ஒரேயொரு திரைப்படத்திற்காக, தமிழ் சினிமாவின் வரலாற்றின் பக்கங்களில் விமர்சகர்களாலும் ஆர்வலர்களாலும் ஒரு படைப்பாளி தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார் என்றால் நிச்சயம் அது அபூர்வமான விஷயம்தான். அத்திரைப்படம் 'அவள் அப்படித்தான்' - அந்த இயக்குநர் 'ருத்ரய்யா'. இதுவரை வெளியான அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் வடிகட்டி அதில் கறாராக பத்து சிறந்த சினிமாக்களை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பட்டியலில் என்னுடைய தேர்வாக நிச்சயம் 'அவள் அப்படித்தான்' இடம்பிடித்து விடும். அத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தையும் பின்னணியையும் வைத்து யோசிக்கும் போது அந்த திரைப்படத்தின் குறைகளையும் போதாமைகளையும் கடந்து கூட அதுவொரு மிகச் சிறந்த உருவாக்கம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
1978-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை ஏறத்தாழ என்னுடைய 22 வது வயதில், அதாவது 1992-ல் பார்த்தேன். யாரிடம் இத்திரைப்படத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைவில்லை. எழுத்தாளர் சுஜாதாவாக இருக்கலாம். ஏனெனில் என்னுடைய ரசனை மாற்றத்தின் பல வாசல்களை திறந்து விட்டவர் அவரே. அவருடைய அபுனைவு எழுத்துக்களில்தான் முதன்முறையாக பல சிறந்த எழுத்தாளர்களின், சத்யஜித் ரே உள்ளிட்ட பல அற்புதமான திரைக்கலைஞர்களின் அறிமுகங்கள் என்கேற்பட்டது. சத்யஜித் ரே மரணத் தறுவாயில் இருக்கும் போது ஞானோதயம் வந்த தூர்தர்ஷன் அவருடைய திரைப்படங்களை அப்போது தொடர்ச்சியாக ஒளிபரப்பியது. 'பதேர் பாஞ்சாலி' என்கிற உன்னதத்தின் பின்னணியைப் பற்றி ஏதும் அறியாமலேயே அதை முதன்முறை பார்த்து விட்டு உறைந்து அமர்ந்திருந்த அந்த நள்ளிரவு நினைவுக்கு வருகிறது.
அதைப் போலத்தான் 'அவள் அப்படித்தானும்' பல நாட்கள் இத்திரைப்படத்தை தேடித் தேடி பின்பு நண்பர் ஒருவரிடமிருந்து இரவல் பெற்ற வீடியோவில் பார்க்க முடிந்தது. முதல் கவனிப்பிலேயே இது நிச்சயம் வித்தியாசமானதொரு திரைப்படம் என்கிற எண்ணம் உருவாகி விட்டது. பின்பு சில பல முறைகள் பார்த்த பிறகு, ஏன் சமீபத்தில் பார்த்த பிறகும் கூட இத்திரைப்படத்தின் மீதான ஆச்சரியமும் பிரமிப்பும் குறையவேவில்லை. தமிழ் சினிமாவின் துவக்கந்தொட்டே பெண் கதாபாத்திரங்களுக்கென்று பிரத்யேக தனித்தன்மையோ முக்கியத்துவமோ அளிக்கப்பட்டதில்லை என்பது வெளிப்படை. தன்னுடைய ஆளுமையை தன் திறமைகளினால் தானே உருவாக்கிக் கொண்ட பானுமதி போன்ற விதிவிலக்குகள் இருக்கலாம். என்றாலும் கே.