Sunday, December 13, 2009
சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2
முதல் பதிவின் தொடர்ச்சி...
இணையப் பதிவர்கள் குறித்து எஸ்.ரா முன் வைத்த பொதுவான விமர்சனம் எனக்கு ஏற்புடையது. பொதுவாக, தமிழக்ப் பதிவர்களைப் போலவே அயல் மாநில/நாட்டுத் தமிழர்களின் தேடலும் ஆர்வமும் வெகுஜன சினிமா குறித்தும் அரட்டை அரசியல் குறித்தும் அதன் தொடர்ச்சியான வீண் விவாதங்களுமாகத்தான் இருக்கிறது. பெளதீக ரீதியாக அவர்கள் தங்களின் சொந்த ஊர்களிலிருந்து விலகி இருந்தாலும் அவர்களின் எண்ணங்களும் தேடல்களும் தமிழகத்தின் பொதுப்புத்தி சார்ந்த விஷயங்களைச் சுற்றி மாத்திரமே அமைந்துள்ளது. அடிப்படையாக இதில் தவறில்லையெனினும் தான் தற்போது வாழ்கின்ற பிரதேசங்களின் பிரத்யேக கலாச்சாரம் குறித்தும் அங்குள்ள சிறந்த இலக்கியம், சினிமா, சிறந்த மனிதர்கள், மக்களின் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பற்றியும் அவர்கள் பதிவு செய்வது ஆரோக்கியமான இணையப்பயன்பாட்டிற்கு உதவும். திரைப்படங்களிலும் நூல்களிலும் காணப்படாத, பதியப்படாத கலாசார பண்பாட்டு விஷயங்களை உள்ளூர் வாழ் மக்களின் மூலமாகத்தான் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியும். இது சரிதான்.
ஆனால் ஆனந்த் மீது எஸ்.ரா வைத்த விமர்சனம் எனக்கு ஏற்புடையதல்ல.
சாருவின் இணைய தளத்தில் மலாவி குறித்து ஆனந்த் எழுதிய தொடர் பதிவுகளின் மூலம் அப்பிரதேசத்தின் மக்களைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் நிறையவே என்னால் அறிய முடிந்தது. எப்படி இந்தியா என்றொரு நாடு இருக்கிறது என்பதையே உலகப் பந்தின் சில பகுதிவாசிகள் அறியாமல் இருக்கிறார்களோ, அப்படியே நானும் இப்படியொரு தேசம் இருக்கிறது என்பதையே ஆனந்தின் பதிவுகள் மூலம்தான் அறிந்து கொண்டேன். பதிவுகளின் கூடவே அவர் தன்னுடைய வாழ்க்கைத் துளிகளையும் இடையில் பகிர்ந்து கொண்டார் என்பது உண்மைதான். தொழில் முறை அல்லாத அதிகம் அனுபவமில்லாத எழுத்தாளருக்கு இயல்பாக ஏற்படும் விபத்துதான் இது. அதற்காகவே ஆனந்த்தை முழுக்க எஸ்.ரா. புறக்கணித்தது ஏற்க முடியாததாக இருந்தது. ஆனந்தின் மொழி மிகுந்த நுண்ணுணர்வோடும் லாகவமாகவும் ஏன் அவர் உரையாடிக் கொண்டிருந்த சாருவையும் சில இடங்களில் தாண்டிச் சென்ற சுவாரசியத்தோடும் அமைந்திருந்தது. இப்போதும் கூட சாருவின் இணையத்தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் ஆனந்தின் பதிவுகளை திறந்த மனத்துடன் வாசிக்கும் எவருமே இதை உணர முடியும். பொதுவாக அதீதமான விமர்சனங்களை முன்வைக்காத எஸ்.ரா., இதை தவறவிட்டதுதான் எனக்கு சற்று திகைப்பை ஏற்படுத்தியது.
