Thursday, September 22, 2005

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

புதிய பார்வை (செப் 15-30) இதழில் வெளியான கட்டுரையை, (மகாகவி பாரதியார் சர்வதேச கருத்தரங்கை முன்னிட்டு அவரின் வாரிசுகள் தொகுத்து வெளியிடப் போகும் கட்டுரைகள் தொடர்பானது) பாரதி அன்பர்களுக்கு உபயோகப்படக்கூடும் என்கிற நோக்கில் இங்கு வெளியிடுகிறேன். (நன்றி: புதிய பார்வை)

புழுதியில் எறியப்பட்ட தெய்வவீணை

மகாகவி பாரதியாருக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் பூக்கடைக்கே விளம்பரம் தேவைப்படும் தமிழ்ச் சூழலில் பாரதியைப் பற்றியும் சற்றே வெடிப்புறப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. புழுதியில் எறியப்பட்ட தெய்வ வீணையாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் பாரதி. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பின்னும் அவரது தகுதிக்குரிய உன்னதத்துடனும், கண்ணியத்துடனும் பாரதி வாசிக்கப்பட்டதுமில்லை, விமர்சிக்கப்பட்டதுமில்லை.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி அதிகமில்லாத வாழ்க்கையும், எதைப் பற்றியும் எல்லையற்ற பணிவுடனும் திறந்த மனத்துடனும், பொறுப்புணர்வுடனும் கூடிய சுதந்திரத்துடனும் விவாதிக்கும் நேர்மையும், உள்ளத்துப் பொறியைத் தொடர்ந்து தூண்டிக் கொண்டேயிருக்கும் உன்மத்தமும், தன்னைப் பலி கொடுத்தும் தன் மதிப்பீடுகளைப் பேணும் நெஞ்சுரமும், பாரதியின் இயல்புகளாகும்.

தமிழ் இலக்கிய உலகில் நிலவும் எல்லா வகைக் குழுச் சண்டைகளுக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கும், தார்மீகத் தாக்குதல்களுக்குப் பின்னாலும், தமிழில் இருபதாம் நூற்றாண்டின் ஆகப்பெரும் கலைஞன் பாரதி என்பதில் இனி கேள்வியில்லை. மரபான கவிதையில் மட்டுமின்றிப் புதுக்கவிதை, சிறுகதை, நாவல், குழந்தை இலக்கியம், கட்டுரை, கருத்துப்படம் மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் முன்னோடி முயற்சிகளாகத் தன் சுவடுகளை அழுத்தமாகப் பதித்துச் சென்ற முழுமையான படைப்பாளி நம் மகாகவி. தொட்ட துறைகளிலெல்லாம் தன் தனி முத்திரையைப் பதித்த இந்த மகத்தான கலைஞனைப் பற்றிய ஆழமான பதிவுகள், நம் ஆய்வுலகில் உண்டா? பாரதியின் வாழ்வையும் எழுத்தையும் உள்ளபடியே புரிந்துகொள்ள முனையும் குறைந்த பட்ச முயற்சிகளேனும் இங்குச் சாத்தியமாகியுள்ளனவா எனில், 'இல்லை' என்றே தலைகுனிய வேணடிய நிலையில் நாம் இருக்கிறோம்.

ஒருபுறத்தில் பார்ப்பன வெறியனாகப் பாரதியைக் கட்டமைக்க சிலர் துணிந்திருக்கிறார்கள் என்றால், மறுபுறத்தில் அதைக் கண்டும் காணாத தந்திரசாலிகளாய்ப் 'பாரதியாருக்குச் சேவை' என்ற பெயரில் பாரதியைப் பலர் விற்பனைப் பொருளாக்கி வருகின்றனர். இத்தகையோர் நிறைவே இங்குண்டு. பாரதியைச் சாமியாக்கி பூசாரிகளாகத் தம்மைத் தாமே நியமித்துக் கொண்ட இப்பாமரர்களின் பாத பூசைகளில், கற்பூர ஆரத்திகளில், பாலாபிஷேகங்களில் பாரதி தரிசனம் பாதை மாறிக் கொண்டிருக்கிறது.

தேசியம், தமிழியம், மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் போன்ற அரசியல் தளங்களிலும், புனைவியல், யதார்த்தவியல், மீ-மெய்யியல், இருத்தலியம், பின்-நவீனத்துவம் போன்ற இலக்கியத் தளங்களிலும் பாரதியைத் தவிர்ததுவிட்டு விவாதித்தல் என்பது இன்று இயலாது. இவை எல்லாவற்றின் தொடக்கப் புள்ளியாகவும், அதே நேரத்தில் மரபின் செழுமையான சாரமாகவும் பாரதி நின்று கொண்டிருக்கிறார்.

சாதி, மதம், இனம், பால், மொழி என்று எல்லாவற்றிற்குள்ளும் ஊடாடியும் கடந்தும் பெருவெளி அனுபவமாக நிலைத்திருக்கும் பாரதியின் பன்முக ஆளுமையைப் பதிவு செய்தல் என்பது, நம் காலத்தின் உடனடித் தேவையாகும். சென்ற நூற்றாண்டிலேயே நாம் செய்திருக்க வேண்டிய காரியம் இது. எனினும், காலம் கடந்தேனும் செயல் புரியும் எண்ணம் இப்போதுதான் தோன்றியிருக்கிறது என்பது காலத்தின் விந்தைகளிலொன்று. இதற்குப் பாரதியின் ரத்தம் எம்முள் ஓடுவதும் ஒரு காரணம்தான். ஆனால் அது மட்டுமே காரணமன்று. ஆயிரம் மைல் பயணத்துக்கான முதல் அடியையும் யாராவது ஒருவர் தொடங்கி வைக்கத்தானே வேண்டியிருக்கிறது?

தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் பரிபூர்ணமாய் நம்பியவர் எம் பாட்டனார் பாரதி. வால்மீகியோடும் கம்பரோடும் ஷேக்ஸ்பியரோடும் டால்ஸ்டாயோடும் விட்மனோடும் தாகூரோடும் ஒப்பிடத்தகுந்த அந்த மேதைக்கு இன்று நாம் செய்ய வேண்டியது என்ன? உலக இலக்கியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்குமான பாரதியின் பங்களிப்பைத் திட்டவட்டமாக மதிப்பிட்டுரைப்பதுதான். இந்தத் திருப்பணியில் தமிழ் எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

எதிர்வரும் பாரதியின் 123-ஆம் பிறந்த நாளில் (டிசம்பர் 11, 2005) சர்வ தேசியக் கருத்தரங்கு ஒன்று நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காகப் பாரதி பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம். தரமான கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவும் எண்ணியுள்ளோம். கட்டுரைகள், ஆறு முதல் பத்துப் பக்கங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படாத கட்டுரைகளைத் திருப்பியனுப்ப இயலாது. கடடுரைகளின் தேர்வைப் பொறுத்த வரையில், தேர்வுக்குழுவினரின் முடிவே இறுதியானது. இது தொடர்பாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ள இயலாது. கட்டுரைகளை மட்டும் அனுப்புங்கள். காசோலைகள் ஏதும் வேண்டாம்.

என் பாட்டியார் மகாகவியின் மனைவி செல்லம்மா பாரதி, தான் எழுதிய பாரதியார் சரித்திரத்தின் முன்னுரையில், நான் (என் கணவருடைய) கதையை எழுதப் போகிறேன் என்று கூறிவிட்டு, தமிழ் மக்களைப் பார்த்து "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்கிறார். பாரதிக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?

- முனைவர் எஸ்.விஜயசாரதி
(மகாகவி பாரதியாரின் பேத்தி)

டாக்டர் மீரா சுந்தரராஜன் டி·பில்
(மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேத்தி)
பேராசிரியை, சட்டத்துறை
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்
வான்கூவா, கனடா.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

முனைவர் எஸ்.விஜயசாரதி
35/2, பழைய எண்.15, மூன்றாவது பிரதான சாலை,
காந்தி நகர், அடையாறு, சென்னை-600 020.
மின் அஞ்சல்: v_bharati@hotmail.com

கட்டுரைகள் கிடைக்க வேண்டிய இறுதிநாள்:

நவம்பர் 11, 2005

3 comments:

பிச்சைப்பாத்திரம் said...

