Saturday, December 04, 2010
ரத்த சரித்திரம் - பழிவாங்குதலின் பரிசுத்தம்
ஓரு அக்மார்க் ராம் கோபால் வர்மா படம்.
வர்மாவிற்கு வயதாகி விட்டதா? என்று முன்னொரு பதிவில் கேட்டிருந்தேன். இப்போது மகிழ்ச்சியுடன் அதை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். (அந்தப் பதிவின் பின்னூட்டங்களையும் வாசிக்கவும்). ஒரு சிங்கம் போல் தன்னுடைய தோல்விகளிலிருந்து சிலிர்த்தெழுந்து கிளம்பியிருக்கிறார் RGV.
கேங்க்ஸ்ட்டர்களின் படங்களை வெறுமனே அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாக்காமல் அவர்களின் அகம் சார்ந்த உணர்வு காட்சிகளோடு தொடர்ந்து உருவாக்குபவர் ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்ஸஸி. அந்த வகையில் இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வர்மாவைக் குறிப்பிடலாம். (ஹாலிவுட்டை அளவுகோலாக வைத்துத்தான் இந்திய இயக்குநர்களை மதிப்பிட வேண்டும் என்கிற அர்த்தமில்லை. அழுத்தமான புரிதலுக்காக இப்படி குறிப்பிடுகிறேன்).
இருளும் குறைந்த வெளிச்சமுமான ஒரு அறை. இரண்டு மூன்று தீவிரமான முகங்கள். பதற வைக்கும் பின்னணியிசை. இவை மாத்திரமே கொண்டு வெளியே ஏதோ ஒரு மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருப்பதான பிரமையை பார்வையாளனிடம் ஒரு தேர்ந்த இயக்குநரால் நிகழ்த்தி விட முடியும். அந்த மாதிரி ஓர் இயக்குநர் RGV.
இன்னமும் வளவளவென்று வசனம் பேசிக் கொண்டிருக்கும் இந்தியத் திரைப்படங்களிலிருந்து விலகி காட்சிகளின் மூலமாக படத்தை நகர்த்திச் செல்வதில் நம்பிக்கையுள்ள சொற்ப இயக்குநர்களில் வர்மா பிரதானமானவர். இப்படத்தின் வசனங்கள் மிகச் சுருக்கமாக இருந்தாலும் அழுத்தமாக அமைந்துள்ளன.
பல வருடங்களாக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட பழிவாங்குதலில் தம்முடைய இலக்கிலிருந்து தப்பிப் போனவன் குறித்து ஆததிரத்துடன் விவாதிக்கிறது இளைஞர் குழு. 'ஆஸ்பிட்டல்ல போய் இப்பவே போட்டுடலாம்' என்று துள்ளுகிறான் ஓர் இளைஞன். "அவன் கேவலமானவனா இருக்கலாம். ஆனா முட்டாள் இல்ல. நம்மள எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்' என்கிறான் சூர்யா.
இந்தப் படத்தின் பிரதான பாத்திரத்தில் சூர்யாவை உபயோகித்திருந்தது மிகப் பெரிய பின்னடைவான விஷயமாக அமையலாம். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை பின்பகுதியில் பார்க்கலாம்.
டைட் குளோசப் காமிராக் கோணங்கள், ஒரு முகத்தில் நிலை கொண்டிருக்கும் காமிரா அவுட் ஆஃப் போகஸில் தெரியும் எதிர் முகத்திற்கு மாறுவது, மெலிதான தலையசைப்பிற்குப் பிறகு தொடரப் போகும் பயங்கரங்கள், அடிவயிற்றை பதற வைக்கும் பின்னணி இசை.... என்று வர்மாவின் பிரத்யேக திரை மொழி இதிலும் தொடர்கிறது.
பரிட்டாலா ரவி என்கிற நக்சலைட் பின்னணி கொண்ட ஆந்திர அரசியல்வாதியின் சுயசரிதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இத்திரைப்படம். ஐந்து மணி நேரம் கொண்ட இதன் முதல் பாகம் இந்தியிலும் தெலுங்கிலும் மூன்று மாதங்களுக்கு முன் வெளியாகியது
தமிழில் வெளியாகியிருப்பது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை பார்த்து விட்டு இரண்டாம் பாகத்தை பார்ப்பதுதான் சரி என்றாலும் பார்த்திருக்காவிட்டாலும் பெரிய பாதகமில்லை. பார்வையாளர்களின் புரிதலுக்காக முதல் பாகத்தின் காட்சிகள் சுருக்கமாக முதல் 20 நிமிடங்கள் வாய்ஸ் ஓவர் பின்னணியுடன் விவரிக்கப்படுகின்றன. கடந்த கால (என்டிஆர்) ஆந்திர அரசியலின் பின்னணியை அறிந்திருப்பதன் மூலம் இப்படத்துடன் அதிகமான ஒன்ற முடியும்.
எவ்வித முன் அறிமுகமுமில்லாமல் இப்படத்தை ரசிக்க முடிவது RGV செய்திருக்கும் திரைக்கதை மாயம். என்ன பிரச்சினையெனில் குற்ற இலக்கியப் படைப்பின் முப்பதாவது பக்கத்தில் நுழைந்தது போல படத்தின் துவக்க காட்சிகள் ரத்தமும் அரிவாளுமாக சதியுமாக பரபரவென்று நகர்கின்றன.(பின்னணியில் இதை விவரித்துக் கொண்டு செல்வது இயக்குநர் கெளதம் மேனனின் குரல்) இதைச் சுதாரித்துக் கொண்டு படத்திற்குள் நுழைந்து விட்டால் பின்பு அதகளம்தான்.
இடைவேளை என்னும் கற்பிதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியத் திரைபடங்களின் 90 சதவீத திரைக்கதைகள் இடைவேளையைக் கருத்தில் கொண்டுதான் எழுதப்படுகின்றன. அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் முதல் பாதி பெரும்பான்மையும் வெறுமனே ஆக்ஷன் காட்சிகளால் நகர்ந்தாலும் பின்பகுதி சதுரங்கக் காய்களின் நகர்த்துதல்களோடு புல்லட் வேகத்தில் பறக்கிறது.
நாம் ஒருவனை உக்கிரமாக வெறுக்கும் போது அவனைப் பழிவாங்குவதற்காக நம்முடைய ஐம்புலன்களும் ஆறாவது அறிவோடு இணைந்து ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையோடு இயங்கும். பத்திருபது ஆண்டு தியானப் பயிற்சியில் கூட இந்த ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையின் இயக்கம் நமக்குக் கிடைக்காது. நம் மனதினுள்ளேயே எல்லாவிதமான ஆற்றலும் இருக்கின்றன. நாம்தான் அவைகளை உணர்வதில்லை. தியானங்களும் ஆன்மீகத் தேடல்களுமே இதை வெளிக் கொணர்கின்றன. இவை நன்னோக்கு சிந்தனைகளை வெளிக்கொணர்கிறது என்றால், பழிவாங்குவதில் ஏற்படும் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை, வன்முறையையும் வன்மத்தையும் வெளிக் கொணர்கிறது. நல்ல விஷயத்திற்காக கூட இததனை தீவிரமாக சிந்திக்காத மனிதன், இந்த எதிர்மறையான விஷயத்திற்காக கூர்மையாக செயல்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதே சமயத்தில் வேதனையையும் ஏற்படுத்துவது.
இப்படியான பழிவாங்குதல் எனும் உணர்வு எவ்வாறு பரம்பரை பரம்பரையாக ஒரு சங்கிலி போல் தொடர்கிறது, தனது கிளைகளை பரவலாக விரித்துக் கொண்டு செல்கிறது என்பதைப் பற்றி இந்தப்படம் உரையாடுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் நிகழ்வுகளுக்கு தமிழக வண்ணம் பூசப்பட்டிருப்பது ஒட்டாமல் இருந்தாலும் இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தவில்லை. மனிதனின் பொதுவான பழிவாங்குதல் குணத்தை பற்றியது என்பதால். 'இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே' எனும் வழக்கமான டிஸ்கெளைய்மருக்குப் பிறகு துவங்கும் படம் ''நிஜத்தில் நடந்த கதை' என்று தொடருவது நகைமுரண்.
