Tuesday, January 05, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 2)

முந்தைய இடுகையின் தொடர்ச்சி...

'கிழக்கு' அரங்கில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. பதிப்புத் துறையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் 'கிழக்கின்' வளர்ச்சி குறித்து மீண்டும் மீண்டும் வியக்க வேண்டியிருக்கிறது. 'எப்படி ஜெயித்தார்கள்' என்கிற தலைப்பில் பதிப்புலக வரலாற்றை அவர்களே பிரசுரிக்கலாம். பல சுமாரான புத்தகங்களை அதனுடைய பிரத்யேக சலிப்பூட்டும் வார்ப்பில் தொடர்ந்து 'கிழக்கு' வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்கில அ-புனைவுகளில் முக்கியமானவற்றை தமிழில் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய மாற்றம் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது.

இப்போதைய டாக் ஆ·ப் டவுன் நிச்சயமாய் 'ராஜீவ் கொலை வழக்கு' நூலாகத்தான் இருக்கும் என யூகிக்கிறேன். எனவே இந்த நூலின் பரபரப்பிற்காகவே அதை வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் பிற்பாடு ரகோத்தமனின் தொலைக்காட்சி நேர்காணலையும் ஜெயமோகனின் இந்த மதிப்புரையையும் கண்ட பிறகு வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது. 

ZEE தொலைக்காட்சியில் இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பான ரகோத்தமனின் நேர்காணலில்,  தன்னுடைய சிபிஐ பணியில் நிகழ்ந்த பல சுவாரசியமான, திகைப்பான சம்பவங்களை விவரிக்கிறார். லஞ்ச வழக்கு ஒன்றிற்காக ரயில்வே அதிகாரி ஒருவரை விசாரிக்கச் சென்ற போது வழியில் மூடியிருந்த ரயில்வே கேட்டை திறந்துவிட,  கேட் ஊழியர் லஞ்சம் கேட்ட நகைச்சுவையும் நிகழ்ந்திருக்கிறது. (இது போன்ற காட்சி ஒன்றை ஷங்கரின் திரைப்படத்தில் பார்த்திருந்த ஞாபகம்).

ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழு தலைவராக இருந்த கார்த்திகேயனை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறார் ரகோத்தமன். 'சில தமிழக அரசியல் தலைவர்களை' அவர் விசாரிக்க முடிவு செய்த போது கார்த்திகேயன் தடுத்து விட்டார் என்பது அவரது பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. (இது குறித்து கார்த்திகேயனுக்கு வேறுவிதமான அரசியல் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்பது என் யூகம்).

ரகோத்தமன் பிரதானமாக அடிக்கோடிட்டு குறிப்பிடும் இன்னொரு விஷயம், உளவுத்துறையின் அலட்சிய மனப்பான்மை மற்றும் திறமைக்குறைவு. இலங்கையிலுள்ள புலிகளுக்கும் தமிழகத்தில் தங்கியிருக்கும் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த வயர்லெஸ் பரிமாற்றம் படுகொலைச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதிகமாயிருக்கிறது. இதை உளவுத்துறையின் கீழ்நிலை அதிகாரி தனது அன்றாட குறிப்பில் எழுதியுள்ளார். இதை உயர்நிலையிலுள்ளவர்கள் உடனே கவனித்து அந்த சங்கேதப் பரிமாற்றங்களை உடனே decrypt செய்திருந்தால் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவத்தை ஒருவேளை தடுத்திருக்கலாம். அது போல் இன்னொன்று. விசாரணையின் status குறித்து மத்திய அரசிடமிருந்து விசாரிக்கப்படும் போது தமிழக உளவுத்துறையிடமிருந்து பதிலாக தரப்பட்ட அறிக்கையில் 'படுகொலை நிகழ்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..' என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் பிறகு அந்த வீடியோவைப் பற்றின எந்தவொரு தகவலும் இறுதி சாட்சியங்களில் காணப்படவில்லையென்றும் வீடியோவின் முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டிருக்கலாமென்றும் ரகோத்தமன் சந்தேகிக்கிறார்.

