Monday, January 11, 2010

ரெட்டைத் தெரு மனிதர்கள்

Nostalgia எழுதுவதில் ஒரு அசெளகரியமும் நெருடலும் இருக்கிறது. பெரும்பாலும் எல்லோருடைய பால்யமும் ஏறத்தாழ ஒரே மாதிரிதான் இருந்து தொலைக்கும்.

ஆண்களுக்கு, தாயின் முந்தானை வாசனை, ஊரிலிருந்து வந்த சித்தி கன்னத்தில் கிள்ளின அழுத்தம், சைக்கிள் கற்ற  முழங்கால் ரத்தம், குறுகுறுவென்று பார்க்கத் தூண்டின எதிர்வீட்டு மாலு, சிடுசிடு மாமி குளிப்பதை தெரிந்தோ தெரியாமலோ பார்த்து விக்கித்துப் போனது, பத்து குத்து பாறாங்கல்லில் பம்பரத்தை இழந்த அழுகை, முதல் காதல் கடிதம், கரமைதுனம், முத்தம், வாத்தியார் அடி, காசு திருட்டு... போன்ற நியூரான் சமாச்சாரங்கள் சாக்பீஸ் மற்றும் டீச்சரின் பவுடர் வாசனையுடனும் நினைவுக்கு வரும்.

பெண்களுக்கு அப்பாவின் மீசை, "ஏன் என்னுடையது மாதிரி உன்னுடையது இல்ல?" என்ற பாலுவின் biological சந்தேகம், முதல் கொலுசு, 'டிரஸ்ஸ ஒழுங்கா போடு' என்று காரணமேயில்லாமல் எரிந்துவிழும் அம்மா, விசித்திரமான 'அந்த' முதல் வயிற்றுவலி, கவலையை ஏற்படுத்தின பருக்கள், எதிர்கால சந்தோஷத்துடன் அடித்த asdfgh, கழுத்துக்குக் கீழே பார்க்கும் நடுத்தரவயது ஆண்கள், முதல் காதல், அதன் காரணமாக வாங்கின அடி, ஆணின் முதல் ஸ்பரிசம்...என்று  என்னால் யூகிக்கத்தான் முடியும். ஆனால் பெண்கள் அழுத்தமானவர்கள். பொக்கை வயதிலும் அத்தனை சீக்கிரம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணம் அவர்களல்ல.

ஆக... எல்லோரும் இதே ஸ்ருதியில் பாட ஆரம்பிக்கும் போது, முத்துலட்சுமி மாதிரி 'அதான் தெரியுமே' என்ற சலிப்புதான் பெரும்பாலான வாசகர்களுக்குத் தோன்றும். ஆனால் நுணுக்கமான விவரணைகள், அபாரமான நகைச்சுவை, சுவாரசியமான நடை போன்றவற்றின் மூலம் இந்த அசெளகரியத்தைத் தாண்டி வரமுடியும். இவையெல்லாமே இரா.முருகனுக்கு இயல்பாகவே அமைந்திருப்பதால் தனது 'நோஸ்டால்ஜியாவை' (எழுத்துப் பிழையோ என்று நினைப்பவர்கள் புத்தகத்தைப் படிக்கவும்) பிரத்யேகமான நடையில் அற்புதமாக எழுத முடிந்திருக்கிறது.



ஊர். அப்படிச் சொன்னால் போதும். கிராமமா அது? நிச்சயமாக இல்லை... என்று விஸ்தாரமாக துவங்குகிற,  40, ரெட்டைத் தெரு நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்தத் தெருவின் மனிதர்கள் சலிக்காமல் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கர்னாடக சங்கீத மெஸ் மாமி, கூடவே சுருதிப் பெட்டியோடு அவரது ஆத்துக்காரர், ஆறு புஷ்பம், நேரங்காலமில்லாமல் சாவு விழுந்து கொண்டேயிருக்கிற வீடு, பளாரென்று அறைந்த ராஜமன்னார் வாத்தியார், குண்டு ராஜூ, வெங்காயச் சட்னியைத் தொட்டுக் கொண்டு சப்பாத்தி சாப்பிடும் 'உளவுக்கார' சைனாக்காரர், எப்போதும் புறா வரைகிற டிராயிங் மாஸ்டர், கடந்த வருட வயிற்றுப்போக்கை நினைவு வைத்திருக்கும் ஆனந்தன் டாக்டர்... (ம்ஹ¥ம்.. மொத்தமும் எழுதினால் விடிந்துவிடும்) இப்படியானவர்களோடு காரில் வந்திறங்கிய சின்ன வயசு வெளியூர் கமல்ஹாசனும் உண்டு.

