Monday, July 14, 2014

2 States - Hindi - கலாசார முரண்களோடு ஒரு காதல்காய்ந்த மாடு கம்பில் விழுந்தது போல இணையத்தில் மின்னூல்களை அலைந்து தேடித் தேடி சேர்த்த காலம் ஒன்றுண்டு. கிட்டத்தட்ட 10 ஜிபிக்களை கடந்தவுடன் ஆவேசம் மட்டுப்பட்டு இப்போது  'Shakeela's autobiography - Translated in English- free download' என்ற லிங்க் கண்ணில் பட்டால்கூட 'ச்சே.. போ.." என்று சோம்பேறி்த்தனமாக இருக்கிறது. இப்படி ஆர்வமாய் தரவிறக்கம் செய்பவர்கள் அதில் எத்தனை நூல்களை வாசித்து முடிக்கிறார்கள் என்று கேட்கப்படும் போது பெரும்பாலோனோர்களைப் போல நானும் ஹிஹி என்றுதான் அசடு வழிவேன். என்றாலும் இப்படி இறக்கியதில் முழுதாய் வாசித்து முடித்த துவக்க கால  நூல்களில் ஒன்று சேத்தன் பகத்தின் '2 states'. அலுவலகத்து லஞ்ச் பிரேக்கில் வாசிக்க ஆரம்பித்து நேரம் போவது கூட தெரியாமல் திருட்டுத்தனமாக தொடர்ந்து வேறுவழியில்லாமல் வீட்டிற்கு கிளம்ப வேண்டிய சமயத்தில் பென்டிரைவ்வில் நகலெடுத்து வந்தவுடன் சாப்பிட்ட கையோடு வாசிப்பை தொடர்ந்தாலும் நள்ளிரவானாலும் முடிக்குமளவிற்கு பரபர சுவாரசிமாய் இருந்தது அந்த நாவல். ஏறத்தாழ நூலாசிரியரின் சுயவரலாறாய் இருந்த அது திரைப்படமாய் உருவாகப் போகிறது என்ற செய்தியைக் கேட்ட போது நிறைய சந்தோஷமாயும் பயமாயும் இருந்தது. பழைய மில்ஸ் அண்ட் பூன்களின் நவீன வடிவம்தான் சேத்தன் பகத் என்றாலும் நாம் வாசித்திருந்த நாவல் படமாகப் போகிறது என்றவுடனே ஒரு வாசகனுக்கு இயல்பாய் தோன்றும் எதிர்பார்ப்புகள் எனக்கும் தோன்றின.

இப்போதுதான் அந்தத் திரைப்படத்தை பார்க்கும் எண்ணமும் வாய்ப்பும் ஏற்பட்டது. நாவலில் இருந்த இளமையும் துள்ளலும் மகிழ்ச்சியும் சுவாரசியமும் பரபரவும் திரைப்படத்தில் பெரிதும் காணாதது சோகம்தான்.  சேத்தன் நாவலின் வசனங்களில் இருந்த பல சுவாரசியமான குறும்புத்தனமான ஒன்லைனர்களைக் கூட படத்தில் காணமுடியவில்லை. குறிப்பாக சென்னையில் அவர் வந்து இறங்கும் அத்தியாயத்தின் விவரணைகள் சுவையாக இருக்கும். ஆனால் ஏதோ கடமையேயென்று இயக்குநர் உருவாக்கியிருந்தது போன்றதொரு சலிப்பு. ஷாரூக்கான்+பிரியங்கா சோப்ரா+விஷால் பரத்வாஜ் கூட்டணியில் இத்திரைப்படம் உருவாகவிருந்ததாக கூட ஒரு திட்டம் முன்பிருந்ததாம். செய்தி படித்தேன். அது சாத்தியமாகியிருந்தால் இத்திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியிருக்கும் என்பது என் அனுமானம். ஏனெனில் இத்திரைப்படத்தின் துறுதுறு நாயகன் பாத்திரத்திற்கு ஷாரூக்கான் மிக பொருத்தமானவர். போலவே பிரியங்கா சோப்ராவும்.

இதன் நாயகன் அர்ஜூன் கபூர் நம்மூர் விமலைப் போலவே பெரும்பாலான தருணங்களுக்கு ஒரே முகபாவத்தை தந்திருக்கிறார். ஷாரூக்காக இருந்திருந்தால் ஒரு ரகளையே செய்திருப்பார். அவருடைய சென்னை எக்ஸ்பிரஸூம் ஏறத்தாழ இவ்வகை திரைக்கதைதான் போல. இன்னமும் பார்க்கவில்லை. 1999-லேயே வந்துவிட்ட வசந்த்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைக்கதையின் சாயலையும் இந்த நாவல் கொண்டுள்ளது. பார்த்தவுடனே காதல் கொள்ளும்படி அலியா பட் அத்தனை அழகாகத்தான் உள்ளார். ஆனால் சென்னைப் பெண் என்கிற வகையில் அவரது தோற்றமும் உடல்மொழியும் ஏற்க முடியாத வகையில் பொருத்தமில்லா ஆடம்பரமாக உள்ளது. நாயகனுடன் பத்து விநாடிக்கொரு முறை பச்பச்கென்று இவர் முத்தமிட்டுக் கொள்வது எரிச்சலாகவும் (பொறாமையாகவும்) இருக்கிறது. முத்தத்திற்கென்று ஒரு காத்திருத்தலும் மதிப்பும் வேண்டாமா?

கக்கூஸிற்கும் ஏசி போட்டது போல படத்தின் அனைத்துக் காட்சிகளின் பின்புலமும் ஒளிப்பதிவும் பேஷன்டிவி விளம்பரம் மாதிரி பணக்காரத்தனமாகவே இருந்தது சலிப்பை ஏற்படுத்தியது. ஐஐஎம்,அகமதாபாத்தின் ஹாஸ்டல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல் இருக்குமா என்ன? தாம் காதலிக்கும் மாணவியுடன் விரும்பும் போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்ளும் தனியறை வாய்ப்பெல்லாம் அங்கு கிடைக்கும் என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தால் நான் கூட கஷ்டப்பட்டு படித்தாவது அங்கு போயிருப்பேன். படத்தில் உருப்படியாய் நடித்திருப்பவர்களில் ஒருவர் அம்ரிதா சிங்.. தன்னுடைய மகனை இழந்து விடுவோமோ - அதுவும் ஓர் மதராசி குடும்பத்திடம் - என்று வழக்கமாய் மணமகனின் தாய்களுக்குத் தோன்றும் பயத்தையும் வீறாப்பையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஒரே தேசமாக இருந்தாலும் பல்வேறு கலாசார முரண்கள் கொண்ட தொடர்பில்லாத இரு சமூகத்திலிருந்து தோன்றும் காதலையும் திருமணத்தையும் அதற்கேயுரிய முரண்நகைகளோடும் அபத்த நகைச்சுவைகளோடும் உருப்படியாய் செய்திருக்கலாம்தான். செய்யவில்லை.

suresh kannan

1 comment:

Muthuram Srinivasan said...

படத்தில் சில காட்சிகள் சென்னை மாமிகளின் கலாசாரம் பற்றிய சில அரைவேக்காடுதனமான புரிதல்களுடன் சில காட்சிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன். நாவலில் அதைப்போன்ற சித்தரிப்பிகள் உண்டா? சாதாரணமாக வடக்கத்தியப் படங்களில் தமிழர்களை படு காமெடியாகக் காட்டுவார்கள்.