Monday, June 24, 2019

பிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை



ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான் வந்துட்டிருக்கு' என்று 'பிக் பாஸ்' விளையாட்டு பற்றி அறிந்த சொற்பமான நபர்கள், அது தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். 'பிக் பாஸா, அப்படின்னா என்ன?' என்று அப்போது அப்பாவித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, அதன் வருகைக்குப் பிறகு அதைப் பற்றி தினமும்  ஓயாமல் விவாதிக்கும் அளவிற்கு  அந்த விளையாட்டு இன்று தமிழகத்தின்  மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகி  விட்டது.

ஆம், ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த டைனோசர்  கம்பீரமாக ஆக்ரமித்து  சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல்வேறு விதமான உரையாடல்கள், அலசல்கள், ஆவேசங்கள், உணர்ச்சிகள் ஓயாமல் சமூக வலைத்தளங்களில் பெருகிக் கொண்டிருக்கின்றன. முன்பு இந்தியில் பிரம்மாண்டமாக  வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய மொழிகளில் நுழைந்து, கன்னடத்தில் வெற்றி பெற்று, சமீபத்தில் தமிழ், தெலுங்கு என வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

'Voyeurism எனும் மனிதனின் சிறுமைக் குணங்களில் ஒன்றை பயன்படுத்திக் கொண்டு வணிக ஆதாயத்தை அடையும்  நிகழ்ச்சியிது, கலாசார நசிவை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது என்பது போன்ற, விதம் விதமான எதிர்விமர்சனங்கள் சமூக ஆர்வலர்கள், கலாசாரக் காவலர்கள் போன்றவர்களிடமிருந்து ஒருபுறம் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு சமூகத்தின் கலாசார அழிவிற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க, இந்த நிகழ்ச்சியினால் மட்டுமா அது அழிந்து விடப் போகிறது?, இதுவொரு வணிக நோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிக்கலான சூழலில் மனித மனங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன, எதிர்வினையாற்றுகின்றன என்கிற மனித நடத்தையைப் பற்றி ஆய்வாகவும், பார்வையாளர்களின் சுயபரிசீலனைக்கான தூண்டுதலாகவும் எடுத்துக் கொள்ள முடியும்' என்று இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் சில சதவீதம் கருதுகிறார்கள்.

இவைகள் ஏதுமின்றி, ஒரு வழக்கமான ரியாலிட்டி ஷோவைப் போலவே இதையும் அந்தக் கணத்தில் மிட்டாய் போல் சுவைத்து மறக்கும் சதவீதமும் ஒருபுறம் பெரும்பான்மையாக இயங்குகிறது.

சமகால தமிழ் சூழலில் அதிகமும் கவனிக்கப்படுகிற நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் அதிகமாக விவாதிக்கப்படும் பேசு பொருளாகவும் மாறி விட்ட 'பிக் பாஸின்' சாதக, பாதகங்களைப் பற்றி, இந்த விளையாட்டின் அடிப்படைத்தன்மைகளைப் பற்றிய என்னளவிலான கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பதிவு செய்ய முயல்கிறேன்.


***


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பல்வேறு விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிக்கும்  நிறுவனமான 'Endemol', வடிவமைத்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'Bigg Brother'. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய '1984' என்கிற நாவலின் சாரமே, இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது என்கிறார்கள். கடுமையான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழும் குடிமக்கள், எவ்வாறு மனஉளைச்சலும் இறுக்கமும் நிறைந்த இயந்திரமாக மாறுகிறார்கள் என்பதை அரசியல் பின்னணியுடன் நுட்பமாக விளக்கும் நாவல் அது.

இந்த நிகழ்ச்சிக்கென்று சில அடிப்படையான, கறாரான விதிகளும் நிபந்தனைகளும் உண்டு. பல்வேறு காலக்கட்டங்களில் இதன் வடிவமைப்பு மெல்ல மெல்ல மாறிக் கொண்டே வந்திருந்தாலும் அடிப்படை ஒன்றுதான்.

சகல அடிப்படையான வசதிகளும் உள்ள ஒரு வீீட்டில், வெவ்வேறு துறையைச் சேர்ந்த 14 பிரபலங்கள், நூறு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்கிற கட்டாயத்துடன் உள்ளே நுழைவார்கள். அவர்களை 24 மணி நேரமும்  பல காமிராக்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். தொலைபேசி, இணையம், பத்திரிகை போன்ற வசதிகள் இருக்காது. வெளியுலகத்தைப் பற்றிய எவ்வித தகவலையும் அவர்கள் அறிய முடியாது. தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்ள வேண்டும். இயந்திரக் குரல்களின் கட்டளைகளுக்கு அவர்கள் அடிபணிந்தாக வேண்டும்.