அது மாத்திரமல்லாமல் காக்கி டிரவுசரை மாட்டிக் கொண்டு இந்தப் புத்தகம் பூராவும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டேயிருக்கும் பத்து வயது முருகன்.

()

.. கற்பக விநாயகர் கோயில் தலையில் சின்னக் கோபுரம் தவிர மற்றப்படி முன்னால் தோட்டம், வாசலில் கம்பி கேட், நடையில் டியூப் லைட், என்று கோகலே ஹால் தெரு வீடுகளை அச்சு அசலாக ஒத்திருக்கும். கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் பிள்ளையார் சந்நிதியை வலம்வரும் போது சுவர் முழுக்க மடாதிபதிகளும் பீடாதிபதிகளும் பெரிய புகைப்படங்களிலிருந்து  உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பார்கள்... (பக்கம் 88)

இது ஒரு உதாரணம்தான். இத்தனை வருடங்களாகியும் தன்னுடைய பால்ய ஊரின் இண்டு இடுக்குகளை எவ்வாறு முருகனால் இவ்வளவு நுணுக்கமாக நினைவு கூர முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் இப்படியெல்லாம் எழுத வேண்டுமானால் வல்லாரைக் கீரையை.... அல்ல தோட்டத்தையே மேய்ந்தால்தான் உண்டு. பரவாயில்லை. 'செம்மீன்' படம் பார்க்க குண்டு ராஜூவும் கூட வந்ததை மறந்த சின்ன சின்ன பிசகுகளை மன்னித்துவிடலாம்.

முதன்முதலாக இரா.முருகனின் அவசர நடையை ப(பி)டிக்க நேர்பவர்கள் சுதாரித்துக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஜன்னல் காட்சிகள் போல அவரது எழுத்து சட்சட்டென்று வளைந்து வளைந்து நிறம் மாறி ஓடிக் கொண்டேயிருக்கிறது. வாத்தியார் சுருக்கமாக சொன்னது போல் எம்.டி.வி நடையேதான். ஆனால் சற்று கூர்ந்து பார்த்தால் எப்படியோ துவங்கின இடத்திற்கு பொருத்தமாக விபத்து ஏதும் நேராமல் வண்டி வந்து சேர்ந்து விடுகிறது.

ஒரு எழுத்தாளனின் பால்ய நினைவுகள் எப்படி அவனுடைய படைப்புகளின் ஊடாக நுழைந்து செல்கிறது என்பதற்கான தடங்களை இந்நூலில் காண முடியும். இரா.முருகன் எழுதுகிறார்..

'நான் கல்லூரி சென்ற போது முனிசிபாலிட்டி ஹெல்த் இன்ஸ்பெக்டர் சோதனையிட்டு சாமராஜூவின் கடையை அசுத்தமான உணவுப் பொருள் விற்றதற்காக சீல் வைத்தார்கள். லிங்கராஜூ, பக்கத்து கிராமத்தில் பம்ப்செட் மோட்டார் ரிப்பேர் செய்யும் போது கால்தவறி கிணற்றில் விழுந்து இறந்ததும் அப்போதுதான். ரொம்ப நாள் கழித்து, நான் கதை எழுத ஆரம்பித்த போது பெரியாத்தாவோடு, சாமராஜூ சாயலில் ஒரு பொடிக்கடைக்காரனும் கதையில் நுழைந்தான். மண்பானைச் சமையல் மெஸ் நடத்துகிற அனுசரணையான மனைவியை அவனுக்காகச் சிருஷ்டித்தேன். லிங்கராஜூவிற்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். .. (பக்கம் 100).

அரசூர் வம்ச பனியன் சகோதரர்களையும், ஸ்டவ் ஜோசியம் சொல்லும் மாய யதார்தத்தையும் இந்த ரீதியில்தான் வாசகன் புரிந்து கொள்ள வேண்டும்.

.. கர்நாடக சங்கீத மெஸ் இட்லியைப் பார்த்த மாத்திரத்திலேயே 'உளுந்து போதாது' 'சரியா வேகலை' போன்ற அழுத்தமான விமர்சனங்களை பாட்டி முன்வைத்து விடுவாள். நானூறு பக்க நாவலை படிக்காமலேயே கிண்டிக் கிழித்துத் தோரணம் கட்டும் இந்தக் கால இலக்கிய விமர்சகர்களுக்கு அவளே முன்னோடி. ஆனால் மெஸ் இட்லிக்கும் அவளுக்கும் ஒரு லவ்-ஹேட் ரிலேஷன்ஷிப் இருந்தது - விமர்சகர்களும் இலக்கியமும் போல. ... (பக்கம் 22)

என்பது மாதிரியான வரிகள் நிறைந்திருக்கும் இந்த நூலை தனிமையில் வாசிப்பதுதான் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது. இல்லையென்றால் நிமிஷத்துக்கொரு முறை உரத்த குரலில் வரும் சிரிப்பொலியை கேட்க யாருக்குமே விநோதமாகத்தான் தோன்றும். அதே போல் நூலை சாவகாசமாக வாசிக்காவிட்டால், முன்னுரை எழுதியிருக்கிற கிரேசி மோகன் வசனங்களைப் போலவே சிறந்த நகைச்சுவைத் துணுக்கு எதையாவது தவற விட்டுவிடும் அபாயமுண்டு.

இரா.முருகன் தனது பள்ளிக்கூட அனுபவங்களை 'அந்த வயது' மாணவனின் பார்வையிலேயே விவரித்துக் கொண்டு போகும் போது சுப்ரமணியம் ரவிச்சந்திரன் எழுதின கணையாழி குறுநாவலான 'கர்னல் தோட்டக் கணக்கு'ம் கூடவே என்னுடைய நினைவில் வந்து போய்க் கொண்டிருந்தது.

()

கிழக்கு பதிப்பகம் இந்த நூலை பின்னட்டையில் எதற்காக fiction/novel வகையில் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரியாவிட்டாலும் இதை ஒரு முழு நாவலாகவும், ஒவ்வொரு அத்தியாயத்தையும் சிறுகதையாகவும், ஒட்டுமொத்தமாக எழுத்தாளரின் நினைவோடையாகவும் அவரவர் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.

.. தூரத்திலிருந்து பார்க்கும் போது சகாயமாதா கோயில் திருவிழாவா, சுப்ரமணிய சாமி உற்சவமா என்றே தெரியாது. எதற்குத் தெரியணும். எல்லாமே சந்தோஷம்தான். (பக்கம்28)
 என்று இரா.முருகன் எழுதுகிற மாதிரி இந்த நூலை எப்படி வாசித்தாலும் சந்தோஷம்தான்.

பெரும்பாலான வாழ்க்கை வரலாறுகளைப் படிக்கும் போது தவறாமல் இடம் பெறும் வாக்கியங்கள் இதுவாகத்தான் இருக்கும். .. காமராஜர் எப்போது எங்கள் ஊருக்கு வந்தாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார்..என்பது மாதிரியோ அல்லது .. அப்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் எம்.ஜி.ஆருடன் நேரிடையாகவே பழக்கம் உண்டு. ஒரு முறை எந்த முன்னறிவிப்பு மில்லாமலேயே எங்கள் வீட்டிற்கு எம்.ஜி.ஆர் வந்துவிட்டார். எல்லோருமே பரபரப்பாகி விட்டோம். ஆனால் அவரோ....

இப்படியெல்லாம் வாசிக்கும் போது 'ஏன் எங்கள் வீட்டுக்கு ஓமக்குச்சி நரசிம்மன் கூட வந்ததில்லை.. என்ற எண்ணம் என்னுள் ஓடும். கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்' சிறுகதையைப் படித்தபின்புதான் மனம் ஒரளவு சமாதானமாகியது. நல்லவேளையாக முருகனின் நூலில் அப்படியான 'சம்பவங்கள்' எதுவுமில்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது.

()

இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதே தவிர்க்க இயலாமல் எழுத்தாளருக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது, இது வீடியோ காட்சிகளாகவும் கூடுபாயப் போகிறது என்கிற சந்தோஷமான மற்றும் நெருடலான செய்தி தற்செயலாக அவரின் பதில் மடலில் கிடைத்தது. நு¡லின் அத்தனை நுணுக்கங்களையும் வீடியோச் சுருளில் பதிய வைப்பது சாத்தியமே இல்லை என்றாலும் அதற்கு நியாயம் செய்கிற மாதிரியாவது இருக்க வேண்டுமே என்கிற கவலையும் கூடவே ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

கூடுதல் சந்தோஷமாக தற்கால இரா.முருகனாக, இரா.முருகனே நடித்திருக்கிறார் என்கிற தகவலையும் சேர்த்துக் கொள்ளலாம். யார் கண்டது? எழுதுவதற்கும் கூட நேரமில்லாமல், "ஏம்மா வீட்டுக்கு வர்றதுக்கு இவ்வளவு நேரம். யாரு அந்தப் பையன்?"... என்று கேட்கும் அப்பாவாக திரைப்படங்களில் எழுத்தாளரை பாப்கார்ன் வாசனையோடு விரைவில் சந்திக்க வேண்டி வரலாம் என யூகிக்கிறேன். 

புத்தகத்தைப் பற்றிய விவரங்களுக்கு : http://nhm.in/shop/978-81-8368-933-5.html
image courtesy: kizhaku

suresh kannan

7 comments:

King Viswa said...

பாதி தான் படித்து இருக்கிறேன்.

திரைப்பட வடிவில் வர இருப்பதற்கு முன்கூட்டியே தகவல் அளித்தமைக்கு நன்றி.

butterfly Surya said...

அருமையான பகிர்விற்கும் தகவலுக்கும் நன்றி.

உங்க நடையும் கலக்கல்.

சங்கர் said...

நல்ல பகிர்வு, படிக்கும்போது ஸ்ரீரங்கத்து தேவதைகளின் நினைவு வந்ததை, ஏனோ, தவிர்க்க இயலவில்லை

Unknown said...

//வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயில் ஜன்னல் காட்சிகள் போல அவரது எழுத்து சட்சட்டென்று வளைந்து வளைந்து நிறம் மாறி ஓடிக் கொண்டேயிருக்கிறது//

இந்த விஷயமும், எப்பொழுதும் எழுத்தில் தொற்றிக்கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவையும் இரா.முருகனின் எழுத்துகளோடு என்றும் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

குப்பன்.யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்,

சங்கர் சொல்வது போல எனக்கும் இந்த எழுத்து படிக்கும் பொது ஸ்ரீரங்க தேவதைகள், ஏனோ ஞாபகம் வந்து விட்டது. அதுவும் சுஜாதா எழுதிய சீமாச்சு மேல சித்திரை வீதி தெரு கிரிக்கெட் மேட்ச் .

இதே இரட்டை தெருக்கள் நடையில் பாலகுமாரனின் ஒரு கட்டுரை தொகுப்பு உண்டு, அம்மா என்று பெயர், ஜூனியர் போஸ்ட் அல்லது புதிய பார்வையா என்று சரியாக ஞாபகம் இல்லை.

அதில் பாலா, தான் சிறி வயதில் வசித்த வீடை நோக்கி செல்வது குறித்து இருக்கும். அதில் அப்படிதான் மிக நுணுக்கமான சின்ன சின்ன விசயங்கள் கூட பாலா எழுதி இருப்பார்.

முருகனின் எழுத்து படிக்கும் பொழுது எல்லாம் பால குமறான் எழுத்து ஞாபகம் வந்து விடுகிறது, உன்னை போல் ஒருவன் வசனம் கேட்கும் பொது கூட பல நேரங்களில் குணா பட வசனம் ஞாபகம் வந்து தொலைத்தது

Anonymous said...

Somehow i got the impression that he was a clone of Sujatha and his style was predictable.One can enjoy it once or twice but not always.The cliched style disappoints one.It looks that this book too would be so.

Annamalai Swamy said...

எனக்கும் இந்த புத்தகம் பிடித்தது. இப்புத்தகத்தை பற்றிய என் பதிவு http://manipuram.blogspot.com/2009/10/40.html