Monday, March 15, 2010

ஆஸ்கர் நாமினேஷன் - 5 (அன் எஜூகேஷன்)

முதலாவது  |  இரண்டாவது  | மூன்றாவது நான்காவது

இந்த வரிசையில் ஐந்தாவது திரைப்படம் AN EDUCATION.

எழுத்தாளர் சுஜாதா தனது கட்டுரைகளில் ஒன்றில் ஏறக்குறைய இவ்வாறாக எழுதியிருப்பார். .. 'சிக்னலில் நிற்கும் போது பைக் இளைஞனைப் இறுகப் பற்றிய படி அமர்ந்திருந்த இளம் பெண்ணை கவலையோடு கவனித்தேன். முடிபறக்க முன்னால் அமர்ந்திருந்தவனின் கண்களிலிருந்த நோக்கம் யோக்கியமாக இல்லை. நிச்சயம் இருவரும் நூலகத்திற்குச் செல்லப் போவதில்லை. பெண்ணே.. உன்னுடைய கற்பை இழப்பதில் ஏன் இத்தனை அவசரம். ஒரு காலத்தில் இவ்வாறான இளம் பெண்களை வர்ணித்து வர்ணித்து எழுதியவன், இப்போது இவர்களுக்காக கவலைப்படுகிறேன்.'

இந்த பிரிட்டிஷ் திரைப்படத்தைப் பார்க்கின்ற போதும் எனக்கும் இவ்வாறாகத்தான் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு காலத்தில் இப்படியான காட்சிகளைப் பார்க்கும் போது 'சீக்கிரம் கழட்டித் தொலையேண்டா முண்டம்' என்று சுஜாதா சிறுகதையின் '·பிலிமோத்ஸவ்' பாத்திரம் மாதிரி உள்ளுக்குள் பதறுவேன். வயதாவதின் விளைவு.


ஜெயகாந்தனின் 'அக்னிப் பிரவேசம்' சிறுகதை போலவே துவங்குகின்றது இத்திரைப்படம்.

இங்கிலாந்தின் புறநகர். வருடம் 1961. ஒரு மழைநாள். 16 வயதான ஜென்னி இசை வகுப்பு முடிந்து பேருந்திற்காக காத்திருக்கும் போது ஒரு கார் வந்து நிற்கிறது. அவளை விட இருமடங்கு வயதான உற்சாக மனிதன் மிகுந்த  நகைச்சுவையாகப் பேசி அவளை வீட்டில் இறக்கி விடுகிறான். அவளது குடும்பத்தையும் தனது சாதுர்யமான பேச்சினால் மயக்குகிறான். சைக்கிளில் சுற்றி வரும் தன் வயது பையன்களை விட காரில் அழைத்துச் சென்று பரிசுப் பொருட்கள் வாங்கித் தரும் டேவிட்டை ஜென்னிக்கு பிடித்துப் போகிறது. தோழிகளுடன் இதை கிளர்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறாள். நன்றாகப் படிக்கும் அவளால் இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு மதிப்பெண் குறைகிறது. மகள் பிரெஞ்ச் கலாசாரத்தின் மீது பிரேமை கொண்டிருக்க, அவள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு சென்று படிக்க வேண்டும் என்பதே பிரிட்டிஷ் ஆச்சாரமான அவளது பெற்றோர்களின் கனவாக இருக்கிறது.

பெற்றோர்களிடம் சாதுர்யமான பொய்களைச் சொல்லி பாரிஸ் நகரத்திற்கு ஜென்னியை அழைத்துச் செல்கிறான் டேவிட். 'பதினேழு வயதிற்கு முன்பு தன்னுடைய கன்னிமையை இழக்க விரும்பவில்லை' என்று ஜென்னி கூறுவதால் உடல்தொடர்பு அவர்களுக்குள் நிகழ்வதில்லை. டேவிட் செய்யும் தொழில் சம்பந்தமான முதல் நெருடலை உணர்கிறாள் ஜென்னி. 'வேற்று இன மக்களுக்கு அருகில் வசிக்க பயப்படும்/அருவருக்கும் வெள்ளையக் குடும்பங்களை கண்டுபிடித்து அவர்களின் அருகில் வேண்டுமென்றே அவர்களை குடியமர்த்தி, அவர்கள் அவசரமாக வீட்டை வந்தவிலைக்கு விற்று நகர்வதைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும்   ரியல்எஸ்டேட் தகிடுதத்தங்களை செய்பவனாக இருக்கிறான் அவன். 'சற்று வசதியாக வாழ்வதற்கான வணிக உத்திகளில் இதுவொன்று' என்று அவன் அளிக்கும் விளக்கத்தினால் சமாதானமடைகிறாள் ஜென்னி.

