Monday, January 28, 2019

தமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா?





ஆர். நடராஜ முதலியார் உருவாக்கிய 'கீசகவதம்'  என்கிற மெளனத் திரைப்படத்தோடு தமிழ் சினிமா உதயமாகியதாக வரலாறு சொல்கிறது. இது 1916-ல் வெளியானது என்கிற தகவல் பரவலாக  நம்பப்பட்டாலும் இது குறித்து திரைப்பட ஆய்வாளர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. 1917-ல் வெளியானதாக சிலரும், 1918-ல் என்று வேறு சிலரும் சொல்கிறார்கள். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு எது என்பதிலேயே குழப்பம். வரலாற்றை ஆவணப்படுத்துதலில் உள்ள அலட்சியமும் அறியாமையும் தமிழ் சமூக மனோபாவத்தின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிறது. தமிழில் வெளியான மெளனத் திரைப்படங்களின் ஒரு பிரதி கூட நம்மிடமில்லை என்பது பரிதாபம்.

இந்த அவலம் ஒருபுறமிருக்கட்டும், அது எந்த வகை திரைக்கதையாக இருந்தாலும், திரைப்படத்தின் நடுவே 'பாடல்கள்' எனும் சமாச்சாரம் இடம்பெறும் வழக்கமென்பது இந்தியச் சினிமாவிற்கேயுரியது. தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. சமகாலம் வரையிலும் கூட தமிழ் சினிமாவோடு பின்னிப் பிணைந்திருக்கும் 'பாடல்கள்' என்பது  தேவையா, அல்லவா என்கிற விவாதம் நெடுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு பாடல்கள், அவசியமா, அநாவசியமா?

அவசியமா என்கிற கேள்வி  எழும் போதே அதன் மீதான எதிர்மறை அம்சங்களும் உள்ளன என்கிற வகையில் அந்தக் கேள்வியிலேயே ஒரு பகுதி விடையும் உள்ளது.

தமிழ் சினிமாவோடும் பார்வையாளர்களோடும் இணைந்திருக்கும் திரையிசைப் பாடல்கள் பற்றிய விவரங்களை அதன் சுருக்கமான வரலாற்றுப் பின்னணியோடு பார்ப்போம்.

***

பன்னெடுங்காலமாகவே தமிழ் கலாசாரத்துடன் இசை என்பது பின்னிப் பிணைந்தது. இயல், இசை, நாடகம் என்பது தமிழ் மரபு. சங்க காலம் முதல் பக்திக் காலம் வரை தமிழிசை செழித்திருந்தது. சில வரலாற்றுக் காரணங்களால் இடையில் சில தொய்வுகள் ஏற்பட்டன.  சமணர்கள் காலத்திலும் டெல்லி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு தமிழகத்தை ஆக்ரமித்த காலக்கட்டங்களிலும் தமிழிசை பெரிதும் தேக்கம் அடைந்தது. மாறாக கர்நாடக இசை இங்கு பிரபலமடைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான தமிழிசை இயக்கத்தின் மூலமாக மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூல காரணமாக இருந்தவர் ஆபிரகாம் பண்டிதர். தமிழிசையின் தொன்மையை இதர இசைகளுடன் ஒப்பிட்டு பலவித ஆய்வுகளின் மூலம்  நிறுவினார்.

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் இறுதியில் சலனப்படங்களின் அறிமுகம் சென்னையில் நிகழ்ந்தது. பதிவாக்கப்பட்ட காட்சிகளின் குறும்படங்கள் சென்னை, விக்டோரியா ஹாலில் முதன்முறையாக திரையிடப்பட்டன. சாமிக்கண்ணு வின்சென்ட் குறும்படங்களை ஊர் ஊராக கொண்டு சென்று திரையிட்டார்.  இது போன்ற சில பல நிகழ்வுகளுக்குப் பிறகு தமிழில் மெளனப்படங்களின் காலம் துவங்கியது. துவக்கத்தில் குறிப்பிட்டபடி 1916-ல் உருவான 'கீசகவதம்' தமிழின் முதல் மெளனப்படம். அப்போது பாடல்களுக்கான அவசியம் ஏற்படவில்லை. பாத்திரங்கள் பேசும் வசனங்கள் காட்சிகளின் இடையே எழுத்தில் காண்பிக்கப்பட்டன. கல்வியறிவு பரவலாக இல்லாத காலக்கட்டம் என்பதால் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து  வசனங்களை வாசித்துக் காட்டுபவர்கள் இருந்தார்கள்.

1931-ல் இருந்து தமிழ் சினிமா  பேசத் துவங்கியது. 'காளிதாஸ்' தமிழின் முதல் முழுநீள பேசும் படம். ஆனால் அது தமிழ் படமா, அல்லவா என்பதில் சர்ச்சைகள் உள்ளன. கதாநாயகியான டி.பி.ராஜலட்சுமி, தமிழில் பேசும் போது நாயகன் தெலுங்கில் பதிலளிப்பான். இந்தி வசனங்களும் இருந்தன. எழுத்தாளர் கல்கி இத்திரைப்படத்தைப் பற்றி தன்னுடைய பிரத்யேகமான பாணியில் கிண்டலடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் சுமார் ஐம்பது பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றிருப்பது அந்தக் காலக்கட்டத்தின் வழக்கமாகவும் சிறப்பான அம்சமாகவும் கருதப்பட்டது. அதிக பாடல்கள் கொண்ட தமிழ் சினிமா ஸ்ரீ கிருஷ்ண லீலா (1934) . இதில் 62 பாடல்கள் இருந்தன.

நுட்பம் வளராத இந்தக் காலக்கட்டத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் போதே ஒலியையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே  இசை ஞானம் உள்ளவராகவும் சிறந்த பாடகராகவும் இருப்பது கதாநாயகனின் அடிப்படையான தகுதியாக இருந்தது. எம்.கே.  தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் வெற்றி பெற்ற கதாநாயகர்களாகவும் சிறந்த பாடகர்களாகவும் இருந்தனர். இவர்களது பாடல்களுக்காகவே திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. உயர் வர்க்கத்தினர் கர்நாடக இசையையும் கிராமப்புறத்தினர் நாட்டுப்புற இசையையும் ரசிக்கும் வழக்கத்திலிருந்த குறுக்குச் சுவரை கிராமஃபோன் என்கிற நுட்பம்  பெருமளவு பாதித்தது.  நாடகத்தின் பிரபலமான பாடல்கள் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்டு பரவலாக கிடைக்கத் துவங்கின. நாடகத்தில் இசைக்கலைஞர்களாக இருந்தவர்களே திரையிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட நிலை மாறி கர்நாடக இசையில் புகழ் பெற்றிருந்தவர்களும் திரையிசையை நோக்கி நகர ஆரம்பித்தனர். திரையின் மூலம் கிடைக்கும் புகழும் செல்வாக்கும் இதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

***

இந்தக் காலக்கட்டத்தின் பெரும்பான்மையான படங்கள், அப்போது புழக்கத்தில் இருந்த நாடக மரபையொட்டியே உருவாக்கப்பட்டன. கூத்து மற்றும் நாடக வடிவில் மக்களின் பிரபலமான பொழுதுபோக்காக இருந்த புராணக்கதைகளும் இதிகாசத்தின் கிளைக்கதைகளும் அப்படியே காட்சிகளாக பதிவாக்கப்பட்டன. காமிராவின் அசைவு பெரும்பான்மையாக இருக்காது. நுட்பம் வளராத காலக்கட்டத்தில் இந்த தன்னிச்சையான போக்கு அமைந்தது ஒருவகையில் இயல்புதான்.

ஆனால் காட்சி ஊடகத்தை அதற்கேற்ற சாத்தியங்களுடன் பயன்படுத்தக்கூடிய மனோபாவம் இன்னமும் கூட வளராமல் போனதற்கு இந்த அடிப்படையே ஒரு முக்கியமான  காரணமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் திரைக்கதையில் பாடல்கள் ஒரு கூடுதல் சுமையாகவும் தடையாகவும் இருப்பதற்கு  காரணம், இந்த பழமையான மரபை விட்டு இன்னமும் நம்மால் விலக முடியாததே.

இயல், இசை, நாடகம் என்று தமிழக கலையின் அனைத்துக் கூறுகளையும் சினிமா தனக்குள் ஸ்வீகரித்துக் கொண்டதைப் போலவே, சினிமாவிற்கான இசையும்  கர்நாடக, ஹிந்துஸ்தானி, நாட்டார் இசையின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டது. திரையிசைக்கென கலப்படமாக ஒரு பிரத்யேக பாணி உருவாகத் துவங்கியது. அரசியல் கட்சிகளும் தங்களின் வளர்ச்சிக்காக திரைஊடகத்தை பயன்படுத்திக் கொண்டன. விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியும் வெள்ளைக்காரர்களின் கொடுமையை விளக்கும் பாடல்கள்  இருந்தன. இந்தக் காலக்கட்டத்திற்குப்  பிறகு, சினிமாவின் புகழை அரசியல் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிற கண்டுபிடிப்பை  முதலில் நிகழ்த்தியது காங்கிரஸ் கட்சியே.

காங்கிரஸ் தலைவராக இருந்த சத்யமூர்த்தியின் வேண்டுதலின் பேரில் கே.பி.சுந்தராம்பாள் கட்சிக்கூட்டங்களில் பாடி மக்களைக் கவர்ந்தார். திரைப்பாடல்களிலும் இவரது புகழ் நீடித்தது. சினிமாவின் கவர்ச்சியை வலுவாக பயன்படுத்திக் கொண்ட இயக்கங்களில் திராவிட இயக்கம் முக்கியமானது. வசனங்களாகவும் பாடல்களாகவும் தங்கள் கொள்கைகளை வெகுசன மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இன்னொருபுறம் பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரம் போன்ற திரைக்கவிஞர்கள் பொதுவுடமைச் சிந்தனைகளை தம் பாடல்களில் இணைத்தார்கள்.

திரைக்கதைக்கு தொடர்பேயில்லாமல் திடீரென்று கதாநாயகன் அவன் சார்ந்திருக்கும் அரசியல் கொள்கை சார்ந்த பாடலைப்  பாடுவான். கதைக்கும் அந்தப் பாடலுக்கும் நேரடி தொடர்பே இருக்காது. ஆனால் இது முரணாக கருதப்படாமல், மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட முறையாக இருந்தது. இவ்வாறான வழக்கங்கள் சினிமாவின் உருவாக்கத்தை பெருமளவு பாதித்தன. ஒரு தமிழ் சினிமாவில் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு அம்சமாக பாடல்கள் இருந்ததால் இதற்கேற்ப திரைக்கதையை எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. இயல்பாகவும் தொடர்ச்சியான போக்கில் உருவாக்கப்பட  வேண்டிய திரைக்கதைகள், பாடல்களின் கட்டாயத்தினால் தடைக்கற்களை தாண்டிச் செல்லும் கட்டாயத்தைக் கொண்டிருந்தது. இந்த வழக்கம் இன்னமும் கூட பெரிதும் மாறவில்லை.

***


ஒரு சினிமாவை பொதுவாக   சட்டென்று எவ்வாறு நினைவுகூர்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். பெரும்பாலும் அதன் பாடல் ஒன்றின் மூலமாகத்தான் இருக்கும். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் ஒரு குறிப்பிட்ட பாடலை கேட்கும் போது தொடர்புள்ள திரைப்படத்தின் கதை, நடிகர்கள், சம்பவங்கள் முதற்கொண்டு பல விஷயங்கள், அந்தப் பாடலின் மூலமாக நினைவிற்கு வருகின்றன. அந்தளவிற்கு திரையிசையும் தமிழ் பார்வையாளனும் பின்னிப் பிணைந்துள்ளான். கலப்பின வடிவமாக உள்ள திரையிசை, சினிமாவின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது செவ்வியல் இசை உள்ளிட்ட இதர வகைமைகளின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள நடைமுறையைச் சிக்கலைக் கவனிக்க வேண்டும்.

கர்நாடக இசையும், நாட்டார் இசையும், விளிம்பு நிலை சமூகத்தின் இசையும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. திரையிசையின் பிரபலமும் கவனஈர்ப்பும் இதர இசை வடிவங்களின் பால் பொது ரசிகர்கள் திரும்பாதவாறு கட்டிப் போட்டுள்ளன. கிராமத்திலுள்ள எளிய மக்கள் கூட  கர்நாடக இசையை தேடி ரசிக்கும் காலக்கட்டமொன்று இருந்தது. புராண நாடகங்களும் கிராமபோன் இசைத் தட்டுக்களும் இந்த இசையை அவர்களிடம் கொண்டு சேர்த்தன. திரையிசையின் அசுரத்தனமான வளர்ச்சி இந்த மரபை ஒரு கட்டத்தில் துண்டித்துப் போட்டது. இசையின் பல வடிவங்கள் அதனதன் மரபு கலையாமல் மெல்ல வளர்ந்து சமூகத்தின் மையத்தில் இடம் பெறும் சூழலை திரையிசை கலைத்துப் போட்டது.


சினிமா என்பது  அடிப்படையில் இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய ஊடகம். இது பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் வடிவம் என்பதால் ஒருவரின் கச்சிதமான மேற்பார்வையில், தலைமையில் அமைந்தால்தான்  அது கோர்வையான வடிவமாக வெளிவரக்கூடிய சாத்தியம் அதிகம். இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் ஏறத்தாழ இல்லை எனலாம்.

சில குறிப்பிட்ட இயக்குநர்களைத் தவிர தமிழ் சினிமாவில் நடிகர்களின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது; இருக்கிறது. ஒரு திரைப்படத்தின் வணிகம் அவர்களைச் சுற்றி பிரதானமாக இயங்குவதால் சினிமா உருவாக்கத்தின் எல்லாத் துறையிலும் அவர்கள் மூக்கை நுழைத்தார்கள். அத்துறை சார்ந்த குறைந்த பட்ச அறிவோ, அனுபவமோ  அவர்களுக்கு இருக்கவேண்டுமென்று கட்டாயமில்லை. இயக்குநர்களின் கையில் இருக்க வேண்டிய சினிமா நடிகர்களின் கையில் சிக்குவது துரதிர்ஷ்டம். கதாநாயகர்கள் தங்களை உயர்த்திப் புகழும் வகையில் பாடல்களை உருவாக்கச் சொல்லும் விபத்துகள் அதிகரித்தன.  தங்களின் அரசியல் வளர்ச்சிக்காக இயக்கத்தின் கொள்கைகளை பாடல்களில் திணித்தார்கள். இம்மாதிரியான துரதிர்ஷ்டமான சூழலிலும் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் பிரகாசித்தார்கள் என்பது அவர்களின் திறமையைக் காட்டுகிறது. திரைக்கதை சீராக உருவாக வேண்டிய போக்கை இம்மாதிரியான சூழல்கள் பெருமளவு பாதித்தன.

இந்த வழக்கத்தை உடைத்து நடிகர்களின் கையில் இருந்த சினிமாவை இசையமைப்பாளரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்த பெருமை இளையராஜாவை சாரும். விளிம்புநிலை இசையாக இருந்த நாட்டார் இசையை சமூகத்தின் மையக் கலைவெளிக்குள் கொண்டு வந்தது அவரது முக்கியமான சாதனை. என்றாலும் கூட பாடல்களின் பங்களிப்பு திரைக்கதையை பாழ்படுத்தும் போக்கு பெரிதும் மாறவில்லை.இளையராஜாவின் புகைப்படம் இருந்தாலும் படத்தின் வணிகத்திற்கு உத்தரவாதம் என்பதால் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ராஜாவை மொய்த்தனர். நடிகர்களின் ஆதிக்கத்திற்கு பதிலாக இசையமைப்பாளர். மாற்றம் நிகழ்ந்தது இவ்வகையில் மட்டுமே.


ஒரு விநோதமான சம்பவத்தை இங்கு நினைவு கூர வேண்டும். பாடல்களுக்காக இளையராஜாவை பல இயக்குநர்கள் துரத்திக் கொண்டே இருந்ததால் அதிலிருந்து தப்பிக்க அவர் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதிக்கிறார். 'என்னிடம் வெவ்வேறு வகையிலான ஐந்து மெட்டுக்கள் இருக்கின்றன. அதற்கேற்ப எந்த இயக்குநர் திரைக்கதை எழுதுகிறாரோ, அவர்களுக்கு அந்த மெட்டுக்களை தருவேன்'. ஒரு இயக்குநர் இதை சவாலாக எடுத்துக் கொண்டு பாடல்களுக்கேற்ப திரைக்கதை எழுதி மெட்டுக்களை வாங்குகிறார். பாடல்கள் வெற்றி பெறுகின்றன. படமும் அமோகமாக வெற்றி பெறுகிறது. அது 'வைதேகி காத்திருந்தாள்'. 'நீதானே என் பொன் வசந்தம்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனே வெளியிட்ட தகவல் அது.

அதாவது, காலுக்கு ஏற்ப செருப்பு தைக்கப்படாமல், செருப்பிற்கேற்ப காலை வெட்டிக் கொள்ளும் சினிமா உருவாக்க முறை இதன் மூலம் நிரூபணமாகிறது.  அதையும் வெற்றி பெறச்செய்யும் நம் ரசனை ஒரு கேலிக்கூத்து. தமிழ்நாட்டின் சுவாசங்களுள் ஒன்றான சினிமா குறித்த ரசனை எத்தனை கீழ்மட்டத்தில் உள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

***

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறப்பம்சமாக பார்க்கப்பட்ட 'பாடல்கள்', இன்று கைவிட முடியாத சம்பிரதாயமாக தேய்ந்து கொண்டிருக்கிற வீழ்ச்சியைப்  பார்க்கிறோம். ஒரு சாதாரண திரைப்படத்திலேயே கூட பாடல்கள் சகிக்க முடியாததாக ஆகிக்கொண்டிருப்பது ஒரு பக்கம், சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில்,  சட்டென்று திணிக்கப்பட்ட பாடல் வரும் போது சுவையான விருந்தின் இடையே 'நறுக்'கென்று கல்லைக் கடித்து விட்ட வெறுப்பை பார்வையாளன் உணர்கிறான். இது போன்ற சமயங்களில் ஆண்கள் திரையரங்குகளில் அவசரம் அவசரமாக வெளியே போவதைப் பார்க்க முடிகிறது. இந்த வழக்கம் பலகாலமாக மாறவில்லை. பெண்களும் இது போன்ற சுதந்திரத்தை உணர முடிகிற காலத்தில் அவர்களும் இவ்வாறே வெளியேறுவார்களாக இருக்கும்.

காட்சி ஊடகத்தின் அடிப்படையான நுட்பமென்பது  மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்டது என்றாலும் திரையிசைப் பாடல்கள் என்பது இந்தியக் கலாசாரத்தின் பிரத்யேக அம்சம்தானே, இசை  கேட்டு வளரும் மரபுதானே நம்முடையது, திரைப்படங்கள் இந்தியப் பண்பாட்டிற்கென உள்ள வடிவத்தில் இருப்பதில் என்ன பிரச்சினை என்று சிலர் விவாதம் செய்கிறார்கள். ஒரு கோணத்தில் மட்டுமே இந்த விவாதம் சரி. ஒரு  திரைக்கதை பாடல்களை மிக அவசியமாக கோருகிறது, கதையின் போக்கு  அவ்வாறாக இருக்கிறது என்றால் அதில் பாடல்கள் இடம்பெறுவது ஒப்புக் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால்  சம்பிரதாயம் என்பதற்காகவே திரைக்கதையில் எப்படியாவது பாடல்களை திணிப்பது, அதற்கேற்ப திரைக்கதையை சிதைப்பது போன்றவையெல்லாம் எந்த வகையில் சரியாகும்? மட்டுமல்லாமல் திரையிசைப்பாடல்கள் நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாகவா உருவாக்கப்படுகின்றன? அது  கிராமப்புறத்தில் அமைந்த  களமாக இருந்தாலும் ஒரு  ஜோடிக்கு காதல் உதயமாகி விட்டால் அவர்கள் அடுத்தக் காட்சியிலேயே வெளிநாட்டின் பின்னணியில் கோணங்கித்தனமான குதியாட்டங்களை நடனம் என்கிற பெயரில் செய்கின்றனர். இதுவா இந்தியக் கலாசாரம்?

***

பாடல்கள் என்பது வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு விளம்பரமாக கருதப்பட்ட காலம் இருந்தது; இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பம் பல்வேறு விதமாக விரிவடைந்திருக்கும் காலக்கட்டத்தில் விளம்பரம் செய்ய பல வழிகள் உள்ளன. பாடல்களுக்கென இருந்த வணிகச்சந்தையும் இன்றில்லை. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வெளியிட்ட சில தினங்களில் லட்சக்கணக்கான பிரதிகள் விற்று சாதனை புரிந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. இணையம் மிகப்பெரிய கள்ளச்சந்தையாக உருமாறி அந்தக் கதவையும் மூடியிருக்கிறது.

திரையிசைப் பாடல்கள் மறைந்து விட்டால் சராசரி நபர்கள் இசை கேட்பதற்கான சந்தர்ப்பங்களும் குறைந்து விடுமே என்று தோன்றலாம். இதுவொரு மாயை மட்டுமே. அந்தந்த வகைமைகளில் தனிநபர்களின் இசைத் தொகுப்புகள் உருவாவதற்கான சந்தர்ப்பங்கள் பெருகும். பல்வேறு புதிய திறமைகளும் பரிசோதனைகளும் வெளிப்படுகின்ற சூழல் அமையும். திரைக்கதையின் வார்ப்பிற்குள் அடங்க வேண்டிய செயற்கையான கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமான கற்பனையில் சிதைக்கப்படாத இசை கேட்கக்கூடிய  வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலைநாடுகளில் இவ்வாறான வழக்கம்தான் நடைமுறையில் இருக்கிறது.

திரையிசைப்பாடல்கள் இருக்கும் காலக்கட்டத்தில், தனிப்பட்ட இசைத்  தொகுப்புகளில் என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். அது ஆன்மீகப் பாடலாக இருந்தாலும் சரி. அரசியல் கொள்கை சார்ந்த பாடலாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் புகழ்பெற்ற திரையிசைப்பாடல்களின் நகல்களாகவே இருக்கின்றன. இது போன்ற அபத்தங்கள் மறையக்கூடிய நிலைமை உருவாகும்.

சினிமாவும் பாடல்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றையொன்று நிராகரித்து பிரிந்து விட வேண்டுமென்பதில்லை. பொருத்தமான தருணங்களில் பயன்படுத்தப்படுவதின் மூலம் இதையும் சுவாரசியமான உத்தியாக மாற்றலாம். பாடலுக்கு நடிப்பவர்கள் வாயசைத்து பாடும் வழக்கத்தை மாற்றி, பாடல் பின்னணியில் ஒலிக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகளை இணைத்து அதை 'மாண்டேஜ்' பாணியில் சிறப்பாக உபயோகிக்கத் துவங்கிய தமிழ் இயக்குநர் பாலுமகேந்திரா. பின்னர் இந்தப் பாணியை பல இயக்குநர்கள் பின்பற்றினார்கள்.

ஹாலிவுட் திரைப்படங்கள், உலக சினிமாக்கள் போன்றவற்றின் பரிச்சயம் மிகுந்து வரும் காலக்கட்டம் இது. பாடல்கள் அல்லாத, கச்சிதமான திரைக்கதைக்குள், நேரத்திற்குள் உருவாக்கப்படும் அம்மாதிரியான திரைப்படங்கள் சுவாரசியமாக இருப்பதை சமகால பார்வையாளர்கள் உணர்கிறார்கள். இதன் பிரதிபலிப்பு இந்தியச் சினிமாக்களிலும் எதிரொலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். பாடல்களைத் திணிக்கும் போக்கை கைவிட்டு விட்டு திரைக்கதைக்கு பிரதானமாக கவனம் செலுத்த வேண்டிய காலக்கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சினிமா இயக்குநர்கள் உணர வேண்டும். நூற்றாண்டை நெருங்கி விட்ட தமிழ் சினிமா புதிய போக்கிற்கு ஏற்ப தன்னை சுயபரிசீலனையோடு புதுப்பித்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.. 


(படச்சுருள் - ஜனவரி 2017 இதழில் பிரசுரமானது)


suresh kannan

No comments: