எப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.
மற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .
1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.
வேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.
வேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ரேயா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
தனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.
பிறகு?....
வேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா? அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.
()
வட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற்றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.
இந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.
()
சாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.
இசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.
அடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.
நாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.
IFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.
()
அடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.
(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)
suresh kannan
22 comments:
எங்கள் ஊர் பற்றிய திரைப்படம்.
நிச்சயம் பார்க்க வேண்டும்.
விளக்கு எவ்வளவு வெளிச்சத்தைக் கொடுத்தாலும் அதன் கீழ் இருட்டாகத்தான் இருக்கும்.
இதுதான் பட்டு நெசவாளிகளின் வாழ்க்கையும்.
இது போன்ற படங்களை பற்றி அடுத்தவருக்கு சொல்வதும்,திரை அரங்குகளில் சென்று இது போன்ற படங்களை பார்த்து அவற்றை ஊக்குவிப்பதை நம் கடமையாக செய்தால் மட்டுமே ,சிறந்த படங்கள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி தரும்
நல்ல பதிவு:)
shrea shetty or shrea reddy?!
வெயில் படத்தின் மூலம் அவர் நடிப்பு எனை கவர்ந்துவிட்டது.
முடிந்தால் என் பக்கத்திற்கு வருங்கள். நாம் பழகலாம் ;)
http://sempulanneer.blogspot.com/
//shrea shetty or shrea reddy?!//
ஷ்ரேயா ரெட்டிதான் சரி. மாற்றி விட்டேன். நன்றி நூருல் அமீன்.
பார்க்க வேண்டும்.
திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?
//திரையரங்குகளில் இப்படம் வெளியானதா? வெளிவருமா?//
பொதுமக்களுக்கான திரையரங்குகளில் இதுவரை திரையிடப்பட்டதாக தெரியவில்லை. திரைப்பட விழாக்களில் மாத்திரமே திரையிடப்பட்டிருக்கிறது. இதை வணிக நோக்கத்திற்காக எடுக்கவில்லை என்று இயக்குநர் பிரியதர்ஷன் ஒரு பேட்டியில் சொன்ன ஞாபகம்.
எனவே பொதுமக்களின் பார்வைக்கு வருமா எனத் தெரியவில்லை. அப்படி வந்தாலும் சத்யம் போன்ற மேட்டுக்குடி மக்கள் புழங்கும் அரங்கில் வெளிவரலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் - குறிப்பாக நெசவாளர்கள் - எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி.
தேவையான விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்காமலிருப்பதுதானே நம் இந்தியக் குணம். :-)
சுரேஷ் ஸார்..
பார்த்துவிட்டீர்களா..? கொடுத்து வைத்தவர் நீங்கள்..
பிலிம் பெஸ்ட்டிவலில் திரையிடப்பட உள்ளது. அப்போதுதான் பார்க்க முடியும்.
விமர்சனத்திற்கு நன்றி..
ப்ரியதர்ஷ்ன் குப்பையான படங்களை இந்தியில் எடுத்து தள்ளுபவர் என்று
ஒரு கருத்து உண்டு.அவர் இப்படி ஒரு
படத்தை எடுத்திருப்பதும், அதுவும் தமிழில் ஒரு காலகட்ட படமாக எடுத்திருப்பதும் வரவேற்பிற்குரியது.
இது போன்ற பட்ங்கள் வெகுவாக ரசிக்கப்பட CD/DVD வடிவில் கிடைக்க
வேண்டும். திரையரங்குகளில் காலைக்
காட்சிக்குக் கூட இதையெல்லாம் ஒட்ட
மாட்டார்கள்.
”காஞ்சிபுரத்தில் உள்ளவர்கள் - குறிப்பாக நெசவாளர்கள் - எத்தனை பேர் இந்தப் படத்தைப் பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி.”
ஒருவேளை அவர்களுக்கு இது பழைய கதையாக இருக்கலாம்.
கேபிள் டிவி மூலம் காட்டலாம்.