அகம் மற்றும் புறம் சார்ந்த நெருக்கடிகளை, அகங்கார உரசல்களை, கருத்து வேறுபாடுகளைத் தாண்டி எவர் அதிக நாட்கள் தாக்குப் பிடித்து இறுதி வரை அந்த வீட்டிற்குள் நீடிக்கிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கணிசமான பணம் பரிசாக கிடைக்கும்.

ஒரு பிரபலமான நபர், இந்த நிகழ்வுகளின் தொகுப்பாளராகவும் வழிகாட்டியாகவும் இருப்பார். 'யார் வெளியேற்றப் பட வேண்டும்' என்று விளையாட்டின் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் பரஸ்பரம் பரிந்துரை செய்யலாம். இது தவிர பார்வையாளர்கள் அளிக்கும் வாக்கு, போட்டியாளர்களின் இருப்பை நிர்ணயிக்கும் காரணங்களில் ஒன்றாக இருக்கும்.

உலகமெங்கிலும், நாற்பதிற்கும் மேலான நாடுகளில் பரவலான வெற்றியைப் பெற்ற இந்த ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் 'Bigg Boss' என்கிற அடையாளத்துடன் 2007-ல் நுழைந்தது. இந்தியில் இதுவரை பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கின்றன. அமிதாப் பச்சன், சல்மான் கான் முதற்கொண்டு பல கோலிவுட் பிரபலங்கள், இந்த நிழச்சியின் தொகுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். கன்னடத்தில் நடிகர் சுதீப் வழிநடத்தினார். இப்போது இந்த நிகழ்ச்சி தமிழிலும் நுழைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருக்கிறார்.


***

இதர மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யமாக வம்பு பேசுவது, அவற்றை ஆவலுடன் கவனிப்பது, பிறருடைய அந்தரங்கமான தருணங்களை, விஷயங்களை எட்டிப் பார்க்க விருப்பம் காட்டுவது போன்றவை மனித குணத்தின் மிக ஆதாரமான அம்சங்களில் ஒன்று. இது எல்லை தாண்டிப் போகிற போது வக்கிரத்தன்மையாகிறது. கற்காலத்திலிருந்தே இருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் குணாதிசயம் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.

''அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட / மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்' என்கிறது திருக்குறள். (கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர். -மு.வரதராசன் உரை). புறம் பேசுதலின் தொன்மைக்கும், அது கீழ்மைகளில் ஒன்றாக கருதப்பட்டதற்கும் உதாரணமாக இந்தக் குறளைக் கொள்ளலாம்.

கூட்டுக்குடும்ப முறை பெரிதும் சிதறாதிருந்த காலக்கட்டங்களில் மனிதர்கள் வம்பு பேசுவதற்கு போதுமான வெளிகளும் காரணங்களும் இருந்தன. ஒவ்வோரு புது மருமகளும் 'புகுந்த' வீட்டிற்குள்' நுழையும் போது, அந்நியமான சூழல், மனிதர்கள் என்று பிக் பாஸ் விளையாட்டின் அதே உணர்வுகளை, உளைச்சல்களை உணர்வார். மிக அற்பமான காரணங்கள் கூட வம்புகளுக்கு காரணமாக இருந்திருக்கும். பேசிப் பேசி மாய்வார்கள். ஒரு தரப்பிற்கு மனஉளைச்சல்களை ஏற்படுத்தும் இந்த வம்புகள், இன்னொரு தரப்பிற்கு மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் முரணான தன்மையையும் கொண்டிருக்கும்.

கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடும்பங்கள் பெருகிய பிறகு வம்பு பேசும் பொதுவெளிகள் குறையத் துவங்கின. மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் கலாச்சாரம் பெருகியது. குறிப்பாக பெருநகரங்களில், பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைப் பற்றிய தகவல் கூட அறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத போக்கு வளர்ந்தது. பெண்களும் பணியிடங்களுக்குச் செல்லும் போக்கு வளர்ந்ததால் வம்பு பேசுவதற்கான நேரங்கள் குறைந்தன. பரபரப்பான வாழ்வியல் தன்மை, இது சார்ந்த விஷயங்களுக்கான போதுமான நேரத்தை அனுமதிக்கவில்லை. அலுவலக கூடங்கள் வம்பு பேசுவதற்கான சாத்தியத்தை அளித்தாலும் அவையும் போதுமானதாக அமையவில்லை.

