Wednesday, February 25, 2009

ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்

12 ANGRY MEN

1957-ல் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடூட்டால் நூற்றாண்டு 'கிளாசிக்' திரைப்படங்களின் டாப் டென் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதை 'கட்டாயம் பார்க்க வேண்டிய' (Must see) திரைப்படம் என்கிற வகையில் உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன். ஆனால் இவ்வாறு நான் பரிந்துரை செய்வதே இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்துக்கு முரணானது.

ஏன்? சொல்கிறேன்.

()

'நீதி' என்கிற உருவமற்ற விஷயம் நடைமுறையில் எப்படி உருவாகிறது என்பதை நாம் பொதுவாக அறிவோம். ஏதாவதொரு குற்றம் நிகழும் போது குற்றத்தில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார். வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் "குற்றஞ்சாட்டப்பட்டவர்' என்றே கருதப்படுவார். இந்த தொடர் சம்பிதாயங்களில் குற்றத்தை விசாரிப்போர்கள் அனைவருமே திறந்த மனத்துடன் செயல்பட்டால்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவேளை நிரபராதியாக இருந்துவிட்டால் அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலும். ஆனால் விசாரிப்பவர்கள் தங்களின் 'முன்முடிவுகளுடன்' வழக்கை அணுகினால் அது ஒரு பக்கச் சார்புடன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாதகமாக அமையக்கூடும்.

உதாரணமாக ஒரு ஆட்டோ டிரைவர் மீது ஒரு கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றும் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு சில 'மோசமான முன் அனுபவங்களால்' ஆட்டோ டிரைவர்கள் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது என்றும் வைத்துக் கொள்வோம். இந்த வழக்கு விசாரணையை அவர் கவனிக்கும் போது முன்னரே அவருக்குள் படிந்திருக்கிற இந்த எண்ணம், ஒருவேளை நிரபராதியாயிருக்கக்கூடிய அந்த ஆட்டோ டிரைவருக்கு எதிரான தீர்ப்பை வழங்குவதற்கு காரணமாக அமையக்கூடும். [இவ்வாறு ஒரு உதாரணத்திற்காக ஆட்டோ டிரைவரை நான் தேர்ந்தெடுத்திருப்பதே அவர்களுடன் எனக்கிருக்கும் முன்அனுபவங்கள் கூட காரணமாக இருக்கலாம். :-)].

இந்த மாதிரியான முன்தீர்மானங்கள் நியாமான நீதி கிடைப்பதற்கு தடையாகவும் நிரபராதி தண்டிக்கப்படுவதற்கு காரணமாகவும் அமையலாம் என்பதைத்தான் இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

Photobucket

ஒரு வழக்கு விசாரணையின் இறுதிப்பகுதியோடு இத்திரைப்படம் நமக்கு அறிமுகமாகிறது. தன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டதாக சேரியில் வசிக்கும் இளைஞன் ஒருவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்கச் சட்ட நடைமுறைப்படி, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை முழுவதுமாக கவனித்துக் கொண்டிருக்கும் 12 ஜூரிகளிடம் இதைப் பற்றி விவாதித்து வழக்கைப் பற்றி 'ஒருமனதான' முடிவொன்றை எடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்கிறார். தமக்குள் முன் அறிமுகமில்லாத அந்த 12 நபர்களும் இணைந்து இளைஞரை 'குற்றவாளி' என்று முன்மொழிந்தால் அதன்படி அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம். ஆனால் இதில் ஒருவர் முரண்பட்டாலும் விசாரணை மீண்டும் நிகழ்த்தப்படும்.

கோடைக்காலமான அந்தப்பருவத்தில் மூடப்பட்ட அறையில் 12 நபர்களும் கூடிப் பேச அமர்வதற்கே அவரவர்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர். பெரும்பாலோனோர் தங்களின் வழக்கமான அலுவல்களுக்கான அவசரங்களில் இருக்கிறார்கள். 'இதை விரைவில் முடித்துவிட்டு கிளம்பி விட வேண்டும்' என்கிற தொனி அவர்களின் உடல் மொழியில் வெளிப்படுகிறது.

