Thursday, February 19, 2009

அம்பையின் சிறுகதைகள்

வற்றும் ஏரியின் மீன்கள் - அம்பை - சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம் - பக் 184 - ரூ.140/-

ஒரு காலத்தில் பெண் எழுத்தாளர்களின் மீது நான் வைத்திருந்த அவநம்பிக்கையை தகர்த்தெறிந்தவர்களில் அம்பை என்கிற சி.எஸ்.லஷ்மியை பிரதானமாக சொல்ல வேண்டும். 'அம்மா ஒரு கொலை செய்தாள்' என்கிற அவரின் முக்கியமான சிறுகதையோடு அவரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் உயரம் குறைவான கமலைப் பற்றி அவருடைய அம்மாவே அவரது குறையைச் சுட்டிக் காட்டும் பேசிவிடும் போது அதிர்ச்சியும் சுயபச்சாதாபமும் அழுகையும் கலந்த முகபாவனையோடு அம்மாவின் முகத்தையே கூர்ந்து பார்க்கும் போது காமிரா கமலின் முகத்தையே பிரதானமாக நோக்கி சுற்றியலையும். இந்தக்காட்சியின் சாரம்தான் 'அம்மா ஒரு கொலை செய்தாள்'- சிறுகதை.

Photobucket

சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுதியிது. பெண்ணிய நோக்கில் எழுதும் எழுத்தாளர்களின் அம்பை முன்னோடியானவர். ஆனால் அதில் பிரச்சார தொனியும் ஆண்களை அவமதித்து எழுதுவதுதான் பெண்ணியம் என்கிற அபத்தமான புரிதலோ இருக்காது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

எழுத்தாளர்களை பால் வேறுபாடு கொண்டு நோக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் கலாச்சார காவலர்கள் அதிகம் புழங்கும் நம்முடைய ஆச்சாரமான இலக்கியப் பரப்பில் ஆண் எழுத்தாளர்களும் எழுதத் தயங்கும் விஷயங்களை அம்பையின் பேனா இயல்பான துணிவோடு எழுதியிருப்பது ஓர் ஆச்சரியமே. அவர் தமிழக நிலப்பரப்பிலிருந்து வெளியேயிருப்பதே இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆண் பாலியல் தொழிலாளியை கருணையோடு அணுகும் ஒரு பெண்மணியின் சிறுகதையை சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். (பொதுப் புத்தியின் பார்வையில் பாலியல் தொழிலாளி என்றாலே அது பெண்ணாகத்தான் இருக்க முடியும்). தான் பயணிக்கிற நேரங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களை 'பயணம்' என்கிற தலைப்பில் வரிசைப்படுத்தி சிறுகதைகளாக உருமாற்றியிருக்கிறார்.

அதில் ஒரே ஒரு சிறுகதையை மாத்திரம் சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பேருந்து நிலையம். கர்ப்பிணியான தன் மனைவியை வழியனுப்ப வந்திருக்கும் கணவன், பிரிவின் துயர் தாங்காமல் பொது இடமென்றும் பாராமல் அழுதுத் தீர்க்கிறான். மனைவி ஆறுதல் சொல்கிறாள். "பச்சப் புள்ளையாட்டம் அது" என்று தன் தாயிடம் பேருந்து கிளம்பிய பின் சொல்லிப் புலம்புகிறாள். கதை சொல்லி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பிற்பாடு கடற்கரையில் சந்தித்து உரையாட நேர்கிறது. வரதட்சணைக் கொடுமையின் கசப்பான அனுபவத்தில் நின்று போன திருமண நாளில் 'தீடீர்' கணவனான அவனுக்கு குழந்தைகள் என்றால் உயிர். ஆனால் சிறுவயதில் வந்த 'பொன்னுக்கு வீங்கி' நோயால் அவனின் ஆண்மை செயலிழந்திருக்கிறது. ஆனால் அது அவனுக்கே தெரியாது.

... சற்று நேரம் பயணித்ததால் தன்னையே பிட்டுக்காட்டும் அவளுடைய சற்றே மேடிட்ட வயிற்றைப் பார்த்த போது, "இது அவங்க வீட்டுதுதான்".. என்றாள்....

குண்டாந்தடியுடன் கலாச்சாரக் காவலர்கள் உலவுகின்ற சூழலில் ஒரு பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியொரு சிறுகதை வெளிவந்திருப்பதைக் குறித்துத்தான் ஆச்சரியம். இந்தத் தொகுப்பில் உள்ள ஏனைய கதைகள், பெண்ணியக் களப் போராளிகள் தங்களின் அந்திம காலத்தில் எதிர்கொள்ள நேர்கிற சமூகவியல் சார்ந்த சிக்கல்களின் அலுப்பைச் சொல்லிச் செல்கிறது. சில கதைகள் மதக் கலவரங்களினால் ஏற்படும் வன்முறையையும் அவற்றின் அபத்தத்தையும் பற்றிப் பேசுகிறது.

மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.


suresh kannan

10 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அவருடைய கிட்டத்தட்ட எல்லாக் கதைகளையும் வாசித்திருக்கிறேன். எனக்கும் பிடித்த எழுத்தாளர் அம்பை.

Bee'morgan said...

நான் நீண்டநாட்களாக தேடிக்கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் அம்பை.. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு வகையில் தட்டிப்போய்விடுகிறது.. அடுத்த முறையாவது தவறாமல் படிக்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுதுத்தியிருக்கிறது உங்கள் பதிவு..

