Tuesday, February 03, 2015

புதிய எக்ஸைல் : புனைவும் புனைவற்றதும்



1. எச்சரிக்கை

இந்தக் கட்டுரையில் பாலுறவு தொடர்பான கொச்சையான வார்த்தைகளும் சம்பவங்களும் என்னையும் மீறி வரக்கூடும். பாசாங்குகளின் மூலம் தங்களை ஒழுக்கவாதிகள் என்று நிரூபிக்க விரும்புவர்கள், ஆபாச வார்த்தைகளைக் கேட்டவுடன் பிடிக்காதது போல் நடித்து முகஞ்சுளிப்பவர்கள் அல்லது இவைகளிலிருந்து உண்மையாகவே விலகி நிற்க வேண்டும் என நினைக்கும்  ஆன்மீகவாதிகள், புண்ணியாத்மாக்கள்  எல்லாம் இந்தக் கட்டுரையை வாசிக்கலாமலிருக்க வேண்டுகிறேன். கோபமெல்லாம் இல்லை. அன்பாகத்தான் சொல்கிறேன். நானும் பொதுவாக வேறு வழியில்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு நிற்கும் வார்த்தைகளைக் கொண்டு எழுதுபவன்தான். ஆனால் பாருங்கள், இப்படி எழுத வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது சாருநிவேதிதா எழுதிய 'புதிய எக்ஸைல்' என்கிற இந்த தன்வரலாற்றுப் புதினம்தான். அது மாத்திரமல்ல.

இந்த 'தமிழ்' என்கிற மின்னிதழை துவங்கியிருக்கும் சரவணகார்த்திகேயன் (வாழ்த்துகள் CSK ) எழுதிய பரத்தைக்கூற்று என்கிற கவிதைத் தொகுதியில் சிலவற்றை வாசித்துப் பார்த்தேன். நான் பொதுவாக கவிதை என்கிற வடிவத்திலிருந்து ஒதுங்கியிருப்பவன். ஆனால் மனிதர் அதில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் மதுமிதா என்கிற விர்ச்சுவல் வடிவ அனாமிகாவை வர்ணித்து வர்ணித்து தினம் தினம் டிவிட்டரில் முயங்கிக் கொண்டிக்கிறாரோ என்று தோன்ற வைக்குமளவிற்கு டிவிட்டிக் கொண்டிருப்பவர் சரவணகார்த்திகேயன். அவருடைய இதழில் சைவமாக எழுதினால் அது கடவுளுக்கே அடுக்காது. சரியா?.

2. தண்டபாணி அண்ணன்.

என்னுடைய சிறுவயதில் நாங்கள் வசித்து வந்திருந்த ஒண்டுக்குடித்தன வீட்டின் முன்பாக நீளமான திண்ணை ஒன்று இருந்தது. இப்போதெல்லாம் யாரு திண்ணை வைத்து வீடு கட்டுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்தால், 'அந்தக் காலத்தில எல்லாம்..' தொனி வந்துவிடுமென்பதால் அதை தவிர்க்கிறேன். அந்த திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்றால் அது மிகையாகாது (இதுவும் பழைய பாணிதான்). அந்த திண்ணையின் சாட்சியுடன்தான் முதல் சிகரெட், (பயங்கர இருமல்) நடிகைகளில் யாருடைய க்ளிவெஜ் பெஸ்ட், சிக்கலான அல்ஜீப்ரா சூத்திரங்கள், என்று.. என்னுடைய நல்லது, கெட்டது சகலத்தையும் கற்றிருக்கிறேன். அந்த திண்ணையில்தான் தண்டபாணி அண்ணனை அடிக்கடி பார்ப்பேன். வீட்டுக்குள் நுழையும் போதும் அல்லது வெளியே வரும் போதும் ஏறக்குறைய அவர் திண்ணையில் அமர்ந்திருப்பார். அவருக்கு வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்திற்குள் இருக்கலாம். ஆனால் உழைத்து முறுக்கேறிய நரம்பான கட்டுமஸ்தான உடம்புடன் ஆள் இருபத்தைந்து போல் இருப்பார். கருப்பான முகத்தில் வெட்டுத் தழும்பு ஒன்றுடன் இருந்தாலும் அவரிடம் ஏதோவொரு விளக்கவொண்ணா கவர்ச்சியும் ஸ்டைலும் இருந்தது. அவர் சிரிக்கும் போது பார்க்க அத்தனை அழகாக இருக்கும். முகமே சிரிப்பது போல. சிலருக்குத்தான் அப்படி அமையும். சிகையலங்காரமும் ஏறக்குறைய ரஜினியுடையதைப் போலவே இருக்கும்.

எப்போதும் அவரைச் சுற்றி ஒரு ஜமா இருக்கும். ஏறக்குறைய அவருடைய வயதை ஒத்தவர்கள்தான். ஆனால் ஒரு பெரியவரும் உண்டு. பெரும்பாலான கிண்டல்களில் அவர்தான் மாட்டிக் கொள்வார். பட்டைச் சாராயத்தின் நாற்றமும் மட்டமான பீடியின் மணமும் எப்போதும் சூழ்ந்திருக்கும். நாங்கள் வசித்து வந்து வீட்டின் உரிமையாளர் அங்கு இருக்கவில்லை. மாதாமானால் வாடகையை மாத்திரம் வந்து வாங்கிப் போய் விடுவார். எல்லோருமே குடித்தனக்காரர்கள் என்பதால் திண்ணையில் நிகழும் இந்தக் களேபரத்தை யாரும் கேட்க துணியவில்லை அல்லது பொருட்படுத்தவில்லை. மேலும் தண்டபாணி அண்ணன் ரவுடி வேறு. எதற்கு வம்பு?

ஆனால் தண்டபாணி அண்ணன் திண்ணையில் அமர்ந்திருப்பதை தவிர பொதுவாக யாருக்கும் எவ்வித தொந்தரவும் தரமாட்டார். வீட்டிலிருந்து பெண்கள் வந்தால் மரியாதையாக ஒதுங்கி அமர்ந்து கொள்வார். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் பாடல்களை உரத்த குரலில் பாடிக் கொண்டிருப்பார். விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு எம்.ஜி.ஆர் என்றாலே அப்போதெல்லாம் தெய்வம் மாதிரி. ஏன் அவர் மறைந்து இத்தனை வருடங்களாகியும் இன்றும் கூட அவருடைய பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் வீட்டின் வெளியே மேடையமைத்து புகைப்படத்தை சிங்காரித்து பெரிய சைஸ் ஸ்பீக்கர்களில் எம்.ஜி,ஆர் படப்பாடல்களை நாள் முழுக்க அலற விடுவார்கள். வடசென்னையில் இன்றும் கூட தெருவிற்கு தெரு இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இதில் அரசியல் சார்புடனும் ஆதாயத்துடனும் இயங்குபவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்றாலும் எம்.ஜி.ஆரை இன்னமும் கடவுளாகவே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். தன்னுடைய ஆளுமையை இத்தனை திறமையாக வளர்த்துக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆரின் மீது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. மார்க்கெட்டிங் குரு என்று இப்போது டையுடன் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஒரு பிராண்டை வெற்றிகரமாக வளர்த்தெடுக்கும் விஷயத்தில் அவரிடம் பிச்சையெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

எம்.ஜி.ஆர் பாடல்களை தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக பாடி முடித்தவுடன் சுற்றியிருக்கும் ஜமா பாராட்டி மகிழ்வார்கள். சில பாடல்களை மீண்டும் பாடச் சொல்வார்கள். அவரும் சலிக்காமல் அல்லது மறுக்காமல் அதே உற்சாகத்துடன் மீண்டும் பாடுவார். எப்பவாவது சிவாஜி (தொப்பையோட பாட்டு ஒண்ணு எடுத்து விடு... தண்டம்...) பாடல்களும் இடையில் வரும். சமயங்களில் பீடிக்குப் பதிலாக கஞ்சா புகையும் காட்டமாக காற்றில் நிறைந்து விடும். இரண்டிற்கும் வித்தியாசத்தை கண்டுபிடிக்கும் திறமையெல்லாம் அப்போதே எனக்கு வந்திருந்தது. தண்டபாணி அண்ணன் சோற்றுக்கு என்ன செய்கிறார், என்ன வேலை செய்கிறார், அவருடைய வீடு எங்கிருக்கிறது என்பதெல்லாம் எனக்கு தெரியாது. பகல் முழுக்க ஏறக்குறைய அந்தத் திண்ணையில்தான் இருப்பார். அவர் இல்லாத சமயங்களில் திண்ணை வெறிச்சோடி ஒரு வித சோகத்தை ஏற்படுத்தும். அல்லது அப்படியாக நான் நினைத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட தண்டபாணி அண்ணன்தான் ஒரு நாள் அதே திண்ணையின் முன்பாக வெட்டிக் கொல்லப்பட்டார். நினைவு தெரிந்து அன்றுதான் மனதிற்குள் அழுதேன். அதைப் பிறகு சொல்கிறேன்.