பல்லைக் கடித்துக் கொண்டு கீழேயுள்ள இரண்டு பாராக்களை வாசித்து விடுங்கள்.
ஆனந்தபுரம் எனும் பகுதியில் (ஆந்திராவில் இது அனந்தபூர்) வன்முறையின் மூலம் வலிமையான அரசியல் தலைவராக விளங்குபவர் நாகேந்திர மூர்த்தி (கிட்டி). இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை பெரிதும் நம்புகிறார். வீரபத்ரன் விவசாய பாட்டாளிகளுக்காக உண்மையாக பாடுபடும் அரசியல்வாதி. இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி எனும் எம்.எல்.ஏ (கோட்டா சீனிவாசராவ்) நாகேந்திர மூர்த்தியின் சிந்தனையைக் கலைத்து வீரபத்ரனை வெளியேற்றச் செய்கிறார். மக்களின் ஆதரவு வீரபத்ரனுக்கு ஏற்படுகிறது. இதனால் நாகேந்திர மூர்த்தியும் நாகமணியும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை வைத்தே கொலை செய்கின்றனர். வீரபத்ரனின் மூத்த மகனையும் கொல்கின்றனர்.
வீரபத்ரனின் இளைய மகனான பிரதாப் ரவி (விவேக் ஒபராய்) தன் தந்தை கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். தந்தையின் ஆதரவாளர்களுடன் நாகேந்திர மூர்த்தியையும் நாகமணியையும் கொன்று பழி தீர்க்கிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான். ஆனந்தபுரத்தில் எவரும் எதிர்க்க முடியாத ஒரு வலிமையான சக்தியாக உருவெடுக்கிறான்.
சூப்பர் ஸ்டார் நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா - என்.டி.ஆர். பாத்திரம்) ஓட்டு வங்கிக்காக ஆனந்தபுரத்தில் நுழையும் அவரை சில வன்முறை சக்திகள் வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன. இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் பிரதாப் ரவி. அவனை அழைத்து வந்து அரசியலில் நுழைய வைத்து பிரதாப்பை உள்துறை மந்திரியாகவே ஆக்கி விடுகிறார். ஏற்கெனவெ உள்ள தாதா பலத்துடன் அரசியல் பலமும் இணையவே வெல்லவே முடியாத ஒரு மையமாக ஆகி விடுகிறான் பிரதாப்.
ஆச்சா...
இதுதான் முதல் பாகத்தின் 20 நிமிடங்களில் காட்டப்படும் சுருக்.
ஆனால் பிரதாப் எதிர்பார்க்காதவிதமாக அவனைக் கொல்வதற்காக ஒருவன் பழிவாங்குதல் எனும் உணர்வே மனித வடிவத்தில் காத்திருப்பது போல் காத்திருக்கிறான். அது சூர்யா. (முதலில் குறிப்பிட்ட நாகேந்திர மூர்த்தியின் மகன்). இப்போது பிரதாப்பிற்கும் சூர்யாவிற்கும் பழிவாங்குதல் குறித்து நிகழும் ஆடுபுலி ஆட்டமும் சதுரங்க விளையாட்டுக்களுமே 'ரத்தசரித்திரம்'
இத்திரைப்படத்தின் பிரதான பாத்திரமான பிரதாப் ரவியாக விவேக் ஓபராய். அட்டகாசமான உடல்மொழி. (இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத் தேடி வந்த போது நடந்து கொண்டதை தேடிவாசித்துப் பாருங்கள்). ஈநாடு தொலைக்காட்சியில் நாம் சாதாரணமாக காண்கிற காரசாரமான ஒரு ஆந்திர அரசியல்வாதியை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.
இவர் சூர்யாவை கொல்வதற்காக தொடர்ந்து முயலும் போது அந்தக் குழப்பங்கள் அரசியலிலும் எதிரொலிக்கின்றன. இதனால் இவரது அரசியல் குருவான சிவராஜ் (என்டிஆர்) 'அரசியல்வாதியான நீ இனிமேலும் இது போன்ற சில்லறைத்தனமான சச்சரவுகளில் ஈடுபடாதே' என்று அறிவுறுத்துகிறார். எனவே தனது வன்முறைகளை கைவிட்டு விட்டு சிறையிலிருக்கும் சூர்யாவிடம் பேச்சுவார்த்தைக்காக போகிறான் பிரதாப்.
