Friday, December 14, 2012

10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012


மாலை 7.15 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த பிரெஞ்சு திரைப்படம், துவக்க விழா சம்பிரதாயங்களின் காரணமாயும் 'அவர்களே, இவர்களே' காரணமாயும் சுமார் 08.30 மணிக்குத்தான் துவங்கியது. யாராவது குத்து விளக்கை இரண்டு நொடியில் ஏற்றி வைத்து விட்டு 'படம் போடப் போறாங்கப்பா' என்று சொல்லி விலகினால் தேவலை. இரவு நேர கடைசி ரயிலை பிடித்து அகாலத்தில் வீடு திரும்ப நேரும் என்னைப் போன்றவர்களுக்கு கடுப்பாய்த்தானிருக்கும். என்றாலும் முதல் நாள் என்பதாலும் துவக்க நாள் திரைப்படமான Amour -ஐ பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றி விட்டதாலும் இவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

என்றாலும் துவக்க நாள் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாக ஏ ஆர் ரகுமானின்  K M Music Conservatory மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். அசத்தி விட்டார்கள். கவாலி பாடகர்கள் போல் உடையணிந்திருந்த சுமார் 20 மாணவர்கள், மங்கள் பாண்டேயில் வரும் Al Maddath Maula பாடலை அற்புதமாகப் பாடினார்கள். சுஃபி பாணியில் அமைந்திருக்கும் இந்த கவாலிப் பாடலை ஏகாந்தமான நேரத்தில் கேட்டால் உத்தரவாதமாக கண்ணீர் பெருகும். 'ராசாத்தி என் உசுரு என்னுதில்ல (திருடா திருடா) 'ஊர்வசி ஊர்வசி' (காதலன்) பாடல்களை unplugged வெர்சனில் சேர்ந்திசையில் வெவ்வேறு தாளகதிகளில் சில மாணவர்கள் நின்று பாடியது அருமை. ரகுமானி்ன் 'ரோஜா' தருணங்கள் மனதில் நிரம்பி ஒரு நெகிழ்ச்சியை உருவாக்கியது. இன்னும் ஒரு ஹைலைட்டாக ரகுமானின் மகன் சிறிது நேரம் பியானோ வாசித்து காண்பித்தான். ருஷ்ய பியானோ பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் வாசித்த இசையும் அருமையாக இருந்தது. தமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர்,இயக்குநர் ஜனநாதன் பேசும் போது 'திரையிடப்படும் படங்களின் அட்டவணையில் தமிழ் படங்களை சேர்க்க வேண்டும்' என்று வைத்த வேண்டுகோளை சுஹாசினி ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என்கிற காவியங்களை உள்ளிட்ட அந்தப் பட வரிசையை பார்த்தால் சினிமா ஆர்வலர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும். அது சரி. சட்டியில் இருந்தால்தானே எடுப்பதற்கு?.

அமீர் பேசும் போது ஒரு சுவாரசியமான டிராமாவை அரங்கேற்றினார். 'நான் பல உலகப்படவிழாக்களுக்கு போயிருக்கிறேன். அங்கெல்லாம் அந்தப் பிரதேசத்தின் கலாச்சார அடையாளங்களையே வெளிப்படுத்துகிறார்கள். இங்குதான் நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து' கூட பாடப்படவில்லை' என்று கைத்தட்டலுக்கான கல்லா கட்ட, சரத்குமார் பேசும் போது இடையில் திடீரென்று தமி்ழ்த்தாய் வாழத்தை பாடி அனைவரையும் எழுந்து நிற்க வைத்து விட்டார்.

"அய்யா, தமி்ழ்க்காவலர்களே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஒரு புறம இருக்கட்டும், இது போன்ற சர்வதேச திரைவிழாக்களில் திரையிடும் தரத்திற்கான தமிழ் சினிமாவை முதலில் உருவாக்குங்கள்' என்று கூவ வேண்டும் போலிருந்தது.

'அடுத்த வருடத்திற்கான திரைவிழாவை ஒரே இடத்தில் அமையும் படியான நவீன கலையரங்கை அரசு கட்ட வேண்டும்' என்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தன் உரையில் தெரிவித்தார். (இவர் பேச ஆரம்பித்த போது அதுவரை இருந்த சூழல் மாறி மயிலை மாங்கொல்லையில் அமர்ந்திருந்த உணர்வு வந்தது.) கலைவாணர் அரங்கம் அமைந்திருந்த இடத்தில் இந்த நவீன அரங்கம் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்பட்டு விடுமாம். பார்க்கலாம்.

Amour திரைப்படம் பற்றி அடுத்த பதிவில். 

suresh kannan

2 comments:

Mohandoss Ilangovan said...

//இவர் பேச ஆரம்பித்த போது அதுவரை இருந்த சூழல் மாறி மயிலை மாங்கொல்லையில் அமர்ந்திருந்த உணர்வு வந்தது.//

இதெல்லாம் ஆறுபத்தாறு ஆவில் வராதா?

கோவை நேரம் said...

விமர்சனம் காண துடிக்கிறேன்