பாலச்சந்தரின் திரைப்படங்களுக்குப் பிறகுதான் சுயஅடையாளமுடைய நடுத்தர வர்க்க பெண் கதாபாத்திரங்கள் திரையில் உருவானார்கள். என்றாலும் அவர்கள் இயல்பு மீறிய நாடகத்தனத்துடனும் மிகையுணர்ச்சியுடனும் இயங்கினார்கள். இந்த வகையில் 'மஞ்சு'தான் பிரத்யேக தனித்தன்மையோடு யதார்த்தமாக உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி எனலாம். ஆண்களின் தொடர்ச்சியான கயமைத்தனங்களால் ஓர் இளம்பெண்ணின் மனதில் படிந்திருந்த புழுதிகளை, அதன் சிடுக்குகளை உளவியல் நோக்கோடும் யதார்த்த அழகியலோடும் ஒரு பெண் கதாபாத்திரம் 'மஞ்சு' விற்கு முன்னாலும் பின்னாலும் உருவாக்கப்படவேயில்லை என்று கூறலாம். அது வரை கவர்சசி பிம்பமாகவே நோக்கப்பட்டிருந்த ஸ்ரீபிரியா எனும் நடிகையை இத்தனை துல்லியமான திறமையுடன் இத்திரைப்படத்திற்கு முன்பும் பின்பும் எவரும் பயன்படுத்தவில்லை என்பதிலிருந்தே கதாபாத்திரங்களை செதுக்குவதில் ருத்ரய்யாவிடமிருந்த நுட்பமான கலையாளுமையை கண்டுகொள்ள முடியும்.
இத்தனை சிறப்பான திரைப்படத்தை தந்திருந்தவர் வேறு எந்த திரைப்படமாவது உருவாக்கியிருக்கிறாரா என தேடிப்பார்த்தேன். 'கிராமத்து அத்தியாயம்' என்று தெரியவந்தது. வழக்கம் போல் இதற்கான பிரதியை தேடியலைந்தேன். எங்கும் கிடைக்கவில்லை. வரலாற்று ஆவணங்களையும், பழைய திரைப்படங்களின் பிரதிகளையும் பாதுகாக்கத்தவறும் நம்முடைய அலட்சியம் குறித்து எத்தனை முறைதான் வேதனையும் பெருமூச்சும் கொள்வது? சில வருடங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் 'கிராமத்து அத்தியாயம்' திரையிடப் போகிறார்கள் என்று அறிந்ததும் மிக்க மகிழ்ச்சியுடன் பார்க்க அமர்ந்தேன். மிக சுமாரான உருவாக்கமாகத்தான் அத்திரைப்படம் அமைந்திருந்தது. அது நாடகக் கலைஞர்களைப் பற்றிய திரைப்படம் என்பதாக நினைவு. பெரிய விரிந்த விழிகளுடன் ராஜாவிற்கான உடைகளை அணிந்திருந்த சந்திரஹாசனின் ஒரு காட்சி மாத்திரமே இப்போது நினைவில் தங்கியிருக்கிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள் மாத்திரம் இன்று இணையத்தில் காணக் கிடைக்கி்ன்றன.
