Wednesday, February 16, 2005

அசோகமித்திரனும் போடப்படாத இரண்டு சட்டை பித்தான்களும்

கழுத்தை அறுத்து ரத்தம் சொட்டச் சொட்ட சரோஜாவை கொலைசெய்த கொலைகாரனை அறிந்து கொள்ளும் பொருட்டு கடைசிப்பக்கத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ராஜேஷ்குமார் போன்றோர்களின் நாவல்களிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று விலகி வந்து கொண்டிருந்த நேரமது. சுஜாதாவின் கட்டுரை ஒன்றில்தான் 'அசோகமித்திரன்' என்கிற பெயரைப் பார்த்தேன். பின்பு நூல்நிலையத்தில் யதேச்சையாக அ.மியின் சிறுகதைத்தொகுப்பு ஒன்று கண்ணில்பட முயன்று பார்ப்போமே என்று படிக்கவாரம்பித்தேன். முதல் வாசிப்பில் அவர் என்னை அவ்வளவாக கவரவில்லை. இன்னும் ரத்த நாற்றத்திலிருந்து நான் முழுக்க வராமலிருந்தது கூட அதற்கு காரணமாயிருந்திருக்கலாம்.

பின்னர் எனக்கேற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்கள் மூலம் வாழ்க்கை என்னை சற்றுப் புரட்டிப் போட அ.மியின் படைப்புகள் எனக்கு வேறொரு பரிணாமத்தில் விரும்பக்கூடியவையாய் ஆயிற்று. அ.மியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் மென்மையானவை. உச்சக்கட்ட கோபத்தில் கூட சத்தம் போட்டு பேசாதவை. அ.மியும் அவர் கதாபாத்திரங்களைப் போலத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

அலுவலக வேலையாக நான் ஒருமுறை அண்ணாசாலை, டி.வி.எஸ் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் போது என்னை கடந்து சென்ற மெல்லிய உருவத்தை என்னால் கண்டுகொள்ள முடிந்தது, புத்தகங்களின் பின்னட்டையில் பிரசுரமாகியிருந்து அவரின் புகைப்படத்தின் மூலம். உலகத்தின் சோகங்களையெல்லாம் தன் முதுகில் தாங்கிக் கொண்டிருக்கிறாற் போய்க் கொண்டிருந்தவரிடம் 'என்னத்தைப் பேசறது' என்று தயக்கமாக இருந்தது.
நாளாக நாளாக அ.மி. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார். அசோமித்திரன், சா.கந்தசாமி, விட்டல்ராவ் இவரின் படைப்புகளை ஆராய்ந்தால் மூவரும் ஏதாவதொரு கணத்தில் ஒரே நேர்ப்புள்ளியில் வந்து நிற்பார்கள் என்று தோன்றுகிறது. ஆரம்பித்திலிருந்து இவரின் எழுத்து நடை மாறாமல் இருப்பதை பிரமிப்புடன் கவனித்து வந்திருக்கிறேன். மிகச் சாதாரண எழுத்து நடை. முதல் வாசிப்பில் சாதாரணமாக தோன்றும் கதைகள் படிக்க படிக்க அதன் பரிணாமங்கள் விரியும் போது உணர்ச்சியின் அழுத்தங்களால் நம்மை மூச்சடைக்க வைப்பவை. இவர் கதைகளில் வரும் சில கதாபாத்திரங்களை நான் உருவகப்படுத்த நினைக்கும் போதெல்லாம், ஆர்.கே.லட்சுமணன் கார்ட்டூன்களில் வரும் மிஸ்டர்.பொதுஜனம் உருவம்தான் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வரும்.

நல்ல சிறுகதைகள் என்றொரு பட்டியலிடும் போது தவிர்க்கவே முடியாமல் அவரின் 'புலிக்கலைஞன்' போன்ற சிறுகதைகள் வரிசையில் வந்து நிற்கும். சினிமா உலகின் மாயபிம்பத்தை சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' ஒரு கோடி காட்டியதென்றால் அ.மியின் 'கரைந்த நிழல்கள்' அந்த உலகத்தின் பின்னணியில் உழைக்கும் தொழிலாளர்களின் சோகங்களின் குரூரங்களை எந்த விதமான உரத்த குரிலில்லாமல் யதார்த்தமான மொழியில் வெளிப்படுத்தியது.

O


அ.மியின் 50 ஆண்டு படைப்புலக நிறைவு விழா பற்றிய செய்தியை அறிந்தவுடன் இதில் நிச்சயமாக கலந்து கொள்ள முடிவு செய்தேன். அயல்நாட்டுத்திரைப்படங்களைப் பார்க்க பிலிம்சேம்பருக்கு அடிக்கடி வருகின்ற காரணங்களால் சூழ்நிலை பரிச்சயமாகவே இருந்தது. நுழைந்தவுடன் எழுத்தாளர்களான பிரபஞ்சன், அழகியசிங்கர், கவிஞர் ஞானக்கூத்தன், ஆராய்ச்சியாளர் சலபதி, இரா.முருகன் மற்றும் இணைய நண்பர்கள் வெங்கடேஷ், ரஜினிராம்கி, ஷங்கர் (முதன்முறையாக டோண்டு ராகவன்) ஆகியோர்களை காண முடிந்தது.

O

என் நினைவில் இருப்பதையும் சக வலைப்பதிவாளர்கள் ஏற்கெனவே கூறியவற்றை தவிர்த்தும் இந்த நிகழ்ச்சியை விவரிக்க முயல்கிறேன்.

O

அசோகமித்திரனப்பற்றிய விவரணப்படத்துடன் (இயக்கம்: அம்ஷன்குமார் தயாரிப்பு: சாகித்ய அகடமி) விழா ஆரம்பித்தது. (இந்தப் படத்தைப் பற்றி சிற்றிதழ்களில் ஏற்கெனவே படித்திருந்திருந்தனால் இதைப் பார்க்கத்தான் மிக முக்கியமாக நான் விழாவிற்கே சென்றேன்)

அ.மி. தன் இளமைப்பருவத்தில் வாழ்ந்த Hyderabad நகரின் கடைவீதிகளிலும் அவரது பழைய இல்லங்களிலும் காமிரா அ.மி. பின்னால் அலைந்தது. அசோகமித்திரன் தன்னுடைய நாவலான 'பதினெட்டாவது அட்சக்கோடு' பற்றி சொன்ன விஷயம் பிரமிப்பாக இருந்தது. அந்த நாவல் ஒரு கிரிக்கெட் ஆடுகிற இளைஞனின் பார்வையில், அங்கு நடக்கும் ஆட்சி மாற்றங்களையும், கலவரங்களைப் பற்றினது. அந்த நகரத்திலிருந்து புலம் பெயர்ந்து சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகே இந்த நாவலை எழுதி முடித்ததாகவும், அதுவரை அங்கே போகாமலே இருந்ததாகவும், அப்படி போக நேர்ந்தால் அங்கிருக்கும் புதிதான சூழ்நிலைகளைப் பார்க்க நேர்ந்து, தன்னுடைய மனத்தில் பதிந்திருக்கிற பழைய பிம்பங்களில் சேதம் ஏற்பட்டு அது படைப்புக்கு ஏதும் இடையூறாக இருக்குமோ என்று எண்ணியதாகவும் குறிப்பிட்டார். பொதுவாக எழுத்தாளர்கள் குறிப்பிட்ட நகரைப் பின்னணியாக கொண்டு எழுத அந்த நகருக்கு சென்று சுற்றிப்பார்த்து எழுதுவதிலிருந்து இது முற்றிலும் மாறாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

அ.மி.யின் மகனுடனான பேட்டியில் 'தம் தாய்தான் குடும்பத்தை சிரமமான சூழ்நிலையிலும் நடத்தியதாக குறிப்பிட்டார். அ.மி எழுதிய நூல்களும் கையெழுத்துப் பிரதிகளும் காட்டப்பட்டன. (பழைய காலண்டரின் பின்புறங்களிலும் துண்டுச் சீட்டுகளிலும் தம் படைப்புகளை எழுதியிருக்கிறார்). ஜெமினி ஸ்டுடியோவில் இருந்து தாம் விலகிய சூழ்நிலையையும் பின்பு கணையாழியில் ஆசிரியராக இருந்த காலகட்டங்களையும் விவரித்தார். எழுத்தாளர்கள் சா.கந்தசாமி, வாசந்தி பதிப்பாளர் மகாலிங்கம் ஆகியோரது கருத்துக்களும் இடம்பெற்றிருந்தன.

(விவரணப்படம் நிறைந்தவுடன், பின்னால் அமர்ந்திருந்த நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் பேசிவிட்டு. இடைவேளைக்காக வெளியே வந்து சென்ற இடைவெளியில் கவிஞர் வைத்தீஸ்வரனின் பேச்சை தவறவிட்டேன்)

தலைமை உரை ஆற்றிய எழுத்தாளர் பிரபஞ்சன், அயல்நாடுகளில் எழுத்தாளர்கள் மக்களாலும், அமைப்புகளாலும் கொண்டாடப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அது குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார். (இலக்கியவாதிகள் என்றாலே முரட்டுக்கதராடையும், ஜோல்னாப்பையும், முகத்தில் தாடியுமாக இருப்பார்கள் என்கிற பிமபத்தை உடைத்தெறிந்து எப்போதும் புத்துணர்ச்சியான தோற்றப் பொலிவோடு இருக்கிறார் பிரபஞ்சன். முன்னரொருமுறை சென்னையின் வேறொரு பகுதியில் இவரை வேறொரு சூழ்நிலையில் பார்க்க நேர்ந்ததை நான் விவரிக்க விரும்பவில்லை)

அடுத்துவந்தார் சுந்தரராமசாமி.

