Thursday, April 14, 2011

buzz-ல் பஸ் பற்றி, சாய்பாபா பொங்கல், மனப்பாட இலக்கியம்

சமீபத்தில் Google buzz-ல் கிறுக்கியவை இவை. தஞ்சாவூர் கல்வெட்டுக்களில் இடமில்லாததால் இங்கே பதிந்து வைக்கிறேன். 
***


சென்னை மாநகர 'பல்லவன்' பஸ்களின் நவீன உள்வடிவம் குறித்த அதிருப்தி நீண்ட நாட்களாகவே இருக்கிறது. இங்கு அதைப் பற்றி எழுதுவதால் ஒரு உரோமமும் ஆகப் போவதில்லை என்றாலும் நடுத்தரவர்க்கத்தின் மன நமைச்சலாவது சற்று குறையலாம் என்றுதான்.

சமீபத்திய பேருந்துகளின் உள்வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்த அறிவிலி அதிகாரி குழுமம் யாரென்று தெரியவில்லை. வெளிநாட்டு பேருந்துகளின் வடிவத்தை காப்பியடித்ததெல்லாம் சரி.. ஆனால் அது மக்கள் தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவிலுள்ள நகரங்களுக்கு பொருந்துமா என்பதை சற்று யோசித்திருக்கலாம். அடித்தட்டு மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கான திட்டங்களை ஏஸி அறையில் மாத்திரமே இருந்து பழகியவர்கள் போடுவதால் வரும் கொடுமைகளில் இதுவொன்று.

இரண்டு பேர் அமரும் இருக்கைகளில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டுதான் அமர வேண்டியிருக்கிறது. மேலும் பெரிதும் உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வில்லாத சூழலில் கலோரி மலைகள் நிறைந்த நகரத்தில் இது மேலதிக யதார்த்த சிக்கல்களை முன்வைக்கிறது. சில இருக்கைகளில் (ஓட்டுநரின் பின்புள்ள இருக்கைகள் மற்றும் சக்கரப்பகுதிகளின் மேலுள்ள இருக்கைகள்) அமர்வதற்கு ஏணி தேவைப்படுகிறது. அப்படியே ஏறி அமர்ந்தாலும் உயரமான ஒட்டுத் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கிற அபாயம் போலவே இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகளுக்கு இடையே நிற்பவர்களின் பகுதி இன்னும் குறுகலாகியிருக்கிறது. இடிராஜாக்கள அசெளகரியப்படக்கூடாது என்பதற்காக இந்த சிறப்பு ஏற்பாடு போல. கற்பு, தமிழர் பண்பாடு, பெண் தெய்வம் என்றெல்லாம் வாய் கிழிய பேசும் பாசாங்குக்காரர்களை இந்தப் பேருந்துகளில் பயணிக்க வைக்கலாம். வயது வித்தியாசமின்றி பெண்கள் தங்கள் கற்பிதக் கற்பை தவணை முறையில் இழக்குமிடங்களில் நகரப் பேருந்துகளுக்கு முதலிடம் தரலாம்.

பேருந்து எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நின்று பயணிக்கும் நபர்கள் நெரிசலான நேரங்களில் கவனிப்பதற்கு அடிமைப் பெண் எம்.ஜிஆர் மாதிரியே குனிந்து நோக்கிக் கொண்டே வரவேண்டியிருக்கும். அப்படியாக பக்கவாட்டுப் புறங்களை இன்னும் கீழாக மறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் காற்று உள்ளே வருவதும் தடைபடுகிறது. சில பேருந்துகளில் தானியங்கி கதவு அமைத்து அந்த வழியையும் இறுக்க மூடி விடுகிறார்கள். (படியில் பயணிக்க முடியாதபடி உள்ளபாதுகாப்பு ஒன்றுதான் இதிலுள்ள பயன்) பேருந்தின் மேலே அமைக்கப்பட்டிருக்கும் வென்ட்டிலேட்டர்களும் கோளாறால் மூடிக் கொண்டிருந்தால் வெயில் காலங்களில் நரகம்தான்.

சாதாரணக் கட்டணங்களை கொண்ட பேருந்துகளை எளிதில் பார்க்கவே முடியாது. அதிலும் M என்ற போர்டு வைத்து அதிகம் காசு வசூலிக்கிறார்கள். ஆனால் அதே பேருந்து நிறுத்தங்கள்தான். M என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார் நண்பர். வேறென்ன MONEYதான். விரைவு்ப் பேருந்து என்பதெல்லாம் மறைமுகமாக அதிக காசு வசூலிப்பதற்குதான் பயன்படுகிறதே ஒழிய நகர நெரிசலான போக்குவரத்தில் அதுவொரு நகைச்சுவையே.

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது பேருந்துகளின் பழைய வடிவமே எவ்வளவோ தேவலை. நான் நகரத்திற்குள் செல்ல மின்ரயில்களையே பெரும்பாலும் உபயோகிக்கிறேன். புதிதாக் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மினரயில் வழி உள்ளதா என்பதையே முதலில் யோசிக்க வேண்டியிருக்கிறது. செலவும் குறைச்சல் என்பதோடு பேருந்து அலுப்பு என்பதும் கிடையாது.

நகரத்தில் புழங்குவதற்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாதது மிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது.
  ***
இன்றைய சூழலில் கூட ஒரு கவிதையையோ, செய்யுளையோ, பாடலையோ மனப்பாடமாக சொல்லக்கூடியவன்தான் சிறந்த வாசகன், ரசிகன் என்று அபத்தமாக நம்புகிறார்கள். குறிப்பாக பட்டிமன்றங்களில் உரத்த சப்தத்தோடு செயற்கையான உணர்ச்சியோடு சங்கப்பாடலை சொல்லிவிட்டால், பார்வையாளர்கள் புரியவில்லையென்றாலும் சொல்லப்பட்ட விதம் காரணமாகவே பரவசத்தோடு கையைத் தட்டும் பழக்கம் இன்னும் போகவில்லை.

அச்சு வடிவம் இல்லாத காலத்தில் ஒரு படைப்பை நினைவில்தான் இருத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஞாபகத்திலிருந்து சொல்லி வாய்மொழியாகத்தான் அது பரவ வேண்டியிருந்தது. அதற்குத் தோதாக எதுகையும் மோனையும் ஓசை நயங்களுடன் கூடிய சுருக்கமான வார்த்தைகள் 'ரூம் போட்டு யோசித்து' கருத்துக்களும் கற்பனைகளும் அதில் திணிக்கவோ அமரவோ வைக்கப்பட்டன.

அச்சுவடிவம் பரவலாக புழங்கின பிறகு, சுருக்க வடிவம் தேவையில்லாத உரைநடை புழக்கத்திற்கு வந்தே பல வருடங்கள் கடந்து விட்டன. கவிதையை ரசிப்பதென்பது அதை மனப்பாடமாக சொல்ல முடிவதே என்னும் சிலரின் (மூட) நம்பிக்கை சரியா என்பது விவாதத்திற்கு உரியது.
 
 ***  இன்றைய புலம்பல்: :)

நேற்று ஒரு வேலையாக குடும்பத்துடன் மைலாப்பூர் சென்றிருந்தோம். திரும்பும் வழியில் மனைவி சாய்பாபா கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நச்சரித்தார். அவர் சாய்பாபாவின் மித பக்தை. அங்கு தரப்படும் பிரசாதங்கள் சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்ததால் நானும் ஒப்புக் கொண்டேன். பெரும்பாலும் கீழ்/உயர் நடுத்தர குடும்பங்கள், நபர்கள். பக்தர்கள்.

எனக்கு வழிபடும் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாததால், குடும்பத்தினரை உள்ளே அனுப்பி விட்டு நுழைவு வாயிலுக்கு முன்னதாக பக்தர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அமைதியான அந்த சூழலே சற்று மனதைக் கவர்ந்தது. இந்துக் கோயில்களில் நான் வெறுக்கும் விஷயங்களில் பிரதானமானது அதன் சப்தம். சிறுமணியொலியாக ஒலித்துக் கொண்டிருந்த பாரம்பரியம், இயந்திரங்களுக்கு மாறி தணார் தணார் என்று ஒலிக்க ஆரம்பித்து விட்ட பெரும்பாலான கோயில்களில் காற்று வரும் வசதியின்றி, கூட்டத்தின் வியர்வை கசகசப்பும், வம்புப் பேச்சுகளும், குழந்தைகளின் அழுகைகளும், உரத்த உரையாடல்களும், குருக்களின் அலட்டல்களும் விரட்டல்களும் என எரிச்சலாக இருக்கும். நல்ல வேளையாக இங்கு அப்படியில்லை. (வியாழக்கிழமையன்று அப்படி இருக்குமோ என்னமோ. செவ்வாய் என்றால் அந்தோணியார், வெள்ளி என்றால் காளிகாம்பாள்... என்று ஒரு நாளை சரியாக குறித்துக் கொண்டு மொத்த ஜனமும் அன்று இடித்து நெரித்து ஆன்மீகத்தை வளர்ப்பதில் நம்மவர்களுக்கு அத்தனை ஈடுபாடு).

வெண்பளிங்கில் அமர்ந்திருந்த பெரிய அளவு சாய்பாபா சிலையை தரிசிக்க இரண்டு U அருகருகே வைத்தாற் போன்ற வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. ஓர் உயர்நடுத்தர குடும்பம் வரிசையில் திரும்பும் சமயத்தில் சடக்கென்று எதிர்வரிசையின் இடைவெளியின் உள்ளே புகுந்தது. பின்னர் அவர்களின் உறவினர்களை அழைக்க, அவர்களும் குறுக்கே இருந்த சங்கிலியை உயர்த்திக் கொண்டு அவர்களுடன் இணைந்தனர். சபரிமலை, திருப்பதி என்று...இது போல் பல இடங்களில் எரிச்சலுடன் இதைக் கவனித்திருக்கிறேன்.

திரையரங்கில் அனுமதிச் சீட்டைப் பெற முண்டியடித்துக் கொண்டு வரிசையை மீறுவதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. இதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. நாமே கடவுள், வழிபாடு, ஜேஜா கண்ணைக் குத்திடும் என்றெல்லாம் நம்பிக் கொண்டு ஒரு வளாகத்திற்குள் நுழைகிறோம். அங்கு கூட குறைந்தபட்சம் நம்முடைய அயோக்கியத்தனங்களை, கீழ்மைகளை கைவிட முடியவில்லையெனில் அதை எவ்வாறு புரிந்து கொள்வது? மேற்குறிப்பிட்ட வரிசையின் பின்னால் கைக்குழந்தைகளுடன், பல சிறு குழந்தைகளும் வரிசையில் வந்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு சிலர் புகுவதால் அவர்கள் இன்னும் சில அதிக நிமிடங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த சிறு நியாய உணர்வு கூடவா வரிசையில் புகுபவர்களுக்குத் தோன்றாது.... என்னமோ கடவுளின் அருள் ஒரு குழாயில் வடிந்து கொண்டிருப்பது போலவும், இவர்கள் போவதற்குள் அது காலியாகி விடப் போவது போலவுமான அலைபாய்தல் ஏன்?

பல வருடங்களுக்கு முன்பான அனுபவம். திருப்பதியில், விலங்குகள் போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டு மனிதர்கள், இன்னொரு கூண்டிற்கு மாற வேண்டிய தருணத்தில் அடித்து பிடித்துக் கொண்டு ஓடினார்கள். முதியவர்கள் உட்பட சிலர் கீழேயும் விழுந்தார்கள். முதன்முறையாக அப்போதுதான் நம்முடைய வழிபாட்டு சடங்குகளின் அபத்தம் குறித்தான கேள்வி முதன்முறையாக என்னுள் புகுந்தது.

இந்த எரிச்சலை சற்று தணித்தது அங்கு தரப்பட்ட பிரசாதம். சுடச்சுட கணிசமான அளவு வெண்பொங்கல். எனக்காக மகள் சென்று வாங்கி வந்தாள். அபாரம். கூட கொஞ்சம் தேங்காய் சட்டினி இருந்திருந்தால் ரகளையாக இருந்திருக்கும். இது போல் ரவா கேசரி, சாம்பார் சாதம் என்று வேளா வேளைக்கு பலதும் தருகிறார்களாம். இனி மயிலை பக்கம் செல்லும் போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதை துணைவியார் மறந்தால் கூட நானே ஞாபகப்படுத்துவேன்.

suresh kannan

10 comments:

கண்ணன்.கா said...

//கடவுளின் அருள் ஒரு குழாயில் வடிந்து கொண்டிருப்பது போலவும், இவர்கள் போவதற்குள் அது காலியாகி விடப் போவது போலவுமான அலைபாய்தல் ஏன்?//
- ஹா ஹா சரியாக சொன்னீர்கள் கடவுளை முதலில் காண வேண்டும் என்பவர்கள் முதலில் மரணிக்க வேண்டும் என்று இருந்தால் இவர்கள் யாரும் முண்டியடிக்க மாட்டார்கள். செய்த பாவத்தை தொலைக்க வந்தேன் என்று சொல்லி தொலைந்தும் போகிறார்கள்(கல்லாய்).

Ashok D said...

நானும் என் நண்பனும் ஈஸிஆர் பாபாவ பார்க்க போனோம்... தயிர்சாதம் கூட கிடைக்கல... காரணம் மனசுக்குள்ள இருந்தது ஈஸிஆரின் வெஸ்ட்பார்க்கே... (நல்ல பார் அது)

அப்(போதை)க்கு என்ன தேடறமோ அதான் கிடைக்கும்போல...

பெண்கள் கேரிபேக்ல இரண்டு மூனு பார்சல் எடுத்து போனது அழகு...

நீங்க போன சாய்பாபா கோயிலுக்கு பக்கத்துல உள்ள சாய்வித்யாலயாலதான் D.R.Ashok என்னும் பெரும்மனிதர் படித்தார். ஒன்னாங்கிளாஸ் to அஞ்சாங்கிளாஸ்... வியாழக்கிழமைகளில் 2.30 to 3.00 ஸ்கூல்லயிருந்து உள் வழியா கோயிலுக்கு வருவோம்..அங்கே பஜன்ஸ் நடக்கும் நாங்க எல்லாம் கீழ்ஸ்தாயில பஜன்ஸ் பாட ஆரம்பிச்சு உச்சஸ்தாயில வரும் போது whole நிலைமையும் ஒரு டிவைனா இருக்கும். கடைசியில எல்லோரும் பாபாவ வலம் வந்து தொன்னையல சுண்டல் பெற்றுக்கொள்வோம்... அதுவும் டிவைனா இருக்கும்...

ஆனா இப்போயெல்லாம்... நல்ல வெயில்ல ஒரு நாலு பியரு போட்டாதான் டிவைனா இருக்கு :)

இன்னைக்கு பதிவுல நிறைய விஷயங்கள் பிடித்து இருந்தது...

சென்னையல டூவீலர் ஓட்னிங்க.. ரொம்ப டென்ஷன் ஆகிடுவீங்க... train குட்...

chandramohan said...

பேருந்து பற்றிய உங்கள் கருத்து மிகச்சரி. ஒவ்வொரு முறை டெல்லியில் புழக்கத்தில் இருக்கும் தாழ் தள 'சொகுசு பேருந்தில்' பயணிக்கும்போதெல்லாம் பேருந்தை வடிவமைத்தவர்கள் மற்றும் பரிந்துரைத்தவர்கள் ஆகியோரையும் மற்றும் அவர்களின் உறவினர்களையும் மனதுக்குள் வாழ்த்திக்கொண்டே வருவேன் :) நின்றுகொண்டு சென்றாலும் அமர்ந்து சென்றாலும் உயிர் போகும் அளவுக்கு களைத்து விடுவோம். அவ்வளவு 'சொகுசான' வசதிகள். வெளிநாட்டை பார்த்து நமக்கு சூடு போடுகிறார்கள். இந்திய சாலைகள் , போக்குவரத்து , மக்கள் தொகை, வேலை மற்றும் பள்ளி நேரம் போன்ற எந்த விஷயங்களையும் கருத்தில் கொள்ளாத அதி புத்திசாலிகள் தானே இவற்றை தீர்மானிக்கிறார்கள்.
அதே போல் டிக்கெட் விலையும். திடீரென்று ரெண்டு மடங்கு கட்டண உயர்வு நடந்தது. இதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்க முன்வராத 'தேசப்பற்றாளர்கள்' அன்னா ஹசாரே போன்ற 'நவீன காந்திகள்' உண்ணாவிரதம் இருக்கும்போது சென்று மெழுகுவர்த்தி பிடிப்பார்கள். கருப்பு பணத்தில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் நேரம் கரைக்கும் மக்கள் தான் ஊழல் ஒழிய அன்னா ஹசாரே வழிகாட்டுவார் என்று நம்புகிறார்கள்.
கொடுமை !

-தோழன் மபா, தமிழன் வீதி said...

எழுத்தில் வளைந்து நெளிந்து சாகசம் செய்யும் சுரேஷுக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாதென்பது சற்று வியப்பாகத்தான் இருக்கிறது!.

Unknown said...

நல்லா சொன்னீங்க பாஸு, எப்பத்தான் இவனுக எல்லாம் திருந்துவாங்களோ!!??, பேசாம எல்லா ஊர்லயும் மலை, MP முதல்வர் எல்லாம் சொகுசு பஸுல தான் வரணுமுன்னு சொல்லிடலாமா?

PRABHU RAJADURAI said...

"நகரத்தில் புழங்குவதற்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாதது மிகப் பெரிய குறைபாடாக இருக்கிறது"

இதென்ன கலாட்டா?

Anonymous said...

வணக்கம் சுரேஷ் கண்ணன்,

உங்கள் பிளாகில் ஒரு விஷயத்தை கவனித்தேன். Sidebarல் உள்ள linkகுகள் கருப்பு நிறத்தில் உள்ளன. ஆனால், கட்டுரைகளில் வரும் linkகுகளோ சிகப்பு நிறத்தில் உள்ளன. நீங்கள் வார்த்தை ஒன்றை எழுதிவிட்டு அதனை சிகப்பு நிறமாய் மார்றி விட்டு அதன் பிறகு அதற்கான urlஐ அந்த சிகப்பு வார்த்தைக்கு இணையாக இணைப்பீர்கள் என்று நினைக்கிறேன். You dont need to do this every time. you can place a separate color for link appearing in essays(eual to .post-body in template)..

go to layout. click edit html. dont put tick mark in expand widget templates box. find
]])(/b:skin)
(/head)

paste this just before the above code

.post-body a {color:red;
text-decoration:underline;}


note that there is a dot before d word post...then click save template.

after this the link appearing in essays will be in red color. but the link color u chose in template designer for all other places other than essay portion will be maintained in black color

...d...

குரங்குபெடல் said...

என்ன பதிவு இது ?
பொன்னர் சங்கர் லதிக்கா போன்ற
உலகப்படங்கள் விமர்சனம் எங்கே . . . ?
நன்றி

Ganpat said...

மிகவும் topical useful write-up.
நன்றி சுரேஷ்.
அடிக்கடி பேருந்தில் பயணிக்கும் ஒருவன் என்கிற முறையில் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
டாட்டா பேருந்து அமைப்புகள் முற்றிலும் அசெளகரியமானவை முதுகெலும்பிற்கு
கேடு விளைவிப்பவை.இதை வடிவமைத்த பொறியாளருக்கு பெரிய பரிசுதான் கொடுக்கவேண்டும்.
மேலும் பேருந்து வழித்தட குறியீட்டிலும் ஏகப்பட்ட குழப்பம் மூன்று இலக்க குறியீடு தேவை.மேலும் சாதாரணம்,துரிதம்,குளிர்பதனம் என்ற மூன்று வகை பேருந்து மட்டும்தான் இயக்கப்படவேண்டும்
கட்டண விகிதம்
சாதாரணம்(ஒரு மடங்கு),துரிதம்(இரு மடங்கு),குளிர்பதனம்(நான்கு மடங்கு)
என்று இருக்கவேண்டும்.பேருந்தின் முன்னும் பின்னும் உள்ள விவர அட்டையில் வழித்தட எண்,மற்றும் அது செல்லும் இடம் மட்டுமே தேவை.கிளம்பிய இடம் தேவையில்லை.கட்டணம் அருகாமையான ஒரு ரூபாய்க்கு சுருக்கப்படவேண்டும் (50 காசுகள் வேண்டாம்)இப்படி சொல்லி கொண்டே போகலாம்.கேட்பதற்குதான் யார் உள்ளார்கள் எனத்தெரியவில்லை
இதே போல சென்னை auto rickshaws பற்றியும் ஒரு நான்கு பக்க கட்டுரை எழுதலாம்.

geethappriyan said...

http://inru.wordpress.com/2011/05/08/bus-with-usability/

நண்பர் சுரேஷ் கண்ணன் சத்யராஜ்குமார் முற்றிலும் மாறுபட்டிருக்கீறார் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்,ஆனால் நான் உங்கள் கருத்தையே முன்வைக்கிறேன்.