Thursday, May 19, 2005

முள்ளும் மலரும் திரைப்படம் - என் பார்வை (பகுதி 2)

என் முந்தைய பதிவின் தொடர்ச்சி ...............

இசையமைப்பாளர் இளையராஜா:

1980, 90-களில் இயக்குநர்கள் கதையை முடிவு செய்துவிட்டு, அதை திரைக்கதையாக்கும் போது இளையராஜாவையும் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல் சம்பவங்களை நகர்த்துவார்கள். ராஜாவும் அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மிகச் சிறப்பாக அந்த வெற்றிடத்தை தன் தேவ இசையால் நிரப்புவார், சில சமயங்களில் மெளனங்களாலும். இந்தப் படத்தில் அவ்வப் போது Theme Music மாதிரி ஒலிக்கும் கழைக் கூத்தாடிகளின் மேளச் சத்தத்தை (இரண்டொரு முறைக்கு மேலேயோ அல்லது இந்தப்படத்தை சமீபத்தில் பார்த்தவருக்கோ இந்த ஒலி காதில் ஒலிக்கிறதா?) மனதை உருக்குவதான காட்சிகளில் திறமையாக பயன்படுத்தியிருப்பார்.

இது தொடர்பாக பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட (பிரபல புகைப்படக்காரர் யோகா சந்தித்தது) மகேந்திரனின் நேர்காணல் சுவையானது. (எப்பவாவாது பொதிகைக்காரர்களுக்கே போரடித்தால் போடுவார்கள், பாருங்கள்)
மகேந்திரன் இந்தக் கதையை திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்றாற் போல் பல இடங்களில் வசனங்களை குறைத்து மெளனங்களை அதிகப்படுத்தியிருப்பார். உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:

ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவனை தழுவும் அவள், அப்போதுதான் அவன் கையை இழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பிப்பாள். இந்தக் காட்சியில் ஒரு வசனமும் கிடையாது. மற்ற இயக்குநர்கள் என்றால் குய்யோ முறையோ என்றோ வீராவேசமாகவோ பக்கம் பக்கமாக வசனங்களால் நிரப்பியிருப்பார்கள். ஆனால் ராஜா இந்த இடத்தை அபாராக தன்னுடைய இசையால் பார்வையாளர்கள் உருகும்படி இசைத்திருக்கிறார்.

சமீபத்தில்தான் ஒரு தோல்விப்படத்தை கொடுத்திருந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர், ரீ-ரிகார்டிங் முடிவதற்கு முன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு, பல இடங்கள் வசனங்கள் இல்லாமல் மெளனமாக இருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். 'இன்னாங்க இப்படி எடுத்து வச்சிருக்கீங்க. நான் போண்டிதான் ஆயிடுவேன் போலிருக்கு". ஆனால் படம் வெளிவந்து மக்கள் அதை ஆரவாரமாக வரவேற்றது சரித்திரம்.

ஆக.. இந்தப்படத்தின் முதுகெலும்பாக இளையராஜாவின் இசையை குறிப்பிடலாம். கதையோடு ஒட்டி, பின்னி உறவாடும் வகையில் பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவில் இவரளவிற்கு யாருமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இதில் பாடல்களும் மிக சிறப்பாக இருக்கின்றன். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' என்கிற பாடலை மட்டும் ஒரு ஏகாந்த வேளையில் கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோன்றும். 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே' என்கிற பாடலில் வரும் லேலேலெலெ.... என்று வரும் ஹம்மிங்கை எப்போது கேட்டாலும், நான் எப்பவோ பார்த்த அஸாமைப் பற்றின ஒரு டாக்குமெண்டரிதான் ஞாபகத்திற்கு வரும். மிக இனிமையான ஹம்மிங்.

ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா

புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர்களுக்கான தேர்வில் தங்கம் வென்ற பாலுமகேந்திரா, தொழில்நுட்படம் அவ்வளவாக வளராத அந்த கட்டத்தில், ஆர்வோ (ORWO) கலரில் இந்தப் படத்தில் பல ஜாலமே செய்திருக்கிறார். மேற்குறிப்பிட்ட அதே பாடலை உதாரணமாக கொள்ளலாம். ஜீப்பில் மலைப்பாதையில் விரையும் திருப்பங்களும், பயணிக்கிறவர்களின் ஒவ்வொருத்தரின் முகபாவங்களும், பாடலின் முடிவில் வானத்து நிலாவை மரக்கிளைகளுக்கிடையான இடைவேளையில் காமிரா துரத்துவதுமாக....... கவிதைக் கணங்கள்.

ஒரு நல்ல ஒளிப்பதிவாளனின் வேலை, தன் திறமையை தனியே காண்பிக்காமல், கதையோட்டத்திற்கு குறுக்கே நிற்காமல், சம்பவங்களின் உணர்ச்சிகளுக்கேற்ப கோணங்களை ஒழுங்குபடுத்துவதுதான். அதை திறம்படவே செய்திருக்கிறார் பாலு.

ரஜினிகாந்த்

தன் எல்லா நடிப்புத் திறமையையும் இந்தப் படத்திலேயே கொட்டி விட்டதால், பிற்கால படங்களில் அந்தத் தொந்தரவுகள் ஏதும் இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்தாரா என்று சந்தேகம் வருமளவிற்கு தன் உச்சபட்ச சிறப்பான நடிப்புத் திறமையை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

தங்கைக்கு சோறு போடாமல் பட்டினியாக வைத்திருக்கிறான் என்று புரளி பேசினவனை அடித்து கும்மி விட்டு "என் வள்ளி பட்டினியா இருக்கான்னா, அது இந்த காளி செத்த நாளாத்தான் இருக்கும்" என்று உறுமுவதாகட்டும், கை போனதால் வேலையை விட்டு தூக்கிய, ஏற்கெனவே மெல்லிய வெறுப்பு படர்ந்திருக்கும் தன் மேலதிகாரயிடம் "பரவாயில்ல சார். நானும் உங்க இடத்துல இருந்தா, இப்படித்தான் செஞ்சிருப்பேன். கேவலம்.... நாம மனுஷங்கதானே சார்" என்று விரக்தியுடன் கூறிவிட்டு, சடாரென்று தன் முகபாவத்தை தீவிரமாக்கிக் கொண்டு "ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" என்று சவால் விடுகிறாற் போல் பேசுவதாகட்டும், கை போனதால் உதவிக்காக திருமணத்திற்கு சூசகமாக வற்புறுத்துகிற தன் தங்கையிடம் "ம்..... வள்ளிக்குட்டி. நான் என்னவோ நெனச்சேன். நீ கூட பொடி வெச்சு பேச கத்துக்கிட்டியே' என்று நக்கலடிப்பதாகட்டும், தனக்கு பிடிக்காத மாப்பிள்ளையுடன், ஊர்க்காரர்கள் துணையுடன் திருமணம் செய்யப் போகும் தங்கையிடம் "அந்த நாயிங்க எல்லாம் போகட்டும். ஏன்னா அதுங்க என் கூட பிறந்துதங்க இல்ல. ஆனா நீ என் ரத்தம்" என்று உருகுவதிலாகட்டும், தங்கை தன்னிடமே திரும்பி வந்ததும் "இப்ப உங்க மூஞ்சுங்கள எங்கடா வெச்சுக்கப் போறீங்க" என்று பெருமைப்படுவதிலாகட்டும்..........

ரஜினியின் Master Piece இந்தப்படம்தான் என்று தயங்காமல் கூறுவேன்.

ஆனால் இப்பேர்ப்பட்ட ரஜினி தன் பிற்கால படங்களில் இன்னும் விக் மாட்டிக்
கொண்டு 'நான் ஒரு தடவ சொன்னேன்னா' எனும் போது எரிச்சலாக இருக்கிறது. இந்தியாவின் டாப் ஸ்டாராகிய அபிதாப் கூட தன் வயதுக்கேற்ற மாதிரி BLACK., AKS மாதிரியான மாதிரியான மாற்றுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்க, இவர் இன்னும் தேவுடா..தேவுடா என்று பாடிக் கொண்டிருக்கிறார். அட தேவுடா...

ஷோபா

இந்தப் பெயரை உச்சரிக்கும் பா¡க்கும் போதே துக்கம் தொண்டையை அடைக்கிறது. இயல்பாக நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்ல நடிகையை நாம் இழந்துவிட்டோம்.

அப்பாவி முகத்துடன் அறிமுகமாகும் இவர், சரத்பாபு விட்டுச் சென்றிருந்த ஜீப்பை பஸ் டிரைவர் போல் தன்னை பாவித்துக் கொண்டு ஓட்டும் போதும் பின்பு பின்னால் வந்து நின்று கொண்டிருக்கும் சரத்பாவுவை மிரட்சியுடன் பார்ப்பதும் ஒரு குழந்தையைப் பார்ப்பது போலிருக்கிறது. இவருக்கும் சரத்பாபுவிற்கும் மலரும் அந்த சொல்லப்படாத காதலின் பரிணாம காட்சிகள் ஒரு கவிதைத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் பிற்பகுதியில் குடும்பத்தின் பொருளாதார பாரத்தை தான் சுமக்க தயாராகும் போது அவரின் குழந்தை முகம் மறைந்து போய் முதிர்ச்சியான ஒரு இந்தியப் பெண்ணின் அடையாள முகம் தெரிகிறது. படத்தின் உச்சக்காட்சியில் தன் மனம் கவர்ந்தவனோடு போவதா, உருகி அழைக்கும் தன் அண்ணனின் குரலுக்கு செவிசாய்ப்பதா என்று தவிக்கும் காட்சியில் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்.

சரத்பாபு

நான் சிறுவயதில் முதன்முதலாக ஆட்டோகிராப் வாங்கிய ஒரே நடிகர். (இப்போது பில்கேட்ஸே வந்தால் கூட வாங்க மாட்டேன்) மெல்லிய சிரிப்புடன் மிக மென்மையாக கையெழுத்திட்டு கொடுத்த அந்த மனிதரை மறக்கவியலாது.
இவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இவர் ஏன் ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வரமுடியவில்லை என்று ஆச்சரியமாக இருக்கும். திடகாத்திரமான உடம்பு, நல்ல சிவப்பு, சுருள் முடி, அழகான முகம் என்று ஒரு
கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்கள் இருந்தும், நண்பர்கள் வேஷத்திலேயே தன் திரையுலக பயணத்தை நடத்திக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி அங்கலாய்க்கவே தோன்றுகிறது. கதாநாயக முகம் என்பது எதிர்பார்க்கவியலாத ஒரு கலவையோடு, மக்கள் தங்கள் மனங்களில் மிக நெருக்கமாக உணர முடிகிற முகங்களுக்குத்தான் வாய்க்கும் போலிருக்கிறது.

இவருக்கும், காளி என்கிற கதாபாத்திரத்திற்கும் ஆரமபத்திலேயே அறிமுகமாகிற நல்லது, பொல்லாததுமான அறிமுகங்களும், காளிக்கு இவர் மேல் வெறுப்பு படரும் காட்சிகளும் மிகத்திறமையாக ஆரவாரமின்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. காளியால் 'லா பாயிண்ட்' என்று பட்டப் பெயர் வைத்து அழைக்கப்படும் இவர், காளி வேலை இழந்த நிகழ்வையும், காளிக்கு அடிபட்டிருக்கிற போது பகைமையை மறந்து மருத்துவமனைக்கு விரைவதிலும் ஒரு படித்த கனவானை நம் முன் நிறுத்துகிறார். தன் கெளரவத்தை விட்டு காளியிடம் பெண் கேட்டு மனரீதியாக மோசமாக அவமானப்படுவதிலும், ஓடிப் போகிற யோசனையை சொல்கிற காளியின் மனைவியிடம் அதை மறுப்பதிலும் தன் பாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ப எதிர்வினையாற்றியிருக்கிறார்.