(தொடரும்)

suresh kannan

9 comments:

Anonymous said...

சுரேஷ் கோபி, சுரேஷ் கண்ணன் (நீங்கள்) இருவருடனும் ஒன்றாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு மூன்று நான்கு முறை உங்கள் பெயரை (சில நிமிடங்களுக்குள்) மறந்து அசடு வழிந்தேன். மன்னிக்கவும்.
பிச்சைப் பாத்திரம் என்றுச் சொல்லியிருந்தால் இந்தக் கஷ்டமே வந்திருக்காது. இது என்னுடையக் குறைபாடுதான். நான் நினைக்கிறேன், பெயர் மற்றுடன் அதனுடன் வரும் முகத்தை நினைவில் பதிக்க எனக்குச் சிறு ஸ்டார்டிங் ட்ரபுள் வரும்.
ஆனால் 1955-ஐக் கூட சமீபத்தில் என்றுக் குறிப்பிடும் அளவுக்கு நினைவு சக்தியும் இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. சரியாக குறும்படம் திரையிடும் நேரத்தில் வந்ததால், பிஸியாக இருந்த பத்ரியினை தொல்லை கொடுக்காமல் ஒரு மூலையில் அமர்தேன். என் முன்னால் கவிஞர் யுகபாரதி அமர்ந்திருந்தார். (ஆள் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கணக்கா இருக்காரு. ;) )

பால் சக்காரியாவின் பேச்சின் இறுதியில், (அவசர வேலை காரணமாக) கிளம்பிச் சென்றேன்.

அடுத்த சந்தர்ப்பத்தில் உங்களையும் மற்ற இணைய நண்பர்களை சந்திக்கவேண்டும்.

அன்புடன்,
சந்தோஷ் குரு

By: santhoshguru

Santhosh Guru said...

நானும் அந்த விழாவிற்கு வந்திருந்தேன், பத்ரியினை தவிர வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. சரியாக குறும்படம் திரையிடும் நேரத்தில் வந்ததால், பிஸியாக இருந்த பத்ரியினை தொல்லை கொடுக்காமல் ஒரு மூலையில் அமர்தேன். என் முன்னால் கவிஞர் யுகபாரதி அமர்ந்திருந்தார். (ஆள் சாஃப்ட்வேர் எஞ்சினியர் கணக்கா இருக்காரு. ;) )

பால் சக்காரியாவின் பேச்சின் இறுதியில், (அவசர வேலை காரணமாக) கிளம்பிச் சென்றேன்.

அடுத்த சந்தர்ப்பத்தில் உங்களையும் மற்ற இணைய நண்பர்களை சந்திக்கவேண்டும்.

அன்புடன்,
சந்தோஷ் குரு

Anonymous said...

கண்டிப்பாகப் பார்ப்போம் அடுத்த முறை. நீங்கள் சென்னையில் வசிக்கும் பட்சத்தில் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். என் டெலிஃபோன் எண்கள்: 22312948, 9884012948.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நல்ல தரமான பதிவு சுரேசு.
நிறைய எழுதுங்கள்.
நன்றி வணக்கம்.
மயிலாடுதுறை சிவா...
வாசிங்டன்.

Anonymous said...

இரண்டாம் பகுதி தமிழ்மணதிலிருக்கிறது. சுட்டியில் தட்டினால் ஒன்னுமே காணோமே

By: Raviaa

Anonymous said...

Dear Raviaa,

I posted the second part once again.


Suresh Kannan

Anonymous said...

தேவையான தொலைவிலிருந்து தள்ளியே கேக்கறேன்- உங்க பதிவுல பரிணாமம் எங்க வரணும், பரிமாணம் எங்க வரணும்னு குழம்புது. ரெண்டுமே ஒன்னா கலந்து அடிச்சிருக்கீங்க.

எப்படி சமாளிப்பு பதில் வருதுன்னு பார்க்கலாம். :)

Anonymous said...

சுரேஷ், sorry, மேல இருக்கற பின்னூட்டம் நாந்தான்.-- ஜெயஸ்ரீ. :) இங்கயும் பொட்டி தகராறா? X-(