Wednesday, March 17, 2010

ஆஸ்கர் நாமினேஷன் - 6 (எ சீரியஸ் மேன்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது நான்காவது ஐந்தாவது

இந்த வரிசையில் ஆறாவது திரைப்படம் A SERIOUS MAN.

கோயன் பிரதர்ஸ்.

டாரண்டினோ போல பார்த்து மாத்திரமே அனுபவிக்க வேண்டிய திரைப்பட இயக்குநர்களில் இவர்களையும் சேர்க்க வேண்டும். அகாதமி விருதைப் பெற்ற 'No Country for Old men' படத்தை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் படத்தின் கதைப் போக்கு இப்படித்தான் என்று எவ்வளவு திறமையாக எழுதினாலும்  எப்படி அது படைப்பிற்கு நியாயம் சேர்க்காமல் போகுமோ, அதையே இத்திரைப்படத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம்.

..அல்லது இப்படிச் சொல்லிப் பார்க்கிறேன். கோணங்கியின் சமீபத்திய படைப்பான 'இருள்வ மெளத்திக'த்தின் உள்ளடக்கத்தை 'பாட்டி-வடை-காக்கா, கதை போல, 'இரண்டு பத்திகளில் சொல்லு' என்று யாராவது கேட்டால் அது எவ்வளவு நுண்ணுவர்வற்றதாக இருக்குமோ, அப்படித்தான் இத்திரைப்படத்தைப் பற்றி எழுதுவதும். [அப்பாடி! சிவராமன் (பைத்தியக்காரன்) மகிழும்படி எப்படியோ ஒரு தமிழ் எழுத்தாளரை உள்ளே கொண்டு வந்தாயிற்று.] :-) சிக்கலான கணித சூத்திரங்களுக்கு ஈடாக புதிர்ப் பாதைகளின் வழியே பூடகமாக பயணிக்கும் கோணங்கியை வாசகனே நேரடியாக வாசித்துக் கொள்வதுதான் ஒரே வழி. அப்படித்தான் இத்திரைப்படமும்.

இருந்தாலும்  இத்திரைப்படத்தைப் பற்றினதோர் அறிமுக அடிப்படை கோட்டுருவத்தையாவது ஏற்படுத்த முயன்றுப் பார்க்கிறேன்.


பொதுவாக யூதர்கள் என்றாலே அவர்கள் நாஜிப் படையினரின் கீழே நசுங்கிப் போகும் பரிதாப கரப்பான் பூச்சி சினிமாதான் பார்த்திருக்கிறேன். மாறாக ஒர் அமெரிக்க யூதக் குடும்பத்தை இத்தனை நெருக்கமாக பார்த்தது இத்திரைப்படத்தில்தான். 'வாழும் மனிதனுக்கு சோதனை வரலாம். ஆனால் சோதனைகளுக்கு நடுவிலேதான் வாழ வேண்டும்' என்றால் எப்படி?' என்கிற அரதப்பழசான வாக்கியத்துடன் இந்த கறுப்பு நகைச்சுவைப் படத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

வருடம் 1967. அமெரிக்க மாவட்டமான மினியாபோலிசின் புறநகர். இயற்பியல் ஆசிரியரான Larry Gopnik நேர்மையானவர். ஓர் ஒழுங்கான நேர்க்கோட்டுடனான வாழ்க்கையை வாழ விரும்புபவர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் முதற்கொண்டு அனைவரும் அவரைச்  சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றுகின்றனர். அப்பாவின் பையிலிருந்து காசு திருடும் மகள், அவளிடமிருந்து திருடி மரிஜூவானா புகைக்கும் பள்ளிச்சிறுவனான மகன், 'வரும்போது ரெண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு வாங்க' என்பதற்கு பதிலாக  'விவாகரத்துப் பத்திரத்தோடு வாங்க' என்று வீட்டை விட்டு துரத்தும் அதிரடி மனைவி, அவள் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஒரு கிழவர், அமீபா போல வீட்டோடேயே ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஹோமோ மூத்த சகோதரர், வரப்புத்தகராறு செய்யும் பக்கத்து வீட்டுக்காரர், பணக்கவரை தந்துவிட்டு "பெயிலாக்கினே, மவனே" என்று அமைதியாக மிரட்டும் கொரிய மாணவன், அதன் மூலமாக ஏற்படும் புகழ்கறைகள், இதிலிருந்து விடுபட ஆலோசனை வேண்டிச் செல்லும் போது குழப்பியனுப்பும் யூத குருமார்கள்....