வன்முறை தவிர பிறவற்றை யோசிக்கத் தெரியாத ஒரு ரவுடி, ஒரு தேர்ந்த கச்சிதமான அரசியல்வாதியாக உருமாறுவதை இந்தக் காட்சிகள் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. சிறையில் இவருக்கும் சூர்யாவிற்கும் நிகழும் உரையாடல் செம காரம். (உன் வழியில நீ போ, என் வழியில நான் போறேன். - உன் வழியை அடைக்கறதுதான் என் வேலை. உன்னைச் சாகடிக்கறதுக்காகத்தான் நான் சாகாம இருக்கேன்).
சூர்யாவின் குடும்பம் முழுவதையும் பிரதாப் அழித்ததால்தான் அவன் இத்தனை வெறியோடு இருக்கிறான். ஆனால் காட்சிகளின் பின்னணியில் நிகழ்வது வேறு. தன் எதிரிகள் அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்கிற ஆபரேஷனில் அவனது ஆட்கள் உத்தரவுகள் எதுவுமின்றி தானாகவே சூர்யாவின் வீட்டில் வெடிகுண்டு வைத்து கொன்று விடுகின்றனர். இதற்காக பிரதாப் பிறகு தனது ஆட்களை கண்டிக்கிறான்.
ஒரு நிலையில் தேர்தலில் தனக்கு போட்டியாக நிற்கும் சூர்யாவின் மனைவியை (பிரியாமணி) கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப்பிற்கு ஏற்படுகிறது. பெண் என்பதால் தயங்குகிறான். ஆனால் சுற்றியுள்ள ஆட்கள், தேர்தலில் வெல்வதோடு ஒப்பிடும் போது இது சாதாரண விஷயம்' என வற்புறுத்தும் போது வேறு வழியின்றி அதை ஒப்புக் கொள்கிறான். ஆனால் அவனுடைய மனைவி இதை எதிர்க்கிறார். அவன் மனச்சாட்சியை தூண்டும்படி வாக்குவாதம் செய்கிறாள். பவானியை கொல்வதற்காக ஆட்களை அனுப்பி விட்டு காத்திருக்கும் பிரதாப், தனிமையில் தன் மனைவியுடன் நிகழ்ந்த உரையாடல்களை மனதில் நிகழ்த்திப் பார்க்கிறான். மனச்சாட்சி உறுத்துகிறது. போராட்டத்தில் அவனது மனிதம் வெல்கிறது. ஆட்களை தொடர்பு கொண்டு கொலையை நிறுத்தச் சொல்கிறான்.
இங்கே ஒரு திருப்பம். பவானியைக் கொல்லச் சென்ற பிரதாப்பின் வலது கரங்களில் ஒன்றை சூர்யாவின் சிறைநண்பன் கொல்கிறான். மனம் திருந்தி நிற்கும் பிரதாப்பிற்கு இந்தச் செய்தி கிடைக்கிறது. ஆத்திரத்தில் அழுகிறான். மனது மீண்டும் பழிவாங்கல் உணர்விற்கு மாறுகிறது.
மனிதத்தனத்திற்கும் விலங்குத்தனத்திற்கும் இடையில் நம் மனது எத்தனை நுட்பமாக ஊசலாடுகிறது என்பதை விளக்குவதற்காகவே இத்தனை நீளமாக இதை எழுதினேன். இந்தக் காட்சிகளை மிக அற்புதமான திரைமொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பிரதாப்பின் அகஉணர்வுப் போராட்டம் மிக வலுவாக இதில் வெளியாகியிருக்கிறது. இது போல் பல காட்சிகளை உதாரணமாகச் சொல்ல முடியும்.
