Thursday, July 17, 2014

சினிமாவும் ஊதிப் பெருக்கப்பட்ட மஞ்சள் பலூனும்



சமீபத்தில் நிகழ்ந்த ஒரு தொலைக்காட்சி விருது விழாவில் சரமாரியாக விருதுகளை சுண்டல் மாதிரி அள்ளி இறைத்துக் கொண்டடேயிருந்தார்கள். நானும் கூட போயிருக்கலாம் என்று தோன்றியது. பொதுவாக இம்மாதிரியான விழாக்களில் சிறந்த சினிமா, சிறந்த நடிகர் என்று விருதளிப்பதுதான் இதுபோன்ற சினிமா நிகழ்ச்சிகள் சார்ந்த மரபு. ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அந்த சானலின் தொடர்களில் நடிப்பவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், டான்ஸ் ஆடியவர்கள், பாட்டு பாடியவர்கள், என்று துவங்கி பல்வேறு தலைப்புகளில் பல நபர்களுக்கு புதிது புதிதாக நிறைய விருதுகள். அந்தக் கட்டிடத்தின் வாட்ச்மேனுக்கு கூட ஒரு விருது வழங்கியிருப்பார்கள் போல.

இந்த விருது நிகழ்ச்சியில் blowing their own trumpet என்பது போல அவர்களது நிகழ்ச்சிகளை அவர்களே புகழ்ந்து கொண்டு விருதுகள் அளித்து சானலுக்கு மைலேஜ் சேர்த்தது ஒருபுறம் இருக்கட்டும். இந்த சுயபுகழ்தல் நிகழ்ச்சிக்கு இடையிலேயும் வழக்கம் போல எக்கச்சக்க விளம்பரங்கள். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அல்ல, ஒரு மாந்தோப்பையே விழவைப்பதுதான் இப்போதைய கார்ப்பரேட் தந்திரம்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மொத்த சிறப்பு விருந்தினர்களும் ஒன்று விருது வாங்குபவர்களாக அல்லது தருபவர்களாக அமைந்திருந்தார்கள். தனியார் தொலைக்காட்சிகள் தங்களின் சந்தைப்படுத்துதலின் நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பதைதான் இதன் மூலம் உணர முடிகிறது. 'இது உங்கள் சானல்' என்று மீண்டும் மீண்டும் சொல்வதன் மூலம் பார்வையாளர்களுக்கும் அந்த தொலைக்காட்சிக்குமான ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதிலுள்ள நடிகர்களையும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தங்களுக்கு அந்நியோன்யமான மனிதர்களாக பார்வையாளர்கள் உணரும்படி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. பாட்டுப்பாடுவது, நடனமாடுவது என்று ரியாலிட்டி ஷோக்களில் மாற்றுத் திறனாளிகள் ஏதாவது ஒரு விஷயத்தில் சற்று திறமையாக செயல்பட்டால் உடனே  இவர்களுக்கு அடிக்கிறது ஜாக்பாட். அதை மிக இயல்பாக வெளிப்படுத்தவிடாமல் பின்னணியில் ஒரு சோக இசையைப் போட்டு கண்கலங்கி அமர்ந்திருக்கும் நடுவர்களையும் பார்வையாளர்களையும் தேடிப் பிடித்து ஒரு க்ளோசப் போட்டு அதை ஸ்லோ மோஷன் உத்தியில் மிகையுணர்ச்சியுடன் மறுபடி மறுபடி காண்பித்து அட்டகாசமாய் டிஆர்பியில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இந்த சீரியல்கள் எனும் கொடுங்கனவுகளில் தொடர்ந்து உழல்பவர்களின் உலகம் இன்னொரு வகையான கொடுமை.  தமிழ் கூறும் நல்லுலகம் தன்னுடைய பெரும்பாலான  பொழுதுகளை உச்சுக் கொட்டியபடியே இவைகளுடன்தான் கழிக்கிறது. 'மஸோக்கிஸம்' என்கிற சொல்லுக்கான கச்சிதமான உதாரணம் இந்திய தொலைக்காட்சிகளின் பார்வையாளர்கள்தான்.