அடுத்ததாக வந்தார் மிஷ்கின். சாருவின் கேள்வி-பதில் நூலைப் பற்றி இவர் பேச வேண்டும். ஆனால் அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசினார். நந்தலாலா குறித்த புலம்பலே இவர் பேச்சில் அதிகம் இருந்தது. முழுவதும் நாடகத்தனமான பேச்சு. (சாருவின் முந்தியதொரு நூல் வெளியீட்டு விழாவில் பேசின பார்த்திபனின் நினைவு வந்தது.) அவரின் முந்தைய இருபடங்களும் மற்ற திறமையான விஷயங்களுக்காக பேசப்பட்டதை விட அதிலிருந்த 'குத்துப் பாடல்களுக்காக'வே அதிகம் சிலாகிக்கப்பட்டதை கறுப்பு நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டார். 'நந்தலாலா'விற்காக இளையராஜாவை அணுகிய போது அவரும் 'அப்ப.. நானும் ஒரு குத்துப் பாட்டு போட்டுத்தரவா?' என்றாராம். (ராஜாவின் அதீத ரசிகர்கள் கவனிக்க) இவர் "நம்ம நட்ப வேணா இப்பவே முறிச்சுக்கலாம். நான் உங்க கிட்ட வந்ததே நான் காட்சிரீதியாக அதிகம் அமைத்திருக்கும் பல பகுதிகளை உங்களின் இசையால்தான் நிரப்ப வேண்டும்" என்றிருக்கிறார். சாருவின் சினிமா விமர்சனங்களைப் பற்றி முதலில் எதிர்மறையாகத்தான் கேள்விப்பட்டிருந்தாராம். எனவேதான் சாருவிற்கு 'நந்தலாலா'வை திரையிட்டுக் காட்டினாராம். சாரு அவருடைய தளத்தில் இதைக் கொண்டாடியது இவருக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியததாம். 'ஒரு எழுத்தாளனின் பாராட்டை என்ன பெரிய விருது தேவை? இனி இந்தப் படம் வெளிவரவில்லையென்றால் கூட பரவாயில்லை' என்கிற அளவிற்கு சாருவின் விமர்சனம் அவருக்கு திருப்தியை அளித்ததாம். "சாரு புகழ்ந்த அளவிற்கு 'நந்தலாலா' ஒன்றும் சிறப்பான படமில்லை. ஆனால் நீங்க நிச்சயம் பாருங்க".
"மற்ற கூட்டங்களில் செயற்கையாக பேச வேண்டியதிருக்கும். இந்த மேடையில்தான் உண்மையாக இருக்க முடிந்தது. மற்ற கூட்டங்களில் 'கைத் தட்டுங்க' என்றால் உடனே suggestive ஆக கைத்தட்டுவார்கள். ஆனால் இங்குள்ளவர்கள் அனைவரும் ஜீனியஸ்" என்றவர் ஒரு கட்டத்தில் அபூர்வ ராகங்கள் நாகேஷ் மாதிரி "இந்த இடத்துல நீங்க கைத்தட்டணும்" என்றார். கூட்டமும் விவஸ்தையில்லாமல் கைத்தட்டியது. என்ன எழவோ.
(சாருவின் நேர்காணல்கள் நூல் குறித்து பவா.செல்லத்துரை பேசப்போவதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது நிகழ்த்தப்பட்டதாக தெரியவில்லை. அவருக்குப் பதிலாக வேறு யாராவது இதைப் பற்றி பேசினார்களா என்பது குறித்தும் அறியேன். விழாவிற்கு வந்திருந்த மற்ற இணைய நண்பர்கள் யாராவது இதை தெளிவாக்கலாம்.)
ஏற்புரையும், நன்றியுரையும் நிகழ்த்த வந்தார் சாரு. அவர் பேச்சின் சாரம் பெரும்பாலும் அவர் இணையத்தில் சமீபத்தில் எழுதியவைதான். எனவே திரும்பவும் அவற்றைக் கேட்க சலிப்பாக இருந்தது. 'நந்தலாவை' இன்னும் கூடுதலாகப் புகழ்ந்தவர், "இதை ஒரு ஜப்பானியப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜீலியட்டின் ஒரே நாடகம், ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களாக வெவ்வேறு படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு படைப்பால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து தம்முடைய ஒன்லைனை எடுத்து தம்முடைய பாணியில் அதை விரிவாக்குவதில் தவறில்லை. ஆனால் அமீர் அயல்மொழித் திரைப்படத்தினை காட்சிக்கு காட்சி அப்பட்டமாக உருவியிருக்கிறார். ஏன் தமிழ்ப்படத்தின் கதாநாயகி லுங்கி கட்டியிருக்கிறார், தமிழ்நாட்டுப் பெண்கள் பொதுவாக லுங்கி கட்டுவதில்லையே என்று யோசித்தேன். மூலத்திரைப்படத்தைப் பார்த்ததும்தான் தெரிந்தது. அந்தப் படத்தின் பெண்ணும் லுங்கி கட்டியிருக்கிறார்" என்றார்.