இந்த தொலைக்காட்சி நேர்காணலில் நளினி சம்பந்தப்பட்ட பகுதிகளை சுதாங்கன் கேள்விகளாக முன்வைக்கவில்லை அல்லது எடிட்டிங்கில் குறைக்கப்பட்டிருக்கலாம்.

()

நான் புத்தக கண்காட்சிக்கு செல்லும் பிரதான நோக்கமே 'சிற்றிதழ்'களைத் தேடித்தான். மற்ற நூல்களை கூட பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரே கூரையின் கீழ் விநோதப் பெயர்களைக் கொண்ட பெரும்பாலான சிற்றிதழ்களை காண்பது கண்காட்சியில்தான் நிகழும். ஆனால் சிற்றிதழ்களின் காலம் முடிந்துவிட்டதோ என்பதைப் போல எந்தவொரு புதிய சிற்றிதழையோ அல்லது புது எழுத்து, சிலேட் போன்ற இயங்கிக் கொண்டிருந்த இதழ்களின் சமீபத்திய இதழ்களோ காணக் கிடைக்கவில்லை. (மந்திரச்சாவி எனும் பெயருடைய புதிய இதழைப் பார்த்தேன். மேலோட்டமாய் ஆராய்ந்ததில் உள்ளடக்கம் திருப்திகரமாக இல்லாததால் வாங்கவில்லை. அதே போல்தான் 'உன்னதம்' 'பன்முகம்' ஆகிய இதழ்களும்). ஆனால் பல இதழ்களை கீற்று இணையத்தளத்தில் வாசிக்க முடிந்துவிட முடிவதில் ஒரு ஆசுவாசம். சினிமா குறித்து வெளிவரும் 'நிழல்' எனும் பத்திரிகையின் எல்லா இதழ்களையும் ஒவ்வொரு கண்காட்சியின் போதும் வாங்கிவிடுவேன். இந்த முறை இரண்டே இதழ்கள்தான் கிடைத்தன.
 


மாற்றுச் சினிமா, குறும்படங்கள், திரைக்கதை, ஒளிப்பதிவுக் கோணங்கள்.. என்று நிறைய சுவாரசியமான கட்டுரைகளை இதில் காண முடியும். குறிப்பாக தமிழ்ச்சினிமாவின் துணை நடிகர்களைப் பற்றின அறியப்படாத பல தகவல்கள் குறித்த கட்டுரைகளையும் வாசிக்க முடியும்.

ஆர்வமுள்ளவர்களுக்காக இதழின் தொடர்பு விவரங்களைத் தருகிறேன். 12/28 (460), இராணி அண்ணாநகர், சென்னை-600 078. கைபேசி: 94444 84868. மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in

()

பின்பு சிவராமனை 'தமிழனி' அரங்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போது 'காவல் கோட்டம்' வெங்கடேசனை அறிமுகப்படுத்தி வைத்தார் சிவராமன். புத்தகத்தின் தடிமனுக்குச் சம்பந்தமில்லாமல் இளமையான தோற்றத்திலிருந்தார் அவர். சிவராமன் புகை பிடிக்கவும் நான் சிறுநீர் கழிக்கவும் (புத்தகங்களின் மீது அல்ல) கண்காட்சியை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது.

'காலச்சுவடு' கண்ணன் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவராமன் திடீரென்று தீர்மானித்து அவரை அணுகி "உங்க கிட்ட ஒரு கோரிக்கை. இப்படி ஒரு புத்தகத்திற்கு இன்னொரு புத்தகம் இலவசம்-னு விளம்பரம் போட்டிருக்கிறீங்களே.. ரொம்பச் சங்கடமா இருக்குது. அதுக்குப் பதில் அதிக கழிவு விலையில கொடுத்திடலாமே. இதை ஒரு கோரிக்கையாவே உங்க கிட்ட வெக்கறேன்" என்றார். புத்தகங்களின் மீது ஆழமான நேசம் கொண்ட, பதிப்புத்துறை நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபாசத்தின் எல்லையை பின்பற்றி விடக்கூடாதே என்கிற ஒரு வாசகனின் ஆதங்க குரலாக அந்தக் கோரிக்கை எனக்குப் பட்டது.