இந்தக் கட்டுரை தொலைக்காட்சி எனும் போதை மருந்தைப் பற்றியோ அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் அபத்தங்கள் பற்றியோ அல்ல. சினிமாவையே சுவாசிக்கும் தமிழகத்தைப் பற்றியது. இங்கு சினிமாவில் ஜெயிப்பவர்கள்தான் குறிப்பாக நடிகர்கள்தான் ஒரு சமூகத்தின் அசலான வெற்றியாளர்கள் என்பது போல ஒரு மாயச்சித்திரம் ஊடகங்களால் தொடர்ந்து சித்தரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அது காந்தி பிறந்த நாளாக இருந்தாலும் சரி, பாரதி நினைவு நாளாக இருந்தாலும் சரி. இந்த விடுமுறை தினங்களுக்காகவே உருவாக்கப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் சினிமாவில் வெற்றி வெற்றவர்கள் தோன்றி ஒரு பீடத்தில் அமர்ந்து கொண்டு தங்களின் வெற்றிக் கதைகளையும், அனுபவங்களையும் தொடர்ந்து பீற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலதிகமாக தங்களின் துறைசாரா கருத்துக்களையும் உபதேசங்களையும் நீதிபதியாக அமர்ந்து தீர்ப்பெழுதுவதும் அதற்கே பிரதானமாக ஊடகங்கள் முக்கியத்துவம் தருவதும் எரிச்சலையை தருகிறது. ஒரு சமூகத்தின் அறிவுசார்ந்த அசலான பிரதிநிதிகளை வெகுசன ஊடகங்கள் கண்டுகொள்வதேயில்லை. பொதுமக்களுக்கும் இவர்கள் தேவைப்படவில்லை. சினிமா நடிகர்கள் மூலம் சொல்லப்படுவதுதான் அவர்களுக்கான செய்தி.


மேலே குறிப்பிட்ட விருது நிகழ்ச்சியும் ஒரு குறிப்பிட்ட நடிகரையே மையமாக கொண்டு சுற்றியது. அந்த நடிகர் அந்த சானலில் மிமிக்ரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று வணிகரீதியாக வெற்றி பெற்ற இரண்டு மூன்று திரைப்படங்களின் நாயகராக ஆகியிருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் ஏதோ அவர்தான் மின்சாரத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி என்கிற ரீதியில் "நீங்க இத்தனை உச்சிக்கு போயிட்டீங்க, சாதனை செஞ்சிட்டீங்க....உயரத்துக்குப் போயிட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் தொடர்ந்து பாராட்டிக் கொண்டேயிருந்தார்கள். அவரும் வரவழைக்கப்பட்ட தன்னடக்கத்துடன் "ஆமாம். இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனா பயமா இருக்கு. இதை தக்க வெச்சிக்கணும். இன்னும் மேலே போகணும்" என்று கூச்சமேயில்லாமல் அந்த பாராட்டுக்களை விழுங்கிக் கொண்டேயிருந்தார். அவர் மீது எனக்கு புகார் ஏதுமில்லை. நான்கைந்து திரைப்படங்களில் தங்களின் வாரிசுகளின் முகத்தை திரும்பத்திரும்ப காண்பித்து சினிமாவில் எப்படியாவது அவர்களை திணித்து வெற்றியும் பெற்று விடும் தந்திரங்களுக்கு இடையே அது போன்ற எந்த பின்புலங்களுமில்லாமல் தன்னுடைய தனித்துவமான திறமையின் மூலமாக அவர் நடிகரானது குறித்து மகிழ்ச்சியே.

