Monday, December 03, 2012

நீர்ப்பறவை


இயக்குநர் சீனு ராமசாமியின் முந்தைய திரைப்படமான 'தென்மேற்கு பருவக்காற்றை' பார்த்திராத, இயக்குநரைப் பற்றின எவ்வித அறிமுகமுமில்லாத நிலையில் 'நீர்ப்பறவை'யை ஓர் வெற்றான மனநிலையில் பார்க்கச் சென்றிருந்தேன். ஒரு நல்ல புதினத்தை வாசித்த உணர்வை திரைப்படம் தந்திருந்தாலும் திரைக்கதையை இன்னமும் நவீனமான மொழியிலும் சுவாரசியத்திலும் சொல்லியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். பார்வையாளர்களை படத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வைக்கும் ஒரு வலுவான கொக்கியில்தான் படம் துவங்குகிறது.

'உயிரோடு இருக்கிறானா, அல்லவா' என்ற நிலைமை தெரியாத, கடலுக்குள் காணாமற் போன கணவனுக்காக பல வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் எஸ்தரோடு படம் துவங்குகிறது. (பதினாறு வயதினிலே 'மயிலு' இன்னும் சாகவில்லை). ஆனால் அந்தக் கணவன் இறந்து போய் அவனுடைய பிணம் வீட்டியிலேயே புதைக்கப்பட்டிருப்பதை எஸ்தரின் மகனே வெளிப்படுத்துகிறான். காவல்துறை எஸ்தரை கைது செய்து விசாரண செய்கிறது. "ஆம். என் கணவரை நான்தான் கொன்றேன்" என்கிறாள் எஸ்தர். பல வருடங்களாக கணவனுக்காக காத்திருந்த எஸ்தரே தன் கணவனை ஏன் கொன்றாள்?' எனும் சுவாரசியமான முரண். எத்தனை அருமையான துவக்கம்?..இதை அறிந்து கொள்ள படத்தின் இறுதி வரை சில சலிப்பூட்டும் காட்சிகளைத் தாண்டி காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பும் உப்புச் சப்பற்ற முடிவால் மடிந்து போகிறது. இயக்குநர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அருளப்ப சாமி மற்றும் எஸ்தரின் காதலுக்கு இடையில் தமிழக மீனவர் பிரச்சினையும் இடையிடையில் ஓரமாக (சமுத்திரக்கனியின் பாத்திரம் மூலமாக) சற்று காரமாக சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கச்சாப் பொருளான காதலை தவிர்த்து ஓர் சமூகப் பிரச்சினையை ஊறுகாயாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மால் திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான சூழலே. அப்படியே படமெடுத்திருந்தாலும் 'துப்பாக்கி' போன்ற வணிக வழிப்பறிகளுக்கு தரும் வரவேற்பை இந்த மாதிரியான படங்களுக்கு நம் சுரணையற்ற சமூகம் தருமா என்பதையும் இணைத்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்திற்கு பிரதான முதற் காரணம் சுனைன்யா.தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் பொம்மைகளாகவும் லூசுத்தனமாகவும்  சித்தரிக்கப்படும் ஹீரோயின்களுக்கு இடையில் இதைப் போன்ற பாத்திரத்தைப் பார்த்து நீண்ட காலமாகிறது.  இவரின் தோற்றத்தை வடிவமைத்தவர்களை நிச்சயம் பாராட்டலாம். வழித்து வாரப்பட்ட கோண வகிடும், காதுகளின் அருகே சுருள் முடியும், சட்டை பாவாடையும்.. என ஒரு கிறித்துவப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகமில்லாத நிலையில் இவரது கண்களும் முகபாவங்களுமே பல இடங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றன. திறமையாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

படத்தில் பல திறமையான நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சரண்யா. தமிழ் சினிமாவின் 'அம்மா'வாக  மனோரமாவிற்கு இவரை மாற்று செய்யும் அபாயமிருந்தாலும் இவரின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் சுவாரசியம். 'ஆணி வந்தா டாப்பா வருவான்' ஹேங்ஓவரில் இருந்து உடனே வெளிவருவது இவருக்கு நல்லது. 'பூ' படத்தில் பேனாக்காரராக நடித்த 'ராம்' சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகனை ஒரு மீனவனாக ஆளாக்க முடியவில்லை என்று வருந்துமிடங்களும், குடிகார மகனை குணப்படுத்திய மருத்துவருக்கு நெகிழ்ச்சி்யுடன் மீன் பரிசளிப்பதும் தன்னுடைய பெயர் பொறித்த படகை தடவிப் பார்ப்பதும்.. என  நல்ல பங்களிப்பு. வடிவுக்கரசி போன்ற திறமைசாலிகளை இன்னமும் நம்மால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நந்திதா தாஸ் பாவம்.

படத்தின் சில இடங்களில் பாத்திரங்களின் மனநிலைக்குள் என்னால் உள்ளே செல்ல முடிந்தது. குறிப்பாக அருளப்பசாமி - எஸ்தர் காதல் தொடர்பான காட்சிகள். குடிகார இளைஞனாக இருக்கும் அருளப்பசாமிக்குள் எஸ்தர் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். அவன் குடிநோயிலிருந்து வெளிவரும் போது நானும் மகிழ்ச்சியடைந்தேன். இவ்வகையான பரவச தருணங்கள் படத்தில் அபூவர்மாகவே நிகழ்கின்றன. மற்றபடி படம் சற்று சலிப்பாகவே நகர்கிறது.

