Saturday, June 29, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 5 – ‘மோகன் போட்ட கூக்ளி.. ஸாரி.. ‘ஹூக்’ளி’
பிக்பாஸ் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியும் நடந்து கொண்டிருப்பதால் இரண்டையும் தொடர்புப்படுத்தி ஒரு தலைப்பு வைக்க வேண்டுமே என்று நினைத்தேன். விளைவு இந்தத் தலைப்பு. இரண்டுமே  விளையாட்டுதானே?!.

‘அழுகாச்சி’ டாஸ்க் இன்றும் தொடர்ந்தது. வனிதாவும் கவினும் தங்களின் அனுபவங்களைப் பகிர, ‘என்னடா.. இது .. இன்றைய நாளும் எழவு வீடாகவே முடிந்து விடுமோ’ என்று தோன்றியது. ஆனால் மோகன் வைத்யா போட்ட ‘ஹூக்’ளி’தான் இன்றைய நாளின் பஞ்சாயத்திற்கான விதையைப் போட்டது. அவர் ‘பற்ற வைத்த நெருப்பினால்’தான் இன்று நாள் முழுக்க சரவெடி சத்தம் பிக்பாஸ் வீட்டில் கேட்டது. நன்றி மோகன் அவர்களே.

‘கேயாஸ் தியரி’ பற்றி அறிந்திருப்பீர்கள். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட எங்கோ தொலைவில் இருக்கிற எரிமலையின் பொங்குதலுக்கு காரணமாக அமையக்கூடுமாம். இந்த உலகில் நடக்கும் அனைத்து சிறு நிகழ்வுகளுக்கும் பெரிய நிகழ்வுகளுக்கும் இடையில் கண்ணுக்குத் தெரியாத பல தொடர்ச்சிகள் இருக்கின்றன என்கிறார்கள். அதற்குத் தோராயமான உதாரணமாக இந்த நாளைச் சொல்லலாம்.

என்ன நடந்தது? வாருங்கள் பார்ப்போம்.

**

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரா, அங்கு கடந்து சென்ற மோகன் வைத்யாவிடம் ஓர் உதவியைக் கேட்டார். “என் டிரஸ் பின்னாடி, (அதாவது கழுத்துப் பகுதியில்), ஹுக் போட்டு விடுகிறீர்களா?” என்று. மாடலிங் உலகில் இது சகஜமான விஷயமாக, உப்புப் பெறாத விஷயமாக கூட இருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்க மனநிலைக்கு இது சற்று அதிர்ச்சியான விஷயம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த மிடில் கிளாஸ் ஆசாமிகள் கூட சற்று ஆடிப் போயிருப்பார்கள். ‘இன்னாம்மா.. இந்தப் பொண்ணு. திமிரப் பாத்தியா” என்று வீட்டுப் பெண்மணிகள் முணுமுணுத்திருப்பார்கள்.

‘என்னடா.. இந்தக் காட்சி சாதாரணமாக கடந்து போய் விட்டதே?!’ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே இது தொடர்பான பஞ்சாயத்து ஆரம்பித்தது. இந்த விஷயத்தை ஒரு புகார் மாதிரி கேப்டன் வனிதாவிடம் சென்று பதிவு செய்து விட்டார் மோகன். ‘இந்த மாதிரி அவங்க கேட்டாங்க… எனக்குச் சங்கடமா இருக்கு. உதவி செய்யறது ஓகே. ஆனா கேமிரா முன்னாடி செஞ்சா பார்க்கறவங்க என்னைத் தப்பா நெனப்பாங்க.. நீங்க அவங்க கிட்டச் சொல்லுங்க” என்றிருக்கிறார்.

மோகனின் நோக்கில் இந்த விஷயம் புரிந்து கொள்ளக்கூடியதுதான். சங்கடமான விஷயம். ஆனால் அவர் என்ன செய்திருக்கலாம்? மீராவையே தனியாக அழைத்து “இங்க பாரும்மா.. குழந்த.. இப்படி செய்யச் சொல்லாதே.. அது உனக்கு மட்டுமல்ல.. எனக்கும் கெட்ட பெயரை வாங்கித் தரும்” என்று சொல்லியிருக்கலாம். சரி.. நடந்தது நடந்து விட்டது.

இப்போது இந்த விஷயத்தை ஹேண்டில் செய்வது ‘கேப்டன்’ என்கிற வகையில் வனிதாவின் டர்ன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. அவருமே மிக தன்மையாகத்தான் இதைக் கையாண்டார். மீராவை தனிமையில் அழைத்து இந்த விஷயத்தை ஆரம்பித்து சொல்லும் போதே இடைமறித்த மீரா.. “நாங்க அப்பா – பொண்ணு மாதிரி.. இதெல்லாம் ஒரு மேட்டரா?” என்பது போல் அவசரமாகச் சொல்லி விட்டு ஓடி விட்டார்.

தான் சொல்ல வருவதைக் கூட முழுமையாக கேட்காமல் ஓடி விட்டாளே என்று வனிதாவின் ஈகோ காயப்பட்டிருக்கும். இத்தனைக்கும் அவர் மீராவிற்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டுதான் அழைத்திருந்தார். எனவே தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தது வனிதா என்னும் கொக்கு. அதற்கான சமயமும் வந்தது. அல்லது வனிதா அதை உருவாக்கினார் என்றும் சொல்லலாம். 

**

ஒரேயொரு ‘கடாய்’ பாத்திரத்தை சுத்தம் செய்யும் பணியை மீராவிற்காக ஒதுக்கித் தந்தார் வனிதா. ஆனால், அம்மையப்பனை சுற்றி வந்து மாம்பழத்தை ‘லவட்டிய’ புத்திசாலி கணேசன் மாதிரி, அந்த வேலையை சாண்டியிடம் ஹேண்ட்ஓவர் செய்தார் மீரா. சாண்டியும் அந்த வேலையை இயல்பாக செய்து முடித்து விட்டார்.

ஆனால் வனிதா டீமிற்கு இந்த விஷயம் உறுத்திக் கொண்டேயிருந்தது. இது தொடர்பான பஞ்சாயத்தை ஆரம்பித்தார்கள். ‘இரவில்தான் பாத்திரங்கள் அதிகம் விழுகின்றன. நான் நிறைய உழைக்கிறேன். மட்டுமல்ல, இன்று உடம்பு சரியில்லை. அதனால்தான் சாண்டியிடம் கேட்டுக் கொண்டேன்’ என்பது மீராவின் தரப்பு வாதம். ஆனால் வனிதா இதை ஒப்புக் கொள்ள தயாராக இல்லை. அவரது ஈகோ ஏற்கெனவே காயப்பட்டிருந்ததால், ‘எனில் நீ பாத்ரூம் க்ளீனிங்’-ற்கு செல்’ என்று உத்தரவு போட்டார். அது மீராவிற்கு வைத்த செக் மேட்.

ஆனால் மீரா அதற்கு அடிபணியவில்லை. ‘நான் பாத்திரம் விளக்குவதை செய்ய மாட்டேன் என்று சொல்லவேயில்லையே’ என்று வாதிட.. ‘நான் சொல்லிவிட்டேன். இது கேப்டனின் கட்டளை. என் கட்டளையே சாசனம்’ என்று ராஜமாதாவாக மாறி வனிதா உரத்த குரலில் ஆணையிட “நீங்கள் செய்வது தவறு அம்மா” என்று அமரேந்திர பாகுபலியாக மாறினார் மீரா. “ஏன் கத்தறீங்க.. எங்க அப்பா அம்மா தவிர வேறு யாரும் என் கிட்ட சத்தம் போட உரிமை கிடையாது” என்று கலங்கும் குரலில் மீரா பதில் அளிக்க, “அப்ப.. ஏன் இங்க இருக்க.. உங்க வீட்டுக்குப் போ” என்று அதிரடி மாமியாராக மாறினார் வனிதா.

மீரா அழுது கொண்டே வெளியேற… இந்தச் சமாச்சாரம் குறித்து மற்ற பெண்கள் கூட்டணி அமைத்து பேசினார்கள்.. பேசினார்கள்… அப்படி மாய்ந்து மாய்ந்து பேசினார்கள்.

இந்தக் கூட்டணியை சற்று கவனித்தால் அது வயது சார்ந்த அணியாகப் பிரிந்திருப்பதைக் கவனிக்க முடியும். வயதானவர்களான பாத்திமா, மோகன் போன்றோர் ஓர் அணியில் இருக்கிறார்கள். நடுத்தரவயது வனிதாவோடு கூட்டணி அமைத்துக் கொண்டார் மதுமிதா. ‘இவங்க சொன்னதுல என்ன தப்பு?” என்கிற சப்போர்ட் வேறு. (வனிதா, முன்னாள் சாதனையாளரான காயத்ரியாகவும் மதுமிதா ஆர்த்தியாகவும் உருமாறியிருப்பதைக் கவனிக்க முடியும்).

அபிராமி, சாக்ஷி உள்ளிட்ட இளம்வயதினர் பெரும்பாலும் மீராவின் பக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தார்கள். அதிகாரத்தைச் செலுத்தத் துவங்கியிருக்கும் வனிதா அக்காவின் மீது அவர்களுக்கும் எரிச்சல் தென்பட ஆரம்பித்திருக்கிறது.

மீராவின் மீது முதலில் வெறுப்பைக் காட்டிய அபிராமியும் சாக்ஷியும் கூட இப்போது மீராவின் பக்கம் சாய்ந்தது நல்ல விஷயம். வெளியே அழுது கொண்டிருந்த மீராவை இளம் வயதுக்காரர்கள் சென்று சமாதானப்படுத்தியது வேறு வனிதாவை கொந்தளிக்கச் செய்தது. “அவ சீன் போடறா.. வெளிய ஆர்மி ஆரம்பிப்பாங்கன்னு கற்பனை’ என்றெல்லாம் பொங்கிக் கொண்டிருந்தார். (ஆனால் மக்கள் உண்மையில் ஆர்மி ஆரம்பித்திருக்கிற ‘லாஸ்லியா’ என்கிற ஜீவன் அந்த வீட்டில்தான் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருக்கிறது. அப்படியே அபூர்வமாக கண்ணில்பட்டாலும் தெய்வதிருமகள் ‘விக்ரம்’ மாதிரி என்னென்னமோ கையைக் காட்டிக் கொண்டு தனியாக உலவிக் கொண்டிருக்கிறது).

“இரவில் அதிக பாத்திரங்கள் விழுவது நீ வருவதற்கு முன்னாலே இருந்ததுதான். நீயாக கற்பனை செய்து கொள்கிறாய்” என்று மீராவிடம் சரியான காரணத்தை எடுத்துச் சொன்னார் தர்ஷன். “நான் எவ்ளோ வேலை செஞ்சேன் தெரியுமா” என்று பதிலுக்கு சிணுங்கினார் மீரா.

சேரனும் மீராவைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால்,  “நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா..’ என்று நாட்டாமை ரேஞ்சில் மீரா பஞ்ச் டயலாக் பேசினார். (அதுவும் யார் கிட்ட இந்த பஞ்ச்?!. நாட்டாமை விஜய்குமாரோட பொண்ணு கிட்டயே.. என்ன ஆணவம்?!) இதைக் கேட்டு நொந்து போன சேரன் அமைதியானார். மீராவையும் மதுமிதாவையும் அழைத்து இவர் செய்த பஞ்சாயத்தும் ஒரே காமெடியாகத்தான் இருந்தது. ‘திரும்பத் திரும்ப பேசற நீ” மதுமிதா தன் தரப்பை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருந்தார்.

**

இந்த ‘ஹூக்’ளி சமாச்சாரத்திற்கு மறுபடியும் வருவோம். தான் சொன்னதை மீரா கேட்கவில்லை என்கிற மெல்லிய கோபத்தோடு இந்த விஷயத்தை வனிதா அப்படியே விட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பாத்திமா உள்ளிட்ட சிலரிடம் தொடர்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பந்தை மறுபடியும் மோகனிடமே தள்ளி விட்டார்கள். ‘நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கறா.. நீங்களே சொல்லிடுங்க” என்று. அவரும் பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி ‘இதோ பாருங்கோ… அது வந்து..” என்று குழறிக் கொட்டி உரையாடலை முடித்தார்.

உருப்படியான வேலைகள் இல்லாவிட்டால் அது வம்புகள் உருவாவதற்கும் தொடர்ந்து நிகழ்வதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மெய்ப்பிக்கிறது பிக்பாஸ் வீடு.

பிக்பாஸ் வீடு என்பது கண்ணாடி மாதிரிதான். நம் வீடுகளில் அன்றாடம் நிகழும் சமாச்சாரம்தான் இது. சரவெடி மாதிரி ஒரு பெரிய சண்டை நிகழ்ந்து முடிந்திருக்கும். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் மிக அற்பமானதாக இருந்திருக்கும். அதை ஊதி ஊதி பெருக்கி விட்டிருப்பார்கள். எனவே இதில் வரும் பாத்திரங்களை விமர்சிப்பதை விடவும் இந்தச் சம்பவங்களின் மூலம் நம்மையும் சுயபரிசீலனை செய்து கொள்வதே நல்லது. அதுவே இந்த நிகழ்ச்சிக்கு நாம் செலவிடும் நேரத்திற்கான மதிப்பு. வெறும் வம்பாக மட்டும் பார்த்து முடித்தால் இழப்பு நமக்கே.

உண்மையில் வனிதா போன்ற பட்டாசுகளை கையாள்வது எளிது. சற்று பொறுமையும் சாதுர்யமும் நகைச்சுவைத்தன்மையும் இருந்தால் போதும். பிக்பாஸ் விளையாட்டு என்பதே ஒருவரின் சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான். ஒரு புதிய சூழலில் புதிய நபர்களுக்கு இடையே ஒருவர் எவ்வாறு தகவமைத்துக் கொள்கிறார் என்பதுதான் இதன் அடிப்படை. ஆனால் அந்த விஷயத்தை மீராவால் திறம்பட செய்ய முடியவில்லை.

தான் நேர்மையாக இருப்பதாக கருதிக் கொண்டு அனைத்திலும் சற்று சண்டித்தனம் செய்கிறார் என்றே சொல்ல வேண்டும். தன்னை யாரும் அதிகாரம் செய்ய முடியாது என்று அவர் கருதுவது சரிதான். ஆனால் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் போது அதன் நெளிவு சுளிவுகளுக்கேற்ப தானும் சற்று மாற வேண்டும். ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு சூழலை எதிர்ப்பது, அல்லது தன் தரப்பை நிதானமாக தலைமையிடம் சுட்டிக் காட்டுவது சரியாக இருக்கும்.

**

பெண்கள் இப்படி ஒருபக்கம் கன்னாபின்னாவென்று அடித்துக் கொண்டிருக்க, ஆண்கள் மிக கூலாக இருந்தார்கள். மீரா சொன்ன வேலையை சாண்டி எளிதாக செய்து முடித்தார். தர்ஷன் மீராவிற்கு உண்மையை எடுத்துச் சொல்லி  சமாதானம் செய்தார். சேரன் மிகச் சிறப்பான முறையில் பஞ்சாயத்தை நிகழ்த்தினார்.

மட்டுமல்ல.. இந்தச் சர்ச்சையை வைத்து இறுதியில் சாண்டி தலைமையில்  ஒரு கானா பாட்டாகவும் பாடி முடித்தார்கள். இந்த வீட்டை விட்டு வெளியே செல்வதற்குள் மோகன் வைத்யா, கர்நாடக சங்கீதத்தை மறந்து விடுவார் என்றும் சாண்டியே அதற்கு காரணமாக இருப்பார் என்றும் யூகிக்க முடிகிறது.

இன்றும் நாளையும் பெரிய நாட்டாமை வரும் நாள். அவர் வந்து என்னென்ன பொங்கலை கிளறப் போகிறாரோ?! பொறுத்திருந்து பார்த்து நாமும் கிளறுவோம்.suresh kannan

2 comments:

Lakshmi Chockalingam said...

""""" பிக்பாஸ் வீடு என்பது கண்ணாடி மாதிரிதான். நம் வீடுகளில் அன்றாடம் நிகழும் சமாச்சாரம்தான் இது. சரவெடி மாதிரி ஒரு பெரிய சண்டை நிகழ்ந்து முடிந்திருக்கும். ஆனால் அதற்கான காரணம் என்ன என்பதை நிதானமாக யோசித்துப் பார்த்தால் மிக அற்பமானதாக இருந்திருக்கும். அதை ஊதி ஊதி பெருக்கி விட்டிருப்பார்கள். எனவே இதில் வரும் பாத்திரங்களை விமர்சிப்பதை விடவும் இந்தச் சம்பவங்களின் மூலம் நம்மையும் சுயபரிசீலனை செய்து கொள்வதே நல்லது. அதுவே இந்த நிகழ்ச்சிக்கு நாம் செலவிடும் நேரத்திற்கான மதிப்பு. வெறும் வம்பாக மட்டும் பார்த்து முடித்தால் இழப்பு நமக்கே. """"


Very true .

என்னதான் கேள்வி , உங்கள் வாழ்க்கையில் நடந்த துயரம் என்று இருந்தாலும் , ரொம்ப personal ஆக இல்லாமல் , கண்ணீர் சிந்தாமல் சம்பவங்களை சொல்லாம் . எல்லோர் வாழ்விலும் துயரங்கள் , சந்தோசங்கள் உள்ளது .இதனால் மேலும் உறவுகளை இழக்க நேரிடும் " புத்தர் ஒரு பெண்ணிடம் சொன்னார் " எவர் வீட்டில் சாவு இல்லையோ , அங்கிருந்து கடுகு வங்கி வா என்று " Don't wash dirty linen in public .

Gopi Chakrabani said...

//‘நான் சொல்லிவிட்டேன். இது கேப்டனின் கட்டளை. என் கட்டளையே சாசனம்’ என்று ராஜமாதாவாக மாறி வனிதா உரத்த குரலில் ஆணையிட “நீங்கள் செய்வது தவறு அம்மா” என்று அமரேந்திர பாகுபலியாக மாறினார் மீரா.//

இது போன்ற காட்சியமைப்பினை உங்கள் கற்பனை ஏற்ப மாற்றி எங்கள் வயிறுகளை புண்ணாக்குவதே உங்கள் வேலையா போச்சு...