இலக்கிய வாசிப்பு அனுபவமுள்ள நண்பரொருவருடன் 'ஆதவன் தீட்சண்யா' வைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவரை 'தலித் படைப்பாளி' என்கிற வகைமைக்குள் சுருக்க முயன்றார். தலித் என்கிற சொல்லாடல் இன்னமும் இங்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அது சாதிய நோக்கிலான சொல்லாகவே இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வர்க்க அரசியலுடனும் தொடர்புள்ளது அது. சாதிய படிநிலை மட்டுமல்லாது, பொருளாதார படி நிலையிலும் கீழேயுள்ள மக்கள், அதிகார வலுவற்ற சமூகம், விளிம்பு நிலையிலுள்ளவர்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல்லாக உள்ள மதிப்பு இங்கு உணரப்படவில்லை. மராத்தியில் உருவான இந்தச் சொல்லுக்கு அழுத்தப்பட்டவர்கள் என்கிற பொருளே உண்டு.
இன்னுமொன்று, அரசாங்கப் பதிவேடுகளில் தலித் என்கிற சொல் இல்லை. அட்டவணை சாதிகள் என்கிற குறிப்பே உண்டு. ஆனால் பொருளாதாரத்தில் மேம்பட்ட பிரிவில் உள்ள சில சமூகத்தினரும் இடஒதுக்கீட்டின் சலுகைகளை குறுக்குவழியில் பெற தம்முடைய சமூகத்தை அட்டவணை சாதிப்பிரிவில் இணைப்பதற்காக நிகழ்த்தும் போராட்டங்களையும் பார்க்கிறோம். தலித் சமூகத்தில் பிறந்தவர்கள் மட்டுமே தலித் இலக்கியத்தை எழுத முடியும் என்கிற குரலும் ஒருபக்கம் ஒலிக்கிறது.
இவ்வாறான அரசியல் காரணங்களை வைத்து கலைஞர்களை வரையறையோ பாகுபாடோ செய்ய முடியாது. தலித் அல்லாத சமூகத்தில் பிறந்த காரணத்தினாலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஓர் எழுத்தாளன் உணர முடியாது என்பது அபத்தமானது. அதை உறுதியாக மறுப்பதற்கான முன்னுதாரண படைப்புகள் உள்ளன. கலைஞன் கூடுவிட்டு கூடு பாயும் வல்லமையும் இந்தப் பாகுபாடுகளைக் கடந்து மானுட குலத்தை பரந்து பட்ட நோக்கில் காணக்கூடிய கருணை மனமும் பரிவும் கொண்டவன்.
***
ஆதவன் தீட்சண்யாவின் 'சொல்லவே முடியாத கதைகளின் கதை' என்கிற சிறுகதை தொகுப்பு இதைத்தான் நிரூபிக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சமூக அநீதிகளை அடித்து நொறுக்குவதற்கான வெடிகுண்டுகளைப் போலவே வன்மையான மொழியுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சாதியைக் காரணம் காட்டி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் மத அரசியலாலும் வர்க்க அரசியலாலும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களின் துயரங்களைப் பற்றி தார்மீக ஆவேசத்துடன் அவருடைய கதைகள் உரையாடுகின்றன.
அரசியல் சார்ந்த எழுத்து என்கிற போதிலும் அதிலுள்ள கலைநயம் எவ்விதத்திலும் குறைந்து போவதில்லை. முன்குறிப்பில் ஓடை. பொ.துரைஅரசன், ஆதவன் தீட்சண்யாவின் எழுத்து குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது மிக சரியானது.
'...சார்பு நிலைப் படைப்பாளிகளின் பிரதிகளில் அழகியலைக் காட்டிலும் அவர்கள் சார்ந்துள்ள அரசியல் துறுத்திக் கொண்டு மேலோங்கி நிற்கும் என்பது காலங்காலமாக எதிர்கொள்ளப்படும் பொதுவான விமர்சனம். ஆனால் ஆதவன் தீட்சண்யாவின் எந்தப் பிரதியிலும், அதன் மூலை முடுக்குகளில் எங்கு நுழைந்து பார்த்தாலும் அவரது அரசியலையும் அழகியலையும் பிரிக்கும் எல்லைக்கோட்டைக் காண முடியாது. அவரது பிரதிகளில் அவர் சார்ந்துள்ள அரசியலும் ஊடும் பாவுமாயப் பின்னிப் பிணைந்துள்ளது.'..
***
இந்த தொகுப்பில் எட்டு சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு சிறுகதையுமே அதனதன் நோக்கில் சாதியால், மதத்தால், அதிகாரத்தால், பொருளாதார அரசியலால் ஒடுக்கப்படும் மக்களைப் பற்றிய உரையாடல்களை தன்னுடைய வலிமையான, எளிமையான மொழியால் முன்வைக்கின்றன.
'பொங்காரம்' என்கிற சிறுகதை கொத்தடிமைகளாக அவதிப்படும் உழைக்கும் மக்களின் வாழ்வியல் துன்பங்களை அதன் நுண்மைகளுடன் விவரிக்கிறது.'பரதேசி' திரைப்படத்தைப் போன்று, வறுமை காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிராம மக்கள் கூட்டத்தை ஆசைகாட்டி அழைத்துச் செல்கிறான் கங்காணி. பரம்பரையாக கல்லுடைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பங்காளிக்கூட்டமொன்று, கல்லுடைப்பதற்கும் இயந்திரம் வந்து வி்ட்ட காரணத்தினால் வேலை குறைந்து வறுமை சூழ்ந்த காரணத்தினால் கங்காணியின் வாக்குறுதியை நம்பி முன்பணம் வாங்கிக் கொண்டு கிளம்புகின்றனர். எங்கே என்று தெரியாத அத்துவானக்காட்டைப் போன்றதொரு இடத்தில் அவர்களின் உழைப்பு கணக்கில்லாமல் உறிஞ்சப்படுகிறது. ஒரு பக்கம் உழைப்புச் சுரண்டல், இன்னொரு பக்கம் பெண்களின் மீதான பாலியல் சீண்டல் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளாத அந்தக் கூட்டம் கங்காணியையும் உடுப்புக்காரனையும் ஓர் ஆவேசமான கணத்தில் கொல்வதோடு தடயம் தெரியாமல் தப்பிச் செல்கிறது.
ஊரிலுள்ள கடன்காரர்களுக்கு பதில் சொல்லவும் இழந்த தங்கள் வாழ்வை மறுபடி உயிர்ப்பிப்பதற்காககவும் மறுபடியும் எங்காவது ஒரு பணிக்கு சென்றுதான் ஆக வேண்டும். அதற்கு சற்று முன்பணம் வேண்டும் என்கிற குறிப்புடன் இக்கதை நிறைகிறது. உழைக்கும் மக்களுக்கு விடியல் என்பதே கானல் நீராக உள்ளது; நெருப்பிலிருந்து தப்பி எரிமலைக்குள் சென்று விழுவதைப் போல அவர்களின் துயரம் ஒரு சுழற்சியாக அவர்களை துரத்திக் கொண்டேயிருக்கிறது என்பதை ஆதவன் தீட்சண்யா நுட்பமாக பதிவு செய்துள்ளார்.
இக்கதை முழுவதுமே அடித்தட்டு மக்களின் பேச்சு மொழியில் உரையாடிச் செல்வது மிகப் பொருத்தமானது. சில ஆண்டுகளுக்கு முன் ஆதவனின் ஏதோ ஒரு படைப்பில் வாசித்த 'விளக்கெண்ணையில் குண்டியைக் கழுவினாற் போல' என்கிற சொற்பிரயோகம் அதன் நகைச்சுவை நயத்திற்காகவே இன்னமும் நினைவிலிருந்து அகல மறுக்கிறது. பல இடங்களில் அதை நான் மேற்கோள் காட்டியுள்ளேன். இந்தச் சிறுகதையிலும் அவ்வாறான பல சுவையான சொற்பிரயோகங்கள் உள்ளன. இந்த ஒரு பத்தியை கவனியுங்கள். கிராமத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வறுமை சார்ந்து அவரவர் நோக்கில் உள்ள ஆயிரம் பிரச்சினைகளைப் பற்றி உரையாடும் புலம்பலின் ஒரு பகுதியிது.
'ஆளாளுக்கொரு பிக்கலிருக்கு. அரசனுக்கு அவன்பாடு ஆண்டிக்குத் தம்பாடு. காத்தில்லாத வூட்ல கையுங்காலும் கட்டிப் போட்டாப்பல ஆயிருச்சு. எங்கயும் காசு கண்ணி பொரளுல. அப்பப்ப அள்ளையில வாங்குன கடனுங்களும் அரிக்குது சீலப்பேனாட்டம். இன்னிக்கு நேத்திக்கு இப்படியாகல, காலம் முச்சூடும் இப்படியேதான். நாட்டுக்கு ராசா மாறினாலும் தோட்டிக்குப் பொழப்பு மாறலேன்னு காலங்கழியுது. மீள்றதுக்கும் வழி தெரியல, மாள்றதுக்கும் குழி தெரியல.
இப்படி எளிய மக்களின் வாழ்வியல் துயரங்கள் அதனுடைய இயல்பான சொலவடைகளில் விவரிக்கப்படுகின்றன. தொகுப்பின் தலைப்பில் அமைந்துள்ள 'சொல்லவே முடியாத கதைகளின் கதை' பெண்களைத் தொடரும் கண்காணிப்பு சமூகத்தைப் பற்றி விவரிக்கிறது. பெண்களால் வெளிப்படையாக உரையாட முடியாத கதைகளின் கதை. கதை சொல்லியிடம் ஒரு கிராமப்புறத்து பெண் உரையாடுவதைப் போன்ற பாவனையில் அமைந்திருக்கிறது. ஆனால் அவளால் தன் கதையை அவனிடம் முழுக்க தொடர்ச்சியாக, சாவகாசமாக சொல்ல முடியவில்லை. பணியிடத்தில் ஆண்டைகளால் கண்காணிக்கப்படுகிறாள்; வீட்டில் கணவன் சந்தேகப்படுவானோ என்று அஞ்சுகிறாள். இவளுடைய துயரம் சிசுக்கொலையிலிருந்து தப்பித்த அவளது இரண்டாவது மகள் வரைக்குமாக நீள்கிறது.
'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்பது ரகளையான இருண்மை நகைச்சுவையுடன் கூடிய சிறுகதை. மலமள்ளும் தொழிலாளர்களுக்கெல்லாம் ஜனாதிபதிக்கு நிகரான சம்பளமும் சலுகையும் தரும் ஒரு சூழல் உருவானால் அது சமூகத்தில் எம்மாதிரியான தலைகீழ் மாற்றங்களையெல்லாம் உண்டாக்கும் என்பதை விளக்கிச் செல்கிறது இச்சிறுகதை. மலம் அள்ள கற்றுத் தருவதற்கான பல்கலைகழகங்கள், அது சார்ந்த கல்வித்திட்டங்கள், அதற்கான போட்டிகள் ஆகியவற்றைச் சிரிக்கச் சிரிக்க சொல்கிறார் ஆதவன். ஆனால் இந்த சிரிப்பின் ஊடே இந்தக் கற்பனையின் பின்னுள்ள யதார்த்தத்தின் நிஜம் உறைத்து அந்தப் புன்னகைகளை உறைய வைக்கிறது.
'நான் நீங்கள் மற்றும் சதாம்' என்ற சிறுகதை மத அரசியலின் வன்முறை சார்ந்த குற்றவுணர்வில் அமிழ்ந்திருக்கும் ஒருவனைப் பற்றி பேசுகிறது. 'இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை' என்கிற சிறுகதை, வரலாற்றில் பதியப்படாமல் அதன் இருளுக்குள் மறைக்கப்பட்ட சுதந்திரப் போராளிகளின் போராட்டங்களைப் பற்றி உரையாடுகிறது.
***
இதிலுள்ள எட்டு சிறுகதைகளும் அதனதன் நோக்கில் மிக முக்கியமான பதிவுகள். சமூகச் சொரணையொடும் அதன் மீதான அக்கறையுடனும் கூடிய ஆவேசத்தில் எழுதப்பட்ட புனைவுகள். ஆதவன் தீட்சண்யாவின் இதர சிறுகதைகளை தேடி வாசிக்க வேண்டுமென்கிற பேராவலை இந்தச் சிறுகதை எழுப்புகிறது.
சொல்லவே முடியாத கதைகளின் கதை
(ஆதவன் தீட்சண்யா) சிறுகதை தொகுப்பு
பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் 128 - ரூ.50/-

('குறி' சிற்றிதழில் பிரசுரமானது - நன்றி: 'குறி')
suresh kannan
No comments:
Post a Comment