Tuesday, April 19, 2011

ஹாலிவுட் 'கெளரவம்' (Witness for the Prosecution (1957)


இனி பார்க்கிற திரைப்படங்களில் பிடித்தமானவற்றைப் பற்றிய அடிப்படை குறிப்புகளையாவது அதிவேகமாக இங்கு எழுதியிட திட்டம். அப்படியாக சமீபத்தில் பார்த்ததுதான் மேலே குறிப்பிட்டுள்ள Courtroom Drama படம்.

எழுத்தாளர் அகதா கிறிஸ்டியின்  சிறுகதை மற்றும் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அருமையான சஸ்பென்ஸ் படத்தின் இடையே சம்பந்தா சம்பந்தமில்லாமல் உள்ளூர் தயாரிப்பான சிவாஜியின் 'கெளரவமும்' 'எதிரொலியும்' நினைவிற்கு வந்து தொலைத்தது துரதிர்ஷ்டம்தான். வெளிநாட்டுத் திரைப்படங்களைப் பற்றி பேசும் போது தமிழ்த் திரைப்படங்களை கூடவே திட்டித் தீர்ப்பது முறையல்ல என்றாலும்  திரைப்பட உருவாக்கத்திலும் கூட நாம் எத்தனை மோசமான நிலையில் இருந்தோம் / இருக்கிறோம் என்பதை எண்ணும் போது வரும் எரிச்சலும் சுயபரிதாபமும் தவிர்க்க முடியாததாக இருக்கின்றன. 


இந்தப்படத்தின் ஹீரோ சர்வநிச்சயமாக வயதான பாரிஸ்டர் பாத்திரத்தில் வரும் Charles Laughton-தான். மனிதர் உடல்நலம் குன்றி சற்று தேறி மருத்துவர்களின் எச்சரிக்கையுடன் அப்போதுதான் தொழிலுக்கு திரும்புகிறார். கூடவே 'அய்யோ, பிராண்டியா குடிக்கிறீர்கள், சுருட்டையா எடுக்கிறீர்கள், இதோ டாக்டருக்கு போன் செய்கிறேன்' என்று அன்புத் தொந்தரவு பிளாக் மெயிலராக 'தொண தொண' செவிலி பாத்திரத்தில் Elsa Lanchester. (இருவருமே அகாதமி விருதின் சிறந்த நடிகர் பிரிவிற்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள்).

திறமையான அந்த வழக்கறிஞர், தனது வழக்குகளை மிக அலட்சியமாக கையாள்வது போல் தோன்றினாலும் தனது தொழிலின் மீது அவர் வைத்துள்ள அக்கறையும், குற்றஞ்சாட்டப்பட்டவரின் தகவல்களை துரிதமாக உள்வாங்கி வழக்கிற்காக செரித்துக் கொள்கிற கச்சிதமும் பிரமிக்க வைக்கிறது. கூடவே அவரது அலட்டலான நகைச்சுவையும். ஒரே ஒரு காட்சியை உதாரணிக்கிறேன்:

'ஒய்வெடுங்கள்' என்று நச்சரித்துக் கொண்டேயிருக்கிற நர்ஸின் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் வேறு வழியின்றி உள்ளே செல்கிறார் பாரிஸ்டர். அப்போதுதான் புதிய வழக்கை எடுத்துக் கொண்டு வரும் ஒரு கிளையண்டை வெறுப்பாக பிறகு வரச்சொல்கிறார். என்றாலும் அப்போதுதான் வந்தவரின் பாக்கெட்டில் இருக்கும் சுருட்டுக்களை கவனித்து விட்டு  திடீரென்று மனதை மாற்றிக் கொண்டு அவரை மாத்திரம் அழைத்துக் கொண்டு வழக்கு பற்றி உரையாடுவதாக நர்ஸிடம் பாவ்லா காட்டி விட்டு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டு விடுகிறார். ஆனால் சுருட்டு வைத்திருக்கிற அந்த நபர் நெருப்பு வைத்திருக்கவில்லை. (இதற்காகவே அவரை ஜெயிலில் போடலாம்). வெளியே காத்திருக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் நெருப்பு இருப்பதாக தெரிகிறது. பாரிஸ்டர் படு அமர்த்தலாக வெளியே வந்து நர்ஸை ஓரக்கண்ணால் புறக்கணித்து வெளியே நிற்பவரிடம் சொல்கிறார்.

"இந்த வழக்கு தொடர்பான விவரங்களில் ஒரு புதிய வெளிச்சம் கிடைப்பதற்காக நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உள்ளே வாருங்கள்"

இப்படியாக பல சரவெடிகள்... கோர்ட்டில் மருந்து என்கிற பெயரில் பிராந்தி அருந்திக் கொண்டே அவர் பிராசிகியுஷன் தரப்புகளை காலி செய்யும் விதம் அதிரடி.

அகதா கிறிஸ்டியின் இந்தக் கதை போகும் போக்கு பெரும்பாலான Courtroom drama-க்கள் போலத்தான். கொலை வழக்கில் சிக்கியிருக்கும் ஒரு நபர் தன்னை நிரபராதி என்று கூறிக் கொண்டு பாரிஸ்டரிடம் வருகிறார். அவருடைய நடவடிக்கைகளும் விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன. படம் நகர நகர குற்றங்களின் பின்னணியும் வழக்கின் போக்குகளும் விரிகின்றன. ஆனால் ஜிஎஸ்டி ரோடின் அபாயமான திருப்பம் போல படம் ஒரு கட்டத்தில் தடாலென 360 டிகிரிக்கு திரும்புகிறது. 'படத்தை முடிவை வெளியில் சொல்லாதீர்கள்' என்பது இந்தப்படம் வெளியான சமயத்தில் விளம்பரத்தில் உபயோகித்தார்களாம் 1957-ல் விடப்பட்ட அந்த வேண்டுகோளை இந்த 2011-லும் காப்பாற்ற நான் விரும்புகிறேன். படத்தைப் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

நான் வழக்கமாக வியந்தது ஹாலிவுட்களின் அந்த நேர்மையான திரைக்கதை பயணத்தைத்தான். 'நீயும் நானுமா' என்கிற உணர்ச்சி அலறல்கள் இல்லை. 'குடிமகனே.. என்ற சிஐடி சகுந்தலாவின் கவர்ச்சி (?) ஆட்டமில்லை. அசட்டுத்தனமான சென்டிமென்டுகளோ, தேவையில்லாத காட்சிகளோ சுத்தமாக இல்லை. நூல் பிடித்தாற் போல் படம் வழக்கு தொடர்பான காட்சிகளோடே நகர்கிறது. ஹாலிவுட்டின் கவுரத்தைக் காப்பாற்றிய படம் என்பதால் பதிவின்  தலைப்பு அப்படி அமைந்திருக்கிறது. 

'I hate Tamil films' என்று அலட்டுபவர்களின் மீது ஒரு காலத்தில் எனக்கு கொலை வெறி வரும். ஆனால் அதன் நியாயம் இப்போதுதான் புரிகிறது.

suresh kannan

11 comments:

உண்மைத்தமிழன் said...

[[["குடிமகனே" என்ற சிஐடி சகுந்தலாவின் கவர்ச்சி(?) ஆட்டமில்லை.]]]

அண்ணே.. இது வசந்தமாளிகைல மட்டும்தாண்ணே..!

Sriram said...

*** 'I hate Tamil films' என்று அலட்டுபவர்களின் மீது ஒரு காலத்தில் எனக்கு கொலை வெறி வரும் ***

இப்படி சொல்பவர்கள் யாரும் இந்த மாதிரி படங்களை பார்பதாக தெரியவில்லை. அவர்கள் ஆங்கிலத்தில் வந்த சிவாஜி (Die Hard) மற்றும் எந்திரன் (Terminator) பற்றி தான் சொல்கிறர்கள்.

Rettaival's Blog said...

12 ANGRY MEN என்றொரு படம்...ஒரு அறைக்குள் நடக்கும் கதை! இந்தப் படம் வெளிவந்த அதே வருடம் வந்த படம்தான்...அதன் வசனமும்..திரைக்கதையும்...அற்புதம். இன்னும் நாம் மன்மதன் அம்பு என எடுத்துவிட்டு அதன் சி.டி யை மலேசியாவில் வெளியிட்டு...ஜனங்களை முட்டாளாக மதிக்கும் தமிழ் சினிமா முன்னேறும் என்றா நினைக்கிறீர்கள்!

Anonymous said...

உங்கள் தளத்தில் விமர்சிக்கப்படும் அயல் சினிமாக்களை பார்க்க விரும்பினாலும் முடியவில்லை. பர்மா பசாரில் கிடைப்பதில்லை. இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்து பார்க்க என்னிடம் இணைய வசதியும் இல்லை. உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன இந்த மாதிரி படங்கள்?
http://www.mininova.org/
http://thepiratebay.org/
http://www.monova.org/
http://300mbmovies.com/
http://torrentz.eu/
போன்ற தளங்களில் இருந்து டவுன்லோடு செய்கிறீர்களா? அல்லது வேறு வகையில் dvdக்களை பெறுகிறீர்களா? திருச்சியில் சமீபத்தில் ஒரு புத்தக கண்காட்ச்சி ஒன்றில் உலக சினிமா டிவிடிக்களை மட்டும் விற்கும் ஸ்டால் ஒன்றை பார்த்தேன். ஒரு டிவிடி 60 ரூபாய் என்றார்கள். அவர்களின் கடை கோவையில் உள்ளது என்று சொன்னார்கள். அதன் விசிட்டிங் கார்டையும் என்னிடம் தந்தார்கள். அது தொலைந்து விட்டது.

CHENNAI
#5/77, C.P Ramasamy Road,
Chennai - 600 018

என்ற அட்ரெஸ்ஸில் Cinema Paradaiso என்றொரு கடையிருக்கும் அங்கே கிடைக்கும். மெம்பர்ஷிப் காசு கொஞ்சம் கேட்பார்கள்(3000 - 4000 ஞாபகமில்லை) மேற்படி படங்களுக்கு 75 - 100 ரூபாய்கள் பிடிக்கும்----> இப்படி சொல்வது கோகன்தாஸ் என்ற பிளாகர். பெங்களுரில் SP ரோட்டில் உள்ளடங்கிய எலக்ட்டானிக்ஸ் கடைகளில் ரூபாய் 60க்கு dvdக்கள் கிடைக்கின்றனவாம்.

உங்களுக்கு சென்னையில் இப்படிப்பட்ட கடைகள் இருப்பது தெரியுமா? கோவையில் உலக சினிமாக்களை மட்டும் விற்கும் கடை ஒன்று இருக்கிறது என்று சொன்னேனே...அதைப் போன்ற கடைகள் சென்னையில் உள்ளனவா? உங்களுக்குத் தெரியுமா?...d....

சுரேஷ் கண்ணன் said...

//உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன//

நண்பரே, இணையத்திலேயே பெரும்பாலான திரைப்படங்கள் கிடைக்கின்றன. சிலவற்றை நண்பர்களிடமிருந்து பெற முடிகிறது. பர்மா பஜாரில் கிடைக்கவில்லையெனில், சபையர் தியேட்டர் பக்கத்தில் ஜெமினி பார்சன் காம்ப்ளெக்ஸ் கட்டிடடத்தில் கிடைக்கும். விசாரித்துப் பாருங்கள்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மிக நல்ல படம் சுரேஷ்கண்ணன்,இது உங்களுக்கு பிடித்தால் போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் டவைஸ் என்னும் 1946ஆம் ஆண்டு வெளியான noir வகைப்படத்தையும்,அதன் ரீமேக்கான ஜாக்நிக்கல்சன் நடித்து அதே பேரில் 1981ஆம் ஆண்டு வெளியான படத்தையும் அவசியம் பாருங்கள்.கோயன் பிரதர்ஸின் த மேன் ஹூவாஸ் நாட் தேர் படமும் அற்புதமான noir வகைப்படம்,கோர்ட் ரூம் ட்ராமா தான்.நேரம் கிடைப்பின் பாருங்கள்.http://geethappriyan.blogspot.com/2010/01/2001-18.html

இராஜராஜேஸ்வரி said...

"ஹாலிவுட் 'கெளரவம்' (Witness for the Prosecution (1957)"//
Interesting.

வஜ்ரா said...

திகில் படங்களை நீங்கள் பார்ப்பதில்லையா ?

சமீபத்தில் நான் பார்த்த திகில் படங்களிலேயே என்னை மிகவும் பாதித்தது Texas chainsaw massacre.

1974 ல் இருந்து 2006 வரை இந்த கதையை வெவ்வேறு விதங்களில் எடுத்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் இயக்குனர் சிகரங்கள், இயக்குனர் இமயங்கள், இயக்குனர் கிளிமஞ்சாரோக்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். Slasher genre என்று ஒரு புது ஜானரை உருவாக்கிய படம்.

New York City's Museum of Modern Art added the film to its permanent collection, validating its claim as legitimate, unconventional art.

விக்கியில் இந்த படத்தைப்பற்றிய ஒரு பக்கம் உள்ளது அதில் கொடுக்கப்பட்டுள்ளது தான் மேலே கூறப்பட்ட வரி.

சமீபத்தில் தமிழில் நில்.கவனி.செல்லாதே என்ற ஒரு படம் இதன் தழுவலாக எடுக்கப்பட்டது என்று கூட சிலர் சொல்கிறார்கள்.

Anonymous said...

//திகில் படங்களை நீங்கள் பார்ப்பதில்லையா ?

சமீபத்தில் நான் பார்த்த திகில் படங்களிலேயே என்னை மிகவும் பாதித்தது Texas chainsaw massacre.

1974 ல் இருந்து 2006 வரை இந்த கதையை வெவ்வேறு விதங்களில் எடுத்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் இயக்குனர் சிகரங்கள், இயக்குனர் இமயங்கள், இயக்குனர் கிளிமஞ்சாரோக்கள் எல்லாம் பாராட்டியிருக்கிறார்கள். Slasher genre என்று ஒரு புது ஜானரை உருவாக்கிய படம்.

New York City's Museum of Modern Art added the film to its permanent collection, validating its claim as legitimate, unconventional art.

விக்கியில் இந்த படத்தைப்பற்றிய ஒரு பக்கம் உள்ளது அதில் கொடுக்கப்பட்டுள்ளது தான் மேலே கூறப்பட்ட வரி.

சமீபத்தில் தமிழில் நில்.கவனி.செல்லாதே என்ற ஒரு படம் இதன் தழுவலாக எடுக்கப்பட்டது என்று கூட சிலர் சொல்கிறார்கள். //
சுனா கானா இதெல்லாம் உமக்கு தேவையா?ஐயா வஜ்ரா அழுதுடுவேன்,போய்டும்.

Anonymous said...

Hi,I am an avid reader of your blog, and I had commented earlier too, but it was not published.

Kindly allow me to convey my appreciation for this page. I loved that movie when I saw it first time. I was nineteen and I was bowled over. I to am searching for the movie.

After reading your page, my resolve to see the movie again has increased.

Thanks.

PAttu

www.gardenerat60.wordpress.com

Anonymous said...

Anatomy of Murder

This is also one wonderful movie in the same category.Watch and enjoy!!