Saturday, October 01, 2005

மேல்தட்டு மக்களின் கீழ்த்தர உலகம்

PAGE 3 படத்தைப் பற்றி உருப்படாதது நாராயணன் பதிவில் பார்த்ததிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் மேலிட்டது. தியேட்டரில் பார்க்கும் முன்னரே படம் வெளியேறி விட்டது. விசிடிக்கள் சல்லிசாக கிடைக்கும் பர்மா பஜாரில் விசாரித்த போது டிவிடிதான் கிடைக்கும் என்று விட்டார்கள். நான் இன்னும் கற்கால மனிதன் போல் விசிடி பிளேயர் மாத்திரமே வைத்திருப்பதால் இதைப் பற்றி மறந்தே போனேன். இந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது படத்தைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருந்தது.

நேற்று காலை டெக்கான் கிரானிக்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது சஹாரா தொலைக்காட்சியில் இந்தப் படம் திரையிடப்படுவதைப் பற்றிய அறிவிப்பினை பார்த்தவுடனே எப்படியும் பா¡க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். மாலை ஆறு மணி ஆனவுடனே இருக்கிற வேலைகளை கணினி திரையின் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

()

Image hosted by Photobucket.com

'சாந்தினிபார்' இயக்கிய மதுர் பண்டார்க்கரின் படமிது. மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பரங்களையும், அலட்டல்களையும், பொய்ப்புன்னகைகளையும், துரோகங்களையும், வக்கிரங்களையும் இந்தப்படம் எந்தவித ஆரவாரமுமின்றி இயல்பாக சொல்கிறது. வழக்கமான தமிழ்ப்படங்களில் பணக்காரர்களை செயற்கையான முறையில் வில்லனாக முன்னிறுத்தி அதன் மூலம் நடுத்தர, கீழ்த்தட்டு மக்களின் பொறாமைகளுக்கு வடிகால் ஏற்படுத்தித்தரும் அபத்தம் இதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
படம் பத்திரிகையாளர் மாதுரியின் (கொன்கனா சென் சர்மா - Mrs &Mr. Iyer ஞாபகமிருக்கிறதா?) பார்வையில் சொல்லப்படுகிறது. மாதுரி ஒரு வணிகப் பத்திரிகையின் மூன்றாம் பக்கத்தை நிரப்பும் நிருபர். பார்ட்டிக்களுக்கு சென்று நிகழ்வுகளையும், கிசுகிசுக்களையும், பெரியமனிதர்களின் சாகசங்களையும் எழுதும் வேலை. இவரின் அறைத் தோழிகளில் பியர்ல் (சந்தியா மிர்துல்) பணமே குறிக்கோளாக வயதானவர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இன்னொரு தோழி காயத்ரி (டாரா சர்மா) திரைப்பட நடிகையாகும் ஆசையில் நடிகரிடம் பழகி கர்ப்பமாகி தற்கொலைக்கு முயல்கிறாள். இந்த நிகழ்வுகளும் மேல்தட்டு வர்க்கத்தினரின் செயற்கையான புன்னகைகளும் அவர்களின் அடிமனது ரகசியங்களும் மாதுரியை மிகவும் பாதிக்க கிசுகிசு பக்கத்திலிருந்து தப்பி குற்றச் செய்திகளை எழுதும் வினாயக் மானேவுடன் (அடுல் குல்கர்னி) இணைகிறாள்.

பெரிய பிசினஸ் மாக்னெட் ஒருவன் அனாதைச் சிறுவர்களை கடத்தி அவர்களுடன் வக்கிர உறவு கொள்வதை கண்டுபிடித்து காவல் துறையின் உதவியுடன் அவர்களை காப்பாற்றி இந்தச் செய்தியை பத்திரிகை ஆசிரியரிடம் (பொமன் இரானி) ஒப்படைக்கிறாள். பத்திரிகை முதலாளியோ இதை பிரசுரிக்க மறுத்து மாதுரியை வேலையை விட்டு துரத்துகிறார். மாதுரியின் காதலன் ஒரிணப் புணர்ச்சியில் ஈடுபடுவதை தற்செயலாக பார்த்துவிட்டு மிகவும் அதிர்ந்து போகிறாள். பின்பு வேறுவழியின்றி வேறொரு பத்திரிகையில் பழைய வேலையான மூன்றாம் பக்கத்தை நிரப்பும் பணியில் ஈடுபடுகிறாள். அந்தப் பார்ட்டியில், முன்பு ஒருவரையருவர் வெறுத்தவர்கள் எல்லோரும் நாடகத்தன்மையோடு அளவாளவிக் கொண்டிருக்கும் அந்த செயற்கை உலகத்தை அவள் வியப்பதோடு படம் நிறைவடைகிறது.

()

நான் சமீபத்தில் பார்த்த சிறந்த படமாக இதைச் சொல்வேன். இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாக மதிக்கப்படும் பத்திரிகை உலகம் எப்படி பணமுதலைகளால் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்தப்படம் சுட்டிக் காட்டுகிறது. சமூகத்தின் எந்த ஒரு அநீதியான நிகழ்வும் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் வணிக ஈட்டல்களுக்கு எந்தவித இடர்ப்பாடும் ஏற்படுத்தாது என்று நிச்சயமாக தெரிந்த பிறகே வெளியாகிறது. ஆக.. அப்பாவிகளும், பிக்பாக்கெட் கேஸ்களும், கூலிப்படையினரும் மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்தப்பட அவர்களின் பின்நின்று இயக்கும் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் சட்டத்தின் செளகரியமாக நிழலில் ஒளிந்து கொள்கிறார்கள்.
மாதுரி கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் காணப்படும் மனிதர்களை நாம் எல்லா நட்சத்திர ஓட்டல் பார்ட்டிகளிலும் பார்க்கலாம். எல்லோரிடமும் வலிந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் நபர், பத்திரிகையில் தன்னைப் பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் வேண்டும் என எதிர்பார்க்கும் தொழிலதிபர், பேரருக்கு லஞ்சம் கொடுக்கும் எம்.பி., இந்தப் பா¡ட்டியை விட என்னுடைய பார்ட்டி ஆடம்பரமாக இருந்தது என்று சுயதம்பட்டமடித்துக் கொள்ளும் பணக்காரர், பார்ட்டிக்கு பெருமை சேர்க்க வரவழைக்கப்படும் நடிக நடிகையர், அவர்களைச் சுற்றி மின்னலடிக்கும் பிளாஷ் லைட்டுகள், சிகரெட் பிடிக்கும் ஆடம்பர பெண்களின் வம்புகள், அங்கலாய்ப்புகள், இவர்களின் கார் டிரைவர்களின் கிண்டலான கலந்துரையாடல்கள் என்று கலந்துகட்டி எல்லாப் பாத்திரங்களினாலும் இந்தப்படம் சிறப்பாக சொல்லப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையிலிருந்து சற்று மாறுதலாக தன் வயது வந்த மகளைப் பற்றி கவலைப்படுகிறார் தொழிலதிபரின் மனைவி (சோனி ரஸ்டான்). இவர் அனாதை சிறுவர்களை வைத்து ஆசிரமம் ஒன்றை நடத்தி அதில் மனநிறைவு காண்கிறார். இந்தச் சிறுவர்களை கடத்தி தன் கணவர் பாலுறவுக்காக உபயோகப்படுத்துவதை அறிய வந்ததும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார். (இவரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் சாவு வீட்டில் அவருடைய நண்பர்களும் உறவினர்களும் நடத்தும் செயற்கை சோக நாடக காட்சிகள் மிக சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது)

கொன்கனா சென் சர்மாவின் அந்த மிகப் பெரிய கண்களே சிறப்பாக நடித்து அவரின் வேலையை சுலபமாக்கி விடுகிறது. சக பத்திரிகையாளரான அடுல் குல்கர்னிக்கு பெரிய வாய்ப்புகள் ஏதுமில்லையெனினும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராக வரும் பொமன் இரானி, மாதுரி சிரமப்பட்டு எடுத்துவந்திருந்து சிறுவர் பாலுறவு அநியாயத்தை பிரசுரிக்க முடியாத கையாலாகததனத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல் துறை இன்ஸ்பெக்டராக வரும் உபேந்திரா லிமாயின் நடிப்பு குறிப்பிடத்தக்கது. (அதிலும் அந்த என்கவுன்டர் காட்சி.....)

இயக்குநர் எழுதியிருக்கும் வசனங்கள் கூர்மையான அங்கதத்துடன் இருக்கிறது. எனக்குத் தெரிந்த அறைகுறை இந்தியை வைத்தே இந்தப்படத்தை ரசிக்க முடிந்தது.

(உதா: போதை உபயோகிப்பாளர்களில் கைது செய்யப்படும் பணக்கார இளைஞன் இன்ஸ்பெக்டரை நோக்கி கேட்கிறான்: "ஏய்.... எங்கப்பா யாருன்னு தெரியுமா?"

இன்ஸ்பெக்டரின் பதில்: "உங்கப்பன் யாருன்னு உனக்கே தெரியாதா?"

()

இலை மறை காய் மறையான ஓரிணப்புணர்ச்சி காட்சிகள், முத்தக்காட்சிகள், சிறுவர்களுடனான பாலுறவுக் காட்சிகள் சம்பந்தப்பட்டிருந்தாலும் ஆபாசம் எந்தவிதத்திலும் தலைதூக்காமல் காட்சிகளை அமைத்திருப்பது (அந்த பா¡ட்டியின் நடனக்காட்சி தவிர) இயக்குநரின் கலை நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. ஆனால் இம்மாதிரியான ஆச்சாரத்திற்கு விரோதமான காட்சிகள் அடங்கிய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவின் கலாச்சார பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்?

இருவேளை ரொட்டிக்காக நாள் முழுவதும் உழைப்பவனின் உலகத்திற்கு அருகே விலைமாதுக்காக ஒருநாளைக்கு ஒரு லட்சம் கூட செலவழிக்கும் செல்வந்தர்களின் கொழுப்பெடுத்த உலகமும் இயங்குகிறது. இந்த பொருளாதார, சமூக முரண்பாடு உலகத்திற்கே பொதுதான் போலும்.

9 comments:

ilavanji said...
This comment has been removed by a blog administrator.
ilavanji said...

நல்ல பதிவு சுரேஷ்...

பிச்சைப்பாத்திரம் said...

இரண்டு முறை பாராட்டிய தாராள மனது இளவஞ்சியே, நன்றி. :-)

அதே சஹாரா தொலைக்காட்சியில் இன்றிரவு 8.30 மணிக்கு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நானா படேகர் நடித்த Ap tak chappan என்கிற அருமையான க்ரைம் திரில்லரை காணத்தவறாதீர்கள்.

Raj Chandra said...

It is heartening to see the parallel cinema in Hindi is coming back after 80s.

Perhaps, our(tamil) "Cultural police" has to keep their mouth shut because it is in Hindi and only their grand daughters can understand that language;).

For the Hindi "cultural police", i think they have better jobs to do.

பிரதீப் said...

சுரேஷ்,

உங்களை எந்த அளவுக்கு பாதித்ததோ அதே அளவுக்கு என்னையும் பாதித்தது. நான் ஏற்கனவே பார்த்து விட்டாலும், மறுபடியும் ரசித்துப் பார்த்தேன்!

ஆமா, படம் பார்க்கும்போதே கதாபாத்திரங்களின் பெயர்களை இந்தப் பதிவிற்காக குறித்துக் கொள்வீர்களா அல்லது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா?

Anonymous said...

இருவேளை ரொட்டிக்காக நாள் முழுவதும் உழைப்பவனின் உலகத்திற்கு அருகே விலைமாதுக்காக ஒருநாளைக்கு ஒரு லட்சம் கூட செலவழிக்கும் செல்வந்தர்களின் கொழுப்பெடுத்த உலகமும் இயங்குகிறது. இந்த பொருளாதார, சமூக முரண்பாடு உலகத்திற்கே பொதுதான் போலும்

avanavan kudipatharku thanni illadhapodhu neechal kulathil lorry thaneer nirappi kulikira samuga needhiyalargalai pathal nondhu poi viduveer endru ninaikiren.

பிச்சைப்பாத்திரம் said...

இல்லை பிரதீப். படத்தைப் பார்த்து விட்ட பிறகு எழுதுவதற்காக தகவல்களை தேடு இயந்திரத்தின் மூலம் சேகரித்துக் கொண்டேன்.

பிச்சைப்பாத்திரம் said...

ஆம். அனானிமஸ். இவ்வாறான ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கும் போதுதான் கம்யூனிஸம் என்கிற விஷயத்தின் -அது மனித ஆதார குணங்களுக்கு ஒவ்வாததாக இருந்தாலும் - அருமை புரிகிறது.

Anonymous said...

Nice Review.

- Bala