Tuesday, July 15, 2014

Daisy Diamond - Denmark - ஒரு மழலையை மெளனமாக்குதல்இத்திரைப்படத்தினைப் பற்றின எவ்வித அறிமுகமும் இல்லாமல் இரவில் பார்க்கத் துவங்கி தொடரும் மனஅவஸ்தையை தாங்க முடியாமல் அணைத்து விட்டு மஸோக்கிஸ மனதின் உந்துதலில் மறுபடியும் விடியற்காலையில் எழுந்து பார்த்து முடித்தேன்.

அன்னா ஒரு சிறந்த நடிகையாகி விடும் பேரராவலில் இருப்பவள். அதற்கான உண்மையான தேடலும் உழைப்பும் கொண்டவள். நண்பனால் கற்பழிக்கப்பட்டு குழந்தையொன்று பிறக்க குடும்பத்தாராலும் நிராகரிக்கப்பட்டு ஒரு வறுமையான single mom படும் அத்தனை அவஸ்தைகளையும் படுகிறார். அவளது குழந்தையான டெய்சி சில சொற்பமான அற்புத கணங்களைத் தவிர மற்ற நேரம் முழுக்க அழுது கொண்டு வீறிட்டுக் கொண்டும் இருக்கிறது. இதனால் அவள் நடிக்க வாய்ப்பு தேடும் இடங்களிலெல்லாம் நிராகரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறாள். 'நான் நடிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டால்தான் பணம் கிடைக்கும். அப்போதுதான் உனக்கு பால் வாங்க முடியும்' என்று குழந்தையிடம் அன்பாகவும் நயமாகவும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் அதுவோ நெருக்கடியான நேரங்களில் அழுது உயிரை வாங்கி அவளை அவஸ்தைக்குள்ளாக்கி சாவகாசமான நேரங்களில் 'ஙே' என்று அபூர்வமாக சிரிக்கிறது.

தொடரும் குழந்தையின் அழுகையும் சப்தமும் அவளை மனநெருக்கடியின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது. அவளால் இரண்டு நிமிடங்கள் கூட நிம்மதியாக தூங்க முடிவதில்லை. நடிக்கும் வாய்ப்பிற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த நெருக்கடி மனநிலை தரும் உச்சத்தில்தான் அவள் அந்த முடிவை எடுக்கிறாள்.

அதன் பிறகும் அவளால் திரை வாய்ப்பை பெற முடிவதில்லை. அதிலுள்ள பலரும் அவளை தங்களின் பாலியல் விழைவுகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்கிற பேதமில்லை என்பதுதான் அதிர்ச்சியே. வேறு வழியின்றி porn படங்களில் நடிக்கிறாள். பாலியல் தொழிலாளியாகிறாள். கடைசியாக அவள் எதிர்பார்க்கும் திரை வாய்ப்பு கிடைக்கிறது. முதல் நாள் படப்படிப்பில் அவள் என்ன செய்கிறாள் என்பதை டிவிடி பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

()

2007-ல் வெளியாகியிருக்கும் இந்த டென்மார்க் திரைப்படத்தை Simon Staho என்பவர் அற்புதமாக, இயக்கியிருக்கிறார். அன்னாவின் மனநெருக்கடிகளை அகச்சிக்கல்களை பார்வையாளனும் மிக நெருக்கமாக உணர முடிகிறது. படத்தின் ஒரேயொரு பிரதான பாத்திரமானஅன்னாவாக Roomi Rapace என்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பெரும்பாலான சட்டகங்களில் இவளது முகம் அண்மைக் கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உரையாடுவது நல்ல உத்தி. படப்பிடிப்புத் தளங்களில் நிகழும் ஒத்திகைகளும் அனனாவின் அப்போதைய வாழ்க்கை துயரங்களும் ஒன்றொடு ஒன்ற இணைந்து பொருந்திப் போவது செயற்கையானதாக இருந்தாலும் தற்செயலானது என்கிற நோக்கில் திரைக்கதைக்கு அழுத்தம் சேர்க்கின்றன.

ஏறத்தாழ படத்தின் முதல் 40 நிமிடங்களை குழந்தையின் தொடர்ச்சியான அழுகையே ஆக்ரமிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த அன்னா எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போகும் போது அவள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சிக்கலை பார்வையாளனும் அடைகிறான். மழலை, புன்னகை, தாய்மை போன்றவை புதினப்படுத்தப்பட்ட விழுமியங்களாக பெண்களின் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் நடைமுறையில் ஒரு பிடிவாதமான குழந்தையை வளர்க்க நேரும் அனைத்து தாய்களும் அன்னா எதிர்கொள்ளும் அதே சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று தோன்றுகிறது. வெளியில் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர அந்தக் குழந்தையை வெறுக்கும் கணங்களும் நேரக்கூடும். கலவியின்பத்தை இருபாலரும் அனுபவிக்கும் போது குழந்தை பெற்றுக் கொள்ளும் உடற்கூற்றையும் வளர்ப்பதற்கான பொறுமையையும் பொறுப்பையும் பெண்களுக்கு மட்டும் அளித்தது இயற்கையின் வரமா அல்லது சாபமா?

அன்னா அந்த அதிர்ச்சியான முடிவை எடுக்கும் போது ஏறத்தாழ பார்வையாளர்களும் அந்த மனநிலைக்கு இணங்க நெருங்கி வருவது அற்புதமான திரையாக்கத்திற்கு உதாரணம். குடும்பம் எனும் அமைப்பு கீழை தேசங்களில் ஏறத்தாழ தொடரும் போது மேற்குலகில் single parent குடும்பத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு இத்திரைப்படம் உதாரணமானதாக இருக்கிறது. ஒரு நபரின் அகச்சிக்கல்களை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இருக்கக்கூடிய திரைப்படைப்பாளிகளே அன்னாவை பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கும் போது பாலியல் தொழிலை நடத்தும் ஒரு திருநங்கை நபர் அன்னாவிற்கு ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கிறது. அவளுடான உறவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வக்கிரங்கள், பொதுச் சமூகத்தில் நாகரிக கனவான்களாக உலவும் நபர்கள் அந்தரங்கமான தருணங்களில் எத்துணை விகார எண்ணங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது.

தம்முடைய பாவச் செயலுக்காக குற்றவுணர்வு கொள்ளும் அன்னா, அக உலகில் குழந்தையுடன் அவள் சிறுமியாகும் வரையும் கூட  தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறாள். அதுவும் அவளை குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கிறது. இந்த உரையாடலின் மூலம்தான் தன்னுடைய துயரங்களை அவளால் கடக்க முடிகிறது. பாலியல் தொழிலாளியாகும் போது தனக்கொரு முகமூடிப் பெயர் தேவைப்படும் போது 'Daisy Diamond' என்கிற பெயரை தேர்வு செய்வதின் மூலம் மகளின் மீது அவளுக்குள்ள நேசத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தையின் அழுகை அல்ல, கலைத்துறையில் அவள் எதிர்கொள்ளும் தொடர் நிராகரிப்பும் கசப்பும் கூட அவளுடைய விபரீதமான முடிவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.

பாலியல் தொடர்பான நம்முடைய விகார எண்ணங்களுக்கு வடிகாலாக அமையும் திரை நடிகைகளுக்கும், பாலுறவுக் காட்சிகளின் வீடியோக்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் பின்னால் எத்தனை கசப்புகளும் துயரங்களும் ஒளிந்திருக்கின்றன என்கிற நிர்வாண உண்மையை அறிய வேதனையாய்த்தான் இருக்கிறது.

suresh kannan

No comments: