Saturday, January 30, 2010

அக்ரஹாரத்தில் கழுதை


என்னுடைய பதின்மத்தில் வெங்கட்சாமிநாதனின் ஏதோவொரு கட்டுரையில் இத்திரைப்படத்தைப் பற்றி வாசித்த ஞாபகம். பின்புதான் ஜான் ஆப்ரஹாம் என்கிற கலகக்கார படைப்பாளியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிலிருந்து எனக்கும் ஏழு கழுதை வயதாகும் வரை இத் திரைப்படத்தைப் பார்த்துவிட பல வருடங்களாக முயன்று கொண்டிருக்கிறேன்.  காணக் கிடைக்கவில்லை. 'குறுந்தகடு கிடைப்பதும் மிக அரிது' என்கிற பதிலே நண்பர்கள் வட்டாரத்திலிருந்து கிடைத்தது.

இன்று காலை 'THE HINDU' நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும்  போது சந்தோஷ அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டேன். ஆம். இன்றிரவு கழுதை தானாகவே வீடு தேடி வரப்போகிறது.

()

லோக்சபா சானலில் இன்றிரவு (30.01.2010) 09.00 மணிக்கு (இந்திய நேரம்) ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ ஒளிபரப்பாகவுள்ளது.

ஒருவேளை இன்றிரவு காணத் தவறவிட்டாலும் பரவாயில்லை. மறுநாள் (31.01.2010) (ஞாயிறு) மதியம் 02.00 மணிக்கு இதே படம் மறுஒளிபரப்பாகும். ஆங்கில துணையெழுத்துக்களுடன் விளம்பர இடையூறுகள் இல்லாமல் பார்க்க முடியும் என்பது ஒரு சிறப்பு. எழுத்தாளர் வெங்கட்சாமிநாதன் ஜானுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.

மிக அரிதாக காணக்கிடைக்கும் திரைப்படம். எனவே பார்க்கத் தவறாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

படத்தைப் பற்றிய விவரம்:

Agraharathil Kazhuthai
Director : John Abraham
1977 / 90 miniutes / Tamil / English Subtitles
Cast: M.B.Sreenivasan, Swati, Sreelalitha & others
National Award for the Best Feature Film, 1978
Uninterrupted viewing
Film Courtesy: NFDC

(Source: The Hindu, Chennai Edition dated 30.01.2010
) )


தொடர்புள்ள பதிவுகள்:

நாகார்ஜுனன் பதிவு: நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை

படம் குறித்து பிரகாஷ் எழுதிய பதிவு

ஜான் ஆப்ரஹாம்  குறித்த ஜெயமோகன் பதிவு

சுகுணா திவாகர் பதிவு

மாரி மகேந்திரன் பதிவு

suresh kannan

Thursday, January 28, 2010

மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்

உறுபசி (நாவல்) - எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பகம். ரூ.75/- பக் 135  



மத்திம வயதிலிருக்கும் எந்தவொரு மனிதனும் தான் கடந்து வந்த வாழ்க்கையின் நிறைவான, சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களை பின்னோக்குகையில் அது பெரும்பாலும் அவனுடைய கல்லூரிக்காலமாகத்தானிருக்கும். இந்த சமயத்தில் ஏற்படுகிற நட்பு பெரும்பாலும் கல்லூரி வாசலை தாண்டினவுடனே அற்பாயுளில் மடிந்துவிடும் நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பை தொடரும் வகையில் சூழலை ஏற்படுத்திக் கொள்பவர்கள் பாக்கியவான்கள். அலுவலக இயந்திர வாழ்க்கையின் அலுப்பிலிருந்தும் குடும்பச் சிக்கல்களின் சலிப்பிலிருந்தும் விலகி எப்போதாவது கூடி தங்களைது கல்லூரி நினைவுகளை குடியின் துணையுடன் சிரிப்பும் கும்மாளமுமாக மீட்டெடுத்துக் கொள்ளும் அந்த கணங்கள் அற்புதமானவை. விதவிதமான குணச்சித்திரங்கள் நட்பு என்கிற ஒரே புள்ளியில் தங்களின் தற்போதைய அந்தஸ்தை மறந்து ஒரே சபையில் அமர்வது அற்புதமானவை. இந்த நிலையில் சக நண்பனின் மரணம் ஏற்படுத்தும் வலியும் துயரமும் வீர்யமிக்கவை.

'சம்பத் இறந்து போன இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் மூவரும் எங்காவது பரிச்சயமே இல்லாத ஒரு இடத்திற்குப் போய்விடலாம் என்று கானல் காட்டின் பெரும்பாதையில் வந்து இறங்கியிருந்தோம் ' என்று ஒரு சிறுகதையின் ஆரம்பத்தைப் போல் திடுக்கென்று சம்பத்தின் மரணத்தைப் பற்றின ஆரம்பத்தோடு தொடங்குகின்ற இந்த நாவல், சம்பத் என்கிற மனிதனின் ஆளுமை மற்றும் அவனுடைய மரணத்தைப் பற்றின வாசனைகளால் நிறைந்திருக்கிறது. அழகர், சம்பத், ராமதுரை, மாரியப்பன் என்கிற நால்வர் தமிழ் இலக்கியம் படிப்பதின் மூலம் நண்பர்களானவர்கள். இவர்களில் சம்பத் என்பவனின் மரணத்தைத் தொடர்ந்து அவனைப் பற்றிய நினைவுகள் அவனுடைய நண்பர்கள், காதலி, மனைவி போன்றவர்களால் இந்த நாவலில் விரிகிறது. சம்பத்தின் மரணத்தைத் தொடர்ந்து நடக்கிற மரண ஏற்பாட்டு நிகழ்வுகளும் இந்த நினைவுகளின் ஊடே சொல்லப்படுகிறது.

சம்பத்தான் இந்த நாவலின் மையப்பகுதியாகவும், ஆதார சுருதியாகவும் இருக்கிறான். அவனைப் பற்றின சித்திரம் இயல்பான வண்ணங்களால் திறமையாக தீட்டப்பட்டு இந்த நாவல் முழுவதும் நமக்கு தரிசனம் தருகின்றன. சம்பத்தின் ஆளுமைக்கூறுகள் நாவலில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. அவன் உங்களின் நண்பர்கள் யாராவையாவது உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும் அல்லது நீங்களே சம்பத்தாகக்கூட உணரக்கூடும். தான் நினைத்தை உடனே நிகழ்த்திப் பார்க்க பிரியப்படுபவன்; தன்னிடம் உறைந்திருக்கும் பயத்தை மறைக்க மூர்க்கத்தனமாக நடந்து கொள்பவன்; தமிழிலக்கயம் படிக்கப்போய் நாத்திகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் வெளியேற்றப்படுபவன்; வாழ்க்கை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு போல்ட்டு, நட்டு விற்கிறவன்; பீர் குடித்து ஒத்துக் கொள்ளாமல் ஏறக்குறைய சாகப் போய் பிழைக்கிறவன், சில முறையே சந்திக்கிற பெண்ணை தீடாரென தீர்மானித்து ஒரு லாட்ஜ் அறைக்குள் திருமணம் செய்து கொள்கிறவன், அப்பாவை கட்டையால் ரத்தம் வர அடிக்கிறவன், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறிவிட்டு மறுநாள் மீன்குழம்பைப் பற்றி பேசுகிறவன் ... என சம்பத்தைப் பற்றின பல நிகழ்ச்சிகளின் மூலம் அவனைப் பற்றி பிரமிப்பாகவும், விநோதமாகவும் நமக்கு தோற்றமளிக்கச் செய்கிறவன். இதனாலேயே அவன் நண்பர்களால் கதாநாயகத்தன்மையுடனும் கூடவே வெறுப்புணர்ச்சியுடனும் பார்க்கப்படுகிறவன்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில உதாரண பகுதிகள் உங்களுக்கு இதை விளக்க வைக்கக்கூடும்.

... என் மனைவி அந்தப் பெண்ணை பார்த்து முகம் சுழிப்பதை கவனித்ததைப் போல, 'இவ ரோட்சைடு பிராத்தல்... ஆனா பிளஸ் டூ படிச்சவ.. என்னையே லவ் பண்றா என்று அவளிடமும் அறிமுகப்படுத்தினான் ....
 .... 'பொம்பளைப் பிள்ளைகளை வயசுக்கு வந்ததும் கட்டிக் கொடுத்து விடுவது போல நம்மையும் நடத்தினால் நன்றாகயிருக்குமில்லையா, இப்படி காமம் ஒரு கரையானைப் பேல மெல்ல அரித்துத் தின்பதிலிருந்து தப்பி விடலாமே. ஒரு ஆள் வேலை கிடைத்து சம்பாத்தியம் செய்தால் மட்டுமே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முடியும் என்பது மடத்தனமானது என்று சம்பத் புலம்பிக் கொண்டேயிருந்தான். '....
.... மூவரும் கரும்பு ஜீஸ் கடை முன்பாகப் போய் நின்று கொண்டோம். சம்பத் முழு மூடி எலுமிச்சம் பழம் பிழியும் படியாகக் கேட்டுக் கொண்டு விட்டு கீழே விழுந்து கிடந்த கரும்புச் சக்கையைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ யோசனைக்குப் பிறகு கரும்பு ஜீஸ் விற்பவனிடம் இந்த மிஷின் என்ன விலையாகிறது என்று விசாரித்தான். .... 'கரும்பு ஜீஸ் இயந்திரத்தை நாம் வாங்கி நடத்தத் துவங்கினால் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் கிடைப்பதோடு அடுத்தவர்கள் மேல் உள்ள அத்தனை ஆத்திரத்தையும் கரும்பைச் சக்கையாக பிழியும் போது காட்டினால் மனதும் சாந்தமாகி விடும் இல்லையா ' என்றான். இதற்கு அவன் மனைவி சிரித்தாள்.
 சம்பத் இவ்வாறு விநோதமாக நடந்து கொள்வதற்கான காரணத்தின் தடயத்தையும் இந்த நாவலில் ஆசிரியர் விட்டுச் சென்றிருக்கிறார். சிறுவயதில் தன் சகோதரியின் மரணத்திற்கு தன்னையறியாமலே அவன் காரணமாக இருந்த  குற்றவுணர்வினாலேயே அதை மறைத்துக் கொள்ள தான் மூர்க்கமாக நடப்பதாக தன் நண்பனிடம் பிற்பாடு கூறுகிறான். சம்பத்தின் நடவடிக்கைகள் ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் விநோதமாக தோன்றினாலும், அவனுடைய பார்வையில் தான் நினைப்பதை உடனே நிகழ்த்திக் கொள்ளும் ஒரு குழந்தையின் மனப்பான்மையே தெரிகிறது. குழந்தைகளும் விலங்குகளும் மட்டுமே தான் நினைப்பதை உடனே செயலாக்கிக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது.

()

புத்தகத்தின் பின்னட்டையில் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த நாவலை எஸ்.ரா. உலர்ந்த சொற்களால் சொல்லிக் கொண்டு போனாலும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிற (கீழே குறிப்பிடப்பட்டிருக்கிற) கவித்துவமான வர்ணணைகள் இந்த நாவலின் வாசிப்பனுபவத்தை சுவாரசியமானதாக ஆக்குகிறது. சம்பத்தின் மனைவி மீது நண்பர்களில் சிலர் கொள்ளும் காமம் கலந்த உணர்வையும் ஒளிக்காமல் வெளிப்படுத்தும் இந்த நாவல் இந்த மாதிரியான காரணங்களாலேயே இதில் வரும் நபர்களை நமக்கு நெருக்கமாக உணர வைக்கிறது.
....எங்களைச் சுற்றிலும் மலை படர்ந்திருந்தது. பசுமையின் கோப்பைக்குள் விழுந்து கிடப்பதைப் போல் நாங்கள் நின்றிருந்தோம்....
 .... நோய்மையின் தாழ்வாரத்திற்குள் நடந்து கொண்டிருந்தோம். மண்டையில் பெரிய கட்டு போட்ட ஒரு நாலு வயதுச் சிறுமி கையில் ஒரு குச்சி மிட்டாயை ஆசையாகச் சுவைத்துக் கொண்டிருந்தாள்.
........சாலையில் வெயில் பாதசாரிகளின் கால்களில் மிதிபட்டுக் கொண்டிருந்தது. .... எறும்புகள் புற்றிலிருந்து வெளியே வருவதைப் போலப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள்....
காலமும் பரப்பும் குறுகியிருக்கிற காரணத்தினாலேயே இந்தப் படைப்பை நாவல் என்றழைக்க தயக்கமாயிருப்பதால் ஒரு செளகரியத்துக்காக குறுநாவல் என்று வகைப்படுத்தலாம். 'நான் சம்பத்தின் கைகளைப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ' (பக்22) போன்ற இலக்கணப் பிழைகள் நாவலின் இடையே நெருடுகின்றன. எல்லா நண்பர்களின் மூலமாகவும் சம்பத்தின் நினைவுகள் விவரிக்கப்பட்டுள்ளதால் எந்த நண்பரின் மூலமாக குறிப்பிட்ட பகுதி பதிவாகிறது என்பதில் சற்றே குழப்பமேற்படுத்தும் வகையில் நாவலின் நடை செல்வதை ஆசிரியர் முயன்றிருந்தால் தவிர்த்திருக்கலாம்.

முழுக்க கற்பனையினாலேயே எழுதப்படும் படைப்பை ஒரிரு பக்கங்கள் தாண்டினவுடனேயே ஒரு கூர்மையான வாசகன் அவதானித்து விட முடியும். மாறாக வாழ்க்கையின் அனுபவத்தின் சாரத்திலிருந்து எழும் நாவல்கள், வாசகனின் மனதில் இனம் புரியான நெருக்கத்தையும் தோழமையையும் ஏற்படுத்துகிறது. அந்த வகையில் இந்த நாவலெங்கும் யதார்த்தத்தையும், உண்மையின் வாசனையையும் உணர முடிவதால் சமீபத்திய வரவில் குறிப்பிடுத்தகுந்த படைப்பாக இதைக் கொள்ளலாம்.

(குறிப்பு: இது ஒரு மீள்பதிவு - பிப் 2006-ல் எழுதப்பட்டது)
நன்றி: http://www.thinnai.com/?module=displaystory&story_id=60602034&edition_id=20060203&format=html

suresh kannan

Monday, January 25, 2010

ராஜா - இசை - ஷாஜி - சாரு

disclaimer 1: நான் இளையராஜாவின் திரையிசைப் பாடல்களின் ரசிகனே ஒழிய அவரின் குறிப்பிட்ட சில ரசிகர்கள் போல இசையையும் தாண்டி அந்த ஆளுமையின் மீதே வெறி கொண்டவன் அல்ல. ராஜாவின் இசை குறித்து எனக்குச் சரி என்று தோன்றுபவற்றை நண்பர்களுடனான உரையாடலிலும் பொதுவிலும் வைத்திருக்கிறேன். உதாரணமாக 'திருவாசகம்' வெளிவந்த புதிதில் அது பெரும்பாலோனாரால் - எழுத்தாளர் சுஜாதா உட்பட - ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட போது ராஜா தவிர வேறு எந்த சிறந்த பாடகராவது பாடியிருந்தால் இன்னும் அந்த ஆல்பம் சிறப்பாய் வந்திருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

disclaimer 2: இசை குறித்த என்னுடைய ஞானம் ஒரு பொதுவான பாமரனுக்கு ஈடானதே. நுணுக்கங்கள் தவிர்த்து தொடர்ந்து இசை கேட்டு வருவதனால் இயல்பாக மேலெழுந்து வரும் உணர்வுகளோடுதான் எந்தவொரு இசையையும் என்னால் அணுக இயலும். 





இசை விமர்சகர் ஷாஜி எழுதின இந்தக் கட்டுரையை உயிர்மையில் வாசித்த போது ஏதொவொரு அபஸ்வரம் தட்டியது.

ராஜாவின் இசை குறித்து ஷாஜி வைத்திருக்கும் அடிப்படையான மதிப்பீட்டை ராஜாவின் எந்தவொரு தீவிரமானதொரு ரசிகனின் மதிப்பீட்டிற்கு இணையாகத்தான் நான் புரிந்து வைத்திருந்தேன். ஏனெனில் நான் வாசித்த வரை ஷாஜி எழுதின கட்டுரைகளில் ராஜாவின் இசை குறித்து உயர்வான அபிப்ராயத்தையே இதுவரை தெரிவித்து வந்திருந்தார். டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் 'இலக்கிய மலரில்' ஷாஜி எழுதியிருந்த கட்டுரையும் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் திடீரென்று ராஜாவின் இசை மட்டுமல்லாது ராஜாவின் தனிப்பட்ட குணங்களைப் பற்றியும் ஷாஜி விமர்சித்து எழுதியிருந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அது ஷாஜியின் குரலாக எனக்கு ஒலிக்கவில்லை. ஏனெனில் அவர் முன்வைத்த விமர்சனங்களில், 'ராஜா பாப்மார்லியை 'குப்பை' எனச் சொல்லிவிட்டார்' என்பதும் ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தக் குற்றச்சாட்டை சலிக்காமல் தொடர்ந்து சொல்லி வருபவர் சாருநிவேதிதாதான். அதையே இசை விமர்சகரான ஷாஜியும் எதிரொலித்த போதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஷாஜியின் கட்டுரையைத் தொடர்ந்து சாருவும் அதைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்வினை என்கிற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியதும் ஆச்சரியம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து எனக்குள் எழுந்த கேள்விகளையும் சிந்தனைகளையும் இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

()

ராஜாவின் ஆணவத்தையும் போலி ஆன்மீகத்தையும் அவரது ரசிகர்களே உணர்ந்திருப்பார்கள். சக படைப்பாளிகளோடும் இயக்குநர்களோடும் அவர் முரண்படுவதும் அது நேர்காணல்களில் கசியும் போதும் இசை நிகழ்ச்சிகளின் போது ராஜாவிடமிருந்து வெளிப்படும் உடல் மொழியும் சக இசைக்கலைஞர்களை அங்கீகரிக்காத பண்பையும் வைத்து ராஜாவின் ஆணவ வெளிப்பாடுகளை எளிதாகவே உணர முடியும். அதே போல் அவர் முன்வைக்கும் ஆன்மீகமும், ரஜினி போன்றோர் முன்வைக்கும் பகட்டுத்தனமான போலி ஆன்மீகத்திற்கு ஈடானதுதான். தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு வெளிவரும் ராஜாவின் பாடல் வரிகளும், இமயமலைக்குக் கூட புகைப்படக்காரருடன் சென்று அதை பத்திரிகைகளில் வெளிவரச் செய்யும் ரஜினியும் ஆன்மீகமும் ஏறக்குறைய ஒன்றுதான்.

தனிமனத பலவீனங்கள் என்கிற நிலையில் இவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எனக்குப் புரியாத விஷயம் இதுதான்.

இன்னொரு இசைக்கலைஞரை 'குப்பை' என்று சொல்லிவிடுவதாலும் ஆணவவாதியாய் சக மனிதர்களை மதிக்காத தன்மைக்காகவும் ஒரு கலைஞரையும் அவரது படைப்புக்களையும் புறக்கணிக்க முடியுமா? பிடிக்கவில்லை என்று சொல்லி விட இயலுமா? மனித நேயம் இல்லாதவர்களையும் ஆணவக்காரர்களையும் புறக்கணிப்பது; வெறுப்பது என்று ஆரம்பித்தால் இன்று எத்தனை கலைஞர்கள் மிஞ்சுவார்கள். உதாரணத்திற்கு சாருவையே எடுத்துக் கொள்வோம். அவரது எழுத்தில் வெளிப்படாத ஆணவமா? மாதத்திற்கு ஒன்றாய் சாமியார்களை மாற்றிக் கொண்டிருக்கும் அவரது ஆன்மீகத்தை எந்தத் தளத்தில் வைத்து புரிந்து கொள்வது?

இந்தக் காரணங்களையெல்லாம் வைத்து சாருவின் எழுத்தை 'நான் புறக்கணிக்கிறேன்; பிடிக்கவில்லை' என்று தெரிவித்தால் அது எவ்வளவு அபத்தமாய் இருக்கும்?. ராஜா பாப்மார்லியை 'குப்பை' என்பதற்காக அவரை வெறுக்க வேண்டும் என்றால் சாரு எத்தனை எழுத்தாளர்களையும் படைப்புகளையும் இதே போல் விமர்சித்திருப்பார் என்பதையும் பார்க்க வேண்டும். 'எப்பவும் நான் ராஜா' என்கிற வரியை வைத்துக் கொண்டு ராஜாவின் தற்புகழ்ச்சியைக் கிண்டலடிக்கும் சாருவால் அந்தப் பதிவிலேயே தன்னுடைய இரண்டு புகைப்படங்களை வைத்து நிரப்பாமல் இருக்க முடியவில்லை.

()

சாருவின் கட்டுரையில் உள்ள இன்னொரு குற்றச்சாட்டையும் கவனிக்க வேண்டும்... 'கர்நாடக இசையை நாட்டுப்புற இசையுடன் கலந்து கர்நாடக இசையை பிரபலப்படுத்தினார்.'. இதனால்தான் செம்மங்குடி உள்ளிட்ட பிராமணர்கள் ராஜாவைக் கொண்டாடினார்கள் ..என்பது சாருவின் வாதம்.

ராஜாவின் இசையை இப்படிக் கூட அபத்தமாக தலைகீழாக ஒருவரால் புரிந்து கொள்ள முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ராஜாவின் இசையின் உடனடி பிரபலத்தன்மைக்கு காரணமே அவரது இசையிலிருந்த நாட்டார் இசையின் கூறுகள்தான். எனவேதான் அது மக்களை உடனடியாகச் சென்று சேர்ந்தது. பின்பு பண்டிதர்கள் வட்டத்தில் மாத்திரமே புழங்கிக் கொண்டிருந்த கர்நாடக இசையை எளிமைப்படுத்தி தன்னுடைய மெட்டுக்களில் இணைத்தார். இதனால் சில கர்நாடக இசைப் பண்டிதர்களின் வெறுப்பிற்கும் எரிச்சலுக்கும் கூட அவர் ஆளாக நேர்ந்தது. அதாவது ராஜாவால் பிரதானமாக நாட்டுப்புற இசையும் அதன் கூடவே ஆனால் அதனுடைய முகமில்லாமல் கர்நாடக இசையும் வெகுஜனங்கள் மத்தியில் பிரபலமடைந்தது. 'கர்நாடக இசையை ராஜா பிரபலப்படுத்தினார்' என்றால் எத்தனை ராஜாவின் ரசிகர்கள் அதிலிருந்து விலகி கர்நாடக இசையின் பக்கம் சென்றார்கள் என்று கவனிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை நான் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ராஜாவின் திரையிசையைக் கேட்டு வருகிறேன். கர்நாடக இசையை ரசிப்பதற்காகவாவது அதன் அடிப்படையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளூற உண்டே ஒழிய, இன்று வரை எந்தவொரு திரையிசைப் பாடலின் ராகத்தையும் அதன் நுணுக்கங்களையும் என்னால் விளங்கிக் கொள்ள இயலாது. கர்நாடக இசையில் பாண்டித்தியம் உள்ள எவராவது விளக்கிச் சொல்லும் போதுதான் அதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் கர்நாடக இசை 'பிரபலமடைந்தது' என்கிற விஷயம் எங்கே வருகிறது?  இதற்கும் ராஜாவின் இசைக்கும் சம்பந்தமே கிடையாது.

சாரு முன்வைக்கும் இன்னொரு குறை. ராஜா நாட்டுப்புற இசையையும் கர்நாடக இசையையும் காப்பியில் சாராயத்தைப் போல கலந்து விட்டார். அசலான நாட்டுப்புற இசையை அவர் உபயோகிக்கவில்லை. மேலும் சுத்தமான நாட்டுப்புற இசைக்கு பருத்திவீரன், சுப்ரமணியபுரம் போன்ற திரைப்படங்களை சாரு உதாரணம் காட்டுகிறார். அந்தப் படத்தின் பாடல்கள் அசலான நாட்டுப்புற இசையைக் கொண்டதா என்பதை இசையைப் பற்றி நன்கு அறிந்தவர்களின் முன்னால் ஒரு கேள்வியாக வைக்கிறேன்.

அவற்றின் சில பாடல்கள் (ஊரோரம் புளியமரம்)  நாட்டார் இசையின் கூறுகளை தன்னுள் பெருமளவில் கொண்டவை . ஆனால் 'அறியாத வயசு' 'கண்கள் இரண்டால்' போன்ற பாடல்களை சுத்தமான நாட்டுப்புற இசை என்பது சரியல்ல என்பதை அடிப்படை ரசிகன் கூற உணர முடியும். அசலான நாட்டுப்புற இசைக்கு தமிழ்த் திரையுலகில் எந்த அளவில் இடமும் வரவேற்பும் இருக்கிறது, மின்னணு கருவிகள் அல்லாமல் நாட்டுப்புற இசைக்கருவிகளை வைத்து இன்று எவராவது இசையமைக்க முன்வருவார்களா என்பதும் என் பாமரத்தனமான கேள்வி.

அது மாத்திரமல்லாமல் இரண்டிற்கும் மேற்வகைப்பட்ட இசைகளை கலந்து உபயோகிப்பது, அவற்றின் கூறுகளை ஒன்றோடொன்று இயைந்தோடச் செய்வதை ஆகியவை Fusion என்று குறிப்பிடப்படுவது பாமர ரசிகனுக்கும் தெரியும்.  ஏன் சாரு சிலாகிக்கும் ரகுமானே இந்த மாதிரியான கலப்பிசையை பெரும்பாலும் உபயோகிக்கிறார். ஆனால் இதையே ஒரு குறைபாட்டுள்ள அம்சமாக சாரு முன்வைப்பது முரணாக இருப்பதுடன்  ராஜாவை விரும்பாததற்கு இதையொரு காரணமாக சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக தோன்றவில்லை. இன்னும் அழுத்தமான பொருந்தக்கூடிய காரணங்களை சாரு முன்வைத்தால் அவர் ராஜாவின் இசையை புறக்கணிப்பதை ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான நுணுக்கமான ஞானம் சாருவிற்கு உள்ளதா என்பது கேள்விக்குறி. ஏனெனில் 'பாப்மார்லி' என்கிற அபத்தமான உதாரணத்தைத் தவிர சாருவால் இத்தனை வருடங்களில் எந்தவொரு வலுவான காரணங்களையும் முன்வைக்க இயலவில்லை.

எதற்காகவேனும் அவர் ராஜாவின் இசையை வெறுக்கட்டும். அது அவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. ஏனெனில் ஒரு இசையை நாம் அணுகுவது நம்முடைய நுண்ணுர்வுகளின் மூலமே. ஏன் இது உனக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஒருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் அதற்காக பொருத்தமில்லாத காரணங்களை முன்வைப்பதுவும் அதைப் பொதுவில் வைத்து அலட்டுவதுவும்தான்  எரிச்சலைத் தோற்றுவிக்கிறது. அதைத்தான் இந்தக் கட்டுரையில் முன்வைக்க முயன்றிருக்கிறேன். 

தொடர்புள்ள பதிவு: சாருவிற்கு ஒரு பரிந்துரை

image courtesy: original uploader

suresh kannan

Saturday, January 23, 2010

(ஆயி)ரத்தில் ஒருவன்

அய்யோ! ஆ.ஒ. குறித்து இன்னொரு பதிவா என்று டென்ஷன் ஆகாமல் பொறுமையாக வாசிக்குமாறு வேண்டுகிறேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் துவக்கியப் புள்ளியாக பாரதியை பெரும்பாலான விமர்சகர்கள் குறிப்பிடுவது போல நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளியாக மணிரத்னத்தை குறிப்பிடலாம் என்பது என் அனுமானம். கதை சொல்லும் முறையிலும் காட்சிப்படுத்தும் முறையிலும் புதுமைப்பித்தனின் தவளைப் பாய்ச்சல் நடையை அவர் திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். மணிரத்னத்தின் முந்தைய உருவாக்கங்களைத் தவிர்த்து 'நாயகனை' நவீன தமிழ் சினிமாவின் முதல் அடையாளம்' என்று கூட சுட்டிக் காட்டலாம். (இது காட்பாதரை தழுவி எடுக்கப்பட்டது என்னும் புகாரில் உண்மையிருக்கிறது என்றாலும் இதையே எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர் போன்ற வணிகநோக்குப்பட இயக்குநர்கள் கையாண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதையும் சினிமா ஆர்வலர்கள் யோசித்துப் பார்க்கலாம்). மணிரத்னம் என்னும் நவீனப் புள்ளியின் தொடர் கண்ணிகளாக விளங்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள் யார் யார் என்று பார்த்தால் பாலா (சேது), அமீர் (பருத்திவீரன்), கெளதம் மேனன் (காக்க காக்க), மிஷ்கின் (அஞ்சாதே) என்று ஒரு சில பெயர்களே காணக் கிடைக்கின்றன.



இந்த வரிசையில் செல்வராகனையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம். அவரது முந்தைய உருவாக்கங்களில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை சில குறிப்பிட்ட முன்மாதிரியான அம்சங்களுக்காக மாத்திரம்  பாராட்டலாமே ஒழிய அவற்றை முழுமையான திரைப்படங்களாக என்னால் கருத இயலவில்லை. ஆனால் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தை ஒரு முழுமையான கலைஉணர்வு சார்ந்த படைப்பாக என்னால் சுட்டிக் காட்ட இயலும். விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்தில் கலக்க வரும் ஒருவன் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்களையும் பால்விழைவு சார்ந்த மனப்போராட்டத்தையும் அதன்காரணமாக ஏற்படும் உளச்சிதைவையும் அத்திரைப்படம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கும். இந்நிலையில் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆரம்பத்திலிருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஆவலையும் பார்வையாளர்களிடையே கொண்டிருந்தது. ஒருவகையில் அதிக எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கும் முன்தீர்மானத்தோடு அணுகும் ரசிகமனோநிலைக்கும் ஆபத்தாய் அமைந்துவிடும். எனவேதான் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்களின் உருவாக்கங்களைப் பற்றின எந்தவொரு விஷயத்தையும் கசியவிடாதவாறு பார்த்துக் கொண்டனர். அதையும் மீறி கசியும் அல்லது தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே கசிய விடும் செய்திகளைக் கொண்டு பார்வையாளர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் முன்தீர்மான பிம்பங்கள் திரையில் நொறுங்குவதைக் காணும் போது அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இது ஒருபுறமிருக்க தமிழ்ச்சினிமாவை பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு நோய்க் குறியீடு 'பிரம்மாண்டம்' என்னும் கருத்தாக்கம். சந்திரலேகா, ராஜராஜசோழன் போன்ற புராதன உருவாக்கங்களை தவிர்த்து இதையும் நவீன சினிமாவில் இருந்து துவங்க வேண்டுமென்றால் அதன் புள்ளியாக கே.டி.குஞ்சுமோன் + பவித்ரன் கூட்டணியைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். ஒரே ஒரு கதைத் துளியை வைத்துக் கொண்டோ சமயங்களில் அதுவுமில்லாமலோ, அதை பிரம்மாண்டமான வெற்றுச் சாகசங்களால் நிரப்ப முயல்வது. ஜீப்களை அந்தரத்தில் பறப்பது, பாடலில் நூற்றுக் கணக்கானவர்கள் பாடல் காட்சிகளின் பின்னணியில் ஆடுவது போன்ற அபத்தங்களால் இத்திரைப்படங்கள் நிரம்பியிருக்கும். பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இந்த முறையை ஒரு வணிக வெற்றியின் அடையாளமாகவே மாற்றிவிட்டிருக்கிறார். அர்த்தமில்லாத சடங்காகவே நீடிக்கும் இத்திரைப்படங்களின் செலவுத் தொகைகள் வணிக நோக்கத்திற்காக பெரும்பாலும் ஏற்றியே சொல்லப்படுகிறது. பார்வையாளனுக்குச் சம்பந்தமேயில்லையெனினும் அவனும் கூட 'எத்தனை கோடிகளில் உருவாக்கப்பட்டது; எத்தனை கோடிகளில் வியாபாரமானது' என்கிற விவாதத்தை தம்முடைய அரட்டையில் இணைத்துக் கொள்கிறான். 'ஆயிரத்தில் ஒருவனும்' இதே போன்தொரு நோக்கிலதான் பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ முப்படி கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு, மூன்று வருடங்களுக்கும் மேலான படப்பிடிப்பு, இயக்குநரின் நேர்காணலில் தெரியும் அலட்டல்கள்.. பார்வையாளனிடம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது.

இணையத்திலும் பத்திரிகைகளிலும் 'ஆயிரத்தில் ஒருவனுக்கு' எழுதப்பட்ட விமர்சனங்களில் பொதுவாக இருவகைகளைக் காண முடிந்தது. ஒன்று, தமிழ்ச்சினிமாவில் புதிய களம், முயற்சி, அற்புதம், ஆகா, ஒகோ என்று கண்மூடித்தனமாக பாராட்டப்பட்ட வகை. இன்னொன்று, திரைக்கதை குழப்பம், சில ஆங்கிலப்படங்களின் பாதிப்பு, தேவையில்லாத கவர்ச்சி, வரலாற்றுத் தரவுகளின் பிழை.. என்று இயக்குநரை போட்டுச் சாத்தியிருந்த வகை. இரண்டு வகைகளின் நடுவில்தான் உண்மை ஒளிந்து கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. சினிமா குறித்தான அடிப்படை ஆர்வமும் அறிவும் கொண்ட என்னுடைய நண்பரொருவர் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முழுமையாக திரும்பியிருந்தார். அவரிடம்  இத்திரைப்படம் குறித்து கேட்ட போது ... Shit.. என்று ஒரே வார்த்தையில் புறக்கணித்தார். (இடுகையின் தலைப்பை கவனிக்கவும்). நல்ல வேளையாக fucking shit .. என்று சொல்லவில்லை.

இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு 'ஆயிரத்தில் ஒருவனை' அணுக முயல்வோம்.

()

பொதுவாக தமிழ்ச் சினிமாவின் தரம் குறித்து சலிக்காமல் நாம் தொடர்ந்து புகார் செய்து கொண்டேயிருக்கிறோம். என்னுடைய வலைப்பூவே அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் வழக்கமான வார்ப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய முயற்சி படைக்கப்படும் போது அதிலுள்ள குறைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு அதற்கான அடிப்படை பாராட்டை நாம் வழங்குகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நம்முடைய மேதமைகளைக் காட்ட இதுதான் சமயமென்று சிறிய பிழைகளைக் கூட பூதாகரமாக சுட்டிக் காட்டி மொத்த படைப்பையுமே நிராகரிக்கிறோம். இது ஒரு தவறான போக்காக எனக்குப் படுகிறது. ஆ.ஒ.வின் இயக்குநர் அப்படி என்னதான் தவறிழைத்துவிட்டார் என்று பார்க்கலாம்.

இது ஒரு புனைவு சார்ந்த திரைப்படமென்று ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு தெளிவாக்கப்பட்டு விடுகிறது. புனைவு என்று வரும்போது ஒரு படைப்பாளி அதிகபட்ச சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இயலும். அவனே ஒரு மாய உலகத்தை அத்தனை நுணுக்கங்களுடன் சிருஷ்டிக்க முடியும். ஒரு கலைஞன் கடவுளுக்கு இணையாக அமரும் தருணமது. விஞ்ஞானிகள் கூட இயற்கையில் ஒளிந்திருக்கும் உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்வதைத் தான் செய்ய முடிகிறது. ஆனால் கலைஞன் விஞ்ஞானிகளுக்கும் ஒருபடி மேலே சென்று இயற்கையையே படைக்கிறான். 'அவதார்' ஒரு சிறந்த சமீபத்திய உதாரணம். செல்வராகவன் அதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறார். ஏழு தடைகளுக்குப் பின்பாக இறுதிக் கட்டத்தை அடைவது போன்ற திரைக்கதையிலுள்ள தடயங்கள் நம்முடைய புராதன கதை மரபை நினைவுப்படுத்துகின்றன. 

இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில்  இயக்குநரும் தயாரிப்பாளரும் யதார்தத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய விவாதங்களை யூகிக்க முயல்வோம். 'வரலாற்றுத் தொடர்ச்சியுடன் கூடிய முன்னோர்களின் பகையை சமகாலத்தின் பின்னணியில் சொல்கிறோம்' என்று இயக்குநர் தம்முடைய விவரிப்பைத் தொடங்கிய கணமே கேட்டிருப்பவர்கள் தங்களின் பின்புறத்தால் சிரித்திருக்கக்கூடும். ஏனெனில், காதலை அல்லது வன்முறையை அடிப்படையாகக் கொண்ட படம் வெற்றி பெற்றால் உடனேயே அதே போன்று புற்றீசல்கள் போல் வெளிவந்துக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா சூழலில் இப்படியான அதீத கற்பனைக்கு உடனேயே அங்கீகாரம் கிடைத்திருக்காது; மாறாக அது சாத்திமற்ற ஒன்றாகவோ நகைச்சுவையாகவோத்தான் அணுகப்பட்டிருக்கும். ஒரு புதுமுக இயக்குநரால் இவ்வாறான ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கவே முடியாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். செல்வராகன் முந்தைய படைப்புகளால் தம்மை ஒரளவு நிருபித்துக் கொண்டிருப்பவர் என்பதால் பெரு முயற்சிக்குப் பின் இதற்கான ஒப்புதலைப் பெற்றிருப்பார். 'எதையாவது செய்து' பொருளீட்டிவிடும் வணிகமதிப்புக் கனவுகளில் மிதக்கும் தயாரிப்பாளர்கள் அரைமனதுடன் இதற்கு சம்மதித்திருப்பார்கள். ஆக.. இப்படியொரு தமிழ்ச்சினிமாவில் இப்படியொரு புனைவை யோசிப்பதே பெரிய விஷயம் எனும் போது அதை படைப்பாகவும் சாதித்துக் காட்டிய செல்வராகவனை நிச்சயம் நாம் முதலில் பாராட்டியாக வேண்டும்.

தமிழ்சினிமா இப்போதும் கூட தவழும் நிலையில்தான் உள்ளது என்று முன்னொரு பதிவில் கூறியிருக்கிறேன். இவ்வாறான முயற்சிகளின் மூலம்தான் அது எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது என்று கூறலாம். எனவே தத்தித் தத்தி வரும் ஒரு குழந்தையை "ஏன் உன் நடை கோணலாக இருக்கிறது,  ஏன் வாயில் ஜொள் வடிகிறது, ஏன் தலைமுடி கலைந்திருக்கிறது' என்று விமர்சகர்கள் கேட்பதெல்லாம் சற்று அராஜகமாகவே தோன்றுகிறது.

()

புராதன வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் படியான இவ்வாறான கதையமைப்பு தமிழ்த் திரையுலகிற்கு புதியதா என்றால் இல்லை. சட்டென்று நினைவுக்கு வரும் முன்உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். நாசர் இயக்கத்தில் வெளிவந்த தேவதை. அதுவரைக்கும் வரலாற்று மன்னர்களின் தோற்றம் குறித்து பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிம்பங்களை உடைத்துவிட்டு 'இப்படித்தான் அவர்கள் இருந்திருப்பார்களாக இருக்கும்' என்கிற உணர்வை ஏற்படுத்துமளவிற்கு அதில் சித்தரிக்கப்பட்டிருந்த மன்னரும் சூழலும்  இயல்பாக அமைந்திருக்கும். இதன் பின்னணியில் டிராஸ்ட்கி மருதுவின் பங்களிப்பு இருந்தது என்பதாக ஞாபகம். ஆனால் தேவதை திரைப்படம் முற்பாதியில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் பிற்பாதியில் சமகாலத்தில் அதன் தொடர்ச்சி நிகழ்வதைப் போலவும் இருபிரிவாக பிரிந்திருக்கும். ஆனால் ஆ.ஒ. இரண்டுமே சமகாலத்தில் ஒரே சமயத்தில் நிகழ்வதைப் போல கற்பனை செய்திருப்பதுதான் புதுமை.

பொதுவாக இவ்வாறான வரலாற்றுப் புனைவு ரீதியான திரைப்படங்களை, பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதின் மூலம்தான் படைப்பை முழுமையாக ரசிக்க முடியும். மறுபடியும் அவதாரையே உதாரணமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவ்வாறின்றி இது ஏன், அது எப்படி என்கிற கேள்விகளுடன் அமர்ந்திருந்தால் அதிருப்தியோடுதான் அரங்கிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது அவர்கள் தொணதொணத்துக் கொண்டிருந்தால் 'கதைக்கு கை கால் கிடையாது. அதனால சொல்றதக் கேளு' என்று அவர்களின் வாயை அடைக்கிற நம்முடைய நடைமுறை அனுபவத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இவ்வாறான புனைவு ரீதியான திரைப்படங்களில் தர்க்க ரீதியான சமாச்சாரங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது; கூடாது. எனவே பார்வையாளன் சோழ, பாண்டியர் தொடர்பான வரலாற்றுப் பிழைகளை காண விழையாமல் இயக்குநர் காண்பித்த படியே இத்திரைப்படத்தை அணுகுவது இடையூறில்லாத காண்பனுபவத்திற்கு உதவி செய்யும்.

திரைக்கதை ஏன் சோழ, பாண்டிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது, அதை முழுமையானதொரு கற்பனை தேசமாக, மனிதர்களாக வடிவமைத்திருக்கலாமே என்ற கேள்வியை சில விமர்சனங்களில் வாசித்தேன். ஏற்கெனவே சொல்லியபடி இதையும் இயக்குநரின் சுதந்திரத்திற்காக அங்கீகாரமான நோக்கில் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க கற்பனை தேசம் எனும் போது தமிழ் சினிமா பார்வையாளன் அதை அந்நியமாக உணர்ந்து காண்பனுபவத்திலிருந்து விலகிச் செல்ல நேரிடலாம். எனவே அதற்கான நம்பகத்தன்மையைத் தர, புனைவில் உண்மையான வரலாற்றின் தடங்களை இயக்குநர் பிணைக்க முயற்சித்திருக்கலாம்.

அய்யோ! கார்த்தி வீணடிக்கப்பட்டு விட்டாரே! இதற்காகவா அவரின் இத்தனை வருட உழைப்பு பயன்பட்டது! இந்த நேரத்தை இரண்டு மூன்று படங்களுக்கு அவர் உபயோகித்திருப்பாரே என்றொரு அங்கலாய்ப்பை ஆங்கில தேசிய நாளிதழ் விமர்சனமொன்றில் கண்டேன். ஒரு  படைப்பின் பாத்திரத்தை நாயக பிம்பமாகவே பார்க்கும் வழக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அபாயமிது. பொதுவாக மிகைப்படுத்தப்படும் நாயக பிம்பங்கள் மீது நமக்கொரு அசூயை இருக்கிறது. அதிலிருந்து நடிகர்கள் வெளிவர வேண்டும் என்று சொல்லி வருகிறோம். இவ்வாறான அங்கலாய்ப்புகள் மீண்டும் நடிகர்களை வழக்கமான சுழற்சிக்கே இட்டுச் செல்கின்றன.

தனுஷ் ஒரு நேர்காணலில்,  இத்திரைப்படத்தின் உருவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருப்பதாகவும், பங்கெடுத்திருப்பதாகவும், பார்த்திபனின் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்பிதாகவும் கூறிய ஞாபகம். சோழ மன்னனாக உருவகிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தனுஷை கற்பனை செய்து பா¡க்கவே விபரீதமாயிருக்கிறது. ஒருவேளை சோழ மன்னர்களில் எவராவது தனுஷைப் போலவே கூட இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் மாத்திரமல்ல, வெகுஜன மக்களே அந்த உருவத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இம்சை அரசனாகிப் போயிருக்கும். ஏனேனில் நமக்கு 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்ற வசனத்தில் உள்ள உண்மை தெரியும்.

()

இப்போது இந்தப்படத்தின் எதிர்மறையான விமர்சனங்களில் உள்ள அம்சங்களைக் கவனிப்போம்.

முழுக்க முழுக்க புனைவுச் சார்ந்த திரைப்படங்களில் பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஆனால் செல்வராகவன் அதற்கான முழு நியாயத்தைச் செய்யவில்லை என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். திரைக்கதையில் பல தொடர்ச்சியான பிழைகள் உள்ளன. என்னதான் புனைவு என்றாலும் புனைவிற்கான பிரத்யேக தர்க்கங்களின் அமைப்போடு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் அவ்வாறில்லை. தொல் பொருள் ஆராய்ச்சியில் ஏன் ஒரு அமைச்சருக்கு ஆர்வம், அதற்கான தனியார் படைக்கும் ஆயுதங்களுக்கும் எவ்வாறு அரசு அனுமதிக்கும், பழங்குடிகளைக் கொல்ல யார் அவர்களுக்கு அதிகாரம் தந்தது?, எப்படி அந்த பழங்குடிக்குழு செயற்கைக்கோள்களின் பார்வையிலிருந்து தப்பியது.. போன்ற அடிப்படையான பார்வையாளனின் இயல்பான சந்தேகங்களுக்கு போதுமான விளக்கம் படத்தில் சொல்லப்படவோ சித்தரிக்கப்படவோ இல்லை. பல விமர்சனங்களில் இவ்வாறான குறைகளை அலசி ஆராய்ந்து விட்டதால் மற்றவற்றைத் தவிர்க்கிறேன். சாதாரண திரைப்படங்களுக்கே முழுத் திரைக்கதையும் தெளிவாக திட்டமிடப்பட வேண்டும் எனும் போது இது போன்று fantasy திரைப்படங்களில் bounded script இல்லாமல் இறங்கவே கூடாது. எவ்வளவு தலையில் அடித்துக் கொண்டாலும் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு இது புரிவதில்லை.

தயாரிப்பாளர் கட்டாயப்படுத்துகிறாரா,  சரி ஒரு ஐட்டம் பாட்டை சொருகு..

திடீரென்று ஆண்ட்ரியாவும் ரீமாசென்னும் ஒருவரையொருவர் fucking. chick..fucking என்று திட்டிக் கொள்ளும் காட்சி படு செயற்கை. செல்வராகவன் தம்முடைய திரைப்படத்தில் Quentin Tarantino படத்தைப் போன்று எப்படியாவது ஒரு காட்சியை வைத்துவிட வேண்டும் என்று விரும்பியதின் விளைவாக இது நிகழ்ந்திருக்கலாம். கார்த்தி அந்த இரண்டு பெண்களுடன் அடிக்கும் லூட்டி, இன்றைக்கு திரையரங்கிற்கு பெரும்பான்மையாக வரும் இளைஞர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் போக்கிற்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. அதே போல் பாடல் காட்சிகள்... தமிழ் சினிமா திருந்தவே திருந்தாத இன்னொரு சமாச்சாரம். உயிர் போகக்கூடிய திகிலான சூழ்நிலையிலும் 'உன் மேல ஆசைதான்...' என்று எம்டிவி காட்சிப்பின்னணியில் பாடுவது தமிழ் சினிமாவில்தான் சாத்தியம். இந்த மாதிரியான புள்ளிகளிலிருந்து ஆங்கிலத் திரைப்படங்கள் விலகி நிற்பதால்தான் அவற்றின் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது.

நான் சுருக்கமாகச் சொல்வது என்னவென்றால் (?!) தமிழ்ச்சினிமாவின் புத்தம் புதியதான முயற்சிகளை பார்வையாளர்கள் வரவேற்பதான மனநிலையை வளர்த்துக் கொள்வதோடு திறந்த மனத்தோடு அவற்றை அணுகும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவைதான் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்ட தரத்திற்கு நகர்த்திச் செல்லும் என்று நான் தீர்மானமாகவே நம்புகிறேன்.

()

இப்போது இந்த இடுகையின் மிக முக்கியமான பகுதிக்கு வருகிறேன்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்காமலேயே அதன் மீதான விமர்சனங்களை மாத்திரம் வாசித்து அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுத முடியுமா (அதாவது ஜல்லியடிக்க முடியுமா) என்றொரு விபரீதமான யோசனை எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இனிமேல்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். எனவே இதற்கான உண்மையான விமர்சனக் கட்டுரைக்காக காத்திருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.:-)

இன்னொரு உப காரணமும் உண்டு. வலையுலகில் நான் விரும்பி வாசிக்கும் ஒரு பதிவரை 'இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதுங்கள்' என்று வற்புறுத்தினேன். அவரோ
'உங்கள் சினிமா விமர்சனங்களில் என்னை தாக்கிய உணர்வின் வெளிப்பாடுகளுக்கான வார்த்தைகளை பார்க்கிறேன். ஒரே வார்த்தைகளை இருவர் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு'
என்று நழுவி விட்டார். எனவே அவரை பழிவாங்குவதற்கான நடவடிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். :-)

செல்வராகவனைப் போன்று என்னுடைய இந்தமாதிரியான 'புதிய' முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

suresh kannan

Monday, January 18, 2010

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்

ரொம்பவும் சுவாரசியமான புத்தகம்.

நாட்டார் வழக்காற்றியலின் (Folklore) முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா.பெருமாள் கள ஆய்வின் போது தமக்கேற்பட்ட அனுபவங்களை தொகுத்துத் தந்திருக்கும் நூல் - சுண்ணாம்பு கேட்ட இசக்கி. நூலாசிரியர் சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், இடர்ப்பாடுகள், வாய்மொழி கதைகள், சிறுதெய்வங்கள், அவற்றின் பின்னணிகள், வழிபாடுகள்,  நாட்டார் கலைஞர்கள்.. என சுவையான பல தகவல்கள் நூலில் நிறைந்துள்ளன.



உயர் படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயத்துக்காகவும் அதற்கான ஆதாயங்களைத் தேடியும் பெரும்பாலும் நாற்காலியை விட்டு நகராமல் மற்ற நூல்களைச் சார்ந்து ஆய்வில் ஈடுபடுபவர்கள் ஒருவகை. சுய விருப்பத்தின் காரணமாக அதற்கான உந்துதல்களோடு நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வில் ஈடுபடுபவர்கள் இன்னொருவகை. பெருமாள் இதில் இரண்டாவது வகை என்பதை நூலை வாசிக்கும் போது  உணர முடிகிறது.

அணிந்துரை எழுதியிருக்கும் பேராசிரியர் நா.இராமச்சந்திரன் ஆய்வாளர்களுக்கான சில அடிப்படை யோசனைகளைத் தந்துள்ளார். அவற்றின் ஒரு பகுதி..

.. நாட்டார் வழக்காற்றுத் தகவல்களைச் சேகரிப்பது எளிதானதன்று. நான் சென்றவுடன் தகவலாளிகள் தயாராக வைத்திருக்கும் தரவுகளைக் கை நிறைய அள்ளித் தந்துவிடுவார்கள் என்று கருதி விடக்கூடாது. நாம் ஆய்வு செய்து பலனடைவதற்கு அவர்கள் நமக்குத் தரவுகளைத் தரவேண்டும் என்று எந்த உடன்பாடும் செய்யப்படவில்லை. பல ஆய்வாளர்கள் தகவலாளிகளை மனிதர்களாகவே மதிப்பதில்லை...

. ஆய்வுக்களம் என்பது பரந்து விரிந்தது. வாய்மொழி வழக்காறுகளும், நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், பொருள்சார் பண்பாடுகளும், நிகழ்த்து கலைகளும், சடங்குகளும், தெய்வங்களும், நிகழ்வுகளும், ஊடாட்டங்களும், விளக்கங்களும் விரவித் தொடர்ந்து வருவது பண்பாட்டின் இயல்பாகும். ஆனால் ஆய்வாளர் ஏதேனும் ஒன்றிரண்டு வாய்மொழி வழக்காறுகளையோ அல்லது ஒருசில மரபுவழிப் பண்பாட்டுப் பொருள் குறித்த செய்திகளையோ தெய்வங்கள் பற்றிய செய்திகளையோ விவசாய முறைகளையோ சாதி குறித்த தகவல்களையோ சேகரிக்கச் செல்வார். தாம் நினைக்கும் வழக்காறு தவிர மேற்குறிப்பிட்ட பிற பண்பாட்டுக் கூறுகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். தாம் சேகரிக்கும் வழக்காறுகளுடன் நேரடித் தொடர்பு கொண்ட பிற வழக்காறுகளைக் கூட அவர் சேகரிக்க மாட்டார். தற்கால ஆய்வாளர்களின் நிலை இதுதான். ஆனால் பண்பாட்டுக் கூறுகள் எல்லாமே ஒன்றையொன்று தொடர்பு கொண்டவை-தனித்தியங்க இயலாதவை என்பதை ஒவ்வொரு ஆய்வாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும். ...

மாத்திரமல்லாமல் நூலின் முக்கிய சாரத்தை தம்முடைய அணிந்துரையில் சுருக்கமாகப் பட்டியலிட்டுள்ளார் இராமச்சந்திரன்

()

அ.கா.பெருமாளின் நேரடி ஆய்வு அனுபவங்கள் ஆய்வாளர்களுக்கு மாத்திரமல்லாமல் பொதுவான வாசகர்களுக்கும் சுவையாக அமையுமாறு பகிரப்பட்டுள்ளன.

நூலின் தலைப்பு ஆவியைப் பற்றியதொரு நாட்டார் கதையைக் குறிக்கிறது. .. இசக்கி வேப்ப மரத்துக்கு கீழே வடக்கே நின்னுக்கிட்டிருக்கா. சிவப்பு சேல உடுத்திருக்கா. சுண்டெல்லாம் சிவப்பு. தலமுடி ஒருபாகமா நீண்டு கெடக்கு. நாடாரு வண்டில வாராரு. காளமணி ஜல்ஜல்ன்னு கேக்குது. காளக் கண்ணுக்கு அவளத் தெரிஞ்சு போச்சு. கொஞ்சம் கலய ஆரம்பிச்சுச்சு. நாடாரு உடன சுதாரிச்சுட்டாரு. வண்டி அவ பக்கத்துல வந்தததும் தானா நின்னுது. கைய நீட்டி சுண்ணாம்பு இருக்குதான்னு சிரிச்சுக்கிட்டே கேக்குதா...

தகவலாளிகள் பேச்சின் இடையில் தெரிவிக்கும் சம்பவங்களும், பழமொழிகளும் பெரும்பாலும் நாட்டார் கதைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அந்தக் கதைகளை விவரிக்கச் சொல்லி அதை நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார் பெருமாள்.

இன்னொரு அத்தியாயத்தில் பல்வேறு வடிவங்களில் நிலவிவரும் நீலிக்கதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வயிற்றுப் பிள்ளையோடு ஒரு பெண் இறந்தால் வயிற்றை அறுத்து அவளின் குழந்தையை தனியாக எரிக்கும் வழக்கம் சில பிரிவினரிடமும் இருப்பதை அறிய முடிகிறது. வழக்கமாக மற்றவர்கள் காண இயலாத அந்தச் சடங்கை நூலாசிரியர் காணச் சென்ற சம்பவம் திகிலுடன் விவரிக்கப்பட்டுள்ளது.

'கடத்தப்பட்ட கணியான்' என்கிற அத்தியாயம் கிராமப் புறங்களில் இன்றும் நிலவி வரும் சாதி ரீதியான தீண்டாமை எனும் விருட்சத்தின் ஒரு கிளையை அறிய உதவுகிறது. விஷயம் இதுதான். தாம் நடத்தும் கோவில் திருவிழாவில் கணியான் ஆட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றனர் தலித் மக்கள். ஆனால் கலைஞர் வருவதாயக் காணோம். விசாரித்த போது பேருந்தில் இருந்து இறங்கின அவரை 'அந்த' சாதிக்காரர்கள் சிறைப்பிடித்து வைத்திருக்கும் தகவல் தெரிகின்றது. தம்முடைய கோயில்களில் கூத்து நடத்தும் அதே கலைஞர் தலித் கோவிலிலும் ஆட்டத்தை நிகழ்த்துவதை பிற சாதிப் பிரிவினர் விரும்பவில்லை. தீட்டு பட்டுவிடும் என நினைக்கின்றனர். பிறகு ஒருவழியாக பேசி அவரை அழைத்து வந்து விடுகின்றனர். நிகழ்ச்சி நடக்கிறது.

இதுமாதிரியான பல அனுபவங்களோடு நாட்டார் கலைஞர்களைப் பற்றின தனிப்பட்ட தகவல்கள், விளிம்பு நிலையில் தவிக்கும் அவர்களின் சமூகம், குடித்தே அழியும் அவர்களின் பரம்பரைச்சுமை, புராதன கலையை தொடர விரும்பாத வாரிசுகள் என பல விஷயங்கள் நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

()

நூலாசிரியரின் அனுபவங்களிலிருந்து ஒரு ஆய்வாளர் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.

  • தாம் ஆய்வு நடத்தச் செல்லும் மக்களின் நம்பிக்கைகளுடன் நாம் முரண்படலாம். அதற்காக அவற்றை விவாதம் செய்யக் கூடாது. அது ஆய்விற்கும் சமயங்களில் ஆய்வாளருக்கும் சேதாரத்தை ஏற்படுத்தலாம்.
  • விவரங்களைத் தரச் சொல்லி தகவலாளியைக் கட்டாயப்படுத்தக் கூடாது. முறையான பேட்டிகளை விட இயல்பான உரையாடல்களில் பல சுவையான தகவல்கள் வெளிப்படலாம். கூடவரும் நண்பர்கள் சில வேளைகளில் வந்திருக்கும் நோக்கத்தினை பாழ்படுத்திவிடலாம்.
  • செல்லுமிடங்களில் கூடுமானவரை உள்ளூர் நபர்களின் அறிமுகத்துடன் செல்வது நல்லது. இல்லையெனில் ஊர் மக்களின் சந்தேகத்தில் விழ நேரிடும். பொதுவாக கிராமத்தவர்களின் முதல் கேள்வியே "தம்பி யாரு" என்பதாகத்தான் அமையும். அதில் 'தம்பி என்ன சாதி?" என்கிற கேள்வியும் அடக்கம். அவர்களின் பின்னணியில் இயல்பான அந்தக் கேள்வியை புரிந்து கொண்டு நாம்தான் பதமாக பதிலளிக்க வேண்டும் முற்போக்குத்தனமாக "மனுஷ சாதி" என்றெல்லாம் சினிமா வசனம் பேசினால் அந்த ஊரின் மருத்துவரையும் ஒரு வேளை காண நேரிடும்.
  • ஆய்வாளர் உணர்ச்சிவசப்படாமல் இருத்தல் நல்லது. உள்ளூர் விவகாரங்களில் தலையிடவோ மாட்டிக் கொள்ளவோ கூடாது.
  • ஆய்வாளர்கள் புத்தகங்கள் எழுதி நிறையச் சம்பாதிக்கிறார்கள் என்கிற எண்ணம் தகவலாளியின் அல்லது பொதுவான அபிப்ராயமாக இருக்கிறது. இதை முறையாக கையாள வேண்டும். பெருமாளின் மாணவி ஒருவர் தம்முடைய ஆய்வின் போது தகவலாளிகளுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இனிப்புகள், உடைகள் என்று வாங்கித் தர இதைப் பிடிக்காதவர்கள் 'அவர் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்திருக்கிறார்" என்று கிளப்பிவிட அவரை வீட்டுச் சிறைப் பிடித்த சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
  • ஆய்வு முடிவுகளை தொகுத்து தரும் போது சாதி, சமூக வழக்கம் போன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். சுந்தரலிங்கம் என்கிற பெயர் பிற்பாடான கலவரத்திற்கு விதையாக இருந்ததை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அது போல் குறிப்பிட்ட இனத்தினவரின் சமூகப் பழக்கங்களை தவறாக புரிந்து கொண்ட ஒரு ஆய்வாளர் அதை விபச்சாரத்தோடு தொடர்புப்படுத்தி எழுதிவிட அது பத்திரிகைகளில் பரபரப்பாக வெளிவந்து சம்பந்தப்பட்ட இனத்தினர் காவல்துறையினரின் தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆய்வாளர்களுக்கு உதவக்கூடிய இவ்வாறான பல தகவல்கள் கட்டுரைகளின் ஊடாக நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன.

()

பின்ணிணைப்பாக உள்ள சொல்புதிது பேட்டியில் அ.கா பெருமாள் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது. 'நாட்டார் வழக்காற்றியலுக்கும் செவ்விலக்கியத்துக்கும் உள்ள உறவு குறித்த நிலை என்ன?' என்பது ஒரு கேள்வி. .. நீலி கதையின் கூறுகள் சம்பந்தர் காலத்திலிருந்து தொடர்ந்து செவ்விலக்கியங்களில் வருவதும் பெரியாழ்வார் தாலாட்டு வடிவத்தைப் பயன்படுத்தியதும் பிற்காலத்தில் இது பிள்ளைத் தமிழ் வகையில் தனிப்பருவமாக வெளிப்பட்டது போன்ற பல தகவல்களை இந்தக் கேள்விக்கான பதிலில் காண முடிகிறது.

ஏற்கெனவே கூறியபடி ஆய்வு மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மாத்திரமல்லாது ஒரு பொதுவான -குறிப்பாக நகர்ப்புற - வாசகனுக்கு உபயோகமுள்ள பல சுவையான தகவல்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.

நூல் விவரம்:

சுண்ணாம்பு கேட்ட இசக்கி - அ.கா.பெருமாள்
யுனைடெட் ரைட்டர்ஸ்
முதல் பதிப்பு: நவ 2006
விலை ரூ.85/-

image courtesy: http://www.udumalai.com/





suresh kannan

பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்

இரண்டே பிரதான பாத்திரங்கள், 10 KB அளவேயுள்ள சொற்ப வசனம், அதிகம் சுவாரசியமூட்டாத லொக்கேஷன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமானதொரு சர்வதேச தரமுள்ள திரைப்படத்தை தந்துவிட முடியுமா?. முடியும் என்று நிருபித்திருக்கிறார் Lee Jeong-hyang. ஆறு வயதுள்ள ஓர் அடாவடிச் சிறுவன், நிபந்தனையில்லா அன்பை கொட்டும் ஓர் ஊமைக் கிழவி ஆகிய இருவரைச் சுற்றியே இயங்குகிறது கொரியத் திரைப்படமான The Way Home.



சிறுவனின் தாய்க்கு பணிச் சூழல் காரணமாக தன் மகனை கிராமத்திலிருக்கும் அவனுடைய பாட்டியின் பாதுகாப்பில் சிறிது காலத்திற்கு விட்டு வைத்திருக்க வேண்டியதொரு சூழ்நிலை. அதுவரை நகரத்தின் நவீன நிழலிலேயே வளர்ந்திருக்கிற சிறுவன் கிராமத்து ஊமைக் கிழவியை உலக அளவிற்கு வெறுக்கிறான். அவளுடைய செருப்புகளை ஒளித்து வைக்கிறான். கொண்டை ஊசியைத் திருடி விளையாட்டுக் கருவி பேட்டரிகளை வாங்க முடியுமா என்று சோதிக்கிறான். வறுத்த கோழி வேண்டுமென்று கிழவியை வறுத்தெடுக்கிறான். பிறகு சிறிது சிறிதாக அவளின் மெளனமான அன்பைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு பிறகான காட்சிகள் பயணிக்கின்றன.

நகர்ப்புற பின்னணியில் வளர்கிற இன்றைய குழந்தைகளின் பிரதிநிதியை அந்தச் சிறுவனின் மூலம் காண முடிகிறது. கூடவே நகரமயமாக்கலின் அபத்தத்தையும். கிழவியிடம் ஒரு வார்த்தை கூடப் பேச விரும்பாமல் தன்னுடைய வீடியோ கேம்முடனே பொழுதைக் கழிக்கிறான்; விளையாட்டுச் சீட்டுகளிடம் உரையாடுகிறான்; பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கிற உணவை மாத்திரமே விரும்புகிறான்.

சிறுவன் கிராமத்து மனிதர்களை வெறுப்பதை படம் ஆரம்பிக்கிற சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு இயக்குநர் உணர்த்தி விடுகிறார். கிராமத்து பேருந்தில் பயணிக்கும் அவன், சுற்றி அமர்ந்திருக்கும் மனிதர்களின் உரத்த சிரிப்பையும் தன்னருகே அமர்ந்திருப்பவள் மேலே சாய்ந்து கொண்டே வருவதையும் விரும்புவதில்லை. கிழவியின் எளிமையான வீட்டுச் சூழலையும் அருவெறுப்புடனே பார்க்கிறான்.

கிழவியின் மீது சிறுவனின் அன்பு மெல்ல வெளிப்படும் காட்சி கவிதையான ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. கொடியில் காயப் போடப்பட்டிருக்கும் துணிகள் மழையில் நனைய ஆரம்பிக்கும் போது தன்னுடைய உடைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்புகிறவன், சற்று யோசித்து பிறகு பாட்டியின் உடைகளையும் எடுத்து வருகிறான்.

பாட்டியின் சைகை மொழி அவனுக்கு முதலில் எரிச்சலை ஏற்படுத்தினாலும் பிறகு இயல்பாக அது அவனுக்குள்ளும் ஒட்டிக் கொள்கிறது. 'மன்னித்துவிடு' என்பதை கையை மார்பின் மீது வட்டமிட்டுக் காட்டுகிறாள் கிழவி. தன்னை விட பெரிய சிறுவன் ஒருவனை விளையாட்டாக கீழே விழ வைத்துவிட்டு பிறகு பயந்து போய் அவனிடம் மார்பின் மீது வட்டமிட்டு காட்டி விட்டு ஓடிவந்து விடுகிறான். படம் நிறைவடையும் காட்சியிலும் தாயுடன் திரும்பிப் போகும் போது அதுவரை தான் செய்த அத்தனை தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கும் விதமாக அழுகையுடன் அதே சைகையை ஜன்னலின் வழியின் பாட்டிக்குக் காட்டுகிறான்.

()

தாத்தா-பாட்டி-பேரன்-பேத்தி உறவு மிக அலாதியானது. தமக்குப் பிறந்தவர்களைக் காட்டிலும் அவர்களுக்குப் பிறந்தவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் மனித உறவின் உளவியல் பின்னணி என்னவென்று புரியவில்லை. இயற்கையின் ஆதார சுருதியும் நோக்கமும் உயிர்களின் சுழற்சியே. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாரிசுகளை தம்முடைய நீட்சியின் அடையாளமாகவே கண்டு மகிழ்கிறான். நீட்சியின் தொடர்ச்சி இன்னும் அவனுக்கு அதிக மகிழ்வை ஏற்படுத்துகிறது என்று இதைப் புரிந்துக் கொள்கிறேன்.

சிறுவனின் அத்தனை அழிச்சாட்டியங்களையும் அந்தக் கிழவி தன்னுடைய மெளனமான அன்பால் கடந்து செல்கிறாள். உலகத்தின் அத்தனை சோகங்களையும் தாங்கி நிற்கிற மாதிரியான அவளது முகம் நமக்குள் மிகுந்த நெகிழ்வை ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் அவளது முகபாவங்கள் அத்தனை எளிதில் வெளிப்படுவதில்லை. ஜப்பான், சைனா, கொரியா போன்ற நாட்டு மக்களின் முகத்திற்கு பொதுவான அம்சமிது. என்றாலும் உடல் மொழியிலேயே அவளது அத்தனை அன்பும் வெளிப்படுகிறது.

இரண்டு கிழவிகள் உரையாடிக் கொள்ளும் ஒரு காட்சி மிக முக்கியமானது. சொற்ப நேரமே இது நிகழ்ந்தாலும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிற கசப்பையும் தங்களின் உடல் உபாதைகளின் வேதனையை பரிமாறிக் கொள்வதின் மூலம் அதற்கான ஆசுவாசம் கிடைப்பதையும் இந்தக் காட்சிகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

சிறுவன் வாங்கி வரச் சொன்ன சாக்லெட்டுக்காக கடைக்கு ஊர்ந்து செல்கிறாள் கிழவி. கடைக்காரி அவளுடைய தோழிதான். இவள் ஊமை என்றாலும் கூட இவளுக்கும் சேர்த்து கடைக்காரியே பேசுகிறாள் ஊமைக்கிழவி தன்னுடைய உடல் மொழியின் மூலமே அவளை ஆமோதிக்கிறாள். சாக்லேட்டுக்கு காசு வாங்கிக் கொள்ள மறுக்கும் கடைக்காரியிடம் அன்பளிப்பாக தன்னுடமிருந்த பூசணிக்காயை வழங்குகிறாள் ஊமைக்கிழவி.

என்னுடைய அனுபவத்திலேயே இதே போன்றதொரு அனுபவத்தை பார்க்க நேர்ந்திருப்பதால் எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின. கிழவியை பிரிவதற்கு முன்னிரவு அவளுடைய வசதிக்காக இருக்கும் எல்லா ஊசிகளிலும் சிறுவன் நூலைக் கோர்த்து வைக்கும் காட்சியையும் சொல்லாம். இந்தச் செயலை முன்பெல்லாம் எரிச்சலுடனேயே செய்து தருவான் அவன்.





பார்வையாளர்களிடம் சற்று வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவனது குறும்பு அமைந்திருந்தாலும், அவனது குழந்தைமை வெளிப்படும் இயல்பான காட்சியையும் இணைத்து இதை சமன் செய்திருக்கிறார் இயக்குநர். தான் மலம் கழிப்பதை கிழவி காண்பதை விரும்பாத சிறுவன், நள்ளிரவில் மலம் கழிக்க நேரும் போது பயத்தில் கிழவியை அருகாமையில் அமரச் சொல்கிறான். அவனுடைய விடலைப் பருவத்தின் தொடக்கத்தை, வீட்டின் அருகே சிறுமி ஒருத்தியின் கவனத்தைக் கவர முயல்வதும், அசிங்கமாக முடிவெட்டிவிடும் பாட்டியைக் கோபித்துக் கொள்வதின் மூலமாக இயக்குநர் அற்புதமாக சித்தரித்திருக்கிறார். 

()

பொதுவாக ஆசியத் திரைப்படங்களைக் காணும் போது அவற்றை மனதிற்கு மிக நெருக்கமானதாக என்னால் உணர முடிகிறது. கொரியக் கிராமத்து கிழவி மற்றும் தமிழகக் கிராமத்து கிழவி ஆகியோர்களின் இடையில் என்னால் அதிக வித்தியாசத்தை காண முடியவில்லை. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வசனங்களின் துணையின்றியே நகர்கிறது. பின்னணி இசையைச் சற்றுக் கூர்ந்து கவனித்தேன். தேவையான இடங்களில் மாத்திரமே மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்களை நெகிழ வைக்கும் நோக்கத்துடன் சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்த செயற்கைத்தனத்துடன் இருந்தாலும் அவை பார்வையாளனின் முழுமையான அனுபவத்தைத் தடை செய்வதில்லை.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இடையிடையே எனக்கு இன்னொரு திரைப்படமும் நினைவில் வந்துக் கொண்டேயிருந்தது. Central Station. அதுவும் இதே போன்றதொரு கிழவி- சிறுவனைப் பற்றின திரைப்படம்தான். ஆனால் அதில் வரும் கிழவி சிறுவனின் குறும்புகளுக்கு எரிச்சலுடன் பதிலடி தந்து கொண்டேயிருப்பாள். பிறகுதான் இருவருக்குமான நேசம் படரும்.

'உலகெங்கிலுமுள்ள பாட்டிகளுக்குச் சமர்ப்பணம்' என்ற குறிப்புடன் நிறைவடையும் இம்மாதிரியான திரைப்படங்களின் தேவை முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சமகால சூழ்நிலையில் மிகுந்த அவசியத்தை உணரச் செய்கின்றன.

()

'உரையாடல்' அமைப்பின் சார்பில் சிவராமன் ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் சக இணையப் பதிவர்ளோடு இத் திரைப்படத்தைக் கண்டேன். ஏற்கெனவே பார்த்திருந்த திரைப்படம்தான் என்றாலும் மீண்டும் காண்பதில் எந்தவித சலிப்பும் ஏற்படவில்லை என்பது திரைக்கதையின் பலத்தை சுட்டிக் காட்டுகிறது. திரையிடலுக்குப் பின்னால் ஏற்கெனவே அறிமுகமான பதிவர்களோடு புதிதாக அறிமுகமான தண்டோரா, எவனோ ஒருவன், கேபிள் சங்கர், வெண்பூ, பட்டர்பிளை சூர்யா...  போன்ற பதிவர்களோடு உரையாட முடிந்தது.

ஒவ்வொரு திரையிடலின் இறுதியிலும் பார்வையாளர்களிடையே திரைப்படத்தைப் பற்றின கலந்துரையாடலை கட்டாயமாகவாவது சேர்ப்பது ஒரு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட படத்தை எவ்விதம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். சிவராமன் இது குறித்து யோசிக்க வேண்டுகிறேன். இந்தத் தொடர்ச்சியான திரையிடலுக்கு உறுதுணையாக இருக்கும் 'கிழக்கு பதிப்பகம்' நன்றியோடு நினைவு கூரப்பட வேண்டியது. 

suresh kannan

Wednesday, January 13, 2010

விண்ணைத் தாண்டி வரும் ரஹ்மானின் இசை



நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த இந்தத்  திரைப்படத்தின் இசைப்பாடல்கள் நேற்று வெளியாகியது. இதுவரை ஹாரிஸ் உடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த கெளதம் மேனன் முதன் முறையாக ரஹ்மானை அணுகியதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. ஆஸ்கர் வாங்கின கையோடு வெளிவரும் ரஹ்மானின் முதல் தமிழ் சினிமா இசை என்பதும் கூடுதல் காரணம். இதன் இசை வெளியீட்டு விழா லண்டனில் நிகழ்ந்திருந்தாலும் தமிழ்நாட்டில் இப்போது ரீலிஸாகி குறுந்தகட்டிற்கான விற்பனை முன்பதிவே சில ஆயிரங்களைக் கடந்து விட்டது என்று மியூசிக் கம்பெனி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி உண்மையாக இருக்கலாம். கெளதமின் ஆஸ்தான பாடலாசிரியை தாமரையே எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் என்பது கேட்பனுபவத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்கிறது.
ரஹ்மான் இந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டார் என்றுதான் தோன்றுகிறது. இந்த இசைப்பாடல்களில் ரஹ்மானின் படைப்பு இன்னும் கூடுதல் தரத்துடன் இருப்பதாகத் தோன்றுவது என்னுடைய பிரமையாகவும் இருக்கலாம். ரஹ்மான் இப்போது சர்வதேச இசை சமூகத்துக்கு மிக நெருக்கமானவராகி விட்டதால் தம்முடைய படைப்புகள் எல்லாவிதத்திலும் அந்த தரத்திற்கு ஈடுகொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தன்னுடைய இசைக்கோர்வைப் பணியை இன்னும் மேம்படுத்தி செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

இசை குறித்த எந்தவொரு அடிப்படை ஞானமும் இல்லாவிட்டாலும், தமிழ்த் திரைப்பாடல்களை தொடர்ந்து கேட்டு வருபவன் என்கிற முறையில் 'ஒரு பாமரனின்' பார்வையில் இது எழுதப்பட்டது என்பதை மாத்திரம் நினைவில் நிறுத்தவும்.

(1) ஓமணப் பெண்ணே..

அற்புதமான மெலடியிது. 'அழகிய தமிழ் மகன்'-ல் .'நீ மர்லின் மன்றோ' பாடின அதே ஸ்டைலிஷான பாணியில் மிகவும் அனுபவித்துப் பாடியிருக்கிறார் பென்னி தயாள். ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பின்னணியில் ஒலிக்கிற அற்புதமான ரிதம். இடையில் கல்யாணி மேனன் பாடின மலையாள வரிகள் வருவதால், நாயகன் நாயகியை மலையாளப் பின்னணியில் ரசித்து பாடுகிற பாடலாக இருக்கலாம். பாடலின் தலைப்பும் அதை உறுதிப்படுத்துகிறது. பாடலின் இறுதிப் பகுதியில் மேற்கத்திய இசைக்கருவிகளோடு தமிழிசையான நாதஸ்வரமும் மிக அற்புதமான கலவையாக இயைந்து ஒலிக்கிறது. தாமரையின் வரிகளில் குறிப்பிடத்தகுந்த எந்த புதுமையில்லை. .. நீ போகும் வழியில் நிழலாவேன்..' என்கிற மாதிரியான வழக்கமான தமிழ்சினிமா வரிகள்தான்.

ரஹ்மான் ரசிகர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைவருக்கும் பிடிக்குமென்பதால் நிச்சய ஹிட்.

(2) அன்பில் அவன்...

தேவனும் சின்மயியும் பாடியிருக்கிறார்கள். சற்று வேகமான தாளஇசை கொண்ட peppy நம்பர். தேவனுக்கு மேற்கத்திய இசைக் குறித்த ஞானமிருப்பதால் அவரால் இதில் சுலபமாக ஒட்டிக் கொள்ள முடிகிறது. என்னவொன்று அவருடைய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்புதான் சற்று நெருடலாக இருக்கும். சின்மயி தானொரு அற்புதமான பாடகி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்து ஒரே மாதிரியாக ஒலிக்கும் ரிதம் தாளம் போட்டு கேட்க வைக்கிறது. ரஹ்மானின் முக்கிய பலம் தாள இசையை மிக அற்புதமான பயன்படுத்துவது. இதில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. இதில் தாமரை தன்னுடைய திறமையை நிரூபிக்க எந்த வாய்ப்புமில்லை என்றுதான் தோன்றுகிறது. நாயகனும் நாயகியும் திருமணத்திற்கான முன்னேற்பாட்டையும் அதற்கான வாழ்த்தையும்தான் கேட்க முடிகிறது. 'நீளும் இரவில் ஒரு பகலும் நீண்ட பகலில் சிறு இரவும் கண்டு கொள்ளும் கலை அறிந்தோம், எங்கு அதைப் பயின்றோம்' என்ற வரிகளை மாத்திரம் ரசிக்க முடிகிறது.

இதுவும் நிச்சயமாக ஹிட்டாகலாம்.

(3) விண்ணைத் தாண்டி வருவாயா..

படத்தின் தலைப்புப் பாடல். சோகப் பாட்டு (pathos) வகை போல் ஒலிக்கிறது. unplugged போல் மிகச் சொற்ப இசைக்கருவிகளே பின்னணியில் ஒலிக்கின்றன. அதில் பிரதானமாக ஒலிக்கும் கிட்டாரின் இசைக்கோர்வை அற்புதம். துள்ளலான பாடல்களில் திறமையாக சோபிக்கும் கார்த்திக் தம்மை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பாடியிருக்கிறார் என்று யூகிக்கிறேன். என்றாலும் சூழலின் சோகத்தை மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கேட்பனுபவத்திற்கு அந்தளவிற்கு திருப்தியாக இல்லையெனினும் காட்சிகளோடு பார்க்கும் போது சுவையாக இருக்கும் என நினைக்கிறேன்.

சோக மெலடியை விரும்புவர்களுக்கு பிடிக்கலாம்.

(4) ஹொசன்னா...

இந்த ஆல்பத்தின் அற்புதமான இன்னொரு மெலடி. இந்தப் பாடல் இணையத்தில் கசிந்து ஏற்கெனவே ஹிட்டாகி விட்டது. ரஹ்மானின் குரலோ என்கிற மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்பிரகாஷ் அற்புதமாக பாடியிருக்கிறார். சமயங்களில் நெருடலை ஏற்படுத்தும் பிளாசேவின் ராப் இதில் மிகப் பொருத்தமாக இயைந்திருக்கிறது.  ஹொசன்னா.. என்கிற ஒரே வார்த்தையை மாத்திரம் பின்னணியில் விதம் விதமாக பாடும் Suzzane-ன் குரல் தேவதையின் குரல் போலவே ஒலிக்கிறது. பாடலின் அற்புதமான percussion-ம் interlude-களும் மீண்டும் மீண்டும் கேட்கும் விருப்பத்தை ஏற்படுத்துகின்றன. ரஹ்மானின் முத்திரை மிகப் பலமாக விழுந்திருக்கும் பாடல்.

நிச்சய ஹிட்.

(5) கண்ணுக்குள் கண்ணை..

எனக்குப் பிடித்த நரேஷ் ஐயர் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். ஆனால் நரேஷின் மிகப் பெரிய பலம் மெலடி. 'முன் தினம் பார்த்தேனை' இதுவரை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். ஒரே காரணம் நரேஷின் குரல். ஆனால் இதில் வேகமான தாள இசை கொண்ட பாடலை நரேஷிற்கு கொடுத்து ரஹ்மான் ஒரு சிறிய அநியாயம் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. எல்லாவிதமான வகை பாடல்களையும் ஒரு பாடகர் பாடத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றாலும் கூட. ஆனால் இதையும் மீறி நரேஷின் அற்புதமான குரலை ரசிக்க முடிகிறது. குறிப்பாக உச்ச ஸ்தாயியில் நரேஷின் குரல் சஞ்சரிக்கும் போது எந்தவித நெருடலும் இல்லாமல் வந்து இறங்குகிறது.

ஹிட்டாவது சற்று சந்தேகம்தான் என்று நினைக்கிறேன்.

(6) மன்னிப்பாயா...

ஸ்ரேயா கோஷல் எனும் தேவதையும் ரஹ்மானும் பாடியிருக்கிறார்கள். ரஹ்மான் தன்னுடைய பிரத்யேக குரலில் சிறப்பாக பாடியிருந்தாலும் (உருகி.. உருகி..யை கவனியுங்கள்) ஸ்ரேயா மிக எளிதாக இவரை எளிதாக ஓவர்டேக் செய்திருக்கிறார். அற்புதமான மெலடி. ரஹ்மானின் இசைக்கோர்வையின் வசீகரம் மயங்க வைக்கிறது.

'திருக்குறளுக்கு' இசையமைப்பதை தன்னுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்றாக ரஹ்மான் ஒரு நேர்காணலில் கூறியிருந்த ஞாபகம். அதற்கான முன்னோட்டமாக இந்தப் பாடலில் நான்கு குறட்களை உறுத்தாமல் நுழைத்திருக்கிறார். ..'உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே.. என்ற வரிகளில் மாத்திரம் தாமரை வெளிப்படுகிறார்.

இந்தப் பாடல் காட்சிகளின் பின்னணியில் சிறப்பாக இருக்கும் என யூகிக்கிறேன். கெளதம் மேல் நம்பிக்கையிருக்கிறது. நடுநிசியில் இந்தப் பாடலை கேட்டால் நிச்சயம் கண்ணீர் வரலாம்.

சோக மெலடி ரசிகர்களின் ஜாக்பாட்.

(7) ஆரோமலே....

அபத்தமான தமிழ்சினிமா இசைச் சூழலில் ரஹ்மானால் மாத்திரம்தான் இந்த மாதிரியான பரிசோதனை முயற்சிகளில் துணிச்சலாக  ஈடுபடமுடியும்.

தனக்குப் பிடித்த ஆளுமைகளில் ஒன்றான நுஸ்ரத் பதே அலிகான் பாடும் தன்மையிலிருந்து இந்தப் பாடலை ரஹ்மான் உருவாக்க முனைந்திருக்கலாம் என்று யூகிக்கிறேன். அல்போன்சின் unromantic குரல் உச்ச ஸ்தாயியில் எகிறும் போது சற்று பயமாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது. சூ·பி இசையும் தமிழிசையின் ஒப்பாரி வகையும் கலந்ததொரு உணர்வும்  ராக் இசையை கேட்கும் துடிப்பான பரவசமும் இந்தப் பாடலை கேட்கும் போது ஏற்படுகிறது. என்றாலும் தமிழ் சினிமா இசை ரசிகர்கள் இதுவரை சந்தித்திராத ஒரு தளத்தில் இப்பாட்டு இயங்குகிறது என்பதை மாத்திரம் சொல்ல முடியும். 

எழுத்தாளர் கோணங்கி எழுதினதோ என்று சந்தேகப்பட வைக்கும் மலையாள வரிகள் வசீகரத்தை ஏற்படுத்துகின்றன.

துணிச்சலான பரிசோதனை முயற்சி. 




ரஹ்மானின் இந்த இமாலய புகழும் சர்வதேச விருதுகளும் அவரின் கடும் உழைப்பால் கிடைத்தது என்கிற உண்மையை இந்தப் பாடல்கள் உரக்கச் சொல்கின்றன. தமிழ் சினிமாவின் இசை சற்று முதிர்ச்சியான திசையில் நடக்கத் துவங்கியிருக்கின்றது என்பதற்கான அடையாளமாக இந்த ஆல்பத்தைச் சொல்ல முடியும். மொழி அறியாத, சர்வதேச இசையில் கேட்பனுபவம் உள்ள ஒருவரால் கூட இந்த இசையை மிக நெருக்கமாக உணர முடியும்.

முதல் கேட்பில் சற்று தொய்வை ஏற்படுத்துகிற சில பாடல்கள் மாத்திரம் மீண்டும் மீண்டுமான அனுபவத்தில் நிச்சயம் பிடித்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ரஹ்மானின் இசையை கேட்டுவரும் முந்தைய அனுபவங்களிலிருந்து இதை எளிதாகச் சொல்ல இயலும்.

இந்த ஆல்பத்தின் மிகப் பெரிய ஏமாற்றம், தாமரை. முந்தைய அனுபவங்களிலிருந்து மிகச் சிறந்த வரிகளை எதிர்பார்த்திருந்த எனக்கு தாமரையும் சொல்லிக் கொள்கிறாற் போல் அல்லாத பங்களிப்பு ஏமாற்றத்தைத் தருகிறது. நிற்க. இதற்காக அவரைக் குறைச் சொல்ல விரும்பவில்லை. இயக்குநரோ, இசையமைப்பாளரோ அவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமலிருந்திருக்கலாம் அல்லது குறுகிய வட்டத்திற்குள் இயங்கச் சொல்லி கட்டாயப்படுத்திருக்கலாம்.

ஹாரிஸ்-கெளதம் கூட்டணி உடைந்து போனது சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், ரஹ்மான் தனது மேஜிக்கால் அந்த வருத்தத்தை துடைத்தெறிந்திருக்கிறார். பாடல்களை காட்சிரீதியாக சற்று கற்பனை செய்து பார்க்கும் போது த்ரிஷா கூட பொருந்திப் போவார் என்று தோன்றினாலும் 'டன்டணக்கா' இமேஜை வைத்திருக்கும் சிம்புவை கற்பனை செய்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. பார்க்கலாம். படத்தின் ஸ்டில்களையும் பாடல்களையும் கேட்ட பிறகு சிம்புவை விட 'உன்னாலே உன்னாலே' வினய், இந்தத் திரைப்படத்திற்கு பொருத்தமாய் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது. சிம்புவிற்கு இருக்கிற வணிக மதிப்பு வினய்க்கு இருக்காது என்பதுதான் ஒரே மைனஸ்.

ரஹ்மானின் இந்த ஆல்பம் பண்பலை வானொலிகளின் புண்ணியத்தில் விண்ணைத் தாண்டி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பது மாத்திரம் நிச்சயம்.

image courtesty: http://chennai365.com/movies/vinnaithandi-varuvaya-audio-launch-stills/


suresh kannan

Monday, January 11, 2010

ரெட்டைத் தெரு மனிதர்கள்

Nostalgia எழுதுவதில் ஒரு அசெளகரியமும் நெருடலும் இருக்கிறது. பெரும்பாலும் எல்லோருடைய பால்யமும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருந்து தொலைக்கும்.

ஆண்களுக்கு, தாயின் முந்தானை வாசனை, ஊரிலிருந்து வந்த சித்தி கன்னத்தில் கிள்ளின அழுத்தம், சைக்கிள் கற்ற  முழங்கால் ரத்தம், குறுகுறுவென்று பார்க்கத் தூண்டின எதிர்வீட்டு மாலு, சிடுசிடு மாமி குளிப்பதை தெரிந்தோ தெரியாமலோ பார்த்து விக்கித்துப் போனது, பத்து குத்து பாறாங்கல்லில் பம்பரத்தை இழந்த அழுகை, முதல் காதல் கடிதம், கரமைதுனம், முத்தம், வாத்தியார் அடி, காசு திருட்டு... போன்ற நியூரான் சமாச்சாரங்கள் சாக்பீஸ் மற்றும் டீச்சரின் பவுடர் வாசனையுடனும் நினைவுக்கு வரும்.

பெண்களுக்கு அப்பாவின் மீசை, "ஏன் என்னுடையது மாதிரி உன்னுடையது இல்ல?" என்ற பாலுவின் biological சந்தேகம், முதல் கொலுசு, 'டிரஸ்ஸ ஒழுங்கா போடு' என்று காரணமேயில்லாமல் எரிந்துவிழும் அம்மா, விசித்திரமான 'அந்த' முதல் வயிற்றுவலி, கவலையை ஏற்படுத்தின பருக்கள், எதிர்கால சந்தோஷத்துடன் அடித்த asdfgh, கழுத்துக்குக் கீழே பார்க்கும் நடுத்தரவயது ஆண்கள், முதல் காதல், அதன் காரணமாக வாங்கின அடி, ஆணின் முதல் ஸ்பரிசம்...என்று  என்னால் யூகிக்கத்தான் முடியும். ஆனால் பெண்கள் அழுத்தமானவர்கள். பொக்கை வயதிலும் அத்தனை சீக்கிரம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களல்ல.

ஆக... எல்லோரும் இதே ஸ்ருதியில் பாட ஆரம்பிக்கும் போது, முத்துலட்சுமி மாதிரி 'அதான் தெரியுமே' என்ற சலிப்புதான் பெரும்பாலான வாசகர்களுக்குத் தோன்றும். ஆனால் நுணுக்கமான விவரணைகள், அபாரமான நகைச்சுவை, சுவாரசியமான நடை போன்றவற்றின் மூலம் இந்த அசெளகரியத்தைத் தாண்டி வரமுடியும். இவையெல்லாமே இரா.முருகனுக்கு இயல்பாகவே அமைந்திருப்பதால் தனது 'நோஸ்டால்ஜியாவை' (எழுத்துப் பிழையோ என்று நினைப்பவர்கள் புத்தகத்தைப் படிக்கவும்) பிரத்யேகமான நடையில் அற்புதமாக எழுத முடிந்திருக்கிறது.



ஊர். அப்படிச் சொன்னால் போதும். கிராமமா அது? நிச்சயமாக இல்லை... என்று விஸ்தாரமாக துவங்குகிற,  40, ரெட்டைத் தெரு நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்தத் தெருவின் மனிதர்கள் சலிக்காமல் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கர்னாடக சங்கீத மெஸ் மாமி, கூடவே சுருதிப் பெட்டியோடு அவரது ஆத்துக்காரர், ஆறு புஷ்பம், நேரங்காலமில்லாமல் சாவு விழுந்து கொண்டேயிருக்கிற வீடு, பளாரென்று அறைந்த ராஜமன்னார் வாத்தியார், குண்டு ராஜூ, வெங்காயச் சட்னியைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி சாப்பிடும் 'உளவுக்கார' சைனாக்காரர், எப்போதும் புறா வரைகிற டிராயிங் மாஸ்டர், கடந்த வருட வயிற்றுப்போக்கை நினைவு வைத்திருக்கும் ஆனந்தன் டாக்டர்... (ம்ஹ¥ம்.. மொத்தமும் எழுதினால் விடிந்துவிடும்) இப்படியானவர்களோடு காரில் வந்திறங்கிய சின்ன வயசு வெளியூர் கமல்ஹாசனும் உண்டு.

அது மாத்திரமல்லாமல் காக்கி டிரவுசரை மாட்டிக் கொண்டு இந்தப் புத்தகம் பூராவும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டேயிருக்கும் பத்து வயது முருகன்.

()

.. கற்பக விநாயகர் கோயில் தலையில் சின்னக் கோபுரம் தவிர மற்றப்படி முன்னால் தோட்டம், வாசலில் கம்பி கேட், நடையில் டியூப் லைட், என்று கோகலே ஹால் தெரு வீடுகளை அச்சு அசலாக ஒத்திருக்கும். கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் சந்நிதியை வலம்வரும் போது சுவர் முழுக்க மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் பெரிய புகைப்படங்களிலிருந்து  உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்... (பக்கம் 88)

இது ஒரு உதாரணம்தான். இத்தனை வருடங்களாகியும் தன்னுடைய பால்ய ஊரின் இண்டு இடுக்குகளை எவ்வாறு முருகனால் இவ்வளவு நுணுக்கமாக நினைவு கூர முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் இப்படியெல்லாம் எழுத வேண்டுமானால் வல்லாரைக் கீரையை.... அல்ல தோட்டத்தையே மேய்ந்தால்தான் உண்டு. பரவாயில்லை. 'செம்மீன்' படம் பார்க்க குண்டு ராஜூவும் கூட வந்ததை மறந்த சின்ன சின்ன பிசகுகளை மன்னித்துவிடலாம்.

முதன்முதலாக இரா.முருகனின் அவசர நடையை ப(பி)டிக்க நேர்பவர்கள் சுதாரித்துக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஜன்னல் காட்சிகள் போல அவரது எழுத்து சட்சட்டென்று வளைந்து வளைந்து நிறம் மாறி ஓடிக் கொண்டேயிருக்கிறது. வாத்தியார் சுருக்கமாக சொன்னது போல் எம்.டி.வி நடையேதான். ஆனால் சற்று கூர்ந்து பார்த்தால் எப்படியோ துவங்கின இடத்திற்கு பொருத்தமாக விபத்து ஏதும் நேராமல் வண்டி வந்து சேர்ந்து விடுகிறது.

ஒரு எழுத்தாளனின் பால்ய நினைவுகள் எப்படி அவனுடைய படைப்புகளின் ஊடாக நுழைந்து செல்கிறது என்பதற்கான தடங்களை இந்நூலில் காண முடியும். இரா.முருகன் எழுதுகிறார்..

'நான் கல்லூரி சென்ற போது முனிசிபாலிட்டி ஹெல்த் இன்ஸ்பெக்டர் சோதனையிட்டு சாமராஜூவின் கடையை அசுத்தமான உணவுப் பொருள் விற்றதற்காக சீல் வைத்தார்கள். லிங்கராஜூ, பக்கத்து கிராமத்தில் பம்ப்செட் மோட்டார் ரிப்பேர் செய்யும் போது கால்தவறி கிணற்றில் விழுந்து இறந்ததும் அப்போதுதான். ரொம்ப நாள் கழித்து, நான் கதை எழுத ஆரம்பித்த போது பெரியாத்தாவோடு, சாமராஜூ சாயலில் ஒரு பொடிக்கடைக்காரனும் கதையில் நுழைந்தான். மண்பானைச் சமையல் மெஸ் நடத்துகிற அனுசரணையான மனைவியை அவனுக்காகச் சிருஷ்டித்தேன். லிங்கராஜூவிற்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். .. (பக்கம் 100).

அரசூர் வம்ச பனியன் சகோதரர்களையும், ஸ்டவ் ஜோசியம் சொல்லும் மாய யதார்தத்தையும் இந்த ரீதியில்தான் வாசகன் புரிந்து கொள்ள வேண்டும்.

.. கர்நாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே 'உளுந்து போதாது' 'சரியா வேகலை' போன்ற அழுத்தமான விமர்சனங்களை பாட்டி முன்வைத்து விடுவாள். நானூறு பக்க நாவலை படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனால் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது - விமர்சகர்களும் இலக்கியமும் போல. ... (பக்கம் 22)

என்பது மாதிரியான வரிகள் நிறைந்திருக்கும் இந்த நூலை தனிமையில் வாசிப்பதுதான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் நிமிஷத்துக்கொரு முறை உரத்த குரலில் வரும் சிரிப்பொலியை கேட்க யாருக்குமே விநோதமாகத்தான் தோன்றும். அதே போல் நூலை சாவகாசமாக வாசிக்காவிட்டால், முன்னுரை எழுதியிருக்கிற கிரேசி மோகன் வசனங்களைப் போலவே சிறந்த நகைச்சுவைத் துணுக்கு எதையாவது தவற விட்டுவிடும் அபாயமுண்டு.

இரா.முருகன் தனது பள்ளிக்கூட அனுபவங்களை 'அந்த வயது' மாணவனின் பார்வையிலேயே விவரித்துக் கொண்டு போகும் போது சுப்ரமணியம் ரவிச்சந்திரன் எழுதின கணையாழி குறுநாவலான 'கர்னல் தோட்டக் கணக்கு'ம் கூடவே என்னுடைய நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தது.

()

கிழக்கு பதிப்பகம் இந்த நூலை பின்னட்டையில் எதற்காக fiction/novel வகையில் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும் இதை ஒரு முழு நாவலாகவும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறுகதையாகவும், ஒட்டுமொத்தமாக எழுத்தாளரின் நினைவோடையாகவும் அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.

.. தூரத்திலிருந்து பார்க்கும் போது சகாயமாதா கோயில் திருவிழாவா, சுப்ரமணிய சாமி உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும். எல்லாமே சந்தோஷம்தான். (பக்கம்28)
 என்று இரா.முருகன் எழுதுகிற மாதிரி இந்த நூலை எப்படி வாசித்தாலும் சந்தோஷம்தான்.

பெரும்பாலான வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும் போது தவறாமல் இடம் பெறும் வாக்கியங்கள் இதுவாகத்தான் இருக்கும். .. காமராஜர் எப்போது எங்கள் ஊருக்கு வந்தாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார்..என்பது மாதிரியோ அல்லது .. அப்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் எம்.ஜி.ஆருடன் நேரிடையாகவே பழக்கம் உண்டு. ஒரு முறை எந்த முன்னறிவிப்பு மில்லாமலேயே எங்கள் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் வந்துவிட்டார். எல்லோருமே பரபரப்பாகி விட்டோம். ஆனால் அவரோ....

இப்படியெல்லாம் வாசிக்கும் போது 'ஏன் எங்கள் வீட்டுக்கு ஓமக்குச்சி நரசிம்மன் கூட வந்ததில்லை.. என்ற எண்ணம் என்னுள் ஓடும். கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' சிறுகதையைப் படித்தபின்புதான் மனம் ஒரளவு சமாதானமாகியது. நல்லவேளையாக முருகனின் நூலில் அப்படியான 'சம்பவங்கள்' எதுவுமில்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

()

இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தவிர்க்க இயலாமல் எழுத்தாளருக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது, இது வீடியோ காட்சிகளாகவும் கூடுபாயப் போகிறது என்கிற சந்தோஷமான மற்றும் நெருடலான செய்தி தற்செயலாக அவரின் பதில் மடலில் கிடைத்தது. நு¡லின் அத்தனை நுணுக்கங்களையும் வீடியோச் சுருளில் பதிய வைப்பது சாத்தியமே இல்லை என்றாலும் அதற்கு நியாயம் செய்கிற மாதிரியாவது இருக்க வேண்டுமே என்கிற கவலையும் கூடவே ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

கூடுதல் சந்தோஷமாக தற்கால இரா.முருகனாக, இரா.முருகனே நடித்திருக்கிறார் என்கிற தகவலையும் சேர்த்துக் கொள்ளலாம். யார் கண்டது? எழுதுவதற்கும் கூட நேரமில்லாமல், "ஏம்மா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்வளவு நேரம். யாரு அந்தப் பையன்?"... என்று கேட்கும் அப்பாவாக திரைப்படங்களில் எழுத்தாளரை பாப்கார்ன் வாசனையோடு விரைவில் சந்திக்க வேண்டி வரலாம் என யூகிக்கிறேன். 

புத்தகத்தைப் பற்றிய விவரங்களுக்கு : http://nhm.in/shop/978-81-8368-933-5.html
image courtesy: kizhaku

suresh kannan

Saturday, January 09, 2010

சாரு

"நீங்கள் உருவாக்கின திரைப்படங்களில்  உங்களுக்கு அதிக திருப்தியை தந்த திரைப்படம் எது?" என்றொரு கேள்வி சத்யஜித்ரே முன் வைக்கப்பட்டது. அவர் தயக்கமேயில்லாமல் குறிப்பிட்ட திரைப்படம் "சாருலதா". "இதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் 'இப்போது இருக்கிற அதே  முறையில்தான் மீண்டும் இதை உருவாக்குவேன். அந்தளவிற்கு சொற்பமான குறைகளே கொண்டது. என்னுடைய பேவரைட் இதுவே" என்கிறார் ரே.

ரே ரசிகர்களால் பிரதானமாக கொண்டாடப்படுகிறதும் சர்வதேச அளவில் முதலில் பேசப்பட்ட இந்திய திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யை விட 'சாருலதா'வையே நான் அதிகம் கொண்டாடுவேன். உலகத்தின் சிறந்த பத்து திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் நான் எப்பாடு பட்டாவது ‘சாருலதா’வை உள்ளே கொண்டு வருவேன். அந்த அளவிற்கு என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமிது. பாலியல் ரீதியான உறவுச் சிக்கலை இவ்வளவு நுட்பத்துடனும் subtle-ஆகவும் கையாண்ட எந்தவொரு உலகத் திரைப்படத்தையும் இதுவரை நான் கண்டதில்லை.



பயப்படாமல் தொடர்ந்து வாசியுங்கள்.

நான் இந்த இடுகையில் எழுதப்போவது இந்தத் திரைப்படம் குறித்த முழுமையான பார்வையல்ல. அப்படி எழுதினால் அது பத்திருபது இடுகைகளுக்காவது நீளும். அல்லது ‘பதேர் பாஞ்சாலி’ குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின ‘நிதர்சனத்தின் பதிவுகள்’ போன்று இத் திரைப்படத்தையும் பற்றி யாராவது எழுதினால்தான் உண்டு. (ஒரு திரைப்படம் குறித்த முழுமையான அனுபவப்பகிர்வு தமிழில் நூலாக வெளிவந்தது அதுதான் முதல் என்று நினைக்கிறேன்).

நான் எழுதப் போவது இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாக கவர்ந்த குறிப்பிட்டதொரு காட்சியைப் பற்றி மாத்திரமே. 

என்னுடைய வீட்டுத் தொலைக்காட்சியின் மேல் இத்திரைப்படத்தின் குறுந்தகடு நிரந்தரமாகவே வைக்கப்பட்டிருக்கும். இனிப்பை சாப்பிடுகிற சிறுவன் போல் அவ்வப்போது சில காட்சிகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வாறான காட்சிகளில் நான் எழுதப்போகும் இந்த காட்சிக் கோர்வைதான் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. குறுந்தகட்டில் சம்பந்தப்பட்ட பகுதி தேய்ந்து நைந்து கூட போயிருக்கலாம்.

அதற்கு முன்னால் இத் திரைப்படத்தின் மற்றும் சம்பந்தப்பட்ட காட்சியின் முன்னோட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தாகூரின் ‘சிதைந்த கூடு’ எனும் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 1964-ல் வெளியானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தின் சுதந்திரப் போராட்டம் தனது தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்த காலத்தில் இத் திரைப்படத்தின் நிகழ்வுகள் அமைகின்றன. தான் நடத்தும் அரசியல் பத்திரிகையே கதி என கிடைக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது அரவணைப்பை ஏங்கி எதிர்பார்த்து கிடைக்காமல் தனிமையில் புழுங்கும் அவரது மனைவி. அவர்களது வாழ்க்கையில் இனிமையான குறுக்கீடாக நுழையும் ஒரு இளைஞன். இந்தப் பிரதானமான மூன்று பாத்திரங்களைச் சுற்றித்தான் இத்திரைப்படம் இயங்குகிறது.

()

சாருவின் தனிமையை புரிந்து கொள்ளும் ஆசிரியர், அவளுடைய பேச்சுத் துணைக்காக சாருவின் சகோதரையும் அவளுடைய மனைவியையும் தம்முடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார். மிகுந்த நுண்ணுர்வுள்ள சாருவிற்கும் அந்த சராசரி கிராமத்துப் பெண்மணிக்கும் அலைவரிசையின் மாறுபாட்டால் எந்த சுவாரசியமும் நட்பும் நிகழ்வதில்லை. இந்நிலையில் பத்திரிகை ஆசிரியரின் உறவுக்கார இளைஞன் (அமல்) ஊரிலிருந்து வருகிறான். மிகுந்த நகைச்சுவையும் இலக்கிய ஆர்வமும் உள்ளவன்.

‘சாரு’விடம் இயல்பாக பேசி அவளிடமுள்ள எழுத்துத் திறமையை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அமலிடம் வைக்கிறார் ஆசிரியர். கவிதை எழுதும் பழக்கமுள்ள அவனுக்கும் புத்தக வாசிப்பு அனுபவமுள்ள சாருவிற்கும் உள்ள ஒரே அலைவரிசை காரணமாக நட்பு ஏற்படுகிறது.

இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஏகாந்தமான மனநிலையில், கவிதை எழுதத் தோன்றுவதாக கூறுகிறான் அமல். சாரு அவனுக்கென்றே பிரத்யேகமாக பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தைத் தந்து அதில் எழுதத் சொல்கிறாள். 

தன்னுடைய கட்டுரை எழுதப்பட்டவுடன் வாசித்துக் காட்டுகிறான். ‘இதை எங்கும் பிரசுரிக்கக்கூடாது. இதில் எழுதப்படும் எதுவும் இதிலேயே இருக்க வேண்டும்’ என்ந நிபந்தனையை விதிக்கிறாள் சாரு. இதன் மூலம் அவளுடைய possessiveness குணம் தெரியவருகிறது. அவனும் விளையாட்டாக ஒப்புக் கொள்கிறான்.

“இனி  உன்னுடைய முறை. நீ ஏதாவது கதை எழுத வேண்டும்” என்று அவளை திட்டமிட்ட பாதைக்கு நகர்த்தப் பார்க்கிறான். “எனக்கு எதுவும் எழுதத் தெரியாது” என்கிறாள் சாரு. “ஏன் உன் இளமைப் பருவ நினைவுகள், ஊர், திருவிழா என்று எவ்வளவு இருக்கும். அதை எழுது” என்கிறான் இளைஞன். “இல்லை என்னால் முடியாது” இது சாரு.

“அப்படியென்றால் பூபதிக்கு (பத்திரிகை ஆசிரியர்) நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று வாய்தவறி உண்மையைக் கொட்டி விடுகிறான் அமல். அவளுடைய திறமையை ஊக்குவிப்பதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் எழாமல் அது இயல்பாக நிகழ வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறார் ஆசிரியர். தன்னுடைய கணவனின் உத்தரவின் பேரில்தான் இவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் சாரு.

“நீ எழுதவில்லையெனில் நான் எழுதினதை பிரசுரத்திற்கு அனுப்பி விடுவேன்” என்று செல்லமாக மிரட்டுகிறான் அவன். “எதையாவது செய்து கொள்” என்று எரிச்சலுடன் எழுந்து போய் விடுகிறாள் சாரு.

()

சாருவின் அண்ணியிடம் தான் எழுதியதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என விளையாட்டாக ஆலோசனை கேட்கிறான் அமல். இலக்கியத்தைப் பற்றி எதுவுமே அறிந்திராத அவளிடம் கேட்பதை, ஒருவன் தான் முடிவெடுக்க முடியாத நிலையில் நாணயத்தை சுண்டி விடுவதற்கு ஒப்பாகச் சொல்லலாம். இரண்டு பத்திரிகைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு பத்திரிகை அவ்வளவு சுலபத்தில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை பிரசுரம் செய்யாது. எனவே இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப முடிவு செய்கிறான்.

இடையில் அமலின் திருமணத்தை குறித்து உரையாடுகிறார் பத்திரிகை ஆசிரியர். தன்னுடைய விளையாட்டுப் பொம்மையை யாரோ பறித்துக் கொள்கிற உணர்வில் திகைத்துப் போகிறாள் சாரு. எதையுமே விளையாட்டாக அணுகும் அமல் இந்த திருமணப் பேச்சு உரையாடலையும் விளையாட்டாகவே அணுகுகிறான். அப்போதுதான் சாருவிற்கு புன்னகைக்கவே தோன்றுகிறது.

அமல் அனுப்பின கட்டுரை பிரசுரமாகி விடுகிறது. மிக உற்சாகமாக கத்திக் கொண்டே இந்தச் செய்தியை சாருவிடம் அறிவிக்கிறான் அவன். தன்னுடைய வேண்டுகோளை மீறி அவன் பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமும் ஆகி விட்டதே என்று சாருவிற்கு மிகுந்த ஆத்திர உணர்வு ஏற்படுகிறது. அமலின் மகிழ்ச்சியை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். எப்படியாவது அவனுக்கு  தன்னை நிருபித்து அவனை வெல்ல வேண்டும் என்கிற வன்ம உணர்ச்சி மேலிடுகிறது. எழுதுவதின் மூலம்தான் இதை சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.

எழுத அமர்கிறாள். எதுவுமே தோன்றவில்லை. அழுகை வருகிறது. பிறகு நிதானமாக அமர்ந்து தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளை தோண்டிக் கண்டெடுக்கிறாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து கடகடவென்று எழுதத் துவங்குகிறாள்.

()

இதற்குப் பிறகுதான் நான் குறிப்பிட விரும்புகிற காட்சி வருகிறது.

காமிரா வேகமாக நடந்து வரும் ஒரு பெண்ணின் (சாரு) கால்களையும் கூடவே அவள் கொண்டு வருகிற பத்திரிகையையும் காண்பிக்கிறது.

அமலின்  அறைக்குள் புயல் போல் நுழைகிற சாரு, ஆத்திரத்துடனும் அவனை வென்றுவிட்ட குரூர திருப்தியுடனும் பத்திரிகையைக் கொண்டு அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறாள். பின்பு பத்திரிகையை பிரித்து அவளுடைய கட்டுரையின் கீழ் பிரசுரமாகியிருக்கிற பெயரை “நன்றாக பார், திருமதி.சாருலதா” என்று காண்பிக்கிறாள்.  எந்தப் பத்திரிகை புதியவர்களை பிரசுரிக்காது என்று அமல் தயங்கினானோ அந்தப் பத்திரிகையில் சாருவின் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

வேகமாக அறையை விட்டு வெளியேறி அவளுடைய அண்ணி அமலுக்காக தயாரித்து வைத்திருக்கிற வெற்றிலை பீடாக்களை தூக்கி எறிந்து விட்டு (இனிமே நானே தயாரிக்கிறேன். நீ அதிகம் சுண்ணாம்பு கலந்துவிடுகிறாய்) புதிதான ஒரு பீடாவை தயாரித்து அமலின் வாயில் திணிக்கிறாள்.

அமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்கிறான். சாருவிற்குள் இவ்வளவு திறமையான எழுத்தாளர் இருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவேயில்லை. முன்பு இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது சாரு தான் அமர்ந்திருக்கிற ஊஞ்சலை ஆட்டி விடச் சொல்கிறாள். 'ஒரு எழுத்தாளரை இப்படி அவமானப்படுத்தலாமா?' என்று கேட்கும் அமல், பின்பு தன்னுடைய கட்டுரை பிரசுரமான போது "இனியாவது என்னிடம் மரியாதையாக நடந்து கொள்" என்று குறும்பாக அவளிடம் சொல்கிறான். இப்படியொரு திறமைசாலி என்பதை அறிந்திருந்தால், இப்படியெல்லாம் அவளிடம் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டான் அவன்.

"நீ தொடர்ந்து எழுத வேண்டும் சாரு. நிறுத்தி விடாதே" என்கிறான். சாரு அந்தப் பத்திரிகையை தூக்கி எறிகிறாள். அவளைப் பொறுத்த வரை அவனை சவாலில் வென்றதே போதுமானது. "இனிமேல் எதையும் என்னால் எழுத முடியாது" என்கிறாள். ஆனால் அமல் எதை எதையோ சொல்லிக் கொண்டு போகிறான். அதற்கு மேலும் அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஓடிவந்து அமலின்  தோளின் மீது சாய்ந்து கொண்டு அழுகிறாள்.கண்ணீர் அவனுடைய சட்டையை நனைக்கிறது. தீவிரமான உடலுறவிற்குப் பின் ஏற்படுவதைப் போன்று நீண்ட மனக்கொந்தளிப்பிற்கு பின்பு ஏற்படுகிற ஆசுவாசம் அது.

அதுவரை சாருவை ஒரு தோழியாகவே காண்கிற அமல், இந்த நிகழ்விற்குப் பின்புதான் அவள் தன் மீது நேசம் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான். அவளுடனான  உறவை ஒரு நெருடலாக அமல்  உணரத் துவங்குகிற முதல் தருணம் அது.

()

நான் இப்படி விஸ்தாரமாக எழுதிக் கொண்டிருப்பதை, ரே தன்னுடைய திறமையான திரைக்கதையின் மூலம் மிக நுட்பமாகவும் பூடகமாகவும் பார்வையாளர்களின் முன் வைக்கிறார்.

அமோல், சாரு இருவரும் தோட்டத்திலிருக்கும் போது, சாரு தொலைநோக்கி மூலம் சுற்றி நடப்பதை கவனிக்கிறாள். இது அவளது வழக்கமான செய்கைகளில் ஒன்று. படத்தின் ஆரம்பக் காட்சியே அவ்வாறுதான் துவங்குகிறது. சாரு வீட்டு ஜன்னல்களின் மூலம் வெளியுலக நடமாட்டத்தை மிக நிதானமாக கவனித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வருகிற கணவன் ஏதோ நூலொன்றை எடுத்துக் கொண்டு சிந்தித்தபடியே செல்கிறான். சாரு அங்கு நிற்பதே அவன் பிரக்ஞையில் இல்லை. ஒரு பெருமூச்சுடன் சாரு மறுபடியும் தன்னுடைய தொலைநோக்கிக்குத் திரும்புகிறாள்.

தோட்டத்திலும் அதே போன்று தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வீட்டில் ஒரு பெண்மணி அவளது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்தவுடன் சாருவின் ஆழமான தனிமை உணர்ச்சியும் தன்னுடைய வாழ்க்கை முழுமை பெறாமலிருக்கும் உணர்வும் வெளிப்படுகிறது. பின்பு தொலைநோக்கியை நகர்த்திக் கொண்டே வரும் போது தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அமோலின் முகத்தைக் கவனிக்கிறாள். அவன் மீதான நேசத்தின் பொறி அப்போதுதான் அவளுக்குள் உருவாகியிருப்பதை பார்வையாளன் உணர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் அவள் கட்டுரை எழுதும் காட்சியும்.

கசக்கிப் போடப்பட்ட காகித உருண்டைகளை தொடர்ந்துச் செல்கிற காமிரா, அவள் முகத்தில் நிலைத்து நிற்கிறது. (பதிவின் ஆரம்பத்தின் உள்ள பட ஸ்டில்லை கவனியுங்கள்) பின்னணியில் ரேவின் அற்புதமான இசை ஒலிக்கிறது. மெதுவாக முன்னும் பின்னும் நகர்கிற காமிரா, அவளது முகத்தின் பின்னணியில் இளமைப் பருவ நினைவுக் காட்சிகளை காட்டுகிறது. காமிரா நிற்கும் போது சாருவும் தாம் என்ன எழுதப் போகிறோம் என்கிற தீர்மானத்தை அடைகிறாள்.

()

சாருவாக மதாபி  மாதவி முகர்ஜி (Madhabi Mukherjee) மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ரேவிற்கு இவர் மீது காதல் இருந்ததாகவும் பின்பு அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கட்டுரை சொல்கிறது. உண்மைதான். மதாபி எந்தவொரு ஆணுமே விரும்பக்கூடிய பேரழகிதான். ஆனால் வெறுமனே அழகி மாத்திரமல்ல, சிறந்த நடிகையும் கூட.



அமலை அவள் பத்திரிகையால் ஓங்கி அடிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படுத்துகிற உணர்வுகளை என்னுடைய எளிமையான வார்த்தைகளின் மூலம் விவரிக்கவே முடியாது. பார்த்து உணர வேண்டிய காட்சியது. அப்படியொரு ஆழமான முக பாவ வெளிப்பாட்டை இதுவரை நான் எந்தவொரு திரைப்படத்திலும் கண்டதேயில்லை.

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருந்தாலும், வாசிக்கிற நீங்கள் சரியாக புரிந்து கொள்கிற படி எழுதிக் கொண்டிருக்கிறேனா  என்கிற குழப்ப உணர்வு எழுதும் போது  ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.சில விஷயங்களை எழுத்தின் மூலமாக சொல்லி விடவே முடியாது. 'நான் சாப்பிட்ட இனிப்பு நன்றாக இருந்தது' என்பதை எப்படி மற்றவருக்கு உணர வைக்க முடியும்? அவரும் அந்த இனிப்பை ருசிப்பதுதான் ஒரே வழி.

'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை காணும் சந்தர்ப்பம் ஏற்படாதவர்கள், தங்களின் வாழ்க்கையில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு முறை எழுதிய ஞாபகம். நான் அதனுடன் 'சாருலதா'வையும் இணைக்க விரும்புகிறேன்.

image courtesy: wikipedia & satyagitray.org

suresh kannan

Wednesday, January 06, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 3)

பகுதி 1 | பகுதி 2

(புத்தக கண்காட்சிக்கு சென்ற ஒரு விஷயத்தை இத்தனை பதிவுகளுக்கு இழுப்பது எனக்கே ஓவராகத்தான் தெரிகிறது. வாசிப்பவர்கள் சற்று பொறுத்தருளவும்).

சிவராமனும் நானும் கண்ராவியான கண்காட்சி கா·பியை அருந்திவிட்டு கிரிவலத்தைத் தொடர்ந்தோம். நான் முதலில் சுற்றி வந்த போது 'வம்சி புக்ஸ்' கடையை கவனிக்கத் தவறிவிட்டேன். 'பெருவெளி சலனங்களில்' என்னுடைய படைப்பு ஒன்றும் (நான் பியர் குடித்து வளர்ந்த கதை) வந்திருப்பதாக நண்பர் மாதவராஜ் தெரிவித்திலிருந்து அதைப் பார்த்துவிட மனம் 'குறுகுறு'வென்றிருந்தது. இணையப் பதிவர்களை அச்சு ஊடக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த நல்ல முயற்சியை எடுத்த மாதவராஜிற்கும் வம்சி பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமானதொரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

                       

        இடமிருந்து வலமாக (நான், சிவராமன், பிரசன்னா) 
       (புகைப்பட உதவி: ரஜினி  ராம்கி)


சிவராமனும் நானும் ஒருவழியாக வம்சி புக்ஸ் கடையை கண்டுபிடித்துவிட்டோம். நண்பர் அய்யனாரின் புத்தகங்கள் உட்பட அனைத்து சமீபத்திய புத்தகங்களும் மிகுந்த அழகியல் உணர்வுடனும் தரமான வடிவமைப்புடனும் வாங்கத் தூண்டுகிற அச்சுத் தரத்துடனும் அமைந்திருந்தன. புத்தகங்களை சிறப்பாக உருவாக்கும்..க்ரியா, காலச்சுவடு, உயிர்மை.. சமீபத்திய கிழக்கு பதிப்பகங்களின் வரிசையில் வம்சி புக்ஸையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம்.

என்னுடைய கட்டுரை வெளிவந்த நூலை பரவசத்துடன் புரட்டிப் பார்த்தேன். என்னுடைய முதல் சிறுகதையை அச்சில் கண்ட சந்தோஷ உணர்வை மீண்டும் அடைந்தது போலிருந்தது. மாதவராஜ் இதற்கான ஒப்புதலை என்னிடம் கேட்ட போதே, சம்பந்தப்பட்ட பதிவை இன்னும் மேம்படுத்தி எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் என்னவோ ஒரு தயக்கத்தில் அதை விட்டுவிட்டேன். அச்சில் பார்த்தவுடன் அதே உணர்வு மீண்டும் எழுந்தது.
(ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சம்பந்தப்பட்ட பதிவர்களின் இணைய முகவரி இல்லாதது ஒரு சிறிய குறை.)


இது குறித்த இன்னொரு விஷயத்தையும் ஆராய வேண்டும். அச்சு ஊடகத்திற்காக எழுதுகிற போது தரம் மற்றும் குறித்த பிரக்ஞையுடனும் கவனத்துடனும் எழுதுகிற நான், இணையப் பதிவுகளை அம்மாதிரியான உணர்வுகளுடன் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றியது. அதே போல் படைப்புகள் அச்சில் ஏறும் சந்தர்ப்பம் நிகழும் போது  ஏதோ பிரமோஷன் கிடைத்த சந்தோஷத்துடன் அதை அறிவித்துக் கொள்கிறோம் என்பதும் புரியவில்லை. இந்த மாயையைக் நாம் கடப்பதற்கு இன்னும் சில ஆண்டுகளாகலாம் என்று தோன்றுகிறது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் 'உருப்படாது' நாராயணன் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்பு நாராயண்,

நம்பினால் நம்புங்கள். நானும் காலையில் - அலுவலகத்திற்கு வரும் வழியில் - இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் 'எழுத்தாளர்' என்கிற தகுதி எப்படி அளக்கப்படுகிறது என்றால் - அதன் உள்ளடக்கம் என்ன கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை - அவரது எழுத்தில் எத்தனை புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு புத்தகமாவது எழுதியிருந்தால்தான் உங்களை எழுத்தாளர் என்கிற வட்டத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த அசட்டு concept எனக்குப் புரியவில்லை.

ஒருவன் தன் சிந்தனைகளை எந்த மாதிரியும் தொகுத்து வைக்கலாம். கிராமப் புறங்களில் கல்வி கற்றவனை விட அதிக நுண்ணறிவோடு இருப்பார்கள். மனித உறவுச் சிக்கல்களுக்கு அவர்கள் பாமர மொழியில் சொல்லும் யோசனைகள் ஒரு உளவியல் மருத்துவன் சொல்கின்ற அறிவுரையை விட சிறப்பானதாக இருக்கலாம். ஆனால் நம்மாட்கள் அதை ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால்தான் அவன் அறிவாளி என்று ஒத்துக் கொள்கிறார்கள். இன்று யாருடையாவது ஒரு புத்தகம் வெளியாகி இருந்தாலே அவன் தலை மேலே ஒரு ஒளிவட்டம் உருவாகிவிடுகிறது. அதன் பளு தாங்காமல் அவன் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. (இதை நான் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாக சொல்லவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்கிறேன்)

ஆக அச்சில் வந்தால்தான் அல்லது புத்தகமாக வெளிவந்தால்தான் ஒரு விஷயத்திற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாதிரியான பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த cliche உடைய வேண்டும். வலைப்பதிவில் பதிந்திருந்தாலும் அதன் தர அளவுகோல்களுக்கேற்ப அது இலக்கியம்தான்.

கணியை பயன்படுத்த இல்லாதவர்களுக்கும் நம்முடைய சிந்தனைகள் போய்ச் சேர வேண்டும் என்பது மாதிரியாக சிந்திக்கும் போது நீங்கள் கூறுவது பரிசீலனைக்கு ஏற்றதாக தெரிகிறது.


()

சிவராமனுக்கு புத்தகங்களின் மீது இருக்கிற நேசத்தை முன் பகுதியில் சொன்னேன் அல்லவா? அவரது இன்னொரு சிறப்பான குணாதியத்தையும் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும்.

சங்கர் என்கிற பதிவரை (பார்த்ததும் கேட்டதும்) அறிமுகப்படுத்தினார் சிவராமன். அவர் கோணங்கியின் 'மதனிமார்கள் கதை'யை இருநாட்களாக கண்காட்சியில் தேடிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சிவராமன் தன்னிடமுள்ள அந்தப் புத்தகத்தை தருவதாகவும் ஆனால் அதைப் பற்றி சங்கர் பதிவிட வேண்டும் என்கிற நிபந்தனையை மாத்திரம் முன் வைத்தார். இதே போல் என்னிடமும் சினிமா குறித்த சில ஆங்கில நூல்களையும் குறுந்தகடுகளையும் தந்து, நிச்சயம் அதைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆங்கில நூல் என்பதால் எழுதுவதற்கு குறைந்த பட்ச அவகாசமாக ஒரு வருடத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பின்னே எழுத்துக்கூட்டி படிப்பதற்கு நேரம் வேண்டாமா?

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்... என்னுடைய உயிர் நண்பராக இருந்தாலும் அவருக்கு என் புத்தகத்தை நான் தரமாட்டேன். என்னுடைய சேகரிப்புகளின் மீது அவ்வளவு பொசசிவ்னஸ் எனக்கு. ஆனால் தரமான படைப்புகளைப் பற்றின பதிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிற சிவராமனின் இலக்கிய நோக்கம் போற்றத்தக்கதாகவே இருக்கிறது. (இவ்வாறெல்லாம் எழுதுவதற்காக சிவராமன் ஒருவேளை சங்கடத்தில் நெளியலாம். ஆனால் பாராட்டத்தக்க விஷயங்களை அந்தக் கணமே செய்தாகி விட வேண்டும் எனக் கருதுகிறேன்).

வழியில் 'காவேரி கணேஷ்' மற்றும் அன்பு (?) ஆகிய பதிவர்களை சிவராமன் அறிமுகப்படுத்தி வைத்தார். கணேஷ் எங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இணையத்திலும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

()

கிளம்புவதற்குள் பா.ரா.வை சந்தித்துவிட வேண்டும் என்று தோன்றியது. 'கிழக்கு' அரங்கில் விசாரித்த போது அவர் எப்போதும் அரங்கங்களுக்கான இடைவெளிகளில் 'தலைமறைவு' வாழ்க்கையை நடத்துகிறார் என்று தெரியவந்தது. தீவிரவாதத்தைப் பற்றி தொடர்ந்து எழுதினதால் வந்த வினையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பின்பு சிவராமன் வயர்லெஸ்ஸில் சங்கேத பாஷைகளை பரிமாற்றம் செய்தவுடன் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நல்ல வேளையாக நாங்கள் செல்வதற்குள் 'ஜோதிட மாநாடு' முடிந்து விட்டிருந்தது. பாரா, என்னுடைய தொப்பையையும் அவருடையதையும்  ஒப்பிட்டு  'எது பெரியது' என்கிற போட்டியை அறிவித்தார். பாராவே வென்றதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

நர்சிம், யுவகிருஷ்ணா, ரவிஷங்கர், அதியமான், மருத்துவர் ப்ரூனோ போன்ற சகபதிவர்களுடன் உரையாட முடிந்தது. அஜயன் பாலாவும், பாஸ்கர் சக்தியும் அப்போதுதான் கடந்து சென்றனர். பாஸ்கர் சக்தியிடம் இந்த  மற்றும் இந்தப் பதிவு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஏனோ நிகழவில்லை.

உருப்படி மற்றும் அல்லாத பல விஷயங்களைப் பற்றி உரையாடின பின்னர் சபை கலைந்தது. (அப்பாடி!).

பொறுங்கள்... இன்னும் முக்கியமானதொரு பகுதி பாக்கி இருக்கிறது.

நானும் சிவராமனும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடின அந்த ஏறத்தாழ அரை மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனதுக்கு மிக நிறைவை அளித்த அந்தத் தருணங்களைப் பற்றி உங்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது..

(தொடரும்)

image courtesy: www;thaiyal.com

suresh kannan

Tuesday, January 05, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 2)

முந்தைய இடுகையின் தொடர்ச்சி...

'கிழக்கு' அரங்கில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. பதிப்புத் துறையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் 'கிழக்கின்' வளர்ச்சி குறித்து மீண்டும் மீண்டும் வியக்க வேண்டியிருக்கிறது. 'எப்படி ஜெயித்தார்கள்' என்கிற தலைப்பில் பதிப்புலக வரலாற்றை அவர்களே பிரசுரிக்கலாம். பல சுமாரான புத்தகங்களை அதனுடைய பிரத்யேக சலிப்பூட்டும் வார்ப்பில் தொடர்ந்து 'கிழக்கு' வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்கில அ-புனைவுகளில் முக்கியமானவற்றை தமிழில் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய மாற்றம் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது.

இப்போதைய டாக் ஆ·ப் டவுன் நிச்சயமாய் 'ராஜீவ் கொலை வழக்கு' நூலாகத்தான் இருக்கும் என யூகிக்கிறேன். எனவே இந்த நூலின் பரபரப்பிற்காகவே அதை வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் பிற்பாடு ரகோத்தமனின் தொலைக்காட்சி நேர்காணலையும் ஜெயமோகனின் இந்த மதிப்புரையையும் கண்ட பிறகு வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது. 

ZEE தொலைக்காட்சியில் இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பான ரகோத்தமனின் நேர்காணலில்,  தன்னுடைய சிபிஐ பணியில் நிகழ்ந்த பல சுவாரசியமான, திகைப்பான சம்பவங்களை விவரிக்கிறார். லஞ்ச வழக்கு ஒன்றிற்காக ரயில்வே அதிகாரி ஒருவரை விசாரிக்கச் சென்ற போது வழியில் மூடியிருந்த ரயில்வே கேட்டை திறந்துவிட,  கேட் ஊழியர் லஞ்சம் கேட்ட நகைச்சுவையும் நிகழ்ந்திருக்கிறது. (இது போன்ற காட்சி ஒன்றை ஷங்கரின் திரைப்படத்தில் பார்த்திருந்த ஞாபகம்).

ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழு தலைவராக இருந்த கார்த்திகேயனை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறார் ரகோத்தமன். 'சில தமிழக அரசியல் தலைவர்களை' அவர் விசாரிக்க முடிவு செய்த போது கார்த்திகேயன் தடுத்து விட்டார் என்பது அவரது பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. (இது குறித்து கார்த்திகேயனுக்கு வேறுவிதமான அரசியல் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்பது என் யூகம்).

ரகோத்தமன் பிரதானமாக அடிக்கோடிட்டு குறிப்பிடும் இன்னொரு விஷயம், உளவுத்துறையின் அலட்சிய மனப்பான்மை மற்றும் திறமைக்குறைவு. இலங்கையிலுள்ள புலிகளுக்கும் தமிழகத்தில் தங்கியிருக்கும் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த வயர்லெஸ் பரிமாற்றம் படுகொலைச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதிகமாயிருக்கிறது. இதை உளவுத்துறையின் கீழ்நிலை அதிகாரி தனது அன்றாட குறிப்பில் எழுதியுள்ளார். இதை உயர்நிலையிலுள்ளவர்கள் உடனே கவனித்து அந்த சங்கேதப் பரிமாற்றங்களை உடனே decrypt செய்திருந்தால் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவத்தை ஒருவேளை தடுத்திருக்கலாம். அது போல் இன்னொன்று. விசாரணையின் status குறித்து மத்திய அரசிடமிருந்து விசாரிக்கப்படும் போது தமிழக உளவுத்துறையிடமிருந்து பதிலாக தரப்பட்ட அறிக்கையில் 'படுகொலை நிகழ்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..' என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் பிறகு அந்த வீடியோவைப் பற்றின எந்தவொரு தகவலும் இறுதி சாட்சியங்களில் காணப்படவில்லையென்றும் வீடியோவின் முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டிருக்கலாமென்றும் ரகோத்தமன் சந்தேகிக்கிறார்.

இந்த தொலைக்காட்சி நேர்காணலில் நளினி சம்பந்தப்பட்ட பகுதிகளை சுதாங்கன் கேள்விகளாக முன்வைக்கவில்லை அல்லது எடிட்டிங்கில் குறைக்கப்பட்டிருக்கலாம்.

()

நான் புத்தக கண்காட்சிக்கு செல்லும் பிரதான நோக்கமே 'சிற்றிதழ்'களைத் தேடித்தான். மற்ற நூல்களை கூட பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரே கூரையின் கீழ் விநோதப் பெயர்களைக் கொண்ட பெரும்பாலான சிற்றிதழ்களை காண்பது கண்காட்சியில்தான் நிகழும். ஆனால் சிற்றிதழ்களின் காலம் முடிந்துவிட்டதோ என்பதைப் போல எந்தவொரு புதிய சிற்றிதழையோ அல்லது புது எழுத்து, சிலேட் போன்ற இயங்கிக் கொண்டிருந்த இதழ்களின் சமீபத்திய இதழ்களோ காணக் கிடைக்கவில்லை. (மந்திரச்சாவி எனும் பெயருடைய புதிய இதழைப் பார்த்தேன். மேலோட்டமாய் ஆராய்ந்ததில் உள்ளடக்கம் திருப்திகரமாக இல்லாததால் வாங்கவில்லை. அதே போல்தான் 'உன்னதம்' 'பன்முகம்' ஆகிய இதழ்களும்). ஆனால் பல இதழ்களை கீற்று இணையத்தளத்தில் வாசிக்க முடிந்துவிட முடிவதில் ஒரு ஆசுவாசம். சினிமா குறித்து வெளிவரும் 'நிழல்' எனும் பத்திரிகையின் எல்லா இதழ்களையும் ஒவ்வொரு கண்காட்சியின் போதும் வாங்கிவிடுவேன். இந்த முறை இரண்டே இதழ்கள்தான் கிடைத்தன.
 


மாற்றுச் சினிமா, குறும்படங்கள், திரைக்கதை, ஒளிப்பதிவுக் கோணங்கள்.. என்று நிறைய சுவாரசியமான கட்டுரைகளை இதில் காண முடியும். குறிப்பாக தமிழ்ச்சினிமாவின் துணை நடிகர்களைப் பற்றின அறியப்படாத பல தகவல்கள் குறித்த கட்டுரைகளையும் வாசிக்க முடியும்.

ஆர்வமுள்ளவர்களுக்காக இதழின் தொடர்பு விவரங்களைத் தருகிறேன். 12/28 (460), இராணி அண்ணாநகர், சென்னை-600 078. கைபேசி: 94444 84868. மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in

()

பின்பு சிவராமனை 'தமிழனி' அரங்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போது 'காவல் கோட்டம்' வெங்கடேசனை அறிமுகப்படுத்தி வைத்தார் சிவராமன். புத்தகத்தின் தடிமனுக்குச் சம்பந்தமில்லாமல் இளமையான தோற்றத்திலிருந்தார் அவர். சிவராமன் புகை பிடிக்கவும் நான் சிறுநீர் கழிக்கவும் (புத்தகங்களின் மீது அல்ல) கண்காட்சியை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது.

'காலச்சுவடு' கண்ணன் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவராமன் திடீரென்று தீர்மானித்து அவரை அணுகி "உங்க கிட்ட ஒரு கோரிக்கை. இப்படி ஒரு புத்தகத்திற்கு இன்னொரு புத்தகம் இலவசம்-னு விளம்பரம் போட்டிருக்கிறீங்களே.. ரொம்பச் சங்கடமா இருக்குது. அதுக்குப் பதில் அதிக கழிவு விலையில கொடுத்திடலாமே. இதை ஒரு கோரிக்கையாவே உங்க கிட்ட வெக்கறேன்" என்றார். புத்தகங்களின் மீது ஆழமான நேசம் கொண்ட, பதிப்புத்துறை நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபாசத்தின் எல்லையை பின்பற்றி விடக்கூடாதே என்கிற ஒரு வாசகனின் ஆதங்க குரலாக அந்தக் கோரிக்கை எனக்குப் பட்டது.

கண்ணன் இந்த எதிர்பாராத தருணத்திற்கு சற்று தடுமாறியது போல் தோன்றியது. "இலவசம்-னு ஏன் நீங்க எடுத்துக்கறீங்க. வாசகர்களுக்கு நாங்கள் அளிக்கும் அன்பளிப்பு'ன்னு என்ற ரீதியில்தான் இதை அணுகலாம்" என்கிற மாதிரி ஒரு சமாளிப்பான பதிலை தந்து விட்டு சிவராமனின் கேள்வியை மிகச் சுலபமாக உதறிவிட்டுச் சென்றார்.

காலச்சுவடின் இந்த வணிக ரீதியான அணுகுமுறையில் எனக்கு எந்தவிதமான முரணும் தெரியவில்லை. மாறாக இதன் மூலம் வாசகர்கள் அதிக நூல்களை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். நூற்களின் உள்ளடக்கத்தை வணிக ரீதியில் அமைத்துக் கொள்வதிலும் அதை விற்பனை செய்ய சாதுர்யமான வழிகளை பயன்படுத்துவதில்தான் பிரச்சினை இருப்பதாக எனக்குப்பட்டது. புத்தகங்கள் ஒரு சமூகத்தின் அறிவு, பண்பாட்டு வளர்ச்சிக்கான மேம்பாட்டுச் சாதனங்கள், அதை முற்றிலும் வணிகமயப்படுத்தி விடக்கூடாது என்றாலும் அதை உற்பத்தி செய்கின்ற பதிப்புத்துறை தொடர்ந்து செயல்படுவதற்கான லாபத்தை ஈட்ட அதிகம் பாதகமில்லாத வணிக யுக்திகளை பயன்படுத்தலாம் என்பதுதான் என் நிலைப்பாடு.

பிற்பாடு ஹரன் பிரசன்னாவிடம் இதைப் பற்றி விவாதித்த போது ஏறத்தாழ என்னுடைய கருத்தையே எதிரொலித்தார். "புத்தகங்களுக்கு புத்தகங்களைத்தானே இலவசமாய்த் தருகிறார்கள். தொடர்பேயில்லாமல்  ஒரு குக்கரை இலவசமாக தரும்போதுதான் நோக்கம் குறித்தான சந்தேகம் எழலாம்' என்றார். "ஏன் சமையல் புத்தகங்களுக்கு குக்கரை இலவசமாய்த் தருவதில் தவறென்ன, அது தொடர்புடையதுதானே?" என்று விளையாட்டாய்க் குட்டையைக் குழப்பினேன்.

என்றாலும் சிவராமனின் சார்பாக அவரின் ஆதார எண்ணம் என்னவாக இருக்கக்கூடும் என்று பிரசன்னாவிடம் விளக்க முயன்றேன். "மேலுக்கு ஆபத்தில்லாதது போல் தோன்றும் இந்த வணிகத் திட்டங்கள் காலப்போக்கில் இன்னும் பல்வேறு வடிவங்களில் உருமாறி "குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினால் அவர் விரும்பி அணியும் விலையுயர்ந்த பிராண்ட் ஜட்டி இலவசமாக அளிக்கப்படும்".. என்கிற அபாயகரமான எல்லைக்கு இது சென்று விடக் கூடும், என்று சிவராமன் நினைத்திருக்கலாம்" என்று அமைதியாக நின்றிருந்த சிவராமனை சீண்டிவிட முயன்றேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரஜினி ராம்கி "அது உபயோகப்படுத்தப்பட்ட ஜட்டியா?" என்றொரு அடிப்படையான வினாவை எழுப்பி இந்த முக்கியமான விவாதத்தின் பரிமாணத்தை விரிவுப்படுத்தினார்.

பாவம் சிவராமன். எங்களுக்குள் மாட்டிக் கொண்ட திண்டாட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் சிரித்து மழுப்ப வேண்டியிருந்தது.

(தொடரும்)

suresh kannan

Monday, January 04, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 1)

வழக்கம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லவே கூடாது என்கிற தீர்மானமான முடிவில் இருந்தேன். எல்லாமே பொதுவான காரணங்கள்தான். கடந்த சில வருடங்களில் வாங்கின புத்தகங்களையே இன்னும் வாசிக்காமலிருக்கும் குற்றவுணர்வு, நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களையே வாசிக்க நேரம் போதாத திணறல், சற்று அதிகவிலையுள்ள உடையை கேட்ட மகளுக்கு சிக்கனத்தின் அருமையை அரைமணி நேரம் 'தாராளமாக' விவரித்து விட்டு, நான் மாத்திரம் விலை அதிகமுள்ள புத்தகங்களை 'இலக்கிய போதையில்' வாங்கி பின்பு யோசிக்கும் அப்பட்டமான மிடில் கிளாஸ் மனப்பான்மை...இப்படியாக சில.

முதல் நாள் திரைப்படம் போல சில புத்தகங்களை அதன் பரபரப்பிற்காகவே நாம் அவசரப்பட்டு வாங்கி விடுகிறோமோ என்று கூட தோன்றுகிறது. அதனுடைய ஆரவாரம் அடங்கி அது குறித்தான நடுநிலை விமர்சனங்கள் எழுந்த பின்பு தீர்மானிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

(ஆனால் இதற்கு இன்னொரு புறமும் இருக்கிறது. இரண்டு ரூபாய் நாளிதழைக்கூட எதிர் இருக்கை பயணியிடமிருந்து இரவல் வாங்கி மாத்திரமே படிக்க விரும்பும் அபத்த மனப்பான்மை. பெரும்பான்மையான எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அலுத்துக் கொள்கிற படி திரைப்படத்திற்கும் சுவையான உணவிற்கும் எந்தவொரு விலையையும் மனமகிழ்ச்சியுடன் கூட்டத்தில் நீந்தியாவது செலவழிக்கும் நாம் நுண்ணுர்வை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களுக்கான தொகையை அநாவசியச் செலவு பட்டியலில் சேர்ப்பது அநியாயம்)

என்றாலும் நண்பர் சிவராமன் "நீங்கள் எப்போது கண்காட்சிக்கு செல்வதாக இருக்கிறீர்கள்?" என்று கேட்ட போது 'அந்தச் சடங்கை நான் நிச்சயம் செய்வேன்' என்கிற அவரின் தீர்மானமான நம்பிக்கையை பாழாக்க விரும்பாமலும் "செல்ல மாட்டேன்" என்று கூறுவதால் என்னுடைய 'அறிவுஜீவி' பிம்பத்தின் மீது ஏதேனும் சேதாரம் நிகழலாம் என்கிற காரணத்தினாலும் சனியன்று (02.01.2010) செல்ல தீர்மானமாகியது.

()

முன்ஜாக்கிரதையாக கண்காட்சியின் எதிர்ப்புறமுள்ள நியாய விலைக் கடைகளில் (?!) மேய்ந்தேன். முதுகுவலி இல்லாத அன்பர்கள் பொறுமையாக அமர்ந்து தேடினால் ஷெல்டன், கிறிஸ்டி போன்றவைகளுக்கிடையில் ரத்தினங்கள் கிடைக்கலாம். எனக்குக் கிடைத்தது Fyodor Dostoesvsky-ன் 'The Brothers Karamazov'. சுதேசமித்திரன், கல்கி போன்றவைகளின் 1960-களின் தீபாவளி மலர்களை ஆச்சரியத்துடன் புரட்டிப் பார்த்தேன்.

அரசியல் மாநாடுகளை நினைவுறுத்தும் பிரம்மாண்ட ப்ளெக்ஸ்களை கடந்து சென்று டிக்கெட் கவுண்ட்டரில் நின்றேன். நான் சென்ற நெரிசலான நேரத்தில் ஒரே ஒரு கவுண்ட்டரை மாத்திரம் திறந்து வைத்திருந்து மற்றவற்றை மூடி வைத்திருந்தார்கள். மற்ற இடங்களி¦ல்லாம் க்யூவில் நின்று பழக்கப்பட்டு விட்ட மக்கள், இங்கு வந்து அது நிகழாமல் மனத்தடுமாற்றம் அடையக்கூடாது என்கிற அமைப்பாளர்களின் நல்லெண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியாக நின்று கொண்டிருந்த போது பேட்ஜ் அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து குறிப்பாக என்னைத் தேர்ந்தெடுத்து "அந்தப் பக்கம் கவுண்ட்டர்ல யாருமே இல்ல, அங்க போங்க" என்றார். அவர் கைகாட்டிய தூரத்திற்கு செல்ல ஆட்டோ தேவைப்படும் போலிருந்தது. "அங்கதான் யாருமே இல்லன்னு சொல்றீங்களே, யாரு கிட்ட டிக்கெட் வாங்கறது" என்று மொக்கை போட்டேன். அவருக்குப் புரியவில்லை. வரிசையில் இருந்தவர்கள் சிரித்ததில் சற்று அற்ப திருப்தி. இது போன்ற பல 'பிரகஸ்பதிகளை' அந்த இளைஞர் கடந்த சில நாட்களில் நிறையப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு விளம்பரத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 'புதிய தலைமுறை' என்று ஒருபுறம் அச்சிட்ட பெரிய அளவு பிளாஸ்டிக் பைகளை ஒரு இளைஞர் விநியோகித்துக் கொண்டிருந்தார். வாங்கும் எல்லாப் புத்தகங்களையும் அதிலேயே போட்டுக் கொள்ளலாம் என்கிற அளவுள்ள பை. புத்திசாலித்தனமான அணுகுமுறை.

பொதுவாகவே அதிக மக்கள் கூடும் இடங்களி¦ல்லாம் 'திருவிழா குழந்தை' போலவே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும். இப்பவும் அப்படித்தான். 'அப்பவே கண்ணைக் கட்டியது'. மெதுவாக ஊர்ந்து சென்ற போது தமிழினி அரங்கில் சிவராமன் கல்லா கட்டிக் கொண்டிருந்தார். என்னை அமரச் சொல்லி தமிழினி வசந்தகுமாரிடம் "நல்லா எழுதறவர்" (?!) என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். வசந்த குமார் ஆளைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடுவார் போல. என்னை அவநம்பிக்கையாக பார்த்தது போல் தோன்றியது.

சூத்ரதாரி என்கிற எம்.கோபால கிருஷ்ணணிடம் சற்று நேரம் உரையாடினேன். தமிழினி மாத இதழில் இவரின் பத்தி எழுத்தை தொடர்ந்து வாசிப்பதை சொல்லி வைத்தேன். இணையத்திற்குள் நுழையச் சொல்லி கடந்த ஆண்டுகளில் இவரிடம் பேசிக் கொண்டிருந்தை நினைவு கூர்ந்தேன். கூடிய விரைவில் எழுத ஆரம்பிப்பதாக வாக்களித்திருக்கிறார்.

சிவராமனின் நுரையீரல் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் அவர் 'யாழிசை' லேகாவிடம் புத்தகப் பையை ஒப்படைப்பதற்காக காத்திருந்தார். நான் ஒரு சுற்று சென்று வருவதற்காகச் சொல்லி வேட்டைக்கு மகா சோம்பலாக கிளம்பினேன். என்¦ன்னவோ விசித்திரமான பதிப்பக பெயர்களில் கடைகள். 'விகடன்' போன்ற சிலதில் கூட்டம் அம்மிக் கொண்டிருக்க சில கடைகளில் ஆளே இல்லாமல் பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள்.




கிழக்கில் 'பழைய அத்னான் சாமி' போல ஹரன்பிரசன்னா அமர்ந்திருந்தார். பதிப்பகத்தைப் போலவே அவரது வளர்ச்சியும் பிரம்மாண்டமாக இருந்தது. 'இருபத்தெட்டு நாட்களில் மெலிவது எப்படி?' என்று வருகிற பிப்ரவரிக்குள் ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கச் சொல்லி பத்ரி அவரைத் தண்டிக்கலாம். அவரது பரிந்துரையின் பேரில் 'இலங்கை இறுதி யுத்தமும்' (நல்லாயில்லாம போகட்டும், வெச்சுக்கறேன்), என்னுடைய விருப்பத் தேர்வாக 'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு'ம் வாங்கினேன். அப்போது காவலர் உடையிலிருந்த ஒருவர் பிரசன்னாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தைப் பார்த்த போது, ராஜீவ் கொலை வழக்கின் சொச்சமிச்ச விசாரணையில் பிரசன்னாவும் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று நான் வில்லங்கமாக யோசித்துக் கொண்டிருந்தேன். (என்னா வில்லத்தனம்) "ஒண்ணுமில்ல. கம்பெனி டி ஷர்ட்டுக்காக ஒரு பிட்டைப் போட்டுட்டுப் போறாரு" என்று பிரசன்னா என்னை ஆசுவாசப்படுத்தினார்.

(தொடரும்)

image courtesy: kizhaku publishers

suresh kannan