முதல் வாக்கெடுப்பில் 11 நபர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இளைஞரை 'குற்றவாளி' என்று தீர்மானிக்கின்றனர். ஆனால் ஒருவர் மாத்திரம் இந்த முடிவிலிருந்து முரண்படுகிறார். அந்த இளைஞர் 'குற்றவாளியல்ல' என்பது கூட அவர் எண்ணமில்லை. ஆனால் வழக்கு விசாரணையில் ஏதோவொரு குறைபாடு இருப்பதாக அவர் நினைப்பதை அவசரத்திலிருக்கும் மற்ற பெரும்பாலோனோர் எரிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். தாங்கள் எடுக்கப்போகும் முடிவினால் ஒரு உயிர் சட்டத்தால் பறிக்கப்படுவது குறித்தான எந்த தீவிர உணர்வும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அந்த இளைஞர் குற்றவாளிதான் என்று பெரும்பாலோனோர் தீர்மானமாக கருதுகின்றனர்.

ஆட்பேசத்தை முதலில் எழுப்பிய நபர் பொறுமையாக தம்முடைய சந்தேகங்களையும் 'எப்படி அந்த இளைஞர் நிரபராதியாக இருக்கக்கூடும்' என்கிற வாதங்களையும் சபையின் முன் வைக்கின்றார். இந்த உரையாடல் நீடிக்க நீடிக்க மற்ற ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல தங்களின் முடிவுகளிலிருந்து மாறுகின்றனர். பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளுக்குப் பிறகும் கூர்மையான தர்க்கங்களுக்குப் பிறகும் தெளிவடைந்து இறுதியில் அனைத்து 12 நபர்களுமே தொடக்கப்புள்ளியில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து எதிர்நிலையான முடிவுக்கு வருகிறார்கள். இத்துடன் இத்திரைப்படம் நிறைவுறுகிறது. சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு தண்டனை கிடைத்ததா, அல்லது விடுதலையடைந்தாரா என்பது பற்றியெல்லாம் இத்திரைப்படம் பேசவில்லை.

முன்னரே குறிப்பிட்டது போல 'முன்தீர்மானங்களுடன்' எடுக்கப்படும் முடிவுகளைத்தான் இத்திரைப்படம் விமர்சனம் செய்கிறது.

()

சில சொற்ப காட்சிகளைத் தவிர இத்திரைப்படம் முழுவதும் 'ஒரே அறையில்' எடுக்கப்பட்டிருப்பதே இதன் பிரதான சிறப்பம்சமாக குறிப்பிடலாம். மிகத் திறமையான திரைக்கதையின் மூலம் இது சுவாரசியமானதொரு திரைப்படமாக சாத்தியமாகியிருக்கிறது. இந்த வழக்கை எல்லோருமே தங்களுக்கான முன்முடிவுகளுடன் கூடிய எண்ணங்களுடன் அணுகுகிறார்கள் என்பது குறியீட்டு மற்றும் மறைபொருளான காட்சிகளினால் சொல்லப்படுகிறது.

Photobucket

குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற அந்த இளைஞன் சேரியைச் சேர்ந்தவன் என்பதால் நிச்சயம் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என்பதான வாதம் முன்வைக்கப்படுகிறது. 'சேரி ஆட்களைப் பற்றி நாம் அறியாததா?" என்கிறார் ஒருவர். ஆனால் இளமைக்காலத்தில் சேரியில் வளர்ந்து இன்று உயர்நிலைக்கு வந்திருக்கும் குழுவிலிருக்கும் ஒருவரால் இந்தக் குறிப்பிட்ட காரணம் ஆட்சேபிக்கப்படுகிறது.. பிற்போக்கான இந்தச் சிந்தனையை பெரும்பாலோனோர் ஒப்புக் கொள்வதில்லை. 'They even don't speak good English' என்று ஆவேசமாக சொல்கிறார் ஒருவர். 'They doesn't' என்று அந்த வாக்கியத்திலிருக்கும் இலக்கணப் பிழையை நகைச்சுவையாக சுட்டிக் காட்டுகிறார் இன்னொருவர்.

கோடைப்பருவமான சூழ்நிலையில், மூடப்பட்டிருக்கும் அந்த அறையில் மின்விசிறி இயங்காதனின் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதனால் ஒவ்வொருவருக்கும ஏற்படும் எரிச்சலை ஆரம்பக்காட்சிகள் தெரிவிக்கின்றன. அங்கிருக்கும் மின்விசிறியை இயக்க முயன்று தொடர்ந்து தோல்வியடைகிறார் ஒருவர். இறுதிக் காட்சிகளில் கோடை மழை ஆரம்பித்து அறை சற்று இருளடைகிறது. எனவே அங்கிருக்கும் விளக்கு இயக்கப்படும் போது கூடவே மின்விசிறியும் இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு மின் சாதனங்களுக்கும் ஒரே சுவிட்ச். இந்த சிறுவிஷயத்தை கூட கவனிக்காதவர்கள் எப்படி வழக்கு விசாரணையை கூர்ந்து கவனத்திருப்பார்கள் என்கிற கேள்வி பார்வையாளனுக்கு தோன்றும் வகையில் இது ஒரு பகடியாக வெளிப்படுகிறது. மேலும் ஆரம்பக்காட்சிகளின் உஷ்ணமான சூழ்நிலையும் நபர்களின் குழப்பமான விவாதமுமான நிலை மெல்ல மாறி இறுதிக் காட்சிகளுக்கு வரும் போது பெய்யும் மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலையும் உரையாடல்களின் மூலம் அவர்கள் தெளிவடைந்திருப்பதும் மிக நல்லதொரு குறியீட்டுக் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

அந்த அறையில் உள்ள 12 நபர்களுடன் இணைந்து கேமிராவும் 13வது நபராக செயல்படுகிறது. ஆரம்பக் காட்சிகளில் சற்றுத் தொலைவில் காட்டப்படும் 12 நபர்களும் விவாதம் சூடேற சூடேற மெல்ல மெல்ல நெருக்கமாக அவர்களின் முகபாவங்களின் குழப்பங்களும் தெளிவும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படும் நோக்கத்தில் செயல்படுகிறது.

()

இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதிய Reginald Rose, Henry Fonda-ன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் இயக்குநர் Sidney Lumet. 12 நபர்களில் முதலாவதாக தனது ஆட்சேபத்தை முன்வைக்கும் நபராக Henry Fonda மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் மாத்திரமல்லாமல் மற்ற அனைவருமே தங்களின் தனித்தன்மையான நடிப்பை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வழங்கியிருக்கிறார்கள்.

1954-ல் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட இந்தப்படம், அதன் வெற்றியின் காரணமாக பிறகு 1957-ல் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1997-ல் தொலைக்காட்சிக்காக மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய மொழியிலும் ரீமேக் செய்யபட்டிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் பாசு சட்டர்ஜியால் 1986-ல் Ek Ruka Hua Faisla என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை என்ற பிரிவுகளில் அகாதமி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இத்திரைப்படம், அதே ஆண்டில் வந்த இன்னொரு கிளாசிக் திரைப்படமான The Bridge of the River Kwai-ன் பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக விருதுகளைப் பெறத் தவறியது. என்றாலும் பெர்லின் திரைப்படவிழாவில் தங்க விருதைப் பெற்றது. அமெரிக்காவின் 'தேசிய திரைப்படக் காப்பகத்தில்' வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் முன்னோடியான திரைப்படமாக மதிக்கப்படுகிறது.

()

எனவேதான் இத்திரைப்படத்தை உங்களுக்கு பதிவின் ஆரம்பத்தில் மிகத்தீவிரமாக பரிந்துரைத்திருந்தேன். ஆனால் இந்தப் பரிந்துரையே இத்திரைப்படத்தை நீங்கள் ஒரு 'முன்தீர்மானத்துடன்' அணுக ஒரு பாதகமான காரணியாக அமைந்துவிடலாம். அதுவே நான் உங்களுக்கு செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடக்கூடும். எனவே திறந்த மனத்துடன் இத்திரைப்படத்தைப் பார்த்தபிறகு உங்கள் எண்ணங்களை எனக்கு எழுதுங்கள்.


suresh kannan

23 comments:

வணங்காமுடி...! said...

\\எனவேதான் இத்திரைப்படத்தை உங்களுக்கு பதிவின் ஆரம்பத்தில் மிகத்தீவிரமாக பரிந்துரைத்திருந்தேன். ஆனால் இந்தப் பரிந்துரையே இத்திரைப்படத்தை நீங்கள் ஒரு 'முன்தீர்மானத்துடன்' அணுக ஒரு பாதகமான காரணியாக அமைந்துவிடலாம். அதுவே நான் உங்களுக்கு செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடக்கூடும். \\

அருமை. பார்த்துவிட்டு சொல்கிறேன்.

திரைப்படங்களைக் குறித்த உங்கள் விரிவான அலசல் நன்றாக இருப்பதாக நான் என் பல நண்பர்களுக்கு உங்கள் வலைப்பூவை பரிந்துரைத்திருக்கிறேன். அது கூட அவர்கள் உங்கள் வலைப்பூவை ஒரு "முன்தீர்மானத்துடன்" அணுகக் காரணியாக அமைந்துவிடுமோ? :-) :-)

மண்குதிரை said...

மொத்தப் படமும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள் என்றால் திரைக்கதை எவ்வளவு நுணுக்கமாக இருந்திருக்கும். கேட்க்கும் போதே ஆவல் வருகிறது.

அந்த ஹிந்தி ரீமேக் பற்றி சொல்லுங்கள் இங்கு கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்தான்.

சாணக்கியன் said...

இப்படத்தை அலுவலகத்தில் ஒரு பயிற்சிப் பட்டறையின் போது போட்டுக் காட்டினார்கள். முன்முடிவுகளோடு அணுகுவதன் பிரச்சனையை மட்டும் இத்திரைப்படம் சொல்லவில்லை.

அப்படி ஒரு சூழ் நிலையில் எப்படி தன் கருத்தை முன்வைத்து மற்றவர்களையும் தன் கருத்துக்கு கொண்டுவருவது எப்படி என்ற மேலாண்மை அல்லது தலைமைப் பண்பு, நீங்கள் குறிப்பிடத்தவறிய மிக முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். !

குறுந்தகடு எங்கே கிடைக்கிறது?

butterfly Surya said...

நல்ல அறிமுகத்திற்கு நன்றிகள் பல..

Anonymous said...

There is a movie "The man from earth". Just around 8 characters and story moves only by conversation between them. The whole movie taken in a hall. Very nice screenplay

பாலா said...

இந்த கருத்தை பலமுறை... யோசிச்சிருக்கேன். அட... அந்த காலத்துலயே... படமாவே எடுத்துட்டாங்களா..???!!

ரொம்ப நன்றி சுரேஷ் சார். அப்படியே ‘ரன் அவே ஜூரி’யையும் பார்த்துடுங்க.

பாலா said...

//There is a movie "The man from earth". Just around 8 characters and story moves only by conversation between them. The whole movie taken in a hall. Very nice screenplay//

ஒரே அறையில் எடுக்கப்பட்ட படங்கள் நிறைய இருக்குன்னு தோணுது.

"Conspiracy"-ன்னு ஒரு தொலைக்காட்சிப்படம். யூதர்களை கொல்வதற்கு முன் நாஜி படையினர் அதை பற்றி முடிவெடுப்பதை பற்றி பேசுவதுதான் மொத்த கதையுமே.

2-3 காட்சிகள் கட்டடத்துக்கு வெளியே எடுத்திருப்பாங்க. அவ்ளோதான்.

ஆளவந்தான் said...

மிக அருமையான படம் :)

ஆனால் இது அகிராவின் இகிரு (IKIRU) படத்தின் இரண்டாம் பாகத்தின் தழுவல் என்று நினைத்திருந்தேன்.. அது உண்மையில்ல்லையா?

இதே மாதிரி ஒரே அறையில் எடுக்கப்பட்ட படம் ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் ROPE

Anonymous said...

"Everyone has a breaking point".

இந்த‌ வ‌ச‌ன‌த்தின் வ‌கையில் இந்த‌ ப‌ட‌ம் குருதிப்புன‌லின் முன்னோடி !

The outside weather changes according to the mood in the room.. Hot weather to cold rain. :)

Vijay said...

எங்கள் ஆஃபீஸில் நடந்த ஒரு பயிற்சி முகாமில் இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட்டு, இதைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்கள்.

