Sunday, June 30, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 6 – ‘கமல் – வெற்றியடைந்த நடிகன்தான் தோல்வியுற்ற அரசியல்வாதி’







கமல் வந்தும் நிகழ்ச்சி இன்னமும் களைகட்டவில்லை. “இவரே பாம் வைப்பாராம்.. அப்புறம் இவரே எடுப்பாராம்” என்கிற “முதல்வன்’ ரகுவரன் வசனம் மாதிரி, கமலைப் பற்றிய கேள்விகளை முதலிலேயே எழுதி வைத்திருப்பார்களாம். அதை போட்டியாளர்கள் வாசிக்க மட்டுமே வேண்டுமாம். என்ன நியாயம் இது? மாறாக போட்டியாளர்களே சொந்தமாக கேள்விகளைக் கேட்டிருந்தாலாவது சற்று சுவாரசியமாக அமைந்திருக்கும்.

தொடர்பேயில்லாத கேள்வியாக இருந்தாலும் தன்னைப் பற்றி அதில் முக்கால் சதவீதம் திணித்து விடுவதில் கமல் சமர்த்தர். எனில் இந்தக் கேள்விகள் அவரைப் பற்றியது என்றால் விளாசி விட மாட்டாரா? காதில் ரத்தம் வரும் வரை விளாசி விட்டார்.

இன்று அவருடைய ஒப்பனையும் ப்ரெளன் கலர் ஷேடில் இருந்த  ஆடையும் அட்டகாசமாக இருந்தது. துவக்க நாளில் ‘பாங்க் கொள்ளைக்காரன்’ மாதிரி வந்ததற்கு இன்று நல்ல பரிகாரம். இது போன்றே தொடரலாம். அவரின் ஆடை வடிவமைப்பை கவனிக்கும் மேடம் கவனிக்கவும் (நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்பதால் ‘மேடம்’ என்று விளித்திருக்கிறேன்).

பொதுவாக கமல் வரும் நாட்களில் recap முடித்து அன்றைய நாளின் சொச்சங்களை லேசாக காட்டி விட்டு நேரடியாக கமலிடம் போய் விடுவார்கள். இந்த இரண்டு நாட்களையும் அவரே பெரும்பாலும் ஆக்ரமித்துக் கொள்வார். அதான் வழக்கம். அதென்னமோ இன்று வியாழன், வெள்ளி பஞ்சாயத்துக்களை சாவகாசமாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

**


ஏற்கெனவே விரிவாக எழுதியதுதான். இளையதலைமுறையுடன் பழகுவதில் மோகன் வைத்யாவிற்கு பிரச்சினை இருக்கிறது. சரவணன் மற்றும் சேரனைப் போல ஓர் எல்லையுடன் பழகினால் பிரச்சினையில்லை. ஆனால் இறங்கி அடித்தால் ‘பசங்களால்’ கேலியாக திருப்பியடிக்கப்படும் அடியையும் தாங்க வேண்டும். தர்ஷன் ஏதோ கிண்டலடித்து விட்டார் என்று மோகன் சீரியஸாகி விட்டார். ‘இனிமே என்னை அப்பா –ன்னு கூப்பிடாத. அண்ணா –ன்னு கூப்பிடு” என்று கட்டளையிட தர்ஷன் ‘மூசு.. மூசு..’வென அழ ஆரம்பித்தார்.

பல வருடங்கள் இணைந்து வாழ்கிற தன் தந்தை, தாய், அண்ணன், அக்காவிடம் கூட வீட்டில் உறவுமுறையைச் சொல்லி அழைத்து இத்தனை பாசம் காட்டுவார்களா என தெரியவில்லை. ஆனால் வந்த நான்காம் நாளிலேயே அப்பா – மகன் சொந்தங்கள் உருவாகி, அதில் பிரிவுத் துயரெல்லாம் ஏற்பட்டு…

எல்லாம் காமிராக்கள் செய்யும் மாயம்தான் போல. பொதுவெளியில் தங்களை நெகிழ்ச்சியானவராக, நல்லவராக காட்டிக் கொள்ளும் ஆசை.

**

லாஸ்லியாவிற்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் டாஸ்க்கை பிக்பாஸ் இன்று தந்தார் போலிருக்கிறது. இதுவரை பிக்பாஸ் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த அந்தப் பெண் இப்போதுதான் மேடைக்கு வந்தார். ‘வசீகரா’ என்கிற ரொமாண்டிக் பாட்டை பஜனைப் பாட்டாக்கினார்.  ‘நின்னுக்கோரி வர்ணம்’ கறிக்கடை பாய் மாதிரி இந்த அற்புதமான பாடலை அவர் பிய்த்துப் பிய்த்துப் போட மற்றவர்களும் பின்பாடி ஏழரையை அற்புதமாக கூட்டினார்கள்.

‘அழுகாட்சி’ டாஸ்க் மீண்டும் துவங்கித் தொலைத்தது. இதற்கு மீரா தாமதமாக வந்ததால் ஜாடையாக திட்டித் தீர்த்தார் வனிதா. அவர் கோபமாக இருக்கும் போது யாரும் ‘கூல்’ என்று சொல்லி நெருங்கக்கூடாதாம். யாராவது அழுதால் சமாதானப்படுத்தக்கூடாதாம். கட்டளைகள் பறந்தன. இதெல்லாம் சராசரியான மனித இயல்புகள். வனிதாவே சொல்கிற படி ஒவ்வொருவருக்கும் தனித்தன்மைகள் இருக்கும். அவற்றை ஒரு தனிநபர் தன்னிடமுள்ள அதிகாரத்தின் மூலம் எப்படி அழிக்க முடியும்? ஹிட்லர்கள் உருவாவது இப்படித்தான்.

'உன் அப்பா... அம்மா.. கிட்ட போ' என்று முன்பு கோபமாக பேசிய வனிதா, பிறகு மீராவிற்கு அப்பா இல்லை என்கிற விஷயத்தை அறிந்து கொண்டு அதற்காக வருத்தம் தெரிவித்தது நல்ல விஷயம். 'இந்த உலகத்துல எல்லோரும் கெட்டவர்கள் கிடையாது. புரியுதா.. மத்தவங்களுக்கும் கொஞ்சம் ஸ்பேஸ் கொடு" என்று அவர் உபதேசித்தது உண்மை. வனிதா மாதிரியானவர்கள் ஒருபக்கம் கோபக்காரர்களாக இருந்தாலும் இன்னொரு பக்கம் உண்மையானவர்களாக இருப்பார்கள்.

 இந்த ‘அழுகாட்சி’ டாஸ்க்கை சாண்டி அற்புதமாக பகடி செய்தார். அவருடைய முறை வந்த போது ‘ஆச்சுவலி.. எனக்கு அப்பா அம்மா கிடையாது.. நான் ஒரு அநாதை..’ என்று ஆரம்பிக்கும் போதே கர்சீப்பை எடுத்து வைத்துக் கொண்டு லாஸ்லியா அழ ஆரம்பித்து விட்டார். ‘தான் சொன்னதெல்லாம் டூப்’ என்று சாண்டி அடுத்த வாக்கியத்தில் சொன்னதின் வழியாக லாஸ்லியாவிற்கு கிடைத்தது பெரிய பல்பு. ‘சாண்டி..’ என்று சிணுங்கினார். இந்த ‘டாஸ்க்கே’ எத்தனை போலித்தனமானது என்பதை போட்டு உடைத்த சாண்டிக்கு நன்றி.

தன் சகோதரியின் தற்கொலை பற்றியும் அப்பாவிடம் இருந்த அன்பு பற்றியும் லாஸ்லியா விளக்கியது உருக்கமாக இருந்தது. அவரது இலங்கைத் தமிழ் கேட்க அத்தனை சுகம். கவின் இவரை சைட் அடித்துக் கொண்டிருந்ததை காமிரா அம்பலப்படுத்தியது. ‘பயபுள்ள நிறைய பேருக்கு டோக்கன் போடும் போல’

குடும்ப வன்முறையில் இருக்கும் கொடுமையையும் இளம் தலைமுறையினர் அதனால் பாதிக்கப்படும் துயரத்தையும் முகின் ராவின் உருக்கமான பகிர்தல் விளக்கியது. ஆனால் அந்த நிலையிலும் தன் அப்பாவை அவர் வில்லனாக்கி விடவில்லை. ‘அவரு நல்லவருதான்… ஸாரி அப்பா’’ என்று இணைத்துக் கொண்டது அற்புதமானது.

**

லாஸ்லியா கவினை அண்ணன் என்பது போல் சொல்லி விட்டாராம். இதற்காக அவருடைய தண்ணீர் பாட்டிலை கவின் எடுத்து வைத்துக் கொண்டார். லாஸ்லியா எப்படியாவது மறுநாள் காலைக்குள் பாட்டிலை திரும்ப எடுத்து விட்டால் கவின் அவரைத் தங்கையாக ஏற்றுக் கொள்வாராம். இல்லையென்றால் ‘அண்ணன்’ என்கிற சொல்லைத் திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டுமாம். எல்லாம் தமிழ் சினிமாக்கள் படுத்துகிற பாடு. அதில் வருகிற கோணங்கித்தனங்கள் நிஜ வாழ்க்கையிலும் பிரதிபலிக்கின்றன.

‘பாய்ஸ்’ படத்தின் சித்தார்த் போல அந்த தண்ணீர் பாட்டிலை விதம் விதமாக பாதுகாத்து வைத்துக் கொண்டிருந்தார் கவின். பாத்ரூம் போகும் போது கூடவே எடுத்துச் சென்றாராம். இந்த மொக்கையான விஷயத்தை சாவகாசமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். பின்பு எப்படியோ சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு பாட்டிலை கவின் திரும்பக் கொடுத்தார். "நீ எனக்கு அண்ணன்.. தம்பி.. இல்லைதான். ஆனா யாரோ' என்று கவினுக்கு பல்பு கொடுத்தார் லாஸ்லியா.

வெளிப்படையானவராக இருப்பது சிறப்புதான். ஆனால் வலக்கண்ணால் லாஸ்லியாவைப் பார்த்து கொண்டு இடக்கண்ணால் மிச்சமிருக்கும் பெண்களையும் சைட் அடித்துக் கொண்டிருக்கிறார் கவின். 

இந்த ‘பாட்டில்’ டாஸ்க் தேவதாஸ் போல விஸ்கி ‘பாட்டிலிலும்’ சோகப் ‘பாட்டிலிலும்’ முடியும் என்கிற நடைமுறை கவினுக்கு புரிந்தால் சரி.

**

போட்டியாளர்கள் வாசித்த கேள்விகளுக்கு கமல் பதில் சொன்னார். அவற்றில் ‘நாளை நமதே’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு சகோதரராக நடிக்கும் வாய்ப்பை இழந்தது பற்றியும் குறிப்பிட்டார். ‘எம்.ஜி.ஆர் கூட டான்ஸ் ஆடக்கிடைத்த வாய்ப்பு. பாருங்க.. அது நிஜமாகியிருந்தா.. இப்ப எவ்ள உதவியாக இருக்கும்?” என்று பொடி வைத்துப் பேசினார். எம்.ஜி.ஆர் கூட நடனம் ஆடியவர்கள் அரசியலிலும் ஜெயித்த கதையை கிண்டல் செய்கிறாரா என்ன?

‘விஸ்வரூபம்’ திரைப்பட வெளியீட்டின் போது ஏற்பட்ட சர்ச்சையில் தமிழக மக்கள் எனக்கு தோள் கொடுத்தார்கள். அதற்கான நன்றிக் கடனைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்று கமல் உருகியது எல்லாம் சரி. ஆனால் ‘விஸ்வரூபம்’ படத்தை அதே தமிழக மக்கள் ஓட வைக்கவில்லையே.. கவனித்தீர்களா.. கமல்?..

‘வெற்றி பெற்ற தேவர்மகன்தான் குணா.. தோல்வியடைந்த குணாதான் தேவர்மகன்’ என்று இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னார். இதெல்லாம் நமக்கு அப்போது புரியாது. பிறகு நிதானமாக யோசித்தால்தான் புரியும். எம்.ஏ. பிலாஸபி.. எம்.ஏ. பிலாஸபி. (ஆனால் குணா. அற்புதமான முயற்சி. அது தமிழகத்தில் ஓடியிருந்தால்தான் ஆச்சரியம். கமல் இம்மாதிரியான பரிசோதனைகளையெல்லாம் தோல்விக்குப் பயப்படாமல் துணிச்சலாக செய்வார்).

‘ஸ்ருதிஹாசன் மட்டுமல்ல, தமிழகமே என் குடும்பம்தான்’ என்று பிட்டைப் போட்டதெல்லாம் வழக்கமான அரசியல்வாதித்தனம். கமல் இது போன்ற க்ளிஷேக்களைத் தவிர்த்துத் தொலைக்கலாம்.

சரவணனின் சோகக்கதையை தனியாகக் குறிப்பிட்டு ‘அவர்தான் உங்களின் தாய்.. உங்களின் குழந்தையும் கூட. என் வணக்கத்தைச் சொல்லுங்கள்’ என்று பிரத்யேமாக குறிப்பிட்டது சிறப்பு.

கமல் வந்தும் கூட நிகழ்ச்சி ‘பிக்கப்’ ஆகவில்லை என்பது சோகம். (நிகழச்சி பெரிய வெற்றி.. வெளியே பேசிக்கொள்கிறார்கள் என்று கமலே சொன்னது நல்ல காமெடி). இன்றைக்காவது ‘குறும்பட’ பொங்கல் ஏதாவது வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக்குவார் என்று எதிர்பார்ப்போம்.



suresh kannan

5 comments:

Unknown said...

கவின் எடுத்து வைத்தது, லாஸ்லியாவின் பாட்டில் என்று நினைக்கிறேன்...

sarathi said...

Sir அபிராமி இல்லை லாஸ்லியா(அபிராமி கவினை அண்ணன் என்பது போல் சொல்லி விட்டாராம். )

RAHUL ARVIND said...

Will you not write in Ananda vikadan?

பிச்சைப்பாத்திரம் said...

ஆம். பாட்டில் டாஸ்க் லாஸ்லியாவுடன்தான். சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு நன்றி. திருத்தி விட்டேன்.

Gopi Chakrabani said...

கமல் போட்டியாளர்களை கேள்விகளை கேட்க வைத்து அதன் மூலம் மக்களிடம் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயற்சி செய்கிறார் என நினைக்கிறேன்..
தனக்கு கிடைத்த இந்த மேடையை அவருக்கு பயனுள்ளதாக மாற்ற முயற்சிக்கிறார்...