வணங்காமுடி...! said...

அன்புள்ள சுரேஷ்,
நான் ருவாண்டாவில் (மத்திய கிழக்கு ஆப்பிரிக்க) வசிக்கிறேன். நமது ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருக்கும் எங்களுக்கு, தமிழ் வலைத்தளங்கள் தான் நல்ல ஒரு ஆறுதல். இங்கிருந்து கொண்டு புத்தகங்கள் வாங்குவதோ, யாரையாவது கொண்டு வரச் செய்து படிப்பதோ இயலாத ஒரு விஷயம். (Credit Card கூட reject செய்யப்பட்டு விடுகிறது.)
எழுத்தாளர் அம்பை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், அவரது எழுத்துக்களை வாசித்ததில்லை. உங்களது இந்த பதிவின் மூலம் அவரது எழுத்துக்களை படிக்க வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரின் எழுத்துக்கள் வலையில் இருந்தால், தயவு செய்து அதற்கான சுட்டியை கொடுக்கவும்.

சுந்தர்

த.அகிலன் said...

நானும் அம்பையின் கதைகள் படித்திருக்கிறேன் எனக்கும் பிடித்த எழுத்தாளர்.. அவருடைய ஒரு கதையில் ஒரு பெண் கேட்பாள் இந்தக்கடலை இந்தக் குடத்துக்குள் கொண்டு போய்விடமுடியுமா. என்று.. நிறைய நாட்கள் அந்தச் சொற்கள் என்னைத் துரத்தின

சந்தனமுல்லை said...

எங்கள் பல்கலையில் அவரது கதைகளே பல ஆராய்ச்சி-மாணவர்களுக்கு ஆராய்வுப் பாடம்! வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற புத்தகத்தில் வரும் ஆக்டோபசைப் போல பல கைகள் சமையலரையிலிருந்து நீண்டு பெண்ணை வளைத்திருக்கிறது என்பார்....அதே போல், கதையில் வரும் ஒரு பெண் வாழ்நாளில் எவ்வளவு தோசை சுட்டிருப்பாள்..என்று கதைசொல்லி நினைப்பதாகச் சொல்வார்..எனது ஆயாவை நினைத்துக் கொள்வேன்..ஐந்து நிமிடத்தில் நாம் சாப்பிடும் இந்த இட்லிக்கு முந்தினத்திலிருந்து ஏற்பாடுகள்..வேலைகள் என்று!!

மண்குதிரை said...

நல்ல அறிமுகம்.

அம்பை அவர்களைப்பற்றி வாசித்திருக்கிறேன்.

ஆனால், இன்னும் படைப்புகளை வாசித்ததில்லை

அவர் சிறுகதைகள் இணையத்தில் இருந்தால் சுட்டிக்காட்டவும்

மண்குதிரை said...

அம்பையின் சிறுகதை ஒன்று வாசிக்கக் கிடைத்தது.

காட்டில் ஒரு மான். பருவம் எய்தாதவள் என்று சொலப்படும் பெண்களின் உணர்வுகளைப்பற்றிய நல்ல பதிவு.

ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லியிருப்பது ஒரு நெருக்கத்தை உண்டாக்குகிறது.

'தங்கமத்தை' பாத்திரம் ஒரு கதை சொல்லியாக அறிமகப்படுத்தி அவள் கதையை ஒரு குட்டி கதை மூலம் பதிவுசெய்வது சிறப்பு.

ருவாண்டா சுந்தர்,
நானும் உங்களைப் போல்தான் இருக்கிறேன்
அம்பையின் இந்த சிறுகதை திண்னை.காமில் வாசிக்க கிடைக்கிறது.

வாசித்து கருத்துச் சொல்லுங்கள்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=19912031&format=html

Nirmala. said...

சில மாதங்களுக்கு முன் 'காட்டில் ஒரு மான்'வாசித்த போது மூன்று வருஷமாக இந்த புத்தகத்தை வீட்டில் வாசிக்காமல் வைத்திருந்ததற்காக ரொம்பவே வருத்தப்பட்டிருந்தேன். அதில் அடவி, பிளாஸ்டிக் டப்பாவில்..., பிரசுரிக்கப்படாத கைப்பிரதி... பாதித்தவை.

இந்த தொகுப்பில் நீங்கள் குறிப்பிட்ட சிறுகதை வாசிக்கும் போது ஹான்னு இருந்துது!

Unknown said...

The library of congress has recorded short stories of some of the writers, read by the authors themselves. Ambai's "Amma oru kolai seidhaal' and 'Veettin moolaiyil oru camayal arai' are two stories that you can listen to at the URL below:

http://www.loc.gov/acq/ovop/delhi/salrp/cslakshmi.html

அனைவருக்கும் அன்பு  said...

ரமேஷ் கண்ணன் முதலில் நன்றி உங்களுக்கு ........அம்பை பற்றி பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறேன் வீட்டின் மூலையில் சமையலறை படித்த பின் தீவிர ரசிகை ஆகிவிட்டேன் தற்சயலாக அம்பையின் தேடலில் உங்கள் வலை தளம் பார்க்க நேர்ந்தது இப்பையாவது பெண் எழுத்தாளர்கள் மேல் மேல் உள்ள அபத்தமான புரிதலை அகற்றியதற்கு ஒரு கைகுலுக்கல் .........