ரொம்பக் கஷ்டப்பட்டு நிறைய வீடியோ லைப்ரரிகளில் தேடிதேடி, பிறகு இணையதளத்தில் எங்கோ பிடித்டு, இரண்டு முறை இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரொம்ப சிரமப்பட்டு, பதிவிறக்கம் செய்து இந்தப் படத்தைப் பார்த்தேன்.
ஒரு த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தைப் பார்த்த அனுபவம். ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பார்த்தேன். பெரிய அளவில் இசையில்லை. ஆனாலும் அந்த 12 பேரும் ஒரு கொலைக் குற்றத்தைப் பற்றி விசாரிக்கும் முறை, வாவ். இப்படியெல்லாம் நம்மூரில் படம் எடுத்தாலும் இரண்டு காட்சி கூட ஓடாது.
சில வசனங்கள் ஒழுங்காகப் புரியவில்லை. சப்-டைடிலோடு டி.வி.டி கிடைத்தால் நல்லா இருக்கும் :-)

இதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுதணும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

RAMASUBRAMANIA SHARMA said...

"மிகவும் அறபுதமான விமர்சனம்....ஒர் அருமையான திரைப்படதை பற்றி...இவ்வாறான ஆரோக்கியமான திரைப்படங்கள் தமிழிலும் வரவேண்டும் என்பது...துறை சார்ந்த்த நண்பர்களின் விருப்பமாக நிச்சயம் இருக்கும்...அதற்கேற்ற அனைத்து....technical advancements....நம்மவர்களிடம் நிச்சியமாக உண்டு...திரைத்துரை நண்பர்காள்....உங்களுடைய மேலான கருத்துக்கள் எதிர்பார்கிறோம்...நன்றி...

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பதிவு, நல்ல கண்ணோட்டம்

Anonymous said...

Ayya... name is Henry Fonda not Fond.

anujanya said...

அறிமுகத்திற்கு நன்றி சுரேஷ். கச்சிதமாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

அனுஜன்யா

பிச்சைப்பாத்திரம் said...

வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.


//Ayya... name is Henry Fonda not Fond.//

Thanks for pointing out, friend. It's been corrected.

KARTHIK said...

// சாணக்கியன் said...

குறுந்தகடு எங்கே கிடைக்கிறது?//

9841898145 (கெளத்) இவர்கிட்ட கேளுங்க கெடைக்கும்.கடை பீச் ஸ்டேஸன் பக்கத்துல இருக்கு.விலை 40.00

Anonymous said...

This is one of the best movies I have seen. One more Interesting fact about this movie is all 12 characters in the movie are not given a name till the climax. Every one is called 1, 2, 3, 4...12 till the end. Only in climax is the 1st character name introduced. That era in hollywood can be rightly called golden era no era's movies matches them. If people liked this movie they should also watch Anatomy of Murder, To Kill a Mockingbird both are classics in their own right

RAMG75 said...

இந்த படத்தை 6 மாதங்களுக்கு முன் www.imdb.com ல் நல்ல படங்களை தேடும் போது படித்து பின் பார்த்தேன். வழக்கம் போல படம் பார்த்த வுடன் இப்படி தமிழ் படம் வராதா என்ற ஏக்கம் வந்தது. ஆனால் இப்படி படம் வந்தாலும் எத்தனை பேர் தியேட்டர் போய் பார்க்க தயாராக இருக்கிறார்கள் ?

மக்களை பார்த்து கை நீட்டி வசனம் பேசி பார்க்கும் மக்களின் கண்களை குத்தும் ஹீரோக்கள் படங்களை பார்க்க மட்டுமே நமக்கு வாய்த்திருக்கிறது.

VJR said...

just for information.

EXAM, படத்தின் பெயர். இதுவும் ஒரே அறையில் மட்டுமே எடுக்கப்பட்ட்டது. மேலும் எட்டேக் கதாப்பாத்திரங்கள். நேரம் கிடைத்தால் பாருங்கள்.

உலக சினிமா ரசிகன் said...

சிட்னி லூமட் நீதித்துறையின் ஒழுங்கீனங்களை மக்கள் முன் அம்பலப்படுத்திய படம்.கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிடும்போது பார்த்த பாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.

Unknown said...

சிறப்பான விமர்சனம். நன்றி