மறைப்பதுதான் அந்த நிறுவனத்தின் கீழ்த்தரமான போக்காகும். எனவே அங்கு முக்கிய பொறுப்பில் பணிபுரிந்த இந்த நபரும் அதே பாணியை பின்பற்றியிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

இது சொல்லும் செய்தி என்ன? 'நீ பொருட்படுத்த தேவையில்லாதவன்'

'பெரியோர் எனில் வியத்தலும் இலமே, அதனினும் சிறியோர் எனில் இகழ்தலும் இலமே' என்று தன் பதிவில் அந்த 'நபர்' கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை தன் சுய வாழ்க்கையில் சிறிதளவேனும் கடைப்பிடிக்க முயலவேண்டும்.

ஆக.. இந்த நபர்தான் என்னை 'நேர்மையில்லாதவர்' என்று விமர்சிக்கிறார்.

என்னைப் பற்றின அறிமுகம் இல்லாதிருந்திருக்கலாம் அல்லது என் பெயரை மறந்திருக்கலாம் என்று அந்த நபர் சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் காசியுடனான சந்திப்பின் முன்பே எங்களுக்குள் அருண் வைத்தியநாதன் நடத்திய குறும்படக்காட்சியிலும், பிரகாஷ் நடத்திய வலைப்பதிவர் சந்திப்பிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனக்கு பின்னால் வந்தவர்களின் பெயரைக் கூட ஞாபகமாக குறிப்பிட்டிருக்கிறவரால் என் பெயரை குறிப்பிடாததின் உள்நோக்கம் குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது.

()

அந்த நபர் என் பெயரை கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அந்த நபரின் பெயரை ஏன் நீங்கள் எழுதவில்லை என்ற கேள்வி எழுந்ததாலேயே இதையெல்லாம் நான் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.

()

அடுத்ததாக நண்பர் அனுராக் குறிப்பிடுவது 'அந்த நபர் என்பவரால்.....' என்று ஏன் எழுத வேண்டும். அவர் படைப்புகளின் மீது மரியாதை உள்ளவர் ஏன் இவ்வாறு எழுத வேண்டும்?...

அந்த நபருக்காக இவ்வளவு பரிந்து பேசும் நண்பர் அனுராக், அந்த நபரின் பதிவுகளை படிப்பதில்லை என்று இதன் மூலம் தெரிகிறது.

அந்த நபரின் அடுத்தபதிவில் என்னைப் பற்றிக் குறிப்பிடும் போது 'சுரேஷ் கண்ணன் என்பவர் .... என்றுதான் ஆரம்பிக்கிறார். அடிப்படை நாகரிகம் கருதி ஒரு பேச்சுக்காக என்னை நண்பர் என்றோ சக வலைப்பதிவாளர் என்றோ விளித்திருக்கலாம். எனவேதான் 'நேர்மையில்லாதவனாகிய' நானும் அதே வழியை பின்பற்ற வேண்டியிருந்தது. அவர் செய்ததையெல்லாம் நீங்களும் செய்திருக்க வேண்டுமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம்.

என்ன செய்வது? 'எங்கள் ஆயுதங்களை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்' என்கிற மாவோவின் மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது. இந்த அற்ப பிரச்சினைக்காக அந்த உன்னதமான மேற்கோளை பயன்படுத்தியதற்கு புரட்சியாளர்கள் என்னை மன்னிக்கட்டும். ஒருவர் திட்டமிட்டே உங்களை அவமானப்படுத்தும் போது பதிலுக்கு சாந்தமாக போக நான் மகான் இல்லை. 'இவரைப் பகைத்துக் கொள்ளாதே. இவரால் உனக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டலாம்' என்றெல்லாம் யோசிக்க எனக்குள் இருக்கும் சுயமரியாதை இடம் தர மறுக்கிறது.

'ஏம்ப்பா உன் பேர எழுதாததுக்கா இவ்வளவு கோபம்' என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். நிச்சயமாக அல்ல. அனுராக் எழுப்பிய கேள்விக்கு என் பக்கத்து நியாயத்தை விளக்கவே இந்தப்பதிவு. இதன் மூலம் உங்கள் நேரத்தை வீணடித்திருந்தால் அதற்காக என் முன்கூட்டிய மன்னிப்பு.

()

நான் ஒரு எழுத்தாளரை சந்திக்கப் போய் (மனித நேயத்தை மாய்ந்து மாய்ந்து எழுதும் சில எழுத்தாளர்களை நெருங்கிப் பார்த்தால்தான் தெரியும், அவர்களின் தோல்கள் உரிந்து துர்நாற்றமுடன் கூடிய அழுகிய நெடி வீசுவதை) ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை மடற்குழு ஒன்றில் பதிந்ததையும், அதை சம்பந்தப்பட்ட நபர் என் அனுமதியில்லாமல் தன் இணையத்தளத்தில் எடுத்து போட்டுக் கொண்டதையும், விளக்கம் கேட்டு எழுதின கடிதத்தை சட்டை செய்யாமல் இருந்தததையும் பற்றி.... சமயம் வரும் போது எழுதுகிறேன்.

தன் முதுகில் 10GB-க்கும் அதிகமான அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவர் முதுகில் 150 KB அழுக்காவது கிடைக்குமா என்று தேடுகிறவர்கள், மற்றவர்களை 'நேர்மையற்றவர்' என்று விமர்சிக்கும் நேர்மையின்மையை விவரிப்பதே இந்தப்பதிவின் நோக்கமே ஒழிய பொத்தாம் பொதுவாக எழுத்தாளர்களை திட்டுவது அல்ல. நான் சந்தித்த உன்னதமான எழுத்தாளர்களைப் பற்றியும் அவ்வப்போது பதிந்து கொண்டுதானிருக்கிறேன்.

()

இன்னும் சில விளக்கங்கள்...

சிலர் என் பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் 'பி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக செயலாற்றப் போய்... என்பதாக இந்த சர்ச்சையை வகைப்படுத்த முயன்றிருந்தார்கள். அவ்வாறெல்லாம் யாருக்கும் ஆதரவாக செயலாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரும் அப்படி என் ஆதரவைப் பெற வேண்டிய நிலையிலும் இல்லை.அப்படியென்றால் சம்பந்தப்பட்ட நபருக்கே ஆதரவாக 'அந்தாதி' பாடியிருப்பேனே.

()

உங்கள் சமீபத்திய பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினையை திசை திருப்புகிறது என்று சிலர் என் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். இது ஒரளவு உண்மைதான் என்றாலும் என் பக்க விளக்கத்தையும் நான் சொல்லியாக வேண்டும் இல்லையா? பொதுவாக ஆபாச பின்னூட்டங்களால் பாதிக்கப்படாத என் வலைப்பதிவு, சமீபத்திய இரண்டு பதிவுகளில் மனித கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளின் பெயர்களோடு களை கட்டியிருந்தது. (சமீபத்தில் படித்த எம்.வி.வெங்கட்ராமின் 'காதுகள்' நாவல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாவலில் வருகிற முக்கிய பாத்திரத்தின் காதுகளில் எப்போதும் ஆபாசக்கூச்சல்கள் கேட்டுக் கொண்டிருக்கும்)

()

இன்னுமொரு வேதனையான விஷயம் தமிழ் வலைப்பதிவுகளின் வாசகர்கள் குறித்தானது. எத்தனையோ நல்ல விஷயங்களை என் பதிவில் எழுதியதில் முக்கி முக்கி என்னுடைய webcount 10000-த்தை நெருங்க முயன்று கொண்டிருக்க, சமீபத்திய இரண்டு பதிவுகளின் மூலம் இது 'சர்'ரென்று ஏறத்தாழ 2000 கவுண்ட்டுகளை அதிகமாக பெற்றிருக்கிறது. இது நிச்சயமாக எனக்கு சந்தோஷமான விஷயமாக இல்லை. மாறாக வேதனையாக இருக்கிறது. வலைப்பதிவு வாசகர்கள் எந்த மாதிரியான உள்ளடக்க பதிவுகளை தேடிப்பிடித்து படிக்கிறார்கள் என்று இதன் மூலம் நிரூபணமாகிறது.

நண்பர்களே, உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். கனமான விஷயங்களை உள்ளடக்கிய பல நல்ல பதிவுகள் வெளியாகின்றன. அவற்றை தவறவிடாது படித்து சம்பந்தப்பட்ட பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

Tuesday, July 12, 2005

ஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்

எனது முந்தைய பதிவின் ஒரு பகுதிக்கு மாலன் எழுதியிருக்கிற பின்னூட்டத்தின் சம்பந்தப்பட்ட பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

"பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது"

இது அபாண்டம்!. நான் ஜெயகாந்தனை விமர்சித்து எழுதிய கட்டுரைகளில் பாரதியை வெட்டி ஒட்டி எழுதவில்லை. திசைகள் ஏப்ரல் 2005ல், நான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதிய கட்டுரை இடம் பெற்றது. அந்த திசைகள் இதழ் இப்போதும் திசைகள் இணையதளத்தில் இருக்கிறது (http://www.thisaigal.com/april05/essay_jk_maalan.html) யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஜெயகாந்தனைப் பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் சுட்டி தமிழ்மணத்தில் உள்ள என் ஜன்னலுக்கு வெளியே பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன். நான் ஜெயகாந்தனை தாக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்கள் மன்னிப்பைத் தனி ஒரு பதிவாக வெளியிட வேண்டும். இது நடவாத பட்சத்தில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றி அபாண்டங்கள் பரப்பப்படுவதை நான் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

என்னுடைய பதில்:

மே 2005 திசைகள் இதழில் 'முகங்கள்' என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிற இந்த பக்கத்தைப் பாருங்கள்.

Image hosted by Photobucket.com

Link: http://www.thisaigal.com/may05/muhangkal.html

இவை தனித்தனித் துண்டு செய்திகள்தான் என்று மாலன் வாதிடக்கூடும். ஆனால் ஒன்றன்பின் ஒன்றான உள்நோக்கத்துடன் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிற இந்த செய்திகளை மேம்பாக்காக பார்க்கிறவர்களுக்காக கூட இந்த செய்தியின் அர்த்தமும் உள்நோக்கமும் எளிதில் விளங்கிவிடும். பத்திரிகையில் வெளியாகிற அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்கிற வகையில் மாலனே இதற்குப் பொறுப்பாகிறார். அந்த வகையில்தான் நான் எனது பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

()

என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிற மாலனின் நேர்மையை சில பழைய ஆதாரங்கள் கொண்டு என்னால் விளக்க முடியும். ஆனால் வேண்டாமென்று தவிர்க்கிறேன்.

இனிமேலும் இதைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. 'வேண்டுமென்றே சர்ச்சையான விஷயங்களை எழுதுகிறவர்களுடைய பதிவுகளை படிக்காமல் தவிர்ப்பது நல்லது' என்று எழுதி விட்டு நீங்களே அந்த மாதிரியானதொரு பதிவை எழுதியிருக்கிறீர்களே என்று சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றிலும் சில சதவீத உண்மை உள்ளது. எனவே இந்த தலைப்பை நான் தொடரப் போவதில்லை. நண்பர்களும் இந்தப் பதிவிற்கு எந்தப் பின்னூட்டமும் அளிக்காமல் இருந்தால் நல்லதாக இருக்கும்.

ஆனால்... இதிலிருந்து நான் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொடுத்தவர்களுக்கு நன்றி.