Thursday, January 08, 2015

குறத்தியாறு - கெளதம சன்னா - நூல் வெளியீட்டு விழா - 07.01.2015


உயிர்மை பதிப்பகத்தின், கெளதம சன்னா எழுதிய புதினமான 'குறத்தியாறு' நூல் வெளியீட்டு விழாதான் என்றாலும் நான் பிரதானமாக சென்றது கோணங்கி பேசுவதைக் காண.

புகைப்படங்களிலும் சில விழாக்களிலும் அவரைப் பார்த்திருக்கிறேனே தவிர அவர் மேடையில் பேசுவதை இதுவரை கண்டதில்லை, கேட்டதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு ஒரு விழா மேடையில் கோணங்கியைப் பார்க்கும் ஓர் அபூர்வமான நிகழ்வு என்று மனுஷ்யபுத்திரன் தன்னுடைய வரவேற்புரையில் குறிப்பிட்டார்.. போலவே எழுத்தாளர் ஜெயமோகனையும் கோணங்கியையும் ஒரே மேடையில் காண்பது தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே (?!) இதுவே முதன்முறையாக இருந்தது போலும்.

கோணங்கி பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவே அத்தனை சுவாரசியமாக இருந்தது. ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் தனக்கேயுரிய பிரத்யேக சங்கேத மொழியில் நூல்களில் தான் காணும் தொன்மங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கி இருக்கும் திசையை நோக்கி உரையாடினால்தான் பார்வையாளர்களுக்கும் தெளிவாக கேட்கும் என்கிற மேடை நடைமுறை விதிகளெல்லாம் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. அவருக்கான பிரத்யேகமான அந்தரங்க உலகத்திலேயே எப்போதும் புழங்கிக் கொண்டிருக்கும் மனிதர் என்பதாக தோன்றியது. நல்ல அனுபவம்.

கெளதம சன்னா என்கிற பெயரை நான் அறிந்தது, ஜெயமோகனின் வெள்ளையானை நூல் வெளியீட்டு விழாவின் போதுதான். அந்த விழாவில் நாவலைப் பற்றியும் பழைய சென்னையின் வரலாற்றுத் தகவல்களையும் இணைத்து பல நுட்பமான விஷயங்களைப் பேசியது அத்தனை ஆச்சரியமாக இருந்தது. அரசியல் அமைப்பைச் சார்ந்த ஒரு நபரிடமிருந்து இத்தனை ஆழமான விஷயங்களை அறிந்த ஓர் இலக்கியவாதியை நான் எதிர்பார்க்கவில்லை. எனவே அவருக்காகவும் இந்த விழாவிற்கு சென்றிருந்தேன். பொதுவாக தீவிரமான அரசியல் கட்டுரைகளை எழுதுபவரிடமிருந்து இலக்கிய நயம் வாய்ந்த ஒரு புதினத்தை அவரை நன்றாக அறிந்தவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதாகவே இந்த விழாவின் மூலம் அறிந்தது.

கடந்த வருடமே வெளியாக வேண்டியிருந்த இந்த நூல், ஒவியம் சந்ருவின் கோட்டோவியங்களோடுதான் வெளியாக வேண்டும் என்று அவருக்காக ஒரு வருடம் காத்திருந்து பல நினைவூட்டல்களுக்குப் பின் ஓவியங்களை இணைத்த பிறகே இந்த நூலை வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து சன்னாவின் பிடிவாதமான கலையார்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக நூலாசிரியரும் ஓவியரும் இணைந்து புதினத்தின் பின்புலமாக அமைந்துள்ள இடங்களுக்கு சென்ற அனுபவத்திற்குப் பின் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. 'இந்த நாவல் சன்னாவும் சந்ருவும் இணைந்து எழுதியது' என்பதாக கோணங்கி குறிப்பிட்டது இதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஓவியர் சந்ரு அவர்களையும் இந்த விழாவில்தான் முதன்முறையாக பார்த்தேன். குச்சி குச்சியான சிறுநரைமுடிகளோடும் முக்கால் வேட்டியோடும் ஓர் அசல் நாட்டுப்புற மனிதர் போல் அத்தனை எளிமையாக இருந்தார். அவரது உடல்மொழியும் அத்தனை வெள்ளந்திதனமாக இருந்தது. அவரின் ஓவியங்களைக் கண்டபிறகும் உரையாற்றும் போதுதான் அவரது மேதமையைக் உணர முடிந்தது.   இவ்வாறான எளிமையான மேதைகளை அவ்வளவாக கண்டுகொள்ளாமல் வெற்றுப் படோபடங்களின் பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஜெயமோகன் பேசும் போது "தலித் இலக்கியத்தின் மிக முக்கியமான திருப்புமனையை இந்த நாவல் ஏற்படுத்தும் என கருதுகிறேன். இதுவரையான தலித் இலக்கிய படைப்புகள் யதார்த்த வகை படைப்புகளாகத்தான் உருவாகி வந்திருக்கின்றன. ஆனால் தொன்மத்தின் அழகியலுடனும் காவிய  மரபு மொழியில் இந்நூல் உருவாகியிருப்பது தலித் இலக்கியத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக அமைந்திருக்கும்" என்றார். விழாவின் துவக்கத்தில் ஒவியர் நட்ராஜ், இந்த நாவலின் சில பகுதிகளை வாசித்துக் காண்பிக்கும் போது அது கோணங்கியின் மொழியின் அடையாளத்துடன் அமைந்திருப்பதாகத் தோன்றியது.

தலைமையுரையாற்றிய தொல்.திருமாவளவன், சிறுகதைகள், நாவல் போன்ற புனைவு வகை இலக்கியங்களை நான் வாசிப்பதில்லை எ்னறார். ஏனெனில் அவை நம்மை கனவுலகத்தில் ஆழ்த்தி மயக்குபவை. மாறாக யதார்த்தவகை இலக்கியங்களான வரலாற்று, தத்துவ வகை நூல்களே நம்மை விழிப்பாக இருக்க வைப்பவை. என்றாலும் நான் முழுமையாக வாசிக்கவிருக்கும் முதல் நாவலாக இந்த 'குறத்தியாறு' இருக்கும் என்றார். மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்த இடைவெளி தருணத்தில் விழா மேடையிலேயே வாசித்து விட்ட சில பக்கங்களை மிக நிதானமாக விவரித்து சிலாகித்து மகிழ்ந்தார்.

ஏற்புரை வழங்கிய கெளதம சன்னா விரிவாக பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சுருக்கமாக முடித்துக் கொண்டார். 'சிலர் கருதுவது போல இதை வெறுமனே அழகியல் நோக்கத்தில் எழுதவில்லை. எனக்கென்று உள்ள அரசியல் பார்வையில்தான் இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறேன்" என்றார்.

விழா முடிந்ததும் வெளியே நண்பர்கள் சிவராமன், சிறில் அலெக்ஸ், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர்களோடு அமைந்த உரையாடல் விழாவில் கல்ந்து கொண்டதைத் தவிர மேலதிக நிறைவைத் தந்தது.

No comments: