Wednesday, April 06, 2011

விதிகளை மீறும் விளையாட்டு


 (டிஸ்கி 1: இணைய விலகல் அறிவிப்பு buzz-ல்  வெளியிடப்பட்டவுடன் அதற்கு செய்யப்பட்ட ஒர் எதிர்வினை என்னை மிகவும் மன வருத்தமடையச் செய்தது. அதைக் குறித்து இறுதியில் காண்போம்).

(டிஸ்கி 2: இணைய விலகல் தொடர்பாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த பதிவு தொடர்பான விளக்கப்பதிவு இது. இதன் வளவளா வரலாற்றுப் பின்னணிகளைத் தாண்ட விரும்புபவர்களும் நேராக இறுதிப் பகுதிக்குச் சென்று விடலாம்).


நண்பர்களுக்கு

முன்னர் மடற்குழுமங்களிலும் பின்பு 2004 முதல் வலைப்பதிவிலும் இயங்கிக் கொண்டிருந்தாலும் 2006 ஏப்ரலில்தான் முதன்முதலில் அந்த நாசகார எண்ணம் தோன்றியது. ஏப்ரல் 1-க்காக நண்பர்களை சற்று ஏமாற்றிப் பார்த்தாலென்ன?

பொதுவாக எனக்கு  இவ்வகையான ஆபத்தில்லாத சிறுகுறும்புகளை அவ்வப்போது செய்யப்பிடிக்கும். சில நண்பர்களுக்கு என் எழுத்தை முன்னிட்டு எப்படியோ என் மீது 'தீவிரவாதி' எண்ணம் தோன்றியிருக்கிறது. 15 தினங்களுக்கு ஒருமுறைதான் அரைசென்டி மீட்டர் சிரிப்பவன் என்று நினைத்துக் கொண்டிரு்க்கிறார்கள். ஒரு மனிதனின் அகச்சித்திரத்தைப் பற்றி (ஆரம்பிச்சிட்டான்யா) அவனே முழுமையாக அறிவானா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் போது அதை மற்றவர் அறிந்து கொள்ள இயல்வது அதில் சில துளிகளாத்தான் இருக்கும். ஓர் இலக்கியக் கூட்டத்தில் கவனித்தேன். இரண்டு சமகால பெரிய எழுத்தாளர்கள் அருகருகே அமர்ந்திருந்தும் ஒருவரையொருவரை பார்த்து புன்னகை கூட செய்யவில்லை.  'உர்'ரென்று அமர்ந்திருந்த அந்த இருவரும் கூட்டம் முடிவதற்குள் 'ஏன்யா, எனக்கு வெச்சிருந்த தண்ணி பாட்டிலை எடுத்தே' என்று மோதிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்குமளவிற்கு இருந்தது அவர்களின் உடல்மொழி. இவர்களுக்கு சிரிக்கக் கூட தெரியுமா என்று சந்தேகமாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு ஒரு குழுமத்தின் மூலம் அவர்களுக்குள் பொதிந்திருந்த அபாரமான நகைச்சுவையுணர்வையும் அற்புதமான  நட்பையும் அறிந்து கொள்ள முடிந்தது. பின்னர் அந்த நகைச்சுவையில் ஒன்று பெரிய சர்ச்சையாகியது வரலாற்றின் காவிய சோகங்களில் ஒன்று. ஒருவரை சில சதவீதங்களேனும் புரிந்து கொள்ள முடிவது அத்தனை எளிதல்ல என்று அப்போது தோன்றியது.

என்னுள் எஞ்சியிருக்கும் குழந்தைமையை நான் எப்போதும் இழக்க விரும்பியதேயில்லை. என் குழந்தைகளிடம் குழந்தையாக இணைந்து குறும்புத்தனமாக விளையாட்டுவதில் அலாதியான இன்பமுண்டு. இதை முன்னிட்டு எழும் மற்றவர்களின் விநோதமான பார்வைகளை நான் பொருட்படுத்துவதில்லை. இவை பல சமயங்களில் இன்பத்தையளித்தாலும் சமயங்களில் வினையாகி விடுவதும் உண்டு.