இந்த வெற்றிடத்தை தொலைக்காட்சி தொடர்கள் மிக வெற்றிகரமாக கைப்பற்றின. ஆண்களை விடவும் பெண்களே அதிகம் வம்பு பேசுவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கான உளவியல் காரணங்களும் இருக்கலாம். நிறைவேறாத விருப்பங்கள், அவை சார்ந்த ஏக்கங்களை அவர்கள் வேறு சில ஆசுவாசங்களின் மூலம்தான் கடக்க முடிவது ஒரு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சி தொடர்களின் வெற்றிக்கு பெண்கள் ஆதாரமாக இருக்கிறார்கள். எனவே அவர்களைக் குறிவைத்தே பெரும்பாலான தொடர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

பெண் பாத்திரங்களை பிரதானமாகக் கொண்டு பெண்மையப் படைப்புகளாக இவை இருந்தாலும் பெரும்பாலும் அசட்டுக் களஞ்சியமாகவே உருவாகின்றன. இவைகளில் பெண்கள் மிதமிஞ்சிய அதிகாரம் உள்ளவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்களை அடிமைப்படுத்துவது, அடிப்பது, போன்ற காட்சிகள் நிறைந்த மிகையுணர்ச்சியுடன் நாடகங்களே அதிகம். அன்றாட வாழ்வில் தங்களின் அதிகாரத்தை பெரிதும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள  பெண்களுக்கு இந்த தொடர்கள் மிகுந்த மனஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. ஆண்களை பழிவாங்குவதுதான் பெண்ணியச் செயற்பாடு என்கிற அரைவேக்காட்டுத்தனத்தை இது போன்ற தொடர்கள் ஊக்கப்படுத்துகின்றன.

இந்த வம்பு பேசும்/கவனிக்கும் மனநிலையை வணிகமாக்கும் நவீனமான வடிவம்தான் 'பிக் பாஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்கள்.


***

பெண்களையே அதிக பார்வையாளர்களாகக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும் 'பிக் பாஸிற்கும்' இடையே ஒரு பெரிய வித்தியாசம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவரை நெடுந்தொடர்களை எரிச்சலாகவும் கிண்டலாகவும் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கணிசமான பார்வையாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்களைப் பற்றி பெண்கள் விவாதித்துக் கொண்டிருந்த அதே ஆர்வத்துடன், ஆண்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான காரணமாக எது இருக்கும்? திரைப்படங்களும் சரி, தொலைக்காட்சி தொடர்களும் சரி, ஒரு கதையாடலாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதால் 'இது செயற்கையானது' என்பது  பார்வையாளர்களின், குறிப்பாக ஆண்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கலாம். மட்டுமல்லாமல் இது போன்ற தொடர்களில் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதால் ஆண்கள் அது சார்ந்த மனவிலகலோடும் எள்ளலோடும் அவைகளை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் 'பிக் பாஸ்' விளையாட்டு, மனிதர்களின் 'அசலான சம்பவங்கள்' என்கிற பாவனையுடன் உருவாகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை கூடுகிறது. 'பிளாஸ்டிக்'தனமான மனிதர்கள், சம்பவங்களை விடவும்,பொதுவிடங்களில் நிகழும் உண்மையான வாய்ச்சண்டைகளைப் போல இதன் நிகழ்வுகள் உண்மைத்தனத்துடன் வெளியாகின்றன. அதிலும் இவை பிரபலங்கள் தொடர்பான சண்டை என்பதால் சராசரிகளின் ஆவல் பல மடங்கு கூடுகிறது.

'பிக் பாஸ்' போட்டியாளர்களின் அசைவுகளை காமிராக்கள் 24 மணி நேரமும்  தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது ஒரு மணி நேரத்திற்கானது என்பதால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' தருணங்கள் மட்டுமே  தொகுக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. அந்த தருணங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய வம்புகளாக, அகங்கார மோதல்களாக இருக்கும். இவையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நமக்கு காட்டக்கூடிய வடிவில்தான் இருக்கும்.