மேற்கண்ட கட்டுரையை பாரதி அபிமானிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் என்கிற நோக்கில்தான் வெளியிட்டிருக்கிறேன். அதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் பாரதி பொதுச் சொத்தாகி, அவரது படைப்புகள் நாட்டுடமையாகி பல்லாயிரக் கணக்கானோர் அவரை தம் நெஞ்சில் தாங்கிக் கொண்டிருப்பதோடு, பாரதியைப் பற்றி பல்வேறு கணக்கான நூல்கள் பல்வேறு நோக்கில், தலைப்புகளில், ஆய்வுகளில் வெளியாகியிருக்க, அவரின் வாரிசுகள் அவற்றையெல்லாம் புறங்கையால் ஒதுக்கிவிட்டு "இந்த மகத்தான கலைஞனைப் பற்றிய ஆழமான பதிவுகள், நம் ஆய்வுலகில் உண்டா?" என்று கேள்வி எழுப்புவதும், இனிமேல்தான் உருப்படியான ஆய்வுகள் நிகழப் போகின்றன என்பது மாதிரியான தொனியில் எழுதுவதும் நெருடலையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

பாரதி எந்த ஒரு தனிமனிதரோ அல்லது குழுவோ சொந்தங் கொண்டாட முடியாது. அவன் உலக தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானவன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

They have perhaps discovered him now. But they have no respect for others who have worked hard to make his writings available or have done excellent research on him. It is amusing that those who complained against nationalisation of his works are now making all sorts of allegations against others. They want to put him in a
pedastal and worship him and don the role of priests. Bharathi does not need these self stlyed self appointed priests.Nor do we.

இளங்கோ-டிசே said...

சுரேஸ் கண்ணன், 'புதியபார்வை 'கட்டுரையை இங்கே பதிந்தமைக்கு நன்றி. காலச்சுவடு போன்ற இதழ்களை விட, 'புதிய பார்வை', 'தீராநதி' போன்ற இடைநடு இதழ்கள் நல்ல தரத்துடன் இப்போது வருவதாய் நினைக்கின்றேன். 'புதியபார்வை' இதழ்கள் இங்கே புத்தகக்கடைக்கு மாதம் பிந்தி வருவதால் உடனே உடனே வாசிக்க முடிவதில்லை. இரவியும், சுரேஷ் கண்ணனும் கூறிய மாதிரி, இதுவரை பாரதி குறித்த நேர்மையான ஆய்வுகள் நடத்தப்படவில்ல என்று அவரது வாரிசுகள் கூறுவது நெருடலாய்த்தானிருக்கிறது. சிலவருடங்களுக்கு முன் கூட பாரதியார் பற்றிய விவாதங்களும் புத்தகங்களும் தீவிரமாய் நடந்ததை அறிந்திருக்கின்றேன் (மதிவண்ணனோ அல்லது மதிவாணனோ எழுதிய புத்தகத்தை முன்வைத்து...). ஏன் இந்த மாத தீராநதியில் கூட பாரதியின் இடத்தை மறுதலிக்காது, பாரதி கண்ட புதுமைப்பெண் என்று நல்லதொரு மறுவாசிப்பை அ.மார்க்ஸ் செய்துள்ளார். அந்தக் கட்டுரையில் சில் முரண்பாடுகள் எனக்கு இருந்தாலும், பாரதியை இன்றைய காலத்துரியவராக மாற்றும்போது பாரதியின் புதுமைப்பெண்ணும் பலவிடங்களில் பலவீனமாகவே இருக்கிறாள் என்பது புரியவரும். இத்தகைய நோக்கிலேயே பல பெண்ணியவாதிகளும் கருதுக்களை முன் வைத்துவருகின்றார்கள் என்பதை வாசித்திருக்கின்றேன்.