வசதியான, இனிமையாக உரையாடும் டேவிட்டை, ஜென்னியின் பெற்றோர்களுக்கும் பிடித்துவிட நிச்சயதார்த்தம் நடக்கிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் ஜென்னியைக் கண்டிக்க, பாரிஸ் கனவுகளுடன் இருக்கும் ஜென்னி, "போங்கடி நீங்களும் உங்க ஸ்கூலும். ரொம்ப போர்" என்று வெடித்து திரும்புகிறாள். டேவிட் ஒரு விருந்திற்காக ஜென்னி குடும்பத்தை அழைத்துச் செல்லும் போது, காரின் டேஷ்போர்டில் இருந்த ஒரு கடிதத்தின் மூலம் அவன் ஏற்கெனவே திருமணமானவன் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். அவனது முதல் மனைவியை விசாரிக்கச் சென்ற போது ரியல் எஸ்டேட்தை தவிர இளம் பெண்களை கவர்வதை பகுதி நேர வேலையாகவே செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது.

பிறகென்ன? பள்ளிப் படிப்பையும் இழந்து எதிர்காலக் கனவும் சிதைந்து எக்கச்சக்க டிராபிக்கில் ரிப்பேராகி நிற்கும் கார்காரன் போல திகைப்பும் பெற்றோர்களையும் ஏமாற்றி விட்டோமே என்று குற்றவுணர்வும் அடைகிறாள். என்றாலும் நன்றாகப் படிக்கும் இவள் மீது அன்பு வைத்திருக்கும் ஆசிரியை ஒருவரின் மூலம் அவளது ஆக்ஸ்போர்டு கனவு நனவாகிறது. வாழ்க்கையைப் பற்றிய ஒரளவு தெளிவான பார்வையுடன் ஜென்னி தன் பயணத்தைத் தொடர்வதோடு படம் நிறைவடைகிறது.

'ஒரு சிறுவன் பதின்ம வயது அபத்தங்களிலிருந்து விலகி எந்தக் கணத்தில் முதிர்ச்சியடையும் இளைஞனாகிறான்?' என்பதை சுஜாதாவின் (மறுபடியுமா?) 'நிலா நிழல்' நாவல் அற்புதமாக விவரிக்கும். திரைப்படத்தின் இறுதியில் ஜென்னியும் ஏறக்குறைய அதே உருமாற்றத்தை அடைகிறாள்.

பள்ளி நிர்வாகம் அவளை மீண்டும் சேர்க்க மறுத்துவிட்ட பிறகு உதவி வேண்டி தன்னுடைய ஆசிரியையின் வீட்டிற்குச் செல்கிறாள் ஜென்னி. அங்குள்ளதோர் ஓவியத்தைப் பார்க்கிறாள்.


"Burne-Jones"

"உனக்குப் பிடிக்குமா?"

"ஆம். இன்னும்".

"என்ன இன்னும்?. வயதானவளைப் போல பேசுகிறாய்.."

"ஆமாம். எனக்கு வயதாகிவிட்டதைப் போல உணர்கிறேன். ஆனால் அந்தளவிற்கு அறிவுள்ளவாக உணரவில்லை"

()

கல்வி கற்க வேண்டிய வயதில் எதிர்பாலினக் கவர்ச்சிக்கு ஆளாவது இயல்பானதொன்றுதான். ஆனால் எந்த அளவோடு அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இத்திரைப்படம் பிரச்சார உறுத்தலில்லாமல் இயல்பாகச் சொல்கிறது. Lynn Barber என்கிற பிரிட்டிஷ் பத்திரிகையாளரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இளம்பெண் ஜென்னியாக Carey Mulligan சிறப்பாக நடித்திருக்கிறார். "அம்மா, காலேஜூக்கு போயிட்டு வர்றேன்" என்று இரண்டடுக்கு மேக்கப் போட்ட சரோஜாதேவி நடித்த அபத்தங்களையெல்லாம் தாங்கிக் கொண்ட நமக்கு இவரின் இளமை, பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருப்பதை அதிசயத்துடன் பார்க்க முடிகிறது. பள்ளிச்சிறுமியாக நடிக்கும் காட்சிகளை விட தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நடித்த காட்சிகளில் இவரது நடிப்பு உண்மையாக இருந்தது. 'சிறந்த நடிகை'க்கான அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப் படடிருந்தாலும் விருதை வெல்லவில்லை.

இவரையும் தவிர மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நடிப்பு ஜென்னியின் தந்தையாக நடித்த ஆல்பிரெட் மோலினாவுடையது. (Alfred Molina). ஓர் ஆச்சாரமான, நடுத்தர அப்பாவியான, பதின்மவயது பெண்ணின் தந்தையானவரின் உணர்வுகளை மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார். மகளின் விருப்பமும் இவரின் விருப்பமும் முரண்படும் போது எல்லாத் தந்தையும் போலவே தான் அந்தக் குடும்பத்திற்காக செலவு செய்வதை பட்டியிலிடும் காட்சியில் அதகளம். பெண்ணின் தோல்வியில் தன்னுடைய பங்குமிருப்பதை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவது நெகிழ்வான காட்சி. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் நீட்டிக்கப்பட்டிருந்தால் 'Best supporting actor' விருதைக் கூட பெற்றிருப்பார்.

டேவிட்டாக Peter Sarsgaard. படம் முடிந்த பின்புகூட "இவர் பக்கமும் ஏதாவது நியாயம் இருந்திருக்குமோ' என்று பார்வையாளனை எண்ணத் தூண்டுமளவிற்கு அப்படியொரு கனவான் நடிப்பு. கவிதையின் வார்த்தைகளைப் போல நிதானமாக ஆனால் அழுத்தமான காட்சிகளுடன் திரைப்படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் Lone Scherfig.

()

படத்தின் நிறைவுக் காட்சியில் 'பாரிஸ் நகருக்கு செல்லலாமா?' என்று கேட்டான் தோழன். இதுவரை அங்கே சென்றிராததொரு பாவனையுடன் "அய்யோ! நிச்சயமாக" என்றேன்" என்று ஜென்னி ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறாள்.

தயிர்ப் பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த துளிகளை குறும்பாக நக்கிக் கொண்டிருந்த ஓர் அறியாச் சிறுமியை இத்தனை தந்திரமானவளாக மாற்றியது யார், எப்போது என்று பிறகு நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். 

suresh kannan

6 comments:

கே.என்.சிவராமன் said...

அன்பின் சுரேஷ்,

படத்தை இன்னும் பார்க்கவில்லை. அது ஒரு பிரச்னையுமில்லை.

சமீபகாலமாக உங்கள் திரைப்படம் சார்ந்த இடுகைகளில் தமிழ் எழுத்தாளர்களின் புனைவுகளுடன் ஒப்பிட்டு எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். அதனால் மிக இயல்பாகவே, படம் பார்க்காவிட்டாலும் ஒரு நெருக்கத்தை உணர முடிகிறது.

இதுநாள்வரை அதிகம் படம் பார்ப்பவர் என்று மட்டுமே உங்களை குறித்து நினைத்திருந்தேன். நீங்கள் அதிகம் வாசிப்பவரும் கூட என்று இப்போது புரிகிறது :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தமிழன் வீதி said...

இத்தகைய படங்களை எங்கேயிருந்து தேடிப் பிடிக்கிரிங்க சுரேஷ். உங்கள் பதிவு அருமை என்பது சர்க்கரை இனிக்கும் என்பதுபோலாகும்.

-தோழன் மபா

Ashok D said...

//ஒரு சிறுவன் பதின்ம வயது அபத்தங்களிலிருந்து விலகி எந்தக் கணத்தில் முதிர்ச்சியடையும் இளைஞனாகிறான்?'//

நேத்து இரவு NH 45ல புயல்வேகத்துல பஸ் லாரி காருன்னு தூக்கி சாப்பிட்டு வண்டி ஓட்டியிருக்கிறார் ஒரு ‘X'.. அதே வேகத்தல சிட்டிகுள்ளயும் try பண்ண Chromepet பகுதில சில்லறை.. விழுந்த இடம் மணல்னால சின்ன சிராய்ப்பும் சின்ன சின்ன வலிகளோடும் தப்பிச்சுட்டாரு... அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகூட இருக்கு.. அவரு எப்போ முதிர்ச்சி அடைவாருன்னு தெரியல..


ஹிஹிஹி அந்த 'X' நாந்தான் :))


//இதுவரை அங்கே சென்றிராததொரு பாவனையுடன் "அய்யோ! நிச்சயமாக" என்றேன்" //

இந்த இடம் புரியலையே!!!

Venkat said...

I agree with Paithiyakkaaran's comment.

It was very nice reading the review and able to identify itself with it because of your reference of Sujatha's specific varigal.

Nandri. Will watch the movie for sure.

Thanks, Venkat

Balaji K said...
This comment has been removed by the author.
வினையூக்கி said...

I had seen this movie last week here in Ronneby - Sweden in one of the film club activities, Felt so glad after reading your review on the movie.
Apart from the content, I loved the way they potrayed 'Jews' in this movie :)