வர்மாவின் மேக்கிங்கில் இரண்டு காட்சிக்கோர்வைகளை மாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திரைப்படம் பயில விரும்பும் மாணவர்களுக்கு இதை ஒரு பாடமாகவே வைக்கலாம் என்று குறிப்பிடுவது அதீதமாக இருக்காது என நம்புகிறேன்.
சூர்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் காட்சி. அவனை பிரதாப்பின் எதிரிகள் எவரும் கொன்று விடக்கூடாது என்பதற்காக காவல்அதிகாரி (சுதீப்) கண்காணிக்கிறார். ஒரு ஃபார்மலான வக்கீலிடம் துவங்கும் இந்தக் காட்சி, பல்வேறு சந்தேக முகங்களையும் காவல் அதிகாரி மற்றும் சூர்யாவின் கூர்மையான அவதானிப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுகிறது. நாம் கையில் சற்று அதிகமான பணத்தை வைத்துக் கொண்டு செல்லும் போது வழியில் பார்க்கும் நபர்களெல்லாம் சந்தேகப்படும் படி தெரிவது போல் எவரைப் பார்த்தாலும் கொலைகாரர்களாகவே தெரிகிறார்கள். ஒவ்வொரு அசைவும் சந்தேகத்துக்குரியதாக தெரிகிறது.
இன்னொன்று சூர்யா, பிரதாப்பை கொல்லும் காட்சி. டைட் குளோசப் காட்சிகளும் கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் தீவிரமான முகபாவங்களும் மற்றவர்களின் இயல்பான இயக்கங்களும் காட்சியின் தரத்தை உயர்த்திச் செல்கின்றன. இயக்குநரின் முழுக்கட்டுப்பாட்டில் காட்சிகள் இயங்குவதற்கு இவை சிறந்த உதாரணங்கள்.
சூர்யாவின் நடிப்பு கிராஃப் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே போகின்றது. வணிக மசாலாப்படங்களில் ஒருகால், வித்தியாசமான முயற்சிகளில் ஒருகால் என்று இரட்டைக்குதிரைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். பல காட்சிகளில் இவரது உடல்மொழி அபாரம். குறிப்பாக பிரதாப்பை கொன்றுவிட்டு இவர் திரும்பும் காட்சியில் பல வருடங்கள் காத்திருந்த செயலை நிகழ்த்தின ஆசுவாசமும் திருப்தியும் அதன் மூலம் வெளிப்படும் கண்ணீரும் என.. இவரின் முகபாவங்கள் அட்டகாசம். சிக்ஸ் பேக் தெரிய இவர் இடும் சண்டைக்காட்சிகள் தேவையில்லாத வணிகத் திணிப்பு
பிரியாமணிக்கு நடிப்பதற்கு அத்தனை வாய்ப்பில்லாவிட்டாலும் வருகிற காட்சிகளில் எல்லாம் இவர் மிகை ஒப்பனையுடன் வருவது சற்று எரிச்சலாகவே இருக்கிறது. இயக்குநர் இதைக் கவனித்திருக்கலாம். சுபலேகா சுதாகர் சிறிது நேரமே வந்தாலும் ஒரு அரசாங்க தரகரின் வேலையை கனகச்சிதமாக செய்கிறார்.
பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே. இவரைப் பார்த்து விட்டு நான் அப்படியே உறைந்து அமர்ந்து விட்டேன். வெறுமனே காமத்தை கிளர்த்தும் அழகு, வணங்க வைக்கும் அழகு, தள்ளி நின்று ரசிக்க வைக்கும் அழகு என்று பெண்களை கவனிப்பதில் பல வகைகள் உண்டு என்பது என் தனி அபிப்ராயம். இவரை எவ்வாறு வகைப்படுத்துவது எனத் தெரியவில்லை. ஐஸ்வர்யா ராயையும் தீபிகா படுகோனையும் இணைத்து வைத்த கலவையில் ரவிவர்மா ஓவியம் போலிருக்கிறார். தி.ஜாவின் மரப்பசு அம்மிணியை நிலைகொள்ளாமல் வாசித்த பதின்ம வயது உணர்வு மீண்டும் எனக்குள் திரும்பியது. விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மனம் பொறாமையில் வெந்து அடங்கியது. அப்பேபர்ப்பட்ட பிரமிக்க வைக்கும் அழகு. இவரின் மற்ற படங்கள் எத்தனை மொக்கையாக இருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன். :-)
சூர்யாவை இதில் நடிக்க வைத்தது இந்தப்படத்தின் ஒரு பின்னடைவாக இருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன் அல்லவா? ஏனென்று சொல்கிறேன். சூர்யா தோன்றும் ஆரம்பக்காட்சியில் கைத்தட்டல்கள் காதைப் பிளந்தன. சிங்கம், வேல் போன்ற வணிக மசாலா பட சூர்யாவை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் நிச்சயம் ஏமாந்து போவார்கள். சூர்யாவின் பிம்பமே அந்த பாத்திரத்தில் பார்வையாளன் அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தடையாக அமையலாம்.
ரத்த சரித்திரத்தில் ஹீரோ, வில்லன் என்று எவருமே கிடையாது. அவரவர்களின் பார்வையில் அவரவர்கள் செய்வது நியாயமே. இதைப் பார்வையாளர்கள் தெளிவாக உணரும்படிதான் திரைக்கதை அமைந்துள்ளது. ஆனால் நாயக வழிபாட்டு ரசிகர்கள், சூர்யாவை ஹீரோவாகவும் விவேக் ஓபராயை வில்லனாகவும் உருவகித்துக் கொண்டு திரைப்படத்தைப் பார்த்தால் இயக்குநருக்கு அது ஒரு தோல்வியே. பிரதேச மொழிக்கேற்றவாறு அவரவர்களின் பகுதிகள் கூட்டியோ குறைத்தோ அமைக்கப்பட்டுள்ளன என அறிந்தேன். எனில் இந்தி வர்ஷனில் விவேக் ஓபராயின் பகுதி எப்படி அமைந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். (முதல் பாகத்தில் விவேக் மற்றும் சத்ருஹன் சின்ஹாவின் ராஜாங்கம்தான் என கேள்விப்பட்டேன்).
அமல் ராத்தோடின் காமிரா இப்படத்திற்கு பெரிய பலம். என்றாலும் சில காட்சிகளில் அர்த்தமேயின்றி 360 டிகிரியில் சுழன்று காட்சிப்படுத்துவது தேவையில்லாமல் சங்கடப்படுத்துகிறது. சூர்யாவும் அவனது சகாவும் சிறையில் கம்பிகளுக்கு இடையில் உரையாடும் போது நடுக்கோணத்தில் காமிரா நின்று இருவருக்கும் இடையே எந்த தடுப்பும் இல்லை என்பது போன்று படமாக்கியிருப்பது சிறப்பு. பி்ன்னணி இசை காட்சிகளின் உக்கிரத்தை மேலும் கூட்டுகிறது.
இயக்குநர் விக்ரமனின் 'லாலாலா' படங்களைப் பார்த்துப் பழகினவர்கள் இந்தப் படத்தின் வன்முறையை ஜீரணிப்பது சிரமம். வன்முறையில் உள்ள அழகியலை ரசிக்கத் தெரிந்தவர்கள் மாத்திரமே இதை ரசிக்க முடியும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம் அனைவருக்குள்ளும் வன்முறை ஒளிந்திருக்கிறது என்கிற யதார்த்தத்தை புரிந்து கொண்டால் போதும். ஏனெனில் பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்பை இந்தப்படத்தில் எதிர்பார்க்கவே முடியாது. வனம் அதிர மோதிக் கொள்ளும் இரண்டு சிங்கங்களின் தீவிரமான அலறல்களைத்தான் இதில் கேட்கும். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை மருந்திற்குக்கூட உங்களால் புன்னகைக்க முடியாது.
பழிவாங்குதலின் இந்தத் தொடர் சங்கிலியை இயக்குநர் எப்படி முடிப்பார் என்று யோசனையாக இருந்தது.
பிரதாப்பை கொன்ற சூர்யாவிடம் காவல் அதிகாரி சொல்கிறார். 'நெனச்சத சாதிச்சிட்டே. வாழ்த்துகள். ஆனா பிரதாப்பும் உன்ன மாதிரிதான் பழிவாங்குறதுல ஆரம்பிச்சான். அப்புறம் அரசியலுக்கு போனான். நீயும் இன்னொரு பிரதாப்பா ஆகிடுவென்னு நெனக்கறேன்" என்கிறார்.