()
'அவள் அப்படித்தான்' திரைப்படம் வெளியானதற்கு முன்னும் பின்னுமான காலக்கட்டத்தை சற்று கவனிக்க வேண்டும். புராண நாடகங்கள் ஓய்ந்ததற்கு பின் மிகையுணர்ச்சி சமூக நாடகங்கள் வெற்றிகரமாக அரங்கேறிக் கொண்டிருந்த சமயத்தில் உலக சினிமாக்களில் ஏற்பட்டதாக்கத்தினாலும் இயல்பாகவும் தமிழ் திரையில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டன. ஒருபுறம் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த மரபு சார்ந்த கர்நாடக இசையையும் மெல்லிசையையும் உடைத்துக் கொண்டு தனது பிரத்யேக நாட்டுப்புற இசை கொண்டு ஆரவாரத்துடன் உள்ளே நுழைகிறார் இளையராஜா (1976). ஜான் ஆப்ரகாமின் 'அக்ரஹாரத்தில் கழுதை' வெளிவந்து அறிவுஜீவி பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்துகிறது (1977). படப்பிடிப்புத் தளங்களிலேயே மூச்சுத் திணறி சிக்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை தனது 'பதினாறு வயதினிலே' மூலம் வெளியே கொண்டு வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்கிறார் பாரதிராஜா. அசலான கிராமத்து மனிதர்கள் திரையில் தோன்றி வட்டார மொழியில் பேசி பார்வையாளர்களுடன் நெருக்கமாகிறார்கள். (1977). ஒருபுறம் பாலுமகேந்திராவும் (அழியாத கோலங்கள் -1979) இன்னொரு புறம் மகேந்திரனும் (உதிரிப்பூக்கள் - 1979) உன்னதமான படைப்புகளை தந்து கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தையும், கேரளத்தையும் போலவே தமிழ் சினிமாவிலும் யதார்த்த திரைப்படங்களின் அலை அடிக்கத் துவங்கின காலகட்டம். இதற்கு இடையில்தான் 'அவள் அப்படித்தான்' வெளியாகிறது (1978). இந்தச் சூழல் அப்படியே கனிந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருந்தால் ஒருவேளை இன்று தமிழ் சினிமாவைப் பார்த்து நாம் இத்தனை எரிச்சல் கொண்டிருக்காததொரு சூழல் மலர்ந்திருக்கலாம். பின்னர் 'முரட்டுக்காளை' 'சகலகலாவல்லவன்' போன்ற வணிக மசாலாக்கள் வெளிவந்து ஆரவாரமான வெற்றியையும் கவனத்தையும் பெற்று இந்தச் சூழலை அப்படியே மூழ்கடிக்கின்றன.
'அவள் அப்படித்தான்' போன்றதொரு அற்புதமான திரைப்படத்தைத் தந்து விட்டு ருத்ரய்யா என்கிற இந்த மனிதர் தமிழ் சினிமா வெளியிலிருந்து ஏன் காணாமற் போனார் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அவரது சமீபத்திய மறைவிற்குப் பின் அவரது நண்பர்களின் மூலம் வெளிவந்த நினைவஞ்சலிக் கட்டுரைகளிலிருந்து அவர் தமிழ் சினிமாவில் பணியாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டும் அதற்காக பல முயற்சிகளை திட்டமிட்டுக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும்தான் இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. ரோமியோ - ஜூலியட் வகை கதையொன்றை வைத்து ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஒரு 'மியூஸிக்கல்' திரைப்படத்தை கொண்டு வருவதான சமீபத்திய கனவு வரை இந்த நிறைவேறாத பயணம் தொடர்ந்திருக்கிறது. அவள் அப்படித்தான் திரைப்படத்திற்கு முன்பே தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' புதினத்தை திரைப்படமாக்குவதற்கான முயற்சிகள் திட்டமிட்டு தி.