ஒரே ஓர் உதாரணம் சொல்கிறேனே. அன்று இரவு அசைவ உணவு சமைக்க இருப்பதாக மதியம் தொலைபேசியில் சொல்லியிருந்தார் மனைவி. என்ன மெனு என்பதையெல்லாம் சொல்லி எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தார்.  நல்ல பசியிருந்தாலும் அன்று வீட்டிற்குக் கிளம்ப நேரமாகி விட்டது. வீட்டை அடைய பத்து நிமிடமிருக்கும் போதுதான் அந்த 'சுயசூன்ய' யோசனை குறுக்கிட்டது. மொபைலில் வீட்டை அழைத்து 'திடீரென்று தெரிவிக்கப்பட்ட நண்பனின் பிறந்த நாள் ஒனறில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் வருவதற்கு தாமதமாகும் என்றும், இரவு உணவு தேவையில்லை என்றும்'  போலித் தயக்கத்துடன் கெத்தான குரலில் சொல்லி முடித்தேன். 'காச் மூச்' செனறு எதிர்முனையிலிருந்து வசவொலி. இதைத்தானே எதிர்பார்த்தோம்?

ஏழெட்டு நிமிடங்களுக்குள் வீட்டை அடைந்து 'டொட்டடொய்ங்க்' என்ற ஒலியுடன் நுழைந்து சொன்ன வசவையெல்லாம் நினைவுப்படுத்தி அவரை அசடு வழியச் செய்யும் திட்டம். எதிர்பாராதவிதமாக டிராபிக்கினால் வீட்டை அடைய சில நிமிடங்கள் அதிகமாகி விட்டது. உறுப்பினர்கள் உறங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிக் கொண்டிருக்க, சமையலறையில் காலி பாத்திரங்கள் என்னை வரவேற்றன. 'உணவு வேண்டாம்' என்கிற செய்தி ஏற்படுத்தின வெறுப்பில் அத்தனையையும் வாட்ச்மேனிடம் அத்தனை சீக்கிரம் தந்து விட்டிருக்கிறார் மகராசி. 'ஒவ்வொரு அரிசிப் பருக்கையிலும் அதை சாப்பிடவுள்ளவரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்' என்கிற பொன்மொழியின் மீது அழுததமாக நம்பிக்கை ஏற்பட்டது அன்றுதான். வாட்ச்மேன் அவர்கள் செட்டிநாடு சிக்கன் கிரேவியையும் நண்டுப் பொரியலையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பிரெட் ஜாமுடன் தலைவிதியையும்  தடவி வெறுப்புடன் சாப்பிட்டேன்.

2006- ஏப்ரலில் இருந்து டிராக் மாறி விட்டேன்.

நண்பர்களை ஏமாற்றுவதற்காக என்னையும் அறியாமல் ஒரு கொடூரமான திட்டம் உள்ளே எழுந்தது. ஒரு தொலைக்காட்சி தொடரில் நான் நடிக்கவிருப்பதாகவும் மறுநாள் இரவு அதைப் பார்க்கலாம் என்பதாக அறிவித்தேன்.  என் எதிரிக்கும் தரக்கூடாத தண்டனைதான். வழக்கத்திற்கு மாறாக பல நண்பர்கள் அன்று தொடரை பார்த்து விட்டு மறுநாள் கடுப்புடன் தொலைபேசினார்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டேன்.

(இந்த அறிவிப்பில் விளையாட்டுத்தனமாக எழு்ததாளர் பாஸ்கர் சக்தியின் பெயரை இணைத்தது மிகப் பெரிய தவறாகப் போய் விட்டது. பின்னூட்டத்தில் அவரே வந்து கோபித்துக் கொண்டார். அங்கேயே நான் அவரிடம் மன்னிப்பு கேட்டாலும் 'பிடித்த எழுத்தாளர் ஒருவரை புண்படுத்தி விட்டோமே' என்று இது பெரிய குற்றவுணர்வாகவே என்னுள் அமிழ்ந்து கிடந்தது. அவரை நேரில் சந்திக்கும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். புத்தகக் காட்சியில் சில முறை அவரை பார்க்க நேர்ந்தாலும் என்ன தயக்கத்தினாலோ சந்திப்பதை தவிர்த்து விட்டேன். பிறகு டோண்டு அவர்களின் பதிவின் மூலம் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அறிந்தேன். சமீபத்திய புத்தகக் காட்சியில் அந்த பிரியமான மனிதரைச்  சந்தித்தேன். இணையம் அப்போது அவருக்கு புதிது என்பதால் 'என்னவோ ஏதோ' என்று கருதி விட்டதாகவும் எனவேதான் அவ்வாறு கடுமையாக பின்னூட்டமிட்டதாகவும் இப்போது யோசித்துப் பார்க்கையில் அது சங்கடத்தை அளிப்பதாகவும் என்னை ஆற்றுப்படுத்தினார்).

()
 
இப்போது 2011- ஏப்ரலில் மறுபடியும் அதே போன்ற நாசகார எண்ணம். 

'இணையத்திலிருந்து விலகுகிறேன்' என்றொரு அரதப்பழசான மொக்கை ஐடியாவை பஸ்ஸில் மெலிதாக நூல் விட்டு பார்த்தேன். ஆனால் அது சிறிது எடுபடும் என்று தோன்றியது. ஏனெனில் அதற்கு முன்புதான் மிக தற்செயலாக அதற்குத் தோதானதொரு பதிவை buzz-ல் எழுதியிருந்தேன். இணையத்தில் வெளிப்படும் வன்மம், காழ்ப்பு மற்றும் ஆபாசமான மொழியில் வெளிப்படும் உரையாடல் குறித்தது.

இந்தச் சந்தர்ப்பத்தில் இங்கும் அது குறித்து பகிர உத்தேசம்.  எந்தவொரு உருப்படியான விவாதத்தையும உரையாடலையும் கைப்பற்றி அதை பாழ்படுத்துவது, உரையாடல் பொதுவானதொன்றைப் பற்றி இருந்தாலும் அதை தனிநபர் அவதூறுகளை நோக்கி இழுத்துச் செல்வது, மறைமுகமாகவும் சமயங்களில் நேரடியான ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவது என்று இணையத்தில் சிலர் செயல்படுகிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் சொற்பமாக இருந்தாலும்  பொதுவெளியில் ஒட்டுமொத்த இணையத்தின் முகமே கோரமாகவும் ஆபாசமாகவும் தெரிவதற்கு இவர்களே காரணம்.

இதில் என்னை ஆச்சரியப்படுத்தும், எரிச்சலூட்டும் விஷயம் என்னவெனில், உள்ளுர் பிரச்சினையிலிருந்து சர்வதேச பிரச்சினை வரை அனைத்தையும் 'தார்மீக அறத்துடனும் ஆவேசத்துடனும்' அலசும் பதிவர்களும் டிவிட்டர்களும், இந்த ஆபாச வியாதிகளை கண்டும் காணாமல் போவதுதான். 'நமக்கேன் வம்பு' என்று ஒரு மெலிதான எதிர்ப்பை கூட பதிவு செய்யாமல் நழுவுகிறார்கள். உருப்படியாக எழுதும், உரையாட விரும்புபவர்கள் கூட இந்த ஆபாச வியாதிகளினால் தங்களின் செயற்பாட்டை சுருக்கிக் கொள்கிறார்கள் அல்லது காணாமற் போகிறார்கள்.

இணையச் செயற்பாட்டை ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புவர்கள் இவர்களை அடையாளங்கண்டு முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும், தேவையெனில் இவர்களின் வெற்றுச் சவடால்களுக்கு அஞ்சாமல் தம்முடைய எதிர்ப்பை நாகரிகமாக முன்வைக்க வேண்டும் என்பதையும் அந்த buzz-ல் தெரிவித்திருந்தேன். இதற்குப் பொருள், ஆபாச மொழிகளிலிருந்து விலக்கி என்னை 'நாகரிகமானவனாக' முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியல்ல. வடசென்னையில் பிறந்து வளர்ந்த நான் முழுக்க புழங்குவதே இதையும் விட மோசமான ஆபாச மொழிகளின் இடையில்தான். (ஆனால் அவர்கள் பெரும்பாலும் கல்வியறிவும் நுண்ணுர்வும் இல்லாதவர்கள் என்பதால் பரிதாபத்துக்குரியவர்கள்.) அந்தப் பாண்டியத்துடன் துணை கொண்டு மேற்குறிப்பிட்ட ஆபாசவியாதிகளுடன் சரிக்குச் சரியாக மல்லுக்கட்டி சாக்கடையில் சஙகமமாக முடியும். ஆனால் அது இந்த ஆபாசக் கலாசாரத்திற்கு துணை போவதாகவே அமையும்.

மேலும் சமயங்களில் ஆபாச மொழி எனக் கருதப்படுபனவற்றை அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக அல்லாமல் ஒரு வலிமையான ஆயுதமாகக் கூட பயன்படுத்த முடியும். சமீபத்தில் சென்னை சங்கமம் சார்பில் நடைபெற்ற திரைப்பட கருத்தரங்கில் பேசிய எடிட்டர் லெனின் அரசின் சில அபத்தமான விதிகளை கசப்புடன் பேசிக் கொண்டிருந்தவர், அதன் தொடர்ச்சியாக ரெளத்திரத்துடன்  'தூ'.... என்று சொல்லிச் சென்றார். அவர் பேசியிருந்ததின் தொடர்ச்சியோடு யோசிக்கும போது அது மிக இயல்பாகவும் கம்பீரமான வசவாகவும் இருந்தது. (நான் கடவுள் திரைப்படத்தில் விக்ரமாதித்யன் பேசும் வசனம் போல).

மறுபடியும் சற்று டிராக் மாறியதற்கு மன்னிக்கவும்.

இந்த சர்ச்சை தொடர்பாக  எழுதின பஸ்ஸிற்கு பதிவிற்கு அடுத்து 'இணைய விலகல்' அறிவிப்பை செய்யும் யோசனை தற்செயலாக அமைந்ததால் அது பொருத்தமாக இருக்கும் என்று யோசனை செய்தேன். ஆனால் முதலில்  சில நண்பர்கள்  வருத்தம் தெரிவித்தாலும் சில எமகாதக நண்பாகள் இந்த விளையாட்டை எளிதில் கண்டுபிடித்து விட்டனர். எனவே இதை சற்று தீவிரப்படுத்தி வலைப்பதிவிலும் அறிவிக்கலாம் என்று தோன்றியது.

எல்லா விளையாட்டிற்கும் விதிகள் உண்டு. கண்ணாமூச்சி விளையாடுகிறவன் கூட கண்டுபிடிக்கப்பட்டவுடன் தோல்வியை ஒப்புக் கொள்வதே நியாயம். பஸ்ஸில் இந்த முயற்சி தோல்வியடைந்தவுடனே நான் இதை நிறுத்தியிருக்க வேண்டும். விதிகளை மீறுவதுதான் இயல்பிலேயே ஊறிப்போய் விட்டதே. அந்த தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதையே இன்னும் தீவிரமான பாவனையுடன் வலைப்பதிவில் இட்டேன்.

அதுவரை இது விளையாட்டு என்று யூகித்துக் கொண்டிருந்தவர்கள் உட்பட பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். தனிமடல் அனுப்பினார்கள். பின்னூட்டங்களில் தங்களின் அன்பையும் ஆதரவையும தெரிவித்தார்கள். நெகிழ்ந்து போனேன். உண்மையில் இம்மாதிரியான விலகல் முடிவை சிந்திக்கும் ஒரு சூழல சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. அப்போது ஏறக்குறைய இதே நண்பர்கள் ஆதரவாகவும் அக்கறையாகவும் என் பக்கத்தில் நின்றார்கள். இம்மாதிரியான விலகல்கள் ஆபாசவியாதிகளை ஊக்கப்படுத்துமே ஒழிய பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தாது என்பதை உணரச் செய்தார்கள். அவர்களை விளையாட்டு என்ற பெயரில் ஏமாற்றுகிறோமே என்று குற்றவுணர்வே ஏற்பட்டு விட்டது.

ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் கூடிய நன்றியும், விளையாட்டுத்தனமாக ஏமாற்றியதற்காக மன்னிப்பும். விலகல் அறிவிப்பைக் கண்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களுக்கும் நன்றி, தங்களின் அற்பத்தனங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை அடையாளங் காட்டிக் கொண்டமையால்.

இந்தப் பதிவின் மூலம் சுருக்கமாகச் சொல்ல வருவது என்னவென்றால் இணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது ஏப்ரல் 1-க்கான விளையாட்டே தவிர உண்மையில்லை.

இனி இந்தத் தளத்தில் இப்படியான விளையாட்டுக்களை வருங்காலத்தில் நிகழ்த்தும் எண்ணமோ திட்டமோ எதுவுமில்லை.

(இப்படி சீரியஸா சொன்னாலும் நீங்க நம்பவா போறீங்க)

டிஸ்கி 1-க்கான விளக்கம்:

சென்ஷி என்றொரு பதிவர். இலக்கிய ஆர்வலர். குட்டி உவேசா போல் சிறந்த சிறுகதைளாக கருதப்படுபவற்றை தன் முய்றசியிலும் நண்பர்களின் மூலமாகவும் தேடித் தேடிப் பெற்று மெனக்கெட்டு தட்டச்சி இணையத்தில் பதிவு செய்பவர். பஸ்ஸில் என்னிடம் தொடர்ந்து உரையாடுபவர். விலகுவதாக அறிவித்ததும், என்ன செய்திருக்க வேண்டும். ஒருவேளை இவன் உண்மையாகவே விலகப் போகிறானோ என்கிற benefit of doubt-யாவது அளித்து ஆறுதலாக ஏதாவது சொல்லியிருக்க வேண்டுமா, இல்லையா?.

எக்பர்ட் சச்சிதானந்தத்தின் 'நுகம்' என்னும் சிறுகதையை இவரின் சேகரிப்பிற்காக ஸ்கேன் செய்து அனுப்புவதாகச் சொல்லியிருந்தேன். விலகும் சமயத்தில் ஒரு பாவனைக்காவது ஆறுதலாக ஏதாவது சொல்வதை விட்டு விட்டு 'அந்தச் சிறுகதை இன்னும் வரவில்லை' என்று கேட்டு விட்டார். இந்த ஏப்ரல் 1 விளையாட்டு நிகழ்வில் என் மனதை அதிகம் பாதிப்படையச் செய்தது சென்ஷியின் மறுமொழிதான். சென்ஷி, உங்களின் இலக்கிய ஆர்வத்திற்கு ஓர் எல்லையே இல்லையா? :)))
 
suresh kannan

30 comments:

iniyavan said...

சுரேஷ் கண்ணன்,

நீங்கள் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால் அவ்வளவு சாதாரணமாக இந்த விசயத்தை கடந்து போக முடியவில்லை.

எரிச்சல்தான் ஏற்படுகிறது. விளையாடுவதற்கும் ஒரு அளவு இருக்கிறது.

மன்னிக்கவும். உங்களை படித்தவன் என்கிற முறையில் உங்கள் மேல் இன்னும் கோபம் இருக்கிறது.

சாரி!

கண்ணன்.கா said...

என்.உலகநாதன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். கோபங்களுடன்.

கண்ணன்.கா said...

என். உலகநாதன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன். கோபங்களுடன்,

Anonymous said...

irumbu pudichchavan kaiyum, sori pudichchavan kaiyum, blog yezhudhiya kaiyum summa irukkaadhu.

THE UFO said...

அன்புள்ள திரு.சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு...

இனி அடுத்த வருடம் ஏப்ரல் 1, அன்று கண்காணாத ஊருக்கு ஒதுக்குப்புற இடத்தில் ஏதேனும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டு மரணத்துடன் போராடும் நிலையில் நீங்கள் எவ்வளவுதான் உதவிகேட்டு உங்கள் செல்போனில் அலறினாலும் கெஞ்சினாலும் கதறினாலும் ஒரு பயல் உங்களை தேடி உதவி செய்ய-காப்பாற்ற வர மாட்டான்.

அதனால், நீங்கள் "அன்று நான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பேனே..." என்றாலும், அன்று உங்கள் வீட்டில் முகமூடி துப்பாக்கி கொள்ளைக்காரர்கள் புகுந்து அங்கே உங்களுக்கு எந்தவித பயங்கரங்கள் நடந்தாலும் கூப்பிட்ட அழைப்பிற்கு ஒருத்தனும் உதவிக்கு ஓடி வர மாட்டான்.

மிச்சத்தை இந்த தளத்தில் தொடர்ந்து படிக்கவும்...

Kaarthik said...

என்னை எமகாதகனாக்கிய பெருமை தங்களையே சேரும். தங்கள் Buzz-ல் 'Comments are closed' என்றிருந்திருந்தால் ஒருவேளை நம்பியிருக்கக் கூடும். உண்மையாக விலகுபவர்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நினைத்தேன். சரியாகி விட்டது.

அதைத்தொடர்ந்த தங்கள் பதிவு உண்மைதானோ என்று சந்தேகம் கொள்ளச் செய்தது. இருப்பினும் ஒரு வாரம் பொறுத்துப் பார்த்து, பின் தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றிருந்தேன். Now the Cat is out of the Bag :-)

Anonymous said...

Sorry to say this..
"நீங்கள் ஒரு வடிகட்டிய அசடு"

இந்த விளையாட்டை வைத்து சொல்லவில்லை.போன பதிவில் இந்த செய்தி April Fool செய்வதற்கு இல்லை என சொல்லிவிட்டு** இப்போ அது பொய் என சொல்வது..
அசட்டுத்தனத்தின் எல்லை
**(POST SCRIPT: இந்த அறிவிப்பை நேற்று கூகுள் buzz-ல் வெளியிட்ட போது இது ஏப்ரல் 1-க்கான விளையாட்டு என்று சில நண்பர்கள் கருதி விட்டனர். இந்த முடிவை நான் எடுத்ததும் ஏப்ரல் 1 நெருங்கியதும் மிக தற்செயலே. அவர்களின் பின்னூட்டங்களைக் கண்ட பிறகுதான் எனக்கே அது உறைத்தது. இது அவ்வாறு அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காக பதிவிலும் மீண்டும் வெளியிடுகிறேன்.)


Grow up man!!

Ashok D said...

உங்கள அப்படியே சுடலாமா.. இல்ல ஓடவிட்டு சுடலாமா... என்று யோசிக்கிறேன்...
U fu_ked up man...

anyway thank you... keep rocking

VJR said...

நீங்கள் இன்னும் வளரனும் தொரை.

Anonymous said...

This is sad really !

Grow up man ! Pranks are good, but not this kind.

Thekkikattan|தெகா said...

நான் விலகிப் போவதாக சொல்லி விலகிச் செல்பவர்களின் முடிவில் அதிகமாக மூக்கை நுழைப்பது கிடையாது. ஏனெனில், அந்த முடிவின் பின்னணியில் அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான படிப்பினைகள், அனுபவங்கள் கிடைக்க வேண்டுமென்ற self-help கற்றலுக்கு முன்னுரிமை கொடுப்பதே காரணம்.

உங்கள் விடயத்தில் நான் நினைத்துக் கொண்டது, விலகி போய் விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது ;-) - வாசித்து விட்டு கடந்து சென்று விட்டேன்.

ஆமா, முகப்பு நூலில் யாரையும் ஆட் செய்து கொள்வதில்லையா?

Kumky said...

அன்பின் சுரேஷ்.,

கூகுள் பஸ்ஸில் படித்து தனியே மின்னஞ்சல் அனுப்ப யோசித்ததன் காரணமே இப்படி நீங்கள் காமெடி ஏதும் செய்பவரல்லர் என்ற எண்ணம் இருந்ததனாலேயே...

இந்த சீரியஸான எழுத்துக்களின் மீதான ஈர்ப்பே உங்கள் ஏப்ரல் பூல் விளையாட்டுக்களின் மீது கடும் கோபம் கொள்ளவைத்திருக்கிறது நண்பர்களை என தோன்றுகிறது...

இது உங்களுக்கான விளையாட்டு அல்ல என எங்களுக்கு தோன்றுகிறது...மன்னிக்க..

KKPSK said...

கொஞ்சம் கடுப்பா இருந்தாலும், தட்டிவுட்டுட்டு சந்தோசப்பட வேண்டியதுதான்! pl write abt korean feel good movies!

ssk said...

At least you shoul'nt have mentioned that "this is not an April Fool" prank, when you say that and then again come back and say it was indeed an "April fool" prank,athu April Fool-n thaarmeega vithiyai meeruvathaga ullathu.

Anyways, always a fan of your blogs, just not the past two ones.

கோவி.கண்ணன் said...

//விலகல் அறிவிப்பைக் கண்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியவர்களுக்கும் நன்றி, தங்களின் அற்பத்தனங்களை தாங்களே வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலம் தங்களை அடையாளங் காட்டிக் கொண்டமையால்//

:) வெல்செட்

ஜானகிராமன் said...

இது வெறும் விளையாட்டளவில் நின்றுவிட்டது, எனக்கு மகிழ்ச்சி. தொடர்ந்து உங்களுடைய எழுத்துக்களை படித்துவருபவன் என்ற வகையில், இந்த அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

என்னைப் போன்றவர்களை ஏமாற்றத்தான் இந்த அறிவிப்பு என்று அறிந்தபோது, நான் ஏமாந்தது உங்களுக்கு வெற்றி தரட்டும்.

Anonymous said...

உங்களுடைய ஒரு பதிவை இப்போது படித்துக் கொண்டிருந்தே போதே சட்டென்று ஞாபகத்திற்கு வருகிறது. நீங்கள் நேற்று என் கனவில் வந்தீர்கள். logicஏ இல்லை அதில். எங்கேயோ ஒரு நட்ட நடு சந்து ஒன்றில் ஒரு கம்யூட்டர் இருக்கிறது. அவ்வப்போது நீங்கள் ஒரு பைக்கில் வந்து அதில் ஒரு பதிவை எழுதி விட்டு போகின்றீர்கள். இவந்தானே அந்த பிச்சைபாத்திரம் பிளாகின் சுரேஷ்கண்ணன்; ஆம். இவந்தான் அவன் என்று நான் முடிவு செய்கின்றேன். முகம் வேறு மாதிரி உள்ளதே இவனா அவன் என்று நினைக்கிறேன். ஆம். அவந்தான் இவன். நாம்தான் இவனை ஒழுங்காக முழுதாய் பார்த்ததில்லையே என்ற என்ணமும் கனவில் வந்த என்னிடம் ஓடுகிறது. என்ன கனவோ? இதன் அர்த்தம் என்னவோ?.........d..................

பிரதீப் said...

ipo thaan padikkiren, nalla velai naan emaarama thappichchen!

dondu(#11168674346665545885) said...

நான், நீங்கள் மற்றும் டி.ஜே. தமிழன் ஆகிய மூவரும் தமிழ்மணத்தில் ஒரே 2004-ஆம் ஆண்டில் வாரத்தில் சேர்ந்து அறிமுகம் ஆனோம். அதில் டி.ஜே. தமிழன் எனது இஸ்ரேலிய ஆதரவு பதிவால் மிகுந்த மனக்கிலேசத்துக்கு உள்ளாகி ஏப்ரல் ஃபூல் விளையாட்டாக 2005-ல் தனது திருமணத்தை ஒரு பதிவில் அறிவித்தார்.

அதற்கு காரணமாக அவர் என்னைக் குறிப்பிட்டிருந்தது குறித்து எனக்கு சிப்பு சிப்பாய் வந்தது. நீங்கள் 2006-ல் போட்ட ஏப்ரல் ஃபூல் பதிவில் பாஸ்கர் சக்தி ரென்ஷன் ஆனது பற்றி ஒரு பதிவர் மீட்டிங்கில் பேசியதும் எனக்கு நினைவில் உள்ளது.

ஒரு முறை செய்தால் வேடிக்கை, ஆனால் அதையே திரும்பத் திரும்பச் செய்தால் வேடிக்கையா என்பதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

jothi said...

//2004ல் நீங்க‌ள் ப‌திவெழுத‌ ஆர‌ம்பிக்கும் போது எத்த‌னை பேர் அப்போது ப‌திவுக‌ளை எழுதினார்க‌ள், எத்த‌னை பேர் ப‌திவுக‌ளை ப‌டித்த‌ன‌ர் என என‌க்கு தெரிய‌வில்லை,.. இருந்தாலும் உங்க‌ளைப்போல‌ ஒரு சில‌ர் எழுதிய‌ ப‌திவுக‌ளை ப‌டித்து ந‌ம்பிக்கை கொண்டு இன்று நிறைய‌ பேர் ப‌திவுல‌க‌த்தில் எழுதிக்கொண்டு இருக்கின்ற‌ன‌ர். அந்த‌ வ‌கையில் உங்க‌ளைப்போன்ற‌ மூத்த‌ ப‌திவ‌ர்க‌ளின் ப‌ங்கு ம‌க‌த்தான‌து. மூத்த‌ ப‌திவ‌ர்க‌ள் நிறைய‌ பேர் இப்ப‌டி வில‌கிக்கொண்டு இருக்கிறார்க‌ள். அது துர‌திர்ஷ்ட‌மான‌துதான்//

இது போன‌ ப‌திவில் நான் த‌ந்த‌ பின்னூட்ட‌ம்.

கொஞ்ச‌ம் கூட‌ மெச்சூரிட்டி இல்லாத‌ குழ‌ந்தைத‌ன‌மாக‌ இருக்கிற‌து உங்க‌ள் வாத‌ம் சுரேஷ். இதைவிட‌ ஒரு கேவ‌ல‌மான‌ ப‌திவை நான் இந்த‌ ப‌திவுல‌க‌த்தில் காண‌வில்லை.

நீங்க‌ள் அடுத்த‌வரின் நேர‌த்துட‌ன் விளையாடுகிறீர்க‌ள் என்ப‌தை நினைவில் வைத்துக் கொள்ளுங்க‌ள்.என் பின்னூட்ட‌த்திற்கு உங்க‌ள் ப‌திலென்ன‌ என்ப‌தற்கு ஒரு இருப‌து முறையாவ‌து உங்க‌ள் ப‌க்க‌த்திற்கு நான் வ‌ந்து போயிருப்பேன். இப்ப‌ என்ன‌வென்றால் அது காமெடியாம்.

ச‌கிக்க‌லை சுரேஷ்.

Anonymous said...

Dont ever play with the feelings of others. By now, You would have lost alleast half of those people who loved and encouraged u.

geethappriyan said...

திரும்ப எழுத வந்ததற்கு நன்றி சுரேஷ்கண்ணன்.நானும் நண்பர் கருந்தேளும் இதுபற்றி பேசியிருந்தோம்.

உலக சினிமா ரசிகன் said...

மணிரத்னத்தின் ராவணன்....
பாரதிராஜாவின் வாலிபமே வா வா...
இளையராஜாவின் மலபார் கோல்டு விளம்பரம்...
கவுதம் மேனனின் நடுநிசி நாய்கள்...
இவையனைத்தும் தந்ததை எரிச்சலை விட தங்கள் விளையாட்டு மெகா மகா எரிச்சல்.

Unknown said...

சென்ஷி பற்றிய டிஸ்கியை படித்துவிட்டு கீழே விழாத குறை. மற்றபடி சப்தம் போட்டு சிரித்தேன்.

:-))) ha ha ha... ho ho ho... he h eh he....

Anonymous said...

அடப்பாவி.. நீங்கள் சொன்னதை நிஜம் என்று நம்பி சில நாட்களாக பிச்சைப்பாத்திரம் பக்கம் வராமலிருந்தேன்.. இன்று உங்கள் பழைய பதிவுகளை வாசிக்கலாம் என்று வந்தேன்.. இன்ப அதிர்ச்சி...

Anonymous said...

அடுத்தவங்களை முட்டாளாக்கி(அதுவும் வருஷா
வருஷம்) பார்ப்பதில் இவ்வளவு ஆனந்தமா?உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது.கண்டுபிடிச்சு சரி பண்ணுங்க. .

சாய்

தமிழச்சி said...

Mr.Suresh Kannan,

Irunthaalum unga nermai enaku pidichiruku. Thodarnthu vilaiyadunga.

Chocolate Vaazhthukal!

enRenRum-anbudan.BALA said...

நான் ரொம்ப சின்னப்ப பண்ண இந்த மாதிரி விளையாட்டையெல்லாம் ஒலகத்தர படங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதும் அருமை நண்பர், அறிவுஜீவி சுரேஷ் இன்னும் பண்ணிக்கிட்டு இருக்கறதைப் பார்த்து, சிப்பு சிப்பா வருது ;-) நான் நெஜமாவே ஏமாந்துட்டேன், சந்தோஷம் தானே :)

http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_08.html
http://balaji_ammu.blogspot.com/2005/02/blog-post_09.html

மேலுள்ள சுட்டியில் உள்ள இடுகை, அந்தக்காலத்து வலையுலக ஜாம்பவான்களை எவ்வளவு கடுப்பாக்கியது என்று பின்னூட்டங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம் :)

அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Test

த. முத்துகிருஷ்ணன் said...

கடவுளே
உங்க அறிவிப்பை நம்பி இதனை நாளா உங்க பக்கத்துக்கு வரவே இல்லை.
இலக்கியம், உலக திரைப்படங்கள் உள்பட பல விஷயங்கள் உங்கள் பதிவுகளில் இருந்து நிறைய அறிந்து கொள்ள முடிந்தது. விளையாடாம உங்க வேலையை பாருங்க சார்.