Wednesday, June 26, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்



விவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பிக்பாஸ்ஸில் இருக்கும் சில பெண்கள் இதற்கு விதிவிலக்கல்ல. அறிமுக வீடியோக்களிலும் துவக்க விழா மேடையிலும் ‘புதுமைப்பெண்கள்’ ரேஞ்சிற்கு சீன் காட்டியவர்கள் அன்றாட தினங்களில் சராசரிகளைப் போலவே செயல்படுகிறார்கள்.

ஒருவகையில் இந்த நிகழ்ச்சியின் அடிப்படையும் அதுதான். நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும் கூட. பிரபலங்களின் திறமையை வியக்கலாம்; பிரமிக்கலாம்; ஏராளமாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றைத் தாண்டி அவர்களும் ஒரு சராசரிகளே என்பதை நாம் உணர வேண்டும். அவர்களைக் கடவுள்களாக பீடத்தில் அமர்த்தி தொழக்கூடாது. அவர்களின் சராசரியான தருணங்கள் வெளிப்படும் போது மீது எரிச்சல் அடையவோ கோபப்படவோ கூடாது. அதுதான் யதார்த்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வசை பாட கிளம்பி விடக்கூடாது. 

**

முதல் நாளின் இறுதியில் கவனத்தை தன் மேல் படரச் செய்த அபிராமியே இந்த இரண்டாவது நாளையும் ஆக்ரமித்துக் கொண்டார். தன் மீதான கவன ஈர்ப்பை எப்படி உருவாக்க வேண்டும், அதை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அம்மணிக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இந்த டிரெண்டை ஓவியா ஆரம்பித்து வைத்தாலும் வைத்தார், பலரும் தங்களை அதுவாக நினைத்துக் கொண்டு காமிராவிடம் சென்று கொஞ்சிப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அபிராமியும் இந்தப் பாவனையை பின்பற்றினாலும் நமக்குத்தான் எரிச்சல் ஏற்படுகிறது. ஓவியா போன்ற உண்மையான தேவதைகள் அபூர்வமாகத்தான் தோன்றுவார்கள். 

ஒரு நடிகரை டிவியில் பார்த்து அபிராமிக்கு ‘க்ரஷ்’ உருவானதில் தவறேயில்லை. ஆனால் அந்த உணர்வை அப்போதுதான் அறிமுகமான பெண்களிடம் தம்பட்டம் அடிப்பதும், அதிலும் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்று தெரிந்தும் அதே விஷயத்தை திரும்பத் திரும்ப பொதுவில் பறைசாற்றிக் கொள்வதிலும் இருந்து அம்மணிக்கு ‘க்ரஷ்’ என்பது கவின் மீது என்பதை விடவும் காமிரா மீதுதான் அதிகம் என்பதை யூகிக்க முடிகிறது.

இத்தோடு நிற்காமல் கவினிடமும் இதைப் பற்றி சொல்லி ‘சீரியஸாக’ இதை யோசிக்கச் சொன்னதும் அது கேலியாக மறுக்கப்படும் போது கோபித்துக் கொண்டு கிளம்புவதும் சிறுபிள்ளைத்தனம். ஆனால் இந்த விஷயத்தை கவின் சற்று முதிர்ச்சியோடு கையாண்டார் என்றே சொல்ல வேண்டும். “என்னைப் பற்றியான எதிர்மறை விஷயங்கள் நிறைய இருக்கும். அவற்றைப் பார்த்தால் நீ ஓடி விடுவாய். சில நாட்கள் கழித்து நீ முடிவு செய்” என்பது போல் தற்காலிக சமாதானத்தை முன்வைத்து ‘எஸ்கேப்’ ஆனார்.

கடந்த சீஸனில் ஓவியா விட்ட காதல் அம்பை துவக்க சமயங்களில் ஊதி வளர்த்து விட்டு பிறகு மறுத்து தானும் சிக்கலில் மாட்டி ஓவியாவையும் துயரத்தையும் தள்ளினார் ஆரவ். அப்படியாக மாட்டிக் கொள்ளாமல் கவின் விழிப்பாக இருப்பது நன்று.

**

இந்த சீஸனின் முதல் ‘அழுகாட்சி’ காட்சியை துவங்கி வைத்த பெருமை மோகன் வைத்யாவையே சேரும். ‘தனக்கு பொங்கல் வேண்டாம்’ என்பதைப் பொதுவில் சொல்லப் பயந்து வேறு காரணத்தைச் சொல்லி அழுது தொலைத்தாரோ என்னவோ என்று தெரியவில்லை. அவரது சொந்தக் காரணங்கள், சுயஇழப்புகள் அனுதாபத்துக்கு உரியதுதான். மறுப்பே இல்லை. ஆனால் ‘உறவுகளைத் தேடித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன்’ என்று கலங்கியதுதான் பயங்கர டிராமாவாக இருந்தது. அதென்னமோ ஒவ்வொரு சீஸனுக்கும் இப்படி சிலர் கிளம்பி விடுகிறார்கள்.

அன்பும் பிரியமும் செலுத்த வெளியுலகில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. யாரையாவது தத்தெடுப்பது முதற்கொண்டு உறவினர்களிடம், நண்பர்களிடம் வெளிப்படையான அன்பு செலுத்துவது வரை நிறைய செய்யலாம். ஆனால் ரியாலிட்டி ஷோவில் ‘காமிராவின் முன்புதான் அன்பு செலுத்துவேன் என்று பிடிவாதம் பிடிப்பது நன்றாக இல்லை. இந்த சின்னப்பசங்கள் எல்லாம் பொண்ணுங்களோடு  இணைந்து லூட்டி அடிப்பதும் தனக்கு சாண்டி என்கிற இம்சை மட்டுமே கிடைத்தானே.. என்று காண்டாகி விட்ட மனக்குறையை அழுது  தீர்த்தாரா என்று தெரியவில்லை.

**

கடந்த சீஸனில் ‘முட்டை’ பிரச்சினை கிளம்பியதைப் போன்று இந்த சீஸனில் ‘பொங்கல்’ பிரச்சினை பொங்கத் துவங்கியிருக்கிறது. ‘உணவை வீணாக்குவது தனக்கு பிடிக்காத விஷயம்’ என்று இதை ஆரம்பித்து வைத்தார் பாத்திமா. தன்னை சமூக உணர்வும் பொறுப்பும் உள்ளவராக காட்டிக் கொள்வது நல்ல விஷயம்தான். இதுவொரு பாவனையாக அம்பலப்படும் எல்லைக்கு சென்று விடக்கூடாது.

‘உணவு வீணாகாத வகையில் திட்டமிட்டு சமையுங்கள்’ என்பது சேரனின் யோசனை. இந்த ‘ஆண்’ குரலை ஒவ்வொரு வீட்டிலும் கேட்கலாம். ஆனால் வனிதா இதை சரியான கோணத்தில் மறுத்தார். ‘அப்படிக் கறாராக சமைக்க முடியாது. திடீரென்று எவருக்காவது பசித்தால் இல்லை என்று சொல்ல முடியாது’ என்றார். இதுதான் தாய்க்குலங்களின் அசலான குணம். யாராவது சற்று அதிகம் கேட்டால் அவர்களால் ‘இல்லை’ என்று மறுக்க முடியாது. அதற்காகவே சற்று கூடுதலாகச் சமைப்பார்கள். பிறகு மீந்து போன உணவை வீணாக்க விரும்பாமல் தானே அதை அடுத்த வேளைகளில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வார்கள்.

நான் இது போன்ற தருணங்களில் சொல்லும் யோசனை ஒன்று உண்டு. அதிகமாகிய உணவை ஒருவரே தண்டனை போல சாப்பிட வேண்டாம். மாறாக அடுத்த வேளைக்கு, இருக்கும் அத்தனை நபர்களுக்கும் பிரித்து பகிர்ந்தளித்து விடலாம். இதனால் அவருக்கும் அந்தத் தண்டனை நேராது. மற்றவர்களும் விளையாட்டு போல கொஞ்சமாக இருக்கும் பழைய உணவை சாப்பிட்டு முடித்து விட்டு புதிய உணவிற்குள் உற்சாகமாக நுழையலாம்.

இன்னொன்று, மீதமாகிய உணவுகளை இளம் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆண் நபர்களுக்குத் தர மாட்டார்கள். பெண்களே இந்த தண்டனையை ஏற்றுக் கொள்வார்கள். இதுவொரு மோசமான வளர்ப்புமுறை. பாலின பாகுபாட்டின் ஒரு அம்சம். ஆண்களை இப்படி இளம் வயதிலேயே உயர்வு மனப்பான்மை பொங்கி வழியும் படி வளர்க்கக்கூடாது.

‘பொங்கல் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பசியினால் சாப்பிட்டு விட்டேன். அடுத்த முறை கஷ்டம்’ என்று சாக்ஷி தன் மனக்குறையை முன் வைத்ததற்கும் இது போன்ற வளர்ப்புமுறைகள் ஒரு காரணம். சற்று டெடரான முகபாவத்தில் இருந்தாலும் ‘உனக்குப் பிடிக்காதா, அல்லது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதா?” என்று சரியான கேள்வியைக் கேட்டார் வனிதா. உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது என்றால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் ‘பிடிக்காது’ என்றால் அது ஒரு வித்தியாசமான சூழலை சகிப்புத்தன்மையுடன் ஏற்று வாழப் பழகாதவர் என்றே பொருள். பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படையே இதுதான்.

**

இரண்டாவது நாளிலேயே பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் விஷயங்களை அபிராமி செய்கிறார். கவினுடன் ‘க்ரஷ் கேண்டி’ விளையாட்டு விளையாடி இம்சைப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், புதிதாக நுழைந்த போடடியாளரான மீராவின் மீது வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியது சகிக்க முடியாதது. இருவருக்கும் இடையே ஏற்கெனவே பழைய பஞ்சாயத்து ஏதாவது இருக்கும் போலிருக்கிறது.

தன்னுடைய உணர்வை வெளிப்படையாக வைத்துக் கொள்வது நேர்மையான விஷயம்தான். ஆனால் அதை எதிர்மறையானதாக மாறக்கூடாது. சில காரணங்களுக்காக, முன்விரோதங்களுக்காக மீராவை பிடிக்கவில்லையென்றால், அபிராமி அவரிடம் பழகாமல் இருக்கலாம். ஆனால் வெறுப்பை வெளிப்படையாகக் காண்பிப்பது, அவமதிக்க முயல்வது போன்றவை அவருக்கே எதிராகத்தான் திரும்பும். இதைத்தான் சேரனும் சுட்டிக் காட்டினார்.

தான் இன்னொரு சிநேகனாக மாறிவிடக்கூடாது என்கிற கவனம் சேரனிடம் இருக்கிறது. தன்னை கேங்கில் எளிதில் இணைத்துக் கொண்டதற்காக மீரா ‘கட்டிப்புடி நன்றி’ சொல்ல வந்த போது மிரண்டு ஒதுங்கிக் கொண்டார். மேலும் அப்போது  சிநேகனையும் மேற்கோள் காட்டினார். படுக்கை ஒதுக்கும் விஷயத்தில் மீராவின் வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டது நல்ல விஷயம்.

**

நான் எப்போதுமே சொல்லும் விஷயம் இது. அது நீண்ட கால வரலாற்றுப் பகையாக இருந்தாலும் கூட ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் ஆண்கள் அத்தனை விரோதத்தையும் ஒட்டுமொத்தமாக சட்டென்று உதறி விட்டு இணைந்து விடுவார்கள். ஆனால் பல வருட நெருங்கிய தோழிகளாக இருந்தாலும் இரு பெண்களுக்கு இடையில் ஒரு மெல்லிய கோட்டு பகைமை புகைந்து கொண்டே இருக்கும். என்னுடைய அவதானிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால் நான் கவனித்த பல சம்பவங்களில் இது உறுதியாகியிருக்கிறது.

அபிராமிக்கும் மீராவிற்கும் இடையில் நடப்பது இதுதான் என்று தோன்றுகிறது. சாக்ஷி இதற்கு நன்றாக ஒத்து ஊதுகிறார். இரண்டாவது சீஸனில் ‘யாஷிகாவும் ஐஸ்வர்யாவும்’ ஒன்றாகச் சுற்றியதைப் போலவே இந்த ஜோடி ‘லா.லா.லா.’ என்று அலைகிறது. இவர்கள் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் எப்படியோ மோப்பம் பிடித்து விடும் ஷெரீன் பின்னாலேயே ஓடி வந்து இணைந்து கொள்கிறார். தன்னைப் பற்றி இவர்கள் ஏதும் வம்பு பேசி விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியோ என்னமோ. (இது தொடர்பாக ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்).

மீராவிடம் தாங்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதைப் பற்றி அபிராமியும் சாக்ஷியும் பிறகு வருந்தினார்கள். உண்மையான குற்றவுணர்ச்சியா அல்லது பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்து நாமினேஷனில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்ச்சியா என்று தெரியவில்லை. சேரனின் உபதேசமும் அவர்களுக்கு உறைத்திருக்கலாம்.

**

பார்வதியை உருகி உருகி காதலித்த தேவதாஸ் கூட அவளை அதிகாலையில் சென்று பார்த்திருந்தால் விஸ்கி பாட்டிலைத் தூக்கிப் போட்டு நாயைத் துரத்தி விட்டு விட்டு தன் வேலையைப் பார்க்க போயிருப்பான் போல. அந்தளவிற்கு ஒப்பனையில்லாத அம்மணிகளின் முகங்களை காணச் சகிக்கவில்லை. அதிலும் அபிராமியின் அண்மைக் கோணங்கள் கலவரத்தை ஏற்படுத்துகின்றன.

இன்றைய எபிஸோட் பெரும்பான்மையையும் அபிராமி அண்ட் கோவே ஆக்ரமித்துக் கொண்டது. லாஸ்லியா உள்ளிட்ட பிறர் இந்த வெளிச்சத்தின் முன்னால் காணாமல் போனார்கள். புதிதாக வந்த மீராவை உடனே கணிக்க முடியாதுதான். ஆனால் அம்மணி சண்டை போடுவதில் மற்றவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று தெரிகிறது. ‘எனக்கும் நேரம் வரும். அப்ப வெச்சு செய்றேன்’ என்று நகைச்சுவைப் பூச்சில் சவால் விட்டிருக்கிறார். எனில் உத்தரவாதமாக குடுமிப்பிடி சண்டைகள் உண்டு. பார்ப்போம்.


suresh kannan

9 comments:

Lakshmi Chockalingam said...

Thank you . Was waiting for your article

Lakshmi

AquaNasav said...

super sir. i was searching for your article in vikatan. Keep publishing

AquaNasav said...

We were waiting for your article in vikatan. what happend

Unknown said...

Nice sir

நுனிப்புல் said...

அதிகமான நேரங்களில் என் பார்வை உங்களுடன் ஒத்துப்போவதை உணர்ந்திருக்கிறேன்... எபிஸோட்டை பார்த்துவிட்டு தான் உங்கள் கட்டுரையை படிப்பேன். நிறைய கருத்துகள் ஒத்துப்போகும்.. சில கருத்துகள் நான் விளங்கிக்கொள்ளாத மற்றொரு கோணத்தைக் கொடுக்கும்... பிக்பாஸ் நிகழ்ச்சி எந்தவித மாற்றதையும் நம்மில் கொண்டுவந்துவிடாது.. மாறாக இக்கட்டுரையைப் போன்ற நம் கருத்து பரிமாற்றங்களும், மனித தன்மையும், உற்று நோக்குதலும் நம் அகத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி நம் குறைகளை குறைத்துக்கொள்ள உதவும் என்பதில் மாற்றுகருத்தில்லை..

Gopi Chakrabani said...

விகடனில் உங்கள் கட்டுரை வெளியாகும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.
பிக்பாஸ் பார்த்த பிறகு உங்கள் கட்டுரையை படித்தால்தான் அது முழுமை அடைகிறது.
தினமும் இந்த தொடரை எழுதுங்கள்...
ஆவலுடன் நான்...

Ranjith Kumar Krishnan said...

BB1 both your articles and season were fine.

Bb2 both your articles and season were not up to the expectation

BB3 both your articles and season is back to bang! Thanks to your wonderful writing!

malar said...

இம்முறை விகடனில் எதிர்பார்த்து தேடி உங்கள் முகப்புத்தகம் வழியா இங்கே வந்தேன் .

அழகான எழுத்து நடை .தொடருங்கள் .

Vani Nathan said...

Though I feel sorry for Mohan Vaidya for what he has gone through, him saying that he had nobody outside and came here to make friends is little too much. I enjoyed Sandy's jokes but he has to be careful with not being overdose. The guys generally are behaving them selves, even most of the women too... that includes Madhubala, Fatima and Losliya. But there will be no content if they all behave well. So show needs people like Abi, Meera, Vanita and Shakshi to make it interesting.
Generally the support groups have this kind round table format in healing centres where people openly talk about their problems, Vijay TV used that format... It is appalling to listen to Shreya... how stupid the parents to get their daughters marry at the age of 18 and even if she is out of it again somehow make stupid decision to marry someone violent and abusive. Unfortunately she is one of many.