ஜாவிடம் அனுமதியும் பெறப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்பட்டிருக்கிறது. அதிகம் வெளிப்புறப்படப்பிடிப்புகளையும் அதற்கான செலவுகளையும் கோரும் படைப்பு என்பதால் அது சாத்தியமாகாத சூழலில் எளிமையான திட்டமாக 'அவள் அப்படித்தான்' துவங்கியிருக்கிறது. இதற்கான பின்னணிகளில் கமல்ஹாசன் தனது விலைமதிப்புள்ள நேரத்தையும் ஆர்வத்தையும் ஒத்துழைப்பையும் தந்திருக்கிறார். ஆனால் ஓர் அசலான கலைஞனுக்கேயுரிய நுண்ணுணர்வுத்தன்மையும் சுயமரியாதையும் சமரசமற்ற தன்மையையும் கொண்டிருந்த ருத்ரய்யாவால் வணிகத்தை மாத்திரமே தனது பிரதான நோக்காக கொண்டிருக்கிற தமிழ் சினிமாவின் அபத்தமான சூழலில் ஏன் தொடர்ந்து இயங்க முடியவில்லை என்பதை உத்தேசமாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
()
ஆறுமுகம் என்று அறியப்பட்ட இயக்குநர் ருத்ரய்யா, சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் இயக்குநர் பயிற்சியை முடித்து தங்கப்பதக்கம் பெற்ற சாதனையாளராக 1975-ல் வெளியேறுகிறார். பிரான்சில் உருவான புதிய அலை திரைப்படங்களின் தாக்கம் சென்னையிலும் பரவத் துவங்குகிறது. ஆங்காங்கே சிறிய அளவில் திரைப்படச் சங்கங்களும் திரையிடல்களும் நிகழ்கின்றன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் போன்ற பெயர்கள் அந்நியமின்றி பரிச்சயமாகத் துவங்குகின்றன. இவைகளால் பாதிக்கப்பட்ட அறிவுஜீவி இளைஞர்களில் ஒருவரான ருத்ரய்யா தமிழ் சினிமாவிலும் அவைகளைப் போன்றதொரு பரிசோதனை முயற்சியை நிகழ்த்த வேண்டுமென்கிற ஆர்வத்தைக் கொள்கிறார். இதே போன்றதொரு ஆர்வத்தைக் கொண்டிருந்த கமல்ஹாசனின் அறிமுகம் கிடைக்கிறது. முன்பே குறிப்பிட்டபடி தி.ஜா.வின் புதினத்தை சாத்தியப்படுத்த முடியாதபடி நடைமுறைச் சிக்கல்கள் வந்ததால் எளிய திட்டமாக 'அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கான முயற்சிகள் துவங்குகின்றன. உலக சினிமாக்கள் பற்றி நிறைய அறிமுகங்களும் ஞானமும் கொண்ட, பாலச்சந்தரின் உதவியாளராக இருந்த 'அனந்து' இந்த திட்டத்திற்கு மிகப் பெரிய பக்கபலமாக வந்து சேர்கிறார். (உலக சினிமா ஞானமுள்ள அனந்து இயக்கிய திரைப்படமான 'சிகரம்' ஏன் அத்தனை சுமாராக இருந்தது என்பது எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியமான விஷயம்).
ஒளிப்பதிவாளர்களாக ருத்ரய்யாவின் சக மாணவரான நல்லுசாமியும் ஞானசேகரனும் (பாரதி திரைப்படத்தின் இயக்குநர்) அமைகிறார்கள். இன்னொரு சகமாணவரான சோமசுந்தரேஸ்வரர் (பின்னர் அமரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ்வர்) எழுதிய கதைக்கு ருத்ரய்யா திரைக்கதை எழுதுகிறார். அனந்துவின் பல ஆலோசனைகளும் பங்களிப்பும் மிக பக்கபலமாக இருக்கின்றன. (இத்திரைப்படம் அனந்துவிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது) . அனந்துதான் ரஜினிகாந்த்தை இந்த திரைப்படத்திற்குள் கொண்டு வருகிறார். எனவே ரஜினிக்கான காட்சிகள் விஸ்தரிக்கப்படுகின்றன. இதில் நடிப்பதற்கான சம்பளத்தையும் ரஜினி வாங்க மறுத்திருக்கிறார்.
