Friday, January 23, 2015

அனந்தியின் டயறி - அனந்தி என்கிற சிநேகிதியின் டைரிக்குறிப்புகள்






16.11.2014

பொ.கருணாகரமூர்த்தியின் 'அனந்தியின் டயறி' நூல் வந்து சேர்ந்தது. உடனே வாசிக்க ஆரமபித்திருக்கிறேன்.


இதைப் புதினம் என்று வகைப்படுத்த முடியுமா என தெரியவில்லை. சேகுவாராவின் 'பொலிவியின் டயறி'யை புதினம் என்றா அழைக்க முடியும்? அனந்தி என்கிற இளம்பருவத்து பெண் தொடர்ந்து அவளது டயறியில் எழுதும் குறிப்புகளின் தொகுப்பாகத்தான் இந்நூலின் வடிவமிருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' எனும் நூல் அவரது தன்வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் இருந்தாலும் ஒருவகையில் அதனை புதினமாக பாவிக்க முடியும். ஆனால் இது? இந்த வடிவத்தின் முன்னோடி ஏதும் இல்லையென்றால் இதையே டயறிக் குறிப்புகளின் தொகுப்பாக வந்த முதல் தமிழ் நூல் என்று வகைப்படுத்த முடியும். வெங்கட் சாமிநாதனின் முன்னுரை, தென்அமெரிக்காவில் காலங்காலமாக வசித்து வந்தாலும் சரவணபவன் சாம்பாரை தாண்டாத தமிழர்களின் எழுத்துக்கலையை கிண்டலடிக்கிறது, சில விதிவிலக்குகள்தான் என்கிற பெருமூச்சுடன். கருணாகரமூர்த்தி 'என்னுரையில்' குறிப்பிட்டிருப்பது போன்று ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞனின் புகைப்பட ஆல்பத்தை புரட்டுவது போன்றே இந்த நூலும் கலைடாஸ்கோப் வழிகாட்சிகள் போன்று சட்சட்டென்று மாறும் காட்சிகள் பார்க்கிறதொரு சுவாரசியமான அனுபவத்தை தருகிறது.


19.11.2014

பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் இரவில் போர்வையை இழுத்துப் போார்த்திக் கொண்டு நூலொன்றை வாசிப்பது அபாரமான அனுபவம்.

 'அனந்தியின் டயறி' நூலை கால் சதவீதம் கடந்து விட்டேன். இந்நூலை முதலில் இருந்து தொடர்ச்சியாக வாசிப்பதுதான் ஒருவகையில் சரிதான் என்றாலும் அவ்வாறுதான் வாசிக்க வேண்டுமென்கிற கட்டாயமேதும் ஏதும் இல்லாததே இந்நூலின் சிறப்பு. தோன்றுகிற பக்கத்தை பிரித்து எங்கிருந்து வேண்டுமானாலும் வாசித்துக் கொண்டு போகலாம். வாசிப்பதை சற்று நிறுத்தி பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரை முதன் முதலில் எங்கு கேள்விப்பட்டேன் என்று சற்று யோசித்துப் பார்த்தேன்.

பழைய கணையாழியில் 'தி.ஜானகிராமன் நினைவு விருது' குறுநாவல் போட்டிக்காக தொடர்ச்சியாக குறுநாவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. எனக்கு குறுநாவல் எனும் வடிவம் சற்று பிடிபட்டது அப்போதைய வாசிப்பில்தான். (இந்த குறுநாவல்கள் தொகுப்பாக வந்திருக்கிறதா என்று தெரியவில்லை, வந்திருந்தால் நல்லது).

அந்த வரிசையில்  'ஒரு அகதி உருவாகும் நேரம்' என்ற குறுநாவல் யாழ்ப்பாணத் தமிழில் அமைந்திருந்தது. பொ.கருணாகரமூர்த்தி என்கிற பெயரும் சட்டநாதன் என்கிற ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் மனதில் அழுத்தமாக பதிந்தது அந்தச் சமயத்தில்தான். உலகிலிருக்கும் மஹா அசடுகளை பட்டியலிட்டால் அதில் திருவாளர் சட்டநாதன் நிச்சயம் பத்துக்குள் வந்து விடுவார். அப்படியொரு மனிதர். தலைமாற்றி கள்ள பாஸ்போர்டில் ஆட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குழுவொன்று சட்டநாதனை விதம் விதமாக மாற்றி மாற்றி அனுப்ப முயல்கிறது. ஆனால் மனிதரோ, துரத்தப்பட்ட கரப்பான்பூச்சி போல துரத்தியவரிடமே மிக வேகமாக வந்து சேர்கிறார்.

இயந்திர வாழ்வின் சிடுக்குகளில் இருந்து அவல நகைச்சுவையை பிரித்தறிந்து எழுதுவதென்பது நுட்பமான காரியம். பொ.கருணாகரமூர்ததிக்கு இது மிக எளிதாக கைவரப் பெற்றிருக்கிறது. புலம்பெயர் மக்களுக்கான பிரத்யேக துயரங்களை நேரடியாக புலம்பிக் கொட்டாமல் வாழ்க்கையனுபவங்களின் துளிகளிலிருந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். இது போன்ற அவல நகைச்சுவையை திறம்பட வெளிப்படுத்துவர், இன்னொரு ஈழ எழுத்தாளரான அ.முத்துலிங்கம். தலைப்பு நினைவில் பிடிபடாத அவரது சிறுகதையொன்றில், வழக்கம் போல் தம்முடைய இளமைப்பருவ நினைவுகளை சுவாரசியமான தொனியில் பதிவு செய்து கொண்டே போகும் முத்துலிங்கம், சிறுகதையின் இறுதியில் சிங்கள ராணுவத்தினரின் நுழைவு எழுதப்பட்டிருக்கும் சொற்ப வரிகளின் மூலம் அச்சிறுகதையின் நிறத்தையே வேறு வகை துயரமாக மாற்றி விடுகிறார்.

25.11.2014


பனிக்காலத்தினால் ஏற்பட்டிருக்கும் ஜலதோஷமும் காதடைப்பும். மருத்துவரின் அறையின் முன்பான வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கு போனாலும் பாழாய்ப்போன இந்த வரிசை. கையில் புத்தகம் வைத்திருந்தது நல்லதாய்ப் போயிற்று...

'அனந்தியின் டயறி' வாசிப்பு மிக சுவாரசியமாகப் போகிறது. இது அனந்தி என்கிற மாணவியின், காளிதாஸ் என்கிற புலம்பெயர் தமிழரின் மகளின் நோக்கில் விரிகிற டைரிக்குறிப்புகள் என்றாலும், நூலாசிரியராகிய கருணாகரமூர்த்தியும் அனந்தியுனுள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பது வெளிப்படை. நூலாசிரியர் மகளுடன் கலந்து ஆலோசித்து எழுதினாரோ அல்லது எழுத்தாளர்களுக்கேயுரிய கூடுபாயும் திறமையுடன் எழுதினாரோ தெரியவில்லை, இளம்பருவத்து பெண்ணுக்குரிய தன்மைகளும் கனிவுகளும் குறும்புகளும் குழப்பங்களும் அந்த டயறிக் குறிப்புகளில் துல்லியமாக வெளிப்படுகின்றன. ஜெர்மனியில் அடைக்கலமாகியிருக்கும் தமிழ்க்குடும்பம் என்பதால் இருநாட்டு மக்களின் கலாசாரக் குறிப்புகளும் அதன் Cross Culture தன்மையோடு இயல்பாக பதிவாகியிருக்கின்றன. இரு தேசத்து பண்பாட்டுப் பின்புலத்தை குறுக்குவெட்டு சித்திரமாக வெளிப்படுத்தும் நூல்இது என்றும் சொல்லலாம். மாத்திரமல்லாமல் தமிழர்கள், தங்களுக்கு என்று பிரத்யேகமாகயுள்ள சில வழக்கங்களை அட்லாண்டிக் கடலுக்குள் குடிபுகுந்தால் கூட கைவிட மாட்டார்கள் என்கிற உண்மை இந்த நூலின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது.


04.12.2014


உடல்நலக்குறைவால் நூல் வாசிப்பதை தள்ளிவைக்க வேண்டியிருந்தது. என்றாலும் மனதினுள் காளிதாஸூம் அனந்தியும் கடம்பனும் மாறியோவும் உலவிக் கொண்டேதானிருக்கிறார்கள்...

டைரிக்குறிப்புகளைக் கொண்ட நூல் என்பதால் எந்தப் பக்கத்திலும் நுழைந்து எந்தப் பக்கத்தின் வழியாகவும் வெளியேறும் தன்மையை இந்த நூல் கொண்டிருக்கிறது. இதிலொரு பிரச்சினையும் உண்டு. புதினம் மாதிரியல்லாமல் ஒரு தனிநபரின் டைரியைப் போலவே ஒரே மாதிரியான, ஒரே விஷயத்தின் தொடர்ச்சியான சம்பவங்களின் குறிப்புகள் இடம்பெறுவதால் ஒருவிதமான சலிப்புத்தன்மையையும் இந்த நூல் ஏற்படுத்துகிறது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ஒரு பெரிய இனிப்புத் துண்டை தொடர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் திகட்டல் போல. ஆகவே வெவ்வேறு இடைவெளிகளில் இந்த நூலை வாசிப்பதுதான் சரியானதாக இருக்கும். நானும் அவ்வாறுதான் இதை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.


07.12.2014


சமீபத்தில் மறைந்து போன இயக்குநர் ருத்ரய்யாவின் நினைவாக அவரின் திரைப்படமான 'அவள் அப்படித்தான் - ஐ பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னமும் தூக்கம் வரவில்லை. எனவே அனந்தியின் டயறி.....ஒரு வழியாக இன்று நூலை வாசித்து முடித்து விட்டேன்..

ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் பொருள் தேடும் அனந்தியின் டிக்ஷனரி குறிப்புகள், சமயங்களில் வெறுப்பேற்றும் தம்பி கடம்பனின் lateral thinking கேள்விகள், அனந்தி முகநூலில் வாசித்த கவிதைகள், சக மாணவிகளின் குணாதிசயங்கள், வாசித்த நூலைப் பற்றிய குறிப்புகள், பார்த்த சினிமாக்கள், Frau. Stauffenberg -க்கு பணிவிடை செய்யும் அனுபவங்கள், சீட்டு பிடித்தலில் ஏமாந்து நிற்கும் அம்மாவின் அப்பாவித்தனங்கள், காதல் முறைப்பாடு செய்யும் கண்ணியமானதொரு இளைஞனான 'மாறியோவிடம்'  'தமிழர் வாழ்வியலை' சற்று விளக்கி அவனை தள்ளி நிற்கச் செய்யும் சாமர்த்தியங்கள்...அவசரத்திற்கு பணம் வாங்கி பிறகு தராமல் ஏமாற்றும் தமிழர்களின் பிரத்யேக சிறுமைத்தனங்கள்...வீட்டுக்கடன் பயமுறுத்தல்கள்.... பாலுறவு குறித்து பாசாங்கு ஏதுமில்லாமல் இயல்பாக சிந்திக்கும் மேற்குலகின் முதிர்ச்சித்தனங்கள் என்று கலந்து கட்டி வரிசையாக வரும் இனிமையான யாழ்ப்பாணத் தமிழ் குறிப்புகளின் மூலம் அனந்தியின் குடும்பத்தை மிக நெருக்கமாக உணர முடிகிறது.

பொ. கருணாகரமூர்த்தி ஏற்கெனவே எழுதிய முந்தைய சில சிறுகதைகள் (கஞ்சத்தனம் கொண்ட மாணவி) இதில் மீண்டும் அப்படியே மீண்டும் வந்திருப்பது ஒருவகையில் இயல்புதான் என்றாலும் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.  வாசிப்பதற்கு மிக மிக சுவாரசியமானதொரு நூல். அனந்தியுடன் சிநேகிதம் கொள்வதற்காவாவது தமிழுலகம் இந்நூலை வாசித்தாக வேண்டும். 

மதிப்புரை.காம் -ல் வெளியானது. (நன்றி: மதிப்புரை.காம்)

suresh kannan

1 comment:

Anonymous said...

மரண மொக்கையான கத்தியை எல்லாம் முழுசா பாத்துட்டு விமர்சிக்கும் நீங்கள் ஒரு நல்ல முயற்சியான பிசாசை பற்றி எழுதாது ஏனோ?