உண்மை என்பதே பல பரிமாணங்களைக் கொண்டதாக, எளிதில் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள முடியாத அருவமாக இருக்கும் போது இதில் காட்டப்படும் காட்சிகளை மட்டும் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற கறுப்பு - வெள்ளைத்தனமான முடிவிற்கு பார்வையாளர்கள் வருவது அறியாமையே. சினிமாக்களில் சித்தரிக்கப்படும் நாயகர்களையும் வில்லன்களையும் நிஜமென்று நினைத்துக் கொண்டு முறையே புகழ்வதும், திட்டுவதும் எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தமே இந்த நிகழ்ச்சியையும் அது போன்று அணுகுவது.


***

இந்த நிகழ்ச்சி 'நாடகத்தன்மையுடையது',  'சம்பவங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்கள்  நடிக்க வைக்கப்படுகிறார்கள்' என்பது போன்ற அபத்தமான அவதானிப்புகளை நிறைய வெளிப்படுகின்றன. எனில் நெடுந்தொடர்களுக்கும் இதற்குமான வித்தியாசம்தான் என்ன?

ஒரு கற்பனையான பரிசோதனையைப் பார்ப்போம். அடைக்கப்பட்ட ஒரு கூண்டிற்குள் சில எலிகளை விடுவோம். அவைகளுக்கு போதுமான உணவு அளிக்காமல் இருப்பது, கோபமூட்டும் வகையில் சீண்டிக் கொண்டே இருப்பது, எரிச்சலூட்டும் வகையில் சிறிய தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பது போன்வற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், அந்தக் கூண்டிலிருந்து தப்பிப்பதையே முதன்மையாக குறிக்கோளாக அவை கொண்டிருக்கும். அது சாத்தியமில்லை என்கிற சூழலில் பிற எலிகளின் மீது கோபம் திரும்பும். ஒன்றையொன்று பிறாண்டிக் கொண்டு, குதறிக் கொண்டிருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக அவை இறந்து போகலாம். அனைத்தும் ஒடுங்கிய அச்சத்தில் ஏறத்தாழ செத்துப் போன நிலையை அடைந்து கொண்டிருக்கலாம்.

'பிக் பாஸ்' விளையாட்டில் நிகழ்வதும் ஏறத்தாழ இதுவே. போட்டியாளர்களுக்கு அடிப்படையான வசதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் குறுகிய வெளி, வெளியேறும் தண்டனை, அது சார்ந்த அச்சம், பதட்டம் உள்ளிட்ட பல காரணங்கள் அவர்களுக்கு மெல்ல மெல்ல உளைச்சலையும் மோதல்களையும் உருவாக்குகிறது. இந்தச் சூழல் மிக கவனமாக திட்டமிட்டு, உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அப்படியான எதிர்வினைகள்தான் உற்பத்தியாகும் என்பது இந்த விளையாட்டை வடிவமைத்தவர்களுக்கு உறுதியாகத் தெரியும்.

சுருக்கமாகச் சொன்னால், மோதல்கள் உருவாவதற்காக கச்சிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வெளி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. எதிர்பார்த்தபடியே அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் இதில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவது தற்செயலானதல்ல. கவனமாக திட்டமிடப்படுவது. அவர்கள் பெரும்பாலும் பிரபலங்களாக, திரைத்துறையைச் சேர்ந்தவர்களாக, அழகானவர்களாக இருப்பது  பார்வையாளர்களின் சுவாரசியத்தை தக்க வைத்துக் கொள்ளும் உத்தியே. எனவே இவர்களுக்குள்ளான உயர்வு மனப்பான்மை, தாழ்வுமனப்பான்மைக்கான அகங்கார மோதல்கள் நிச்சயம் உருவாகும். முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களாக இவை இருக்க முடியாது. அப்படி இருந்தால் இந்த விளையாட்டின் அடிப்படையான சுவாரசியமே கலைந்து விடும்.

'போட்டியாளர்கள் நடிக்கிறார்கள்' என்று எழுகிற அதிபுத்திசாலித்தனமான புகார்களும் அபத்தமானவையே. இவர்கள் நடிக்கிறார்கள் என்பது உண்மையானால் உலகப் புகழ் பெற்ற நடிகர்களை விடவும் இவர்களே சிறந்த கலைஞர்களாக இருக்க முடியும். ஆனால் இதில் கலந்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் திரைத்துறையின் புகழில் இருந்து மங்கலாகிக் கொண்டிருக்கிறவர்களே.

ஒரு பாத்திரத்தின் அதியதார்த்தமான அசைவை உருவாக்குவது, நடிகர்களை வெளிப்படுத்த செய்வது எத்தனை சவாலான காரியம் என்பது சினிமா இயக்குநர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். கச்சிதமான உடல்மொழி வரும் வரையில் திரும்பத் திரும்ப பல டேக்குகள் எடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.

நடைமுறை உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். நிஜ வாழ்வில், நீங்கள் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது வேறு எந்தப் பணியிலோ தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீீர்கள் என வைத்துக் கொள்வோம். பின்னாலிருந்து ஒருவர் திடீரென்று உங்களைப் பயமுறுத்துகிறார். அப்போது உங்களின் உடல்மொழியிலும் முகபாவங்களிலும் அது சார்ந்த அதிர்ச்சியும் திடுக்கிடலும் தன்னிச்சையாக ஏற்படும். நீங்கள் அறியாமல் இந்தக் காட்சி பதிவு செய்யப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

இந்த தன்னிச்சையான உடல்மொழியின் வெளிப்பாட்டை, அதே போன்று அச்சு அசலாக உலகத்தின் எத்தனை சிறந்த நடிப்புக் கலைஞனாலும் தந்து விட முடியாது. அவனுடைய ஆழ்மனதில் 'நாம் நடிக்கப் போகிறோம்' என்று எழுகிற உணர்வை அழிக்கவே முடியாது. எத்தனை திறமையான நடிகனாக இருந்தாலும் இது சார்ந்த செயற்கைத்தன்மை சிறிய சதவீதமாவது நிச்சயம் வெளிப்பட்டு விடும். மேற்குறிப்பிட்ட அசலான காட்சியையும், நடிகர் நடித்த காட்சியையும் ஒப்பிட்டால் நுட்பமான கவனிப்பின் மூலம் இரண்டிற்குமான வித்தியாசத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

'பிக் பாஸ்' விளையாட்டில் வெளிப்படும் உடல்மொழிகளும் அசைவுகளும் அசலானவையே. அவை தொகுக்கப்பட்ட விதத்தில் அல்லது விளையாட்டு, போட்டி போன்றவைகளில் வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிட்ட சில விஷயங்கள் இருக்கக்கூடும்.


***

மனிதனின் வம்பு பேசும், கவனிக்கும் அடிப்படையான குணத்தை, மற்றவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்திருந்து பார்க்கும் வக்கிரத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் ஊக்கப்படுத்துகின்றன, இது சார்ந்த உணர்வுச்சுரண்டலை வணிகமாக்குகின்றன என்கிற புகார்களில் பெரும்பாலும் உண்மையில்லாமல் இல்லை.

கமல்ஹாசன் பற்றிய தனிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வம்புகளாக உருமாறும் போது 'எனது பெட்ரூமில் எட்டிப் பார்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது' என்று தனிநபரின் சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவரே, தூங்கும் நேரத்தையும் விடாமல் பதிவு செய்யும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஆனது நகைமுரணா அல்லது காலத்தின் கட்டாயமா என தெரியவில்லை.

நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் போது 'இதுவொரு சமூகப் பரிசோதனை' என்றார் கமல். ஒருவகையில் அது உண்மைதான். தீயவைகளில் இருந்து தன்னிச்சையாக உருவாகும் நன்மை போல, இந்த நிகழ்ச்சி வணிக நோக்குடையது என்றாலும் கூட இதிலும் சில நன்மைகள் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வீட்டின் உறுப்பினர்களின் அகங்கார மோதல்கள், சண்டைகள், கோரமான முகபாவங்கள், புண்படுத்தும் குரூரங்கள், புண்படும் பரிதாபங்கள் போன்றவற்றைக் காணும் போது, நம்மை 'வெளியே' நிறுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விமர்சிக்கிறோம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய கீழ்மைகளின் பிம்பங்களே அவை என்பதை உணர முடியும். நம்முடைய அன்றாட வாழ்வில் அது போன்ற சம்பவங்ககள் நிறைய நடக்கின்றன. புண்படுத்துகிறவர்களாகவும், புண்படுகிறவர்களாகவும் நாமே இருக்கிறோம். ஆனால் அவைகளைப் பதிவு செய்யும் காமிராக்கள் இல்லை. எனவே அந்தக் கணங்களில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை நாமே அறிய முடிவதில்லை. அது சார்ந்த ஒரு வாய்ப்பை இந்தக் காணொளிகள் நமக்குத் தருகின்றன.