பாடல்கள் பாடுவது தவிர தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக கதை சொல்வதிலும் விற்பன்னர். கதை என்றால் சினிமாக்கதைகளோ அல்லது 'ஒரு ஊர்ல..' என்பது மாதிரியான கதைகள் அல்ல. தன்னுடைய வாழ்விலேயே நிகழ்ந்ததாக விவரிக்கும்  காஸனோவா கதைகள். பொதுவாக அந்த ஊரில் உள்ள இளவயது (சமயங்களில் நடுவயதும்) பெண்களில் யார் யாரையெல்லாம் எப்படி மேட்டர் செய்தார், அதற்கு எப்படியெல்லாம் சம்மதிக்க வைத்தார், எப்படியெல்லாம் செய்தார் என்பதை கொச்சையான வார்த்தைகளுடன் விவரிப்பார். பிட்டு படம் பார்த்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் அமைதியுடன் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஜமா, அவர் சொல்லி முடித்தவுடன் கேலியாக அவரைக் கலாய்க்க ஆரம்பித்து விடும். அவரும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் '...த்தா.. பாடுகளா....உங்களுக்கெல்லாம் பொறாமைடா" என்று சிரித்து விட்டு இன்னொரு கதையை சொல்ல ஆரம்பித்து விடுவார்.

தண்டபாணி அண்ணனுக்கும் எனக்குமான உரையாடல்கள் அமைந்தது மிக சொற்பமே. பெரிதும் தூரத்திலிருந்துதான் அவரைக் கவனிப்பேன். சிறுவர்களுக்கு எப்போதுமே எப்போது பெரியவர்கள் உலகத்திற்கு போய் அவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் செய்ய வேண்டும் என மனம் அரித்துக் கொண்டேயிருக்கும் அல்லவா? அந்த வகையில் எனக்கு பிடித்த ஆளுமையாக தண்டபாணி அண்ணன் இருந்தார். அவர் விவகாரமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் போது திண்ணையின் விளிம்பில் அமர்ந்து ரகசியமாக ஆனால் கவனமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அவர் ஒருமுறை என்னைக் கவனித்து விட்டு "---------- (ஒரு மோசமான கெட்ட வார்த்தை) என்னடா இங்க பாாக்கறே?" என்றார். ஆனால் அந்த வசையால் எனக்கு கோபமே வரவில்லை. ஏனெனில் அவர் அப்படி கேட்டதே ஏதோ ஒரு குழந்தைகயைக் கொஞ்சுவது போல்தான் இருந்தது. ஏன் அவர் முகம்கூட வழக்கம் போல் சிரித்தவாறுதான் இருந்தது. "இல்லண்ணா.. சும்மாதான்.' என்று இழுத்தேன். என் முகத்தில் அப்போது 'படிக்கற பையன்' களை இருந்தது. எனவே என்னிடம் அவர் கொச்சையான வார்த்தைகளை இறைத்து ரொம்பவும் கலாட்டாவெல்லாம் செய்ய மாட்டார். கூட இருப்பவர்களும் அப்படியே. மற்ற பையன்கள் என்றால் கூப்பிட்டு வேண்டுமென்றே அடித்து அனுப்புவார்கள். அப்படியாக தண்டபாணி அண்ணன் கூறிய கதைகளில் ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. அதற்கு முன் இன்னொரு சம்பவத்தைக் கூறி விட வேண்டும்.

3, மூத்திர சப்த பெண்மணி

திண்ணைதான் என்னுடைய போதிமரம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? ஒரு நடுத்தர வயது பெண்ணை அவர் பிரக்ஞையில்லாமல் அந்த திண்ணையில் படுத்திருக்கும் போது ஆசை தீர தடவிய சம்பவம் அது. இப்போது நினைத்தாலும் குற்றவுணர்வும் வெட்கமுமாகத்தான் இருக்கிறது. என்றாலும் அந்த வயதுக்குரிய பாலியல் தினவுடன் செய்த காரியம் அது. தண்டபாணி அண்ணன் பகல் நேரங்களில் திண்ணையில் புழங்குவதைப் போல இரவு நேரங்களில் இந்த பெண்மணி படுத்திருப்பார். சரத்குமாரை விட அகலமாக இருக்கிற இப்போதைய நமீதா அளவில் ஆஜானுபாகுவாக இருப்பார். ஆனால் ஆள் பார்க்க அத்தனை அழகின்றி அவலட்சணமாகத்தான் இருப்பார். காலை நேரத்தில் சிறுவர்களாகிய நாங்கள் தூக்கக் கலக்கத்துடன் வெளியே வரும் போது ஒரு காட்சியைப் பார்க்க நேரிடும். திண்ணையில் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி எழுந்து எதிரேயிருக்கும் காவாயில் சேலையை ஏறக்குறைய தொடை வரை தூக்கிக் கொண்டு நின்றவாக்கிலேயே சளசளவென்ற சப்தத்துடன் மூத்திரம் போவார். அப்போது தெருவில்  நடமாடும் எவரைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். நாங்கள் ஒருவித கிளர்ச்சியுடன் இந்தக் காட்சியை மறைமுகமாக பார்த்து ரசித்துக் கொண்டிருப்போம். சமயங்களில் நான் கரமைதுனம் செய்தவற்கு இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்துக் கொள்வதுண்டு. ஆனால் முடித்தபிறகு ஐயோ...இந்த பெண்மணியையா நினைத்துக் கொண்டோம் என்று அருவருப்பாக கூட இருக்கும். மனது இயங்கும் விசித்திரமான நுட்பங்களில் ஒன்று இது. ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலில் கோயில் குருக்கள், போத்தியிடம் தன்னுடைய ஆசையை சொல்லும் சம்பவம் நினைவுக்கு வருகிறது. உருப்படிகளை பெற்றுப் போடுவதற்கென்றெ வளர்க்கப்படும் மிக அவலட்சமான, விநோதமானதொரு விலங்கு போல இருக்கும் முத்தம்மையுடன் ஒரு நாளாவது படுக்க வேண்டும் என்கிற குருக்களின் நீண்ட கால ஆசையைக் கேட்டு போத்தி திகைத்துப் போய் விடுவார்.

4. பரமசிவ முதலியார்

ஒரு நாள் நண்பர்களுடன் மலையாளப்படம் ஒன்று பார்க்க சென்றிருந்தேன். தம்புராட்டி என்கிற பிரமிளா நடித்த திரைப்படம். தமிழகத்தைப் பொறுத்தவரை மலையாளப்படம் என்றாலே அது மூன்றாந்தர பிட்டுப்படம்தான். சென்னையின் மிகப்பழமையான தியேட்டர் அது. தமிழ்நாட்டின் முதல் டாக்கிஸூம் கூட. கினிமா சென்ட்ரல் என்ற அந்த அரங்கில்தான் இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா திரையிடப்பட்டது. போலவே தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸூம்'. சினிமாவில் ஆர்வமுடைய முருகேச முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. அவரது மறைவிற்குப் பின் அவரது மகனான பரமசிவ முதலியார் நிர்வாகத்தை மேற்கொண்டார். தியேட்டரின் பெயரையும் 'முருகன் டாக்கீஸ்' என மாற்றினார். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான இவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களாக திரையிட்டார். ஏறக்குறைய அனைத்துமே நூறு நாட்களுக்கும் மேல் ஓடியது. அரங்கம் முழுவதிலும்  பரமசிவ முதலியார் தமிழக நடிக, நடிகையர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும். படம் ஆரம்பிக்கும் வரை அவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பார்வையாளர்களின் வழக்கம். (மஞ்சுளாவோட முலையைப் பாருடா.) பெரும்பாலும் அவைகளில் எம்.ஜி.ஆர்தான் இருப்பார். ஆனால் எம்.ஜி.ஆர் முதல்வரான பின் அவரது படங்களின் மறுவெளியீடுகளும் ஓய்ந்து போய் தியேட்டர் நொடிந்து போன நிலையில் மலையாளப் படங்களாக போட ஆரம்பித்தார் முதலியார்.

பெரும்பாலும் பிரமீளா.. தீபா போன்றவர்கள் நடித்த மசாலாப் படங்கள். இடையில் மூன்று நிமிடம் ஏதாவது பிட்டு படம் ஓடும். அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த கூட்டம்  இந்தக் காட்சிகளை வாய் பிளந்து பார்த்து முடிந்ததும் பரபரவென வெளியேறி விடும். இத்தனைக்கும் அதில் உடலுறுவுக் காட்சிகள் கூட காட்டப்படாது. மாமிச மலை மாதிரியிருக்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி தொங்கியிருக்கும் மார்பகங்கள் குலுங்க..உடம்பை செயற்கையாக தேய்த்து தேய்த்து குளிக்கும் காட்சிகள் மட்டும்தான். சமயங்களில் முகம் கூட தெரியாது. இடுப்பிற்கு கீழ் கேமிரா நகரும் போது சட்டென்று வெட்டப்பட்டு அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரிஜினல் திரைப்படம் காட்டப்படும். சில மலையாளத்திரைப்படங்களில் இவ்வாறு தனியாக இணைக்கப்பட தேவையின்றி ஒரிஜினல்களிலேயே இது போன்ற  காட்சிகள் இருக்கும்.  கொலைவெறியுடன் இந்தக் காட்சிகளுக்காக பொறுமையாக காத்திருக்கும் கூட்டம் ஒருவேளை இந்த பிட்டு சீன்கள் ஒளிபரப்பாவிட்டால் வெறுப்படைந்து சேர்களை போட்டு டம்டம் என்று அடித்து உடைத்து விட்டு எரிச்சலுடன் வெளியேறுவார்கள். இந்த பிட்டு சீன்கள் விஷயத்தில் ஒரு சங்கேத முறையும் இருந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். அதாவது பரமசிவ முதலியார் திரையரங்கத்தின் வாசலில் சேர் போட்டு அமர்ந்திருந்தால் நிச்சயம் அன்று பிட்டு சீன்கள் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. காவல்துறையினர் வந்தால் அவர் சமாளித்துக் கொள்வார் போல.  எனவே அவர் இருந்தால் எங்களுக்கு கொண்டாட்டமாகி மகிழ்வுடன் டிக்கெட் எடுப்போம்.

(இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் ஆபாச வார்த்தைகளை, சம்பவங்களை வாசிக்க விரும்பாத நண்பர்களை விலகச் சொல்லியிருந்தேன். அதுவொரு காரணத்திற்காகத்தான். அதனால்தான் இதில் 'என்னமோ மேட்டர் இருக்கிறது போல' என்று நீங்கள் இந்த இடம் வரை வந்திருக்கிறீர்கள். நல்லது. வாருங்கள் தொடர்வோம்.)

5. திண்ணையில் ஒரு சல்லாபம்

படம் பார்க்கப் போயிருந்தேன் அல்லவா? அன்றைய நாள் சோதனை நாளாக அமைந்து பிட்டு சீன்கள் எதுவும் காணாமல் அந்த திரைப்படத்தை பரிந்துரைத்த நண்பனை திட்டி விட்டு வெறுப்புடன் வீடு திரும்பினேன். இரவு மணி 12 -க்கு மேல் இருக்கலாம். பத்து மணியானவுடன் வீட்டின் பிரதான கதவு அடைக்கப்படும். ஒரு நல்ல ஆசாரியால் செதுக்கப்பட்டு நல்ல வளைவு வேலைகளுடன் உருவான மரக்கதவு அது. வெளியில் உள்ள கைப்பிடியை பலமாக தட்டினால் யாராவது எரிச்சலுடன் எழுந்து வந்து கதவைத் திறப்பார்கள். சிலர் திட்டுவதும் உண்டு. இரும்பு கைப்பிடியை பலமாகத் தட்டியும் எவரும் திறக்காததால் என்ன செய்வது என்கிற யோசனையுடன் திண்ணையில் அமர்ந்தேன். அப்போதுதான் திண்ணையின் மூலையிருட்டில் குறட்டைவிட்டு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த, தெருவில் மூத்திரம் போகும் அந்த பெண்மணியைப் பார்த்தேன். எந்தச் சொரணையுமின்றி குடித்து விட்டு தூங்குகிறார் என்று நன்றாகத் தெரிந்தது. குறுகுறுப்புடன் சுற்றியும் பார்த்தேன். ஒரு ஈ காக்கா இல்லை. நழுவிச் சென்று அந்த பெண்மணியின் அருகில்  பார்த்தேன். சேலை ஏறக்குறைய முழங்காலுக்கு மேல் ஏறி தென்னை மரம் போலிருந்த கால்கள் விரிந்து கிடந்தன. ஏதோ அழைப்பிற்கான சங்கேதம் போலவே இருந்தது. பயந்து கொண்டே கால்களின் மீது கை வைத்துப் பார்த்தேன். சொர சொரவென்று பாறாங்கல்லின் மீது கை வைத்தது போலவே இருந்தது. பயமாகவும் இருந்தது. ஆர்வமாகவும் இருந்தது. மறுபடியும் சுற்றி பார்த்து விட்டு தொடைகளில் முன்னேறினேன். கொச கொசவென்று கையில் பட்டது பணியாரம்தான் என்று நினைக்கிறேன். படுத்திருந்த உடலில் இருந்து அசைவு வரவே சட்டென்று ஒதுங்கினேன். சிறிது நேரம் கழித்து மறுபடியும் பணியாரத்தை தடவினேன். அசைவு ஏதும் இல்லாததால் இன்னும் தைரியம் பெற்று முலைகளை அமுக்கி பிடித்தேன். இருந்த வெறியில் அப்படியே மேலே ஏறி படுத்து மேட்டர் செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த பெண்மணி கண்விழித்து ஊரைக் கூட்டினால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது. அவர் ஊரைக் கூட கூட்ட வேண்டியதில்லை, பூஞ்சை மாதிரியிருந்த என்னை ஒற்றைக் கையால்  பிடித்து அறைந்தால் கூட எனக்கு காது செவிடாகும் போல. அத்தனை ஆஜானுபாகுவான பெண்மணி. எனவே என் திருவிளையாடலை அத்துடன் நிறுத்தி விட்டு அருகிலிருந்த பூங்கா ஒன்றிற்கு சென்று படுத்துக் கொண்டேன். இன்னொன்று, ஒருவேளை போதையிலேயே அந்தப் பெண்மணி என்னை அனுமதித்திருந்தால் கூட எப்படி கச்சிதமான போஸில் மேட்டர் செய்வது என்று தெரிந்திருக்காது. திணறியிருப்பேன். இன்னொரு சமயத்தில்தான் இந்த உண்மையை நான் புரிந்து கொண்டேன்.

6. பீ சந்தில் ஓர் உடலுறவு

தண்டபாணி அண்ணன் சொன்ன விவகார கதைகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கதை என்னவென்று பார்ப்போம்.

