Friday, July 10, 2020

Sand Castle (2017) - ‘போரும் நீரும்'





இரு நாடுகளுக்கிடையே நிகழும் போரில் சராசரி ஆசாமிகள் யூகிக்கவே முடியாத நிறைய நடைமுறை சங்கடங்களும் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அப்படியொரு வித்தியாசமான பக்கத்தைப் பற்றி பேசும் திரைப்படம் இது. தண்ணீர் லாரியில் ஏறி நின்று நீர் விநியோகம் செய்யும் ஆசாமி ஒரு ராணுவ வீரனாக இருந்தால் எப்படியிருக்கும்?

***

அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்திருந்த சமயம். ஆண்டு 2003. அமெரிக்க இளைஞனான ஆக்கர் ராணுவத்தில் சேர்கிறான். வன்முறை என்றாலே அவனுக்கு பயம்.  தனது கல்விச் செலவிற்காக ராணுவத்தில் சேர வேண்டிய நிலைமை. தன்னுடைய கையை தானே சேதப்படுத்திக் கொண்டு சில காலத்திற்கு போர் முனைக்கு போகாமல் டபாய்க்கிறான். ஆனால் நெடுங்காலம் அப்படிச் செய்ய முடிவதில்லை. ஒரு கட்டத்தில் எதிர் தரப்பின் உக்கிரமான சண்டையை எதிர்கொள்ள நேர்கிறது.

சக வீரர்களின் கிண்டலுக்கு ஆளானாலும் சிறிது சிறிதாக தேறுகிறான். என்னவொன்று, ஒவ்வொரு நொடியும் மரணத்திற்கு இடையில் வாழ வேண்டியிருக்கிறது. தீவிரவாதிகளின் தரப்பு சமயம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களைத் தாக்குகிறார்கள். இவர்களும் பதிலடி தருகிறார்கள்.

அவர்கள் இருக்கும் கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. மக்களின் நல்லெண்ணத்தைப்  பெறுவதற்காக அமெரிக்க ராணுவம் கிராமத்து மக்களுக்கு ரேஷன் முறையில் தண்ணீர் தருகிறது. முன்னர் நிகழ்ந்த  சண்டையில் அங்கிருந்த நீர் விநியோகிப்பு நிலையம் சேதம் அடைந்து விட்டது. அதைச் சரி செய்வதற்கு ஆட்கள் தேவை. தண்ணீர் பிடிக்க வரும் உள்ளூர் ஆசாமிகளிடம் "வேலைக்கு வந்தால் சம்பளம் கிடைக்கும்' என்கிறார்கள்.

ஆனால் ஒருவரும் முன்வருவதில்லை. காரணம் உயிர் பயம். ராணுவத்திற்கு உதவி செய்தால் உள்ளூர் ஆயுத கோஷ்டி நிச்சயம் அவர்களைக் கொன்று விடும். "உங்க ஊருக்கு தண்ணி வருவதற்குதானே பாடுபடுகிறோம். ஏன் உதவி செய்ய மாட்டேன்கிறீர்கள்?" என்று அமெரிக்க ராணுவம் கெஞ்சிப் பார்த்தாலும் பயன் ஏதுமில்லை.

உள்ளூர் நாட்டாமை ஒருவரை சந்தி்த்து நிலைமையை சொல்கிறார்கள். "ஆட்களை ஏற்பாடு செய்யுங்களேன். நீர் கிடைக்கும்". ஆனால் அவரும் உதட்டைப் பிதுக்குகிறார். பயங்கரவாதிகளை காரணம் காட்டுகிறார்.

வேறு வழியில்லாமல் அமெரிக்க ராணுவ வீரர்களே இறங்கி வேலை செய்கிறார்கள். ஆக்கரும் அந்தக் குழுவில் இருக்கிறான். இதன் மூலம் அவனுக்கு கூடுதலான பணம் கிடைக்கும். அவர்கள் சென்று வரும் போதெல்லாம் எங்கிருந்தோ துப்பாக்கிகள் வெடிக்கின்றன.

ஒரு நடுத்தர வயது ஆசாமி ஆக்கரை வந்து சந்திக்கிறார். 'நான் அருகிலிருக்கும் பள்ளியின் ஆசிரியர். பிள்ளைகள் நீர் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.. உதவுங்கள்" என்கிறார். 'பார்க்கலாம்' என்கிறான் ஆக்கர். மறுநாள் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டையில் ஆக்கரின் உயர்அதிகாரி இறந்து போகிறார். ஆக்கருக்கு பயம் வருகிறது.

பள்ளி ஆசிரியர் நீருக்காக மறுநாள் வர ஆக்கர் எரிச்சலடைகிறான். "எங்களுக்கு நீர் தந்தால் உங்கள் வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்கிறேன்" என்கிறார் அந்த ஆசிரியர். இந்த யோசனையை தங்களின் உயர்அதிகாரிகளுக்கு சொல்கிறான் ஆக்கர். வேறு வழியில்லாததால் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆசிரியரின் தம்பி பொறியியல் படித்தவர் என்பதால் வேலை ஜரூராக நடக்கிறது.

மறுநாள் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆசிரியர் உயிரோடு கொளுத்தப்பட்டு பள்ளி வாசலில் தொங்க விடப்பட்டிருக்கிறார். அவர்களின் குடும்பம் அழுகிறது. ஆசிரியரின் தம்பி கோபமுடன் ராணுவ வீரர்களிடம் வருகிறான். 'அவர்கள் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். காட்டித் தருகிறேன். அவர்களைக் கொன்றொழியுங்கள்' என்கிறான்.


தாக்குதல் நடத்துபவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அதுவரை கண்டுபிடிக்க முடியாத அமெரிக்க ராணுவம் உற்சாகமடைகிறது. ஆயுதச் சனியன்களுடன் ஆரவாரமாக கிளம்புகிறார்கள். இருதரப்பிலும் கடுமையான சண்டை. சிலர் இறக்கிறார்கள். சிலர் பிழைக்கிறார்கள். ஒரு வழியாக சண்டை முடிந்து எதிரிகள் ஒடுக்கப்பட்டு வேலை திரும்பவும் நடக்கிறது.

ஆனால் அங்கேயும் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கிறது. மறுபடியும் உயிர்பலி.

பணத்திற்காகவும் உயிர் பயத்துடனும் ராணுவத்தில் சேர்ந்த ஆக்கர் இப்போது நிறைய விஷயங்களை அறிந்து விட்டான். சில மரணங்களை கண்ணெதிரேயே பார்த்து விட்டான். அவனுடைய பணி பாராட்டப்படுகிறது. ஆக்கரின் ராணுவ சேவை முடிந்து அவன் ஊர் திரும்புவதுடன் படம் நிறைகிறது.

ஒரு போருக்கு பின்னால் சிறிது சிறிதாக எத்தனை சிரமங்கள் இருக்கின்றன என்பதை இந்தப் படம் வித்தியாசமாக சித்தரிக்கிறது. ஈராக் போரில் பங்குபெற்ற ஒரு ராணுவ வீரரின் உண்மையான அனுபவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Fernando Coimbra.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: