Friday, June 28, 2019

பிக்பாஸ் சீஸன்3 – நாள் 4 – “சோகங்களைக் கொண்டாடாதீர்கள்”



பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் நாளிலேயே சலிப்புத் தட்ட ஆரம்பித்து விட்டது. அதற்கு முக்கியமான காரணம் இந்த ‘அழுகாச்சி’ டாஸ்க்தான்.

‘நீங்கள் இதுவரை வெளியில் சொல்லாத ரகசியம் என்ன?’ என்பது போன்றவற்றையெல்லாம் இந்தப் பகுதியில் கேட்கிறார்கள். அதுவரை சொல்லாத ரகசியம் என்றால் அது மிக முக்கியமானதாக, அந்தரங்கமானதாகத்தான் இருக்கும். அதை ஏன் பொதுநிகழ்ச்சியில், இப்போதுதான் அறிமுகமானவர்களின் முன்னால் சொல்ல வேண்டும்? இதுவே செயற்கையாகவும் போலித்தனமாகவும் இருக்கிறது. இதன் பின்னால்தான் ரியாலிட்டி ஷோக்களின் பிரம்மாண்ட வணிகமும் இருக்கிறது.

சற்று யோசியுங்கள். நாம் மிக முக்கியமான விஷயங்களை எங்கே எப்போது பகிர்ந்து கொள்வோம்? பல வருடங்கள் பழகிய மிக நெருங்கிய நண்பரிடம், நமது பரிபூர்ண நம்பிக்கையைப் பெற்றவரிடம் ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில்தான் பகிர்ந்து கொள்வோம். இல்லையா? ஒரு பூ மலர்வது மாதிரி இந்தத் தருணங்கள் இயல்பாக மலர வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது? ‘ம்.. வரிசையாக வந்து மூக்கைச் சிந்துங்கள்’ என்று யாரோ உத்தரவுகளைத் தருகிறார்கள். இது என்ன கட்டணக் கழிப்பிடமா? வரிசையாக வந்து உபாதையைத் தணித்துக் கொண்டு போக?

மகிழ்ச்சி, கொண்டாட்டம், சந்தோஷம் போன்ற நேர்மறையான விஷயங்கள்தான் ஒரு பொதுவெளியில் பரவ வேண்டும். அதில்தான் உண்மையும் இருக்கும். ‘நகைச்சுவையான விஷயத்தைப் பகிர்ந்து கொள். எல்லோரும் சிரிப்பார்கள். உன் துயரத்தைப் பகிர்ந்து கொள். நீ மட்டுமே அழுது கொண்டிருப்பாய்’ என்றொரு மேற்கோள் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் மற்றவர்களின் துயரத்தைக் கேட்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை. இது போன்ற சமயங்களில் அவர்கள் மற்றவர்களுக்காக அழுவதில்லை. தன்னுடைய துயரங்களை அவற்றில் இணைத்துக் கொண்டுதான் கண்கலங்குகிறார்கள். 

அதிலும் இது போன்ற ‘அழுகாச்சி’ விஷயங்கள் எதிர்மறையான அதிர்வலையை விரைவில் பரப்பி விடும். தனது துக்கத்தை மற்றவர்களிடம் பகிரும் போது கிடைக்கும் அனுதாபம், அதன் மூலம் கிடைக்கும் கவனஈர்ப்பு , தலை தடவப்படும் சுகம் ஆகிய சந்தோஷங்களினால் சிலர் இதற்கு அடிமையாகி விடுவார்கள். ‘மஸோக்கிஸ்டுகளையே’  (masochistic) இது உருவாக்கும்.

சிலர் இந்த டாஸ்க்கில், ஒருவர் சோகத்தை சொல்லத் துவங்கும் முன்பே அதற்கு தயாராக கர்ச்சீப்பை எடுத்துக் கொண்டு கண்கலங்கத் துவங்கியதை கவனிக்கலாம். அதிலும் பாத்திமா பாபுவின் எக்ஸ்பிரஷன்கள் இரண்டு, மூன்று சிவாஜி கணேசன்களையே தாண்டி விட்டது.

**

சரி, இது போன்ற துயர அனுபவங்களினால் மற்றவர்களுக்கு உபயோகம் இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது.  மற்றவர்களின் கொடுமையான அனுபவங்களைக் கேட்கும் போது நாம் எத்தனை ஆசிர்வசிக்கப்பட்டிருக்கிறோம் என்கிற உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம்மிடமுள்ள சிறிய பிரச்சினைகளையே எத்தனை பூதாகரமாக கற்பனை செய்து வைத்திருக்கிறோம் என்பதும் உறைக்கிறது. குறிப்பாக தர்ஷன் விவரித்த அனுபவம் என்பது போர்ச்சூழலில் வளர்ந்தவர்களால்தான் அதன் துயரத்தை சரியாக உணர முடியும். மற்றவர்களால் யூகிக்க மட்டுமே முடியும். அதன் உண்மையான வலி நமக்குத் தெரியாது.


இன்னொன்று, பெரும்பாலானவர்கள் விவரித்த சோகக் கதைகளை நன்கு கவனியுங்கள். கீழ்மைகளில் இறங்குபவர்கள் பெரும்பாலும் ஆண்களாக, குடும்பத்தலைவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் கீழ்மைகளால் ஒரு குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியும், வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

ஒரு குடும்பத்தின் ஆணிவேராக குடும்பத்தலைவியே இருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. தந்தை இல்லாவிட்டாலும் கூட ஒரு குடும்பம் எப்படியோ தட்டுத்தடுமாறி பின்பு தன்னை நிலைநிறுத்திக் கொண்டு முன்னேறி விடும். ஆனால் தாய் இல்லாத குடும்பம் மிகுந்த அலைக்கழிப்பில் மிதக்க நேரிடும். ஆணாதிக்க மனோபாவமும் அது சார்ந்த அதிகார மமதையும் எத்தனையோ குடும்பங்களை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது , குடும்ப உறுப்பினர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது என்பதையே இந்தக் கதைகளின் மூலமாக அறிகிறோம்.

இதில் இளம் ஆண்களுக்கு, சிறுவர்களுக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. நாம் ஆதிகாலத்தில் தாய்வழிச்சமூகமாகத்தான் இருந்தோம் என்று மனித வரலாறு சொல்கிறது. தன் உடல்பலத்தால் பின்பு ஆண் சமூகம் அதைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் எத்தனை துள்ளினாலும் ஒரு பெண்ணின் மனோபலத்தை ஓர் ஆணினால் எளிதில் உடைத்து விடவோ அடைந்து விடவோ முடியாது. வெட்ட, வெட்ட துளிர்த்துக் கொண்டேயிருக்கும் பெண் தான் ஆதாரமான சக்தி என்பது வருங்கால ஆண் குழந்தைகளின் பிரக்ஞையிலாவது வலுவாக பதிய வைக்கப்பட வேண்டும்.

**

மோகன் வைத்யா தன் மீது ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறார் என்று சாண்டி வருந்திக் கொண்டிருந்தார். சாண்டியின் குறும்புகள் சமயங்களில் ரசிக்கத்தக்கவையாக இருந்தாலும் பல சமயங்களில் எல்லை மீறுகின்றன. அவருடைய சமவயது நபர்களிடம் இது சரி. ஆனால் வயதில் மூத்தவர்களுடன் ஓர் எல்லையோடு நிற்பதுதான் முறையானது. சாண்டியும், சரவணனும் அடித்த கமெண்ட்டுகள் மோகன் வைத்யாவை ஏதோ ஒரு வகையில் புண்படுத்தியிருப்பதை அறிய முடிகிறது.

நாற்பது அல்லது ஐம்பது வயதுகளைத் தாண்டியவர்களின் மனோநிலை விநோதமானது. இழந்து கொண்டிருக்கும் இளமை என்பது அவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கும். மனது அந்த இழப்பை எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இன்னமும் தாங்கள் இளமையாகத்தான் இருக்கிறோம் என்கிற பிடிவாத கற்பனையுடன் அதை வெளியுலகத்திற்கு பறைசாற்ற பல கோணங்கித்தனங்களை முயற்சிப்பார்கள்.

அவற்றில் ஒன்று இளைஞர்களுடன் பழகுவது. இது நல்ல விஷயம்தான். மனதை இளமையாக வைத்துக் கொள்ளும் ஒரு வழிதான். ஆனால் எந்த எல்லை வரை அவர்களை அனுமதிப்பது என்கிற கறார்தனம் இருக்க வேண்டும்.  இளைஞர்களுடன் இணைந்து குறும்புகளில் ஒரு பக்கம் ஈடுபட்டாலும், இன்னொரு பக்கம் பெரியவர்களுக்கான மரியாதையையும் 'பெரிசுகளின்' மனம் எதிர்பார்க்கும். பழகும் இளைஞர்கள் எங்காவது எல்லை மீறினால் அவர்களின் மனம் சுணங்கிப் போய் விடும்.

சேரன் இந்த எல்லையைச் சரியாக பின்பற்றுகிறார் என்று தோன்றுகிறது. அவரிடம் சாண்டி உட்பட எவரும் எந்தக்  குறும்பும் வைத்துக் கொள்வதில்லை. இயக்குநர் என்கிற பிம்பமும் அவருக்கு உதவுகிறது. மாறாக மோகன் வைத்யா திரைப்படங்களிலும் கோழைத்தனமான பாத்திரங்களையே செய்திருப்பதாலும் வெளித் தோற்றத்திற்கு 'அம்மாஞ்சி'யாக இருப்பதாலும் கேலிக்கு எளிதில் ஆளாகிறார் என்று நினைக்கிறேன்.

எப்படியோ மோகனுக்கும் சாண்டிக்கும் இடையே இருந்த மனவருத்தம் ‘கக்கூஸினுள்’ காம்பமைஸ் ஆனது சந்தோஷம்.

**

மீரா ராம்ப் வாக் கற்றுத்தந்த போதும் சரி, மின்தடை ஏற்பட்ட போதும் சரி, அபிராமி செய்த அலப்பறைகள் நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தின. பிக்பாஸ் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கும் பட்டியலில் இப்போதைக்கு அபிராமிதான் முதலிடத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் – அவர் தன்னுடைய துயரத்தைப் பகிர்ந்த போது அவரின் மீதான வெறுப்பும் எரிச்சலும் சற்று தணிந்தது உண்மை. கண்கலங்கிய மீராவிற்கு இவர் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தந்ததும் நல்ல மாற்றம். ஒருவருடான பகையை நீறு பூத்த நெருப்பு மாதிரி பல வருடங்களுக்கு தக்க வைத்துக் கொள்வதை விடவும் எதிராளியை அமர வைத்து வெளிப்படையாக சில நிமிடங்கள் பேசினாலே பல விரோதங்கள் எளிதில் மறைந்து விடும் என்பது அவர்களுக்கு இடையிலான உரையாடலில் தெரிந்தது.

மீராவைப் பற்றி பல சர்ச்சைகளும் புகார்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அவையெல்லாம் வெளியில்தான். இந்த விளையாட்டில் அவருடைய பங்கேற்பு எப்படி இருக்கிறது என்பதையே பார்க்க வேண்டும். அந்த வகையில் மீரா இதுவரை சரியாக செயல்பட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் எந்த நேரமும் அவரிடமுள்ள ‘சந்திரமுகி’ வெளிப்பட்டு அது நிகழ்ச்சியின் டிஆர்பிக்கு உதவும் என்றே தோன்றுகிறது. இல்லையென்றாலும் பிக்பாஸ் அதற்கு  எப்படியாவது வழி ஏற்படுத்தி விடுவார்.

‘சூப்பர் மாடல் ஆவறதெல்லாம் அப்படியொன்னும் கஷ்டமான விஷயம் இல்லையே’ என்று மீராவைச் சீண்டிக் கொண்டிருந்தார் ரேஷ்மா.

**

இயக்குநர் சேரன் தன்னால் மறக்க முடியாத நாளைப் பற்றி பகிர்ந்து கொண்ட முறை மிக இயல்பாக இருந்தது. அவர் நாயகனாக நடித்த திரைப்படங்களில் செய்ததைப் போல எங்கே முகத்தை மூடிக் கொண்டு அழுது விடுவாரோ என்று நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக அது நிகழவில்லை. ஆணாதிக்கம் நிரம்பியவர்களின் இடையில் சேரனைப் போன்ற கண்ணியமான, கம்பீரமான ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதைப் போலவே சரவணன் பகிர்ந்து கொண்ட ‘ரகசியமும்’ உருக்கமாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு சிற்றிதழில் இந்தச் சிறுகதையை சில வருடங்களுக்கு முன்பு வாசித்த நினைவு மங்கலாக இருக்கிறது.

அவன் – இரண்டொரு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவன். பல வருடங்கள் சிறுமைப்பட்டு மெல்ல மெல்ல நகர்ந்து முட்டி மோதி அடைந்த நாற்காலி அது. ஆனால் அந்த தங்க நாற்காலியின் மஞ்சள் வெளிச்சம் விரைவிலேயே மறைந்தது. ஏறின வேகத்திலேயே கீழே விழுந்தான்.

அதெல்லாம் ஒரு காலம். இப்போது அவன் ஒரு சராசரி. ஆனால் பிரச்சினை என்னவெனில் அவனால் சராசரியாக தன்னை உணர முடியவில்லை. அவன் எப்போதோ அடைந்த சிறிய புகழ் இப்போதும் அவன் மீது பெரும் சுமையாக அமர்ந்திருக்கிறது.

எங்காவது வெளியில் போனால் “நீங்கதானே.. அது ஏன் சார்.. நடந்து போறீங்க?” என்று யாராவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி வாடகை வீட்டுக்குள்ளேயே பெரிதும் அடைந்திருக்கிறான். அது அவனது கற்பனை மட்டுமே. அன்றாட செலவுகளுக்கே சிரமப்படும் ஒரு அவல வாழ்க்கை. ஆனால் ஊமையின் கனவு போல அவனால் வெளியில் சொல்லவும் முடியாது.

இந்த நிலையில் – அவன் எப்போதோ நடித்த திரைப்படம் ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தகவல் கிடைக்கிறது. ஒரு சிறிய மகிழ்ச்சி அவனுக்குள் எட்டிப் பார்க்கிறது. பாலைவனத்தில் செய்த தூறல் போல. ஆனால் அவனிடம் தொலைக்காட்சிப் பெட்டியில்லை. தான் நடித்த திரைப்படத்தை தானே பார்க்கும் ஆவல் உண்டாகிறது. ஆனால் எங்கு செல்வது.. இந்தத் தவிப்புதான் அந்தச் சிறுகதையின் மையம்.

இந்தச் சிறுகதையை அப்போது படிக்கும் போது நடிகர் ராமராஜனின் நினைவு எனக்குள் வந்து போனது. இப்போது சரவணனுடன் அதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் சரவணனாவது பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ராமராஜனால் தனது கீரிடத்தை கீழே இறக்கி வைக்கவே முடியவில்லை.

காசு சம்பாதிப்பது கூட பெரிதல்ல, அதை வீண் ஆடம்பரத்திலும் பணம் சேரும் திமிரிலும் இழந்து விடாமல் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்வது எத்தனை முக்கியமானது என்பது சரவணனின் அனுபவம் மூலம் நமக்கு கிடைத்த பாடம்.

**

இப்போது என்னுடைய முக்கியமான கவலையெல்லாம் என்னவென்றால், இந்த ‘‘அழுகாச்சி’டாஸ்க்கில் லாஸ்லியாவின் டர்ன் வரும் போது எத்தனை வாலிப வயோதிகர்களின் இதயம் வெடிக்கப் போகிறதோ, தெரியவில்லை. பாவம், பெரும்பாலும் பி.பி., சுகர் பேஷண்ட்டுகள் வேறு





suresh kannan

6 comments:

Gopi Chakrabani said...

//இப்போது என்னுடைய கவலையெல்லாம் என்னவென்றால், இந்த ‘‘அழுகாச்சி’டாஸ்க்கில் லாஸ்லியாவின் டர்ன் வரும் போது எத்தனை வாலிப வயோதிகர்களின் இதயம் வெடிக்கப் போகிறதோ, தெரியவில்லை.//

Final punch அருமை

Lakshmi Chockalingam said...

Super sir . Without your article Watching Bigg boss is not fulfilled . Why late today ? Most of the days your article reflects my views .

அழுகாச்சி டாஸ்க் , இரண்டு நாளாக இப்படி தான் நினைத்துக் கொண்டே இருந்தேன் .

ஏன் வெற்றி பெற்ற கதையை சொல்லும் டாஸ்க் இல்லை ? ஆரம்பிக்கும் முன்பே சிலர் கண்களில் கண்ணீர் பார்த்தேன் .

rajureva said...

இவ்வளவு அழுக்காட்சியிலும் தங்கள் கட்டுரை பார்த்து சிரித்து விட்டேன்

உதாரணமாக "பாத்திமா பாபுவின் எக்ஸ்பிரஷன்கள் இரண்டு, மூன்று சிவாஜி கணேசன்களையே தாண்டி விட்டது.

malar said...

எல்லாரையும் ஒவ்வொரு சம்பவம் சொல்ல வைத்திருந்தா ஒரே நாளில் முடிஞ்சிருக்கும் .
சின்னக்குழந்தைங்க பார்த்தீங்கன்னா ஒன்று அழுததும் கூடவே செயின் ரியாக்சன் மாதிரி எல்லா குழந்தையும் அழும் .இந்த டாஸ்க் எப்போ முடியும்னு இருக்கு இன்னும் பாதி கண்டெஸ்டன்ஸ் இருக்கங்களேன்னு நினைக்கும்போது மனது பகீருந்து .

லொஸ்லியா தனது dialect ல மெதுவா கொஞ்சி பேசி டாஸ்க் முடியறதுக்குள்ள ///வாலிப வயோதிகர்களின் இதயம் வெடிக்கப் போகிறதோ, தெரியவில்லை. பாவம், பெரும்பாலும் பி.பி., சுகர் பேஷண்ட்டுகள் வேறு//
மோகன் வைத்யா அவர்கள் பற்றி சொன்னது மிகவும் சரியே .
வயதான குழந்தைகள் எதற்கு உணர்ச்சிவசப்படறாங்க கோபப்படறாங்க என்று ஜட்ஜ் செய்வது மிகவும் கடினம் .


Vani Nathan said...

It is very obvious many contestants want to keep them self away from the fights which is a good sign. I hope they bring some task related to debates on different topics as I hear Losliya has won many awards in debates in her school days. That would be something interesting to watch as I would love to hear from Seran too about different issues. Seran and those foreign contestants are mostly keeping quiet.

Vani Nathan said...

It is very obvious many contestants want to keep them self away from the fights which is a good sign. I hope they bring some task related to debates on different topics as I hear Losliya has won many awards in debates in her school days. That would be something interesting to watch as I would love to hear from Seran too about different issues. Seran and those foreign contestants are mostly keeping quiet.