Friday, February 20, 2009

SEVEN POUNDS

நம் இந்திய தேசத்தில் நிகழும் விபத்துக்களைப் பற்றி மாநில வாரியாக அந்தந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் ஆய்வறிக்கையில் காட்டப்படும் எண்ணிக்கைகளை காணும் போது அவற்றின் சதவீதம் இன்னும் அதிகரிக்காமல் போவதற்கு அதிர்ஷ்டம் என்கிற சமாச்சாரம்தான் காரணமோ என்னுமளவிற்கு பல விபத்துக்கள் நுண்ணிய இடைவேளைகளில் தப்பி விடுவதே சாலைகளில் கண்டிருப்பது நினைவுக்கு வரும். விபத்துக்கும் அது நிகழாமல் போவதற்கும் உள்ள வித்தியாசம் சில நொடிகள் மாத்திரமே. அந்தளவிற்கு சாலையில் பல வாகனங்கள், குறிப்பாக இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து அசுர வேகத்தில் பறப்பதை காணும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு செல்பவர்கள் தாம் மாத்திரம் விபத்துகளில் சிக்கிக் கொள்வதோடு அல்லாமல் சாலை விதிகளை ஒழுங்காக கடைப்பிடித்து செல்பவர்களையும் விபத்துக்குள்ளாக்குகின்றனர்.

ஒட்டுநர் உரிமம் வழங்கப்படுவதின் நடைமுறைகளில் ஒன்றாக, உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்களை ஒரு நாள் முழுக்க மருத்துவமனைகளின் விபத்துப் பிரிவிலும் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவிலும் பார்வையிடச் செய்தால் நன்றாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

Photobucket

தன்னுடைய கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் குறித்த குற்றவுணர்ச்சியோடு திரிந்து அதிலிருந்து மீளுவதற்காக தன்னையே இழக்கத் துணியும் இளைஞனைக் குறித்த திரைப்படம் Seven Pounds. வணிகப்படங்களில் துள்ளலான, குறும்பான இளைஞனாக வரும் வில் ஸ்மித் மாற்றுத் திரைப்படங்களுக்காகவும் தன்னுடைய பங்களிப்பை வழங்குவது ஆரோக்கியமானதொன்று. The Pursuit of Happiness-ல் பொறுப்பான தந்தை பாத்திரத்தை ஏற்ற ஸ்மித், இந்தத் திரைப்படம் முழுக்க தன்னுடைய தவற்றின் குற்றவுணர்ச்சியில் மன உளைச்சல் அடையும் ஒரு இளைஞனாக வருகிறார். இதற்காக தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டாரோ என்னுமளவிற்கு ஒடுங்கிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களுமாய் முகத்தில் எப்போதும் ஒரு அவஸ்தையை வைத்துக் கொண்டு படம் முழுதும் இயங்கியிருக்கிறார்.

உதவி தேவைப்படும் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக தன்னுடைய உடமைகள் அனைத்தையும் துறந்து மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தன்னுடைய உறுப்புகளையே தானம் செய்து உச்சக்கட்டமாக அதற்காக தன்னையே மாய்த்துக் கொள்ளும் இந்தத் திரைப்படத்தின் ஆதாரமாக நான் கருதுவது ஒரு தனிநபரின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்து எத்தனை தனிநபர்களின் கனவும் வாழ்க்கையும் முடிந்து போவதற்கு காரணமாக அமைகிறது என்பதும் தானமாக தரப்படும் நம்முடைய உடல் உறுப்புகள் எத்தனை பேரின் கனவை மீட்டெடுக்கிறது என்பதும்தான். இருதயக் கோளாறு உள்ளதால் மரண அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் எமிலியுடன் பழக நேரும் போது இருவருக்கும் ஏற்படும் காதலும் அப்போது இருவருமே மரணத்தை தவிர்க்க முயன்றால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குவது குறித்த காட்சிகள் நெகிழ்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படத்தில் குறிப்பாக வில் ஸ்மித்தின் நடிப்பும் உடல் மொழியும் தவிப்பும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தின் மெதுவான திரைக்கதை பார்வையாளனுக்கு சோர்வையளிப்பது தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். The Pursuit of Happiness படத்தை இயக்கிய Gabriele Muccino-தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

திரைப்படம் என்ற அளவில் மட்டுமல்லாது கண நேரக் கவனக்குறைவால் நிகழும் மனித வாழ்வின் மரணம் குறித்த சிந்தனைக்காகவும் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

suresh kannan

14 comments:

மண்குதிரை said...

கண்டிப்ப பார்க்கனும்

அறிமுகபடுத்தியற்கு நன்றி!

தொடர்ந்து சினிமா குறித்து எழுதுங்கள்.

