Sunday, December 30, 2012

கும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...


இரா.முருகனின் சிறுகதையில் வரும் ஒரு பகுதி (தோராயமாக) இன்னமும் என் நினைவிலிருக்கிறது. பதின்ம வயது இளைஞர்கள் 'அந்த மாதிரியான காட்சிகளை' எதிர்பார்த்து ஓர் ஆங்கிலப் படத்திற்குச் செல்வார்கள். ஆனால் படத்தில் அவ்வாறான 'காட்சிகள்' எதுவும் இருக்காது. படம் முடிந்து வரும் போது தங்களுடைய ஏமாற்றத்தை மறைக்கின்ற பாவனையுடன் இளைஞர்களில் ஒருவர் சொல்வார் "வக்காலி.. காட்டுக்குள்ள காமிராவை எப்படி எடுத்துருக்கான்ல?".

கும்கி திரைப்படம் பார்த்து விட்டு திரும்பும் பார்வையாளர்களின் கருத்தும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கிறது.

கும்கியில் ஒளிப்பதிவு பாராட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறதென்றாலும் தொழில்நுட்பமும் காடசியின் அழகியலும் மட்டும்தானா சினிமா?. ஏன் இப்படி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் காதலை மாத்திரம் பிரதானமாக வைத்துக் கொண்டு (அதையும் அரைகுறைப் புரிதலுடன்) மற்றவற்றை நுனிப்புல் மேய்ந்து ஒப்பேற்றி விட்டு 'நல்ல சினிமா' எடுத்திருக்கிறேன் என்று அலட்டிக் கொள்கிறார்கள்?.

'நல்ல நேரம்' 'அன்னை ஓர் ஆலயம்" ' சில இராமநாராயணன் திரைப்படங்கள்.. என இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் நாம் வெறும் சர்க்கஸ் யானைகளையும் விளையாட்டு சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். கும்கியில் ஒரு யானையும் பாகனும் பிரதான பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன. எத்தனை அருமையான வாய்ப்பு?. யானைகளைப் பற்றியும் அதற்கும் பாகனுக்குமான உறவைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எத்தனை நுண்தகவல்களை திரைப்படததின் உள்ளீடாக சுவாரசியமாக சொல்லியிருக்கலாம்?. யானைப்பாகன் களிடமிருந்து தரவுகளை திரட்டியும், 'காடு' என்கிற அற்புதமான நாவலை எழுதின ஜெயமோகனைப் போன்றவர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு காட்சிகளையும் திரைக்கதையையும் அமைத்திருந்தால் 'கும்கி' எத்தனை அற்புதமான படமாக அமைந்திருக்கும். இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் சாலையோரத்தில் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடுகின்றவனைப் போன்ற வாய் ஜாலத்துடன் வெறும் சவடாலிலேயே கும்கி முடிய வேண்டியிருந்த அவலம் நேர்ந்திருக்காது.

யானைகளைப் பற்றின நுண்தகவல்களை தராமலிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதனை ஏதோ எம்.என்.நம்பியார், வீரப்பா மாதிரி கொடூர வில்லனாக சித்தரித்த பிழையை என்னவென்பது? விலங்களும் பறவைகளும் மனித குலத்திற்கு எதிரானது், பயங்கரமானது என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில்  'The Birds' படத்தில் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கும் 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் சித்தரித்திருந்தது மிகுகற்பனை என்று விட்டாலும் கும்கியில் சித்தரித்திருப்பது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். 'ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. யானைகளின் வெறிச்செயல்' என்றெல்லாம் வெகுஜன அச்சு ஊடகங்கள் கட்டமைத்துத் தரும் அதே பொய்ச் செய்தியை கும்கியும் மீண்டும் காட்சி வடிவில் சொல்கிறது. விலங்குளின் வாழ்விடங்களையும் நீராதாரங்களையும் தன்னுடைய பேராசையால் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மனித இனம், வாழ்விற்கான அவற்றின் போராட்டத்தை 'வெறிச்செயல், கொலைச்செயல்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. (இத்தனை முக்கியமான செய்தியை போகிற போக்கில் ஊர்த்தலைவர் ஒரு காட்சியில் சொல்வதோடு விட்டிருக்கிறார் இயக்குநர்).