[இங்கு என்னுடைய இடைச் செருகல் ஒன்று. 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது நான் குறிப்பிட மறந்து போன ஒன்று. கமல் மொட்டை மாடியில் 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். படத்தின் மற்ற பகுதிகளை 'தமிழ்ப்படுத்தியவர்' ஏன் இந்த உணவு விஷயத்தை வடநாட்டு பாணியில் அமைத்திருந்தார் என்று யோசித்தேன். அப்புறம்தான் புரிந்தது. இந்தித் திரைப்படத்திலும் நஸ்ருதீன் ஷா 'சாண்ட்விட்ச்' சாப்பிடுவார். அடப்பாவிகளா! இப்படியா செட் பிராப்பர்டி முதற்கொண்டு நகலெடுப்பார்கள்? அது மாத்திரமல்ல அந்த 'சாண்ட்விட்ச்' கூட இந்தித் திரைப்படத்தில் உபயோகப்படுத்தின அதே சாண்ட்விட்ச்சாக இருக்குமோ என்கிற சந்தேகம் கூட எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் சாப்பிடுவதற்கு முன் அதை முகர்ந்து பார்ப்பார் கமல். இதையும் தமிழ்ப்படுத்தி ஏன் ஒரு சாம்பார் சாதமோ, இட்லியோ ('தயிர் சாதம்' வேண்டாம். நமது கட்டுடைப்பு விமர்சனவாதிகள் இதையும் எப்படியாவது தங்களுக்குச் சாதகமான 'பார்ப்பன எதிர்ப்பு' சட்டகத்தில் இட்டு இன்னும் அதிகம் கமலை திட்டியிருப்பார்கள்) பயன்படுத்தவில்லை என்று புரியவில்லை.]
சாருவின் இந்தக் கருத்து ஏற்படுத்துடையது என்றாலும் 'நந்தலாலா' 'Kikujiro'வின் பாதிப்பினால் உருவான படம்தான் என்று மிஷ்கின் வெளிப்படையாக அறிவிப்பாரா என்று தெரியவில்லை. இல்லையெனில் அமீருக்கு ஒரு நீதி, மிஷ்கினுக்கு ஒரு நீதியா? என்ற இயல்பான கேள்வி சாருவை நோக்கி எழுவதை தவிர்க்க முடியாது.
()
வாசிப்பு உணர்வும் பழக்கமும் குறைந்து கொண்டே வருகிற தற்கால சூழ்நிலையில் ஒரு பதிப்பகம் 90 நூற்களை வெளியிடுவது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால் இதை நுகர்வுப்பண்டம் போல் இப்படி அவசரம் அவசரமாக நிதானமில்லாமல் ஒரே சமயத்தில் அடித்துத் தள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இன்னொரு வகையில் இந்த வகையான வணிகப் போட்டியே ஒரு gimmicks ஆக தெரிகிறது. மேலும் சிறப்புரை ஆற்றி நூலை அறிமுகப்படுத்த வந்தவர்கள் பெரும்பாலும் (எஸ்.ரா, அழகிய பெரியவன் நீங்கலாக) நூலையொட்டின தம்முடைய உரையை முன்வைக்கவில்லை. சிலர் நூல் மிகத் தாமதமாகத்தான் தம்முடைய கைக்குக் கிடைத்தது என்றார்கள். இதைக்கூட நியாயமான காரணமாக ஒப்புக் கொள்ளலாம். ஆனால் பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களில் தாம் வெளியிடப் போகும் அல்லது உரையாடப் போகும் நூலைப் பற்றி எதுவும் அறிந்திருக்க வேண்டாம் அல்லது அதை வாசித்திருக்க வேண்டாம் என்பதுதான் பேச்சாளர்களின் முக்கியத் தகுதியாக இருக்கிறது. (சா.கந்தசாமி நிச்சயம் நூலைப் பற்றி மட்டும்தான் பேசியிருப்பார் என்று முன்அனுபவங்களின் அடிப்படையில் யூகிக்கிறேன்).
