Wednesday, July 16, 2014

Last Vegas - English - இலக்கிய ஆளுமைகளின் அட்டகாசங்கள் நிறைந்த படம்



Last Vegas திரைப்படத்தை நான் பார்க்க தேர்ந்தெடுத்ததற்கு நான் ஒரு காலத்தில் பார்த்து வியந்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் அதில் நடித்திருந்ததுதான் காரணம்.

மைக்கேல் டக்ளஸ், ராபர்ட் டி நீரோ, மார்கன் ப்ரிமேன். பொதுவாக கலைத்துறையில் இயங்குபவர்கள் தங்களின் புகழ் உச்சத்தில் இருக்கும் போதே அதிலிருந்து விலகி விடுவது நல்லது. எல்லாத்துறைக்குமே இது பொருந்தும். 'இல்லையப்பா, நான் இன்னும் அத்தனை சேர்த்து விடவில்லை, இன்னமும் ஓடினால்தான் குடும்பத்திற்கான எரிபொருள்' என்கிற நிலையில் இருப்பவர்கள் இதில் விதிவிலக்கு.

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் உதாரணத்திற்கு நாம் ஒரு காலத்தில் வியந்து ரசித்துப் பாராட்டின ஒரு பாடகர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் என்ன செய்கிறார், தமக்கு பிடித்த இசையை ரசித்துக் கொண்டு சமகால கலைஞர்களை கவனித்துக் கொண்டு வீட்டில் அக்கடா என்று இருக்கலாம் அல்லவா? அப்படி இருக்க மாட்டார்கள். ஒருகாலத்தில் தமது கழுத்தில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்த மாலைகளின் குறுகுறுப்புகள் அவர்களை தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும் போல. மஞ்சள் வெளிச்சத்தின் ஓரத்திலாவது நனைந்து விட்டுப் போவோமே என்று சமகால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், விருது மேடைகளில் வந்து தாம் பாடினதிலேயே புகழ் பெற்ற பாடலை சிரமப்பட்டு பாடுவார்கள்.

ஆஸ்துமா பிரச்சினையும் உள்ளவருக்கு தொண்டையும் கட்டிக் கொண்டது போன குரலில் ஸ்ருதியிலும் சேராமல் அவர் இழுத்து இழுத்து பாடுவதைக் கேட்கும் ஒரு கொடுமை இருக்கிறதே...அந்தப் பாடலின் மூலம் பாடகரின் மற்றும் பாடலின் மீது நமக்கு இருந்த பிரமிப்புகளின் பிம்பங்கள் எல்லாம் அத்தனையும் ஒரு நொடியில் உடைந்து போகும். அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். ஆனால் அந்த மேடையில் இருக்கும் எவரும் இதை சுட்டிக் காட்ட மாட்டார்கள். அவரிடம் இருக்கும் மரியாதை காரணமாகவும் டிஆர்பி மைலேஜ் காரணமாகவும் அந்தச் சபையே கைதட்டி 'சூப்பர் சார்.. எப்படி உங்க குரல் இன்னும் அப்படியே இருக்கு'?, என்று உசுப்பேற்றி விட்டு காலில் விழுந்து போலியாக ஆசிர்வாதம் வாங்கி பாடகரையே உள்ளுக்குள் பெருமையாக நம்ப வைத்து விடுவார்கள். அவர் இன்னொரு மேடையை, சானலைத் தேடி ஓடுவார். ஆனால் அவரின் உண்மையான ரசிகர்கள் உள்ளுறாவது இதை நிச்சயம் வெறுப்பார்கள் என்கிற உண்மை வெளியில் வரவே வராது.

இதற்குப் பொருள் வயதான கலைஞர்கள் எல்லாம் வெளியிலேயே வரக்கூடாது, தங்கள் திறமைகளை மறுபடியும் நிரூபிக்கக்கூடாது என்பதி்ல்லை. தங்களின் சாதனைகளின் பிம்பங்களை அழிக்கும் வேலையை அதில் கீறல் போடும் வேலையை அவர்களே செய்யக்கூடாது என்கிற ஆதங்கம்தான் முக்கிய காரணம். தமிழ் சினிமாவிலும் சிவாஜி கணேசன் என்ற மிகச் சிறந்த நடிகர் இருந்தார். விமர்சகர்கள் அவர் மீது பல்வேறு விதமான விமர்சனங்களை அடுக்கினாலும் அவர் தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கலையாளுமை என்பதை மறுபேச்சு இல்லாமல் மனப்பூர்வமாக அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ஒரு காலக்கட்டதிற்குப் பின் என்ன ஆயிற்று? கோட்சூட் கூலிங்கிளாஸ் மாட்டிக் கொண்டு தன்னுடைய மகள் வயதுள்ள நடிகைகளிடமெல்லாம் டூயட் பாடிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டே சண்டை போட்டு ரசிகர்களை அவர் நெளிய வைத்தார். அது தொடர்புள்ள சினிமாக்களை, காட்சிகளை இப்போது பார்த்தால் மகா காமெடியாக இருக்கிறது. தனது இறுதிக் காலத்தில் கூட திரைப்படங்களில் நடிக்கத்தான் செய்தார். சமகால இயக்குநர்கள் என்ன செய்தார்கள்.. அவரை ஒரு செட் ப்ராப்பர்டி போலவே அமர வைத்தார்கள். அவர் பிரேமில் இருந்தால் போதும். அவரது முந்தைய படத்தின் பிரபலமான காட்சியை நினைவுகூரும் வகையில் அந்தத் திரைப்படத்திற்கு தொடர்பேயில்லாமல் யாராவது ஏதாவது ஒரு வசனம் சொல்வார்கள். நடிகரும் மீசையை முறுக்கிக் கொண்டே சிரித்துக் கொள்வார். சுற்றியுள்ளவர்களும் கெக்கே கெக்கே என்று சிரிப்பார்கள். கொடுமையாகவும் காமெடியாகவும் இருக்கும். இதிலிருந்து முதல் மரியாதை, தேவர் மகன் போன்ற அபூர்வமானவைதான் சில விதிவிலக்குகளாக இருந்தன.

()

Last Vegas -லும் அப்படித்தான். ஒரு காலத்தில் மாத்திரமல்ல சமீப படங்களிலும் கூட வியந்து பிரமித்த நடிகர்கள் இதில் காலி பெருங்காய டப்பாக்கள் போல லூட்டியடித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் தமிழ் சினிமாக்கள் போல் அத்தனை மோசமல்ல என்பதுதான் சிறிய ஆறுதல்.

ஏதோவொரு தமிழ் இலக்கிய வம்புக் கட்டுரையை வாசித்த கையோடு தற்செயலாக இத்திரைப்படத்தைப் பார்த்ததினால் இதில் வரும் பாத்திரங்களுக்கு தமிழ் இலக்கியத்தில் பிரபலமானவர்களை பொருத்திப் பார்க்கும் விபரீதமான எண்ணம் தோன்றியது. நிச்சயம் அதிகப்பிரசங்கித்தனம்தான். தொடர்புள்ளவர்களும் இலக்கிய வாசகர்களும் மன்னிக்க வேண்டும். நகைச்சுவை என்று கருதி என்னை விட்டுவிட்டு ... கொஞ்சம் ஜாலியா படிங்க பாஸ்....

ஏறத்தாழ அறுபது வயதை நெருங்கும் பிரமச்சாரியான மைக்கேல் டக்ளஸ் அந்திமக்காலத்தில் ஓர் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார். (வேறு வழியேயில்லை, சாருதான் இதற்கு நினைவிற்கு வந்தார்). தமது பால்ய கால நண்பர்களான ராபர்ட் டி நீரோ, மார்கன் ப்ரிமேன், கெவின் க்ளெயின் ஆகியோரை அழைத்து இந்த விபரீத செய்தியை சொல்கிறார். அவரவர்களுக்கான வாழ்க்கையின் உடல் உபாதைகளோடும் சலிப்புகளோடும் லெளகீக கூண்டுகளிலும் இருக்கும் அவர்கள் "ஏண்டா பாவி இப்படிச் செய்யறே? சரி ஒழிஞ்சு போ. எஞ்ஞாய்... அப்படியே எங்களுக்கும் லாஸ் வேகஸில்  பாச்சுலர் பார்ட்டி கொடு.. நாமளும் மீட் பண்ணி நாளாச்சு" என்கின்றனர்.

இதில் ராபர்ட் டி நீரோ மாத்திரம் வர முரண்டு பிடிக்கிறார். ஏனெனில் அவருக்கும் டக்ளஸூக்கும் ஏற்கெனவே ஒரு பஞ்சாயத்து ரகசியமாக ஓடிக் கொண்டிருப்பது திரைக்கதையில் மெல்ல மெல்ல அவிழ்க்கப்படுகிறது. அதாவது சிறிய வயதிலிருந்து இரண்டு பேருமே ஒரே பொண்ணை லவ்வுகின்றனர். பெண்ணுக்கும் குழப்பம். திருமண வயது சமயத்தில் அவளிடம் இரண்டு பேருமே சொல்லி விடுகின்றனர். "தோ.. பாரும்மா...உனக்கு யாரைப் பிடிக்குதோ, அவனைத் தேர்ந்தெடு. மற்றவர் பிரச்சினையின்றி விலகி விடுவோம்" பெண் ரகசியமாக சென்று டக்ளஸிடம் ஆலோசனை கேட்க அவரோ பெருந்தன்மையாக ராபர்ட்டிற்கு விட்டுக் கொடுத்து விடுகிறார். இந்த விஷயம் ராபாட்டிற்கு தெரியாது. ஆனால் தனது மனைவியின் மரணத்திற்கு டக்ளஸ் வரவில்லை என்பதுதான் அவருடைய தற்போதைய புகார். என்ன இருந்தாலும் அவரும் மனைவியின் முன்னாள் காதலன்தானே?.... (இந்த ராபர்ட் பாத்திரத்திற்கும் வேறு வழியேயில்லை..ஜெ..தான் மிகப் பொருத்தமானவர் என்று தோன்றியது. சாரு என்றால் அதன் எதிர்பாத்திரத்திற்கு ஜெ.. தானே.. எப்படி Casting)

ஏற்கெனவே ஒரு முறை மாரடைப்பு வந்ததன் காரணமாக தன்னுடைய மகனின் அதீக அன்பிலும் கண்காணிப்பிலும் வாழ்பவர் மார்கன் ப்ரிமேன். "அப்பா.. இங்க போகாத.. அங்க போகாத.. என்று அன்புத் தொந்தரவுகளை தன் பேரப் பிள்ளையை கொஞ்சுவதின் மூலம் கடந்து வருபவர். மகனுக்குத் தெரியாமல் லாஸ் வேகஸுற்கு செல்ல முடியாது என்பதால் கோயில் விழாவிற்கு சென்று வருகிறேன் என்று குறிப்பு எழுதி வைத்து விட்டு சன்னல் வழியாக குதித்து கிளம்புகிறார். (இதில் குதித்து என்பதை சன்னல் தாண்டி குதித்து என்றும் சந்தோஷத்தில் குதித்து என்றும் இருவழியில் சிலேடையாக புரிந்து கொள்ளலாம் - ஹூம்...இதையும் நானேதான் விளக்க வேண்டியிருக்கு). இந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமானவராக நாஞ்சில் நாடன் மிக கச்சிதமானவராக இருப்பார் என தோன்றிற்று. ஜெயமோகனின் நண்பர் என்பதற்காக மாத்திரமல்ல. நாஞ்சில் எழுத்தாளர்தான் என்றாலும் கலகங்களில் நம்பிக்கையில்லாதவர். குடும்பம் எனும் அமைப்பிற்கு முக்கியத்துவம் தருபவர். பயணம் செய்வதில் விருப்பமுள்ளவர். மார்கன் பிறகு வரும் காட்சிகளில் செய்பவதைப் போலவே உற்சாகமான சமயங்களில் தாறுமாறாக தண்ணியடிக்க தயங்காதவர் என்பதால் என்பதால் இந்த யூகம்.

நான்காவது ஆசாமி கெவின் க்ளெயின். இந்தப் பாத்திரத்திற்கு எனக்குத் தோன்றியது சுரா. முந்தையவர்களைப் போல எனக்கு இதற்கு சட்டென்று குயுக்தியாக விளக்கம் தர தோன்றவில்லை என்றாலும் இத்திரைப்படத்தில் இவர் வெள்ளைத் தாடியுடன் வந்ததும் சுராவின் ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெள்ளைத் தாடியுடன் பார்த்ததும் கூட இப்படியொரு வில்லங்கமான தொடர்பிற்கு காரணமாக இருக்கலாம். இவர் லாஸ் வேகஸ் செல்வதை இவரது மனைவியே உற்சாகமாக வழியனுப்பி வைக்கிறார்.. அதுவும் எப்படி தெரியுமா? ஒரு வயாகரா மாத்திரையுடனும் ஆணுறையுடனும்... "இதோ பாரு புருஷா.. என்னமோ ரொம்ப வருஷமா...உன் மூஞ்சிலே ஒரு சுரத்தேயில்ல...எப்பவும் இஞ்சி தின்னா மாதிரியே இருக்கே. என்னமோ இந்த டிராவல் பத்தி பிளான் பண்ணவுடனேதான் உன் மூஞ்சில ஒரு பல்பு வெளிச்சம் தெரியது. உன் கிட்ட என்ன பிரச்சினைன்னு தெரியல. இருந்தாலும் போ.. சந்தோஷமா இருந்துட்டு எல்லாப் பிரச்சினையும் அங்கயே தூக்கிப் போட்டுட்டு வா..." என்கிறார்.

'பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா.." என்று ஜனகராஜ் போல் குதிப்பது மாதிரி 'பொண்டாட்டியே ஊருக்குப் போகச் சொல்லிட்டா" என்று இவர் குதிப்பது காமெடி. திரைப்படமெங்கும் தன் பாக்கெட்டில் இருக்கும் காண்டமை தட்டிக் கொண்டே பெண்களை ஜொள்ளுகிறார். ( சுரா குறித்த ஏதோவொரு வம்புக்கட்டுரையில் அவர் திரைப்பட போஸ்டரில் நடிகையொருவரை வேடிக்கை பார்த்திருக்கும் புகைப்படத்தைக் குறிப்பிட்டு குதர்க்கமாக எழுதிய விமர்சனம் ஒன்றை படித்துத் தொலைத்ததும் இந்தப் பாத்திரத்திற்கு அவரை நினைவு கூர காரணமாக இருந்திருக்கலாம்.) மாத்திரமல்ல... திரைப்படத்தில் பின்பு செக்ஸ் பற்றி வரும் ஒரு உரையாடலில் 'நீங்க கடைசியா எப்ப செக்ஸ் வெச்சுக்கிட்டீங்க.. என்று ஒரு ஹாலிவுட் ஆண்ட்டி கேட்கும் போது 'ஞாபகம் இல்ல' என்று சொல்லி சிரிக்கிறார்.

திரைப்படம் முடியும் தறுவாயில் ஆணுறையை சிறப்பாக பயன்படுத்த இவருக்கான ஒரு வாய்ப்பும் லட்டு மாதிரி மாட்டுகிறது. இருந்தாலும் தன்னை இத்தனை அன்பாக வழியனுப்பி வைத்த மனைவியின் ஞாபகம் வர அந்த வாய்ப்பை மிக நல்லவராக மறுத்துவிடுகிறார். மனம் போன வழியில் நனவோடை உத்தியில் அப்படியே எழுதிச் செல்வது ஒருவகை. ஆனால் தான் எழுதுகிற ஒவ்வொரு வார்த்தையையும் பிரக்ஞையுடன் செதுக்கி செதுக்கி எழுதுவது ஒருவகை. இரண்டாவது வகைக்கு சுரா பிரசித்தம். தக்க சமயத்தில் தன்னுடைய பிரக்ஞையை கச்சிதமாக உணர்ந்த பாத்திரம் என்பதால் இவர்தான் அதற்கு பொருத்தம் என தோன்றியது.

டக்ளஸூம் ராபர்ட்டும் அவ்வப்போது வெளிப்படையாகவே முறைத்துக் கொண்டாலும் நால்வரும் பொதுவாக உற்சாகமாகவே பாச்சுலர் பாாட்டிக்கு லாஸ் வேகஸூக்கு கிளம்புகிறார்கள். அங்குதான் மேற்பத்தியில் குறிப்பிட்ட ஹாலிவுட் ஆண்ட்டி அறிமுகமாகிறார். இனிமையான பாடகி. உற்சாகி. நால்வருக்குமே அவளைப் பிடித்துப் போகிறது. ஆனால் அந்த ஆண்ட்டிக்கோ திருமண மாப்பிள்ளையான டக்ளஸை அதிகமாகவே பிடித்துப் போகிறது. ஆனால் திரைக்கதையாசிரியரின் திறமை இங்கேதான் உச்சத்தில் பீய்ச்சியடிக்கிறது. மனைவியை இழந்த ராபர்ட்டிற்கும் அந்த ஆண்ட்டியை பிடித்திருக்கிறது. சிறுவயதுகளில் ஒரு பெண்ணுக்காக மோதின ஆட்டம் கிழவயதில் இன்னொரு ஆண்ட்டியிடம் வந்து தொடரும் போதும்தான் 'வாழ்க்கை ஒரு வட்டம்டா" என்று விஜய் சொன்ன மிக அரிய தத்துவம் உண்மை என்று தோன்றுவது இம்மாதிரியான சமயங்களில்தான்.

டக்ளஸ் ஆண்ட்டியை லவ்வும் விஷயம் ராபர்ட்டிற்கு தெரிய வருகிறது. முன்னர் டக்ளஸ் செய்த தியாகத்திற்கு பரிகாரம் செய்ய அவருக்கொரு நல்ல வாய்ப்பு. எனவே.. 'இதோ பார்.. டக்ளஸ்.உன்னுடைய மகளின் வயதுடைய ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்ததே ரொம்ப தப்பு. அப்புறம் அவஸ்தைப்படுவே.. அது மாத்திரமல்ல... உனக்கு உண்மையாகவே யார் மீது அன்பிருக்கிறது என்று பார். யாரின் அருகாமையில் நீ உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறாய் என்று பார்" என்று உபதேசிக்கிறார். (இப்படியாக இந்து ஞானவழி மரபு உபதேசத்தை சாருவிற்கு ஜெ செய்வது பொருத்தமாகத்தானே இருக்கும்). பிறகென்ன.. புத்தி வந்த சாரு.. மன்னிக்க.. டக்ளஸ் தன் திருமணத்தை ரத்து செய்து தன் மனதுக்கு பிடித்த ஆண்ட்டியுடன் வாழ்வைத் தொடர முடிவு செய்ய ... நண்பர்கள் நால்வரும் மீண்ட மகிழ்ச்சியுடன் அவரவர்களின் இருப்பிடத்திற்குத் திரும்புகின்றனர். சுபம்.

சற்று வேலை வெட்டியில்லாத நேரத்தில் நான் எழுதின பாத்திர திணிப்புகளையெல்லாம் உதறித் தள்ளி விட்டு இந்த ஜாலியான திரைப்படத்தை ஜாலியான மனநிலையுடன் கண்டு களிக்கலாம். அப்படியொன்று மோசமான திரைப்படமொன்றுமல்ல.


suresh kannan

1 comment:

viki said...

அவர் நடித்திருக்கிறார்..இவர் வாழ்ந்திருக்கிறார் போன்ற வழமையான வரிகளை தவிர்த்து வித்தியாசமான அதுவும் தற்கால தமிழ் இலக்கியவாதிகளோடு ஒப்பிட்டு எழுதியது சுவாரஸ்யமாக இருந்தது.மேலும் இப்போதெல்லாம் நிறைய பதிவுகள் எழுதுகிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.