உண்மைத்தமிழனின் இழை by இழை விமர்சனம், ரீல் by ரீல் விமர்சனம்
விரைவில் 2000 வார்த்தைகளில் :).
[மொத்தப் படத்தில் கூட அத்தனை
வார்த்தை பேசியிருக்கமாட்டர்கள் :)]
Wow! Thanks!
குறைந்த பட்சம் சிடி அல்லது டிவிடி களாகவாவது வெளியிட்டால் பயனுற இருக்கும்..
விமர்சனத்திற்க்கு நன்றிகள்...சுரேஷ்.
//சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. //
சோதா கதாநாயகன் ஒரு பலசாலியை அடிக்கும் போது இதை விட கேவலமாக சினிமாவை கெடுக்க முடியாது என்று தோன்றும்
அன்புள்ள சுரேஷ்
வழக்கம் போல் மற்றொரு நல்ல விமர்சனம் மற்றும் படம்.
டிவிடி வந்து விட்டதா? எப்படி எங்கு பார்த்தீர்கள்!
நீங்கள் சொல்வது போல் பிரகாஷ்ராஜ் ஓர் அற்புத கலைஞன். அவரை தமிழ் சினிமா இன்னும் நன்கு பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
தேவையான விஷயத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொண்டு சேர்க்காமலிருப்பதுதானே நம் இந்தியக் குணம். :-) மிகச் சரி!
சுரேஷ் உங்கள் மின் அஞ்சலை எனக்கு
அனுப்புங்களேன் (mpsiva23@yahoo.com)
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நல்லதொரு விமர்சனத்தை முன்வைத்த சுரேஷ் கண்ணனுக்கும், பண்புடனுக்கும் நன்றி.
படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எந்தவொரு புறச்சலனங்களுமற்று, ஒன்றிப்போய்ப் பார்க்க முடிந்தது. கறுப்பு,வெள்ளைப் படமெனினும் அவரவர் முக உணர்ச்சியைக் கூடக் காத்திரமாக வெளிப்படுத்தியிருக்கும் படம்.
பிரகாஷ்ராஜ்,நாசர், பசுபதி, ரேவதி, ஸ்ரேயா ரெட்டி போன்ற நல்ல கலைஞர்கள் தமிழ்சினிமாவில் இன்னும் இருக்கிறார்கள்.
இது போன்ற படங்களை வருடத்திற்கு இருமுறையாவது அரசே தயாரித்து வெளியிட்டால் என்ன?
Ippadi oru padam vanthathe palarukku theriyathu, nandri suresh, nalla vimarsanam.
தரமான விமர்சனத்திற்கு நன்றி
இப்போது தான் இந்த படத்தை பார்த்து முடித்தேன்.
கனத்த இதயத்துடன்,
ஜோ
அழகான விமர்சனம்.
அன்பரே விமர்சனம் அருமையாகத்தான் உள்ளது, இப்படி "சர்வதேச" திரைப்படவிழாக்களில் திரையிடப்படும் திரைப்படங்கள் நம்மூர் தியேட்டர்களில் ஓடுவதில்லையே ? என் என்று இதுவரை யோசித்ததுண்டா ?
கம்யூனிசத்தை "விழிப்புணர்வு" என்று வரையறுக்கும் அளவுக்கு அந்த தத்துவத்தை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பது எனக்கு உடன்பாடில்லாத ஒரு விஷயம்.
முதல்நாள் முதல்காட்சி பார்த்தேன்.
மழையில் நம்மையும் நனைய வைக்கும் திருவுக்கும், மோட்டார் சைக்கிளுடன் நம்மையும் ஒடச்செய்த பிரியதர்சனுக்கும், சீட்டோடு என்னைக் கட்டிப் போட்ட சாபுசிரிலுக்கும், பிரகாஷ்ராஜின் நடிப்பிற்கும் சேர்த்து படம் முடிந்தவுடன் எழுந்துநின்று தனியே கைத்தட்டினேன்.
- ஞானசேகர்
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20909156&format=html
Post a Comment