ஆனால் மற்ற துறைகளில் இயங்குபவர்களைப் போலவே தாங்களும் ஒரு சமூகத்தின் பகுதிதான் என்பதை திரைத்துறையினர் உணராமல் தாங்கள் பெரிதாக ஏதோ சாதித்து சமூகத்திற்கு பயனளித்து விட்டோம் என்பதாகவும் தங்களை சமூகத்தின் முக்கியஸ்தர்கள் என்பதாகவும் மனச்சாட்சியேயின்றி நினைத்துக் கொள்வது ஒருபுறமிருக்க இதை ஊடகங்களும் இந்த சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வணிகத்தின் முக்கியமான கச்சாப்பொருளாக சினிமாவை பயன்படுத்திக் கொள்வதும் நாமும் அதில் மயங்கி நிற்பதும்தான் மிகவும் துரதிர்ஷ்டமான நிலை. என்றாலும் இந்த சினிமா மோகத்தை அந்தத் துறையில் இருந்து கொண்டே கிண்டலடித்த கலகக்கார கலைஞர்களும் இருந்துள்ளனர் என்பதுதான் சற்று ஆறுதல்.  'இந்த நடிகன்ங்க ஏண்டா பிறந்த நாளைக்கு போஸ்டரா ஒட்டி சுவத்தை நாறடிக்கறாங்க.. இவங்கதான் பொறந்துட்டாங்களாமா? அப்ப நாமள்ளாம் தேவையில்லாம பொறந்துட்டோமா?' என்று சீறிய கவுண்டமணி உட்பட என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, சந்திரபாபு போன்றோர் நிஜ வாழ்க்கையிலேயே சினிமா நடிகர்களுக்கு சமூகத்தில் தரப்படும் அதீத முக்கியத்துவத்தை தத்தம் பாணியில் நையாண்டி செய்தும் விமர்சித்தும் உள்ளனர்.

நாம் ஏன் சினிமாவை, அதில் இயங்குபவர்களை அவர்களின் தகுதிக்கும் அதிகமாக புகழ்ந்தும் வியந்தும் போற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது குறித்துதான் என்னுடைய புகாரும் கவலையும். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் இளைய மனங்களில், வருங்காலத்தில் தான் என்னவாக வேண்டும் என்கிற கனவுகளில் என்ன தோன்றும்? ஒரு சினிமா நடிகராக அல்லது இயக்குநராக ஆவதுதான் இச்சமூகத்தில் எல்லோராலும் கவனிக்கப்படக்கூடிய சாதனையாளர்களின் இடம் என்றுதானே? அதுதான் வெற்றியின் அடையாளம் என்பது அழுத்தமாகப் பதிந்து விடாதா?

வருங்கால தலைமுறையிடமிருந்து ஒரு சிறந்த இலக்கியவாதி வரலாம், ஒரு தொல்லியல் அறிஞர் தோன்றலாம். சிறந்த சமையல் கலைஞர் இருக்கலாம். ஆனால் சமூகத்தின் தனிநபர்களுக்கு அவர்களுக்குள் இயல்பாக எழும் திறமைகளையும் உருமாற்றங்களையும் கனவுகளையும் மலர விடாமல் சினிமா எனும் ராட்சச மிருகம் நசுக்கி சிதைத்து கவர்ந்து தனக்குள் செரித்துக் கொண்டிருக்கும் ஒரு சமகால பயங்கரத்தின் அபாயத்தை உணராமல் அதை எவ்வாறு இச்சமூகம் தனக்குள் அனுமதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிய எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. 'தமிழ்நாட்டில் தடுக்கி விழுந்தால் கவிதை எழுதுபவரின் மீதுதான் விழ வேண்டும்' என்று ஒரு காலத்தில் புற்றீசல்களாக புறப்பட்டுக் கொண்டிருந்த கவிஞர்களை கிண்டலடித்ததைப் போலவே இன்று வெளிப்படையாகவோ அல்லது ரகசியமாகவோ  சினிமாவின் கனவுகளில் வாழும் நபர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இன்று எந்தவொரு இளைஞரை சந்தித்து உரையாடினாலும் அவர் வேறு ஒரு துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் கூட அவரின் கண்கள் ரகசிய பெருமூச்சுடன் சினிமாவை நோக்கித்தான் இருக்கிறது. அந்த கனவு நாற்காலியில் அமர லட்சக்கணக்கானவர்கள் முட்டி மோதுகிறார்கள். ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சமும் திறமை சார்ந்தோ அல்லது அதிர்ஷ்டம் சார்ந்தோ அந்த நாற்காலியில் தற்செயலாக அமர்ந்தவரின் மீதுதான் விழுகிறது. அது கூட தற்காலிகம்தான். நாற்காலியில் இருப்பவர் இரண்டு திரைப்படங்களில் தோற்று விட்டால் அங்கிருந்து தூக்கி எறியப்பட்டு வேறு ஒரு புதியவர் வந்து அமர்கிறார். ஆனால் அந்த நாற்காலியின் பின்னேயுள்ள இருளில் தோற்றுப் போன லட்சக்கணக்கானவர்கள் விரக்தியுடன் நிற்பது எவர் கண்களிலும் படவில்லை. விழுந்தாலும் பலர் அந்த குரூர நிர்வாண உண்மையை பார்க்க விரும்பாமல் என்றாவது நாற்காலியில் அமர்ந்து விடும் அதிர்ஷ்டம் கிடைத்து விடும் என்கிற கனவிலேயே வாழ விரும்புகிறார்கள்.