படாபட் ஜெயலஷ்மி

இன்னொரு ஷோபா. இன்னொரு தற்கொலை.

'அவள் ஒரு தொடர்கதை'யில் வருகிற அல்ட்ரா மாடர்ன் பெண்ணா என்று அதிசயப்பட வைக்கும் அளவிற்கு ஒரு கிராமத்து அடங்காப்பிடாரியாக நடித்திருக்கிறார். புளிப்பு மாங்காயும், வறுத்த மீனுமென்று தின்னிப் பண்டாரமாகவும் ஒரு ஆம்பிளைப் பாப்பாத்தியாக வருமிவர், காளியுடன் நடக்கும் ஒரு சிறிய சல்லாபத்தில் தன் பெண்மையை விழிப்பை உணர்ந்து நாணப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் ஒரு குடும்பத்தலைவிக்கேயுரிய பொறுப்புடன் காளியின் தங்கையை தன் மகளாக நினைத்து அவளின் எதிர்காலம் பாழாகிற சூழ்நிலையில் தன்னையும் தன் வாழ்க்கையையும் பற்றி கவலைப்படாமல் தன் கணவனான காளிக்கு எதிரான தீர்மானமான முடிவை எடுக்கிறாள்.

மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி, சாமிக்கண்ணு (அவர் மனைவியாக வருகிறவர்) என்று எல்லா கதாபாத்திரங்களும் மிக இயல்பாக வந்து போகிறார்கள்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் தவற விடக்கூடாத அளவிற்கு அதன் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் படமிது.

suresh kannan

18 comments:

Anonymous said...

சுரேஷ்,

எல்லாம் சரி. கடைசியா ரஜினி பற்றி நீங்க கொடுத்திருக்கும் கொசுறு தேவைதானா? ரஜினி தவிர படத்தோடு சம்பந்தப்பட்டவங்க யாரும் இப்போ ·பார்ம்ல இல்லேங்கிறதனாலேயா அல்லது இணையத்தில் ரஜினி பத்தி கருத்து சொல்லியே ஆகணுங்கிற கட்டாயமா?!

Anonymous said...

//'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா' என்கிற பாடலை மட்டும் ஒரு ஏகாந்த வேளையில் கேட்டால் நீங்களே ஒரு மலைப்பாதையை கடந்து போய்க் கொண்டிருப்பது மாதிரி தோன்றும். //

இந்தப் பாடலில் நானும் இதையே உணர்ந்திருக்கிறேன். இளையராஜாவின் பல பாடல்கள் எனக்கு மிக நெருக்கமானவை. இளையராஜாவின் இசையோடு வளர்ந்தவன் நான் என்றே எப்போதும் நினைத்துக்கொள்வேன். இளையராஜா ஒரு இந்திய சாதனை. தமிழின் பெருமை.

ரஜினி என்கிற ஒரு நல்ல நடிகரை, யதார்த்தமாக சிறந்த முறையில் நடிக்கத் தெரிந்த ஒரு நடிகரை இழந்துவிட்டோம்தான். முள்ளும் மலரும் படத்தில் ஒவ்வொரு காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார் ரஜினி. ரஜினி கட்டிலில் படுத்திருக்க, ஷோபா ரஜினியின் கல்யாணம் பற்றிப் பேசுவார். அப்போது ரஜினியின் முகபாவங்கள் மிகச் சிறப்பான நடிகர்களாலே நடிக்க இயலும் வகையினைச் சேர்ந்தது.

விக் வைத்துக்கொண்டு விசுக் விசுக்கென்று பஞ்ச் டயலாக் பேசும் ரஜினியும் எனக்குப் பிடித்தவரே. அந்தச் சுறுசுறுப்பும், வேகமும், தனி பாணியும், ஆக்ஷன் வகையில் ரஜினி உச்சம்.

ஷோபா தமிழின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். முள்ளும் மலரும் சிறந்த கலைஞர்களால் உருவான உன்னதமான திரைப்படங்களில் ஒன்று. மகேந்திரனே தமிழ்த் திரையுலகின் முதன்மையான இயக்குநர். பாலசந்தர் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்! :P (கடைசி வரி சில நண்பர்களுக்காக!!!)

Anonymous said...

Prasanna,

I agree with Suresh's view of Rajini's choice of acting as I am a big fan of his early movies(From Avargal, Moondru mudichu to 16 Vayathinile). His spectrum of roles even sidelined Kamal's performances when they acted together.

True, we need casual actors who makes our life enjoyable for atleast 2-3 hours, but in Tamil(for that matter major indian film industries) one has to shed his talent to appeal to mass. Rajini did the same. But at this juncture, he can pick his roles as the way he wants to improve the taste of the mass yet without letting the taste of the movie.

Kamal is trying from Nayakan(remember his junk roles like "Per sollum Pillai" :)? ), so Rajini can also do the same but only with more success as he is always identified with a common man.

My dreams...

Raj

Anonymous said...

The last comment was mine.

Raj Chandra

By: Raj Chandra

Anonymous said...

அமிதாப் சில ஆண்டு முன்பு HUM என்கிற மசாலா படத்தில் நடித்தார். அதன் பின் மார்கெட் இல்லாமல் BLACK போன்ற படத்தில் நடிக்கிறார். ரஜினிக்கு இன்னமும் காலம் இருக்கிற்து. பிறகு பார்க்கலாம்.
நல்ல சினிமா என்பதை விட வியாபாரம் முக்கியமாக போய் விட்டது.

Anonymous said...

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் இந்தப் பாட்டும், முக்கியமான சில காட்சிகளும் (வின்ச் மற்றும் அது செல்லும் இடங்கள்) எனது இளம் வயதில் நான் அடிக்கடி போகுமிடங்கள், இன்னும் கூட அதன் அழகு மாறாமல் அப்படியே இருக்கிறது. இளையராஜாவின் இன்னிசையில் அந்தப் பாட்டைக் கேட்கும் போழுது பழைய நினைவுகள் வந்துவிடுகின்றன. கொய்யா, நாவல், லொக்கோட்டை, அத்தி, ஆரஞ்சு, ஈச்சம், சீதா, காட்டு நெல்லிக்காய், போன்ற பழங்களுக்காக அந்த இடங்களில் சுற்றித் திரிந்த ஞாபகங்கள்...... ம் அது ஒரு காலம்.

நண்பர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் ஒருமுறை சென்றுவிட்டு வாருங்கள். குந்தாவுக்கு அருகில் உள்ளது (நீலகிரி மாவட்டம்), போகும்வழியில் அன்னமலை முருகன் கோயிலும் உள்ளது (இயற்கை சூழ்ந்த இந்த இடமும் ரம்மியமான இடமே).

இந்தப் படத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பில் வறட்சி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லமுடியாது. சில படங்களில் அவர்தன் நடிப்பையும் காட்டியிருக்கிறார். ஆனால் சந்திரமுகியில் செயற்கைதனம் கொஞ்சம் கூடுதலோ என நான் நினைக்கிறேன்.

(முக்கியமாக மேக்கப்)

மஞ்சூர் ராஜா

Anonymous said...

இசையைப் பற்றி குறிப்பிடுகையில் ஷோபா தன் தோழியர்களுடன் பாடியாடும் "அடிப் பெண்ணே......பொன்னூஞ்சல் ஆடும் இளமை" என்ற பாடலையும் குறிப்பிட்டிருக்கலாம். சொடுக்குங்கள் பாடப்படும் :)

Voice on Wings said...

