Saturday, January 09, 2010

சாரு

"நீங்கள் உருவாக்கின திரைப்படங்களில்  உங்களுக்கு அதிக திருப்தியை தந்த திரைப்படம் எது?" என்றொரு கேள்வி சத்யஜித்ரே முன் வைக்கப்பட்டது. அவர் தயக்கமேயில்லாமல் குறிப்பிட்ட திரைப்படம் "சாருலதா". "இதை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற நிலையில் 'இப்போது இருக்கிற அதே  முறையில்தான் மீண்டும் இதை உருவாக்குவேன். அந்தளவிற்கு சொற்பமான குறைகளே கொண்டது. என்னுடைய பேவரைட் இதுவே" என்கிறார் ரே.

ரே ரசிகர்களால் பிரதானமாக கொண்டாடப்படுகிறதும் சர்வதேச அளவில் முதலில் பேசப்பட்ட இந்திய திரைப்படமான 'பதேர் பாஞ்சாலி'யை விட 'சாருலதா'வையே நான் அதிகம் கொண்டாடுவேன். உலகத்தின் சிறந்த பத்து திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் நான் எப்பாடு பட்டாவது ‘சாருலதா’வை உள்ளே கொண்டு வருவேன். அந்த அளவிற்கு என்னுள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படமிது. பாலியல் ரீதியான உறவுச் சிக்கலை இவ்வளவு நுட்பத்துடனும் subtle-ஆகவும் கையாண்ட எந்தவொரு உலகத் திரைப்படத்தையும் இதுவரை நான் கண்டதில்லை.பயப்படாமல் தொடர்ந்து வாசியுங்கள்.

நான் இந்த இடுகையில் எழுதப்போவது இந்தத் திரைப்படம் குறித்த முழுமையான பார்வையல்ல. அப்படி எழுதினால் அது பத்திருபது இடுகைகளுக்காவது நீளும். அல்லது ‘பதேர் பாஞ்சாலி’ குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதின ‘நிதர்சனத்தின் பதிவுகள்’ போன்று இத் திரைப்படத்தையும் பற்றி யாராவது எழுதினால்தான் உண்டு. (ஒரு திரைப்படம் குறித்த முழுமையான அனுபவப்பகிர்வு தமிழில் நூலாக வெளிவந்தது அதுதான் முதல் என்று நினைக்கிறேன்).

நான் எழுதப் போவது இத்திரைப்படத்தில் என்னை பிரதானமாக கவர்ந்த குறிப்பிட்டதொரு காட்சியைப் பற்றி மாத்திரமே. 

என்னுடைய வீட்டுத் தொலைக்காட்சியின் மேல் இத்திரைப்படத்தின் குறுந்தகடு நிரந்தரமாகவே வைக்கப்பட்டிருக்கும். இனிப்பை சாப்பிடுகிற சிறுவன் போல் அவ்வப்போது சில காட்சிகளை மாத்திரம் தேர்ந்தெடுத்து பார்ப்பேன். அவ்வாறான காட்சிகளில் நான் எழுதப்போகும் இந்த காட்சிக் கோர்வைதான் எனக்கு மிகவும் மிகவும் பிடித்தமானது. குறுந்தகட்டில் சம்பந்தப்பட்ட பகுதி தேய்ந்து நைந்து கூட போயிருக்கலாம்.

அதற்கு முன்னால் இத் திரைப்படத்தின் மற்றும் சம்பந்தப்பட்ட காட்சியின் முன்னோட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தாகூரின் ‘சிதைந்த கூடு’ எனும் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் 1964-ல் வெளியானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில், வங்காளத்தின் சுதந்திரப் போராட்டம் தனது தீவிரத்தை எட்டிக் கொண்டிருந்த காலத்தில் இத் திரைப்படத்தின் நிகழ்வுகள் அமைகின்றன. தான் நடத்தும் அரசியல் பத்திரிகையே கதி என கிடைக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியர். அவரது அரவணைப்பை ஏங்கி எதிர்பார்த்து கிடைக்காமல் தனிமையில் புழுங்கும் அவரது மனைவி. அவர்களது வாழ்க்கையில் இனிமையான குறுக்கீடாக நுழையும் ஒரு இளைஞன். இந்தப் பிரதானமான மூன்று பாத்திரங்களைச் சுற்றித்தான் இத்திரைப்படம் இயங்குகிறது.

()

சாருவின் தனிமையை புரிந்து கொள்ளும் ஆசிரியர், அவளுடைய பேச்சுத் துணைக்காக சாருவின் சகோதரையும் அவளுடைய மனைவியையும் தம்முடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார். மிகுந்த நுண்ணுர்வுள்ள சாருவிற்கும் அந்த சராசரி கிராமத்துப் பெண்மணிக்கும் அலைவரிசையின் மாறுபாட்டால் எந்த சுவாரசியமும் நட்பும் நிகழ்வதில்லை. இந்நிலையில் பத்திரிகை ஆசிரியரின் உறவுக்கார இளைஞன் (அமல்) ஊரிலிருந்து வருகிறான். மிகுந்த நகைச்சுவையும் இலக்கிய ஆர்வமும் உள்ளவன்.

‘சாரு’விடம் இயல்பாக பேசி அவளிடமுள்ள எழுத்துத் திறமையை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை அமலிடம் வைக்கிறார் ஆசிரியர். கவிதை எழுதும் பழக்கமுள்ள அவனுக்கும் புத்தக வாசிப்பு அனுபவமுள்ள சாருவிற்கும் உள்ள ஒரே அலைவரிசை காரணமாக நட்பு ஏற்படுகிறது.

இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் ஒரு ஏகாந்தமான மனநிலையில், கவிதை எழுதத் தோன்றுவதாக கூறுகிறான் அமல். சாரு அவனுக்கென்றே பிரத்யேகமாக பெயரிடப்பட்ட ஒரு புத்தகத்தைத் தந்து அதில் எழுதத் சொல்கிறாள். 

தன்னுடைய கட்டுரை எழுதப்பட்டவுடன் வாசித்துக் காட்டுகிறான். ‘இதை எங்கும் பிரசுரிக்கக்கூடாது. இதில் எழுதப்படும் எதுவும் இதிலேயே இருக்க வேண்டும்’ என்ந நிபந்தனையை விதிக்கிறாள் சாரு. இதன் மூலம் அவளுடைய possessiveness குணம் தெரியவருகிறது. அவனும் விளையாட்டாக ஒப்புக் கொள்கிறான்.

“இனி  உன்னுடைய முறை. நீ ஏதாவது கதை எழுத வேண்டும்” என்று அவளை திட்டமிட்ட பாதைக்கு நகர்த்தப் பார்க்கிறான். “எனக்கு எதுவும் எழுதத் தெரியாது” என்கிறாள் சாரு. “ஏன் உன் இளமைப் பருவ நினைவுகள், ஊர், திருவிழா என்று எவ்வளவு இருக்கும். அதை எழுது” என்கிறான் இளைஞன். “இல்லை என்னால் முடியாது” இது சாரு.

“அப்படியென்றால் பூபதிக்கு (பத்திரிகை ஆசிரியர்) நான் பதில் சொல்லியாக வேண்டும்” என்று வாய்தவறி உண்மையைக் கொட்டி விடுகிறான் அமல். அவளுடைய திறமையை ஊக்குவிப்பதில் அவளுக்கு எந்தச் சந்தேகமும் எழாமல் அது இயல்பாக நிகழ வேண்டும் என்று ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருக்கிறார் ஆசிரியர். தன்னுடைய கணவனின் உத்தரவின் பேரில்தான் இவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் சாரு.

“நீ எழுதவில்லையெனில் நான் எழுதினதை பிரசுரத்திற்கு அனுப்பி விடுவேன்” என்று செல்லமாக மிரட்டுகிறான் அவன். “எதையாவது செய்து கொள்” என்று எரிச்சலுடன் எழுந்து போய் விடுகிறாள் சாரு.

()

சாருவின் அண்ணியிடம் தான் எழுதியதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என விளையாட்டாக ஆலோசனை கேட்கிறான் அமல். இலக்கியத்தைப் பற்றி எதுவுமே அறிந்திராத அவளிடம் கேட்பதை, ஒருவன் தான் முடிவெடுக்க முடியாத நிலையில் நாணயத்தை சுண்டி விடுவதற்கு ஒப்பாகச் சொல்லலாம். இரண்டு பத்திரிகைகளுக்கான வாய்ப்புகள் உள்ளன. ஒரு பத்திரிகை அவ்வளவு சுலபத்தில் புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை பிரசுரம் செய்யாது. எனவே இன்னொரு பத்திரிகைக்கு அனுப்ப முடிவு செய்கிறான்.

இடையில் அமலின் திருமணத்தை குறித்து உரையாடுகிறார் பத்திரிகை ஆசிரியர். தன்னுடைய விளையாட்டுப் பொம்மையை யாரோ பறித்துக் கொள்கிற உணர்வில் திகைத்துப் போகிறாள் சாரு. எதையுமே விளையாட்டாக அணுகும் அமல் இந்த திருமணப் பேச்சு உரையாடலையும் விளையாட்டாகவே அணுகுகிறான். அப்போதுதான் சாருவிற்கு புன்னகைக்கவே தோன்றுகிறது.

அமல் அனுப்பின கட்டுரை பிரசுரமாகி விடுகிறது. மிக உற்சாகமாக கத்திக் கொண்டே இந்தச் செய்தியை சாருவிடம் அறிவிக்கிறான் அவன். தன்னுடைய வேண்டுகோளை மீறி அவன் பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமும் ஆகி விட்டதே என்று சாருவிற்கு மிகுந்த ஆத்திர உணர்வு ஏற்படுகிறது. அமலின் மகிழ்ச்சியை முற்றிலுமாக புறக்கணிக்கிறாள். எப்படியாவது அவனுக்கு  தன்னை நிருபித்து அவனை வெல்ல வேண்டும் என்கிற வன்ம உணர்ச்சி மேலிடுகிறது. எழுதுவதின் மூலம்தான் இதை சாதிக்க முடியும் என்று தோன்றுகிறது.

எழுத அமர்கிறாள். எதுவுமே தோன்றவில்லை. அழுகை வருகிறது. பிறகு நிதானமாக அமர்ந்து தன்னுடைய இளமைப்பருவ நினைவுகளை தோண்டிக் கண்டெடுக்கிறாள். ஒரு முடிவுக்கு வந்தவள் போல் எழுந்து கடகடவென்று எழுதத் துவங்குகிறாள்.

()

இதற்குப் பிறகுதான் நான் குறிப்பிட விரும்புகிற காட்சி வருகிறது.

காமிரா வேகமாக நடந்து வரும் ஒரு பெண்ணின் (சாரு) கால்களையும் கூடவே அவள் கொண்டு வருகிற பத்திரிகையையும் காண்பிக்கிறது.

அமலின்  அறைக்குள் புயல் போல் நுழைகிற சாரு, ஆத்திரத்துடனும் அவனை வென்றுவிட்ட குரூர திருப்தியுடனும் பத்திரிகையைக் கொண்டு அவன் தலையில் ஓங்கி ஓங்கி அடிக்கிறாள். பின்பு பத்திரிகையை பிரித்து அவளுடைய கட்டுரையின் கீழ் பிரசுரமாகியிருக்கிற பெயரை “நன்றாக பார், திருமதி.சாருலதா” என்று காண்பிக்கிறாள்.  எந்தப் பத்திரிகை புதியவர்களை பிரசுரிக்காது என்று அமல் தயங்கினானோ அந்தப் பத்திரிகையில் சாருவின் கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது.

வேகமாக அறையை விட்டு வெளியேறி அவளுடைய அண்ணி அமலுக்காக தயாரித்து வைத்திருக்கிற வெற்றிலை பீடாக்களை தூக்கி எறிந்து விட்டு (இனிமே நானே தயாரிக்கிறேன். நீ அதிகம் சுண்ணாம்பு கலந்துவிடுகிறாய்) புதிதான ஒரு பீடாவை தயாரித்து அமலின் வாயில் திணிக்கிறாள்.

அமல் திகைத்துப் போய் அமர்ந்திருக்கிறான். சாருவிற்குள் இவ்வளவு திறமையான எழுத்தாளர் இருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவேயில்லை. முன்பு இருவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது சாரு தான் அமர்ந்திருக்கிற ஊஞ்சலை ஆட்டி விடச் சொல்கிறாள். 'ஒரு எழுத்தாளரை இப்படி அவமானப்படுத்தலாமா?' என்று கேட்கும் அமல், பின்பு தன்னுடைய கட்டுரை பிரசுரமான போது "இனியாவது என்னிடம் மரியாதையாக நடந்து கொள்" என்று குறும்பாக அவளிடம் சொல்கிறான். இப்படியொரு திறமைசாலி என்பதை அறிந்திருந்தால், இப்படியெல்லாம் அவளிடம் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்க மாட்டான் அவன்.

"நீ தொடர்ந்து எழுத வேண்டும் சாரு. நிறுத்தி விடாதே" என்கிறான். சாரு அந்தப் பத்திரிகையை தூக்கி எறிகிறாள். அவளைப் பொறுத்த வரை அவனை சவாலில் வென்றதே போதுமானது. "இனிமேல் எதையும் என்னால் எழுத முடியாது" என்கிறாள். ஆனால் அமல் எதை எதையோ சொல்லிக் கொண்டு போகிறான். அதற்கு மேலும் அவளால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. ஓடிவந்து அமலின்  தோளின் மீது சாய்ந்து கொண்டு அழுகிறாள்.கண்ணீர் அவனுடைய சட்டையை நனைக்கிறது. தீவிரமான உடலுறவிற்குப் பின் ஏற்படுவதைப் போன்று நீண்ட மனக்கொந்தளிப்பிற்கு பின்பு ஏற்படுகிற ஆசுவாசம் அது.

அதுவரை சாருவை ஒரு தோழியாகவே காண்கிற அமல், இந்த நிகழ்விற்குப் பின்புதான் அவள் தன் மீது நேசம் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்கிறான். அவளுடனான  உறவை ஒரு நெருடலாக அமல்  உணரத் துவங்குகிற முதல் தருணம் அது.

()

நான் இப்படி விஸ்தாரமாக எழுதிக் கொண்டிருப்பதை, ரே தன்னுடைய திறமையான திரைக்கதையின் மூலம் மிக நுட்பமாகவும் பூடகமாகவும் பார்வையாளர்களின் முன் வைக்கிறார்.

அமோல், சாரு இருவரும் தோட்டத்திலிருக்கும் போது, சாரு தொலைநோக்கி மூலம் சுற்றி நடப்பதை கவனிக்கிறாள். இது அவளது வழக்கமான செய்கைகளில் ஒன்று. படத்தின் ஆரம்பக் காட்சியே அவ்வாறுதான் துவங்குகிறது. சாரு வீட்டு ஜன்னல்களின் மூலம் வெளியுலக நடமாட்டத்தை மிக நிதானமாக கவனித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கே வருகிற கணவன் ஏதோ நூலொன்றை எடுத்துக் கொண்டு சிந்தித்தபடியே செல்கிறான். சாரு அங்கு நிற்பதே அவன் பிரக்ஞையில் இல்லை. ஒரு பெருமூச்சுடன் சாரு மறுபடியும் தன்னுடைய தொலைநோக்கிக்குத் திரும்புகிறாள்.

தோட்டத்திலும் அதே போன்று தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு வீட்டில் ஒரு பெண்மணி அவளது குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்தவுடன் சாருவின் ஆழமான தனிமை உணர்ச்சியும் தன்னுடைய வாழ்க்கை முழுமை பெறாமலிருக்கும் உணர்வும் வெளிப்படுகிறது. பின்பு தொலைநோக்கியை நகர்த்திக் கொண்டே வரும் போது தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அமோலின் முகத்தைக் கவனிக்கிறாள். அவன் மீதான நேசத்தின் பொறி அப்போதுதான் அவளுக்குள் உருவாகியிருப்பதை பார்வையாளன் உணர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் அவள் கட்டுரை எழுதும் காட்சியும்.

கசக்கிப் போடப்பட்ட காகித உருண்டைகளை தொடர்ந்துச் செல்கிற காமிரா, அவள் முகத்தில் நிலைத்து நிற்கிறது. (பதிவின் ஆரம்பத்தின் உள்ள பட ஸ்டில்லை கவனியுங்கள்) பின்னணியில் ரேவின் அற்புதமான இசை ஒலிக்கிறது. மெதுவாக முன்னும் பின்னும் நகர்கிற காமிரா, அவளது முகத்தின் பின்னணியில் இளமைப் பருவ நினைவுக் காட்சிகளை காட்டுகிறது. காமிரா நிற்கும் போது சாருவும் தாம் என்ன எழுதப் போகிறோம் என்கிற தீர்மானத்தை அடைகிறாள்.

()

சாருவாக மதாபி  மாதவி முகர்ஜி (Madhabi Mukherjee) மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிஜ வாழ்க்கையில் ரேவிற்கு இவர் மீது காதல் இருந்ததாகவும் பின்பு அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கட்டுரை சொல்கிறது. உண்மைதான். மதாபி எந்தவொரு ஆணுமே விரும்பக்கூடிய பேரழகிதான். ஆனால் வெறுமனே அழகி மாத்திரமல்ல, சிறந்த நடிகையும் கூட.அமலை அவள் பத்திரிகையால் ஓங்கி அடிக்கும் போது அவள் முகத்தில் வெளிப்படுத்துகிற உணர்வுகளை என்னுடைய எளிமையான வார்த்தைகளின் மூலம் விவரிக்கவே முடியாது. பார்த்து உணர வேண்டிய காட்சியது. அப்படியொரு ஆழமான முக பாவ வெளிப்பாட்டை இதுவரை நான் எந்தவொரு திரைப்படத்திலும் கண்டதேயில்லை.

இன்னும் நிறைய சொல்ல வேண்டியிருந்தாலும், வாசிக்கிற நீங்கள் சரியாக புரிந்து கொள்கிற படி எழுதிக் கொண்டிருக்கிறேனா  என்கிற குழப்ப உணர்வு எழுதும் போது  ஏற்பட்டுக் கொண்டேயிருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.சில விஷயங்களை எழுத்தின் மூலமாக சொல்லி விடவே முடியாது. 'நான் சாப்பிட்ட இனிப்பு நன்றாக இருந்தது' என்பதை எப்படி மற்றவருக்கு உணர வைக்க முடியும்? அவரும் அந்த இனிப்பை ருசிப்பதுதான் ஒரே வழி.

'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை காணும் சந்தர்ப்பம் ஏற்படாதவர்கள், தங்களின் வாழ்க்கையில் முழுமை பெறாதவர்கள்' என்று சுஜாதா ஒரு முறை எழுதிய ஞாபகம். நான் அதனுடன் 'சாருலதா'வையும் இணைக்க விரும்புகிறேன்.

image courtesy: wikipedia & satyagitray.org

suresh kannan

16 comments:

சரவணகுமரன் said...

சாரு பத்தின பதிவு இல்லையா, இது? என்னா வில்லத்தனம்?

சுரேஷ் கண்ணன் said...

இடுகை வலைப்பூவின் கீழ்ப்பகுதிக்கு சென்று விட்டது. ஏனென்று தெரியவில்லை. இதைச் சரிசெய்ய யாராவது உதவ முடியுமா?

Rajasurian said...

layout -ல் ப்ராப்ளம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் layout -ல் மாற்றம் ஏதும் செய்திருந்தால் அதை undo செய்யவும் அல்லது
ஒவ்வொரு பதிவின் கீழும் link within வருமாறு அமைத்திருக்கிரீர்களே. அதை தற்காலிகமாய் நீக்கி விட்டு சோதித்து பார்க்கவும்.

சுரேஷ் கண்ணன் said...

ராஜசூர்யன், உடனடி உதவி்க்கு நன்றி. லேஅவுட்டில் சமீபமாக எந்த மாற்றமும் செய்யவில்லை. என்றாலும் நீங்கள் சொன்னதையும் முயன்று பார்க்கிறேன்.

சுரேஷ் கண்ணன் said...

link within - gadget-ஐ எடுத்து விட்டவுடன் சரியாக தெரிகிறது. அந்த gadget-ல் உள்ள பிரச்சினையை எப்படி சரிசெய்வது?

Anonymous said...

Maadhabi(in Bengali langugage 'V' sound is not used.So Maadhavi, a familiar name in tamilnadu, is written and pronounced with 'BI' sound in the last syllablein bengali.
On the other hand what they say Bengal, we say Vangal(am) using 'V' instead of 'B' as in the bengali language.

சுரேஷ் கண்ணன் said...

//Maadhabi(in Bengali langugage 'V' sound is not used.//

அன்புள்ள அனானி நண்பருக்கு,

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. அந்த நடிகையின் பெயரை 'மாதவி முகர்ஜி' என்றுதான் நானும் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சத்யஜித்ரே மற்றும் விக்கி தளங்களில் Madhabi Mukherjee என்று போட்டிருக்கவே அப்படியே போட்டு விட்டேன். எப்போதுமே இம்மாதிரியான பெயர்களை அப்படியே ஆங்கிலத்தில்தான் போடுவேன். என்னமோ இம்முறை..

அதிலும் சில பிரெஞ்சு பெயர்கள் இருக்கிறதே.. அப்பாடி!

செல்வா said...

சுரேஷ்,
நல்ல ரசனை. பகிர்வுக்கு நன்றி. (பதிவின் தலைப்பு.. ?..:)...)

கிருஷ்ணமூர்த்தி said...

மாதவி-மாதபி இரண்டும் சரிதான்!
வாங்காள மொழியில் வ என்று மற்ற மொழிகளில் உள்ள ஒலிக் குறிப்பு ப என்று தான் உச்சரிக்கப் படும்!

வாசுதேவ் வங்காளத்தில் பாசுதேவ்
நாம் வங்காளம் என்று சொல்வோம், அவர்கள் பங்களா என்று தான் சொல்வார்கள்!

சமீபத்தில் சாரு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, வெளிவந்த வில்லங்கமில்லாத பதிவு அனேகமாக இதுவாகத் தான் இருக்கும்!

அதனால் என்ன பின்னூட்டத்தில் ஆரம்பித்துவிடுவார்களே என்கிறீர்களா? அதுவும் சரிதான்! எல்லாம் பேர் ராசி!

குப்பன்.யாஹூ said...

சத்யஜித் ரே படம் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

ஆனால் நீங்கள் பதிவின் தலைப்பை சாரு லதா என்றே வைத்து இருக்கலாம்.

இன்னும் பலர் படித்து இருப்பர்.

சே.வேங்கடசுப்ரமணியன். said...

சாருலதாவில் முதல் சில காட்சிகளில் காட்டப்படும் சாருவின் தனிமை திரை மொழிக்கலையின் உச்சம்.துணைக்கு ஏங்கும் (நட்புக்கு) தனிமை ந்ம்மை அவளின் தனிமைக்குள் நுழைத்துவிடும் ரேயின் திரை சாமர்த்தியம். நல்ல பதிவு.ம்றுபடியும் பார்க்கத் தூண்டிய பதிவு.

Rajasurian said...

//அந்த gadget-ல் உள்ள பிரச்சினையை எப்படி சரிசெய்வது?//


தாங்கள் இந்த பதிவின் label-ல் ஆங்கிலம், தமிழ் என கலந்து கொடுத்துள்ளீர்கள். ஆங்கிலத்தில் கொடுத்துள்ள label-ஐ நீக்கி விட்டு widget-ஐ மீண்டும் சேர்த்து பார்க்கவும்(just a guess).
பிரச்சினை தீராவிட்டால் please send a mail to support@linkwithin.com (if not done already).

Raj Chandra said...

இந்த திரைப்பட விமர்சனம் நீங்கள் சொல்ல நினைத்ததை முழுமையாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு வகையில் தமிழ் திரை உலகை குற்றம் சொல்லி நீங்களும், படிப்பவர்களையும் ஆயாசப் பட வைப்பீர்கள்.

உங்கள் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை, ஆனால் படிப்பவர்களுக்குத் தெரிந்த விஷயங்களை திரும்பவும் சொல்வதில் இருவருக்கும் களைப்பு.

Good Post.

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. நீங்கள் சொல்வது போல் படத்தைப் பார்த்தால் தான் நீங்கள் எழுதியதை முழுவதும் உள்வாங்க முடியும் என்று நினைக்கிறேன்.

அனுஜன்யா

பைத்தியக்காரன் said...

அன்பின் சுரேஷ்,

சிரத்தையான, அழுத்தமான, தெளிவான பதிவு.

சமீபத்தில் 'உயிர்மெய்' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில், நண்பர் தமிழ்நதியின் குறுநாவல்/நாவல் குறித்து பிரியத்துக்குரிய கவிஞர் சுகுமாரன் பேசினார்.

தனது பேச்சை அவர் 'சாருலதா' திரைப்படத்திலிருந்துதான் ஆரம்பித்தார். சத்யஜித் ரே - மாதவி உறவு குறித்தும், காதல் குறித்தும், பிரிவு குறித்தும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டார்.

காரணம், தமிழ்நதியின் குறுநாவல்/நாவலும் இதுபோன்ற உறவின் சிக்கலை சொல்வதுதான். புதினத்திலுள்ள பெண்ணின் பெயரும் மாதவியாக அமைந்தது எதேச்சையானது :)

ஏனோ இந்த இடுகையை வாசித்ததும் இதை சொல்லத் தோன்றியது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சுரேஷ் கண்ணன் said...

நண்பர்களுக்கு நன்றி.

//ங்கிலத்தில் கொடுத்துள்ள label-ஐ நீக்கி விட்டு//

அன்புள்ள ராஜசூர்யன்,

நீக்கி விட்டு பிறகு gadget-ஐ சேர்த்தாலும் அதே பிரச்சினைதான் நீடிக்கிறது. அவர்களுக்கே மின்னஞ்சல் அனுப்பி பார்க்கிறேன்.