மஞ்சள் வெளிச்சத்தில் அமர்ந்து பெருமிதமாக உரையாடும் நபரைப் பார்த்த பரவசத்தில் அதன் பின்னுள்ள உண்மை அறியாத இன்னும் மேலும் பல புதிய நபர்கள் நாற்காலிக்காக போட்டியிட வந்து கொண்டேயிருக்கின்றனர். பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைய வேண்டிய ஒரு சமூகம் சினிமாவின் மீதுள்ள கவர்ச்சியினால் சொரணையிழந்து காயடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை வேறு எந்த வளர்ந்த நாடுகளின் தேசத்திலாவது உள்ளதா?

முன்பெல்லாம் அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் இடம் கிடைக்காமல் வேறு வழியில்லாமல் இலக்கியம் படிக்க முன்வருபவர்கள், சமூகத்தின் மையத்தில் முண்டியடித்தாவது இடம்பிடிக்க தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழியாக சினிமா இருந்தது. ஆனால் இன்று ஊடகங்கள் சினிமாவிற்கு தரும் முக்கியத்துவம் காரணமாகவும் குறுகிய காலத்திலேயே  புகழும் பணமும் கிடைக்கும் துறையாக சினிமா இருப்பதாலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படித்தவர்களும் அதில் தொடர வேண்டிய பணிகளை உதறி விட்டு சினிமாவில் தஞ்சமடையுமளவிற்கு ஏறத்தாழ இளைய தலைமுறையினரின் அனைத்து மனதுகளிலும் சினிமா என்பது நீறு பூத்த கனவாக பதிந்திருப்பதை காண முடிகிறது. இப்படி சினிமா என்பது ஒரு ராட்சத விதையாக தன் கால்களை மிக ஆழமாக இச்சமூகத்தில் ஊன்றி வளர்ந்து பிரம்மாண்ட விருட்சமாக ஆகியிருப்பது யார் காரணம்? நம்மிடமுள்ள சினிமா மோகமா அல்லது இதை ஊதிப் பெருக்கும் ஊடகங்களா அல்லது இரண்டுமே ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றனவா என்பது சிந்திக்கப்பட வேண்டியது.

இத்தனை பெரிய மக்கள் திரளுடைய தேசத்தில் சமகாலத்தில் நாம் எந்தெந்த துறைகளில் உலக அளவில் சாதித்திருக்கிறோம் என்று பார்த்தால் சில அபூர்வ விதிவிலக்குகளைத் தவிர பெரிதாக  ஒன்றுமேயில்லை என்கிற கசப்புதான் உண்மையில் மிஞ்சுகிறது. கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளத்துடன் விளங்குகிறோம் என்றாலும் அதிலுள்ள ஊழலும் முன்தீர்மானிக்கப்ட்ட நாடகங்களும் அந்தப் பெருமையை அனுபவிக்க முடியாததாக ஆக்கி விடுகிறது. சினிமா மோகம் மற்ற துறைகளின் மீதான ஆர்வத்தையும் வளர்ச்சியையும் நசுக்குவதைப் போலவே கிரிக்கெட்டும் பன்னாட்டு கம்பெனிகளின் ஆதரவோடு மற்ற விளையாட்டுக்களை ஒழித்து அதில்தான் வளர்கிறது. இலக்கியத்தில்,.. மருத்துவத்தில்... உலகம் பாராட்டும் படியாக ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பாவது இந்த தேசத்தில் நிகழ்ந்திருக்கிறதா? ஒரு விரல் மாத்திரம் பெரிதாக வீங்கியிருப்பது போல அதிகம் சம்பாதித்து சமூகத்தில் பொருளாதார சமநிலையின்மையை ஏற்படுத்தும் கணினித் துறையினர் உண்மையில் சுயமாக ஒன்றையும் கண்டுபிடிக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூலியாக இருப்பதிலேயே திருப்தியடைந்து விடும் அவல நிலையைத்தான் நடைமுறையில் காணமுடிகிறது.