வசனங்களின் உருவாக்கத்தில் எழுத்தாளர் வண்ணநிலவனும் இணைகிறார். 'மஞ்சு' கதாபாத்திரத்திற்கு முதலில் படாபட் ஜெயலட்சுமியை யோசிக்கிறார்கள். அது சாத்தியப்படாததால் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த (ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆடும் உலகப் புகழ் பெற்றிருந்தது) ஸ்ரீபிரியாவை அழைத்து வருகிறார் கமல்ஹாசன். திரைப்படக்கல்லூரி மாணவர்களின் முயற்சி என்பதால் மிகக் குறைந்த சம்பளத்திற்கு ஒப்புக் கொள்கிறார் ஸ்ரீபிரியா. தன்னுடைய திரைப்பட பயணத்திலேயே மிக மிக முக்கியமானதொரு இடத்தை தரப் போகின்ற படைப்பிது என்பது அவருக்கு அப்போது நிச்சயம் தெரிந்திருக்காது. கண்ணதாசனும் (வாழ்கை ஓடம் செல்ல) கங்கை அமரனும் பாடல்களை எழுதுகிறார்கள். 'பன்னீர் புஷ்பங்களே' பாடலின் சரணங்களை கமல் எழுதியதாக ஒரு தகவலும் உண்டு. இத்திரைப்படத்திற்கு இசையமைக்க அப்போது பிஸியாக இருந்த இளைராஜாவை அழைத்து வருகிறார் கமல். அற்புதமான பாடல்களின் மூலம் இத்திரைப்படம் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் ராஜா என்பதை யாரும் மறுக்க முடியாது. பின்னணி இசைக்காக அவர் பணிபுரிய இயலாத சூழ்நிலையில் இத்திரைப்படத்திற்கான பின்னணி இசையை எல்.வைத்தியநாதன் அமைத்திருக்கிறார்.
கமல்- ரஜினி- ஸ்ரீபிரியா என மூவருமே பிஸியான நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும் சமயங்களில்தான் படப்பிடிப்பு நடக்கிறது. காட்சிகளை கட் செய்து எடுத்தால் அதிக நேரமும் செலவும் ஆகும் என்பதால் பல காட்சிகள் லாங் டேக்கில் கிடைக்கிற வெளிச்சத்தில் பதிவாகின்றன. குறைவான ஆட்களுடன் இயங்கும் குழு என்பதால் சமயங்களில் இயக்குநர் ருத்ரய்யாவே லைட்டிங்கிற்கு உதவியிருக்கிறார். நடிகர்கள் ஒப்பனைகள் ஏதுமில்லாமல் தான் அணிந்திருக்கும் அதே ஆடைகளுடன் நடிக்கிறார்கள். நடிகர்களின் வீடுகள், அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் என்று கிடைத்த இடங்களில் எல்லாம் சாத்தியமானவற்றைக் கொண்டு ஏறத்தாழ நியோ ரியலிச பாணியில் இந்த எளிய திரைப்படம் உருவாகி 30, அக்டோபர் 1978-ல் வெளியாகிறது. வண்ணப்படங்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் இடையில் இந்த கறுப்பு - வெள்ளைத் திரைப்படம். ஒருவேளை இது வண்ணத்தில் வெளியாகியிருந்தால் கூட இத்தனை அழகியலுடன் இருந்திருக்குமா என சந்தேகமே.
அவள் அப்படித்தான் வெளியான சமயத்தில் கமல்- ரஜினி- ஸ்ரீபிரியா என்று இதே கூட்டணியில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் வெற்றிகரமாக ஓடியிருந்த சமயம். அதே மாதிரியான திரைப்படம் என்று நினைத்து ரசிகர்கள் உள்ளே நுழைந்தார்களா என தெரியவில்லை. முதல் நாளிலேயே அவர்களுக்குப் பிடிக்காமல் திரையரங்குகளில் நாற்காலிகளை உடைத்து கலாட்டா செய்ததில் இரண்டு நாட்களிலேயே அரங்குகளில் இருந்து படத்தை தூக்கி விட்டார்கள். படக்குழுவினர் சோர்ந்திருந்த சமயத்தில் அப்போது சென்னை வந்திருந்த மிருணாள் சென், இத்திரைப்படத்தை யதேச்சையாக பார்த்து விட்டு 'இத்தனை சிறப்பாக வெளிவந்துள்ள திரைப்படம் ஏன் இங்கு ஓடவில்லை?' என்று பத்திாிகையாளர் சந்திப்பில் கேட்டிருக்கிறார். பாரதிராஜாவும் இத்திரைப்படத்தைப் பற்றி சிறப்பாக பேட்டியளித்திருக்கிறார். அதன் காரணமாக மறுவெளியீட்டில் இத்திரைப்படம் ஓரளவிற்கு நன்றாக ஓடியுள்ளது.
()
பெண் சுதந்திரம், விடுதலை, அவர்கள் படும் துயரங்கள் (கட் இட்) பற்றி ஆவணப்படமொன்று எடுக்கும் உத்தேசத்துடன் சென்னைக்கு வருகிறவன் அருண். (கமல்ஹாசன்). கலைஞனுக்கேயுரிய மென்மையும் நுண்ணுணர்வும் உள்ளவன். பெண்கள் படும் துயரங்களை உணர்ந்து அவர்களை அனுதாபத்துடன் அணுகுகிறவன்.
தாயின் துர்நடத்தையாலும் அதனால் எழும் குடும்ப சச்சரவுகளாலும் சிறுவயதிலேயே மனக்கசப்புகளை அடைகிறவள் மஞ்சு. (ஸ்ரீபிரியா). தகப்பன் வயதுள்ள தாயின் காதலனால் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறவள். விடலைப்பருவ வயதில் வரும் காதலில் சற்று ஆறுதலை அடைந்தாலும் கோழைத்தனமான காதலனால் அதில் தோற்றுப் போகிறவள். பின்னர் ஆறுதலும் ஆதரவாயும் கிடைக்கிற நண்பனொருவன் தன்னுடைய வாழ்க்கைத் துணையாயும் வருவான் என நினைக்கும் போது அவனும் இவளை உபயோகப்படுத்தி விட்டு 'அவ என் தங்கச்சி மாதிரி' என்கிறான். இப்படி ஆண்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால் ஆண்கள் குறித்த ஒவ்வாமையும் அது தொடர்பான மனச்சிக்கல்களையும் கொண்டவள். என்றாலும் தன்னுடைய கசப்பான அனுபவங்களிலிருந்தே அதை எதிர்கொள்ளும் துணிச்சலையும் பெற்றுக் கொள்கிறாள்.
விளம்பரக் கம்பெனி நடத்தும் தியாகு. அப்பட்டமான ஆணாதிக்கத்தன்மையைக் கொண்டவன். வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் இரண்டு தலைப்புகளில் அடக்கி அபத்தமான தத்துவங்களைப் பொழிகிறவன். 'பெண்கள் ரசிக்கப்படுவதற்கும் ருசிக்கப்படுவதற்கும் மட்டுமே பிறந்தவர்கள்' என்கிற அளவிற்கான பெண் பித்தன். ' You are a prejudiced ass' என்று அருண் இவனை கோபத்துடன் விமர்சிக்கும் போது 'Yes am a male ass' என்று அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் அளவிற்கான கோணலான நேர்மை கொண்டவன்.
இந்த மூன்று வெவ்வேறு குணாதிசயங்களின் முரணியக்கங்களோடு திரைப்படம் இயங்குகிறது. தன்னுடைய விளம்பரக் கம்பெனியில் பணிபுரியும் மஞ்சுவை, அருணுக்கு அறிமுகப்படுத்தி அவனுடைய ஆவணப்பட வேலைகளில் ஒத்தாசையாக இருக்குமாறு மஞ்சுவை கேட்டுக் கொள்கிறான் தியாகு. மென்மையான மேன்மையான குணத்தைக் கொண்ட அருணுக்கு அதன் எதிர்திசையில் கோபமாகவும் துணிச்சலாகவும் இயங்கும் மஞ்சுவை நுட்பமாக கவனிக்கத் தோன்றுகிறது. எதிர் துருவங்கள் இயல்பாகவே ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்படுகின்றன. மஞ்சுவின் சினிக்கலான தன்மைக்கு பின்னணியில் உள்ள காரணங்களை மஞ்சுவிடமிருந்தே அறிந்து கொள்ளுமளவிற்கு அவளுடைய நம்பிக்கையைப் பெறுகிறான். மஞ்சுவும் அருணை நெருங்கி வந்தாலும் தன்னுடைய சுபாவப்படி அவனுடைய ஈகோவை தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருக்கிறாள். மஞ்சுவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அருணுக்கு ஒரு கட்டத்தில் பொறுமையின் எரிபொருள் தீர்ந்து விடுகிறது. தன்னுடைய தந்தையின் உருக்கமான வேண்டுகோளையாவது நிறைவேற்றுவோம் என்று அவர் பார்த்து வைத்திருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக ஊருக்குத் திரும்புகிறான்.
ஆணாதிக்கத் திமிரோடு தன்னை தொடர்ந்து அவமதித்துக் கொண்டேயிருக்கும் தியாகுவை ஒரு கட்டத்தில் அதற்கான பழிவாங்கலை முடித்த மஞ்சு, அருணிடம் தன்னை வெளிப்படுத்த முடிவெடுக்கும் போது காலம் கடந்து விடுகிறது. அருண் தன் புது மனைவியோடும் (சரிதா) தியாகு மற்றும் மஞ்சுவோடும் காரில் பயணிக்கும் காட்சியோடு படம் நிறைகிறது.
()
படத்தின் ஒன்லைனை எழுதிய ராஜேஷ்வர் அப்போது ஆவணப்படம் எடுக்கிறவராக இருக்கிறவராக இருந்ததால் அருணின் பாத்திரமும் அதையே எதிரொலித்திருக்கலாம். ஒவ்வொரு பாத்திரமும் அதற்குரிய தனித்தன்மையோடு மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மென்மையானதொரு ஜென்டில்மேன் பாத்திரம் கமல்ஹாசனுக்கு. அவர் உருவத்திற்கு மிகப் பொருந்தியிருக்கிறது. மஞ்சுவின் உளச்சிக்கலை புரிந்து கொண்டு அனுதாபத்தோடு அணுகும் சமயங்களில் அவளிடம் தோற்றுப் போகும் அவமான உணர்வை மிக நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஊருக்கு திரும்பும் முன்பு மஞ்சுவின் தோழியிடம் மஞ்சுவைப் பற்றி 'அவங்க கூண்டில் அடைபட்ட புலி மாதிரி. வெளியே இருந்து வேடிக்கைதான் பார்க்க முடியும். உள்ளே போய் பார்க்க முடியாது' என்கிற வசனத்தில் "கூண்டில் அடைபட்ட புலி' என்பது மஞ்சுவின் கதாபாத்திரத்தைப் பற்றியதொரு சிறப்பான படிமம்.
கையில் விஸ்கியோடும் வாயில் சிக்கனோடும் நெற்றியில் விபூதிப் பட்டையோடும் 'இங்க பாருடா மாப்ள' என்று பெண்களைப் பற்றிய கீழ்மையான தத்துவங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கும் ஒரு ஆணாதிக்கப் பன்றியின் சித்திரத்தை மிக மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த். ரஜினியை வணிக சினிமாவின் முகமாக மட்டுமே அறிந்திருக்கும் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்கள் இத்திரைப்படத்தில் ரஜினியின் அநாயசமான நடிப்பை நிச்சயம் பார்க்க வேண்டும். ரஜினி என்கிற இயல்பான நடிகன், சூப்பர் ஸ்டார் என்கிற வணிக பிம்பத்திடம் சிக்கி அடைபடாமலிருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சையே ரஜினியின் அற்புதமான நடிப்பு உணர்த்துகிறது.
இத்திரைப்படத்தில் அதிகம் ஸ்கோர் செய்திருப்பவர் சந்தேகமேயின்றி ஸ்ரீபிரியா தான். (இவருடைய இளவயது பாத்திரத்தில் நடித்திருப்பவர் சித்ரா). தன்னுடைய சினிக்கலான தன்மையை வெடுக்கென்று வசனங்களின் மூலமும் முகபாவங்களின் மூலமும் வெளிப்படுத்துவது அருமை. தன்னை நெருங்கி வரும் அருணை ஹிஸ்டீரியா மனநிலையில் கத்தி துரத்துவதும் பின்பு அவனையே கட்டியணைத்து அந்த அரவணைப்பில் அமைதி கொள்கிற ஒரு காட்சிக் கோர்வையில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஸ்ரீபிரியா. ஆண்களின் தொந்தரவுகளை தவிர்க்க தன்னை கோபக்காரியாக சித்தரித்து போட்டுக் கொள்ளும் வேலியே அவளது அடையாளமாக மாறிப் போகும் துயரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
திரைப்படம் என்பது காட்சிகளால் உணர்த்தப்பட வேண்டிய ஊடகம் என்றாலும் கூட இத்திரைப்படத்தின் வசனங்கள் மிக முக்கியமானவை. ருத்ரய்யா, ராஜேஷ்வர், வண்ணநிலவன் என்று மூவருக்குமே இதில் பங்கிருப்பதால் யாருக்கு கிரெடிட் கொடுக்க வேண்டுமென்று கூட தெரியவில்லை. இன்றைய கால திரைப்படத்தில் கூட எழுத தயங்குமளவிற்கான துணிச்சலான, கூர்மையான வசனங்கள். 'அவன் என்னை தங்கச்சி -ன்னு சொல்லாம தேவடியா -ன்னு கூப்பிட்டிருநதா கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன்' - படத்தின் இறுதிக்காட்சி முக்கியமானது. கமலின் புது மனைவியிடம் மஞ்சு கேட்பாள் ' பெண் சுதந்திரம் பற்றி என்னை நினைக்கறீங்க?" அவள் அப்பாவித்தனமாக சிரித்து விட்டு 'அதைப் பற்றி எனக்கொன்னும் தெரியாது" - உடனே மஞ்சு சொல்வாள் "அதனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்க". அறியாமையே பேரின்பம். இந்த ஆணாத்திக்கத்தனமான சூழல் இன்றும் கூட மாறவில்லை. பெண்கள் தங்களின் கூடுகளில் இருந்து வெளியே வந்து பறக்க முயல்வதை, இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட பழமைவாத ஆண் மனங்கள் விரும்புவதில்லை. மஞ்சு மாத்திரமல்ல, சமகால பெண்கள் கூட மீண்டும் மீண்டும் இறந்து கொண்டே மறுபடிமறுபடி பிறந்து கொண்டுதானிருக்கிறார்கள். 'பெண்ணிய சிந்தனை உள்ள ஒருவர் கடைசியில் நடுத்தெருவில் நிற்பார் என்பதுதான் இந்தப் படத்தின் செய்தியா?" என்று இந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு பெண் எழுத்தாளர் கேட்டாராம். ஒரு படைப்பை அதன் எதிர் திசையில் புரிந்து கொளவது என்பது இதுதான்.
படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மையான அண்மைக் கோணங்கள், தவளைப் பாய்ச்சல் உத்திகளும் வசீகரமாக இருக்கின்றன. அப்போதைய காலக்கட்டத்தில் நிச்சயம் இது புதுமையாக இருந்திருக்கும். படத்தின் பின்னணியிசை தேவையான இடங்களில் அளவாய் ஒலித்து காட்சிகள் மெருகேற உதவியிருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான சினிமாவை தமிழில் பார்த்த உணர்வை தருகிறது இத்திரைப்படம். குறைந்த அளவு சாத்தியங்களுடனேயே இத்தனை அற்புதமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், இயக்குநர் கற்பனை செய்த அளவிற்கு சாத்தியப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்தை இன்னமும் பார்க்காதவர்கள் தங்கள் வாழ்வின் உன்னத அனுபவமொன்றை இழந்தவர்கள்' என்றார் சுஜாதா. இந்த வாக்கியங்களை 'அவள் அப்படித்தான்' திரைப்படத்திற்கும் அப்படியே பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.
காட்சிப்பிழை, ஜனவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை
suresh kannan

No comments:
Post a Comment