Thursday, July 09, 2020

Gold (2016) - ‘தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே'





மனித குலத்தின் இதுவரையான பல சிக்கல்களுக்கும் சண்டைகளுக்கும் மூன்று பிரதானமான காரணங்கள் அடிப்படையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை. தங்கம் என்கிற உலோகத்தை மூர்க்கமாக தேடிச் செல்லும் ஒருவனின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது.

நம்ம ஊர் பிரகாஷ்ராஜைப் போல Matthew McConaughey ஒரு திறமையான அமெரிக்க நடிகர். அவருடைய அபாரமான ரெஸ்ட்லெஸ் நடிப்பிற்காகவே இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். 1993-ல் கனடாவில் நிகழ்ந்த சுரங்கத்துறை ஊழல் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.


***

கென்னி வெல்ஸ் சுரங்கத் தொழிலில் உள்ளவன். உலகமெங்கிலும் தங்கத்தை கண்டுபிடித்து வேட்டையாடும் தொழில். அவனது தந்தை இந்தத் துறையில் சிறந்து விளங்கியவர். அந்த ரத்தம் அவனுக்குள்ளும் ஓடுவதால் தங்கத்தை தேடிக் கொண்டேயிருக்கிறான். வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மனைவிக்கு தங்க கைகடிகாரம் பரிசளிக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு வீழ்ச்சி ஏற்படுகிறது. அவனுடைய தொழிலின் மதிப்பு சடாரேன கீழே இறங்குகிறது.  சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள்.

நொந்து போய் வீட்டுக்குள் முடங்கினாலும் அவனுக்குள் இருக்கும் வேகம் அமைதியாக அமரச் செய்வதில்லை. மனைவிக்கு பரிசளித்த வாட்ச்சை திருடி அடமானம் வைத்து இந்தோனேசியாவிற்கு பறக்கிறான். அங்கு புவியியல் வல்லுநராக இருக்கும் மைக்கேல் அகாஸ்டா என்பவனை சந்தித்து தங்கக் கனவைப் பற்றி சொல்கிறான். பூமிக்கடியில் இருக்கும் தங்கம் குறித்த ஞானம் அகாஸ்டாவிற்கு உள்ளது என்பது கென்னிக்கு தெரியும். முதலில் தயங்கும் அகாஸ்டா பின்பு சம்மதிக்கிறான். 50: 50 பங்கு என்கிற அளவில் கூட்டாளியாகிறார்கள்.

அகாஸ்டா சுட்டிக் காட்டும் நிலத்தை வாங்குகிறான் கென்னி.  நண்பர்களிடமிருந்து கடன் முதற்கொண்டு தன்னுடைய அத்தனை வருட சேமிப்பையும் முதலீடாக  இதில் கொட்டுகிறான். ஜெயித்தால் ஜாக்பாட். தோற்று விட்டால்.. அவ்வளவுதான். ஓ.. நோ.. கென்னியால் அதைப் பற்றி சிந்திக்க கூட முடியவில்லை.

அங்குள்ள சூழல் காரணமாக மலேரியா நோய் தாக்கி படுத்து விடுகிறான் கென்னி. ஒரு பக்கம் தொழிலாளர் வேலையைப் புறக்கணிக்கிறார்கள். நரகம் என்றால் என்னவென்று உணர்கிறான் கென்னி.. தன்னிடமிருக்கும் கடைசி நாணயத்தையும் அகாஸ்டோவிடம் தருகிறான். "கை விட்டுடாதே நண்பா"

***
அகாஸ்டோ ஒரு நாள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வருகிறான். "என்னய்யா ஆச்சு?" என்று பதட்டமடைகிறான் கென்னி. 'நம்ம நிலத்து மண்ணை சோதனைக்கு அனுப்பிச்சேன். தங்கம் இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லிட்டாங்க" கென்னி மனமுடைந்து போகும் சமயத்தில் "டேய் விளையாடினேன்டா.. ஜாக்பாட் நெஜம்மாயிடுச்சு. நம்ம நிலத்துல தங்கம் உறுதியா கிடைக்கும்" என்று அகாஸ்டோ சொல்ல உற்சாகத்தின் எல்லைக்கே செல்கிறான் கென்னி. அவனது நடை, உடையே மாறி விடுகிறது. நிறுவனத்தின் பங்குச் சந்தை விலை விண்ணுக்குப் பறக்கிறது.


ஊரெங்கும் கென்னியின் கண்டுபிடிப்பு பற்றிதான் பேச்சாக இருக்கிறது. இந்தத் தொழிலில் உள்ள ஒரு நிறுவனம் கென்னியிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஆனால் அந்த பேரம் படிவதில்லை. 'என்னய்யா.. விளையாடுகிறீர்களா, நானும் என் தோஸ்த்தும் இதுக்கு எத்தனை கஷ்டப்பட்டிருக்கோம்" என்று கென்னி  கொதிப்புடன் வெளியேறுகிறான். 'அப்படியா தம்பி' என்று அந்த நிறுவனம் கள்ளத்தனமாக புன்னகைத்து விட்டு இந்தோனேசியா அதிகார வட்டம் மூலம் கென்னியின் நிலத்தை கைப்பற்ற முனைகிறது. காவல்துறையினர் துப்பாக்கியுடன் வந்து  கென்னியின் நிலத்தில் உள்ளவர்களை துரத்துகிறார்கள்.

மீண்டும் ஒரு வீழ்ச்சி. அகாஸ்டோதான் இந்த முறையும் ஆதரவாக நிற்கிறான். அவன் தரும் ஒரு யோசனையின் படி அந்த நாட்டின் அதிபருடைய இளைய மகனை வளைத்துப் போடுகிறார்கள். அவனுக்கும் பங்கு தருவதாக ஆசை காட்டுகிறார்கள். எனவே நிலைமை மீண்டும் தலைகீழாகிறது.

கென்னி மறுபடியும் ராஜாவாகிறான். 'இந்தத் தெரு என்ன விலை-ன்னு கேளு" என்று  ஆர்ப்பாட்டம் செய்கிறான். "இவங்க எல்லாம் உன்னை சாப்பிட்டுவாங்க. சொன்னாக் கேளு" என்று எச்சரிக்கும் மனைவியிடம் கென்னி சண்டை போட அவள் கோபித்துக் கொண்டு வெளியேறுகிறாள்.

***

'சிறந்த தங்க கண்டுபிடிப்பாளர் விருது' கென்னிக்கு கிடைக்கிறது. 'அப்பா பெயரைக் காப்பாத்திட்டேப்பா' என்று ஒரு கிழவர் நெகிழ்ந்து போகிறார். விருது வழங்கும் கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசுகிறான் கென்னி. தன் நண்பனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொல்கிறான். ஆனால் அகாஸ்டோ கூட்டத்திலிருந்து மெளனமாக வெளியேறுகிறான்.

மறுநாளைய பொழுது கென்னிக்கு மீண்டும் அதிர்ச்சிகரமாக விடிகிறது. பரமபத ஆட்டம். அவனுடைய நிறுவனத்தின் பங்குகளை வாங்கியவர்கள் கென்னியின் முகத்திலேயே குத்துகிறார்கள். "என்னங்கடா ஆச்சு?" என்று பதறுகிறான் கென்னி.

கென்னியின் நிலத்தில் தங்கம் இருக்கிறது என்கிற  கண்டுபிடிப்பு  மிகப்பெரிய மோசடி. சோதனைக்காக அனுப்பப்பட்டது மட்டுமே தங்கம். மற்றபடி அவனுடைய நிலத்தில் இருப்பது வெறும் மண்தான். ஊரே அவனைத் தூற்றுகிறது. இதற்கிடையில் அகாஸ்டா காணாமற் போகிறான். முதுகில் குத்தப்பட்ட துரோகத்தின் வலியை கடுமையாக உணர்கிறான் கென்னி. கவனக்குறைவாக இருந்ததற்காக அவன் தந்த விலை.

FBI இந்த மோசடியைப் பற்றி விசாரிக்கிறது. கென்னி எல்லாவற்றையும் சொல்கிறான். அவன் மீது தவறில்லை என காவல்துறை விடுவிக்கிறது. என்றாலும் சந்தேகத்தின் நிழல் அவன் மீது இருக்கும்.

இதற்கிடையில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் கிடைக்கிறது. அகஸ்டோவின் பிணம் அழுகிய நிலையில் கிடைக்கிறது. இந்தோனேசியா அரசு ரகசியமாக செய்த மரணம்.


***

தங்கம் தேடும் சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழந்த கென்னி தன் மனைவியைத் தேடிப் போகிறான். அவனுக்கு வந்த கடிதங்கள் சிலவற்றைக் காட்டுகிறாள் அவள். அதில் ஒன்றைப் பிரித்துப் பார்க்கிறான். நண்பன் அகஸ்டோ இவனுக்கு அனுப்பியிருக்கும் ஐம்பது சதவீதத்திற்கான காசோலை உள்ளே இருக்கிறது.

கென்னியை FBI விசாரிக்கும் போது அவன் சொல்லும் ஒரு வார்த்தைதான் இந்தப் படத்தின் ஆதாரம். "நான் இவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு பணம் கூட முக்கிய காரணமில்லை" 'பின்னே எது?'

'தங்கம்'.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: