Monday, January 04, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 1)

வழக்கம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லவே கூடாது என்கிற தீர்மானமான முடிவில் இருந்தேன். எல்லாமே பொதுவான காரணங்கள்தான். கடந்த சில வருடங்களில் வாங்கின புத்தகங்களையே இன்னும் வாசிக்காமலிருக்கும் குற்றவுணர்வு, நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களையே வாசிக்க நேரம் போதாத திணறல், சற்று அதிகவிலையுள்ள உடையை கேட்ட மகளுக்கு சிக்கனத்தின் அருமையை அரைமணி நேரம் 'தாராளமாக' விவரித்து விட்டு, நான் மாத்திரம் விலை அதிகமுள்ள புத்தகங்களை 'இலக்கிய போதையில்' வாங்கி பின்பு யோசிக்கும் அப்பட்டமான மிடில் கிளாஸ் மனப்பான்மை...இப்படியாக சில.

முதல் நாள் திரைப்படம் போல சில புத்தகங்களை அதன் பரபரப்பிற்காகவே நாம் அவசரப்பட்டு வாங்கி விடுகிறோமோ என்று கூட தோன்றுகிறது. அதனுடைய ஆரவாரம் அடங்கி அது குறித்தான நடுநிலை விமர்சனங்கள் எழுந்த பின்பு தீர்மானிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

(ஆனால் இதற்கு இன்னொரு புறமும் இருக்கிறது. இரண்டு ரூபாய் நாளிதழைக்கூட எதிர் இருக்கை பயணியிடமிருந்து இரவல் வாங்கி மாத்திரமே படிக்க விரும்பும் அபத்த மனப்பான்மை. பெரும்பான்மையான எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அலுத்துக் கொள்கிற படி திரைப்படத்திற்கும் சுவையான உணவிற்கும் எந்தவொரு விலையையும் மனமகிழ்ச்சியுடன் கூட்டத்தில் நீந்தியாவது செலவழிக்கும் நாம் நுண்ணுர்வை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களுக்கான தொகையை அநாவசியச் செலவு பட்டியலில் சேர்ப்பது அநியாயம்)

என்றாலும் நண்பர் சிவராமன் "நீங்கள் எப்போது கண்காட்சிக்கு செல்வதாக இருக்கிறீர்கள்?" என்று கேட்ட போது 'அந்தச் சடங்கை நான் நிச்சயம் செய்வேன்' என்கிற அவரின் தீர்மானமான நம்பிக்கையை பாழாக்க விரும்பாமலும் "செல்ல மாட்டேன்" என்று கூறுவதால் என்னுடைய 'அறிவுஜீவி' பிம்பத்தின் மீது ஏதேனும் சேதாரம் நிகழலாம் என்கிற காரணத்தினாலும் சனியன்று (02.01.2010) செல்ல தீர்மானமாகியது.

()

முன்ஜாக்கிரதையாக கண்காட்சியின் எதிர்ப்புறமுள்ள நியாய விலைக் கடைகளில் (?!) மேய்ந்தேன். முதுகுவலி இல்லாத அன்பர்கள் பொறுமையாக அமர்ந்து தேடினால் ஷெல்டன், கிறிஸ்டி போன்றவைகளுக்கிடையில் ரத்தினங்கள் கிடைக்கலாம். எனக்குக் கிடைத்தது Fyodor Dostoesvsky-ன் 'The Brothers Karamazov'. சுதேசமித்திரன், கல்கி போன்றவைகளின் 1960-களின் தீபாவளி மலர்களை ஆச்சரியத்துடன் புரட்டிப் பார்த்தேன்.

அரசியல் மாநாடுகளை நினைவுறுத்தும் பிரம்மாண்ட ப்ளெக்ஸ்களை கடந்து சென்று டிக்கெட் கவுண்ட்டரில் நின்றேன். நான் சென்ற நெரிசலான நேரத்தில் ஒரே ஒரு கவுண்ட்டரை மாத்திரம் திறந்து வைத்திருந்து மற்றவற்றை மூடி வைத்திருந்தார்கள். மற்ற இடங்களி¦ல்லாம் க்யூவில் நின்று பழக்கப்பட்டு விட்ட மக்கள், இங்கு வந்து அது நிகழாமல் மனத்தடுமாற்றம் அடையக்கூடாது என்கிற அமைப்பாளர்களின் நல்லெண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியாக நின்று கொண்டிருந்த போது பேட்ஜ் அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து குறிப்பாக என்னைத் தேர்ந்தெடுத்து "அந்தப் பக்கம் கவுண்ட்டர்ல யாருமே இல்ல, அங்க போங்க" என்றார். அவர் கைகாட்டிய தூரத்திற்கு செல்ல ஆட்டோ தேவைப்படும் போலிருந்தது. "அங்கதான் யாருமே இல்லன்னு சொல்றீங்களே, யாரு கிட்ட டிக்கெட் வாங்கறது" என்று மொக்கை போட்டேன். அவருக்குப் புரியவில்லை. வரிசையில் இருந்தவர்கள் சிரித்ததில் சற்று அற்ப திருப்தி. இது போன்ற பல 'பிரகஸ்பதிகளை' அந்த இளைஞர் கடந்த சில நாட்களில் நிறையப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு விளம்பரத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 'புதிய தலைமுறை' என்று ஒருபுறம் அச்சிட்ட பெரிய அளவு பிளாஸ்டிக் பைகளை ஒரு இளைஞர் விநியோகித்துக் கொண்டிருந்தார். வாங்கும் எல்லாப் புத்தகங்களையும் அதிலேயே போட்டுக் கொள்ளலாம் என்கிற அளவுள்ள பை. புத்திசாலித்தனமான அணுகுமுறை.

பொதுவாகவே அதிக மக்கள் கூடும் இடங்களி¦ல்லாம் 'திருவிழா குழந்தை' போலவே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும். இப்பவும் அப்படித்தான். 'அப்பவே கண்ணைக் கட்டியது'. மெதுவாக ஊர்ந்து சென்ற போது தமிழினி அரங்கில் சிவராமன் கல்லா கட்டிக் கொண்டிருந்தார். என்னை அமரச் சொல்லி தமிழினி வசந்தகுமாரிடம் "நல்லா எழுதறவர்" (?!) என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். வசந்த குமார் ஆளைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடுவார் போல. என்னை அவநம்பிக்கையாக பார்த்தது போல் தோன்றியது.

சூத்ரதாரி என்கிற எம்.கோபால கிருஷ்ணணிடம் சற்று நேரம் உரையாடினேன். தமிழினி மாத இதழில் இவரின் பத்தி எழுத்தை தொடர்ந்து வாசிப்பதை சொல்லி வைத்தேன். இணையத்திற்குள் நுழையச் சொல்லி கடந்த ஆண்டுகளில் இவரிடம் பேசிக் கொண்டிருந்தை நினைவு கூர்ந்தேன். கூடிய விரைவில் எழுத ஆரம்பிப்பதாக வாக்களித்திருக்கிறார்.

சிவராமனின் நுரையீரல் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் அவர் 'யாழிசை' லேகாவிடம் புத்தகப் பையை ஒப்படைப்பதற்காக காத்திருந்தார். நான் ஒரு சுற்று சென்று வருவதற்காகச் சொல்லி வேட்டைக்கு மகா சோம்பலாக கிளம்பினேன். என்¦ன்னவோ விசித்திரமான பதிப்பக பெயர்களில் கடைகள். 'விகடன்' போன்ற சிலதில் கூட்டம் அம்மிக் கொண்டிருக்க சில கடைகளில் ஆளே இல்லாமல் பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள்.
கிழக்கில் 'பழைய அத்னான் சாமி' போல ஹரன்பிரசன்னா அமர்ந்திருந்தார். பதிப்பகத்தைப் போலவே அவரது வளர்ச்சியும் பிரம்மாண்டமாக இருந்தது. 'இருபத்தெட்டு நாட்களில் மெலிவது எப்படி?' என்று வருகிற பிப்ரவரிக்குள் ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கச் சொல்லி பத்ரி அவரைத் தண்டிக்கலாம். அவரது பரிந்துரையின் பேரில் 'இலங்கை இறுதி யுத்தமும்' (நல்லாயில்லாம போகட்டும், வெச்சுக்கறேன்), என்னுடைய விருப்பத் தேர்வாக 'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு'ம் வாங்கினேன். அப்போது காவலர் உடையிலிருந்த ஒருவர் பிரசன்னாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தைப் பார்த்த போது, ராஜீவ் கொலை வழக்கின் சொச்சமிச்ச விசாரணையில் பிரசன்னாவும் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று நான் வில்லங்கமாக யோசித்துக் கொண்டிருந்தேன். (என்னா வில்லத்தனம்) "ஒண்ணுமில்ல. கம்பெனி டி ஷர்ட்டுக்காக ஒரு பிட்டைப் போட்டுட்டுப் போறாரு" என்று பிரசன்னா என்னை ஆசுவாசப்படுத்தினார்.

(தொடரும்)

image courtesy: kizhaku publishers

suresh kannan

9 comments:

ஹாய் அரும்பாவூர் said...

ஆயிரம் வசதிகள் வந்து இன்டர்நெட் என பல வசதிகள் வந்தாலும் .புத்தகம் படிக்கும் சுகம் அதிலும் நமக்கு பிடித்த புத்தகம் புதிதாக வாங்கி வரும் சுகம் நிச்சயம் அது புத்தக விழாவில் தான் கிடைக்கும்
உங்கள் பதிவு சிறப்பா இருந்தது
இன்னும் உங்கள் அனுபவங்கள் தொடர வாழ்த்துக்கள்

butterfly Surya said...

கண்காட்சியில் புத்தகங்கள் வாங்குவதை நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

லேகா said...

சுரேஷ்,

புத்தக கண்காட்சி அனுபவத்தை கூட இவ்வளவு சுவாரஸ்யமாய் சொல்ல முடியுமா!!

கண்காட்சியில் உங்களை சந்திக்க முடியாது போனது வருத்தமே!
எனினும் புத்தங்கங்கள் குறித்த பகிர்தலுக்கு நன்றி.


//சிவராமனின் நுரையீரல் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் அவர் 'யாழிசை' லேகாவிடம் புத்தகப் பையை ஒப்படைப்பதற்காக காத்திருந்தார்.//

சிவராமன் மனிப்பாராக :-)))

Unknown said...

இந்த வருஷமும் உங்க தீர்மானம் புட்டுக்கும்ன்னு நினைச்சேன், நடந்துடுச்சு :-)

உண்மைத்தமிழன் said...

[[[கிழக்கில் 'பழைய அத்னான் சாமி' போல ஹரன்பிரசன்னா அமர்ந்திருந்தார். பதிப்பகத்தைப் போலவே அவரது வளர்ச்சியும் பிரம்மாண்டமாக இருந்தது. 'இருபத்தெட்டு நாட்களில் மெலிவது எப்படி?' என்று வருகிற பிப்ரவரிக்குள் ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கச் சொல்லி பத்ரி அவரைத் தண்டிக்கலாம்.]]]

சூப்பர் யோசனை..!

வழி மொழிகிறேன்..!

அப்படியே என்னைப் போன்றவர்கள் எப்போது, எப்படி ஹரன் பிரசன்னாவைப் போல் ஆவது என்பது பற்றியும் ஒரு புத்தகம் போடச் சொல்லலாம்..!

குசும்பன் said...

//"ஒண்ணுமில்ல. கம்பெனி டி ஷர்ட்டுக்காக ஒரு பிட்டைப் போட்டுட்டுப் போறாரு" என்று பிரசன்னா என்னை ஆசுவாசப்படுத்தினார். //

காய்கறி கடைன்னா காய் ஒரு கிலோ போட சொல்லலாம், வெடி கடை என்றால் குழந்தைக்கு வெடி பார்சல் செய்ய சொல்லலாம், ஹோட்டல் என்றால் டிபன் ஓசியில் பார்சல் செய்ய சொல்லலாம், புத்தக கடையில் அவர் என்ன சொல்வார் பாவம்?:(((

Anonymous said...

'பொதுவாகவே அதிக மக்கள் கூடும் இடங்களி¦ல்லாம் 'திருவிழா குழந்தை' போலவே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும்'

arumai-migavum rasithen

ungal ezuthai rasikum

sundar

குப்பன்.யாஹூ said...

Thanks for sharing.

I heard Layola college Rector advised the students to attend the books exhibition.

These kind of activities will help to increase the reading habit.

PRABHU RAJADURAI said...

சுவராசியம்...