வசனம் - ஜெயமோகன் மற்றும் சீனுராமசாமி. மீனவர் பிரச்சினை தொடர்பான பஞ்ச் டயலாக்குகளை இயக்குநர் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி பாத்திரங்களின் யதார்த்த மொழியில் படம் நெடுக ஜெயமோகன் வெளிப்படுகிறார். அருளப்பசாமி காமம் தருகிற அவஸ்தையில் மனைவி எஸ்தரிடம் மல்லுக்கட்டுகிறான். அவளோ சம்பாதிக்க போகச் சொல்லி மல்லுக் கட்டுகிறாள். இந்தக் காட்சிக் கோர்வைகள் அருமையாக பதிவாகியிருக்கின்றன.

விலகிப் போகும் மனைவியிடம் "முதுகைப் பாரு... படமெடுக்கிற பாம்பு மாதிரி" என்கிறான். அருமையான படிமம். இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைவதில் இம்மாதிரியான சலுகையான ஆச்சரியங்கள் பார்வையாளனுக்கு கிடைக்கின்றன.

எந்த சாதிப்பின்புலமென்று தெரியாத, இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைக்கும்  அகதியான அருளப்பசாமியின் வாழ்க்கையில் மூன்று மதங்கள் குறுக்கிடுகின்றன. கிறித்துவம் அவனை தத்தெடுத்துக் கொள்கிறது. இந்து மதம் (காஞ்சி சாமியார் படம்) அவனை நல்வழிப்படுத்துகிறது. இசுலாமியம் அவன் பொருளாதார ரீதியில் உயர உதவுகிறது. இப்படியாக 'சமய நல்லிணக்கத்தோடு' சிந்தித்திருக்கிறார் இயக்குநர். (?!)

நெய்தல் காட்சிப் பரப்புகள், சர்ச்சின் உட்புறம் போன்றவை சில தருணங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக டாப் ஆங்கிள் காட்சிகள். தேவையில்லாத ஒரு சண்டைக்காட்சியில் அருளப்ப சாமியும் இன்னொருவனும் கடலில் ஓடிவரும் போது கேமரா மேலிருந்து நோக்குகிறது. நீல நிறப் பின்னணியில் இருவரும் துரத்தி வரும் தடயங்கள் உடனான காட்சி அற்புதம். எடிட்டரோ, அல்லது இயக்குநரோ சொற்ப கணத்திலேயே ஏனோ அதை வெட்டி விட்டிருக்கிறார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி வலுவான துவக்கத்துடனான திரைக்கதை, அதை தக்க வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக முடிவது ஏமாற்றம். என்றாலும் வழக்கமான வணிக சினிமாவிற்கு இடையில் ஒரு புதினத்தை வாசித்த அனுபவத்தைத் தருகிற 'நீர்ப்பறவை'யை ஒரு முறையாவது காணலாம். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகள் நிகழ்வதில்லை என்று புகார் சொல்கிற சினிமா ஆர்வலர்கள் 'நீர்ப்பறவைக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் நமக்கு 'துப்பாக்கிகளும் மாற்றான்களுமே' மிஞ்சும்.


suresh kannan

7 comments:

King Viswa said...

BTW,

The Heroin's Name is SUNAINA & Not Sunanya.

Kaarthik said...

நிச்சயம் ஒரு நல்ல முயற்சி. ஆனால் முதல் பாதியில் அருளப்பசாமியை மொடாக் குடிகாரனாகக் காட்டும் காட்சிகள் பயங்கர இழுவை. அவன் ஈஸ்தரைச் சந்திக்கும் வரை பொறுமையைச் சோதித்துவிட்டான். Few dramatic scenes could have been more subtle.

Battinews said...

சரியாக சொன்னீங்க நம்மளை போன்ற ஒரு சிலர் தான் இவற்றை பார்த்து புரிந்துகொள்வார்கள் மற்றவர்களெல்லாம் துப்பாக்கி அது இது என இருப்பாங்க

Yaathoramani.blogspot.com said...

கொள்ளாமல் சாதாரணமாக முடிவது ஏமாற்றம். என்றாலும் வழக்கமான வணிக சினிமாவிற்கு இடையில் ஒரு புதினத்தை வாசித்த அனுபவத்தைத் தருகிற 'நீர்ப்பறவை'யை ஒரு முறையாவது காணலாம். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகள் நிகழ்வதில்லை என்று புகார் சொல்கிற சினிமா ஆர்வலர்கள் 'நீர்ப்பறவைக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் நமக்கு 'துப்பாக்கிகளும் மாற்றான்களுமே' மிஞ்சும்//


. அருமையாகச் சொன்னீர்கள்
அருமையான விமர்சனம்
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

மட்டமான படம்

Unknown said...

விஜய் படம் நன்றாக இல்ல என்றால் பரவாஇல்லை படம் நன்றாக இருந்து ஓடிக்கொண்டு இருக்கும் போதே அவரின் படத்தை கேவலமாக சொல்வது அவரை பலர் வேண்டுமென்றே தவறாக சித்தரிப்பதை காட்டுகிறது. படம் நன்றாக இல்லை என்றால் வசுலும், விஜயை விமர்சிக்கும் பல அஜித ரசிகர்களும், ஏன் ஆனந்த விகடன் குமுதம் போன்ற பல பத்திரிக்கைகளும் ஏன் பாராட்ட வேண்டும். உங்களுக்கு எப்படி இருந்தால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் தான் படம் எடுத்து காட்டுங்கள் உங்கள் படம் எப்படி ஓடுகிறது என்று பார்ப்போம்.

madhavanbl@yahoo.com said...

padathil entha kuraiyum illai seenu ramasamy oru arapporattame nadathi irukkirar.