சேரி அமைந்திருந்த பெரும்பாலான வீடுகளில் (குடிசைகள்) கழிவறை வசதி இருக்காது. குளிப்பது முதற்கொண்டு எதுவாக இருந்தாலும் மறைவாக தெருக்களில்தான் முடித்துக் கொள்ள வேண்டும். எனவே வெளிச்சம் வருவதற்கு முன்பு பெண்கள் மல,ஜல விஷயங்களை முடித்துக் கொள்வார்கள். நீர் வரும் பம்பு வேறு எங்களுடைய வீட்டிற்கு எதிரேயே இருந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக ஏற்படும் சண்டைகளில் இறைபடும் வசவுகள் இருக்கிறதே..சமயங்களில் காது கொடுத்து கேட்க முடியாது. பெண்கள் கூட தங்களுக்கு ஆணுறுப்பு இருப்பதான பாவனையில் பரஸ்பரம் திட்டிக் கொள்வார்கள். நாங்கள் கிளுகிளுப்பாக அந்த வசைகளை கேட்டு அனுபவிப்போம். இப்படியாக அதிகாலையில் குளித்துக் கொண்டிருந்த பெண்களை எங்கள் வீட்டிலிருந்த கிழவர் ஒருவர் மறைந்திருந்து சன்னல் வழியாக தினமும் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டுபிடித்து விட்டு அந்தப் பெண்கள் சண்டைக்கு வந்தார்கள். வேடிக்கை பார்த்த பெரிசு சும்மா பார்க்காமல் சுருட்டு ஒன்றை புகைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தது போல. இருட்டில் ஒளிர்ந்த இந்த வெளிச்சப்புள்ளியை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இருட்டில் சரி, பகல் வேளையில் மல, ஜலத்திற்கு என்ன செய்வார்கள்? அதற்காகவே இயற்கையாய் அமைந்தது பீ சந்து. சிறியதாய் அமைந்திருந்த சந்தில் எந்தவொரு வீட்டின் நுழைவு வழியும் இருக்காது. எனவே மலம் கழிக்கிறவர்களுக்கு இந்த சந்து வசதியாய் போயிற்று. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு போல விதவிதமான நிறங்களில் கூடிய மலங்கள் இரண்டு பக்கங்களிலும் நிறைந்திருக்கும். எனவே இந்தச் சந்திற்கு பீ சந்து என்று பெயர் வந்திருக்க வேண்டும். பொதுவாக யாரும் இந்த வழியைப் பயன்படுத்த மாட்டார்கள். அப்படியே அவசரத்திற்கு (இது வேறு அவசரம்) யாராவது போனால் குத்த வைத்து அமர்ந்திருக்கும் பெண்கள் சலித்துக் கொண்டே சற்று நேரம் எழுந்து நின்று கொள்வார்கள். இது குறித்து வசவு கூட ஒன்று உண்டு. 'உன் மூஞ்சைப் பார்த்தா பேல்றவ கூட எழுந்திருக்க மாட்டா' என்பது அது. ஒரு ஆள் மொக்கையாக இருந்தால் 'இவனுக்குப் போய் எழுந்திருக்க வேண்டுமா?' என்று மலம் கழிக்கிற பெண்கள் கூட எழுந்து கொள்ளாமல் அப்படியே அமர்ந்திருப்பார்கள் என்பது இதன் உட்பொருள். இப்படி மலம் கழிக்கிற பெண்களைக் கூட ஒளிந்திருந்து வேடிக்கை பார்க்கிறவர்களும் உண்டு.

இப்படியான பீசந்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொண்ட கதையைத்தான் தண்டபாணி அண்ணன் சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெண் தண்டபாணியின் உறவு போல. எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்து அழைத்து வந்து விட்டார். ஆனால் ஆள் மறைவான தோதுவான இடம் எதுவும் தென்படவில்லை. எனவே அருகிலிருந்த பீ சந்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாலை முடிந்து இருட்டத்துவங்கியிருக்கும் அந்த நேரத்தில் எவரும் அங்கு மலம் கழிக்க வந்திருக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஒரே அருவருப்பு. பின்னே.. சுற்றியும் மலம் நிறைந்திருக்கும் ஒரு இடத்திலா உறவு கொள்ள முடியும்,? இருந்தாலும் தண்டபாணி அண்ணன் எப்படியோ நைச்சியமாக பேசி எங்கெங்கோ முத்தமிட்டு அந்தப் பெண்ணை சுவற்றில் சாய்த்து பாவாடையோடு சேலையைத் தூக்கி மேட்டர் செய்ய முயன்றிருக்கிறார். இந்த சிக்கலான போஸில் பெண்ணுடைய முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் உறவு கொள்ள முடியாது. நல்ல வசதியான கோணத்தில் நின்றால்தான் செய்ய முடியும். இதையும் நான் பின்னர் ஒரு சமயத்தில்தான் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டேன். ஆங்கில நீலப்படங்களில் எல்லாம் எத்தனையோ வசதியான இடமிருந்தாலும் ஏன் இப்படி சிக்கலான இடங்களில் சிக்கலான கோணங்களில் சிரமப்பட்டு உறவு கொள்கிறார்கள் (காலில் செருப்பு மாத்திரம் இருக்கும் - ஏன்?) என்று ஆச்சரியமாக இருக்கும். அந்தப் பெண்ணும் உணாச்சி மிகுதியில் தண்டபாணி அண்ணனுக்கு ஒத்துழைப்பு கொண்டிருந்த போதுதான் அந்த இடையூறு நிகழ்ந்தது.

மலம் கழிப்பதற்காகவோ அல்லது வேறு அவசரத்திற்காகவோ ஒரு பெண்மணி அந்த வழியாக வந்திருக்கிறார். தண்டபாணி அண்ணன் கண்களை மூடி இயங்கிக் கொண்டிருந்தார். ஒத்துழைத்துக் கொண்டிருந்த பெண்ணும் அதே பரவச நிலையில் இருந்தாலும் யாராவது வருகிறார்களா என்றும் கவனித்துக் கொண்டிருந்தது போல. பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வு மிக அதிகம். வருகிற இந்தப் பெண்மணியை பார்த்து விட்டது. உடனே தண்டபாணி அண்ணனை தள்ள முயன்றிருக்கிறது. ஆனால் அவரோ அதை பொருட்படுத்தாமல் தன் காரியத்திலேயே கண்ணாக இருந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெண் இவரை வலுவாக தள்ளி விட்டு ஓடிவிட்டது. நீட்டிக் கொண்டிருக்கும் குறியுடன் இவர் கழுதை மாதிரி நின்று கொண்டிருந்தாராம். தண்டபாணி அண்ணன் இதைச்  சொல்லி முடித்ததும் சுற்றியிருந்த ஜமா வழக்கம் போல அவரை வெறுப்பேற்றுவது போல் சிரித்து தள்ளியது. ஆனால் கதை அத்தோடு முடியவில்லையாம். பீ சந்தில் ஒரு பெண்மணி கடந்து சென்றார் அல்லவா? நீட்டிக் கொண்டிருந்த இவரது குறியைப் பார்தத மயக்கத்திலோ என்னவோ, போனவர் திரும்பி வந்து தண்டபாணி அண்ணன் அருகில் நின்றாராம். அப்புறம் என்ன, பாதியில் நின்று போன வேலையை அந்தப் பெண்ணோடு உற்சாமாக செய்து முடித்தாராம். இப்போது உரக்க சிரித்தது தண்டபாணி அண்ணனின் முறையாக இருந்தது. சுற்றியிருந்தவர்களின் சிரிப்பில் சுருதி சற்று இறங்கி இருந்தது.