ஒரு மனிதன் என்னதான் செய்வான்?... 'சோதனை மேல் சோதனை' என்ற சிவாஜி பாடலை இப்ரூ மொழியில்  டிஎம்எஸ் பாடி அதை லேரிக்கு அனுப்பியிருந்தால் சந்தோஷமாக சோகமாக பின்னணியில் வாயசைத்திருப்பார்.

அரை மணி நேரமாவது ஆகும் என்று வெறுப்பு டிராபிக்கில் காத்திருக்கும் போது அது ஐந்தே நிமிடத்தில் சரியாகி ஆச்சரியமேற்படுத்துவது போல Larry-ன் சில பிரச்சினைகள் இயற்கையாகவே சரியாகிறது. என்றாலும் டிராபிக்கிலிருந்து  வேகமாக விடுபட்ட வண்டி மந்திரியின் கான்வாயிற்குள் எதிர்பாராமல் புகுந்து விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆகுமோ, அப்படியே படம் முடிந்த பின்னரும்  பிரச்சினைகள் தொடர்கின்றன.

Larry Gopnik-ஆக Michael Stuhlbarg நடித்திருக்கிறார். நாடக, தொலைக்காட்சி நடிகரான இவர் ஏற்கெனவே சில சினிமாக்களில் சிறுவேடங்களில் நடித்திருந்தாலும் பிரதான வேடத்தில் நடிப்பது இதுவே முதன்முறை. லெளதீக வாழ்வில் அல்லலுறும் ஒர்  நடுத்தர வர்க்க அப்பாவியை சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

ஏற்கெனவே விவரித்தது போல் இயக்குநர்களான Joel மற்றும் Ethan Coen சகோதரர்களின் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை அவர்களே விவரித்தால்தான் உண்டு. அவர்கள் இறைத்துப் போடும் பல்வேறு புள்ளிகளை பொறுக்கிக் கொண்டு அவரவர்களின் ரசனை மற்றும் புரிதலின் அடிப்படையில்தான் பார்வையாளன்தான் அந்த வடிவத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

படம் ஒரு புராதனமானதொரு யூத நாட்டார் வழக்காற்றியல் கதையுடன் துவங்குகிறது. கணவன் அழைத்துவரும் விருந்தாளியை ஆவி என நம்பி கத்தியால் குத்துகிறாள் மனைவி. குருதி கத்தியுடன் வெளியேறும் அந்த கிழவனை இந்த பிரதானக் கதையுடன் எப்படி பொருத்திப் பார்ப்பது எனப் புரியவில்லை.

Larry காணும் கனவுகளில் ஒன்று வரலாற்றுத் தொடர்ச்சியுடன் இருந்ததை கவனித்தேன். சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சகோதரனை நிறையப் பணம் தந்து தப்பித்துச் செல்லுமாறு படகொன்றில் ஏற்றி அனுப்புகிறான்  சிறிது தூரம் கடப்பதற்குள் துப்பாக்கியொன்று வெடித்து சகோதரனைக் கொல்கிறது. Larry அதிர்ச்சியுடன் சுற்றிப் பார்க்கும் போது 'அதோ பார், இன்னொரு யூதன்' என்று துப்பாக்கியுடன் குறிபார்க்கிறான் ஒருவன். Larry அலறியடித்து எழும் போதுதான் கனவென்று புரிகிறது. கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட யூதர்களின் பெரும்பான்மையோர்களின் ஆழ்மனதில் அவர்கள் அனுபவித்த வன்முறை பரம்பரையாகத் தொடரும் என்பதாக இதைப் புரிந்து கொள்கிறேன்.

கோயன் சகோதரர்களின் உருவாக்கங்களை விரும்பி ரசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்களுக்கு இது ஒருவேளை ஏமாற்றத்தைத் தரலாம். அகாதமியின் 'சிறந்த படம்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் விருதைப் பெறவில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. Roger Deakins அற்புத ஒளிப்பதிவு இத்திரைப்படத்தின் காண்பனுபவத்தை மேலும் சுவாரசியமாக்குகிறது.