மிஷ்கின் மற்றும் சாருவின் பேச்சு மிகுந்த நாடக்த்தனமாக அமைந்திருந்தது. இதைத்தான் 'கிளிஷே' என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். இருவருமே தங்களின் குடிப்பழக்கத்தை கிளர்ச்சியுடனான பாவனையுடன் மேடையில் வெளிப்படுத்தினார்கள். தங்களிடமுள்ள கெட்ட பழக்கங்களை (கெட்ட பழக்கம் என்கிற வார்த்தையை பொதுப்புத்தி சார்ந்து உபயோகிக்கிறேன்) பொது வெளியில் மறைப்பது ஒரு காலகட்டத்து பழக்கமாக இருந்தது. ஆனால் மரபை உடைப்பதாக தங்களைச் சொல்லிக் கொண்டவர்கள், இது ஒளிக்க வேண்டிய அவசியமில்லை. இதுவும் நமது வாழ்வியலின் ஒரு அங்கம்தான். இதை ஆரோக்கியமாகவும் வெளிப்படையாகவும் விவாதிப்போம் என்றனர். (வழக்கமாக நடிகர்கள் செய்யாத ஒன்றாக, ரஜினி தம்முடைய குடிப்பழக்கத்தை வெளிப்படையாக தெரிவித்ததின் காரணத்திற்காகவே 'இன்னா நல்லவருப்பா. எதையும் மறைக்கறதில்லை' என்று பொதுவெளியில் சிலாகிக்கப்பட்டார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது). ஏனெனில் பொதுவாக நாம் அனைவருமே இம்மாதிரியான ஏதாவது ஒரு சமூகத்தால் அறமற்றதாக முன்வைக்கப்பட்டிருக்கிற பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறோம். இதையே ஒரு பிரபலம் பகிரங்கமாக சமூகத்தின் முன்வைக்கும் போது இயல்பாக அவருடன் ஒரு நேசமான மனநிலை நமக்கு உருவாகிறது.
ஆனால் இப்போது இந்தக் காலகட்டத்தையும் தாண்டி வந்துவிட்டோம் என்றுதான் நம்புகிறேன். வணிகமயமாக்ப்பட்ட தற்போதைய நிலையில் வணிகரீதியாகவும் நட்புரீதியாகவும் நடத்தப்பெறுகிற மதுவிருந்துகள் நம்முடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன். முரண்நகையாக, மதுப்பழக்கம் இல்லாதவர்கள்தான் சமூகத்தின் முன் கோமாளிகளாக சித்தரிக்கப்படும் நிலை தோன்றியே பல காலம் ஆகிவிட்டது. இந்நிலையில் சாருவும், மிஷ்கினும் தங்களின் குடிப்பழக்கத்தை ஏதோ புரட்சி செய்வதான பாவனையுடனும் ரகசியக் கிளுகிளுப்புடனும் மேடையில் வெளிப்படுத்துவது காமெடியாக உள்ளது. சாரு தன்னுடைய பேச்சின் இடையில் நிறுத்தி 'கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கறேன்' என்ற நாடகத்தனமான காட்சியை என்னவென்று சொல்வது?. தன்னைப் பற்றி குடிகாரன் என்கிற பிம்பமே பொதுப்புத்தியில் ஆழமாகப் பதிந்திருப்பது குறித்து சாருவின் சலிப்பு வேறு. அடப் போங்கப்பா..
இவ்வாறாக நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறியது.
()
பாரதி மணி அவர்களுடன் சற்று நேர உரையாடல், ஷாஜி அவர்களுடன் ஒரு கைகுலுக்கல் ஆகியவற்றுக்குப் பின் இணையத்தில் பைத்தியக்காரன் என்று அறியப்படுகிற சிவராமனையும், யாழிசை என்ற வலைப்பூவில் எழுதிவரும் லேகாவையும் இன்னபிற இணைய நண்பர்களையும் சந்திக்க முடிந்தது. இதில் சிவராமனைப் பற்றி சற்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு திரையிடல்களின் போதும் சிறுகதைப் போட்டி மற்றும் பட்டறைகளின் போதும் தொடர்ச்சியாக சலிக்காமல் என்னை அழைப்பார்; தொலைபேசியில் பேசுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பணி அழுத்தம் காரணமாகவோ சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ என்னால் செல்ல முடியாமலே இருக்கும். ஆனால் அவர் இதனால் சற்றும் எரிச்சலடையாமல் முதல் முறை பேசின அதே நட்பான தொனியிலேயே எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பார். நான் அவராக இருந்திருந்தால் 'போய்யா சொங்கி' என்று எப்போதோ நட்பை முறித்துக் கொண்டிருப்பேன்.
