Thursday, December 02, 2010

நந்தலாலா பற்றி இன்னும் கொஞ்சம..


 இத்திரைப்படத்தைப் பற்றின முந்தைய பதிவு குறி்த்து கருத்து தெரிவித்த / பாராட்டிய / விமர்சித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் உளளிட்ட சிலரும் தனிமடல் அனுப்பியிருந்தனர். மிஷ்கினின் படைப்புக் கையாடல் பற்றி பொதுவாக பலருக்கும் வருத்தமிருந்தாலும், குப்பையான சமகால தமிழ்ச் சினிமா சூழலில் அபூர்வமாக வெளிவருகிற நல்ல சினிமா பற்றி ஏன் ஓர் எதிர்மறையான கருத்தை உருவாக்குகின்றீர்கள் என்பது சிலரின் கேள்வியாக இருந்தது.

மீண்டும் சொல்கிறேன். நந்தலாலா மிகுநுண்ணுணர்வுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்ட நல்லதொரு திரைப்படம். ஓர் அனுபவம். நண்பர்கள் நிச்சயம் இதை திரையரங்கில் சென்று பார்ப்பது உன்னதமான அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்க வேணடிய கலைஞர்களும் படைப்பாளிகளுமே தங்களின் சுயத்தை இழந்து பெரும்பாலும் களங்கப்பட்டு  போனால் நம் சமூகமே அழுகிப்போனதொரு சமூகமே மாறிவிடும் அபாயமிருக்கிறது. எனவேதான் இந்தக் கயமைத் தனத்தை அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருந்தது.

முந்தைய பதிவில் 'அதிகம் நீளமாகி விடுமோ' என்கிற காரணத்தினால் எழுத வேண்டியவைகள் சிலவற்றை எழுதாமல் விட்டுவிட்டேன். பதிவிற்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டவுடன் அதையும் எழுதிவிடுவோம் எனத் தோன்றியது. எனவே இப்பதிவின் உருவாக்கத்திற்கு முந்தைய பதிவை பாராட்டினவர்களே காரணம். :-) (இனிமே செய்வீங்க?)

நந்தலாலாவின் காட்சிக் கோணங்களும்,  நிதானமாக நீளமாக விரிகிற காட்சிக்கு முரணாக, உடனடியாக சட்டென்று முடிந்து அடுத்தக் காட்சிக்கு விரைகிற ஷாட் கம்போஸிஷன்களும் கிகுஜிரோவின், டகேஷி கிடானோவின் பிரத்யேக பாணியை பெரும்பாலும் ஒத்திருந்தது.

என்றாலும் சில நுட்பமான உணர்ச்சிகளை பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்துவதில் மிஷ்கின் வெற்றி பெற்றிருந்தார்.

சிறுவன் ஆட்டோ ஒன்றை அணுகி 'அன்னவாசல்' போகணும் என்று தயக்கமாக கேட்கிறான். உடனடியாக அடுத்தக் காடசியில் இளைஞனும் சிறுவனும் பயணிப்பது காட்டப்படுகிறது. ஆட்டோ டிரைவர் உரையாடலின் போது இளைஞனை 'மெண்ட்டலா' என்று தன்னிச்சையாக கேட்டுவிடுகிறார். ஒரு சிறிய லீவரை இழுத்தவுடன் பெரிய பிரம்மாண்ட இயந்திரமொன்று இரைச்சலுடன் இயங்க ஆரம்பிப்பதைப் போன்று அந்த ஒற்றைச் சொல் அதுவரை மெளனமாக வரும் இளைஞனை மூர்க்கங் கொள்ள வைக்கிறது. 'எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்கும்' என்பார் குருதிப்புனல் கமல். தீவிரவாதக் குழுத்தலைவனை நோக்கி அதுவரை விறைப்பாக உரையாடும் காவல் அதிகாரி, அதனால் தம் குடும்பத்தின் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தலுக்குப் பிறகு தாம் அதுவரை போற்றி வந்த நேர்மையை கைவிடவும் தயாராகிறார். எந்தவொரு உறுதியான மனிதனுக்கும் பலவீனமான இடமும் தருணமும் உண்டு.

இதைப் போலவே மனநல விடுதியிலிருந்து தப்பி வரும் அந்த இளைஞனுக்கு அந்தச் சொல் அவனின் பலவீனமான இடத்தைத் தாக்குகிறது. ஆனால் அவனே பின்பு  ஒரு உணர்சசிகரமான சூழலில் "நீ என்ன சாதி" என்று கேட்கப்படும் போது 'மெண்ட்டல்' என்கிறான். நம் மீது வைக்கப்படும் பரிகாசத்தை சமயங்களில் நாமே முன்வந்து சுமத்திக் கொள்ளும் மன விந்தையான தருணங்களில் இதுவொனறு. சாதிகளைச் சுமந்து கொண்டு சக மனிதனை மூர்க்கமான வெறுக்கிற வெட்டிக் கொல்கிற இச் சமூகம் மனம் பிறழ்ந்ததா அல்லது மனம் பிறழ்ந்ததாக சமூகத்தால் கருதப்படும் மனிதன் அவனளவில் ஆரோக்கியமானவனா என்கிற நகைமுரணான கேள்வியை இந்தக் காட்சி முன்வைக்கிறது. இந்தக் காட்சியை பிரச்சாரமாக அல்லாமல் போகிற போக்கில் சொல்லப்படுகிற சில்ஹவுட் காட்சியாக, கவனிக்காவிட்டால் தவறிப்போகிற அலட்சியத்துடன் இயக்குநர் உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.

படத்தின் இறுதியில் 'உங்க அம்மா செத்துப் போயிட்டா' என்கிற இளைஞனை நோக்கி வெறுப்பின் உச்சத்தில் "போடா மெண்ட்டல்' என்று கத்துகிறான் சிறுவன். அதுவரை  ஏதுமறியாச் சிறுவனாகவே முழுத் திரைப்படத்திலும் உலவிக் கொண்டிருந்த அவன் பால்யத்தின் வெகுளித்தனங்கள் கழன்று அவனுள்ளிருக்கும் வன்மம் பூதாகரமாக வெளிப்படும் அதிர்ச்சியான காட்சியது. அதற்காக முழுக்கவும் அவனைக் குற்றஞ் சொல்ல முடியாது. தாயைச் சந்திப்பது என்பது அவனுடைய நீண்ட ஆண்டுகளான கனவு. அதை எவனோ ஒருவன் ஒரு வாக்கியத்தில் கலைப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதே சிறுவன் பின்பு தன் தாயை வேறொரு குடும்பத்துடன் பார்க்கும் போது காட்டும் ஏமாற்றமும் கோபமும் விரக்தியும் கலந்து காட்டும் முகபாவம் அற்புதமானது.

'போடா மெண்ட்டல்' என்ற வாக்கியம் இளைஞனிடமுள்ள மூர்க்கத்தை கிளறி விடுகிறது. அடிப்பதற்காக சிறுவனை நோக்கிப் பாய்கிறான். ஆனால் அடிக்க முடியவில்லை. அவன் இதுவரை அறிமுகமில்லாத சிறுவனென்றால் ஒருவேளை அடித்திருப்பானோ என்னவோ. எப்படியோ ஒரு பயணத்தின் மூலம் அவரவர்களின் அந்தரங்களைப் பகிர்ந்து கொண்ட தோழமையில் இளைஞன் சிறுவனை அடிக்க முடியாமல் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டு தன்னைச் சுருக்கிக் கொள்ளும்  காட்சியில் மிஷ்கினின் நடிப்பு அபாரமாக இருந்தது..

ஒரு திரைப்படத்தை எவ்விதமான நெருடல்களுமின்றி ஒரு பார்வையாளன் உள்வாங்கிக் கொள்ள கதையின் போக்கும் காட்சிகளும் நம்பகத்தன்மையோடு அமைவது முக்கியம். நந்தலாவில் சில காட்சிகள் நம்பகத்தன்மையின்றி விலகி நிற்பதாக எனக்குத் தோன்றிற்று. மனநல காப்பகத்தில் இருபது வருடங்களாக சிகிச்சை பெறும் அவனது சகோதரரும் உறவினரும் ஒருமுறை கூடவா வந்து பார்க்கமாட்டார்கள்? ஏன் அவனது சகோதரன் தன் தாயை இத்தனை மோசமான நிலையில் அப்படியே அத்தனை வருடங்களாக வைத்திருக்கிறான் என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. குறைந்த பட்சம் அவளை கட்டாயப்படுத்தி சுத்தமாகவாவது வைத்திருக்க மாட்டானா? தாயை கல்மனசுடன் புறக்கணிக்கிறவனாகவும் அவனைப் பார்த்தால் தெரியவில்லை.  'பாஸ்கர் மணி' என்று நெகிழ்ச்சியுடன் தன் சகோதரனை அழைக்கிறான்.

தன் தாயை ஒரு முறையாவது அறைகிற கோபத்துடன் செல்லும் இளைஞன் அங்கே அவள் தன்னை விட மோசமான பாதிப்பிலிருப்பதை கண்டு விக்கித்துப் போகிறான். அவன்தான் தன் தாயை சுத்தப்படுத்தி மனநல காப்பகத்தில் சேர்த்து விடுகிறான் என்பது யாரும் முன்வரும் தைரியமில்லாத சூழலில் ரவுடிகளிலிருந்து ஒரு பெண்ணை காப்பாற்றும் நாயகத்தன்மையை போற்றும் கிளிஷேவான வழக்கமாக தமிழ்சினிமா காட்சியாகவே இருக்கிறது.

இளைஞன் சிறுவனின் தாயை சந்தித்து அறையும் காட்சி.

அந்தச் சின்ன அறையில் மேலிருந்து கீழ்நோக்கிய காமிராவின் சிக்கலான கோணத்தில் அற்புதமான பின்னணி இசையின் தனிமையான துணையுடன் மாத்திரம் உருவாக்கப்பட்ட காட்சி. அந்தத் தாயின் தாள் பணியும் கதறல் அழுகையிலும் வேண்டுகோளிலும் அவளுடைய நிராதரவரான நிலைமை சுருக்கமாக ஆனால் அழுத்தமாக பார்வையாளனின் முகத்தில் அறையும் யதார்த்தத்தோடு சொல்லப்படுகிறது. ஆனால் தங்களின் தேடல் எதிர்மறைத் தோல்வியாக ஆகிப் போகிற கோபம் தாங்காமல் அவளை அறைகிறான். பெரும்பாலான பார்வையாளர்கள் அரங்கில் கைத்தட்டி மகிழ்ந்த காடசியிது. ஆனால் ஓடிப்போன தகப்பனின் பொறுப்பின்மையைப் பற்றி வசதியாக அனைவருமே இங்கு மறந்துவிடுகிறோம். தாய்மையைப் போற்றுகிற சாக்கில் அவளின் மீது அத்தனை பொறுப்பையும் சுமத்தி சங்கிலியில் கட்டி வைக்கிற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு இது. இளைஞன் விடுகிற அறையில் சிறுவனின் அப்பனுக்கும் பங்கிருக்க வேண்டுமல்லவா? ஆனால் முந்தைய காட்சியின் உரையாடல் ஒன்றில் இளைஞன், ஓடிப் போன தங்களின் தகப்பனைப் பற்றி  போகிற போக்கில் நகைச்சுவையாக பகிர்ந்து கொள்கிறான். அவனின் கோபம் தன் தாயை நோக்கி மாத்திரமே மையம் கொண்டிருக்கிறது. ஆண் என்றாலே அப்படித்தானிருப்பான், பெண்தான் தன் குழந்தைகளை கண்ணுங் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்கிற விந்தை வெளிவிட்ட திருப்தியோடு தன் பொறுப்பு கழிந்து விட்டதென்று ஒதுங்கி நிற்கிற ஆண்களின் அயோக்கிய மனப்பான்மையை இந்தக் காட்சிகள் இயக்குநரால் தன்னிச்சையாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதிலுள்ள நுட்பம் புரிந்து கொள்ளப்படாமல் போவது துரதிர்ஷ்டமே.

இந்த மாற்றுச் சிந்தனையோடு மிக அற்புதமாக எழுதப்பட்ட இந்தப் பதிவை இங்கு பகிர விரும்புகிறேன்.

நந்தலாலா : தாய்மைச் சுமை

(தொடரலாம்)

suresh kannan

22 comments:

Kaarthik said...

//சாதிகளைச் சுமந்து கொண்டு சக மனிதனை மூர்க்கமான வெறுக்கிற வெட்டிக் கொல்கிற இச் சமூகம் மனம் பிறழ்ந்ததா அல்லது மனம் பிறழ்ந்ததாக சமூகத்தால் கருதப்படும் மனிதன் அவனளவில் ஆரோக்கியமானவனா என்கிற நகைமுரணான கேள்வியை
இந்தக் காட்சி முன்வைக்கிறது//

Subtle-ஆக சொல்லப்பட்ட அற்புதமான காட்சி

Unknown said...

Nice! :-)

Unknown said...

//ஆண் என்றாலே அப்படித்தானிருப்பான், பெண்தான் தன் குழந்தைகளை கண்ணுங் கருத்துமாக வளர்க்க வேண்டும் என்கிற விந்தை வெளிவிட்ட திருப்தியோடு தன் பொறுப்பு கழிந்து விட்டதென்று ஒதுங்கி நிற்கிற ஆண்களின் அயோக்கிய மனப்பான்மையை இந்தக் காட்சிகள் இயக்குநரால் தன்னிச்சையாக அமைக்கப்பட்டிருந்தாலும் இதிலுள்ள நுட்பம் புரிந்து கொள்ளப்படாமல் போவது துரதிர்ஷ்டமே//
True

மேற்கு தொடர்ச்சி மலை said...

வணக்கம் சுரேஷ்கண்ணன்
நான் பாஸ்கர்சக்தி...வலையுலகை அவ்வப்போது கவனித்து வந்தாலும் அதிகம் பின்னூட்டம் எல்லாம் போடுவதில்லை. நந்தலாலா குறித்த உங்கள் பதிவு சிறப்பானது...படம் பற்றிய பார்வையும், படைப்பாளிக்கு தேவையான நேர்மை குறித்தும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.நந்தலாலா படம் பற்றி உங்களது பெருமபாலான கருத்துகள் எனக்கும் ஏற்புடயவை.என்றாலும் நந்தலாலா தமிழ் மண்ணில் வேர் விடாமல் அந்தரமாக நிற்கிறது என்பதை மறுக்க முடியாது.நான் பார்த்த பதிவுகள் எதிலும் எவரும் குறிப்பிடாத ஒரு விஷயம்...சிறுவனும், பாஸ்கர் மணியும் பயணிக்கிற வழிகளில் வினோதமான வாகனங்கள் எல்லாம் வருகின்றன...ஏன் ஒரு பஸ் கூட வரவில்லை?..கோயம்பேடில் அவர்கள் ஏற முயன்ற பஸ் எல்லாம் பைபாஸில் போய் விட்டதா?...(அட நிற்காமல் கடந்தாவது போயிருக்கலாம் இல்லையா?)இது போன்ற நிறைய கேள்விகள் இருக்கின்றன. ( நந்தலாலாவில் எனக்குப் பிடித்த காட்சிகள் போலிஸ் மற்றும் இளநீர்க்காரர் )சரி இருக்கட்டும்..பல நாட்களாக பின்னூட்டமிட வேண்டும் என்று நினைத்து இன்றுதான் வாய்த்தது.உங்கள் பதிவுகள் ரசிக்கும்படியான தரத்துடனும் நாகரிகத்துடனும் இருக்கின்றன...மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கௌதமன் said...

Very Nice review...

PRABHU RAJADURAI said...

வேடிக்கை என்னவென்றால், உலக சினிமாவைப் போற்றும் 'உயர்ரக' ரசிகர்களுக்கு, இங்கு சிலாகித்து விவாதிக்கத்தக்கதாக கிடைக்கும் படமும் கூட திருட்டுப் படமாக இருப்பதுதான்.

Unknown said...

தொடருங்கள் ..! அந்த கூழாங்கல்,மலைப்பாம்பு, இறந்த வெள்ளை கொக்கு வருகிற காட்சி பற்றியும்,,,எதிர்பார்க்கின்றேன்

crazyidiot said...

the film made u to write second post on it.. its d success fr d film..

Toto said...

ரொம்ப‌ ந‌ன்றி சுரேஷ்.. முத‌ல்ல‌ லாரி டிரைவ‌ர் அவ‌னை பிஞ்சு போற‌ அள‌வுக்கு அடிச்சிட்டு, அப்புற‌ம் கூட்டிட்டு போய் சாப்பிட‌ வாங்கித் த‌ருவானே.. அதைத்தான் நீங்க‌ போன‌ பதிவுல‌யும், இந்த‌ ப‌திவுல‌யும் செஞ்சிருக்கீங்க‌. ஒரு ப‌ட‌த்துக்குள்ளே இவ்வ‌ள‌வு நுட்ப‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளை இது வ‌ரைக்கும் நான் பார்த்த‌தில்லை. நானும் பார்ட் 2 எழுத‌றேன். ந‌ன்றிங்க‌.

-Toto.
www.pixmonk.com

rajasundararajan said...

பொறுப்போடு எழுதி யிருக்கிறீர்கள். உங்கள் புரிதலும் சிறப்பாக இருக்கிறது. மகள் நேயா எழுதியுள்ள விமர்சனத்தில் மிஷ்கின் மீதுள்ள வெறுப்பு துருத்திக்கொண்டு தெரிகிறது. திருடன் ஆகையால் மிஷ்கினும் வெறுக்கப்பட வேண்டியவரே. ஆனால் அந்த ஜப்பானிய மூலவரும் ஆணியவாதிதானா என்பது எங்களுக்குத் தெளிவில்லாத ஒன்று. அவன் எக்கேடுகெட்டும் போகட்டும் இவன் ஏன் இப்படி என்றால் அது பாராட்டப் பட வேண்டியதுதான்.

மறுபடியும் சொல்கிறேன், உண்மை பொய் என்று உலகத்தைப் பகுத்து உறவாடுவதில் ஊதியம் இல்லை. நன்மை தீமை என்று கணித்துக் கனிதலே நலம்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நன்று.

Unknown said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது நன்றி.

நீங்கள் எந்தளவு படத்துடன் ஒன்றி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது.

எண்ணங்கள் 13189034291840215795 said...

'எல்லோருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்கும்' //

ஆழ்ந்த அலசல்.

தமிழ் திரு said...

இது போன்ற நுண்ணிய பார்வை உள்ள விமர்சனம் மட்டுமே படிப்பவனுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ... வாழ்த்துகள் !!!

Prathap Kumar S. said...

ஒரு படத்தை இவ்வளவு நுணுக்கமாக ஆராய முடியுமா?

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி நண்பர்களே.

அன்புள்ள பாஸ்கர்சக்தி,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. ஆவியில் நீங்கள் எழுதின பஸ்ரூட் தொடர், எம்டன் மகனில் நீங்கள் நடித்த டாக்டர் பாத்திரம், சிறுபிள்ளைத்தனமாக உங்கள் பெயரை அனுமதியின்றி உபயோகித்து நான் எழுதின பதிவு -

இவை மூன்றுமே உங்கள் பெயரைக் கேட்டதும் நினைவில் வரும். :-)
சமீப படங்களில் உங்களின் வசனங்கள் மண்வாசத்துடன் இயல்பாக அமைந்திருந்தன. நன்றி.

பிரபுராஜதுரை:

:-) வக்கீல் ஐயா இன்னும் ஸ்ட்ராங்கான பாயிணட் ஏதாவது போட்டிருக்கலாம்.

ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அதற்கு பதிலளிக்காது திசைதிருப்பும் விதமாக 'நீ யோக்கியமா' என்று எதிர்க்கேள்வி கேட்பது அரசியல்வாதிகளிடமிருந்து நமக்கு தொற்றிக் கொண்டதா, அல்லது நம்மிடமிருந்து அவர்களுக்கா, அல்லது பொதுவான கலாச்சாரமே இப்படித்தானோ (என்னையும் உள்ளிட்டே சொல்கிறேன்) என்னைப் பொறுத்த வரை வெளிநாட்டுத்திரைப்படங்களை இணையத்தில் தரவிறக்கியும் பர்மாபஜார் டிவிடிகளிலும் பார்க்கிறேன் என்பதை முன்பே தெளிவுபடுத்தியிருக்கிறேன். வணிகத் திரைப்படங்களையும் அவ்வாறே. ஆனால் இது போல் நல்ல திரைப்படங்கள் எனக் கருதுபவைகளை அரங்கத்தில் சென்று காண்பதை குறைந்தபட்ச நியாயமாக வைத்திருக்கிறேன். அங்காடித்தெருவும் அப்படிப் பார்த்ததுதான். என்றாலும் கள்ளக்குறுந்தகடுகளை உபயோகப்படுத்துவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன்.

Toto:

இத்திரைப்படத்தின் திரைமொழி குறியீடுகள் பற்றி உங்கள் பதிவில் வாசித்தேன். அபாரம்.

ராஜசுந்தரராஜன் சார்,

கவிதையும் படிமங்களும் இணைந்த உங்களின் அற்புதமான பின்னூட்டங்களை ஆங்காங்கே காண்கிறேன். நீங்கள் இத்திரைப்படத்தைப் பற்றி ஒரு முழுபதிவாக எழுதினால் நன்றாகயிருக்கும். தி இடியட் பற்றி நீங்கள் விளக்கிப் பேசினது இன்னமும் நினைவிலிருக்கிறது.

PRABHU RAJADURAI said...

திருட்டுப்படம் என்று குறிப்பிட்டது, நீங்கள் டிவிடி பார்ப்பதை அல்ல. இங்கு விவாதிக்கப்படும் படம் பற்றியது.

போலிகளே இங்கு படைப்பாளிகளாக கொண்டாடப்படும் அவலத்தை பார்க்க சகிக்காத ஆதங்கத்தை எவ்வளவு வெளிப்படுத்தினாலும்...ஏதோ இதாவது செய்கிறார்களே என்று அவர்களுக்காக சப்பைக்கட்டு கட்டுவீர்கள்

மசாலா படம் எடுப்பவர்கள் மீது நீங்கள் காட்டும் ஆவேசத்தை விட அதிகமாக காட்டப்பட வேண்டியவர்கள், இவர்கள்தான்.

Ashok D said...

இந்த பதிவும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி அளிக்கிறது... அல்லது என் மனம் நெகிழ்வாய் இருக்கிறதா என்றும் தெரியவில்லை?

இந்த பின்னூட்டமும் - உங்களின் பதிவிலிருந்தே கையாளப்பட்டதோ?

மேற்கு தொடர்ச்சி மலை said...

நன்றி சுரேஷ்கண்ணன்,(நான் பாஸ்கர்சக்தி.)
நீங்கள் என் குறித்து அப்போது எழுதிய பதிவுக்கு நான் கொஞ்சம் அதிகப்படியாக கோபப்பட்டதை நினைத்து பின்னாளில் வெட்கப்பட்டேன்...அந்த சமயத்தில் எனக்கு பதிவுலகம் பற்றி எதுவுமே தெரியாததால் ஏற்பட்ட குழ்ப்பத்தில் விளைந்த முதிர்ச்சியற்ற கோபம் அது....நாம் பல நேரஙகளில் அப்படித்தானே இருக்கிறோம்?

குரங்குபெடல் said...

மிஷ்கின் கிகுஜிரோவை மாற்று தமிழ்சினிமா என்ற பெயரில்
அசிங்கப்படுத்தி விட்டார் . . .

படத்தின் பல நிதானகாட்சிகளில் கதையின் இயல்பு முடங்கிப்போய்
இயக்குனரின் வித்தியாசமாய் எதையாவது
செய்வோம் என்ற தொனியே முன் தெரிகிறது . . .

ஒரிஜினல் இயக்குனர் நந்தலாலாவை பார்த்தால் அழுதுவிடுவார்தான் . . .

ஆனால் ... படத்தோடு ஒன்றி அல்ல


நன்றி . . . சுரேஷ் கண்ணன்

புதிய ஆதவன் said...

நந்தலாலா போன்ற திருட்டுப் படைப்புகளை இடதுகையால் ஒதுக்கி தள்ளுவதேசரியான விமர்சனமாக இருக்கும். அதை விடுத்து அதில் உள்ள நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு பாராட்டுவதுசரியல்ல.''அண்ணா ''

Lokesh Babu.B said...

This review is very honest. it demands attention. Great work Sir.