Saturday, September 17, 2005

கணக்குப் பாடமும் கணையாழிக் கவிதையும்

செப்.2005 கணையாழி இதழில் பிரசுரமாகியிருந்த ஒரு கவிதை என் பழைய நினைவலைகளை உசுப்பி விட்டது. (நினைவலைகள் அடங்கிய பதிவுகளை வெறுப்பவர்கள் - அதாவது வீட்டில் கொசுவர்த்தி சுருள் கூட பயன்படுத்தாமல் பதிலாக மேட் பயன்படுத்துபவர்கள் - உடனடியாக இதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

'கணக்கு என்றால் ஆமணக்கு' என்கிறார் பாரதி. இந்த விஷயத்தாலேயே பாரதியை மிக நெருக்கமாக என்னால் உணர முடிந்தது. தமிழே எனக்கு எப்போதும் விருப்ப பாடம். தங்கள் மகன்களை குமாஸ்தா வேலைக்கு தயார்படுத்தும் அந்தக் கால பெற்றோர்கள் உருவேற்றியதாலும் ஸ்டைலாக பேசுவதால் ஏற்படும் மதிப்பாலும ஆங்கிலத்தில் ஒரளவு விருப்பம் ஏற்பட்டு படிக்க முடிந்தது. வரலாறு மற்றும் புவியியலை எல்லாம் நான் அப்போது ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதோ, இப்போது இணையத்தில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறேனே, அதை மாதிரியே எதை எழுதி வைத்தாலும் மதிப்பெண்கள் வந்துவிடும். (எங்கள் சரித்திர ஆசிரியர் மார்க் போடுவதில் தரித்திரமாக இல்லாமல், என்ன எழுதியிருக்கின்றது என்பதை பார்க்காமலேயே, கோலி விளையாடும் சிறுவர்கள் மாதிரி விடை எத்தனை ஜாண் நீளத்திற்கு நீண்டிருக்கிறதோ அத்தனை மதிப்பெண்கள் வழங்கி 'சரித்திர' சாதனை புரிவார்.)

ஆனால்.... இந்த கணக்குப் பாடம்தான் என்னை ஜென்மப் பகைவன் மாதிரி எல்லா வகுப்பிலும் துரத்திக் கொண்டே வந்தது. கணக்கு வகுப்பு என்றால் நிஜமாகவே எனக்கு ஜீரம் வந்துவிடும். அதுவும் இந்த 'அல்ஜீப்ராவை' கண்டுபிடித்தவனை எங்கு கண்டாலும் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக அப்போது தயாராயிருந்தேன். பெண் பிள்ளைகளை துரத்திக் கொண்டும் போகும் செயல் கூட 'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.

()

இப்பவும் இருக்கிற பிராட்வே தியேட்டரின் (இங்குதான் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் என்கிற திரைப்படம் மூன்றரை வருடங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது) எதிரேயுள்ள புனித கேப்ரியல் உயர்நிலைப் பள்ளியில் அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய வெள்ளைப் பாவாடையை போட்டுக் கொண்டு எப்படி கால் தடுக்காமல் நடக்கிறார்கள் என்று நான் வியக்கிற பாதர்மார்களும், காலை வெயிலில் பிரேயருக்கு நிற்கிற போது எங்கள் மேல் வெயில் படாமல் தடுத்தருள் புரிந்த பரந்து விரிந்த பாதாம் மரமும் (இந்த மரத்திலிருந்து விழும் பாதாம்காய்களை கல்லால் உடைத்து உள்ளேயிருக்கும் பருப்பை சாப்பிடுவோம். சமீபத்தில் அந்தவழி போனபோது இந்த மரம் வெட்டப்பட்டு பிரேயர் ஹால் வெளிச்சமாய் இருந்ததை பார்த்த போது என்னுள் எழுந்த உணர்ச்சியை வார்த்தைகளால் விளக்க தெரியவில்லை) தாமதமாக வந்தால் பி.டி வாத்தியார் மூன்று ரவுண்டு மூச்சிரைக்க ஓட வைக்கிற பிரம்மாண்டமான விளையாட்டு மைதானமும் இடைவேளைகளில் வெளியே போகமுடியாதபடி வாட்ச்மேன் லாசர் பூட்டிவைத்துவிட கதவு கம்பி இடைவெளியில் வாங்கின உப்பு தூவின மாங்காய் துண்டுகளும், எலந்தம் பழங்களும் அங்கேதான் அறிமுகமானது.

நான் பொதுவாக எப்போதுமே பார்டரில் பாஸ் பண்ணுகிற ஆள். பின்பெஞ்சில் மேளம் தட்டிக் கொண்டு ஒரு கோஷ்டி உட்கார்ந்திருக்குமே, அதைச் சார்ந்தவன். 'நன்றாக படிக்கிற பசங்களை' எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கிண்டல் செய்து மட்டம் தட்டுவோம். அவர்கள் இதையெல்லாம் சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருப்பார்கள். நான் அந்த வயதில் மிகவும் பூஞ்சையாக இருப்பேன். இந்த காரணத்திற்காகவே சக மாணவர்களால் மிகவும் கிண்டல் செய்யப்பட்டிருக்கேன். "பின்னால கறியே இல்ல. நீயெல்லாம் ஏண்டா சர்ட்டை இன் பண்றே". இந்தக் குறையை மறைத்துக் கொள்வதற்காகவே வேண்டுமென்றே படிக்காத மாணவர்களிடம் சேர்ந்து கலாட்டா செய்து கொண்டிருந்தேனோ என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் தமிழில் மட்டும் எப்போதும் 70 அல்லது 80 எடுத்துவிடுவேன். இதனாலேயே படிக்கிற மாணவர்கள் என்னை 'இவன் பழுதா பாம்பா' என்று தீர்மானிக்க முடியாமலிருந்தார்கள். ஒரு முறை தமிழில் உயர்ந்த பட்சமாக 93 எடுத்துவிட என்னை ஆப்ரிக்க தேசத்திலிருந்து வந்தவன் போல் விநோதமாகப் பார்த்தார்கள். ஆனால் இந்த கணக்குப்பாடம்தான்... அது என்னை விரோதியாக பார்த்ததோ அல்லது நான் அதை விரோதியாக பார்த்தேனோ தெரியவில்லை. எப்போதும் வாய்க்கா, வரப்பு தகராறுதான். நிற்க.

()

இந்த இடத்தில் நிறுத்தி எங்கள் கணக்கு வாத்தியார் அமல்தாஸைப் பற்றி கூற வேண்டும். மிகவும் கண்டிப்பானவர். இவர் வாய்விட்டு சிரித்த கணங்கள் அபூர்வமானவை. மதப்போதகர் தினகரனின் குரலை குளோனிங் செய்தது போல் அதே குரலில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசுவார். நானும் அதே மாதிரியே நண்பர்களிடையே ஒரு முறை வயிற்றை முக்கி பேச முயன்றதில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தததால் அதை தொடரவில்லை. மிக மெல்லிதான ஒரு பிரம்பு வைத்திருப்பார். பிரம்பு மெலிதாக இருந்தாலும் வயாகரா சாப்பிட்ட மாதிரி அதன் வீர்யம் பெரிது. கையில் அடி வாங்கி கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு வலி கியாரண்டி.

கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே தீடீரென்று நிறுத்தி சரியாக என்னைக் குறிவைத்து எழுப்பி "இதோட பார்முலா சொல்லு" என்பார் நம்பியார் குரலில். அந்த பார்முலாவோ உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் தேடிய பார்முலாவை விட கடினமானதாக இருக்கும். நான் "ஏ ஸ்கொயர் ப்ளஸ்.... " என்று ஏதோ மழுப்ப முயல கையை விறைப்பாக நீட்டச் சொல்லி சுளீரென்று பிரம்படி விழும். இதனாலேயே கணக்கையும் அந்த வாத்திராரையும் மிகவும் பிடிக்காமல் போய்விட்டது. 'கணக்கில் மட்டும்தான் பூஜ்ஜியம் வாங்க முடியாது. அவ்வளவு எளிதானது' இது அவர் அடிக்கடி சொல்லும் வாக்கியம். ஆனால் இந்த விஷயத்தை அவ்வப்போது சாதித்து அவரை மிகவும் எரிச்சலூட்டுவேன். படிக்கிற மாணவர்கள் அல்ஜீப்ராவை ஏதோ மாற்றான் மனைவியுடன் சல்லாபிப்பது போல் சுவாரஸ்யமாக போட்டுக் கொண்டிருக்க, நான் அவர்களை எரிச்சலோடும் லேசான பிரமிப்போடும் பார்த்துக் கொண்டிருப்பேன். அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.

()

இப்போது கூட யாராவது பேச்சு வாக்கில் "போடுங்களேன். 1 ஸ்கொயர் ·பீட் ஆயிரத்து ஐநூறுன்னா.... 435 ஸ்கொயர் ·பீட் எவ்வளவு ஆகுது? என்னும் போது என் கைகள் தன்னிச்சையாக கால்குலேட்டரை தேடும். அவரோ "இதுக்கு எதுக்குங்க கால்குலேட்டர். நானூறு இன்டு ஆயிரத்து ஐநூறு.. ஆறு லட்சம் ரூபா.. இல்லியா. அப்புறம் 35 இன்டு .. என்னா கரெக்டுதானே... என்று நானும் ஏதோ அந்த கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அவ்வப்போது என்னை சரிபார்த்துக் கொண்டிருக்க, நான் மையமாக சிரித்துக் கொண்டே "ஆமா ஆமா" என்று அவர் சொல்லும் விடையை எந்தவித நிபந்தனையுமின்றி அப்படியே ஒப்புக் கொள்வேன். இப்போது ஆறாங்கிளாஸ் படிக்கும் பக்கத்து வீட்டு பையனின் கணக்குப் புத்தகத்தை சும்மா புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தலை லேசாக 'கிர்..ரென்றது. அப்போதைய கணக்குகளே பரவாயில்லை போல. எண்களும் நானும் ஆடிக் கொண்டிருக்கும் இந்த மல்யுத்தம் எப்போது சமாதானத்திற்கு வருமென்று தெரியவில்லை.

()

என்னுள் இவ்வளவு நினைவலைகளை எழுப்பிய அந்த கவிதையை இப்போது பார்ப்போம்.

என் கணக்குப் புத்தகம்
======================

- சிறீ.நான்.மணிகண்டன்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.

(நன்றி : கணையாழி - செப் 2005)

4 comments:

rajkumar said...

வேண்டுன், வேண்டும்

அடிக்காமல் கணக்கு சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வேண்டும்.

கணிதம் முறையாக கற்பிக்கப் படுவதில்லை என்பதே உணமை.அடிகளுக்கு பயந்து கற்கும் மனப்பான்சிதையும் அவலத்தை இன்றும் பல மாணவர்கள் அனுபவிக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.

அன்புடன்

ராஜ்குமார்

PositiveRAMA said...

//'கணக்குப் பண்ணுவது' என்கிற பரிபாஷையில் அழைக்கப்பட்டதனாலேயே அந்த காரியம் கூட எனக்குப் பிடித்தமில்லாத ஒன்றாக இருந்தது.//

அட..:))

inomeno said...

Nice !

Anonymous said...

///அல்ஜீப்ரா என்கிற விஷயம் அல்கொய்தா போல் என்னை மிரட்டிக் கொண்டிருந்த காலமது.
////

:-))))

Kavithai Super.

- Ganesh