வளரிளம் பருவத்தில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் போன்றவை வாசிக்கும் போது இஸ்லாமியக் கதைகள் கண்ணில் படும். ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் கதைகள் வெளிவரும். ஆனால் அவற்றை வாசிப்பதில் சில இடையூறுகள் இருந்தன. அந்தச் சமூகத்திற்கேயுரிய வழக்குச் சொற்களும் அரபிப் பெயர்களும் வட்டார வழக்குளும் புரியாமல் தடுமாற வைக்கும். எனவே வாசிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தாண்டிப் போக வேண்டியிருக்கும். சில படைப்புகளின் இறுதியில் வழக்குச் சொற்களின் பொருள் தந்திருப்பார்கள். எனவே ஏணியில் ஏறி இறங்கும் விளையாட்டு போல, திரைப்படத்தின் சப்டைட்டிலை கவனித்துக் கொண்டே பார்ப்பது போல சொற்களின் அர்த்தத்தை கவனித்துக் கொண்டே வாசிக்க வேண்டியதிருக்கும்.
அந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள் உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அந்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.
அந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள் உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அந்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.
ஆனால் பிற்பாடு வாசிப்பின் ருசி கூடிய பிறகு குறிப்பிட்ட சமூகத்தின், வழக்குச் சொற்கள் கலாசார கலப்பின் அடையாளம் என்பதும் அவை அந்தப் புதினங்களுக்கு பிரத்யேகமான சுவையைக் கூட்டுகின்றன, அடையாளத்தை தருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வட்டார வழக்குச் சொற்களின் ருசி என்னுள் இறங்குவதற்கு கி.ராவின் நாட்டார் இலக்கியங்கள் காரணமாக இருந்தது. தோப்பில் முகம்மது மீரானின் புதினங்களை வாசிக்கும் போது இஸ்லாமிய சமூகத்தின் வழக்குச் சொற்கள் வாசிப்பிற்கு தடையாய் இல்லை. வாக்கியத்தின் தொடர்ச்சியோடு அவற்றின் பொருள் தன்னிச்சையாக புரிந்து போகும் அனுபவம் கூடியது.
**
ஜெ. பானு ஹாருன் அவர்கள் வாசிக்க அனுப்பித் தந்த புதினமான ‘மீண்டும் பூக்கும்’ நூலை சமீபத்தில் வாசித்தேன். பிரபல யுனானி மருத்துவரும் எழுத்தாளருமான எம்.ஏ.ஹாரூனின் துணைவியார் இவர்.
பாலின சமத்துவமற்ற சூழலில், மற்ற துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனைகளே நிறைந்திருக்கும் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு பரவலாக நிகழத் துவங்குவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம். அதிலும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் தடைகளும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் படைப்பாளிகள் உருவாவது, அவர்களின் தரப்பு இடம் பெறுவது மிக அவசியமானது. பாலின நோக்கில் பெண் எழுத்தாளர்களை தனித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும் பெண்களின் சில பிரத்யேகமான பிரச்சினைகளை, அகச்சிக்கல்களை பெண்கள்களால்தான் நுட்பமாகவும் உண்மையானதாகவும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.
எனவே பெண்களின் இவ்வாறான வருகையை துவக்க கட்டத்திலேயே விமர்சன நோக்கில் ‘முதிரா முயற்சிகள்’ என கறாராக புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது பெண் என்பதால் தரப்படும் சிறப்புச் சலுகையல்ல. சமூகத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை இணைத்து அணுகுவது, புரிந்து கொள்வது கறாரான விமர்சனத்தை விடவும் முக்கியமானது என நினைக்கிறேன்.
பானு ஹாருனின் புதினம் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைக் கொண்டது. ஒரு மாத நாவலை வாசிப்பது போன்று இரண்டு மூன்று பயண நேரத்தில் வாசித்து முடித்து விட முடிந்தது. இந்த சுவாரசியமே இவரது அடிப்படையான எழுத்து திறனின் வெற்றியாக கருதுகிறேன்.
**
ஸக்கியா என்கிற பெண்ணின் துயர வாழ்வை விவரித்துச் செல்லும் நாவல் இது. அவளது வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்குப் பிறகு காலம் கடந்து ஒரு வசந்தம் பிறக்கிறது. அதைத்தான் தலைப்பு உணர்த்துகிறது ‘மீண்டும் பூக்கும்’
முதலாளிகளிடம் அடியாளாக வேலை செய்து பிழைக்கும் குடிகார கணவனிடம் சிக்கி ஸக்கியா துன்பப்படும் சித்தரிப்புகளோடு நாவல் துவங்குகிறது. அநாதையான ஸக்கியாவிற்கு பெரியம்மாதான் ஆதரவு. தனது சொந்த மகள்களை நன்கு படிக்க வைத்து, வசதியான இடங்களில் திருமணம் செய்து தரும் பெரியம்மா, இவளை மட்டும் வேற்றூரில் ஓர் எளிய உழைப்பாளிக்கு திருமணம் செய்து அனுப்பி விடுகிறார். ஸக்கியாவிற்கும் படிப்பதை விடவும் பெரியம்மாவின் அருகாமையில் இருந்து சேவை புரிவதே திருப்தியாக இருக்கிறது. ஆனால் கல்வி கற்காமல் போனதின் விலையை திருமணத்திற்குப் பிறகு அவள் தரவேண்டியிருக்கிறது.
அடியாள் வேலைக்குச் சென்ற கணவன் எதிரிகளால் கொலைசெய்யப்படுவதால் மறுபடியும் பெரியம்மாவை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஸக்கியாவிற்கு. ஆனால் அங்கும் துரதிர்ஷ்டம் இவளை துரத்துகிறது. பெரியம்மாவின் மரணச் செய்தியைத்தான் அங்கு அறிந்து கொள்ள முடிகிறது.
எதிர்காலம் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் ஸக்கியா. இவளுடைய சேவையும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இரண்டு மகள்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறாள்.
அந்த வீட்டின் பெரியவருக்கு இறக்கும் தருவாயில்தான் ஸக்கியாவின் நிராதரவற்ற நிலை அதிகம் உறுத்துகிறது. ‘தங்கள் வீட்டின் மகள்களைப் போல் அல்லாமல் இவளை வசதி குறைவான இடத்தில், தவறான நபருக்கு திருமணம் செய்து தந்து இவளின் வாழ்வை பாழடித்து விட்டோமே என்று குற்றவுணர்ச்சியின் தத்தளிப்பிற்கு ஆளாகிறார். ஸக்கியாவின் எதிர்காலத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை பிடிவாதத்துடன் செய்கிறார்.
ஸக்கியாவின் அதுவரையான துயரக்காலக்கட்டம் ஓய்ந்து வருங்காலத்தின் நம்பிக்கை வெளிச்சம் பிறக்கும் நல்ல செய்தியோடு நாவல் நிறைகிறது.
**
இஸ்லாமிய சமூகம் குறித்து இதர சமூகங்களின் பொதுப்புத்தியில் நல்லதும் கெட்டதுமாக நிறைய முன்தீர்மான சித்திரங்கள் உள்ளன. மேலைய நாட்டவர்கள் பெரும்பாலும் கற்பு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் என்கிற மேலோட்டமான புரிதல் இங்கு இருப்பதைப் போல ‘அவங்க நாலு திருமணம் கூட செய்துக்குவாங்க’ என்று இஸ்லாமிய சமூகத்தை சர்வசாதாரணமாக கூறி விடுவதைப் போன்ற அர்த்தமற்ற சித்திரங்கள்.
இது மட்டுமல்லாது சினிமாவும் ஊடகங்களும் இன்னபிற அமைப்புகளும் இது சார்ந்து பல ஆபத்தமான மதீப்பீடுகளை இங்கு உருவாக்குகின்றன. இஸ்லாமியர் என்பவர்கள், மதம் சார்ந்த தீவிரப்பற்றுவள்ளவர்கள், பிற்போக்கானவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்பது போன்ற பல ஆபத்தான கருத்துக்கள் பொதுச்சமூகத்தின் மையத்திற்குள் வீசப்படுகின்றன. மத அரசியல் திட்டமிட்டு இவற்றை ஊதிப் பெருக்குகிறது.
ஜெ. பானு ஹாருன் முன்வைக்கும் இந்தப் புதினத்தின் மூலம் ஒரு சராசரியான இஸ்லாமிய குடும்பத்தின் இயக்கத்தை, அதன் போக்கை நாம் நெருங்கி நின்று கவனிக்க முடிகிறது. அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையுமே சமநிலையுடன் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று அறம் சார்ந்த விழுமியங்களுக்கு கட்டுப்படுபவர்கள்தான். மனச்சாட்சியுடன் இயங்குகிறவர்கள்தான்.
மற்றவர்களைப் போல் தன் கணவன் கடல் கடந்து சம்பாதித்து வராத அங்கலாய்ப்புடன் இருக்கிறாள் ஜம்ஷித்தின் மனைவி. இதனாலேயே அந்த உறவில் விலகல் ஏற்படுகிறது. இன்னொரு திருமணத்திற்கான வாய்ப்பு இருந்தும் தன்னுடைய மகள்களின் எதிர்காலத்தையும் ஊருக்குச் செய்யும் சேவையையும் மட்டுமே நினைத்து காலம் கடத்துகிறான் ஜம்ஷித். இறுதிக் கட்டத்தில் பெரியவர்களின் நெருக்கடிக்கும் தன் மகள்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து நிராதரவாக நிற்கும் ஸக்கியாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறான். ‘நாலு திருமணம் கூட’ செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் சமூகமாக கருதப்படுவதிலுள்ள பொதுப்புத்தியின் மேலோட்டமான கருத்தை ஜம்ஷித்தின் நிதானமான பாத்திரம் சிதறடிக்கிறது.
ஜம்ஷித்தின் இரண்டாவது மகளுக்கு கல்வியின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளால், அடக்குமுறைகளால் அவளது கனவை தடுக்க முடியவில்லை. ‘கல்விதான் தன் விடுதலைக்கான ஆயுதம்’ என்கிற முதிர்ச்சியும் புரிதலும் அவளுக்கு இருக்கிறது. பழமையிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் ஒரு நவீன இஸ்லாமிய பெண்ணின் சித்திரம்.
திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அதன் சம்பிரதாயங்கள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை அபாரமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். வடகரை இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு சார்ந்த நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.
**
அது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், தேசமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒரு சராசரியான பெண்ணின் இயக்கமும் வாழ்வும் ஆணாதிக்க சமூகம் உண்டாக்கும் பல அல்லல்களுக்கும் தடைகளுக்கும் இடையே நீந்திக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. ஸக்கியா அம்மாதிரியான பிரதிநிதித்துவத்தை எதிரொலிக்கும் ஒரு பிம்பம். ஆனால் அவளின் வாழ்வை துயரத்தில் மூழ்கடித்து விடாமல் நம்பிக்கைக் கீற்றோடு நிறைவுறச் செய்திருப்பது சிறப்பான விஷயம்.
**
‘மீண்டும் பூக்கும்’ (புதினம்)
- ஜெ. பானு ஹாருன்
அபு பப்ளிகேஷனஸ், வடகரை
பக்கம் 132, விலை – ரூ.70
suresh kannan
No comments:
Post a Comment