Tuesday, July 06, 2010

நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - பகுதி 1



திருத்தப்பட்ட பதிப்பு

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நாளைய இயக்குநர்' என்கிற இந்த நிகழ்ச்சியைப் பற்றி  இந்தப் பதிவில் முன்னர் எழுதியிருக்கிறேன்.

இருந்தாலும் இதை தொடர்ந்து பார்க்க முடியாதபடிக்கு லெளதீக பிரச்சினைகள், விடுமுறையின் சோம்பேறிக் கணங்கள், ரிமோட்டை கைப்பற்றும் போட்டியில் தோல்வி என பல காரணங்கள். என்றாலும் இயலும் போதெல்லாம் பார்த்துவிடுவேன். 30.06.2010 முதல் இறுதிப் போட்டி என்பதால் உறுதியாக பார்த்துவிடுவது என்கிற தீர்மானத்திலிருந்தேன். தொ.நிகழ்ச்சிகளுக்கேயுரிய பந்தாக்களுடனும் அலட்டல்களுடனும் சிறப்பு விருந்தினர்களோடும் (எஸ்.பி.முத்துராமன், தாமதமாக வந்த ஷங்கர், பாலச்சந்தர்) நிகழ்ச்சி துவங்கியது. இறுதிப் போட்டியில் இதுவரை ஒளிபரப்பான  ஆறு  (ஐந்து நிமிட) குறும்படங்களைப் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விருப்பம்.



1) முதல் குறும்படம் : சுயம்பு - இயக்குநர் சூர்ய பிரதாப்

சில நூற்றாண்டுகளுக்கு முன்னதான சித்தரிப்புகளோடு சிரத்தையாக உருவாக்க முயற்சிக்கப்பட்டிருந்தாலும் ஒளிப்பதிவின் தெளிவில்லாத கோளாறாலும் குழப்பமான காட்சிகளாலும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. இதன் மிகப் பெரிய பலவீனமே சமீபத்தில் வெளிவந்த செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவனின்' மினியேச்சர் போல் இருந்ததுதான். போதாக்குறைக்கு நடிகர் தேர்வும் அதைப் போலவே.  பார்த்திபன் போல் ஒருவர் குளோசப்பில் உறுமுகிறார். இது போதாதென்று கதையின் மையமும் அதைப் போலவே. மன்னருக்கும் புரட்சியாளனுக்கும் நடக்கும் போரில் (இந்த காட்சிகள் சிறப்பாக இருந்தன) புரட்சியாளன் இறப்பதும் தப்பித்துச் செல்ல வைக்கப்படுவதும்  அவனுடைய இளவயது மகன் மூலம் அது எதிர்காலத்தில் தொடரும் என்று சூசகமாக சொல்லப்பட்டிருப்பதும்.கிடைத்திருக்கும் வசதிகளை வைத்து சமாளிக்கப்பட்டிருக்கும் காட்சிகளின் பின்னணிகள் 'பீரியட் படம்' எடுப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதை உணர்த்துகிறது.

என்றாலும் பின்னணி இசையும் முந்தைய நூற்றாண்டு தமிழ் வசனங்களிலும் (வீழ்வது வெட்கமல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்)  சம்பந்தப்பட்ட துறையினரின் உழைப்பு தெரிகிறது.

2) இரண்டாவது குறும்படம்- அனு அணுவாய் - இயக்குநர் அஜய் ஞானமுத்து

பார்வையற்ற இரு பதின்மரின் காதலைப் பற்றியது. காதலுக்கு கண்ணில்லை என்றாலும் கண்ணில்லாதவர்களுக்கு காதல் வரக்கூடாதா என்ன? (நோட் பண்ணுங்கப்பா,  நோட் பண்ணுங்கப்பா). இருவரையும் காலம் பிரிக்கிறது. இளைஞனுக்கு பார்வை திரும்ப கிடைத்து திருமணமாகி குழந்தையெல்லாம் இருக்கிறது. (படமே இப்படித்தான் துவங்குகிறது). ஏன் தன் இளவயது பார்வையற்ற காதலியை அவன் திருமணம் செய்யவிலலை என்ற கேள்விக்கு பின்வரும் காட்சிகளின் மூலம் விடை கிடைக்கிறது. பார்வைபெற்ற இளைஞன் தன்னுடைய பழைய பள்ளிக்கு செல்லும் போது இன்னும் அந்த நிலையிலேயே இருக்கும் அந்தப் பெண், அவன் அழகற்ற தன்னை நிராகரித்து விடக்கூடும் என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே இருந்துவிடுகிறாள்.

இந்தப்படத்தில்  ரசிக்க வைத்த ஒரு விஷயம். பார்வையற்றவர்கள் தங்களைச் சுறறியுள்ளவர்களின் முகங்களை  உள்ளுணர்வின் மூலம் ஒருமாதிரியாக யூகம் செய்து வைத்திருப்பார்கள். வழக்கமாக இம்மாதிரியான படங்களை கையாளும் இயக்குநர்கள்,  பார்வைக்கு முன்னரான அதே சக நடிகர்களையே பார்வை கிடைத்த பின்னும் உபயோகப்படுத்துவார்கள். இந்தக்  குறும்படத்தின் இயக்குநர் இந்த விஷயத்தில் வித்தியாசப்பட்டிருக்கிறார். இளைஞனுக்கு பார்வை கிடைப்பதற்கு முன்பிருந்த நடிகர்களும் பின்னரான நடிகர்களும் வேறு வேறு. அவனுடைய யூகத்திற்கு மாறாக இருப்பதுதானே யதார்த்தமாக இருக்க முடியும்?

என்றாலும் மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றி படமெடுத்தால் எளிதில் நடுவர்களை கவர்நது விட முடியும் என்கிற இயக்குநரின் நோக்கம்தான் பிரதானமாக தெரிகிறதே ஒழிய, சில காட்சிகளைத் தவிர்த்து  நான் பார்த்தவரை இது சுவாரசியமான உணர்ச்சிகரமான படமாக அமையவில்லை.


3) மூன்றாவது குறும்படம்- நெஞ்சுக்கு நீதி - இயக்குநர் நளன்

இக்குறும்படம் நல்ல சுவாரசியத்துடன் அமைந்திருந்தது. 'சீரியஸ் காமெடி' என்று இதை அறிமுகப்படுத்தினார் இயக்குநர்.

ஆளில்லா சாலையில் பொம்மை விற்றுக் கொண்டிருக்கிற ஒரு 'அலுப்பனிடம்' பணக்கார குழந்தைகள் பொம்மை வாங்க வருகிறார்கள். அவர்களின் தாய் வேண்டாவெறுப்பாக வாங்கித்தருகிறார்.  திடீரென அந்த பொம்மை வியாபார இளைஞனை சூழும் இரண்டு டிப்டாப் ரவுடிகள், அவனை வலுக்கட்டாயமாக கூட்டிக் கொண்டு போய் நல்ல உணவு, விலையுயர்ந்த ஆடைகள், சொகுசான இளைப்பாறல்கள் என்று மகிழ்விக்கிறார்கள். எதற்கு இதெல்லாம் என்கிற கலக்கமான கேள்வி உள்ளேயிருந்தாலும் அதையெல்லாம் அனுபவிக்கும் இளைஞன் 'என் வாழ்க்கையிலேயே இன்னிக்குதான் ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்' என்கிறான். 'அதான் எங்களுக்கும் வேணும்' என்று சிலாகிக்கிற டிப்டாப்கள் அன்றைய நாளின் இறுதியில் அவனை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

விஷயம் இதுதான். மிகப் பெரிய பணக்கார கிழவர் ஒருவருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இளம் இதயமொன்று தேவைப்படுகிறது. வலுக்கட்டாயமாக பிடுங்கப்படப் போகிறதென்றாலும் அதை இழக்கப் போகிறவன் அதற்கு முன்னதாக மிக சந்தோஷமாக இருக்க வேண்டுமென்பது அவரின் உத்தரவு. இதைத்தான் அந்த அடியாட்கள் நிறைவேற்றி யிருக்கிறார்கள். திருவிழா ஆடு போல பரிதாபமாக படுத்திருக்கும் இளைஞன் தன்னுடைய தித்திப்பான அனுபவங்களெல்லாம் கனவு போல் முடிந்து மறுநாள் தன்னுடைய உயிர் போகப் போகிறதை எண்ணி அரற்றுகிறான்.

குறும்படத்தின் கிளைமேக்ஸ் அந்த பணக்கார பெரியவரின் பேரன்,பேத்தி வடிவில் வருகிறது. தன்னைப் பார்க்கவரும் குழந்தைகளிடம் தாத்தா ஆசையாக கேட்கிறார். 'எனக்காக என்னப்பா வாங்கி வந்திருக்கீங்க?" சிறுவன்  டப்பா போன்றதொரு பொம்மையை நீட்டுகிறான். ஆவல் தாங்காமல் அதைத்திறக்கிறார் பெரியவர். உள்ளிருந்து 'டபக்'கென்று பாம்பு போன்றதொரு விளையாட்டு திகில் சமாச்சாரம் முகத்திற்கு நேராக பாய, அதிர்ச்சியில் இறக்கிறார் கிழவர்.

அந்த இளைஞன்  காலையில் விற்ற பொம்மையின் மூலமாகவே அவனுடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 'நெஞ்சுக்கு நீதி' - இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்கவே முடியாது. (நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது என்பதை நினைவில் கொள்க) . ஒருவேளை பிரபலமான இந்த தலைப்பை வைத்துதான் இயக்குநர் நளன் இக்கதையையே உருவாக்கினாரோ, என்னமோ?

தமிழ்த்திரைப்படங்களைப் போல உரத்த நகைச்சுவையாக அல்லாமல் ஹாலிவுட் படங்களின் மென்மையான நகைச்சுவை பாணியில் காட்சிகள் நகர்கின்றன. பொம்மை வியாபாரி இளைஞனாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருந்தாலும் சில சொற்ப நேரமே வரும் கடையின் உரிமையாளர் தன்னுடைய யதார்த்தமான வசன உச்சரி்ப்பால் உடனே கவர்ந்து விடுகிறார்.

இப்படியெல்லாம் எந்த மருத்துமனையில் இதயத்தை கொள்ளையடிப்பார்கள் என்றொரு கேள்வி பார்வையாளனுக்கு எழாத வகையில் கிழவரின் மகனே அந்த அறுவைச்சிகிச்சையை செய்யப் போகும் மருத்துவர் என்று தருக்க நியாயத்தை செய்திருக்கிறார் இயக்குநர். வணிக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் பாணியை ஒத்திருக்கிறது இப்படத்தின் கதைப் போக்கு.

இளைஞனை காப்பாற்றிய பொம்மை, குழந்தைகளுக்கு விற்கப்படுவது என்று சாதாரணமாக காட்டியிருக்காமல் சூழ்நிலைகளின் சிக்கல்களையும் மீறி அப்பொம்மை இளைஞனிடமிருந்து குழந்தைகளிடம் சென்றது என்று துவக்க காட்சிகளில் இயக்குநர் சித்தரித்திருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும் என்பது என் அனுமானம். என்றாலும் தரப்பட்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குள் திருப்தியாகவே உருவாக்கியிருந்தார் இயக்குநர் நளன்.

(04.07.2010 அன்று ஒளிபரப்பான அடுத்த மூன்று குறும்படங்களைப் பற்றிய பார்வை வரும் பதிவுகளில் தொடரும்).


பிற்சேர்க்கை: இந்த நிகழ்ச்சியின் தொகுப்புகளை இந்த தளத்தில் காணலாம். சுட்டியை சுட்டிக்காட்டி உதவி செய்த ஆயில்யனுக்கு நன்றி.

suresh kannan

14 comments:

ராம்ஜி_யாஹூ said...

நான் இரண்டு வாரங்கள் பார்த்தேன் (மிகுந்த எரிச்சலை கட்டு படுத்தி கொண்டு),

மான் ஆட மயில் ஆட , ஒரு மணி நேர செய்திகள், ஒன்றே சொல் நன்றே சொல் போன்று இந்த நிகழ்ச்சி என்னை ஈர்க்க வில்லை, அதனால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க விரும்ப வில்லை.

Anonymous said...

அன்பர் சுரேஷ் கண்ணன்
நிறைவான விமர்சனங்கள்.கர்ண மோட்ஷ்ம் குறும்படம் பார்தீர்களா?

உங்கள் பதிவுகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன.அதுவும் தங்களது பதிவுகளில் உள்ள மைல்ட் [மன்னிக்கவும் தமிழில் அர்த்தம் தெரியெவில்லை:)-] நகைச்சுவை சுஜாதா சார் போல்! ஆல் த பெஸ்ட்!
நன்றி
சத்தீஷ் -போட்ஸ்வானா

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான ராம்ஜி_யாஹூ ,

உங்கள் பின்னூட்டம் பிரசுரமாவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால் நகல் செய்து இட்டிருக்கிறேன்.

ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...":

நான் இரண்டு வாரங்கள் பார்த்தேன் (மிகுந்த எரிச்சலை கட்டு படுத்தி கொண்டு),

மான் ஆட மயில் ஆட , ஒரு மணி நேர செய்திகள், ஒன்றே சொல் நன்றே சொல் போன்று இந்த நிகழ்ச்சி என்னை ஈர்க்க வில்லை, அதனால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்க்க விரும்ப வில்லை.

பாலா said...

சுரேஷ்,
அந்த மாற்றுத்திறன் குறும்படத்தில் இரண்டு விஷயங்கள் பளிச். நீங்கள் குறிப்பிட்டு உள்ளதை போல
1.மனக்கண்ணின் உருவத்திற்கும் நிதர்சனதிர்க்கும் உள்ள வேறுப்பாடு.
2.தனது மகள் காலை ஆட்டிகொண்டே இவனை செல்லமாய் உதைக்க, கட்சி பின்னோக்கி நகர இவன் தன் காதலியின் கால்களை செல்லமாய் உதைத்தழைக்கும் காட்சி கோர்வை நன்று.

manasu said...

நெஞ்சுக்கு நீதி நன்றாக இருந்தது.


சூதாட்டம் வச்சு ஒரு குறும்படம் வந்தது முந்தைய சுற்றுகளில், நீலிமா நடித்து. அதுவும் நன்றாக இருந்தது.

http://www.paraparapu.com/special_programs/?m=view&vid=22027

பிச்சைப்பாத்திரம் said...

@ manasu: உங்கள் பின்னூட்டமும் ஏனோ பிரசுரம் ஆகவில்லை. :-(. எனவே...

manasu has left a new comment on your post "நாளைய இயக்குநர் - இறுதிப் போட்டி - ஒரு பார்வை - ப...":

நெஞ்சுக்கு நீதி நன்றாக இருந்தது.


சூதாட்டம் வச்சு ஒரு குறும்படம் வந்தது முந்தைய சுற்றுகளில், நீலிமா நடித்து. அதுவும் நன்றாக இருந்தது.

http://www.paraparapu.com/special_programs/?m=view&vid=22027

பிச்சைப்பாத்திரம் said...

பாலா, நீங்கள் இரண்டாவதாக குறிப்பிட்டதை நானும் கவனித்தேன். ஆனால் அதுவொரு கிளிஷேவான விஷயமே.

பிச்சைப்பாத்திரம் said...

சில நண்பர்களின் பின்னூட்டங்கள் பதிப்பித்தாலும் பிரசுரமாகவில்லை. நகலிட்டாலும் மறைந்து விடுகிறது. பிளாக்கரில் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. :-(

rajkumar said...

”அலுப்பன்”- வித்தியாசமான சொல். கலக்குங்க.

அன்புடன்

ராஜ்குமார்

கோபிநாத் said...

தல இதை தான் தேடிக்கிட்டு இருந்தேன்...ரிமோட் கைப்பற்றும் பிரச்சனை இல்லை என்றாலும் வேற பிரச்சனைகளில் மிஸ் பண்ணிட்டேன்.

உங்க புண்ணியத்திலும் ஆயில்யன் அண்ணே புண்ணியத்திலும் விமர்சனத்துடன் கிடைச்சிடுச்சி ;)

ஷங்கர் said...

சார் ,
ஆனந்த விகடனில் உங்க ட்விட்டர் கமெண்ட் வந்திருக்கு சார் !!!!!!!!(என்ன ,காந்தி செத்து டார னு கேக்காதீங்க இப்பதான் பார்த்தேன் )

பிச்சைப்பாத்திரம் said...

நன்றி ஷங்கர்.

நண்பர் கணேஷ்குமார் இதை உடனேயே மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கும் நன்றி.

rajkumar said...

எப்ப மீதிப் படமெல்லாம்?

பிச்சைப்பாத்திரம் said...

ராஜ்குமார்: ஆம்,மிக தாமதமாகிவிட்டதை உணரமுடிகிறது. விரைவில் எழுதுகிறேன். நன்றி.