"நிச்சயம் ஆக மாட்டேன்" என்கிறான் சூர்யா.
அடுத்தடுத்த காட்சிகளில் சூர்யா அரசியலில் இறங்கப்போகும் நேர்காணலை தொலைக்காட்சி தெரிவிக்கின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரதாப்பின் மனைவியின் கையிலிருக்கும் குழந்தையின் டைட் குளோசப்பில் படம் முடிகிறது.
பழிவாங்குதலின் தொடர்ச்சி. வர்மா டச். வர்மாவின் ரசிகர்கள் நிச்சயம் பாருங்கள். குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். இளகிய மனதுள்ளவர்களும் இத்திரைப்படத்தை தவிருங்கள்.
தொடர்புடைய பதிவு:
பழிவாங்குதல் ஒரு பரிசுத்தமான உணர்வா?
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
ரொம்ப பெரிய பதிவாக இருக்கிறது. பதிவின் நீளம் பார்த்ததுமே பயந்து விட்டேன் . முழுதும் படிக்க ஆர்வம் இல்லை/vara villai indru
[[[விவேக் ஓபராய் இவரை ஆறுதலான அணைத்த காட்சியில் மனம் பொறாமையில் வெந்து அடங்கியது. அப்பேபர்ப்பட்ட பிரமிக்க வைக்கும் அழகு. இவரின் மற்ற படங்கள் எத்தனை மொக்கையாக இருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன். :-)]]]
வெல்கம் பிரதர்.. எங்க ஜோதில ஐக்கியமானதுக்கு நன்றி..! அதெப்படி நீங்க மட்டும் சுத்தமா, யோக்கியமா, நல்லவரா இருக்குறது..? இது தப்பில்லையா..?
சுரேஷ் உங்கள் விமர்சனங்களில் இது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.. மாலை பார்க்கப்போகிறேன்..
அருமையான விமர்சனம். வன்முறை மற்றும் பழிவாங்கல் குறித்த உங்கள் அவதானிப்பு சிந்திக்க வைக்கிறது. ஆமா யாருங்க அந்த ராதிகா ஆப்தே.அடடா அழகு! அழகு !
அழகான, ஆழமான உங்கள் விமர்சனம் பாடம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. நன்றி!
nice treat.... :)
இளகிய மனமுடையவன் என்பதினால் பார்க்க தவிர்கிறேன்... இருப்பினும் ராதிகா ஆப்தே ?
படம் பார்த்தேன்.எனக்கென்னவோ இந்த மாதிரிப்படங்கள் ஏன் எடுக்கிறார்கள் என்றே புரியவில்லை.????
வெறும் வன்முறையையும் பழிவாங்குதலையும் தவிர்த்து வேறு ஏதேனும் அழுத்தமான கதை இருக்கிறதா என்ன... அப்படி நீங்க எதுவும் சொல்லல.
ஏதோ பத்திரிகைக்கு எழுதுவது போல மாஞ்சு மாஞ்சு எழுதறா மாதிரி இருக்கு. :)
(இவர் முதல் திரைப்படத்திற்காக வர்மாவிடம் வாய்ப்புத் தேடி வந்த போது நடந்து கொண்டதை தேடிவாசித்துப் பாருங்கள்). will u please post that link....?
இன்றுதான் இந்தப் படம் பார்த்தேன். ஏற்கனவே ஹிந்தியில் முதல் பகுதி பார்த்து விட்டேன். எனக்கென்னவோ தமிழ் பிடிக்கவில்லை..மிகவும் நீளம் மற்றும் விறுவிறுப்பு இல்லை...ஆனால்...ஹிந்தி முதல் பகுதியை நிமிடம் நிமிடமாய் ரசித்தேன். அவ்வளவு அருமை...தவற விடாதீர்கள். அந்த விறுவிறுப்புக்கு முன் இரண்டாம் பகுதி பாதி கூட வராது...'ராதிகா ஆப்தே' - What a beautiful face...ராம் கோபால் வர்மா ரசனைக்காரன். பேரசிகன்...அவளுக்கு...உதட்டுச்சாயம் கூட பூசாமல்...மிக அழகாக...இயற்கையாக காட்டியிருக்கிறான்...நந்திதா தாசை பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்....நீங்கள் சொன்னது மிகச்சரி...சூர்யாவைத் தேர்வு செய்தது தவறு...ஒட்டவில்லை....
அட்டகாசம் தல, இந்த படத்தை எதிர்பார்த்தே http://eniyoruvithiseivom.blogspot.com/2010/09/blog-post_24.html இப்ப்டி ஒரு பதிவு எழுதினேன். ஜனவரியில்தான் படம் பார்க்கமுடியும் என்கிற ஏமாற்றத்தோடும், ஒரு பாஸிட்டிவான ரிவியூவாவது கிடைக்காதான்னும் ஒவ்வொரு பதிவுகளாக வாசித்துக்கொண்டிருந்தேன். முதலில் உங்க பதிவுக்கு நன்றி.
RVG-ன் ஒவ்வொரு படத்திலுமே எதாவது ஒன்றுகற்றுக்கொள்ள இருக்கும். எப்படி படம் எடுக்கலாம் அல்லது எப்படி எடுக்கக்கூடாது என்று. அவரேஜ் என்ற வகையில் படமெடுக்கத்தெரியாத மனிதன். பெஸ்ட் ஆர் வொர்ஸ்ட். :-)
ஓம்காராவில்தான் முதலில் விவேக்கின் நடிப்பை உணர முடிந்தது. அதகளமான படம் அது, நீங்கள் எழுதியிருக்கிறீர்களா, ஓம்காரா?
நிறைய இருந்தாலும் படம் பார்த்தது பேசுகிறேன். நன்றி சுரேஷ் ஜி.
எத்தே பெரிய விமர்சனம்..
கதை முழுதும் வந்துவிட்டதே.!!!
தங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..
இங்கும் வாருங்கள் நண்பரே...
http://kirukaninkirukals.blogspot.com/
http://ram-all.blogspot.com/
கேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்
விமர்சனம் நன்றாக இருந்தது. படம் இனிதான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் ரத்தக் கண்ணீர் படம் பார்க்க நேரிட்டது.அந்தப் படம் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? ரத்தக் கண்ணீர் படம் குறித்த உங்கள் பார்வை பற்றி அறிய ஆவல்.
nandri
பிரதாப் ரவி 'துணிந்தபின் எண்ணி இழுக்கி'க்கொண்டு இருக்கும் காட்சி படிக்கட்டில் நடப்பது (கீழும் இல்லாமல் மேலும் இல்லாமல்) மிக சிறந்த இயக்கம். காமிரா சுழலும் காட்சிகளுக்கு உள் அர்த்தம் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? . சூர்யா star இல்லை நடிகன் என்பதற்காக ஹிந்தியில் ஏற்ற பாத்திரம் இது. தமிழில் சென்று starக்காகபார்ப்பவர்கள் ஏமாற வேண்டியதுதான். Am sure its the same for Sudeep fans in K'taka. படம் பார்க்கையில் பலருக்கு திரைப்படத்தின் ஒற்றைத்தனம் (focussed integrity) மற்றும் வன்முறை ஏற்புடையதாய் இல்லாதது அவர்கள் அடித்த restless comments களில் தெரிந்தது. புதுசை இளைஞர்கள் இப்படிதான் வரவேற்பர் போல.
sivan.
இந்தியாவின் மார்ட்டின் ஸ்கார்ஸஸி-யாக ராம்கோபால் வர்மாவைக் குறிப்பிடலாம்....
இதை ஏற்றுக்கொள்ள மனசு மறுக்கிறது.
RGV எட்ட முடியாத உயரம் மார்ட்டின் என்பது என் அளவுகோல்.
mokka padamnga... yenakku pidikkala.
revenge is not a salvation......but revenge proves one's ability and also his skill..living one step ahead of enemy is the best form of revenge...hope u agree
Post a Comment