ஒரு போட்டியாளர் மிக மோசமாக நடந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து பார்வையாளர் திடுக்கிடும் போது அல்லது அவரை கடுமையாக வெறுக்கும் போது, அவரும் அது போன்றே அவருடைய வாழ்வில் பலமுறை நடந்து கொண்டதை மனச்சாட்சி நினைவுப்படுத்துகிறது. அது குறித்து குற்றவுணர்வும் வெட்கமும் அடைய வைக்கிறது. இனியாவது அப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்கிற நல்லுணர்வு தூண்டப்படுகிறது.

இது சார்ந்த சுயபரிசீலனைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் தன்னிச்சையான ஒரு நல்விளைவு எனலாம். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துதான் நல்லியல்புகளுக்கு திரும்ப வேண்டுமா, அறங்களை, மதிப்பீடுகளை வலியுறுத்தும் நல்ல இலக்கியங்களின் மூலம் அடையலாமே' என்கிற கேள்வி எழக்கூடும். அது அபத்தமான வழியிலாக இருந்தாலும் அறிவுக்கண் திறந்து கொள்ளும் நல்விளைவு எங்கே உருவாகினாலும் அது நல்லதுதானே? போதிமரம் எங்கே, எப்போது எதிர்ப்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.


இந்த விளையாட்டின் தமிழ் வடிவத்தில், நடிகை ஓவியாவின் செயற்பாடுகள் பெரும்பான்மையோரைக் கவர்ந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இவருக்கு புகழ் மாலைகள் குவிகின்றன. இவருடன் சண்டை போடுபவர்கள் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள்.

அப்படியென்ன செய்கிறார் ஓவியா? பெரும்பாலும் எவரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே உரையாடுகிறார். சர்ச்சைகள் உருவாகும் சூழலில் இருந்து உடனே விலகுகிறார்.  புண்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். தம்முடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறார். மிக குறிப்பாக தனது ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்கிறார்.

இவரிடமும் குறைகள் இல்லாமல் இல்லை. தமக்கு தரப்பட்ட பணிகளை செய்யாமல் ஒதுங்குவது, கூடி விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுவது போன்ற குறைகள். இவற்றையும் மீறி இவர் பார்வையாளர்களால் கொண்டாடப்படுவதற்கு மற்றவர்களின் அதிகமான கீழ்மைகளே காரணம். ஓவியாவின் நல்லியல்புகள், ஒரு நாகரிக மனிதர் பின்பற்ற வேண்டிய அடிப்படையான சாதாரணத்துவத்தைக் கொண்டிருந்தாலும் பிறரின் மோசமான செயல்களோடு ஒப்பிடப்படும் போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இருளில் ஒளிரும் அகல் விளக்கின் பிரகாசம் போல.

***

'கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன, தாம் விளையாட' என்பது ஒரு பிரபலமான திரையிசைப்பாடல். ஒருவகையில் இந்த உலகமே 'பிக் பாஸ்' விளையாட்டு மைதானம்தான். மனச்சாட்சி எனும் ஒளிப்பதிவுக்கருவி நம்முடைய கீழ்மைகளை தொடர்ந்து பதிவு செய்து அவசியமான சமயங்களில் நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.  நாம்தான் அவற்றை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

மனிதன் என்பவன் கூடிவாழும் சமூக விலங்கு என்பது ஒருபுறம் உண்மை. இன்னொரு புறம் தனிமையை, அந்தரங்க வெளியை விரும்புபவனாகவும் இருக்கிறான். இரண்டிற்குமான முரணியக்க விளையாட்டே 'பிக் பாஸ்'.

- உயிர்மை - ஆகஸ்ட் 2017-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

 
suresh kannan

4 comments:

Unknown said...

Excellent analysis sir👌👌👌

Unknown said...

Super Article sir

Unknown said...

Super Article sir

ezilmaran said...

பல கோணங்களில் கவனித்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நிறைய பேர் ... "இதையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்களா, இது ஸ்க்ரிப் ஷோ " என்று பலவிதமாக இடையில் வந்து அடிக்கடி அதிமேதவிதனமாக கமெண்ட்ஸ் இடுவார்கள். இத்தனைக்கும் நான் சீரியல்களை இதுவரை பார்த்ததே இல்லை.என் வீட்டிலும் பார்க்க விடுவதில்லை.டிவியில் திரைபடங்களை வேண்டுமானால் பாருங்கள் என்று கூறி விடுவேன். நான் பார்ப்பது நேஷனல் ஜியாக்ரபி,டிஸ்கவரிம் bbc earth,மற்றும் நியூஸ் சேனல், இதற்க்கு அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்கிறேன்.