புத்தக கண்காட்சி சென்று திரும்பியவுடன் வாங்கின புத்தகங்களை தரையில் பரப்பி அழகு பார்த்து விட்டு சந்தோஷ அலுப்புடன் உறங்கச் செல்வது ஒவ்வொரு வருடத்திலும் வழக்கம். கண்காட்சி என்றல்ல, பழைய புத்தகக்கடைகளில் வாங்கி வரும் புத்தகங்களுக்கும் இதே சடங்குதான்.
ஆனால் நேற்று உண்மையான அலுப்பாக இருந்ததால் தற்செயலாக கையில் கிடைக்கும் முதல் புத்தகத்தின் முன்னுரையை வாசித்து விட்டு உறங்கச் செல்லலாம் என்று நினைத்து கையில் எடுத்தேன். அப்போது சுமார் பதினோரு மணி. ஆனால் உறங்கச் செல்வதற்கு இரண்டு மணியாகி விட்டது. அந்தளவிற்கு அந்தப் புத்தகம் தன்னிச்சையாக என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.
**
கலைஞர் என்கிற கருணாநிதி – பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வாசந்தி எழுதிய நூல். (காலச்சுவடு பதிப்பகம்).
ஓர் அரசியல் கட்சியின் தலைவர் அல்லது அந்தக் கட்சியின் தீவிரமான ஆதரவாளர், அனுதாபி போன்றவர்கள் எழுதும் நூல்களுக்கும் ‘வெளியில்’ நின்று பார்த்து எழுதுபவர்களின் நூல்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முன்னதில் கட்சி விசுவாசமும், வெளிப்படையான மனச்சாய்வும், மழுப்பல்களும் இருக்கும். மாறாக அந்த அமைப்பை வெளியில் நின்று கவனிக்கிறவர்களின் பதிவுகளில் சமநிலைத்தன்மையும் அது குறித்தான கவனமும் இருக்கும்.
வாசந்தியின் நூல் இரண்டாவது வகை. சிறுவன் கருணாநிதி, சாதியப்பாகுபாட்டின் அவலத்தை நடைமுறையில் உணரும் ஒரு கசப்பான சம்பவத்தோடு நூல் துவங்குகிறது. இளம் வயதின் அனுபவங்களே ஒருவரின் ஆளுமையை வடிவமைக்கிறது என்கிறார்கள். எனவே கருணாநிதியின் சமூகநீதிப் பங்களிப்பின் விதை இளமையில் விழுந்திருக்கலாம்.
கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு என்கிற பாவனையில் இந்த நூல் தோன்றினாலும் அவருடைய அரசியல் பயணம், சொந்த வாழ்க்கை தொடர்பான சம்பவங்கள், போன்றவை மிக திறமையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதி என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமல்லாமல் அதனையொட்டி தமிழக வரலாற்றின் நினைவுகளும் விவரங்களும் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளன.
‘மானே, தேனே..’ என்கிற ஆராதனை வார்த்தைகளை இட்டு நிரப்பும் எவ்வித மாய்மாலங்களும் இதில் இல்லை என்பதே பெரிய ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியின் நல்லியல்புகள், நிர்வாகத்திறன், நூலாசிரியர் உடனான நட்பு போன்றவற்றுக்கு இடையே கருணாநிதி பற்றிய எதிர்விமர்சனங்களும் உள்ளுறையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் வாசந்தி, அடிப்படையில் பத்திரிகையாளராகவும் இருப்பதால் கட்டுப்பாடான வேகத்துடனும், நம்பகத்தன்மையுடனான தொனியுடனும் புள்ளிவிவரங்களுடனும் இந்த நூலை நகர்த்திச் செல்கிறார். தவறான புரிதலால் நிகழும் ஒரு சச்சரவுடன்தான் கருணாதியுடனான அறிமுகம் வாசந்திக்கு நிகழ்கிறது. அதை எப்படி இருவருமே பரஸ்பரம் கடந்து வந்தார்கள் என்பதை முன்னுரையில் சுவாரசியமான சம்பவமாக சொல்லிச் சொல்கிறார்.
கருணாநிதியின் தன்வரலாற்று நூலான நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இந்த நூலின் விவரணைகள், சம்பவங்கள், விவரங்கள் ஒருவேளை சலிப்பூட்டலாம். ஆனால் அவர்களையும் வாசிக்க வைக்கும் சுவாரசியத்தோடும் கோணத்தோடும் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பறவைப்பார்வையில் கருணாநிதி என்கிற ஆளுமையைப் பற்றிய கச்சிதமான கோணத்தை பதிவு செய்யும் இந்த நூல், அதன் ஊடாக தொடர்புடைய இதர விவரங்களையும், விமர்சனங்களையும் பொருத்தமாக இணைத்துக் கொண்டு முன்நகர்கிறது.
பாதிதான் வாசித்து முடித்திருக்கிறேன். அதற்குள்ளாக எதற்கு இந்தப் பதிவு என்று எனக்கே தோன்றியது. கண்காட்சி முடிவதற்குள் இதைப் பொதுவில் தெரிவித்தால் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்கிற பொதுநலமே பிரதான காரணம்.
நெஞ்சுக்கு நீதி, திமுகவின் வரலாறு, முரசொலி மாறனின் மாநில சுயாட்சி போன்ற நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அதை வேகப்படுத்தும் தூண்டுதலை வாசந்தியின் நூல் அளிக்கிறது.
அழகான முகப்பு, தரமான அச்சு, வடிவமைப்பு, நேர்த்தியான எடிட்டிங் போன்றவைகளும் இந்த நூலை விரும்பச் செய்கின்றன. குறிப்பாக எழுத்துப்பிழை எங்கும் இல்லாததே பெரிய ஆறுதல். (விலை ரூ.125)
suresh kannan
2 comments:
படிப்பவர்கள் அவசியம் அந்த நூலை வாங்கிப்படிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை தோன்றச் செய்யும் அருமையான பதிவு.பதிவின் நோக்கம் கூட அதுதானே வாழ்த்துக்கள்
ஆகா எழுத்தின் கோர்வை அருமையாக!
Post a Comment