இப்படியொரு நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் அறிவிப்பைக் கேட்ட போது அதைக் காண்பதற்கு சற்று எதிர்பார்ப்பு இருந்தது. ஓரு திரைப்பட இயக்குநராக ஆக வேண்டும் என்கிற என் நிறைவேறாத இளவயது ஆசை காரணமாக இம்மாதிரியான போட்டிகளைக் காண அதிக ஈடுபாடு உண்டு. அசோக் அமிர்தராஜின் இதே போன்றதொரு "GATEWAY" நிகழ்ச்சி சோனிபிக்ஸ்-ல் ஒளிபரப்பான நேரம் இரவு 10.00 மணி என்றாலும் காத்திருந்து பார்த்து வந்தேன். ஆனால் 'நாளைய இயக்குநர்' முதல் எபிசோடை பார்க்கும் போது பெரிதான ஈர்ப்பு எதையும் அது ஏற்படுத்தவில்லை. பிரதாப்போத்தனும் மதனும் பிரதான நடுவர்களாக இருக்க, ஒவ்வொரு எபிசோடின் போதும் ஒரு சினிமா இயக்குநர் விருந்தினராக வந்திருந்து பங்கு பெறும் போட்டியாளர்கள் உருவாக்கியிருக்கும் குறும்படங்களின் மீதான தன்னுடைய கருத்துக்களைச் சொல்வார். நிகழ்ச்சி பிடிக்காமலிருக்க அதன் தொகுப்பாள பெண்ணும் ஒரு காரணமாயிருக்கலாம். எனவே தொடர்ந்து அதை பார்ப்பதில்லை.
ஆனால் ஞாயிறான நேற்று சாவகாசமாக சானல்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த ஒரு குறும்படம் அடுத்த சானலுக்கு மாற்ற விடாமல் உடனடியாக என்னை ஈர்த்தது. அந்த வாரம் காமெடி சப்ஜெக்ட்டை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும்.
மனைவியை கன்னாபின்னாவென்று சந்தேகப்படும் ஒரு கணவன். அவள் என்ன நிறத்தை அவனிடம் சொல்கிறாளோ, அதை சரியாக யூகித்து அதே நிறத்தில் உடை, வீடு, என்று மாற்றி வந்து நிற்கும் ஓர் இளைஞன். எப்படி அவனுக்கு இவள் சொல்லும் நிறமெல்லாம் சரியாக தெரிகிறது என்று மேலும் மேலும் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கிறான் அந்தக் கணவன். இப்படியாகச் செல்கிறது அந்த குறுங்கதையின் மையம். ஆனால் இதை எடுத்திருப்பதற்காக இயக்குநர் அதிகம் மெனக்கெட்டு உழைத்திருப்பது பிரமிப்பை ஏற்படுத்தியது. கணினி நுட்பத்தை மிகப் பொருத்தமாக படத்தில் பயன்படுத்தியிருந்தார் அவர்.
கணவராக நடித்தவர் 'காதல்' திரைப்படத்தில் பரத்திற்கு நண்பராக நடித்த சுகுமார். அவரது மனைவியாக நடித்தவரும் நகைச்சுவை நடிப்பை மிகத் திறமையாக கையாண்டிருந்தார். மனைவியைக் கவர்பவராக வரும் அந்த இளைஞரின் நடிப்புதான் அனைவரையும் விடவும் அதிக பட்ச திறமையுடன் வெளிப்பட்டிருந்தது. இத்தனைக்கும் அவருக்கு எந்தவொரு வசனமும் கிடையாது. வெறும் உடல் மொழியிலேயும் நுட்பமான சைகைகளாலுமேயே பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருந்தார் அவர். நடுவர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள் அனைவரையுமே கவர்ந்த அந்த நடிகரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றிற்று.
விருந்தினராக வந்திருந்த இயக்குநர் பாண்டியராஜன்தான் அதை தெளிவுப்படுத்தினார். வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' திரைப்படத்தில் தனுஷின் பைக்கை திருடிச் செல்பவராக நடித்திருக்கும் அவரின் பெயர் 'சென்ராயன்' (என ஞாபகம்). அந்தத் திரைப்படத்தில் மிகக் குறுகிய நேரமே வந்திருந்தாலும் வடசென்னைவாசியின் மொழியையும் உடல் மொழியையும் மிகத் திறமையாக வெளிப்படுத்தியிருப்பார். எனவேதான் அத்திரைப்படம் குறித்து எழுதிய இடுகையில் இவரின் பாத்திரத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டிருந்தேன்.
"கூட்னு போ. அட்ச்சி கிட்சி போட்றப் போறன்" என்று தவ்லத்தாக ஒரு ஆசாமி வருவாரே......அவர்தான் வடசென்னையின் அசலான முகம்.மற்ற போட்டியாளர்களின் குறும்படங்களை என்னால் காண இயலவில்லையென்றாலும், என்னை ரொம்பவும் கவர்ந்த இந்தக் குறும்படமே அந்த எபிசோடில் முதல் பரிசு பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த இயக்குநரின் பெயர் கூட என் நினைவிலில்லை. அடுத்த வாரம் முதல் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து காண வேண்டும் என்கிற ஆவலை இந்தக் குறும்படம் ஏற்படுத்தியிருக்கிறது.
எத்தனை திறமைகள்!.
suresh kannan
16 comments:
சோக்கா எய்திகினணா... :)
(தென்சென்னை அஷோக்கு)
சுரேஷ் ஜி, நானும் ஆர்வமா பார்த்துட்டு வந்தேன்.
கொடுமைன்னா கொடுமையான படங்களா போட்டு, ஏண்டா பார்த்தோம்னு ஆகிப்போச்சு.
மதனும் பிரதாப்பும் கொடுக்கிற விளக்கங்கள் தெளிவா இல்லை. புதுசா படம் இயக்கிட்டு வர்றவனை, தாதா ரேஞ்சில் மிரட்டுவது போல் இருந்தது.
பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.
எப்பவாவது நீங்க சொல்ற மாதிரி நல்ல குறும்படம் போடுவாங்களோ என்னவோ?
இப்படி ஒரு நிகழ்ச்சி வருதா? ! ஒரு தடவையாச்சும் பார்த்துடனுமே!
அது எழுத்தாளர்களின் சிறுகதைகளை படமாக்கும் சுற்று. முதல் இரண்டு கதை சுஜாதாவினுடையது.இது தி.ஜானகிராமன் என்று ஞாபகம். பெயர் ''கலரு ? ''
நிகழ்ச்சி இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்குத் துவங்குகிறது என நினைக்கிறேன். நேரத்தை சரி பார்த்துக் கொள்ளவும்.
//அது எழுத்தாளர்களின் சிறுகதைகளை படமாக்கும் சுற்று.//
அப்படியா?
உயிர்மை பதிப்பகம் சார்பில் கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த சுஜாதா இரண்டாமாண்டு நினைவுக் கூட்டத்தில் மதன் இதைப் பற்றிக் குறிப்பிட்டார். பெரும்பாலான இளம் இயக்குநர்கள் படமாக்குவதற்காக சுஜாதாவின் கதையையே தேர்வு செய்தது சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதையும் உலகச் சிறுகதைகளின் பரிச்சயமோ அது குறித்த தேடலோ இளைஞர்களிடம் இல்லாமலிருப்பதை குறிப்பிட்டு வருந்தினார்.
இந்த விழா குறித்து விரிவாக எழுதத் திட்டம். பார்க்கலாம்.
உள்ளேன் ஐயா...
நேற்று வெகு தற்செயலாகத்தான் அக்குறும்படத்தைப் பார்த்தேன். நன்றாக இருந்தது...
கதை: ஜே.பி. சாணக்யா...
இயக்கம்: செங்கோட மோகன்...
இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது ஓரிரு படங்கள் தேறுகிற வகையில்தான் இருக்கின்றன...
இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி...
வழக்கத்திற்கு மாறாக ஆன்லைனில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது. என்னையும் அறியாமல் தற்செயலாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிக்கும் நிகழ்ச்சிக்கும் விளம்பரம் செய்துவிட்டேனோ என்று குறுகுறுப்பாக இருக்கிறது.
அது மாத்திரமல்லாது 'அவரவர்களின் ரிஸ்க்கில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிற disclaimer-ஐ போட்டிருக்க வேண்டுமோ? அக்கிரகாரத்து கழுதை உதைத்த பாதிப்பிலிருந்து எதையும் பரிந்துரை செய்ய சற்று யோசனையாகவே இருக்கிறது. :-)
நல்ல இடுகை. // நிகழ்ச்சி பிடிக்காமலிருக்க அதன் தொகுப்பாள பெண்ணும் ஒரு காரணமாயிருக்கலாம். எனவே தொடர்ந்து அதை பார்ப்பதில்லை. // இப்படி பட்ட "என் ரேஞ்சே வேற" என நிரூபிக்க முயலும் சிலவற்றை தவிர்த்தால் நலம்.இது போல கேட்டுக் கேட்டு புளித்து போய்விட்டது :)
//"என் ரேஞ்சே வேற"//
என்ன வம்பு இது ஜோ?
நானும் சாதாரண ரேஞ்சுதான். அதனால்தான் ஸ்பெஷல் ரேஞ்சை (அட! பார்ப்பதற்குத்தான்) எதிர்பார்க்கிறேன். இது ஒரு தவறா? கலி முத்திப் போயிடுச்சுப்பா! :-)
சுரேஷ் கண்ணன், குறும்படங்களை பார்ப்பது தான் உங்கள் நோக்கமென்றால் ,குறும்படங்களின் தரமே அந்நிகழ்ச்சியை பார்ப்பதையும் ,பார்க்காததையும் நிர்ணயிக்க வேண்டும் ..இடையில் ஒரு நிமிடம் அந்த பொண்னு ஏதோ பேசுவதினால் நிகழ்ச்சியையே புறக்கணித்து விட்டேன் என சொல்லுவது ... சாரு நிவேதிதா மாதிரி ஆட்கள் தான் இம்மாதிரி பீலா விடுவார்கள் ..அந்த அர்த்தத்தில் சொல்லிவிட்டேன் ..தவறென்றால் மன்னிக்கவும் :)
ஜோ : இதனால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதேயில்லை. :-)
'அந்தப் பெண்ணும் ஒரு காரணமாயிருக்கலாம்'என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். இவையெல்லாம் மேம்போக்காக ஜாலியான தொனியில் எழுதப்படுவது. அவ்வாறே வாசிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
அடுத்து, பெண்ணிய நோக்கில் இதை ஆய்வு செய்ய யாரும் வரக்கூடாது என்று எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தித்துக் கொண்டு இன்றைய கணினியை அணைக்கிறேன். :-)
(இந்த பின்னூட்டமும் நகைச்சுவைக்காகத்தான் எழுதப்படுகிறது என்றறிக)கடவுளே!
prathab pothan and madhan. both the people are alergy to me
//ஜோ : இதனால்தான் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பதேயில்லை. :-)// :)))
//(இந்த பின்னூட்டமும் நகைச்சுவைக்காகத்தான் எழுதப்படுகிறது என்றறிக)கடவுளே!//
என்ன கூப்பிட்டீங்களா?
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/
Post a Comment