யானைகளை மாத்திரமல்ல, பழங்குடி இன மக்களையும் அரைகுறைப் புரிதலாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். கும்கி யானைக்கும் கோயில் யானைக்கும் வித்தியாசம் அறியாத அடிமுட்டாள்களாகவா அவர்கள் இருப்பார்கள்? மேலும் காலம் காலமாக காட்டைச் சுற்றி வாழும் அவர்களுக்கு விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது? காட்டில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? அவற்றிற்கு இடையூறாக இல்லாமல் புழங்குவது எப்படி என்பதெல்லாம் தெரியாமலா இருக்கும்? ஆனால் இந்தப்படம் முழுக்க அவர்கள் யானையைப் பற்றி எதிர்மறையாகவும் அச்சத்துடனும் பேசிக் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விலங்குகள் இரை காரணமாக அன்றி மற்ற உயிரினங்களின் மீது தாக்குதல் நடத்துவதை விட தம்முடைய பாதுகாப்பையே முதலில் யோசிக்கும். கூடுமானவரை ஒதுங்கியே செல்லும். அது நிகழாத பட்சத்தில்தான் தற்காப்பிற்காக தாக்குதலைத் தொடுக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கொம்பன் எனும் ஆண் யானை, அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களை மிகக் கொடூரமாக குத்திக் கொல்வது போல சித்தரிக்கப்படுகிறது. இப்படம் சித்தரிக்கும்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமலா அறுவடை செய்வார்கள்? யானைகளின் தடத்தில் மனிதர்கள் குறுக்கிடும் போது - அதுவும் யானைக்கூட்டங்களால் அல்ல, ஒற்றை யானை எனும போதுதான் - ஆபத்து நேரிடலாம். (இந்தப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்).

படத்தில் பாத்திரங்களின் வார்ப்பில், காட்சிகளின் சித்தரிப்புகளில் நிறைய தர்க்கப்பிழைகளும் உள்ளன.

இதில் பொம்மனாக வரும் யானைப் பாகனும், மாணி்க்கம் என்கிற யானையும் சிறுவயது முதலே பழகுவதாகவும் இருவரும் பாசத்தில் பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாகன், யானை ஒருமுறை சிறுகுற்றம் புரிந்த காரணத்தினால் நடு்ச்சாலையிலேயே யானையுடன் கோபித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறான். யானையும் பின்னாலேயே வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள மக்கள் பீதியுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். பாகனோ இது எதையும் கவனிக்காமல் அமர்ந்திருக்கிறான். வனக்காவலர்கள் யானையை பிடித்துச் செல்கிறார்கள். ஒரு நல்ல பாகன், யானையின் மீது உண்மையான அக்கறையுடையவன், இந்த சூழ்நிலைகளை தவிர்ப்பானா, மாட்டானா? அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா? அவன் அந்த ஊரில் தங்குவதுதான் பிரதான நோக்கம் என்றால் அதற்கான வழியா இல்லை?

படம் நெடுக கொம்பன் யானையைப் பற்றிய பிம்பம் கட்டமைத்துக் கொண்டேயிருக்கப்படுகிறது. (அந்த ஊரிலேயே ஒரே ஒரு யானைதான் இருக்கிறது போல). படத்தில் இரு வனக்காவலர்கள் வருகிறார்கள். கொம்பன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போல.. 'கொம்பன் வந்தான்னா தெரியும் சேதி' என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காமெடியாக இருக்கிறது. ஊரே அந்த யானையைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால் பாகனுடன் வந்திருக்கும் தம்பி ராமையாவிடம் 'அந்த யானையை ஒரே ஆளா நீங்க அடிச்சு கொன்னுடுவீங்க இல்ல' என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். காமெடியாம். பொம்மன், அல்லியை கவர்வதற்கு முன்பாகவே யானை மாணிக்கம் அவளை காப்பாற்றி முன்னதாகவே கரெக்ட் செய்து விடுகிறது.