இந்தக் கதைகளையெல்லாம் உண்மையில் நீங்களெல்லாம் தண்டபாணி அண்ணன் வாயால் சொல்லித்தான் கேட்க வேண்டும். கொச்சையான, ஆபாசமான வார்த்தைகளுடன் அத்தனை சுவாரசியமாக இருக்கும். இப்போதெல்லாம் போன் செக்ஸ் என்றலெ்லாம் சொல்கிறார்கள் அல்லவா? அது கூட இந்த சுவாரசியத்திற்கு முன்பு தோற்றுப் போய் விடும். என் எழுத்தில் கூட அந்த சுவாரசியத்தின் ஒருபகுதி  குறைந்து விடுகிறது. இந்தக் கதைகளில் எத்தனை சதவீதம் உண்மை என்பதெல்லாம் தெரியாது. கேட்கும் அனைவருக்குமே இந்த சந்தேகம் வந்திருக்கலாம். என்றாலும் கதை கேட்கும் சமயத்தில் நமக்கு இந்த தர்க்கமெல்லாம் தோன்றவே தோன்றாது. அத்தனை சுவாரசியமாக இருக்கும். தண்டபாணி அண்ணன் ஊர்த்தலைவரின் பெண்ணொருவரை காதலித்திருக்கிறார். பீ சந்து சம்பவம் மாதிரியல்லாமல் உண்மையான காதல். இது அரசல் புரசலாக எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் நாலைந்து ரவுடிகள் சேர்ந்து திண்ணையில் அமாந்திருந்தவரை இழுத்து பட்டாக்கத்தியால் கண்டம் கண்டமாக வெட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ளவர்கள் எவரும் பயத்தில் தடுக்கவில்லை. நான் பள்ளி முடிந்து மாலையில் வந்து போதுதான் இந்த கலாட்டாவே தெரிந்தது. ரொம்பவும் திகைப்பாக இருந்தது. ஆனால் பத்திரிகைகளில் இது பற்றிய செய்தி வரும் போது இந்த காதல் சமாச்சாரமெல்லாம் வரவேயில்லை. ஏதோ சில்லறைத் தகராறில் உணர்ச்சிவசப்பட்டு இந்தக் கொலை நடந்ததாக பதிவாகி இருந்தது. தங்களின்செல்வாக்கை உபயோகித்து மறைத்து விட்டார்கள்.

தண்டபாணி அண்ணன் திண்ணையில் ஒரு நாள் தனியாக அமர்ந்திருந்த போது என்னை அழைத்தார். கஞ்சா மயக்கத்தில் கண்கள் சொருகியிருந்தன. நான் என்ன படிக்கிறேன் என்பதையெல்லாம் விசாரித்து விட்டு 'நல்லாப் படிக்கணும்டா. அதுதான் உன்னை கடைசி வரைக்கும் காப்பாத்தும்" என்ற மாதிரி ஏதோ சொன்னார். அவர் மனதில் அப்போது என்ன இருந்தது என்பதை உணராமல் நான் திகைத்து நின்ற சமயம் அது. அப்போது வேறு மாதிரியான நபராக தெரிந்தார். நீண்ட காலத்திற்கு அந்த உரையாடலை நினைவில் வைத்திருந்தேன். என்னை நான் உருவாக்கியதில் தண்டபாணி அண்ணனின் ஆளுமையும் ஒருபகுதியாக கலந்திருந்தது என்பதை பிற்பாடு உணர்ந்து கொண்டேன். எத்தனை துயரங்கள் இடையூறு செய்தால் சிறு சிறு மகிழ்ச்சிகளின் மூலம் - அவை நிலையற்ற பொய்யானதாக இருந்தாலும் -  வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக ஆக்கிக் கொள்ள முடியும் என்பதை தண்டபாணியின் செயல்கள் சொல்லாமல் சொல்லிச் சென்றன.


ஆட்டோ பிக்ஷன் என்கிற அற்புதமும் அபத்தமும்

மேற்கண்ட பகுதிகளை வாசித்து விட்டீர்கள் அல்லவா? இதில் எத்தனை சதவீதம் உண்மை அல்லது பொய் என்று உங்களால் சொல்ல முடியுமா? தண்டபாணி அண்ணன் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தார் என்று கருதுகிறீர்களா அல்லது எழுதியவரின் கற்பனையா? இதில் நான்.. நான்.. என்று எழுதியிருப்பதை இந்தக் கட்டுரையை எழுதியிருப்பவராக கருதிக் கொண்டீர்களா அல்லது அதையும் புனைவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டீர்களா?

இப்போது உருவாகி வரும் புனைவுகளில், புனைவுக்கும் அபுனைவுக்குமான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. ஏறக்குறைய அருகி விட்டது என்று கூட சொல்லலாம். முன்பெல்லாம் ஒரு சிறுகதை என்றால் சுவாரசியமான துவக்கம், அதை வளர்த்தெடுக்கும் நடுப்பகுதி, சுவாரசியத்தை நோக்கி விரையும் இறுதிப்பகுதி, கடைசி வாக்கியத்தின் முற்றுப் புள்ளிக்கு முன்னால் ஓர் அதிர்ச்சிகரமான திருப்பம் என்றொரு வடிவம் இருந்ததல்லவா? அந்த வடிவமெல்லாம் இப்போது காலாவதியாகி விட்டது. உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான சம்பவத்தை தன்வரலாற்று தொனியிலேயே எழுதி முடிக்கலாம். ஆனால் அது புனைவின் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அதிலுள்ள சவால்.

Auto Fiction என்கிற புனைவிலக்கிய வகைமை, கலைகளைக் கொண்டாடுகிற ஆராதிக்கிற பிரான்சு தேசத்தில் தோன்றியது. செர்ஜ் துப்ரோவ்ஸ்கி எழுதிய Flis என்கிற நாவலே இதன் துவக்கம்.  இதன் அடையாளங்களாக நான் அவதானித்தவைகள்: தன்வரலாற்றையும் புனைவையும் ஒரு சரியான கலவையில் உருவாக்க வேண்டும். தன்னையே மூன்றாம் நபராக சித்தரிக்க வேண்டும்  நிஜத்திற்கும் புனைவிற்குமான சம்பவங்களையும் தகவல்களையும் முரண்களையும் மாற்றி மாற்றி கலைத்துப் போட வேண்டும். இதுவொரு சுவாரசியமான புனைவு விளையாட்டு. எது புனைவு எது நிஜம் என்கிற மயக்கத்தை வாசகனுக்கு ஏற்படுத்துவது. ஆனால் இந்த தொகுப்பின் வடிவம் உதிரி உதிரியாக அமைந்திருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மையச்சரடோடு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


புதிய எக்ஸைல் - இப்போது புத்தம் புது பாக்கிங்கில் கிடைக்கிறது.

நாவல் மீதான விமர்சனம் -1 

சாரு நிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' நாவலை அது வெளியான  புதிதிலேயே  வாசித்திருக்கிறேன். 'தமிழின் நவீன இலக்கியத்தின் புதிய போக்குகளில் புது வெள்ளம் போன்று பல படைப்புகள் வந்தாலும் பழுப்பான நிறங்களில் சில வஸ்துகள் அதில் மிதந்து செல்கின்றன' என்று இந்த நாவலை கணையாழியின் கடைசிப் பக்கங்களில் முகச்சுளிப்புடன் அறிமுகப்படுத்தியிருந்தார் சுஜாதா. உடனே இதன் மீது ஆர்வம் கொண்டு வாசித்துப் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் எழுத்தில் புழங்கி வந்த அதுவரையான பாசாங்குகளை அதிரடியாக விலக்கி பயணித்திருந்தது இந்த நாவல். பாலுறவும் அது சார்ந்த எண்ணங்களும் விகாரங்களும் செயல்களும் அசூயையுடன் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியதில்லை. அவையும் நம்மின் ஒரு பகுதிதான். அவைகளை ஒதுக்கி வைப்பதென்பது நம்மையே நாம் நாடகத்தனத்துடன் ஒதுக்கி வைப்பதற்கு சமமானது. காமம் என்பது மறைத்து ஒளித்து வைக்கப்பட வேண்டியது ஒன்றல்ல, மாறாக அது கொண்டாடப்பட வேண்டியது என்பதையே சாருவின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தன. தன்வரலாற்று நினைவுகளுடன் எழுதப்பட்டிருந்த அந்த நாவல் மிக யோக்கியமான அப்பட்டமான தன்மையைக் கொண்டிருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு சாருவால் எழுதப்படும் நாவல்களில் (பழைய எக்ஸைல் உட்பட நான் சிலவற்றை வாசித்ததில்லை) மீண்டும் மீண்டும் இந்த நினைவுகளே வேறு வேறு வார்த்தைகளில் மீள்கூறல் தன்மையைக் கொண்டிருக்கிறதோ என்றெழும் எண்ணத்தை 'புதிய எக்ஸைல்' மிக வலுவாக உறுதிப்படுத்தியிருக்கிறது. சாருவின் முந்தைய நாவல்களையும் அவரது இணையத் தள பதிவுகளையும் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு இந்த நாவலில் சில இடங்களில் சலிப்பு வரலாம். முந்தைய நாவல்களிலும் இணையத்ளத்தில் விவரித்த சம்பவங்களையும் சர்ச்சைகளையும் அனுபவங்களையும் சில சித்தர் பாடல்களையும் புராணக்கதைகளையும் சில மளிகை சாமான் பட்டியல்களையும் தூவி இறக்க வைத்து விட்ட பண்டம் போலிருக்கிறது புதிய எக்ஸைல். பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் விற்பனைப் பொருட்களை வேறு வேறு கவாச்சியான வண்ணங்களில் பாக்கிங்குகளில் பல்வேறு விளம்பரங்களின் மூலம் விற்கும் வணிகத் தந்திரத்தையே இந்த நாவலும் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. சாருவால் தன்னுடைய சுயஅனுபவங்களில் இருந்து முற்றிலுமாக விலகி கூடு பாய்ந்து இன்னொரு வேறுவிதமான உலகத்தை, எழுத்தை உருவாக்கும் நாவலாசிரியராக மேலெழ முடியாது என்பதாகவும் தோன்றுகிறது. கொக்கரக்கோவின் மூலமும் சமயங்களில் உதயாவின் மூலமும் இது குறித்த சுயபகடிகளையும் இந்த நாவல் கொண்டிருக்கிறது என்பதுதான் இதன் ஒரே யோக்கியமான விஷயம்.

