Monday, February 21, 2005

நானும் என்னுடைய அந்தரங்க டைரிகளும்

உங்களில் எத்தனை பேர் டைரி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை.
நான் கடந்த பத்து வருடங்களாக பிடிவாதமாக விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.



இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை. யாரோ பரிசளித்த விலையுயர்நத டைரியை வருட ஆரம்பத்தில் பிரித்துப் பார்த்து அதன் வாசனையை ஆழ்ந்து நுகர்ந்த பிறகு, அந்த 'பளபளா' டைரியின் 'வழவழ' பக்கங்கள் என்னைப் பார்த்து 'ஏதாவது என் மீது எழுதேன்' என்று அழைத்த மாதிரி ஒரு பிரமை ஏற்பட்டதால் அந்த நல்ல டைரியை வீணாக்க விரும்பாமல் எழுத ஆரம்பித்து விட்டேன். ஆரம்பத்தில் பெரும்பாலோரை போலவே 'இன்று ரவியைச் சந்தித்தேன். இருவரும் சேர்ந்து 'ரதிநிர்வேதம்' திரைப்படத்திற்கு செல்லலாமென்கிற அந்த சரித்திரச் சிறப்பு பெற்ற முடிவை எடுத்தோம்' அல்லது '15பி பேருந்தில் வந்து கொண்டிருந்த போது ஜன்னலோர இருக்க¨யில் அமர்ந்திருந்த ஒருத்தி என்னைப் பார்த்து புன்னகைத்தாள். நான் மறுபடி புன்னகைப்பதற்குள் அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டதால் பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன்' என்கிற மாதிரி அபத்தமாகத்தான் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் நாளடைவில் எழுதுவதில் ஓர் பிடிப்பு ஏற்பட்டு என் மன உணர்வுகளை எனக்குத் தெரிந்த பாமர மொழியில் எழுத ஆரம்பித்தேன்.

என்னுடைய அழுகை, கோபம், சந்தோஷம், பரவசம், அவமானம், ஏமாற்றம், துக்கம், வன்மம், மகிழ்ச்சி, பெருமிதம், குரோதம், வெற்றி என்று கலவையாக அன்றாட தேதிவாரியாக என்னுடைய உணர்வு வெளிப்பாடுகள், கடல் மணலில் கிளிஞ்சல்களைப் போல எல்லாப் பக்கங்களிலும் இறைந்து கிடக்கின்றன. நண்பர்களிடம் நான் சொன்ன பொய்கள், அவர்கள் என்னிடம் சொன்ன பொய்கள், நான் செய்த துரோகங்கள், எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், அநீதிகள், வாழ்க்கையின் அபத்தங்கள் குறித்த என்னுடைய கேள்விகள், வலிகள், வேதனைகள் என்னுடைய வடிகட்டப்பட்ட விகார எண்ணங்கள், என்று அனைத்தையும் எழுதியிருக்கிறேன். அதுவரை புத்தகங்களில் மட்டுமே அறிந்திருந்த பாலியல் சமாச்சாரங்களை யதார்த்த உலகில் தேடப் போன அனுபவம் முதற்கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நான் முயன்று பார்த்த மூன்று தற்கொலை முயற்சிகள் வரை எல்லாமும். என்னுடைய டைரிகளை ஒரு சிறந்த நூல் பதிப்பாளர் உதவி கொண்டு எடிட் செய்து பார்த்தால் ஒரு பின்நவீனத்துவ நாவல் கிடைக்கக்கூடும்.

ஆனால் எல்லாமும் என்றால் எல்லாவற்றையும் ஒளிவுமறைவில்லாமல் எழுத முடிந்ததில்லை. ஒரு நாள் யாராவது இதை எடுத்து படித்துவிடுவார்களோ என்கிற எண்ணத்தினால் பல ரகசியங்கள் இன்னும் எழுதப்படாமலேயே ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல தூக்கத்தில் உளறிய கனவுகளோடு மெல்ல மெல்ல அழிந்து போயிருக்கின்றன.

என்னுடைய டைரியை மட்டும் படிக்க நான் யாரையும் அனுமதித்தது இல்லை. ஒரு முறை என்னறைக்கு வந்த நண்பன் விளையாட்டாக நான் மறைத்து வைத்திருந்த டைரியை படிக்கப் போக, என் வாழ்க்கையில் நான் இதுவரை அடைந்திராத உச்சபட்ச கோபத்தை அன்று அடைந்தேன். காது கூசிப் போகும் கேட்கத்தகாத வார்த்தைகள் கொண்டு அவனைத் திட்டினேன். அதற்குப் பிறகு நான் இதுவரை அவனை எங்கும் சந்திக்கவில்லை. ஆனால் என் டைரி எழுதப்பட்டிருக்கும் தொனியைப் பார்த்தால், நான் யாரோ இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதற்காக எழுதப்பட்டிருக்கிற மாதிரியே இருக்கும். சுவாரசியமாக இருக்க வேண்டுமென்பதற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறேன். யாருக்குமே காட்ட விரும்பாத டைரியை நான் ஏன் இப்படி எழுத வேண்டும்? புரியவில்லை.

O

மற்றவர்களிடம் இருந்தால் கூட கணவன், மனைவி இருவருக்கிடையிலும் அந்தரங்கமான ரகசியங்கள் ஏதும் இருக்கக்கூடாது என்பார்கள். அபத்தம். ஒவ்வொரு மனிதனும் தனித்தனி தீவுதான். அவனாக அனுமதிக்காத வரை நாம் எந்த ரகசியத்தையும் அங்கிருந்து எட்டிப் பார்த்து அறிந்து விட முடியாது. அது அநாகரிகமும் கூட. 'அந்தரங்கம் புனிதமானது' என்கிற ஜெயகாந்தனின் சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தமானது. உறவுமுறைகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இன்னொருவரின் அந்தரங்கத்தில் தலையிடும் உரிமையை நாம் யாருக்கும் அளிக்கவியலாது.

புத்தகங்களை ஒழுங்குபடுத்த நேர்கிற சமயங்களில், புத்தகங்களிடையில் மறைந்திருக்கிற டைரிகளை எடுத்து புரட்டிப் பா¡க்கும் போது சுவாரசியமானதாகவே இருக்கிறது. சில முக்கியமான, மகிழ்வான நிகழ்வுகளை படிக்கையில் அந்தக் கணங்களை மறுபடியும் வாழ்ந்து பார்க்கிற ஒரு பரவசம் ஏற்படுகிறது. சோகமான நிகழ்வுகளுக்கும் அப்படியே. சில சமயங்களில் எவ்வளவு அபத்தமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்றும் இந்தச் சமயத்தில் வந்த கோபத்தை தவிர்த்திருக்கலாமென்றும் மகிழ்ச்சியாக தோன்றிய சம்பவம் பிற்பாடு வருத்தத்துக்குரியதாக மாறியது என்றும் அந்த நண்பரை அவ்வாறு திட்டியிருக்கக்கூடாது என்றும் பல்வேறு சூழ்நிலைகளில் நாம் எதிர்வினையாற்றியதில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து நம் எதிர்கால தவறுகளை கூடுமானவரை தவிர்க்க ஒரு நல்ல சாதனமாக விளங்குகிறது பழைய டைரிகள். 'இதுவும் கடந்து போகும்' என்று நம் தற்போதைய பிரச்சினைகளை கண்டு மிரளாமல் நகைச்சுவையாகவே அணுக முடிகிறது.

என்னுடைய 17வது வயதில் சத்யஜித்ரேவின் 'பதேர் பாஞ்சாலியை' முதன்முறையாக தொலைக்காட்சியில் இரவு 1 மணிக்கு பார்த்து முடித்துவிட்டு, அந்தப்படம் எனக்கு ஏற்படுத்திய பாதிப்பை கண்ணீருடன் தேதியின் எல்லைகளை கடந்து ஒரு பத்து பக்கங்களுக்கு எழுதியிருந்தேன். இரண்டு நாள் கழித்து பார்த்த 'சாருலதா' திரைப்படத்திற்கும் இவ்வாறே எழுதியிருந்தேன். குறிப்பிட்ட டைரி தொலைந்து போனதை பெரிய இழப்பாகவே கருதுகிறேன்.

ஒருவன் தன் எண்ணங்களை தொடர்ந்து பதிந்து வைப்பது மிகவும் உபயோகமானதென்றே கருதுகிறேன். கிருத்துவ மதத்தில் சம்பிரதாயமாக உள்ள பாவமன்னிப்பு என்கிற அம்சத்தைப் போல நீங்கள் மற்றவர்களுக்கு இழைத்த குற்றங்களை உள்ளுக்குள் வைத்து புழங்கிக் கொண்டிருக்காமல் ஒரு வடிகாலாக டைரியில் பதிவது மூலம் அந்த குற்ற உணர்வுகளை குறைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

இந்தப்பழக்கம் உங்களிடமும் இருக்கிறதா?

suresh kannan

4 comments:

Anonymous said...

அன்பு நண்பர் சுரேசுக்கு
இந்த பதிவு மிக அருமை. எனக்கும் கிட்டதட்ட 15 ஆண்டுகளாக டைரி எழதும் பழக்கம் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்கவாசம், நிறைய பதிவு செய்ய முடியவில்லை. நீங்கள் சொன்னதுப் போலவே எண்ணற்ற ஏராளமான மன உண்ர்வுகளை
அப்படியே பதிவு செய்ய முடியவில்லை. யாராவது படித்ட்து விடுவார்களோ என்று பயம். சென்ற ஆண்டு தமிழகம் வந்து இருந்தப் பொழுது என் கல்லூரி தோழி ஒருவரை சந்தித்த பொழுது "என்னை இன்னுமும் நினைவில் வைத்து உள்ளாயா சிவா" என்ற பொழது என் உள் மனது ஏதோ செய்தது. அந்த நண்பர் பேசிய பல பேச்சுகளை அப்படியே என் டைரியில் எழதத் துடித்தேன், ஆனால் முடியவில்லையே? என்னதான் நாம் டைரி எழதினாலும் நம்முடைய அனைத்து உணர்வுகளை அப்படியே எழத முடியவில்லேயே என்று நினைக்கும் பொழது வருத்தமாகவே உள்ளது. நன்றி, மயிலாடுதுறை சிவா...

மயிலாடுதுறை சிவா said...

Great...

Chandravathanaa said...

என்னிடம் இன்னமும் இருக்கிறது.

எழுதிப் படிக்காதவன் வாழ்க்கை கழுதையின் என்னத்துக்கோ சமனாம். அப்பாதான் சொல்லுவார்.
சொல்லுறதோடை மட்டும் நின்று விடாமல் வருசம் பிறக்கிறதுக்கு சில நாட்கள் முன்பாக ஒவ்வொரு வருசமும் ஒரு டயறி வேண்டிக் கொண்டு வந்து தருவார். ஒவ்வொரு நாளும் இரவில் அன்றைய பகல் நடந்த விடயங்களை எழுதச் சொல்லுவார். நானும் எழுதுவேன்

Anonymous said...

திரு சுரேஷ்..

டைரி எழுதும்போது அன்றன்றைக்கு நடந்தவைகளை எழுதிவிடுகிறோம். ஒரு வகையில் நண்பர்களை, நல்ல விஷயங்களை அரிதுகூர்ந்து நினைக்க ஒருவகையில் உதவினாலும், சில விஷயங்களை மறக்க முடியாமல் வைத்துவிடுகிறது. சில மனக்காயங்கள் வடுவாக மென்மேலும் ஆழமாகப் போகிறது என்று உணர்ந்தபடியாலும், யேசுதாஸ் குரலில் வந்த பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் என்ற பாடலை மனதிற்கொண்டு முடிந்தவரை கெட்ட விஷயங்களை மறந்து விட வேண்டி, ஒரு புனித நன்னாளில் நான் டைரி எழுதுவதையே நிறுத்திவிட்டேன். இருந்த மிச்ச சொச்ச டைரியையும் என் மனையாள் படித்து என்னுடன் சண்டையிட்டு பலநாள் பேச்சு வார்த்தையின்றி இருக்க நேர்ந்தது. ஆக டைரியை வாங்குவதில்லை என்றும், யாராவது கொடுத்தால் இனி பால்கணக்கு எழுதப் பயன்படுத்துவது என்று முடிவு செய்து விட்டேன். ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு மாதிரி.. என்ன செய்ய..