வின்னர் படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' பாத்திரம் தமிழ் சினிமாவில் இன்னுமும் சாஸ்வதமாக தொடர்ந்து உலவிக் கொண்டிருப்பது தம்பி ராமையாவின் பாத்திரத்தின் மூலம் நிருபணமாகியிருக்கிறது. மனிதர் மாடுலேஷனில் பின்னியிருந்தாலும் அவரது மைண்ட் வாய்ஸில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது சலிப்பைத் தந்தாலும், அவர் இல்லாத 'கும்கி'யை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சொதப்பலாகியிருக்கும். வடிவேலுவால் தொடர்ந்து நடிக்கப்பட்டு நைந்து போனதுதான் என்றாலும், தம்பி ராமையாவின் பாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கலாம் என நம்புகிறேன். 'பருத்தி வீரன்' கார்த்தியை நினைவுப்படுத்தினாலும் விக்ரம்பிரபு தன்னால் ஆன அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தூக்கத்தைக் கெடுக்குமளவிற்கு அழகாக இருக்கிறார் லக்ஷ்மி மேனன். பழங்குடி இன மக்களுக்கான ஒப்பனையை விட சேலையில் கூடுதல் அழகு. படத்திற்கு முன்னதாக சிறப்பான அனுபவத்தை தந்த பாடல்களுக்கு ஏற்ப காட்சிகள் சிறப்பாக அல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

யானை என்றாலே டிரம்ப்பெட் மாதிரி ஒரே மாதிரி பிளிறல் ஒலியை உபயோகித்துக் கொண்டிருந்த வழக்கத்திற்கு மாறாக யானை எழுப்பும் சன்னமான ஒலிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. கோயில் யானையான மாணிக்கம், முரட்டு காட்டு யானையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற பார்வையாளனின் அவநம்பிக்கையை, அந்தச் சண்டைக்கு முன்னால் அதற்கு மதம் பிடித்திருப்பதாக சித்தரித்திருப்பதின் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு. யதார்த்தத்தை உணர்ந்து காதலை இருவரும் தியாகம் செய்வது மெலோடிராமாவாக தெரிந்தாலும் அந்த முதிர்ச்சிக்காக பாராட்டு.

வித்தியாசமான படம் என்கிற பாவனையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கப்படும் காதலைத்தான் கும்கியும் சொல்கிறது. வேறான்றுமில்லை.

இப்போது பதிவின் தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்.


suresh kannan

7 comments:

Anonymous said...

நல்லாவே பின்னிட்டீங்க சு.க.

இப்படி ஒரு விமர்சனத்துக்குத்தான் காத்திருந்தேன். பலரும் ஏதோ ஒரு வகையில் வழுக்கிவிழுந்து, படம் நல்லாருக்குன்னு எழுத, நீங்க சரியா புடிச்சிருக்கீங்க.

அற்புதமான திரியைப் பிடித்தும், அதைப் பற்றிச்செல்ல 'காதோல்' மட்டும்தானா கிடைத்தது, பிரபு சாலமனுக்கு? கொடுமை. காட்டுவாசிகளின் நியாயம் சொல்லப்படாமலேயே போய்ருச்சு.
யானை மற்றும் பாகன்கள் பிணைப்பு,பிரச்சினைகள், கும்கி யானைகளின் வாழ்க்கை, யானைகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று பல வாய்ப்புக்களை வீணடித்துவிட்டு, ஒரு நல்ல படத்தை எடுக்கும் வாய்ப்பையும் தவறவிட்டு விட்டார் இயக்குநர். தம்பி ராமையா இடத்தில் வடிவேலுவை நானும் பார்த்தேன். இருந்தும் அவர் இப்படத்தின் மிகப்பெரிய ஆறுதல்தான்.

நீங்கள் போட்ட குறைகள் லிஸ்ட்டில், விடுபட்டது, லட்சுமிமேனனுக்கு டப்பிங் பேசியவரின் அக்ஸென்ட் காட்டுவாசிப் பெண்ணுக்கு மாதிரி இல்லை - ஏதோ சென்னையின் பிரபல பெண்கள் கல்லூரியில் ஹோம் சயின்ஸ் படிக்கும் மாணவிக்குப் பேசுவது போல பேசியிருக்கிறார்.

பெயரில்லா பெரிய பெருமாள் said...

முதல் முறையாக வரிக்கு வரி உங்களுடன் ஒத்துப் போகிறேன். இதுவரை நான் உங்கள் பதிவுகளுக்கு கமெண்ட் போட்டதில்லை. அதுவும் முதல் முறையாக.

/*இதில் பொம்மனாக வரும் யானைப் பாகனும், மாணி்க்கம் என்கிற யானையும் சிறுவயது முதலே பழகுவதாகவும் இருவரும் பாசத்தில் பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாகன், யானை ஒருமுறை சிறுகுற்றம் புரிந்த காரணத்தினால் நடு்ச்சாலையிலேயே யானையுடன் கோபித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறான். யானையும் பின்னாலேயே வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள மக்கள் பீதியுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். பாகனோ இது எதையும் கவனிக்காமல் அமர்ந்திருக்கிறான். வனக்காவலர்கள் யானையை பிடித்துச் செல்கிறார்கள். ஒரு நல்ல பாகன், யானையின் மீது உண்மையான அக்கறையுடையவன், இந்த சூழ்நிலைகளை தவிர்ப்பானா, மாட்டானா? அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா? அவன் அந்த ஊரில் தங்குவதுதான் பிரதான நோக்கம் என்றால் அதற்கான வழியா இல்லை?*/

படம் பார்க்கும் போது எனக்கு இதே கேள்வி தான். உயிருக்கு உயிரான யானையை, காதலுக்காக, அதுவும் ஒரு தலை காதலுக்காக அவ்ளோ பெரிய ரிஸ்க் எடுப்பானா? சோறு போடுற (சாமியை) பொழப்பை பலி கொடுக்க எவனாவது துணிவானா?

Essex Siva said...

// 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள்.//

இந்த உதாரணம் சரியாகப் படவில்லை. இந்த ஜுராஸிக்பார்க் படங்களில் எப்போதோ அழிந்து போன ராட்சச உயிரினத்தை மீண்டும் "உயிர்" கொடுத்து உயிரனப் பூங்காவில் இருத்தி பணம் பண்ணும் ஆசை விபரீத விளைவுகளைத்தான் உண்டாக்கும் என்றுதான் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
"The Birds" பற்றியும் பேசலாம். ஆனால் உங்கள் கட்டுரையின் மூலப்பொருள் இவைகளைப்பற்றி அல்ல என்பதால் விட்டுவிடலாம்!
கட்டுரையின் கடைசி வரியிலிருந்து தலைப்பைப் தலை நிமிர்த்தி பார்க்கவைத்தது புன்னகையை வரவழைத்தது!

சிவா கிருஷ்ணமூர்த்தி

பிரதீப் said...

naan vimarsanam ezhutha thevaillai. naan nenachathellam solliteenga :-) nandri!

பிரதீப் said...

naan solla nenachathellam neenga solliteenga...enakkoru velai michcham!

சிவ.சரவணக்குமார் said...

கொம்பன் - கும்கி மோதல்தான் கதை......அது ஒருமுறைதான் நிகழ முடியும்....எனவே கதையை ஓட்டுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் விழித்திருக்கிறார்......

எந்த ஒரு மலைவாசியும் யானை இறப்பதால் மகிழ்ச்சி அடைய மாட்டான்......மிருகங்களின் பாதையில் குறுக்கிடும் மனிதர்களைப்பற்றி சுட்டிக்காட்ட துணிவில்லாவிட்டாலும் , மிருகங்களை ஏதோ வில்லன் போல் சித்த்கரிப்பதை திரையுலகத்தினர் உடனடியாக நிறுத்த வேண்டும்......

Anonymous said...

சார் நான் சென்று வந்த அழகிய அருவிகள் பற்றிய சிறு குறிப்புகள்

http://blogisdummy.blogspot.in/search/label/waterfalls%20in%20kerala%20india


http://blogisdummy.blogspot.in/search/label/waterfalls%20in%20tamilnadu%20india