இந்த நாவல் முழுக்க பெரிதும் மனிதர்களே கிடையாது. மரங்களையும் தாவரங்களையும் விலங்குகளையும் பற்றிய தகவல்களால் நிரம்பியது என்று இந்த நாவல் வெளிவருவதற்கு முன்பாக  சாரு ஒரு முறை எழுதியதாக ஞாபகம். ஆனால் அப்படியொரு சுக்கும் கிடையாது. அவர் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைப் பற்றிய தகவல்கள் தவிர தெருவில் வளரும் ஒரு நாயைப் பற்றிய தகவல்களால் துவக்க அத்தியாயங்கள் நகர்கின்றன. சம்பிரதாயத்திற்கு மரங்களைப் பற்றின தாவரவியல் பெயர்கள். அவ்வளவுதான்.

விளிம்புநிலை சமூகத்தில் பிறந்து வந்திருந்தாலும் தற்போது மதுவகை முதற்கொண்டு விலையுயர்வான பொருட்களை மாத்திரமே நாடும் சாருவின் இயல்பையே அவரது பிராணிகளும் கொண்டிருப்பது ஆச்சரியமான தற்செயல். ஏன் அவர் போஷிக்கும் தெருநாய் கூட விலையுயர்ந்த பிஸ்கெட்டை மாத்திரம்தான் சாப்பிடுகிறது.

இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. கொக்கரக்கோ இந்த நாவலின் இடையில் விமர்சிப்பதைப் போன்று அஞ்சலியின் மீதான செயற்கையான  சோகக்கதைகள் பல இதில் நீளும் போது, கலவிக் குறிப்புகளை சுவாரசியமாக அனுபவிப்பதற்கு  இந்த சோகக்கதைகளே தடையாய் இருக்கின்றன. ஒரு திரைப்படத்தில் ரகளையானதொரு உடலுறவுக் காட்சி முடிந்தவுடன் அதே நடிகையே அடுத்த காட்சியில் தொலைக்காட்சி சீரியலில் வருவது போல் மூசுமூசுவென்று மூக்கைச் சிந்தி அழுது கொண்டிருந்தால் பார்வையாளர்களுக்கு எப்படியிருக்கும்?

அஞ்சலியாவது தன்னுடைய வாழ்நாள் துயரங்களையெல்லாம் உதயாவின் மூலம் கிடைக்கும் விதவிதமான கலவியின்பத்தின் மூலம் கடக்கிறாள். ஆனால் பாலியல் தொழிலாளிகளைப் பற்றி எழுதும் போது கூட அந்தக் கவர்ச்சிகளின் பின்னுள்ள கண்ணீரின் மீதான கரிசனம் எழுத்தாளருக்கு ஏற்படவே இல்லை. அதிலும் உதயாவின் நண்பனான கொக்கரக்கோ இன்னமும் மோசம்.  உடனே லீக் ஆகி விடாமல்  எப்படியெல்லாம் பாலியல் தொழிலாளிகளுடான நேரத்தை முழுமையாக உபயோகப்படுத்துவது என்று வகுப்பே எடுக்கிறான். இது மாத்திரமல்ல, பொதுவாகவே ஆசிரியரின் கண்ணோட்டம் தன்னுடைய செளகரியங்களை மாத்திரமே கவனிக்கிற தன்னுடைய கொண்டாட்டங்களில் மாத்திரமே கவனம் செலுத்துகிற அப்பட்டமான சுயநலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. வீட்டு வாசலில் குப்பை பெருக்கும் தொழிலாளர்களுக்கு மனைவி தரும் பணத்தைக் கூட கண்டிக்கிறான். (

(ஏனய்யா, நீர் ரெமி மார்ட்டின் அடிக்க இணையத்தில் காசு கேட்பது தவறில்லை எனும் போது அவர்கள் ஓல்ட் மாங்க் அடிக்க காசு அடிக்கக்கூடாதா? என்ன நியாயம் இது? அவர்களாவது சமூகத்தில் குப்பைகளை நீக்குபவர்கள். நீர் எழுத்தின் மூலம் குப்பையை சேர்க்கும் ஆசாமிதானே? - கும்மாங்கோ)

எக்ஸைல் என்றொரு தலைப்பை இந்த நாவலுக்கு  எப்படி ஆசிரியர் பொருத்துகிறார் என்பதே புரியவில்லை. அடக்குமுறை கொண்டதொரு பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் சூழலை எதிர்கொள்ளும் ஆபத்தானதொரு சூழலையா எழுத்தாளர் எதிர்கொள்கிறார்? எனில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற தலைமறைவு எழுத்தாளர்கள் எல்லாம் தங்களை என்னவென்று கூறிக்கொள்வார்கள்? சில ஆயிரம் ரூபாய் சம்பாத்தியங்களுக்காக அந்நிய தேசங்களில் குப்பையள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து ஒப்பந்தங்களின் மூலம் மாட்டிக் கொண்டு மாட்டுக்கொட்டகை போன்ற இடங்களில்  துன்புறும் தொழிலாளத் தோழர்களை என்னவென்று அழைப்பது?

இந்த நாவலை முடித்து வைக்க அதன் இறுதியில் நாவலாசிரியர் அல்லாடுவதைப் போலவே 'இந்த ராமாயணம் எப்போதடா முடியும்?' என்று வாசகனையும் அல்லாட வைத்திருப்பதை ஆசிரியரின் நுட்பமான திறமைகளுள் ஒன்றாக சொல்ல வேண்டும்.

இலக்கியம் என்பது காலத்தையும் கடந்து நிற்கும் சாஸ்வதத்தை கொண்டது என்கிறார்கள் அல்லவா? அந்த வகையில் இந்த நாவலை காலங்கடந்து நினைவு கூர்வார்களா என்பது சந்தேகமே. இப்படியாக இந்த நாவலின் மீது புகார்களை வைக்க முடியும் என்றாலும் சில குறிப்பிட்ட தன்மைகளின்படியும் கூறுகளின் படியும் இது சமகாலத்தில் நிராகரிக்க முடியாத தன்மையையும் கொண்டிருக்கிறது.