தேவையான / யற்ற பின்குறிப்பு: மேற்குலகில் 'நகைச்சுவை' என்பதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது நீண்ட வருட சந்தேகமாக உள்ளது. நம்மூரில் என்றால் கிரேசி மோகன் எழுதி நிமிடத்திற்கு இரண்டு முறையாவது அடுத்தவர் தொடையில் தட்டி கண்ணீர் வர சிரித்தால்தான் அதை 'நகைச்சுவைப்படம்' என ஒப்புக் கொள்கிறோம். அங்கெல்லாம் யாராவது கண்களை விழித்து விநோதமாக பார்த்தாலே காமெடிப்படம் என்கிறார்களா என தெரியவில்லை.

சீரியஸான படமொன்றை பார்த்தோம் என்ற உணர்வுடன் இருந்தால் அதை 'comedy' என்கிற வகையில் IMDB-ல அடைத்து வைத்திருப்பதை பின்னர் பார்க்கும் போது விநோதமாக இருக்கிறது. புளியோதரையின் மீது முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றுவது போல.

suresh kannan

10 comments:

லேகா said...

Suresh,

Thanks for Sharing!!

U hve been a grt initiative for people like me who r much interested in World movies!!

Karthik S said...

Hi Suresh Kannan

Do you know any place where we can buy these movies in Chennai? Or the only option is to download?

Thanks!

Ashok D said...

நகைச்சுவையும் லைட்டா... வருது சார் உங்களுக்கு.... :)))

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு,

ஆஸ்கர் விருது 2010 - சிறந்த படம்' பிரிவில் இடம் பெற்ற அனைத்து பத்துப் படங்களையும் பற்றி எழுத வேண்டுமென்கிற ஆவலில்தான் இந்தத் தொடர் இடுகையை ஆரம்பித்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் (அப்படித்தானே சொல்லணும்) இதைத் தொடர முடியாத நிலையிலிருக்கிறேன். பணி அழுத்தம் முதற்கொண்டு சில படங்களின் குறுந்தகடுகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமங்களும் கூடுதல் காரணங்கள். மன்னிக்கவும்.

Ashok D said...

சார்.. ஒன்னும் urgent இல்ல நிதானமா எழுதுங்க... படிக்கறதுக்கு நாங்க வெயிட் பண்ணுவோம்.. :)

மரா said...

Its ok but whenever u find time keep posting such good film reviews boss.....Thanx n regards- Mayilravanan

geethappriyan said...

நண்பர் சுரேஷ் கண்ணன்
இந்த படத்தைப்பற்றி சுவையாக எழுதியுள்ளீர்கள்,எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம்
http://geethappriyan.blogspot.com/2010/02/182009.html
இதற்கு நான் எழுதிய விமர்சனம்
நேரம் கிடைக்கையில் படிக்கவும்.
நன்றி.உங்களுக்கு ஹார்ட் டிஸ்கில் படங்கள் பார்க்க பிடிக்கும் என்றால் ஒரு 500ஜிபி ஹார்ட் டிஸ்க் தயார் செய்யவும்.அடுத்தமாதம் சென்னை வரும்போது காப்பி செய்து கொள்ளுங்கள்,என்னிடம் அழிக்காம்ல் சுமார் 700 படங்கள் உண்டு

பிச்சைப்பாத்திரம் said...

கார்த்திகேயன்,

உங்கள் பதிவை படித்தேன். எத்தனை பொறுமையாக முழுக்கதை நிகழ்வுகளையும் எழுதியுள்ளீர்கள்! ஆச்சரியம். அப்புறம் 500 ஜிபி hard disk எல்லாம் நான் பார்த்தது கூட இல்லை. எனிவே உங்கள் அன்பிற்கு நன்றி. ரொம்பவும் ரேர் படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Chandran Rama said...

....ியோதரையின் மீது முட்டையை வைத்து பிரியாணி என்று ஏமாற்றுவது போல.....

superb comparison.!!!
very humorous ..
I really laughed and laughed reading these lines...