இப்போதுதான் முதன்முறையாக அவரைச் சந்திக்கிறேன். பலத்த மழை ஓயும் வரையில் இருவரும் பொதுவாக நிறையப் பேசிக் கொண்டிருந்தோம். அந்தத் தாமதமான இரவிலும் சென்னையின் தெற்குப்புறமுள்ள அவர் வடக்குப் பக்கத்தில் உள்ள என்னை அவருடைய வண்டியில் இறக்கிவிட்டுச் சென்றார். எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த மாதிரியான மனிதர்களின் அன்பும் பண்பும் என்னை வெட்கப்படவும் திருத்திக் கொள்ளவுமான சிந்தனைகளை ஏற்படுத்துகிறது. அதற்காக சிவராமனுக்கு நன்றி.
(சாருவின் கடந்த நூல்விழா பற்றிய பதிவு)
image courtesy: original uploader
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
//எவ்வித எதிர்பார்ப்புமில்லாத இந்த மாதிரியான மனிதர்களின் அன்பும் பண்பும்//
சிவராமன் சார் பற்றி அருமையான கருத்து :) :)
நன்றி சுரேஷ் கண்ணன் சார்
:)
சாரு & மிஷ்கினின் செயல்கள் நாடகத்தனமாக இருப்பது ஒகே, நீங்களும் சாருவை பாட்டிலும் கையுமாக தானே படம் போட்டுருக்கிங்க!!!
சிவராமன் குறித்த பகுதி அவர் மேலுள்ள மரியாதையை அதிகப்படுத்துகிறது.
விழாவுக்கு வரமுடியாத குறை,
போன உணர்வு வந்திடுச்சு நல்லா எழுதியிருக்கீங்க
விழாவை நேரில் பார்த்த உணர்வைத் தந்தது உங்கள் கட்டுரை, மிக அருமையான பகிர்வு, மிக்க நன்றி.
// நாடகத்தனமாக //
சாரு பேச எழும் போதே தண்ணீர் பாட்டிலை தேடினார். அது கிடைக்காமல் மைக் பிடித்து ஆரம்பித்தவர், பின் முடியாமல் பாரதி கிருஷ்ணகுமாரின் பாட்டிலை வாங்கி குடித்தார். திட்டமிட்டு நாடகமாக செய்ய வில்லை என்பது முன் வரிசையில் இருந்த என் கருத்து.
சிவராமன் ஒரு கனிவு நிறைந்த மனிதர். உலகத் திரைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சியில் அவரை சந்தித்ததுண்டு. உங்களைப் போன்ற அறிமுகம் உள்ளவர்களிடம் மட்டுமல்ல புதியவர்களிடமும் மிகத் தோழமையுடன் பேசுவார்.சுட்டி காட்டியதற்கு மிகவும் நன்றி.
வந்திருந்தீங்களா..? சிவராமன்கூட சொல்லலையே..
சந்தித்தே தீரவேண்டும் என்று நான் நினைத்திருக்கும் வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர்..
இப்படி ஏமாற்றக்கூடாது..!!!
அருமையாக எழுதுறீங்க!
பாரபட்சமில்லாத, நியாயமான விமர்சனம். ஆனால், இந்த விமர்சனத்திலும் குறை கண்டுபிடித்து, இன்னும் எத்தனை தளங்களில் எத்தனை எதிர்வினைகள் உருவாகப் போகிறதோ தெரியவில்லை.
அனானி நண்பர் ஒருவரின் பின்னூட்டம் தனிநபர் தாக்குதலோடு இருந்ததால் அந்தப் பெயரை மாத்திரம் நீக்கியிருக்கிறேன்.
//In that film Kamal should have eaten beef briyani with pickle, just to confuse the politically correct idiots like ************.
You better attend the function on 19th and write about release of JeMo's books also.Otherwise you will be termed as a Charu fan
and JeMo non-fan :). //
இதற்கு முந்தைய பதிவில் என்னை கீழ்த்தரமாக தாக்கியிடப்பட்ட இன்னொரு அனானியின் பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டேன்.
கணினி முன் அமர்பவர்கள் நாகரிக உலகைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல என்பதை உணர்த்த அது ஒரு சாட்சியாய் இருக்கட்டு்ம்.
//கணினி முன் அமர்பவர்கள் நாகரிக உலகைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல என்பதை உணர்த்த அது ஒரு சாட்சியாய் இருக்கட்டு்ம்.
//
:-(
திருந்துவாங்கன்னு நினைக்கிறிங்க???
என்ன அருமையான நடை சார்!
நான் விழாவில் கலந்து கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது உங்களின் இந்த பதிவு.
thanks for sharing
Post a Comment