நாவல் மீதான விமர்சனம் -2 (வேறு கிளைமாக்ஸ்)

ஆனால் ஒன்றை முக்கியமாக சொல்லியேயாக வேண்டும். அது சாருவின் சுவாரசியமான எழுத்து. பெரும்பாலும் ஏற்கெனவே அறிந்த தகவல்களால் நிரம்பியிருந்தாலும் இந்த 867 பக்கமுள்ள நூலை மீண்டும் தொடர்ந்து வாசிக்க முடிகிற கொண்டாட்ட அனுபவத்தை தருகிறது இந்த நூல். கடகடவென்றும் வாசித்து தீர்க்கலாம். மதுக்கோப்பையை உறிஞ்சுவது போலநிதானமாகவும் வாசிக்கலாம். கடந்த ஆறு நாட்களிலேயே இந்த தலையணையை நான் வாசித்து தீர்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவரே அடிக்கடி குறிப்பிடுவது போல சாருவை மிக காட்டமாக விமர்சிக்கும் சக எழுத்தாளர்கள் கூட சாருவின் எழுத்திலுள்ள போதையை ஒப்புக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான அறிவுஜீவி  எழுத்தாளர்கள் கூட அவரைத் தொடர்ந்து  ரகசியமாக வாசிக்கிறார்கள் என்பது சமயங்களில் அவர்கள் உடனுக்குடன் கோபமாக எழுதுகிற எதிர்வினைகளின் மூலம் தெரிகிறது. இதைவிட சாருவுடைய எழுத்தின் சுவாரசியத்திற்கு வேறு ஆதாரம் இருக்க முடியாது.

சாருவின் எழுத்தில் பொதுவாக என்னைக் மிகவும் கவர்ந்ததொரு விஷயமும் அதிகம் உடன்படும் விஷயமும் நுண்ணுணர்வுத் தன்மை பற்றியது. உலகில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்று புதுமைப்பித்தன் கிண்டலடித்தைப்  போன்று தன்னுடைய தொன்மையின் நாகரிகத்தை வெற்றுப் பெருமையுடன் சொல்லித் திரிகிற தமிழ் சமூகம் இத்தனை வருடங்களாகியும் கூட சில அடிப்படை விஷயங்களிலாவது நாகரிகத்தைப் பின்பற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. கல்வியறிவு சதவீதம் உயர்ந்திருந்தாலும் கூட சில அடிப்படை அராஜகங்களை செய்வதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. சாலையின் கண்ட இடங்களில் குப்பையைப் போடுவது, பின்னால் வருபவர் பற்றி கவலையில்லாமல் கண்ட இடத்தில் துப்புவது (அதிலும் இந்த பான்பராக் என்கிற விஷயம் உள்ளே நுழைந்த விட்ட பிறகு முந்தைய காலங்களில் வெற்றிலை போட்டு துப்புபவர்களை விட இவர்களின் அராஜகம் அதிகமாகி விட்டது) சினிமா போன்ற பொது நிகழ்ச்சிகளில் அடித்துப்பிடித்து நுழைவது, பிறகு எதற்காகவோ அது முடிந்த பிறகு அதே வேகத்தில் வெளியேறுவது என்று மிகப் பெரிய பட்டியலையே போடலாம். அந்நியராக இருந்தாலும் எதிரே கடந்து செல்கிற ஒரு சக மனிதனின் முகத்தைப் பார்த்து புன்னகையைக் கூட சிந்தாத சிடுமூஞ்சி சமூகம்.

எதிரேயிருக்கிறவன் அருவருக்காத வகையில் தயிர் சாதம் என்கிற வஸ்துவை சாப்பிடுகிற ஒரு தமிழனை இதுவரையில் நான் கண்டதில்லை. நான் தினமும் சாப்பிடும் ஹோட்டலில் தினமும் இந்த அவஸ்தையை அனுபவிக்கிறேன். சோற்றின் மீது தயிரை அப்படியே ஊற்றி பிசைந்து பிசைந்து விநோத கலவையாக்கி கையில் வழிய  சர் சர் என்ற சப்தத்துடன் எதிரேயுள்ள நபர் உறிஞ்சுவதைப் பார்க்கும் போது எனக்கு ஏறக்குறைய வாந்தியே வந்து விடும். இதற்காகவே நான் தயிர் சாப்பிடுவதை தவிர்த்து விடுவேன் இது ஒரு உதாரணம்தான்.  இன்னும் பல ரகளையான விஷயங்கள் இருக்கின்றன. இதற்காகவே எதிரேயிருப்பவரின் முகத்தை பார்க்காமலேயே தலையைக் குனிந்து சாப்பிட்டு விரைவில் வெளியே வந்து விடுவேன்.

இத்தனை வருடங்களைக் கடந்தும் சிலஅடிப்படையான  விஷயங்களில் நாம் இன்னமும் கற்கால பழங்குடி மனநிலையைக் கொண்டிருக்கிறோமே என்று ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்கிற பழங்குடிகளின் கலாசாரத்தில் மாத்திரம் நாம் எதிர்திசையில் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஐரோப்பியர்களின் நாகரிகங்களில் இருந்து, அதன் கலாசாரங்களில் இருந்து ஏறத்தாழ நூறு வருடங்கள் பின்தங்கியிருக்கிறோம். இது போன்ற விமர்சனங்களை 'மேட்டிமைத்தனம்' என்று புறக்கணித்து நம் தவறுகளை நியாயப்படுத்துவது முறையானது அல்ல. இப்படியாக ஒரு சமூகத்தின் நுண்ணுணர்வற்ற தன்மையைப் பற்றி சாருவின் எழுத்து சுட்டிக்காட்டியபடியே இருக்கிறது. நாம் எத்தனை மோசமான கலாசார பலவீனங்களைக் கொண்டிருக்கிறோம் என்பது அவர் சுட்டிக்காட்டும் போதுதான் இன்னமும் அழுத்தமாக உறைக்கிறது.

இந்த நாவலில் தான் கண்டதொரு சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார் நுலாசிரியர். அவர் ஒரு ஹோட்டலில் அமர்ந்திருக்கும போது எதிரே உள்ள நாற்காலியில் ஒரு பெரியவர் வந்து அமர்கிறார்.. வெயிலில் வந்த களைப்புடனும் சோர்வுடன் கடந்து செல்லும் ஒரு ஹோட்டல் பையனை நோக்கி 'கொஞ்சம் தண்ணி கொடப்பா' என்கிறார். அவனோ 'இந்த டேபிள் நான் பாக்கறது இல்ல' என்று அலட்சியமாக சொல்லிக் கொண்டே போய் விடுகிறான். இதுவோர் உதாரணம்தான். நகரப் பேருந்துகளில் ஓட்டுநர்களாலும் நடத்துநர்களாலும் வயது முதிய பயணிகள் நடத்தப்படும் அலட்சியத்தை பார்த்தால் ரத்தக் கொதிப்பே வந்து விடும். சாலையில் நடப்பவர்களின் மீது வாகன ஓட்டுநர்கள் கொள்ளும் அலட்சியமும் மூர்க்கமும் இன்னமும் கொடுமை.

இந்த நாவலில் உதயா என்ற எழுத்தாளன் அஞ்சலி என்கிற பெண்ணோடு கொள்கிற கலவியைப் பற்றிய விதவிதமான குறிப்புகள் வருகின்றன. ஆனால் அவள் திருமணமானவள். பத்திரிகைகளில் இந்த மாதிரி விஷயங்கள் பற்றிய செய்திகளைப்  போது 'கள்ளக்காதல்' என்கிற வார்த்தையோடு போடுவார்கள். எத்தனை முயன்றும் இந்த வார்த்தையின் பொருளை அறியவே முடியவில்லை.  அஞ்சலி தன் வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்தவள். (அப்படியா?, - கும்மாங்கோ) . ஒரு சராசரியான இந்தியப் பெண்ணின் பிரதிநிதி என்று அஞ்சலியை தாரளமாக சொல்லலாம். இந்த மாதிரியான முறையற்ற உறவுகளை, அவை ஏன் ஏற்படுகின்றன என்கிற சமூகக் காரணிகளின்,  பின்னணிகளின் புரிதல் இல்லாமல், அதற்குக் காரணம் தாங்கள்தான் என்று கூட தெரியாமல் கோபமும் எரிச்சலும் கொள்ளும் ஆண் சமூகத்தைப் பற்றி நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

சினிமாப் பாடல்களின் வரிகள் முதற்கொண்டு, அதில் வரும் ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனங்கள், அன்றாட வாழ்க்கையின் உரையாடல்கள், சாலையில் செல்லும் பெண்களைப் பற்றிய கமெண்ட்டுகள்..பார்வைகள், பெருமூச்சுகள்.. என்று பெரிதும் பாலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய நினைத்துக் கொண்டும் சுவாசித்துக் கொண்டும் இயங்கும் ஆண் சமூகம் பாலுறவு என்கிற விஷயத்தை நேரடியான யதார்த்தத்தில் கையாளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எத்தனை பலவீனமாக இருக்கிறது?