சரி. இப்படி சினிமா மோகத்திலேயே மூழ்கிப் போயிருக்கும் ஒரு துருப்பிடித்த சமூகம் அந்தத் துறையிலாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட அளவிலாவது சாதனையை செய்திருக்கிறதா என்று பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. காலங்காலமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதே ஆக்ஷன் மசாலாக்களும் சென்ட்டிமெண்ட் குப்பைகளும் வேறு வேறு வடிவில் வேறு வேறு நபர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அட என்று ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒரு பகுதியை ரசித்து வியந்தால் கூட அது வெளிநாட்டுத் திரைப்படத்தின் டிவிடியிலிருந்து உருவப்பட்டது என்பது பிற்பாடு தெரிய வருகிறது. இந்த மண் சாாந்த கலாசாரத்தின் பின்புலத்திருந்து உருவான படைப்புகளோ சுயமான திறமைகளின் உருவாக்கங்களோ ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம். திரைப்படங்களை உருவாக்குவதில் உலகிலேயே அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஒரு தேசம் பல்லாண்டுகளாக ஆஸ்கர் விருது என்கிற கனவுடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டேயிருப்பது இன்னொரு பரிதாபம். படைப்பாளிகளின் நிலை ஒருபுறம் இவ்வாறு என்று பார்த்தால் ரசனை என்கிற அளவில் கற்காலத்திலேயே தேங்கிப் போயிருக்கும் பார்வையாள சமூகமும் இவ்வகையான அரைவேக்காட்டு குப்பைகளுக்கு ஆதரவளித்து முதலாளிகள் உருவாக்கும் சந்தைக் கலாச்சாரத்திற்கு பலியாகிக் கொண்டிருக்கிறது.

சினிமா என்பது நம்முடைய பொழுதுபோக்கு நேரத்து கேளிக்கையின் ஒரு பகுதி. அவ்வளவுதான். அதில் காக்கும் அவதாரங்களாக சித்தரிக்கப்படுபவர்கள் நிஜத்திலும் நம்மை காக்க முன்வருவார்கள் என்றெண்ணி அவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கும் முட்டாள்தனத்தை நாம் நிறுத்திக் கொள்வது நல்லது. சினிமாவைத் தாண்டியும் உலகின் பல அறிவுசார் விஷயங்களும் சாதனைகளும் நம்மால் அறியப்படக்கூடாமல் இருக்கின்றன. சினிமாவையும் அது தொடர்பான நபர்களையும் பளபளப்பான கனவுகளுடன் முன்நிறுத்தும் ஊடகங்களை ஓரளவில் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்களின் வெளிச்சத்தில் பூதாகரமாய் வளர்ந்து நிற்கும் சினிமா என்னும் அந்த மஞ்சள் பலூனை உடைக்க வேண்டிய நேரம் இது. இன்னமும் சினிமாதான் உலகம் என்று கிணற்றுத் தவளையாய் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் எல்லா விதத்திலும் நம்மை வேகமாக கடந்து போகும் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு பாமரர்களின் தீவுப்பிரதேசமாய் நாம் ஆகி விடுவோம். 

- உயிர்மை - ஜூலை 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 
suresh kannan

1 comment:

www.rasanai.blogspot.com said...

ji

class "CLASS" for the mass. naanum ithu pondru avvappozhuthu ennuvathundu. cinemavukku kidaikkum thaguthikkum mearpatta mukkiyathuvam nitchiayamaga kuraithu kattukkul kondu varuvathum makkalin rasanaiyai meambaduthuvathume nam anaivarukkumana kadamai ena ninaikkiraen. migavum arumaiyana katturai. nandri
anbudan
sundar g rasanai chennai