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி...

வணங்காமுடி...! said...

நன்றி சுரேஷ். இன்றே பதிவிறக்கம் செய்து விடுகிறேன். பொதுவாக தமிழ் அல்லாத வேற்று மொழிப்படங்களை, யார் வாயிலாவது கேள்விப்பட்டே பின் பார்க்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். நீங்கள் பரிந்துரைத்த படங்கள் அனைத்தும் பார்த்தாகி விட்டது. படம் பார்த்து விட்டு உங்கள் பதிவை மீண்டும் படிக்கும் போது பல விஷயங்களை உள் வாங்க முடிகிறது.

சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் இதை இங்கே சொல்வதற்கு மன்னிக்கவும். உங்களுடைய ஒரு பதிவில் "Memories of a Murder" என்ற கொரியத் திரைப்படத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். பல முறை பார்த்து விட்டேன். அருமையான படம். ஆனால் இன்று வரை அதன் முடிவு, ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. ஒருவேளை எனது சிறு அறிவுக்கு புரியவில்லையோ என்னவோ.

நன்றி மீண்டும்.

சுந்தர்
ருவாண்டா

PRABHU RAJADURAI said...

அட! சிவாஜி நடித்து நீதின்னு ஒரு படம் முன்னால வந்துதே!

படம் மறந்து விட்டது. விபத்தில் இறந்தவனுடைய குடும்பத்தில் ஓட்டுநரான சிவாஜியை வசிக்க நீதிபதி அனுப்புவார்..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

ஷண்முகப்ரியன் said...

படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி!எனக்குப் பயனுள்ள தகவல்.

Anonymous said...

You should also watch "21grams"

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய பிரபு,

அது துஷ்மன் என்னும் இந்திப் படத்தின் தமிழ்ப் பதிப்பு. குடித்துவிட்டு வண்டி ஓட்டி குடும்பத்தலைவனை விபத்துக்குள்ளாக்கியதால் ஓட்டுனர் அந்தக் குடும்பத்தில் தண்டனைக் காலத்தைக் கழிக்கவேண்டும் என்பதான தீர்ப்பு.

அந்தக் குடும்பத்தின் வருமானத்திற்கு ஓட்டுனர் வழிசெய்து ஒவ்வொருவரின் அன்பைப் பெறுவதுதான் கதை.

அன்புடன்
ஆசாத்

Rithu`s Dad said...

SEVEN POUNDS குறித்த உங்கள் தகவலுக்கு நன்றி.. WILL SMITH ஜய் ஒரு ACTION HERO வாகவே தேரிந்திருந்த எனக்கு! அவருடைய The Pursuit of Happiness படம் அவரை ஒரு சிறந்த நடிகர் என்ற மதிப்பை என்னுள் ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை...

PRABHU RAJADURAI said...

Dear Azad,
As an Advocate, dealing in accident claims cases, I find such a punishment is meaningful. The drivers in the normal circumstances escape with fines and it is not a bad idea that they have to be made to realise the trauma of a family, losing a breadwinner.

KARTHIK said...

நல்ல விமர்சனங்க.
இது போலவே விபத்த மையாம கொண்ட படம் 21 Grams இது பத்தி மோகன்தாஸின் பதிவு.

PRABHU RAJADURAI said...

"இதற்காக தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டாரோ என்னுமளவிற்கு ஒடுங்கிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களுமாய் முகத்தில் எப்போதும் ஒரு அவஸ்தையை வைத்துக் கொண்டு படம் முழுதும் இயங்கியிருக்கிறார்"

நேற்று இந்த படத்தைப் பார்த்தேன். காலையில் மென் இன் பிளாக் போன்ற படங்களில் அழகாக இருந்த வில் சுமித் ஏன் இப்படி விளக்கெண்ணய் குடித்த மாதிரி இந்தப் படத்தில் இருக்கிறார் என்று நினைத்தேன். தற்பொழுது இந்த விமர்சனத்தை மறுபடி படிக்கையில் என் தவறு புரிந்தது...ஆனாலும் அதற்கு நீங்கள் ALi பார்க்க வேண்டும், முகமது அலியாக வில் ஸ்மித்தா என்று நினைத்தேன்...படம் பார்க்கும் வரைதான். ஹாலிவுட்காரர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம் என்றும் புரிந்தது

யாத்ரீகன் said...

>>> விபத்தில் இறந்தவனுடைய குடும்பத்தில் ஓட்டுநரான சிவாஜியை வசிக்க நீதிபதி அனுப்புவார்.. <<<

are there Laws to do this ?!

PRABHU RAJADURAI said...

I dont think any law but I can say that there are ways to do that legally