சென்ற பின்னூட்டை இட்டது அடியேன் தான். சுட்டி கொடுக்கலாமென்றால் raaga.com, musicindiaonline.com இரண்டுமே ஏமாற்றி விட்டன :(

பாட்டை ஞாபகப் படுத்திக்கொண்டு மனதில் ஒருமுறை ஓடவிட்டுக்கொள்ளூங்கள் :) அதைவிட எளிதானது, படத்தின் ஒலிநாடா இருந்தால் போட்டு கேளுங்கள்.

Anonymous said...

சுரேஷ்,
சுவாரசியமான பதிவு ! இது போல் நிறைய எழுதுங்கள் !!!

By: anbudan BALA

Anonymous said...

உலகத் தமிழ் மக்களின் நிரந்தர நன்மைக்கு, என்னாலானவொரு சிறு பங்களிப்பு
[copy-paste this link if the above link doesnt work: http://www.oosai.com/movie.cfm?mvid=153]

- VoW

By: Voice on Wings

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பின் சுரேஷ், மிக சுவாரஸியமான பதிவு. எனக்குக் கூட ரஜினியின் ஆரம்பகாலப் படங்கள் தான் பிடிக்கும். அதில்தான் 'நடிப்பு' இருந்தது. இப்போதெல்லாம் சும்மா ரசிகர்களுக்காக ஸ்டைலும், அரசியலும் என்றாகிப்போயாச்சு இல்லை?
உங்கள் பதிவுகள் சிந்தனையில் ஆழமாக இருக்கின்றன. விடாமல் படித்துவருகிறேன்.
அன்புடன், ஜெயந்தி சங்கர்

பிச்சைப்பாத்திரம் said...

Thanks Jayanthi Shankar.

G.Ragavan said...

பிச்சைப் பாத்திரத்தில் பஞ்சாமிர்தம்...உங்கள் கட்டுரையை அப்படித்தான் சொல்ல வேண்டும். பிச்சைப் பாத்திரம் என்று பெயர் வைத்து விட்டு...பஞ்சாமிர்தம் பரிமாறினால் என்ன சொல்வதாம்! :-)

முள்ளும் மலரும் தமிழில் வந்த சிறந்த படங்களில் ஒன்று. எல்லா விதங்களிலும் சிறந்த படமது. மகேந்திரன் எனக்குப் பிடித்த இயக்குனர்களில் முன்னிலை வகிக்கின்றவர். சிறந்த படைப்பாளி.

கதையாகப் படிக்கும் பொழுதும் திரைப்படமாகப் பார்த்த பொழுதும் இரண்டிருக்குமிருந்த வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் இரண்டும் நன்றாகவே இருந்தன.

படத்தைப் பார்த்து விட்டு கதையைப் படித்தாலும் கதை கண்டிப்பாகப் பிடிக்கும். அவ்வளவு நன்றாக இருக்கும்.

உதிரிப்பூக்களை விட இந்தப் படம் எந்த விதத்திலும் குறைந்ததல்ல. உதிரிப் பூக்கள் வேறொரு வகை. இது சற்று வேறுபட்டதே.

கதையில் காளியண்ணனும் மங்காவும் இறந்து போவது போல வருமென நினைக்கிறேன். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கும். அதை காளியண்ணனின் தங்கச்சி இறுதியில் எடுத்து வளர்ப்பார் என நினைக்கிறேன். சரியான நினைவில்லை.

இசையைப் பற்றி கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும். நித்தம் நித்தம் நெல்லிச் சோறு என்று பாட்டாகட்டும்..... ( யாரு? வாணி ஜெயராமா? எங்க போனாங்க அவங்க? )....ஏலலே லேலே...என்று வரும் ராமன் ஆண்டாலும் பாட்டாகட்டும்.....செந்தாழம் பூவில் பாட்டும்......அடிப் பெண்ணே பாடலும் மிகவும் அருமையானவை. இவையரசாங்கம் இளையராஜா நடத்தினால் என்றால்...அதற்காக வாய்ப்பை உருவாக்கிய மகேந்திரனையும் பாராட்டதான் வேண்டும்.