கண்ணன் இந்த எதிர்பாராத தருணத்திற்கு சற்று தடுமாறியது போல் தோன்றியது. "இலவசம்-னு ஏன் நீங்க எடுத்துக்கறீங்க. வாசகர்களுக்கு நாங்கள் அளிக்கும் அன்பளிப்பு'ன்னு என்ற ரீதியில்தான் இதை அணுகலாம்" என்கிற மாதிரி ஒரு சமாளிப்பான பதிலை தந்து விட்டு சிவராமனின் கேள்வியை மிகச் சுலபமாக உதறிவிட்டுச் சென்றார்.

காலச்சுவடின் இந்த வணிக ரீதியான அணுகுமுறையில் எனக்கு எந்தவிதமான முரணும் தெரியவில்லை. மாறாக இதன் மூலம் வாசகர்கள் அதிக நூல்களை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். நூற்களின் உள்ளடக்கத்தை வணிக ரீதியில் அமைத்துக் கொள்வதிலும் அதை விற்பனை செய்ய சாதுர்யமான வழிகளை பயன்படுத்துவதில்தான் பிரச்சினை இருப்பதாக எனக்குப்பட்டது. புத்தகங்கள் ஒரு சமூகத்தின் அறிவு, பண்பாட்டு வளர்ச்சிக்கான மேம்பாட்டுச் சாதனங்கள், அதை முற்றிலும் வணிகமயப்படுத்தி விடக்கூடாது என்றாலும் அதை உற்பத்தி செய்கின்ற பதிப்புத்துறை தொடர்ந்து செயல்படுவதற்கான லாபத்தை ஈட்ட அதிகம் பாதகமில்லாத வணிக யுக்திகளை பயன்படுத்தலாம் என்பதுதான் என் நிலைப்பாடு.

பிற்பாடு ஹரன் பிரசன்னாவிடம் இதைப் பற்றி விவாதித்த போது ஏறத்தாழ என்னுடைய கருத்தையே எதிரொலித்தார். "புத்தகங்களுக்கு புத்தகங்களைத்தானே இலவசமாய்த் தருகிறார்கள். தொடர்பேயில்லாமல்  ஒரு குக்கரை இலவசமாக தரும்போதுதான் நோக்கம் குறித்தான சந்தேகம் எழலாம்' என்றார். "ஏன் சமையல் புத்தகங்களுக்கு குக்கரை இலவசமாய்த் தருவதில் தவறென்ன, அது தொடர்புடையதுதானே?" என்று விளையாட்டாய்க் குட்டையைக் குழப்பினேன்.

என்றாலும் சிவராமனின் சார்பாக அவரின் ஆதார எண்ணம் என்னவாக இருக்கக்கூடும் என்று பிரசன்னாவிடம் விளக்க முயன்றேன். "மேலுக்கு ஆபத்தில்லாதது போல் தோன்றும் இந்த வணிகத் திட்டங்கள் காலப்போக்கில் இன்னும் பல்வேறு வடிவங்களில் உருமாறி "குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினால் அவர் விரும்பி அணியும் விலையுயர்ந்த பிராண்ட் ஜட்டி இலவசமாக அளிக்கப்படும்".. என்கிற அபாயகரமான எல்லைக்கு இது சென்று விடக் கூடும், என்று சிவராமன் நினைத்திருக்கலாம்" என்று அமைதியாக நின்றிருந்த சிவராமனை சீண்டிவிட முயன்றேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரஜினி ராம்கி "அது உபயோகப்படுத்தப்பட்ட ஜட்டியா?" என்றொரு அடிப்படையான வினாவை எழுப்பி இந்த முக்கியமான விவாதத்தின் பரிமாணத்தை விரிவுப்படுத்தினார்.

பாவம் சிவராமன். எங்களுக்குள் மாட்டிக் கொண்ட திண்டாட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் சிரித்து மழுப்ப வேண்டியிருந்தது.

(தொடரும்)

suresh kannan

10 comments:

வா.மணிகண்டன் said...

புது எழுத்து ஓரிரு வாரத்தில் வரும் என்றார் மனோன்மணி. உன்னதம் சிற்றிதழ்தானே. அது அனேகமாக புத்தகக்கண்காட்சியில் இருக்கக்கூடும். மணல்வீடு பிரதி அனேகமாக கிடைக்கலாம். புன்னகை(அம்சப்பிரியா), கருக்கல்(கோவை நண்பர்கள், தக்கை(சேலம் வே.பாபு,சாகிப்கிரான்) போன்ற சிற்றிதழ்கள் எனக்குத் தெரிந்து வந்து கொண்டு இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சிற்றிதழைக் கொண்டு வருவதில் இருக்கும் சிரமமே, அந்த பத்திரிக்கைக்காரர்களை புத்தகக் கண்காட்சிக்குள் வரவியலாத சூழ்நிலையை உருவாக்குவதாக எனக்குப் படுகிறது.

venkat said...

உங்கள் அனுபவம் உபோயகமாக இருக்கிறது..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

குசும்பன் said...

//பாவம் சிவராமன். எங்களுக்குள் மாட்டிக் கொண்ட திண்டாட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் சிரித்து மழுப்ப வேண்டியிருந்தது.
//

தல சிவராமனையா கலாய்ச்சிங்க? பட்லர்ஸ் யூ ட்டேன் பார்ட் 2 என்று எழுத வெச்சிடுவோம் ஜாக்கிரதை!:))

Indian said...

//இப்போதைய டாக் ஆ·ப் டவுன் நிச்சயமாய் 'ராஜீவ் கொலை வழக்கு' நூலாகத்தான் இருக்கும் என யூகிக்கிறேன். எனவே இந்த நூலின் பரபரப்பிற்காகவே அதை வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். //

It is a good read. Give it a try.
This is the second book from Kizakku to surprise me after "Izhakkaathey" by Sellamuthu Kuppusamy.

// தன்னுடைய சிபிஐ பணியில் நிகழ்ந்த பல சுவாரசியமான, திகைப்பான சம்பவங்களை விவரிக்கிறார்.//

You'll find similar surprises in the book.

//விசாரணையின் status குறித்து மத்திய அரசிடமிருந்து விசாரிக்கப்படும் போது தமிழக உளவுத்துறையிடமிருந்து பதிலாக தரப்பட்ட அறிக்கையில் 'படுகொலை நிகழ்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..' என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் பிறகு அந்த வீடியோவைப் பற்றின எந்தவொரு தகவலும் இறுதி சாட்சியங்களில்//

In the book he mentions about IB in this context.

Dr.Rudhran said...

new booklands, north usman road, tnagar ல் சிற்றிதழ்கள் இருந்தன. புத்தக விழாவில் அவர்களின் நர்மதா பதிப்பகத்தில் கேட்கலாம்.

குப்பன்.யாஹூ said...

yes in New book land I saw few sitrithazgal.

Giving the free book has good and bad, but what to do they have to cover their overheads.

I hope AADI KAZIVU too will come in book shops.

பின்னோக்கி said...

//சிறுநீர் கழிக்கவும் (புத்தகங்களின் மீது அல்ல)

புத்தகங்களைக் கொண்டாடும் உங்களிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை :(

சுரேஷ் கண்ணன் said...

நண்பர்களுக்கு நன்றி.

//த்தகங்களைக் கொண்டாடும் உங்களிடமிருந்து இதை எதிர் பார்க்கவில்லை :(//

அன்புள்ள பின்னோக்கி:

அது இன்னொரு பதிவின் / நிகழ்வின் தொடர்ச்சியாக ஒரு பகடிக்காக பயன்படுத்தப்பட்டது. உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் இந்தப் பதிவை படித்துப் பாருங்கள்.

http://naayakan.blogspot.com/2010/01/2.html

பின்னோக்கி said...

அந்த பதிவை படித்தேன். நன்றி விளக்கத்திற்கு.

செந்திலான் said...

காலச்சுவடில் ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்றாலும் நீங்கள் அவ்வாறு வாங்காமல் உங்களுக்கு தேவையான நூல்களை மட்டும் வாங்கும் போது அதில் உரிய கழிவு தரப் படுகிறது.நான் அவ்வாறு தான் எனக்கு தேவையானவற்றை மட்டும் வாங்கி விலை குறைப்பை பெற்றுக் கொண்டேன் நன்றி