Wednesday, January 06, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 3)

பகுதி 1 | பகுதி 2

(புத்தக கண்காட்சிக்கு சென்ற ஒரு விஷயத்தை இத்தனை பதிவுகளுக்கு இழுப்பது எனக்கே ஓவராகத்தான் தெரிகிறது. வாசிப்பவர்கள் சற்று பொறுத்தருளவும்).

சிவராமனும் நானும் கண்ராவியான கண்காட்சி கா·பியை அருந்திவிட்டு கிரிவலத்தைத் தொடர்ந்தோம். நான் முதலில் சுற்றி வந்த போது 'வம்சி புக்ஸ்' கடையை கவனிக்கத் தவறிவிட்டேன். 'பெருவெளி சலனங்களில்' என்னுடைய படைப்பு ஒன்றும் (நான் பியர் குடித்து வளர்ந்த கதை) வந்திருப்பதாக நண்பர் மாதவராஜ் தெரிவித்திலிருந்து அதைப் பார்த்துவிட மனம் 'குறுகுறு'வென்றிருந்தது. இணையப் பதிவர்களை அச்சு ஊடக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த நல்ல முயற்சியை எடுத்த மாதவராஜிற்கும் வம்சி பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமானதொரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

                       

        இடமிருந்து வலமாக (நான், சிவராமன், பிரசன்னா) 
       (புகைப்பட உதவி: ரஜினி  ராம்கி)


சிவராமனும் நானும் ஒருவழியாக வம்சி புக்ஸ் கடையை கண்டுபிடித்துவிட்டோம். நண்பர் அய்யனாரின் புத்தகங்கள் உட்பட அனைத்து சமீபத்திய புத்தகங்களும் மிகுந்த அழகியல் உணர்வுடனும் தரமான வடிவமைப்புடனும் வாங்கத் தூண்டுகிற அச்சுத் தரத்துடனும் அமைந்திருந்தன. புத்தகங்களை சிறப்பாக உருவாக்கும்..க்ரியா, காலச்சுவடு, உயிர்மை.. சமீபத்திய கிழக்கு பதிப்பகங்களின் வரிசையில் வம்சி புக்ஸையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம்.

என்னுடைய கட்டுரை வெளிவந்த நூலை பரவசத்துடன் புரட்டிப் பார்த்தேன். என்னுடைய முதல் சிறுகதையை அச்சில் கண்ட சந்தோஷ உணர்வை மீண்டும் அடைந்தது போலிருந்தது. மாதவராஜ் இதற்கான ஒப்புதலை என்னிடம் கேட்ட போதே, சம்பந்தப்பட்ட பதிவை இன்னும் மேம்படுத்தி எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் என்னவோ ஒரு தயக்கத்தில் அதை விட்டுவிட்டேன். அச்சில் பார்த்தவுடன் அதே உணர்வு மீண்டும் எழுந்தது.
(ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சம்பந்தப்பட்ட பதிவர்களின் இணைய முகவரி இல்லாதது ஒரு சிறிய குறை.)


இது குறித்த இன்னொரு விஷயத்தையும் ஆராய வேண்டும். அச்சு ஊடகத்திற்காக எழுதுகிற போது தரம் மற்றும் குறித்த பிரக்ஞையுடனும் கவனத்துடனும் எழுதுகிற நான், இணையப் பதிவுகளை அம்மாதிரியான உணர்வுகளுடன் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றியது. அதே போல் படைப்புகள் அச்சில் ஏறும் சந்தர்ப்பம் நிகழும் போது  ஏதோ பிரமோஷன் கிடைத்த சந்தோஷத்துடன் அதை அறிவித்துக் கொள்கிறோம் என்பதும் புரியவில்லை. இந்த மாயையைக் நாம் கடப்பதற்கு இன்னும் சில ஆண்டுகளாகலாம் என்று தோன்றுகிறது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் 'உருப்படாது' நாராயணன் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்பு நாராயண்,

நம்பினால் நம்புங்கள். நானும் காலையில் - அலுவலகத்திற்கு வரும் வழியில் - இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் 'எழுத்தாளர்' என்கிற தகுதி எப்படி அளக்கப்படுகிறது என்றால் - அதன் உள்ளடக்கம் என்ன கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை - அவரது எழுத்தில் எத்தனை புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு புத்தகமாவது எழுதியிருந்தால்தான் உங்களை எழுத்தாளர் என்கிற வட்டத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த அசட்டு concept எனக்குப் புரியவில்லை.

ஒருவன் தன் சிந்தனைகளை எந்த மாதிரியும் தொகுத்து வைக்கலாம். கிராமப் புறங்களில் கல்வி கற்றவனை விட அதிக நுண்ணறிவோடு இருப்பார்கள். மனித உறவுச் சிக்கல்களுக்கு அவர்கள் பாமர மொழியில் சொல்லும் யோசனைகள் ஒரு உளவியல் மருத்துவன் சொல்கின்ற அறிவுரையை விட சிறப்பானதாக இருக்கலாம். ஆனால் நம்மாட்கள் அதை ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால்தான் அவன் அறிவாளி என்று ஒத்துக் கொள்கிறார்கள். இன்று யாருடையாவது ஒரு புத்தகம் வெளியாகி இருந்தாலே அவன் தலை மேலே ஒரு ஒளிவட்டம் உருவாகிவிடுகிறது. அதன் பளு தாங்காமல் அவன் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. (இதை நான் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாக சொல்லவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்கிறேன்)

ஆக அச்சில் வந்தால்தான் அல்லது புத்தகமாக வெளிவந்தால்தான் ஒரு விஷயத்திற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாதிரியான பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த cliche உடைய வேண்டும். வலைப்பதிவில் பதிந்திருந்தாலும் அதன் தர அளவுகோல்களுக்கேற்ப அது இலக்கியம்தான்.

கணியை பயன்படுத்த இல்லாதவர்களுக்கும் நம்முடைய சிந்தனைகள் போய்ச் சேர வேண்டும் என்பது மாதிரியாக சிந்திக்கும் போது நீங்கள் கூறுவது பரிசீலனைக்கு ஏற்றதாக தெரிகிறது.


()

சிவராமனுக்கு புத்தகங்களின் மீது இருக்கிற நேசத்தை முன் பகுதியில் சொன்னேன் அல்லவா? அவரது இன்னொரு சிறப்பான குணாதியத்தையும் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும்.

சங்கர் என்கிற பதிவரை (பார்த்ததும் கேட்டதும்) அறிமுகப்படுத்தினார் சிவராமன். அவர் கோணங்கியின் 'மதனிமார்கள் கதை'யை இருநாட்களாக கண்காட்சியில் தேடிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சிவராமன் தன்னிடமுள்ள அந்தப் புத்தகத்தை தருவதாகவும் ஆனால் அதைப் பற்றி சங்கர் பதிவிட வேண்டும் என்கிற நிபந்தனையை மாத்திரம் முன் வைத்தார். இதே போல் என்னிடமும் சினிமா குறித்த சில ஆங்கில நூல்களையும் குறுந்தகடுகளையும் தந்து, நிச்சயம் அதைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆங்கில நூல் என்பதால் எழுதுவதற்கு குறைந்த பட்ச அவகாசமாக ஒரு வருடத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பின்னே எழுத்துக்கூட்டி படிப்பதற்கு நேரம் வேண்டாமா?

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்... என்னுடைய உயிர் நண்பராக இருந்தாலும் அவருக்கு என் புத்தகத்தை நான் தரமாட்டேன். என்னுடைய சேகரிப்புகளின் மீது அவ்வளவு பொசசிவ்னஸ் எனக்கு. ஆனால் தரமான படைப்புகளைப் பற்றின பதிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிற சிவராமனின் இலக்கிய நோக்கம் போற்றத்தக்கதாகவே இருக்கிறது. (இவ்வாறெல்லாம் எழுதுவதற்காக சிவராமன் ஒருவேளை சங்கடத்தில் நெளியலாம். ஆனால் பாராட்டத்தக்க விஷயங்களை அந்தக் கணமே செய்தாகி விட வேண்டும் எனக் கருதுகிறேன்).

வழியில் 'காவேரி கணேஷ்' மற்றும் அன்பு (?) ஆகிய பதிவர்களை சிவராமன் அறிமுகப்படுத்தி வைத்தார். கணேஷ் எங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இணையத்திலும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

()

கிளம்புவதற்குள் பா.ரா.வை சந்தித்துவிட வேண்டும் என்று தோன்றியது. 'கிழக்கு' அரங்கில் விசாரித்த போது அவர் எப்போதும் அரங்கங்களுக்கான இடைவெளிகளில் 'தலைமறைவு' வாழ்க்கையை நடத்துகிறார் என்று தெரியவந்தது. தீவிரவாதத்தைப் பற்றி தொடர்ந்து எழுதினதால் வந்த வினையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பின்பு சிவராமன் வயர்லெஸ்ஸில் சங்கேத பாஷைகளை பரிமாற்றம் செய்தவுடன் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நல்ல வேளையாக நாங்கள் செல்வதற்குள் 'ஜோதிட மாநாடு' முடிந்து விட்டிருந்தது. பாரா, என்னுடைய தொப்பையையும் அவருடையதையும்  ஒப்பிட்டு  'எது பெரியது' என்கிற போட்டியை அறிவித்தார். பாராவே வென்றதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

நர்சிம், யுவகிருஷ்ணா, ரவிஷங்கர், அதியமான், மருத்துவர் ப்ரூனோ போன்ற சகபதிவர்களுடன் உரையாட முடிந்தது. அஜயன் பாலாவும், பாஸ்கர் சக்தியும் அப்போதுதான் கடந்து சென்றனர். பாஸ்கர் சக்தியிடம் இந்த  மற்றும் இந்தப் பதிவு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஏனோ நிகழவில்லை.

உருப்படி மற்றும் அல்லாத பல விஷயங்களைப் பற்றி உரையாடின பின்னர் சபை கலைந்தது. (அப்பாடி!).

பொறுங்கள்... இன்னும் முக்கியமானதொரு பகுதி பாக்கி இருக்கிறது.

நானும் சிவராமனும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடின அந்த ஏறத்தாழ அரை மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனதுக்கு மிக நிறைவை அளித்த அந்தத் தருணங்களைப் பற்றி உங்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது..

(தொடரும்)

image courtesy: www;thaiyal.com

suresh kannan

6 comments:

விழியன் said...

இனிமையான அனுபவங்கள்.

//(ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சம்பந்தப்பட்ட பதிவர்களின் இணைய முகவரி இல்லாதது ஒரு சிறிய குறை.) //

அந்த புத்தகத்தின் கடைசி பக்கங்களில் எல்லோருடைய இணைய முகவரிகளும் பார்த்ததாக நினைவு.

Unknown said...

சுரேஷ், நல்ல பகிர்வு. சிவராமனின் நல்ல குணத்தைச் சொல்லும் பத்திகளைப் படிக்கும்போது வருங்காலத்தில் “சிவராமனின் கேடயம்”ன்னு உங்களைச் சொல்லிடப் போறாஙன்னு ஒரு பயம் வருது :-)

முடிந்தால் இந்த மாத உலக சினிமா நிகழ்ச்சியில் சிவராமனைச் சந்தித்து அவரது இளமையின் ரகசியம் என்னன்னு கேக்கணும் ;-)

Unknown said...

இந்த பதிவில் ‘பல இடங்கள்’ பிடித்திருந்தது. சுவை

குப்பன்.யாஹூ said...

மிகவும் சுவாரஸ்யமான பதிவு, நன்றிகள்

இந்த பதிவிற்கு தொடர்புடையதா என்று தெரியவில்லை, இருந்தாலும் புத்தக கண்காட்சி சீசன் என்பதால் எழுதுகிறேன்.

கூகிள் அல்லது யாஹூவில் படித்தேன். இந்த ஆண்டு அமெரிக்கர்கள் வாங்க விரும்பாத பத்து பொருட்களில் இரண்டாவது பொருள் அச்சு வடிவ புத்தகம், செய்தி தாள்.
முதல் பொருள் வீசிடி.

நம் தமிழ்நாட்டில் தான் இன்னமும் அச்சு வடிவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாமும் வலை வடிவில் இருந்து ஆச்சு வடிவத்திற்கு மாறுவதை பெரிய முன்னேற்றம், மாற்றம் ஆக கருதுகிறோம்.

Ayyanar Viswanath said...

நன்றி சுரேஷ் கண்ணன் :)

Chennais said...

Somebody can publish a book containt all the details of the popular blogger list. I hope already somebody did this.