பாலச்சந்தர்....மகேந்திரன் பற்றியும் சொன்னீர்கள். இருவருமே நல்ல கலைஞர்கள். இருவரையும் ஒப்பிட வேண்டாம். இருவருமே பல புதுமைகளைச் செய்திருக்கிறார்கள். அவற்றை மறுக்க முடியாது.

ரஜினியின் நடிப்பு....இப்பொழுதெல்லாம் திரைப்படங்களில் ரஜினி நடிப்பதேயில்லை என்பதே எனது கருத்தும். படங்களில் அதற்குத் தேவையும் இருப்பதில்லை என்பதும் வருத்தமான கருத்து.

அன்புடன்,
கோ.இராகவன்

Unknown said...

இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் என்னால் மறக்க முடியாதவை. இயக்கம், ஒளிப்பதிவு என டெக்னிகல் சமாசாரங்களுக்காக நான் படம் பார்க்க ஆரம்பித்தது இந்தப் படத்திற்கு பிறகு தான். ஆனாலும் இன்னும் பல படங்கள் பார்க்க முடியவில்லை.

//"ரெண்டு கையி ரெண்டு காலு போனாலும் காளின்றவன் பொழச்சுக்குவான் சார். கெட்ட.... பய..... சார் இந்த காளி" //

இந்த வரி படிக்கும்போது என்னை அறியாமல் உடல் சிலிர்த்தது, ரஜினியின் அந்த நடிப்பு கண் முன் வருகிறது. ரஜினி இந்தப் படத்திற்கு பிறகு நடிக்கவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அண்ணாமலை படத்தில் கூட தன் மகளுக்கு அறிவுரை செய்யும் காட்சியில் ஒரு பதின்ம வயது மகளின் தந்தையை நம் கண் முன் நிறுத்துவார். அமிதாப்போடு ஒப்பிடுவதும் தேவையில்லாதது. அமிதாப்பின் நிலைக்கு ரஜினி இன்னமும் செல்லவில்லை. அமிதாப்பும் உடல் தளர்வடைகிறவரையில் விக்குடன் சின்னப்பெண்களோடு டூயட் பாடிக்கொண்டு இருந்தார். ரஜினியும் இப்போதைய அமிதாப் காலகட்டத்தை எட்டும்போது அவரது நடிப்புத் திறனின் பரிமாணம் வெளிப்படும்.

jeevagv said...

பிச்சை(?) பாத்திரத்தில் மாளிகை கட்டியிருக்கிறீர்கள், சபாஷ்!

பாலராஜன்கீதா said...

முள்ளும் மலரும் - உம்மைத்தொகை அல்ல ஒரு வாக்கியம் என்று படம் வநத அந்தக்காலத்தில் யாரோ சொன்னார்கள்

Anonymous said...

hello friend,
that was an excellent article by you. it is just bringing our memories. rajini lived with the character. we dont think we will every see another film like this from rajini. the combination of balu mahendra,mahendran,ilayaraja and rajini was a history and i dont think they will come together once again. all are actors lived with the actor. music is history.all songs are living even today. eventhough raman andalum song was critised (padma subramaniam claimed that it is her tune) the song was a hit in those day. rajini has grown too big and it will difficult for him to get into a character. nowadays character are cut and pasted according to rajini. it is high time rajini starts acting . atleast one film a year he can try to give films like mullum malaram. it is rajini wish

பினாத்தல் சுரேஷ் said...

I have seen bought this movie after reading your blog. The movie and your review - both did not disappoint me.

A very good movie, undoubtedly a milestone in Rajini's career (pity he turned his direction after this milestone), MAsterpiece IR music, Direction without bothering to show director's presence in every scene (a la KB)!

Thanks for your review, I would have missed this without your review.