(சுஜாதாவின் பிலிமோத்ஸவ் என்கிற அற்புதமான சிறுகதையை இங்கு நினைவு கூரலாம். பெண்ணுடல்களின் பிம்பங்களைப் பார்த்து பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் ஒருவன், அது நிஜத்தில் கிடைக்கும் சந்தர்ப்பம் வரும் போது பயந்து போய் விலகி விடுவான்)

அத்தனை வருடங்கள் காத்திருந்து  நினைத்து நினைத்து சப்புக் கொட்டிய விஷயத்தை திருமணம் முடிந்த  நேரனுபவத்தில் சந்திக்கும் போது மூன்றே நிமிடங்களில் கொட்டி விட்டு ஆயாசமாக திரும்பி படுத்துக் கொள்வது எத்தனையொரு முரண்நகை? காமசூத்ரா எழுதிய  வாத்சாயனர் உருவான ஒரு கலாசார சூழலில்தான் இப்படியொரு முரண்பாடு. இதில் விவரிக்கப்பட்டிருக்கும்  உடலுறவு போஸ்களையெல்லாம் ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டு ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சாரு சொல்வதைப் போலவே ஒரு கிழட்டு மனநிலை வந்து மனைவியிடமிருந்து விலகி விடியற்காலையில் பெருமாள் கோயிலுக்கு ஓடி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தைக் கூட மன்னித்து விடலாம். எத்தனை ஆண்கள் தங்களின் மனைவியுடன் உட்கார்ந்து ஆதரவாக, அன்பாக சாவகாசமான நிமிடங்களை செலவழிக்கிறார்கள்? 'ஏவ்..' என்கிற ஏப்பத்துடன் எழுந்து போகிறவர்கள் ஒருநாளாவது  மனைவியின் சமையலை வாய் விட்டு புகழ்ந்திருப்பார்களா? சமையலில் உதவி செய்திருப்பார்களா? இது போன்ற சிறு சிறு அன்புகளைத்தான் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். மூன்று மணி நேர கலவியைக் கூட அல்ல. இது கிடைக்காத பெண்கள்தான் வேறு வழியில்லாமல் சிறிது அன்பைக் கொட்டினாலும் பிற ஆண்களோடு ஒட்டிக் கொள்கிறார்கள். அன்பை எதிர்பார்த்து ஏங்கும் இந்த மனநிலையை  (அப்படியா?, - கும்மாங்கோ) .வெறும் உடல்தினவாக சித்தரித்து  'கள்ளக்காதல்' என்ற லேபிளில் கொச்சைப்படுத்துவது அறிவீனம். அஞ்சலியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகளின் மூலம் இது போன்ற விஷயங்கள் வாசகர்களுக்கு தெளிவாகின்றன.

சிறுவயதில் வளர்ந்து திரிந்த நாகூர் என்கிற நிலப்பிரதேசத்தைப் பற்றின எழுத்தாளரின் சமகால விவரணைகள் கவர்கின்றன. போலவே 70களில் தமிழ் சமூகத்தை ஆக்ரமித்த இந்தி சினிமாவின் இசையைப் பற்றிய விவரங்கள். இந்தப் பகுதியை வாசித்தவுடன் 'ஆராதனா'' பாடல்களை உடனே கேட்க வேண்டுமென்று தோன்றியது. இது போன்று மனவெழுச்சிகளை தரும்  (வெறும் மன எழுச்சிகள் மட்டும்தானா? - கும்மாங்கோ) பலநுட்பமான பகுதிகள் உள்ளன.

எக்ஸைல் என்கிற தலைப்பு இந்த நாவலின் உள்ளடக்கத்திற்கு மிகப் பொருத்தமாய் இருக்கிறது. இங்கிருக்கிற அபத்தச் சூழல்களை, மனிதர்களை சகித்துக் கொள்ளவே முடியாத ஒரு நுண்ணுணர்வுள்ள மனிதன், எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விட முடியாதா என்றுதான் ஏங்குவான். அவ்வகையான மனப் போராட்டங்களையே இந்த நாவல் பல இடங்களில் நுட்பமாக முன் வைக்கிறது.


முடிவுரை

நாவல் சிறப்பாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. சில சிறிய குறைகள்தான். அட்டைப்படம் இன்னமும் ரகளையாக அமைந்திருக்கலாம். சில இடங்களில் வரும் ஆங்கில எழுத்துக்கள், எழுத்துரு பிரச்சினையால் ஞணீஞனசனஞி என்பது போல் பிரசுரமாகியிருப்பதை கவனித்திருக்கலாம். சாரு எழுதியிருப்பதற்கு விளக்கம் தரும் அடிக்குறிப்புகளில் ஓரிடத்தில் 'பூம் பூம் = உடலுறவு என்றெல்லாம் விளக்கம் அளித்திருப்பதைப்  பார்த்தவுடன் சிரிப்பு வந்து விட்டது. வாக்கியத்தின் தொடர்ச்சியிலேயே அது புரிந்து விட்டது. மேலும் சாருவின் எழுத்தில் இதையெல்லாம் விளக்க வேண்டிய அவசியமேயில்லை. அவரின் வாசகர்கள் என்ன இது கூட தெரியாத மு.கூ -க்களா?

தன்னுடைய அடுத்த நாவலையாவது சாரு  இது போன்ற ஆட்டோ பிக்ஷன் என்கிற பாணியில் ஜல்லியடிக்காமல் முற்றிலும் வேறு பின்னணியில் எழுத வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

(என்ன எழவுய்யா இது. பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல் ஒரு குழப்பமான கட்டுரை. புத்தகத்திற்கு தொடர்பில்லாமல் முதலில் வரும் தண்டபாணி அண்ணன் சமாச்சாரமெல்லாம் எதற்காக? அதுவும் ஆட்டோ பிக்ஷனா? புதிய எக்ஸைல் நன்றாக இருக்கிறதா, இல்லையா?, வாங்கிப் படிக்கலாமா? கூடாதா? இது வெறும் செக்ஸ் புத்தகமா? இல்லை இலக்கியப் பிரதியா? இந்தக் கட்டுரையில் இருந்து என்னதான் புரிந்து கொள்வது? கடவுளே..இவன் சாருவை விட குழப்பவாதியாக இருப்பான் போலிருக்கிறதே - கும்மாங்கோ)

தமிழ் மின்னிதழில் வெளியான கட்டுரையின் திருத்தப்படாத வடிவம் (நன்றி: தமிழ் மின்னிதழ்)

suresh kannan

2 comments:

anujanya said...

ரகளையான விமர்சனம்(!). ம்ம், நான் இலக்கியப் பத்திரிக்கையில் எழுதுபவனாக்கும் என்னும் தோரணையில் உங்கள் எழுத்து சமயங்களில் ஜாங்கிரி சுற்றும்.இது அப்படியில்லாமல் சாருவின் சுவாரஸ்யமான எழுத்து போன்றே இருக்கிறது.

சில மாதங்கள் முன் போகன் தன் எழுத்துக்கள் மூலம் நம் கண்ணெதிரே நல்ல எழுத்தாளர் ஆனது ஞாபகம் வருகிறது. Now you are in splendid form Suresh. Make the most of it.

அனுஜன்யா

saravanan sekar said...

Re-reading this review after some time.. superb